Friday, December 04, 2009

லெபனான் : இது ஹிஸ்புல்லா தேசம்

லெபனான், பெய்ரூத். அமெரிக்கக் கடற்படைத் தலைமையகம். 23 ஒக்டோபர் 1983, அதிகாலை ஆறு மணி இருபது நிமிடங்கள். தலைமைக்கட்டட வாயிலை நோக்கி மிக வேகமாக வந்துகொண்டிருந்தது ஓரு கனரக வாகனம். ஓட்டி வந்த சாரதியின் முகத்தில் புன்னகை. கட்டடத்தை வாகனம் மோதியதும் பெருத்த வெடியோசையால் நகரமே அதிர்ந்தது. உறுதியான நான்கு மாடிக்கட்டடம் சிலநொடிகளிலேயே தரைமட்டமாகியது.
மொத்தம் 240 அமெரிக்கக் கடற்படை வீரர்கள் அந்தத் தற்கொலைக் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் பலியாகினர். ஆறாயிரம் கிலோ வெடிமருந்துப் பொருட்கள் பாவிக்கப்பட்டிருக்கலாமென புலனாய்வுத் தகவல்கள் தெரிவித்தன. இது நடந்த அடுத்த சில நிமிடங்களில் இன்னொரு வாகனம் பிரஞ்சுத் துருப்புகள் தங்கியிருந்த கட்டடத்தில் மோதி வெடித்ததில் 58 பிரஞ்சு படை வீரர்கள் கொல்லப்பட்டனர்.

பிரான்ஸ் லெபனானின் முன்னாள் காலணியாதிக்க எஜமான். தள்ளாடிக்கொண்டிருந்த லெபனானுக்கு அமெரிக்கா உதவி செய்ய முன்வந்தது. இவ்விரண்டு நாடுகளுமே லெபனானின் உள்நாட்டு விடயத்தில் தலையிட்டு வாங்கிக் கட்டிக்கொண்டன. மிகவும் கவனமாகத் திட்டமிட்டு பாரிய விளைவுகளை உண்டாக்கிய அந்தத் தாக்குதலை நடாத்தியது "ஹிஸ்புல்லா" என்ற அதுவரை அறியப்படாதிருந்த ஒரு இயக்கம். ஹிஸ்புல்லா ( தமிழில்: அல்லாவின் கட்சி) லெபனான் ஷியா முஸ்லிம் இனத்தைப் பிரதிநிதிப்படுத்தியது. அந்த மக்களின் காவலனாக இன்றுவரை காட்டிக் கொள்கிறது.

மத்திய கிழக்கில் சிலுவைப் போரின் தழும்புகளைக் கொண்டுள்ள நாடுகளில் லெபனானும் ஒன்று. காலனித்துவக் காலகட்டத்தில் ஆக்கிரமித்த பிரான்ஸினால், பிரித்தாளும் நோக்கில் சிரியாவில் இருந்து பிரிக்கப்பட்டு உருவாகியதுதான் இந்த லெபனான் நாடு. லெபனானில் "மரோணியக் கிறிஸ்தவர்கள்" (கிறிஸ்தவ மதத்தின ஒரு பிரிவு) கணிசமான தொகையியல் வாழ்கின்றனர். உறுதியான கணக்கெடுப்பு இல்லாத போதும், மொத்தச் சனத்தொகையில் இவர்கள் நாற்பது அல்லது ஐம்பது வீதமானவர்கள் என்பது பரவலான கருத்து. இனரீதியாக அரபுக்களேயாயினும், காலனித்துவ விசுவாசத்தால் தம்மைப் அவர்கள் பிரஞ்சுக்காரர்களாகவும் கருதுவதுண்டு. இதனால், லெபனானுக்குச் சுதந்திரம் வழங்கப்பட்டபோது அவர்களின் கைகளில் அரச பொறுப்பை வழங்கிய பின்னரே பிரான்ஸ் விலகிக்கொண்டது.

வெகுவிரைவிலேயே சிறுபான்மை இனங்களாகக் கருதப்பட்ட (சரியான கணக்கெடுப்பு நடாத்தப்படவில்லை) "ஷியா" முஸ்லீம்களும், "டுரூசியர்"களும் (இஸ்லாமின் ஒரு பிரிவு. இருப்பினும் தம்மைத் தனியான மத-இனமாகக் கருதுபவர்கள்) தமக்கு அரசாங்கத்தில் அங்கம் இல்லை என்பதையுணர்ந்தனர். முரண்பாடுகள் போராக வெடித்தன. ஒவ்வொரு சமுகமும் தமக்கென ஆயுதபாணிக் குழுக்களை ஏற்படுத்திச் சண்டையிட்டன. ஆரம்பத்தில் இக்குழுக்களிடையே சித்தாந்த ரீதியான வேறுபாடேயிருந்தது. மரோணியக் கிறிஸ்தவரின் ஆயுதக்குழு பாஸிசப் பிற்போக்கு அரசியலைக் கொண்டிருந்தது. மாறாக, ஷியா, டுரூசியரின் ஆயுதக்குழுக்கள் முற்போக்கானவையாக சோஸலிசத்தை முன்மொழிந்தன. பத்தாண்டுகளாக நடைபெற்ற யுத்தம் எந்தவகையான முடிவையும் தராதநிலையில், கம்யூனிச எதிர்ப்புப் போர்வையில் அமெரிக்க இராணுவம் வந்திறங்கியமை நிலைமையை மேலும் மோசமடைய வைத்தது. சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாலஸ்தீன விடுதலை இயக்கங்களை அடக்கப்போகிறோம் எனும் போர்வையில் இஸ்ரேலியப் படையெடுப்பும் தலைநகர் பெய்றூத் வரைமுன்நகர்ந்தது. பின்னர், பின்வாங்கி தென் லெபனானை ஆக்கிரமிப்பில் வைத்துக்கொண்டது. இத்தகைய சூழலில்தான் முன்பு குறிப்பிட்ட அமெரிக்கக் கடற்படை முகாம்மீதான தற்கொலைத் தாக்கல் இடம்பெற்றது.

லெபனானின் உள்நாட்டுப் போரில் தலையிட்டு கையைச் சுட்டுக்கொண்ட அமெரிக்க இராணுவம் தாயகம் திரும்பியது. சமாதானம் வராது என்றிருந்த நிலையில் சிரியப்படைகள் லெபனானுக்குள் பிரவேசித்தன. லெபனானின் பல பகுதிகளைத் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்த சிரியா போராடும் குழுக்களை அழைத்துப் பேச்சுவார்த்தை நடாத்தியது. முடிவில் சிரியாவின் மத்தியஸ்தத்தில் அல்லது தலைமையில் எல்லாச் சமுகங்களுக்கும் சமவாய்ப்பு வழங்கப்பட்டு புதிய அரசு அமைக்கப்பட்டு சமாதானம் கொண்டுவரப்பட்டது. இன்றுவரை ஆயுதம் தாங்க அனுமதிக்கப்பட்டிருக்கும் போராளிக் குழுவான ஹிஸ்புல்லா உறுப்பினர்கள்கூட பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர்.

யாரிந்த ஹிஸ்புல்லா இயக்கத்தினர்? அமெரிக்கா, இஸ்ரவேலைப் பொறுத்தவரையில் இவர்கள் பயங்கரவாதிகள். அதுமட்டுமல்லாது, அமெரிக்காவின் பயங்கரவாதிகள் பட்டியலில் இவர்களின் பெயரும் அடங்கியுள்ளது. ஆனால் லெபனான் மக்களைப் பொறுத்தவரையிலும் இவர்கள் விடுதலைப் போராளிகளாகவே கருதப்படுகின்றனர். லெபனானில் நடந்த ஒவ்வொரு இஸ்ரேலிய இராணுவ அடக்குமுறையின்போதும் ஹிஸ்புல்லா மீதான அனுதாப அலைகள் ஒங்கியெழுந்தன. கடந்த இருபது வருடங்களாக லெபனானின் தென்பகுதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்தும், அப்பகுதிகளில் இராணுவ நிலைகள்மீதான ஹிஸ்புல்லா போராளிகளின் கெரில்லாத் தாக்குதல்கள் அதிகரித்ததால், இறுதியில் தாக்குப்பிடிக்க முடியாத நிலையில் இஸ்ரேலிய இராணுவம் பின்வாங்கியது உலகறிந்த விடயம். தற்கால உலகின் வெற்றிகரமான கொரில்லா இயக்கங்களாகக் கருதப்படுபவைகளில் ஹிஸ்புல்லாவும் ஒன்று.

இஸ்ரேலிய இராணுவம் வெளியேறியதும் அந்தப்பகுதிகளை ஹிஸ்புல்லா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்தது. தென்லெபனான் தெருக்களில் ஆயுதமேந்திய போராளிகளின் நடமாட்டம், காணுமிடமெல்லாம் ஹிஸ்புல்லா என்ற பெயரில் துப்பாக்கி தூக்கும் கரத்தின் படத்தைக் கொண்ட மஞ்சள் வர்ணக்கொடிகள், நகர வீதிகளில் முக்கிய சந்திகளில் மரணித்த போராளிகளின் உருவப்படங்கள், எதிரிகளால் குண்டுவைத்துக் கொல்லப்பட்ட ஹிஸ்புல்லாவை உருவாக்கிய தலைவர் நஸ்ரல்லாவின் ஆளுயரக் "கட் அவுட்" டுகள், தேனீர்க் கடைகளில்கூட ஒலிக்கும் இயக்கப்பாடல்கள், பொது இடங்களில் சட்டம்-ஓழுங்கை பராமரிக்கும் சீருடையணிந்த ஹிஸ்புல்லா பொலிஸ்... இவையெல்லாம், தென்லெபனானை, இது லெபனானல்ல ஹிஸ்புல்லா தேசமெனக் கூறவைக்கும்.

இவற்றைவிடத் தமக்கெனத் தனியான வானொலி, தொலைக்காட்சிச் சேவைகளை நடாத்தி வருவதுடன் இலவச மருத்துவ மனைகள், பாடசாலைகள் என்பனவற்றையும் பராமரித்து வருகின்றனர் ஹிஸ்புல்லாக்கள். இவ்வியக்கத்தை உருவாக்கியவர்கள் மதத்தலைவர்கள் எனுங்காரணத்தால் ஆரம்ப காலங்களில் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் இஸ்லாமிய மத அடிப்படையிலமைந்த கலாச்சாரத்தைப் பின்பற்றுமாறு வலியுத்தப்பட்டனர். ஆனால், பெரும்பாலும் சுதந்திரப் போக்குடைய லெபனானிலிருந்து ஆதரவு கிடைக்காததால் இந்நிலையை அவர்கள் தளர்த்த வேண்டியவர்களாகினர். அதனால், மதப்பிடிப்பற்ற இளைஞர்கள் கூட இவ்வியக்கத்தில் இணைந்து போராட முன்வந்தனர்.

ஈரானில் நடைபெற்ற புரட்சியை முன்னுதாரணமாக்கி உருவாக்கப்பட்டதுதான் ஹிஸ்புல்லா என்பதால் இவர்கள் லெபனானையும் ஒரு இஸ்லாமிய நாடாக மாற்றும் நோக்கமும் கொண்டிருந்தார்கள். ஆனால், தற்போது இவற்றை தமது இறுதி இலட்சியமாகத்தான் கருதுகிறார்கள். தற்காலப் பிரச்சனைகளாள இஸ்ரேலிய இராணுவத்தின் வெளியேற்றம், மிக அண்மையில் கொண்டுவரப்பட்ட பாலஸ்தீன ஆதரவு நிலைப்பாடு என்பன பற்றித்தான் முக்கிய கவனம் செலுத்தப்படுகின்றது.

ஹிஸ்புல்லா ஒரு மத அடிப்படைவாத இயக்கமெனச் சொல்லப்படுகின்றது. ஆனால், இந்தக் கூற்றில் அரைவாசிதான் உண்மை. மத்தியகிழக்கில் யாரும் "மத அடிப்படைவாதம்" என்ற சொல்லைப் பாவிப்பதில்லை என்பது ஒருபுறமிருக்க, ஹிஸ்புல்லா தன்னை ஒரு அரசியல்-கொரில்லா இயக்கமாக வெளிப்படுத்திக் கொண்டமை மேற்கூறிய தரவுகளில் இருந்து தெளிவாகும். இதன்காரணமாகவே தற்போது தேசியவாத பலஸ்தீன இயக்கங்களுடனான கூட்டு சாத்தியமாகியுள்ளது. அதேவேளை மதச்சார்பற்ற சிரிய அரசின் பின்பலமும் கிடைத்துக்கொண்டிருக்கின்றது. ஒவ்வொருவருடைய நோக்கங்களும் வித்தியாசமாகவிருக்கலாம். ஆனால், சூழ்நிலை அவர்களைச் சேர்த்து வைத்துள்ளது. ஹிஸ்புல்லாவினர் ஷியா இஸ்லாமியர் என்பதால்தான் உலகின் ஒரேயொரு ஷியா அரசான ஈரான் இவ்வியக்கத்திற்கு உதவி வழங்குகின்றது. ஹிஸ்புல்லா தலைமையில் லெபனானிலும் ஷியா இஸ்லாமிய அரசு வரவேண்டுமென்ற எண்ணம் ஈரானுக்கிருப்பதை மறுப்பதற்கில்லை. சிரியாவோ, இஸ்ரேலுக்கும் தனக்குமிடையில் பாதுகாப்புக் கவசமாக ஹிஸ்புல்லாவை பயன்படுத்தும் நோக்குடையது.

ஹிஸ்புல்லாவின் ஒவ்வொரு தாக்குதலையடுத்தும் சிரியாவுக்கு அடிப்போமென இஸ்ரேல் காரணமில்லாமல் கர்ஜிக்கவில்லை. லெபனானை மட்டுமல்ல சிரியாவையும் பிடித்து தனது நாட்டுடன் இணைக்க வேண்டுமென்ற அவா நீண்டகாலமாகவே இஸ்ரேலுக்குண்டு. ஆறு நாட்போரென அழைக்கப்படும் 1973 யுத்தத்தில் இஸ்ரேல் சிரியாவின் கோலான் உயர்மேட்டுப்பகுதியை கைப்பற்றி இன்றுவரை ஆக்கிரமித்து வருகின்றது. இதனால் இன்றுவரை சிரியா இஸரேலின் பகைநாடாகவும் இருந்து வருகின்றது. மூன்றாம் உலகப் போர் நடக்கும்போது மேலும் பல பகுதிகளைக் கைப்பற்ற இஸ்ரேல் காத்திருக்கின்றது. அதற்கான தருணம் இப்போது வந்துவிட்டது என்ற அர்த்தத்தில் லெபனான், சிரியா மீது பயங்கரவாதத்திற்கெதிரான போரை அறிவிக்குமாறு அமெரிக்காவை இஸ்ரேல் கேட்டுள்ளது.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

"ஹிஸ்புல்லா" தொடர்பான முன்னைய பதிவுகள்:
லெபனான் : இன்று ஒத்திகை, நாளை போரிடு
ஒரு நாள் மண உறவு: இஸ்லாமிய பாலியல் சுதந்திரம்

5 comments:

Anonymous said...

HI BROTHER I READ UR ARTICLES FULLY,ALL R VERY NICE.. I GAINED LOT OF INFORMATION ,ALL R USE FULL IN MY LIFE..

Kalaiyarasan said...

Thank you, brother.

சிங்கக்குட்டி said...

மீண்டும் ஒரு நல்ல பகிர்வுக்கு நன்றி.

Pragash said...

தாங்கள் குறிப்பிட்ட ஆறுநாள் யுத்தம் எனப்படுவது யொம்கிப்பூர் யுத்தம் என நினைக்கின்றேன். அது பற்றிய சிறுகுறிப்பு ஏதும் கிடைக்குமா? என்னுடைய தற்கொலை தாக்குதல் அறிமுகம் பற்றிய வினா இஸ்புல்லா தேசம் கட்டுரை பற்றிய பின்னூட்டத்தில் குறிப்பிட தவறியமைக்கு வருந்துகின்றேன். அளித்த பதிலுக்கு நன்றி.

Kalaiyarasan said...

பரவாயில்லை பிரகாஷ், இது ஒன்று பெரிய தவறல்ல. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஆமாம், யொம் கிப்பூர் யுத்தத்தை தான் குறிப்பிடுகிறேன். அதற்கான மேலதிக விபரங்களுக்கு விக்கிபீடியா சுட்டியை தருகிறேன். http://en.wikipedia.org/wiki/Yom_Kippur_War