Tuesday, June 23, 2009

சிம்பாப்வே: வெள்ளையனே வெளியேறு!

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 9

"படுகொலை, படுகொலை" என அலறின பிரிட்டிஷ் பத்திரிகைகள். முன்பக்கத்தில் ஒரு இரத்தம் வழியும் வெள்ளைக்காரனின் முகம், கீழே சிம்பாப்வேயில் "கறுப்பு இன வெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட அப்பாவி விவசாயி" என தடித்த எழுத்தில் பொறிக்கப்பட்டிருந்தது. சிம்பாப்வே பிரச்சினை பற்றிய பிரிட்டிஷ் பத்திரிகைகளின் செய்தியறிக்கைகள் ஒரளவு காலனிய ஆட்சிக்காலத்தை நினைவுபடுத்தியது. அப்போது சுதந்திரப் போராளிகளால் வெள்ளையின அதிகாரிகள் கொல்லப்பட்டபோது அதனைப் பயங்கரவாதமென்றும், இனவாதப் படுகொலைகள் என்றும் பத்திரிகைகள் சித்தரித்தன. அதேநேரம், வெள்ளை அதிகாரிகளால் கறுப்பினப் பொதுமக்கள் கொல்லப்பட்ட சம்பவங்களை திட்டமிட்ட முறையில் மூடிமறைத்தன, "அரசு சாராத சுதந்திர" ஊடகங்கள். இவையெல்லாம், காலனித்துவக் கால கட்டம் இன்னமும் தொடர்கிறதா என ஐயமுறவைக்கின்றன.

ஐரோப்பியர் காலனியக் காலங்களில் சில நாடுகளை நிரந்தரமாகக் குடியேறவென தேர்ந்தெடுத்தனர். அவற்றில் "தென்னாபிரிக்கா", "சிம்பாப்வே", ஆகியன முக்கியமானவை. 19 ம் நூற்றாண்டில், தென்னாபிரிக்காவில் ஏற்கெனவே தனது அதிகாரத்தை நிலைநிறுத்திவிட்ட பிரிட்டிஷ் காலனித்துவப் படைகள், வடக்கு நோக்கி முன்னேறின. துப்பாக்கியேந்திய பலமான பிரிட்டிஷ் படைகளுடன் மோதமுடியாத, அம்பு-வில் போன்ற புராதன போர்க் கருவிகளை பயன்படுத்திய கறுப்பர்களின் படைகள் தோல்வியுற்றுச் சரணடைந்தன. தோற்றவர்களின் நிலங்களை வென்றவர்கள் அபகரித்துக் கொண்டார்கள். தாய்நாடான பிரிட்டனிலிருந்து "விவசாயிகள்" வந்து குடியேறினர்.இவ்வாறு வெள்ளையின ஆதிக்கத்தின் கீழ் வந்த நிலங்களை இணைத்து "ரொடீஷியா" என்ற நாடு உருவாக்கப்பட்டது.

தென்னாபிரிக்காவிலிருந்து படையெடுப்பு நடாத்தி வென்ற ஆங்கிலேயத் தளபதி "சிசில் ரோட்ஸ்" ன் தலைமையில் இங்கு வெள்ளையாட்சி நடாத்தப்பட்டது. இவனது பெயர் காரணமாகவே இந்நாட்டிற்கு "ரொடீசியா" என்ற பெயரும் சூட்டப்பட்து. சோவியத் ஒன்றியம் லெனின் கிராட் என்று பெயர் வைத்தால், அதனை அரசியல் பிரச்சாரம் என்று கண்டித்த மேற்குலக புத்திஜீவிகளுக்கு, ரொடீசியா கண்ணில் படவில்லை. தற்கால அரசியலின் அடிப்படையில் சொன்னால்: ரோட்ஸ் ஒரு சர்வாதிகாரி, நிறவெறியன், இனப்படுகொலை செய்தவன், நாகரிக உலகம் ஏற்காத இனவாத ஆட்சி நடத்தியவன். இந்த இனவாதச் சர்வாதிகார ஆட்சி 1980 வரை நீடித்தது. உலகெங்கும் நடந்த, காலனியாதிக்க எதிர்ப்பு சுதந்திரப் போராட்டங்களால் உந்தப்பட்ட ரோடீசியாவின் படித்த கறுப்பின இளைஞர்கள், ZANU-PF ஏன்ற பெயரில் நிறுவனமயமாகினார்கள். ரொபேட் முகாபே தலைமையில் நிறவெறி அரசுக்கெதிரான ஆயுதமேந்திய கிளர்ச்சி நடைபெற்றது. கொரில்லாப் போர்த்தந்திரங்கள் பாவிக்கப்பட்டன. இறுதியில் பிரிட்டிஷ் ரொடீசிய அரசுகள் நிபந்னையடிப்படையிலான சுதந்திரம் கொடுக்க ஒப்புக்கொண்டன. அதாவது, பதவியேற்கும் கறுப்பின அரசாங்கம் வெள்ளையின விவசாயிகளை , முதலாளிகளை அவர்களின் போக்கில் விடவேண்டுமென்பதே முன்வைக்கப்பட்ட நிபந்தனையாகும். நீதித்துறையில் பிரிட்டிஷ் அரசு வகுத்திருந்த சட்டங்களே தோடர்ந்தும் பேணப்படவேண்டும் (இந்தச் சட்டங்களும் வெள்ளையின முதலாளிகளுக்கு வேண்டிய சுதந்திரத்தை உறுதிப்படுத்தன.) என்பதும் நிபந்தனையாகவிருந்தது. இவ்வடிப்படையிலேயே அபிவிருத்தி உதவிகளும் வழங்க பிரிட்டிஷ் நிர்வாகம் உடன்பட்டது. நிபந்தனைகளையேற்று, ரொடீசிய அரசிற்கெதிரான ஆயுதப்போராட்டத்தில் கணிசமான வெற்றியைப் பெற்றிருந்த ZANU-PF, "லங்கஸ்டர்" ஒப்பந்த்தில் கைச்சாத்திட்டது. இதையடுத்து ரொடீசியா, "சிம்பாப்வே" என ஆப்பிரிக்கமயப்படுத்தப்பட்டது.

சுதந்திரத்தின் பின்னர் வந்த அரசாங்கம் இந்த ஒப்பந்த்திற்கேற்ப, அதாவது பிரிட்டிஷார் விருப்பத்திற்கிணங்க அமைக்கப்பட்டது. இதில் குறிப்பிடத்தக்க விடயம் என்னவெனில் மாக்ஸீயத்தைத் தனது கட்சியின் சித்தாந்தமாக அறிவித்த ZANU-PF அதை நடைமுறைக்குக் கொண்டுவரமுடியாத நிலைக்குத் தள்ளப்பட்டது. நாட்டில் அரசுத் துறைகள் மட்டுமே கறுப்பினத்தவர் வசம் வந்தன. பொருளாதாரத்தில் வெள்ளையினத்தவரின் ஆதிக்கம் தொடர்ந்து நீடித்தது. தம்மை "விவசாயிகள்" எனக் கூறிக்கொள்ளும் இவர்கள், உண்மையில் விவசாய முதலாளிகளாவர். நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான புகையிலை, தேயிலை போன்றவற்றை நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்களில் உற்பத்தி செய்வதுடன், ஏற்றுமதி வர்த்தகத்தையும் தமது கைகளில் வைத்திருந்தனர். இவ்வகையில் இவர்கள் அனைவருமே செல்வந்தர்களாகவும் இருந்தனர். இதற்கு மாறாக, காலனித்துவ காலத்தில் நிலங்களைப் பறிகொடுத்த கறுப்பின மக்கள் இன்று வரை ஏழைகளாக வெள்ளை முதலாளிகளுக்குச் சொந்தமான நிலங்களில் வேலை செய்து வாழும் தொழிலாளர்களாக இருந்து வருகின்றனர். காலத்தின் மாற்றத்திற்கேற்ப வெள்ளையின முதலாளிகள் தாம் "நிற வேற்றுமை பார்க்காதவர்கள்", "கறுப்பினத் தொழிலாளர்களைச் சமத்துவமாக நடாத்துபவர்கள்" என்றெல்லாம் காட்டிக்கொள்கின்றனர். இவர்கள் சிம்பாப்வே என்ற புதிய நாட்டின் குடியுரிமையை ஏற்றுக்கொண்டவர்கள் மட்டுமல்ல , உள்ளூர் மொழிகளையும் சரளமாகப் பேசக்கூடியவர்கள். சில வெள்ளையினப் பிள்ளைகளுக்கு ஆபிரிக்கப் பெயர்களும் சூட்டப்பட்டுள்ளன.

எது எப்படியிருத்தபோதும், எல்லாவற்றிற்கும் பின்னால் இருப்பது சொத்துரிமை என்பதை மறந்துவிடலாகாது. இவர்கள் அப்போது இனவாதிகளாக நிறவேற்றுமை காட்டியதும் சொத்துரிமையைப் பாதுகாக்கத்தான். இன்று சிம்பாப்வே தேச பக்தர்களாகக் காட்டிக் கொள்வதும் அதே நோக்கத்தோடுதான். அவர்களின் விவசாய உற்பத்தியில் ஏகபோகம், காலனிய ஸ்தாபனத்தை நிறுத்தும் பணி என்பனவற்றுக்காகத்தான், மேற்கத்திய தொடர்பூடகங்கள் வெள்ளையின விவசாயிகள் ஆதரவுப் பிரச்சாரம் செய்கின்றன. "நாம் இந்த விவசாயிகளைக் கைவிட முடியாது. எனெனில் நாம்தான அவர்களை அங்கு அனுப்பினோம்" என இதனை பிரிட்டிஷ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேரடியாகவே சொன்னார். பிரிட்டனில் ஒருபுறம் மூன்றாம் உலக நாடுகளின் அகதிகள் திருப்பி அனுப்பப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே நேரம் சிம்பாப்வேயிலிருந்து வரும் "வெள்ளை அகதி" களுக்கு வந்த உடனேயே வீடும், வேலைவாய்ப்பும், தேவையேற்படின் நிலமும் வழங்கப்படுகின்றன. "மனிதாபிமானமிக்க, இனவெறியற்ற, ஜனநாயக" பிரிட்டிஷ் அரசின் இரட்டை வேடமிது.

சிம்பாப்வேயில் மொத்தச் சனத்தொகையில் ஒரு வீதமான வெள்ளையினத்தவருக்கு, 80 வீதமான நிலங்கள் சொந்தமாகவிருக்கின்றன. அதே வேளை பெரும்பான்மை மக்கள் சொந்த நிலமின்றி இருப்பது எந்த வகையில் நியாயமென, எந்தவொரு "ஜனநாயகவாதி"யும் கேட்டதாகத் தெரியவில்லை. ஆண்டாண்டு காலம் அனுபவித்த பெரும் நிலப்பிரபுக்களான வெள்ளையர்கள், உள்ளூர் கறுப்பின மக்களிடமிருந்து தமது மூதாதையர் பறித்த நிலங்களை நேர்மையாக அவர்களிடம் திருப்பிக் கொடுக்காதது ஏன்? என்றும் எந்தவொரு மனித உரிமைவாதியும் கேட்கவில்லை. ஆனால் சில புரட்சியாளர்கள், வெள்ளையினத்தவருக்குச் சொந்தமான நிலங்களைத் திடீரென முற்றுகையிட்டுப் பலவந்தமாகப் பறித்து, அவற்றை நிலமற்ற கறுப்பின விவசாயிகளுக்குப் பகிர்ந்து கொடுத்தபோது மட்டும், "ஜனநாயகம், மனித உரிமைகள்" என்று மேற்கில் சிலர் சாமியாடத் தொடங்கியுள்ளனர். இதனால்தான் மனித உரிமைகள் என்ற பெயரில் மேற்கத்தைய அரசியல் ஆதிக்கம் பரப்பப்படுவதாக ஆப்பிரிக்காவில் சிலர் விமர்சிக்கின்றனர்.

முகாபேயின் அரசாங்கம் ஊழல்வாதிகளால் நிரம்பி வழிவதும், தமக்கு வேண்டியவர்களுக்கு மட்டும் பதவிகள் கொடுப்பதும் உண்மைதான். சரிந்துவரும் செல்வாக்கை மீளப்பெறுவதற்காகத்தான் முகாபே நிலச் சீர்திருத்தத்தைக் கொண்டுவந்ததும் மறுப்பதற்கில்லை. இருப்பினும், தனியாக நின்று ஏகாதிபத்தியத்துடன் மோதும் துணிச்சலைப்பாராட்ட வேண்டும். கடந்த பதினைந்து ஆண்டுகளாக உலகவங்கியோ, அல்லது வேறெந்தச் சர்வதேச நிதிநிறுவனமோ சிம்பாப்வேக்கு நிதியுதவி வழங்குவதில்லை. தென்னாபிரிக்காவையும், லிபியாவையும் விட்டால் வேறு குறிப்பிடத்தக்க வர்த்தகக் கூட்டாளிகள் கிடையாது. இப்படியான கடினமான நேரத்திலும் சிம்பாப்வே இன்றுவரை ஏகாதிபத்திய உத்தரவுகளுக்கு அடிபணியவில்லை. ஒரு வருடம் வெளிநாட்டு கடனுதவி கிடைக்காவிட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்துவிடும் என்று, நமது அரசாங்கங்கள் பூச்சாண்டி காட்டிக்கொண்டிருப்பது இங்கே நினைவுகூறத்தக்கது.

அமெரிக்க-ஐரோப்பிய நாடுகளின் நீங்காத அச்சமென்னவெனில், சிம்பாப்வேயின் "புரட்சிகர நிலச்சீர்திருத்த அலை" பிற ஆபிரிக்க நாடுகளிலும் பரவலாம் என்பதே. தென்னாபிரிக்கக் குடியரசிலும், நமீபியாவிலும் பெரும்பான்மை விவசாய நிலங்கள், தேசியப் பொருளாதாரம் என்பன, இன்னமும் வெள்ளையினத்தவரின் கைகளில் இருக்கின்றன. தென்னாபிரிக்க நிலமற்ற கறுப்பின விவசாயிகள் சிம்பாப்வேயில் நடந்தது போல அங்கேயும் நிலச்சீர்திருத்தம் கொண்டுவரப்படவேண்டுமென எதிர்பார்க்கின்றனர். தென்னாபிரிக்க வெள்ளையின விவசாயிகள் இனறும் கூட சட்டபூர்வமற்ற, ஆனால் அரசு தலையிடாத தனியான சுயாட்சிப் பிரதேசங்களில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் மத்தியில் பாஸிஸ அமைப்புகள் செல்வாக்குச் செலுத்துவதுடன், ஆயுதபாணிகளாகவும் இருக்கின்றனர். வெளியில் சொல்லப்படாது பாதுகாக்கப்படும் இரகசியங்களில் ஒன்று; இந்த வெள்ளையினத் தீவிர வாதக்குழுக்கள் இரசாயன, உயிரியல் ஆயுதங்களையும் பதுக்கி வைத்திருப்பதுதான்.

இஸ்ரேல்-பலஸ்தீன பிரச்சினை போன்றதொரு சூழ்நிலை தெற்கு ஆப்பிரிக்க நாடுகளில் முன்னர் நிலவியது. 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வெள்ளையினக் குடியேறிகளால் தன்னிச்சையாக அறிவிக்கப்பட்ட தென்னாபிரிக்கா, ரொடீசியக் குடியரசுகளில் வெள்ளையர்கள் சிறுபான்மையாகவிருந்தனர். அத்துடன் நாடுமுழுவதும் பரவலாக பெருமளவு நிலங்களைக் கைப்பற்றி காலனிகளை அமைத்தும் இருந்தனர். இந்த வெள்ளைக் காலனிகளைச் சேர்ந்தோர் மட்டும் அனைத்து உரிமைகளையும் பெற்று முதற்தரப் பிரஜைகளாகவிருந்தனர். இதே நேரம், பெரும்பான்மைக் கறுப்பினத்தவர் இரண்டாந்தரப் பிரஜைகளாக பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டனர். கல்வி, மருத்தவ வசதி, என்பனகூட வெள்ளையினத்தவருக்கே வழங்கப்பட்டன. முன்னாள் ரொடீசியா பின்னர் சிம்பாப்வேயாக மாறி முகாபேயின் ZANU-PF ஆட்சிக்கு வந்தபின்னர் தான் கருப்பினத்தவரை முன்னேற்றும் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டன. நாடு முழுவதும் கட்டப்பட்ட மருத்துவமனைகள், பாடசாலைகள் என்பன சமுக முன்னேற்றத்தின் குறிப்பிடத்தக்க சாதனைகள். பிரிட்டன் முன்மொழிந்த "லங்கஸ்டர்" சுதந்திர ஒப்பந்தம், சமுக அபிவிருத்திக்கு பணம் ஒதுக்குவதைக் குறைக்க விரும்பியதை இவ்விடத்தில் கூறவேண்டும்.

சிம்பாப்வேயின் பொருளாதார வீழ்ச்சிக்கு, முகாபேயின் நிலச்சீர்திருத்தக் கொள்கைதான் காரணம் என்றும் சொல்லப்படுகின்றது. ஆனால் உலகவங்கி, சர்வதேச நாணய சபை போன்றவற்றின் பொருளாதாரத்திட்டங்கள் ஏற்கெனவே நாட்டைப் பாழ்படுத்தியிருந்தன. தொன்னூறுகளில் இந்த நிறுவனங்களின் தவறான முகாமைத்துவம் குறித்து முகாபே விமர்சித்த போது பிரச்சினை கிளம்பியது. தொடரும் நில அபகரிப்புக் காரணமாக, பெருமளவு வெள்ளையின முதலாளிகள் தமது வர்த்தகச் செயற்பாடுகளை நிறுத்திவிட்டு, வேறு நாடுகளுக்குப் போய் தங்கிவிட்டனர். சர்வதேச வர்த்தகம் வெள்ளையினத்தவர் ஆதிக்கத்தில் இருந்ததால், பொருளாதார வீழ்ச்சியேற்பட்டது. அவர்கள் வெளியேறிய பின்னர், சர்வதேச சமூகம் தொடர்பை முறித்துக்கொண்டது. ஆனால் இவை எல்லாம் மேற்கத்தைய தொடர்பூடகங்களால் மூடிமறைக்கப்பட்டு, எல்லாவற்றிற்கும் முகாபேயின் தவறான அரசியல்தான் காரணம் எனப் பிரச்சாரம் செய்யப்படுகின்றது. "பயங்கரவாத்திற்கெதிரான போர்" சிம்பாப்வே மீதும் தொடுக்கப்பட வேண்டுமென பிரிட்டன் எதிர்பார்க்கிறது. சிம்பாப்வேயில் எதுவித பொருளாதார-இராணுவ நலன்களும் இல்லாதபடியால் அமெரிக்கா இதைத் தட்டிக் கழித்தபடியுள்ளது. இருப்பினும் நிலைமை இப்படியே நீடிக்க பிரிட்டன் விடவில்லை. இராஜதந்திர, பொருளாதார அழுத்தங்களின் மூலம் உள் நாட்டு கிளர்ச்சிகள் தூண்டிவிடப்பட்டன. நவ காலனித்துவம் என்றால் என்ன என்பதற்கு சிம்பாப்வே ஒரு சிறந்த உதாரணம். வெள்ளையர்கள் வெளியேறி விட்டனர் தான், ஆனால் அவர்களது மூலதனம் நம்மை இப்போதும் ஆண்டுகொண்டிருக்கிறது.

(தொடரும்)

2 comments:

"உழவன்" "Uzhavan" said...

மிக அருமையாக எழுதியுள்ளீர்கள். இது போன்ற காரணங்களினால்தான் சிம்பாப்வேயின் பண மதிப்பு மிக மோசமான நிலையில் உள்ளது. ஒரு சோப்பு வாங்குவதற்குக்கூட, ஒரு சூட்கேஸ் நிறைய பணம் எடுத்துச் செல்லவேண்டிய பரிதாப நிலையில் உள்ளது. தொடருங்கள்...

Kalaiyarasan said...

Thank You fvor the comment, Uzhavan.