Thursday, June 25, 2009

இந்தியாவில் கொந்தளிக்கும் உள்நாட்டுப் போர்


"சுதந்திரத்திற்குப் பின்னர், எமது தேசத்தின் பாதுகாப்புக்கு மிகப்பெரும் அச்சுறுத்தல் மாவோயிஸ்ட்களிடம் இருந்து வந்துள்ளது." - இந்தியப் பிரதமர் மன் மோகன் சிங்

கல்கத்தா நகரில் இருந்து, 170 கி.மி. தொலைவில் உள்ள லால்கர் பிரதேசத்தை, மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டில் உள்ள, விடுதலைப் பிரதேசமாக பிரகடனம் செய்திருந்திருந்தனர். இந்த அறிவிப்பும் அதைத் தொடர்ந்த இராணுவ நடவடிக்கையும், இந்திய தேசிய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெற்றன. தாலிபான்களின் மீது போர் தொடுத்து பாகிஸ்தான் மீட்டெடுத்த ஸ்வாட் பள்ளத்தாக்கை ஒப்பிட்டு, "இந்தியாவின் ஸ்வாட் உருவாகின்றது" என தலையங்கம் தீட்டியது ஒரு பத்திரிகை. மேற்கு வங்காள மாநிலத்தில் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டு பிரதேசத்தை இராணுவ நடவடிக்கை முடிந்த கையோடு, அரசு மாவோயிஸ்ட்களை பயங்கரவாத அமைப்பாக தடை செய்தது.

மாவோயிஸ்ட்கள் மீதான தடை வெறும் அரசியல் தந்திரோபாயம் என்று சில அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர். "இதுவரை அரசு மாவோயிஸ்ட்களை அடக்க என்ன செய்தது?" என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பலாம் என்பதற்காக பயங்கரவாத தடை வந்துள்ளதாக அவர்கள் ஆற்றுப்படுத்துகின்றனர். இந்திய அரசு முன்பு என்றுமில்லாதவாறு மாவோயிஸ்ட் இயக்கம் மாபெரும் அச்சுறுத்தல் என்று அறிவிப்பதும், பயங்கரவாத அமைப்பாக முத்திரை குத்தி தடை செய்வதும், எந்த வித உள் நோக்கமுமற்று எடுக்கப்பட்ட அரசியல் முடிவுகளல்ல. சுருக்கமாக சொன்னால், இது இந்தியாவின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்". 2001 ம் ஆண்டில், அன்றைய அமெரிக்க அதிபர் ஜோர்ஜ் புஷ்ஷினால் நியூ யார்க்கில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்ட "பயங்கரவாதத்திற்கு எதிரான போர்", தெற்காசியாவை வந்து சேர்ந்துள்ளது. வன்னி பெருநிலப்பரப்பில் இலங்கை அரசு முன்னெடுத்த மூர்க்கத்தனமான போர். அதேயளவு மூர்க்கத்துடன் ஸ்வாட் பள்ளத்தாக்கில் பாகிஸ்தான் அரசு நடத்திய போர். இவையெல்லாம் பயங்கரவாத எதிர்ப்பு பதாகையின் கீழ், அமெரிக்க ஆசியுடன் நடந்த பதிலிப் போர்கள் தாம்.

"இந்தியாவின் 28 மாநிலங்களில், கிட்டத்தட்ட அரைவாசி மாநிலங்களில் மாவோயிஸ்ட்களின் பிரசன்னம் உணரப்படுகின்றது. மொத்த உறுப்பினர்கள் தொகை 20000 - 30000 அளவில் இருக்கலாம். காலாவதியான ஆயுதங்களை வைத்திருக்கும் பொலிஸ் படையால், நவீன ஆயுதங்களைப் பாவிக்கும் பெரும் எண்ணிக்கையிலான மாவோயிட்களை சமாளிக்க முடியவில்லை." முதலாளித்துவ ஊடகங்களே அத்தகைய தகவல்களை தெரிவித்து வருகின்றன. இவர்களின் கவலையெல்லாம், பொலிஸ் படைகள் நக்சலைட்களை எதிர்த்து போராடும் திறனைக் கொண்டிருக்கவில்லை. காலந் தாமதிக்காமல் இராணுவத்திடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டும் என்பது தான்.

மாவோயிஸ்ட்கள் ஏற்கனவே ஆந்திரா, சட்டிஸ்கர், பிஹார், ஒரிஸ்ஸா ஆகிய மாநிலங்களில் விடுதலைப் பிரதேசங்களை அமைத்துள்ளனர். இவை மாவோயிஸ்ட் கட்சியினரின் முழுமையான ஆதிக்கத்தின் கீழ் வந்துள்ள பிரதேசங்கள். இதைவிட கெரில்லாப் பிரதேசம் என அறிவிக்கப்பட்ட சில இடங்களில், தலைமறைவாக இயங்கும் மாவோயிஸ்ட்களின் உத்தரவுகள் செல்லுபடியாகின்றன. உதாரணத்திற்கு கெரில்லாப் பிரதேச முதலாளிகள் அதிகளவு சம்பளம் வழங்க வேண்டுமெனவும், கட்சிக்கு வரி செலுத்த வேண்டுமெனவும் பல உத்தரவுகள் நடைமுறைபடுத்தப் படுகின்றன. பெரும்பாலும் நாட்டுப்புற சிறிய நகரங்களையும், ஆதிவாசிகளின் காட்டுப்பகுதிகளையும் மாவோயிஸ்ட்கள் தமது கட்டுப்பாட்டு பிரதேசம் என அறிவித்துள்ளனர். இந்தியாவின் கீழ்த்திசை மாநிலங்களில் உள்ள அத்தனை கட்டுப்பாட்டுப் பிரதேசங்களின் மொத்தப் பரப்பளவு, இலங்கை அளவு இருக்கும்.

மேற்கூறப்பட்ட தரவுகள் எல்லாம் இந்திய அரசுக்கு, அல்லது ஊடகங்களுக்கு தெரியாதவை அல்ல. 1967 ம் ஆண்டு, மேற்கு வங்காளத்தில் நக்சல்பாரிக் கிராமத்தில் எழுந்த விவசாயிகளின் புரட்சி அடக்கப்பட்டு விட்டது என்றே பலரும் நம்பிக் கொண்டிருக்கின்றனர். எழுபதுகளில் இந்திய அரசுக்கு சவாலாக விளங்கிய நக்சலைட்களின் போராட்டம் ஓய்ந்து விட்டது என்று தான் எல்லோரும் நம்பினார்கள். முன்னாள் போராளிகள் ஆயுதங்களைக் கைவிட்டு, "மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்" கட்சிகளாக பாராளுமன்ற அரசியல் வழியில் ஜனநாயகமயப்பட்டதும் அரசாங்கம் நிம்மதிப் பெருமூச்சு விட்டது. இருப்பினும் சிறு குழுக்கள் ஆயுதப் போராட்டத்தை தொடர்ந்த வண்ணம் இருந்தன. ஆந்திராவில் இயங்கிய மக்கள் யுத்தப் பிரிவும், பீகாரில் இயங்கிய MCC பிரிவும், சில சமயம் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். இந்த சகோதர சண்டையும் இந்திய அரசை ஒதுங்கியிருந்து வேடிக்கை பார்க்க வைத்தது. நேபாளத்தில் மாவோயிஸ்ட் வெற்றி, இந்திய நக்சலைட்களுக்கு புத்துணர்ச்சி அளித்தது. மக்கள் யுத்தப் பிரிவு, MCC, மற்றும் சில உதிரிக் குழுக்கள் இணைந்து மாவோயிஸ்ட் கட்சியாக மறுவார்ப்புச் செய்து கொண்டனர்.

நக்சலைட் கிளர்ச்சியை அடக்குவதற்கு இராணுவப் பிரிவுகளை அனுப்பாததற்கு காரணம் இருக்கிறது. இந்திய தேசிய ஊடகங்கள் காஷ்மீர் அல்லது இஸ்லாமிய வன்முறை நடவடிக்கைக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வந்தன. காஷ்மீர் பிரிவினைக்கு எதிராக பிற மாநிலங்களையும், முஸ்லிம் சிறுபான்மைக்கு எதிராக இந்து பெரும்பான்மையினரையும் திசை திருப்பி விடுவதில் ஊடகங்கள் ஓரளவு வெற்றி பெற்றுள்ளன. சுருங்கக் கூறின், இனவாதம், மதவாதம் போன்றன இந்தியர்களைப் பிரித்து வைக்க உதவின. மாவோயிஸ்ட் கிளர்ச்சி பற்றிய செய்திகள் இந்தியர்களை ஏழை-பணக்காரன் என்ற வர்க்க அடிப்படையில் பிரித்து விடும். அமெரிக்காவை எட்டிப்பிடிக்க துடிக்கும் மத்திய தர வர்க்கம் ஒரு பக்கம் வளர்ந்து வருகையில், மறு பக்கம் பெரும்பான்மை இந்தியர்கள் வசதியற்ற ஏழைகள் என்ற உண்மையையும் மறைக்க முடியாது. ஏழைப் பாதுகாவலர்களான நக்சலைட் இயக்கம், ஒரு நிகழ்கால தோற்றப்பாடு என்பதை இந்தியர்கள் அறியக்கூடாது என்பதில் ஊடகங்கள் அவதானமாக இருந்துள்ளன. இது ஊடகங்களின் வர்க்கப்பாசத்தை இனங்காட்டுகின்றது.

அப்போது இந்திய அரசுக்கு தலைக்கு மேல் வேறு பிரச்சினைகள் இருந்தன. பரம வைரியான பாகிஸ்தான் காஷ்மீரில் எல்லைதாண்டி வந்து விடும் என்ற அச்சம் அலைக்கழித்தது. "உலகிலேயே அதிகளவு இராணுவக் குவிப்பை கொண்ட எல்லை" என வர்ணிக்கப்படும் காஷ்மீர் பிரதேசம், இந்திய அரசின் பாதுகாப்பு திட்டமிடலில் முதலிடத்தைப் பெற்றிருந்தது. தற்போதும் இடையிடையே நடக்கும் பயங்கரவாத தாக்குதல்களுக்கு பாகிஸ்தான் காரணம் என்று குற்றம் சாட்டுவது, இந்திய வெளி விவகார கொள்கையின் தவிர்க்க முடியாத அம்சம் தான். இருப்பினும் திரை மறைவில் இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது. பாகிஸ்தான், ஒரு காலத்தில் தான் ஆதரவளித்த காஷ்மீர் தீவிரவாத அமைப்புகளை, தற்போது அடக்கி வைக்கின்றது. காஷ்மீர் கிளர்ச்சியை அடக்கும் கடமையை பாகிஸ்தான் பொறுப்பெடுத்து விட்டதால், இந்திய இராணுவம் இனிமேல் "மாவோயிஸ்ட் எதிர்ப்பு போரில்" ஈடுபடுத்தப்படும்.

கீழ்த்திசை மாநிலங்களில் மாவோயிஸ்ட்களை எதிர்த்துப் போரிட இந்திய இராணுவத்தை அனுப்புவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் இருக்கின்றன. ஒன்று, சீனாவுடனான பூகோள அரசியல் முரண்பாடு. இரண்டாவது, பொருளாதார முதலீடுகளுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவு. இது பற்றி பின்னர் விரிவாக பார்ப்போம். மாவோயிஸ்ட் போராட்டம், சீனாவுக்கு அருகில் அமைந்திருக்கும், இரும்புத் தாது வளம் மிக்க மேற்கு வங்காளம் வரை வந்த பிறகு தான் இந்திய அரசு விழித்துக் கொண்டது. ஒரு புதிய உள்நாட்டுப் போருக்கான ஆயத்தங்கள் வேறு வடிவங்களில் வெளிப்படுகின்றன. தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு, மாவோயிஸ்ட்களுக்கு ஆதரவாக பேசிய கௌர் சக்கரவர்த்தி என்பவர், கைது செய்யப்பட்ட நிகழ்வானது, வரப்போகும் கருத்துச் சுதந்திர அடக்குமுறைக்கு முன்னறிவித்தல் ஆகும். எப்போதும் போர் வருவதற்கு முன்னர், கருத்துச் சுதந்திர அடக்குமுறை வந்து விடும். இலங்கையிலும் அது தான் நடந்தது. துரதிர்ஷ்டவசமாக, எல்லா அரசாங்கங்களும் மனித உரிமைகளுக்கு மதிப்புக் கொடுத்தால், போரை நடத்த முடியாது என்ற கருத்தைக் கொண்டுள்ளன.

மாவோயிஸ்ட்களுக்கு சீனா உதவுவதாக இந்திய அரசு குற்றஞ் சாட்டி வருகின்றது. சீனா இதை மறுத்து வருகின்றது. சீனாவில் புரட்சிக்கு எதிரான (முதலாளித்துவ) கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியில் இருக்கின்றது. இருப்பினும் இன்றைய உலகமயமாக்கப்பட்ட சூழலில், சிந்தாந்த நட்புறவு சாத்தியமில்லை என்பது இந்திய அரசுக்கும் தெரியும். அவர்களது கவலை முழுக்க பூகோள அரசியல் சார்ந்தது. நேபாளத்தில் ஆட்சியில் இருந்த மாவோயிஸ்ட் அரசு, இந்தியாவை புறக்கணித்து சீனாவுடன் வர்த்தக உறவுகளை ஏற்படுத்தியது. அதனால் தான் அங்கே மாவோயிஸ்ட் அரசு கவிழ்க்கப்பட்டது என்று கருதப்படுகின்றது. இலங்கையில் இந்தியா வழங்கி வந்த ஆயுத உதவியை நிறுத்தியதும், சீனா வந்து புகுந்து கொண்டது. இலங்கை அரசுக்கு வேண்டிய அளவு ஆயுதங்களை அள்ளிக் கொடுத்து போரை முடிக்க உதவியது. பிரதிபலனாக அம்பாந்தோட்டை துறைமுகத்தை பெற்றுக் கொண்டது. மாறிவரும் சர்வதேச அரங்கில் சீனா பலம் பெற்று வருவது, இந்தியாவுக்கும், அதற்குப் பின்னால் நிற்கும் அமெரிக்காவுக்கும் உவப்பானதாக இல்லை.

சீன எல்லையில் உள்ள அருணாச்சலப் பிரதேச மாநிலத்திற்கான உரிமை கோரலை சீனா இன்னும் கைவிடவில்லை. இந்த நிலையில் வட-கிழக்கு மாநிலங்களில் இந்திய இராணுவம் குவிக்கப்பட்டு வருகின்றது. தனது எல்லையில் நிறுத்தப்படும் இந்திய படைகள் பல மடங்காக பெருப்பதை, சீனா கைகட்டிக் கொண்டு வேடிக்கை பார்க்கவில்லை. சீனா தனது செல்வாக்கை பயன்படுத்தி, ஆசிய அபிவிருத்தி வங்கி இந்தியாவிற்கு வழங்கவிருந்த கடனை முடக்கியது. பின்னர் அமெரிக்காவின் தலையீட்டினால் தான் கடன் அனுமதிக்கப்பட்டது. மேலெழுந்தவாரியாக இரு நாடுகளுக்கும் இடையில் நட்புறவு நிலவி வந்த போதிலும், அமெரிக்க-இந்திய அணு சக்தி உடன்படிக்கையின் போது சீனா தனது அதிருப்தியை வெளிக்காட்டியது.

கடந்த வருடம் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி இந்தியாவையும் கடுமையாக பாதித்துள்ளது. இந்த நிலையில், பெறுமதியான கனிம வளங்கள் அதிகமாக காணப்படும் ஒரிசா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் மாவோயிச போராளிகள் பலம் பெற்று வருகின்றனர். ஏற்கனவே ஒரிசாவில் அலுமினிய தொழிற்துறை மாவோயிஸ்டுகளின் தாக்குதல்களால் பின்னடைவை சந்தித்துள்ளது. மாவோயிஸ்ட்கள் அலுமினிய உற்பத்தியை முடக்குவதுடன், டைனமைட்களையும் கொள்ளையிட்டுச் செல்கின்றனர். தேசிய அலுமினிய நிறுவனமான NALCO, ஏப்ரலில் தனது சுரங்கங்கள் புரட்சியாளர்களால் தாக்கப்பட்டதில் இருந்து, 20 வீத வருமான இழப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

சுரங்கங்கள் மட்டுமல்ல, அலுமினிய, இரும்பு மூலப்பொருட்களை ஏற்றிச் செல்லும் ரயில் விநியோகப் பாதைகளும் மாவோயிஸ்ட் போராளிகளினால் தாக்கப்படுகின்றன. ரயில்பாதையை குண்டு வைத்து தகர்ப்பது கூட விநியோகத்தை தற்காலிகமாக முடக்க போதுமானதாக உள்ளது. இதனால் இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப் படுவதுடன், பொருளாதாரத்தில் பாரிய பின்னடைவை தோற்றுவிக்கும் என தொழிலதிபர்கள் கவலைப்படுகின்றனர். மேற்கு வங்காளத்தில் லால்கர் பிரதேசம் மாவோயிஸ்ட் கட்டுப்பாட்டின் கீழ் வந்ததும், தொழிலதிபர்களின் இரத்தக் கொதிப்பு இரட்டிப்பாகியது. இந்தியாவில் மிகப் பெரிய இரும்பு உற்பத்தி நிறுவனமான JSW Steel, லால்கருக்கு அருகில் 10 பில்லியன் டாலர் செலவில் தொழிற்சாலை அமைக்க திட்டமிட்டிருந்தது. முதலீட்டாளர்கள் மனதில் "மாவோயிஸ்ட் பிரச்சினை" திகிலை ஏற்படுத்தியுள்ளமையை, JSW Steel அதிபர் குப்தா ஊடகத்திற்கு வழங்கிய செவ்வி எடுத்துக் காட்டுகின்றது. பொதுவாக தொழிலதிபர்கள் அரசியலுக்கு அப்பாற்பட்ட மனிதர்களாக வேஷம் போடுவது வழக்கம். ஆனால் ஒவ்வொரு போருக்குப் பின்னும் பொருளாதார நலன்கள் மறைந்து கிடக்கின்றன.


***********************************************************************
இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
தமிழ்நாட்டில் நக்சலைட்களின் மீள்வருகை

7 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இக்கட்டுரை ஒரு செய்தியாகவே வெளிவந்துள்ளது. ஒரு கட்டுரை பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆய்வுகளே இவ் வலைப்பூவை ஏனைய 1000 வலைப்பூக்களிலிருந்து வேறு படுத்துகின்றன.

அவர்கள் மக்களின் போராளிகளா, பயங்கரவாதிகளா? Salwa Judum என்ற மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இயக்கம் பற்றிய உங்களின் கருத்து முதலானவை எங்களுக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

உங்களின் ஒரு பதிவு விடாமல் படித்து வருகிறேன் :)

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

இக்கட்டுரை ஒரு செய்தியாகவே வெளிவந்துள்ளது. ஒரு கட்டுரை பற்றி உங்கள் கருத்துக்கள் மற்றும் ஆய்வுகளே இவ் வலைப்பூவை ஏனைய 1000 வலைப்பூக்களிலிருந்து வேறு படுத்துகின்றன.

அவர்கள் மக்களின் போராளிகளா, பயங்கரவாதிகளா? Salwa Judum என்ற மாவோயிஸ்டுகளுக்கு எதிரான இயக்கம் பற்றிய உங்களின் கருத்து முதலானவை எங்களுக்கு நீங்கள் தெளிவு படுத்த வேண்டும்.

உங்களின் ஒரு பதிவு விடாமல் படித்து வருகிறேன்

Kalaiyarasan said...

நன்றி, பிரதீப். இதைப் பற்றி ஆராயவும் எழுதவும் நிறைய இருக்கின்றது. நேரம் கிடைக்கும் போது நீங்கள் குறிப்பிட்ட விஷயத்தையும் எழுதுகிறேன்.

Anonymous said...

மிகவும் அற்புதமான நடை நண்பரே, தெளிவான விளக்கம் தெரியாத உண்மைகள் உலகில் என்ன நடக்கிறது ஏன் அப்படி போன்ற விளக்கம்.

இது மேன்மேலும் தொடர எம் வாழ்த்துகள்

Anonymous said...

முதலில் கட்டுரை முழுவதும் அபத்தம்...

West Bengal, Andra pradesh, Bihar, Orissa.... இந்த மாநிலங்களில் எல்லாவற்றில்லும் 6 ஆண்டுகளுக்கு மேல் பிரயாணங்கள் செய்து வேலை செய்தவன் என்ற முறையில் எனக்கு இந்த மாநில மக்கள் மற்றும் கலாச்சாரம் போன்ற விசயங்களில் அனுபவ அறிவு உள்ளது..

உங்கள் கட்டுரை முழுவதும் "google" உதவியுடன் எழுதப்பட்டதுதான் என்பதற்கு ஆதாரம் தேவையில்லை என்றே கருதுகிறேன்...

கலையரசன், நீங்கள் LTTE, Tamil Eelam போன்று உங்களுக்கு அனுபவம் உள்ளவற்றையே எழுதுங்கள்.

Anonymous said...

நக்சல்பரி மீண்டும் எழுகிறது. இதை அரசு துப்பாக்கி கொண்டு அடக்கிவிடலாம் என கனவு காண்கிறது. இது சமூக பிரச்சனை. மேற்குவங்கம் முன்பை விட அம்பலபட்டு அம்மணமாய் நிற்கிறது. மக்கள் மாவோயிஸ்டுகளை ஆதரிக்கிறார்கள். இந்த போர் தொடரும் விடுதலை அடையும் வரை. 28 மாநிலங்களில் பரவிக்கிடக்கிறார்கள் என்பது கொஞ்சம் அதிகப்படியான செய்தி தான். கத்தார் படத்தை போட்டுள்ளீர்கள். அவர் இப்பொழுது வெளியே வந்துவிட்டார். தனித்தெலுங்கானாவுக்கா ஏதோ தனியாக இயக்கம் தொடங்கியதாக கேள்விபட்டேன்.

Anonymous said...

மிக அறுமியான கட்டுரை . இப்படியான போராடங்கள் நடப்பதே பலருக்கு தெரியாது . கூகிள் தகவல் என்றாலும் சரியான காலத்தில் சமுக பார்வியுடன்
கட்டுரை வெளிவந்துள்ளது .