Tuesday, June 30, 2009

மேலைத்தேய நாசகார நாகரீகம்

-"அவர்கள் எம்மை எதற்காக வெறுக்கிறார்கள்? நாம் உலகிலேயே மிகச் சிறந்த நாகரீகத்தை கொண்டிருக்கிறோம். எமது ஜனநாயக பாரம்பரியம், தனி மனித சுதந்திரம் இவற்றை அவர்கள் வெறுக்கிறார்கள்."
-"நாகரிக மேற்குலகின் மீது பயங்கரவாத காட்டுமிராண்டிகளின் தாக்குதல்."
-"தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம்."


மேற்குறிப்பிட்ட கூற்றுகள் யாவும், கடந்த எட்டு வருடங்களாக பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் ஈடுபட்டிருக்கும், அமெரிக்காவும், அதன் மேற்குலக கூட்டாளிகளும், கூறிவரும் நியாயங்கள். "நாகரீக உலகம்", "காட்டுமிராண்டிகளின் உலகம்" இந்த சொற்பதங்களுக்குப் பின்னால் பொதிந்திருக்கும் அர்த்தங்கள் ஆயிரம். அமெரிக்காவின் தீமைக்கெதிரான, அல்லது பயங்கரவாதத்திற்கெதிரான போர் ஆப்கானிஸ்தான் படையெடுப்போடு மட்டும் நின்றிருந்தால், "ஒரு வல்லரசின் பழிவாங்கல்" என்பதோடு பிரச்சினை முடிந்திருக்கும். ஈராக், வட-கொரியா என்று ஒன்றோடொன்று சம்பந்தப்படாத நாடுகள் மீதும் "நாகரிக உலகம்" போர் தொடுத்தது, அல்லது திட்டமிடுகிறது. மேற்குலக மக்கள் ஆதரவு "நாலாயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த கொள்கை" அடிப்படையில் ஒன்று திரட்டப்படுகிறது.

அமெரிக்காவின் ஜனாதிபதியாக புஷ் பதவி வகித்த எட்டு வருடங்களில் உலகம் அடியோடு மாறி விட்டது. "புஷ் ஆட்சிகாலம் மறைந்தாலும், அதன் தாக்கம் இன்னும் பத்தாண்டுகளுக்கு நிலைத்து நிற்கும்." என்று புஷ்சின் சுயசரிதையை திரைப்படமாக்கிய ஒலிவர் ஸ்டோன். அமெரிக்கா மட்டும் தனது சிறந்த கலாச்சாரப் பாரம்பரியத்தை மீளக் கண்டுபிடிக்கவில்லை. ஐரோப்பாவிலும் "கிறிஸ்தவ கலாச்சாரப் பெருமை" பேசும் வலதுசாரி சக்திகள் தலையெடுத்தன. சில நேரம் ஆட்சியில் இருப்பவர்களே, "பண்பாடு" "வாழும் நெறி" பற்றி தமது பிரசைகளுக்கும், குடியேறிய வெளிநாட்டவர்களுக்கும் வகுப்பெடுத்தனர். வந்தேறுகுடிகள் ஐரோப்பிய கலாச்சாரத்தை மதித்து நடக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டனர். நம் நாட்டு மக்களில் பலர் தமது (இந்தியக்) கலாச்சாரமே உயர்ந்தது என்றும், ஐரோப்பியர்கள் தம்மை விடக் கீழான சீரழிவுக் கலாச்சாரம் கொண்டவர்கள் என்றும் ஒரு தலைப்பட்சமாக கருதுகின்றனர். மறு பக்கத்தில் ஐரோப்பியர்கள் தமது கலாச்சாரமே உலகில் சிறந்தது, மற்றவை எல்லாம் காட்டுமிராண்டிக் கலாச்சாரம் என்று கருதுகின்றனர்.

மேற்கத்திய பல்கலைக் கழகங்களில் இப்போதும் "கலாச்சார மோதல்" பற்றி கற்பிக்கப்படுகின்றது. அதாவது நாகரீகமடைந்த மேற்கத்திய கலாச்சாரம், உலகின் பிற காட்டுமிராண்டிக் கலாச்சாரங்களுடன் மோதிக் கொண்டிருக்கிறது. இந்த போராட்டத்தில் இறுதியில் மேற்கத்திய கலாச்சாரம் வெற்றி பெறும். ஏனெனில் இது தீமைக்கெதிரான நன்மையின் போராட்டம். கறுப்பர்கள், அரேபியர்கள், இந்தியர்கள், சீனர்கள், இவர்களுடன் ரஷ்யர்கள் கூட "பல குறைபாடுகளைக் கொண்ட சமூகங்களாக" சித்தரிக்கப்படுகின்றனர். அரசுகள், பல்கலைக் கழகங்கள், ஊடகங்கள், இப்படி மக்களை வழிநடத்தும் கருவிகள் யாவும் "காட்டுமிராண்டிகளை நாகரீகப்படுத்தும் தேவையை" சொல்லிக் கொண்டிருக்கின்றன. இவை பல்வேறு வடிவங்களில் வெளிப்படும். மனித உரிமை மீறல்கள், ஊடக சுதந்திரமின்மை, ஊழல், போர்க் காலக் குற்றங்கள், சித்திரவதை, சர்வாதிகாரம், பயங்கரவாதம்.... இப்படி நீண்டு செல்லும் பட்டியலில் குறிப்பிடப்படும் எதிர்மறையான விடயங்கள் யாவும், காட்டுமிராண்டி நாடுகளின் விசேட குணங்கள். இந்த நாடுகளைச் சேர்ந்த நாம் அப்படி நினைக்காமல் விடலாம். ஆனால் மேற்கத்திய நாடுகளில் ஊடகங்களால் மூளைச்சலவை செய்யப்படும் அப்பாவி மக்கள், அப்படித்தான் கருதிக் கொண்டிருக்கிறார்கள்.

மேற்கு ஐரோப்பிய நாட்டு மாணவர்களுக்கு வரலாறு ஒரு கட்டாய பாடம். அந்தப் பாடத்தில் சித்தி அடையாமல், பல்கலைக்கழகம் செல்ல முடியாது. வரலாற்றுப் பாடத்தில், ஐரோப்பிய சரித்திரம் முக்கிய இடம் பிடிக்கிறது. ஐரோப்பாவின் சரித்திரம் கிரேக்கத்தில் இருந்து தொடங்குவதாக அனைத்து நூல்களும் போதிக்கின்றன. நோர்வே முதல் இத்தாலி வரை பல்வேறு மொழிகளில் கற்பிக்கப்பட்டாலும், ஐரோப்பிய சரித்திரம் ஒரே மாதிரித் தான் எழுதப்பட்டுள்ளது. கிழக்கு ஐரோப்பாவில் சோஷலிசம் மறைந்த பிறகு, அங்கே எப்படி "நடுநிலை வரலாற்றுப் பாடம்" எழுத வேண்டும் என்று சொல்லிக் கொடுத்தனர். சந்தேகத்திற்கிடமின்றி மேற்குலக கண்ணோட்டத்தில் சரித்திரம் திருத்தி எழுதப்பட்டிருக்கும். ஐரோப்பிய நாடுகள், அறுபது வருடங்களுக்கு முன்னர் ஒன்றோடொன்று சண்டையிட்டுக் கொண்டிருந்தன. தற்போது தாம் முன்பு ஒரே வரலாற்றைக் கொண்டிருந்ததாக சொல்வதை நம்புவதற்கு கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அமெரிக்காவில் சென்று குடியேறிய ஐரோப்பிய வம்சாவழியினரே, அங்கே அரசியல் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதனால் அமெரிக்க நாகரீகமும் கிரேக்கத்தில் இருந்தே ஆரம்பமாவது தவிர்க்க முடியாதது.

அடிக்கடி "கிரேக்கதைப் பாருங்கள்" என்று சுட்டிக் காட்டுகிறார்களே, அங்கே அப்படி என்ன இருந்தது? "ஜனநாயகம்", "தனி மனித சுதந்திரம்" இந்த வார்த்தைகள் இற்றைக்கு நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கிரேக்கர்கள் பயன்படுத்தினர். கிரேக்க மொழியில் Demos என்றால் மக்கள் என்று அர்த்தம். ஆகவே "Democracy" என்ற மக்கள் ஆட்சி அங்கே நிலவியது. குறிப்பாக ஏதென்ஸ் என்ற நகர-தேசம் மன்னர் ஆட்சியற்ற குடியரசாக இருந்தது. அங்கே மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கைகளில் ஆட்சியதிகாரம் இருந்தது. தனி மனித சுதந்திரம் சட்டத்தினால் உறுதி செய்யப்பட்டது. சுருக்கமாக சொன்னால், இன்றுள்ள மேற்கத்திய நாடுகளைப் போல பண்டைய கிரேக்கம் காட்சியளித்தது. இவையெல்லாம் சரித்திர பாடப் புத்தகங்களில் எழுதப் பட்டிருப்பதின் சாராம்சம். மேல்நிலைப் பள்ளியில் போதிக்கப்படும் "ஜனநாயக சித்தாந்தம்", பெரியவர்கள் மனதிலும் ஆழப் பதிந்துள்ளது. இந்நாடுகளில் ஆசிரியர்கள் இப்படித்தான் கற்பிக்க வேண்டுமென்று, கல்வி அமைச்சினால் அறிவுறுத்தப் படுகின்றனர்.

2001 ம் ஆண்டு, நியூ யார்க் தாக்குதலின் பின்னர், அன்றைய ஜனாதிபதி புஷ் ஆற்றிய உரை, பல உலக நாட்டு மக்களை வியப்பில் ஆழ்த்தியது. ஆனால் அமெரிக்க-ஐரோப்பிய மக்கள் மட்டும் தமது "ஜனநாயகப் பாரம்பரியம்" தாக்கப் பட்டதாகவும், தமது பழம் பெருமையை மீட்க வேண்டும் என்றும் சபதமெடுத்தனர். புஷ்ஷின் உரை, பண்டைய கிரேக்கத்தின் அறைகூவலை மீண்டுமொரு முறை எதிரொலித்தது. 2500 வருடங்களுக்கு முன்னர், கிரேக்கம் மீது ஈரானில் இருந்த பாரசீகப் பேரரசு படையெடுக்க எத்தனித்தது. கிழக்கே இருந்த பாரசீக நாட்டை சேர்ந்தவர்களை காட்டுமிராண்டிகளாக சித்தரித்து தான், கிரேக்கம் தனது மக்களை அணி திரட்டியது. "அவர்கள் ஏன் எம்மை தாக்குகிறார்கள்? எமது சிறந்த நாகரீகமான ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் ஆகியவற்றைக் கண்டு பொறாமை கொண்டுள்ளனர்." போருக்காக ஏதென்ஸ் அரசு கூறிய காரணங்கள் அவை. ஆமாம், பண்டைய கிரேக்கர்களும், நம் காலத்து அமெரிக்கர்களைப் போல, தமது ஜனநாயகம், சுதந்திரம் குறித்து பெருமை கொண்டிருந்தனர்.

பண்டைய கிரேக்கத்தில் ஜனநாயகம் நிலவியது உண்மை தான். ஆனால் அந்த ஜனநாயகம் நமக்கெல்லாம் தெரிந்த "பல கட்சி அரசியல் முறை" அல்ல. கட்சி என்றால் என்னவென்று அறிந்திராத காலம் அது. ஏதென்ஸ் பிரசைகளுக்கு தமது பிரதிநிதிகளை தெரிவு செய்து வாக்களிக்கும் உரிமை இருந்தது. ஆனால் அந்த "சர்வசன வாக்குரிமை" ஆண்களுக்கு மட்டுமே இருந்த சுதந்திரம். பெண்களுக்கும், அடிமைகளுக்கும் வாக்குரிமை இருக்கவில்லை. தனி மனித சுதந்திரம் பெண்களுக்கு மட்டுப்படுத்தப் பட்டே இருந்தது. பண்டைய கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடுதுஸ் (கி.மு. 484-420) எகிப்தில் தான் கண்டவற்றை பற்றி எழுதிய குறிப்புகளில் இருந்து: "எகிப்தியப் பெண்களுக்கு சந்தைக்கு சென்று வரவும், கடைகளை நடத்தவும் சுதந்திரம் இருந்தது. அதற்கு மாறாக கிரேக்கப் பெண்கள், கணவனில் தங்கியிருந்து வீட்டு வேலைகளை மட்டுமே செய்து வந்தனர்." பண்டைய கிரேக்கத்தில் அடிமைகள், எஜமானின் சொத்தாக பார்க்கப்பட்டனர். ஒரு சில இடங்களில், பணம் சேர்க்க முடிந்த அடிமைகள் சுதந்திரம் வாங்கிக் கொண்டனர். அப்போது கூட உள்ளூர் பிரசைகள் செய்ய விரும்பாத (உதாரணம்: துறைமுகத்தில் மூட்டை சுமத்தல்) வேலைகளை மட்டுமே செய்தனர். இவர்களுக்கும், வேலைக்காக புலம்பெயர்ந்து வந்து குடியேறிய மக்களுக்கும், ஏதென்ஸ் நாட்டு பிரசாவுரிமை கொடுக்கப்படவில்லை. அந்த மக்களைப் பொறுத்தவரை, ஜனநாயகம், தனி மனித சுதந்திரம் என்பன அர்த்தமற்ற வார்த்தைகள்.

சில வருடங்களுக்கு முன்னர் ஹாலிவுட் எடுத்த "300" என்ற தலைப்பிலான படம் வசூலை அள்ளிக் குவித்தது. ஒரு சரித்திரக் கதையை மையமாக வைத்து வரையப்பட்ட சித்திரக்கதையை தழுவி அந்தப் படம் எடுக்கப் பட்டிருந்தது. "300" திரைப்படம் ஈரானியர்களை வில்லன்களாக சித்தரிப்பதாக விமர்சனங்கள் வந்தன. அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம் என்றது ஈரான். அப்படி என்ன அந்தப் படத்தில் இருக்கிறது? பண்டைய கிரேக்கத்தில் ஏதென்ஸ் நாட்டிற்கு தெற்கே இருந்த ஸ்பார்ட்டா என்ற தேசத்தின் வீரதீரக் கதை தான் "300". பாரசீக ஆக்கிரமிப்பாளரை எதிர்த்து, 300 ஸ்பார்ட்டா வீரர்கள் தீரத்துடன் போரிட்டு மடிவது தான் கதை. பாரசீக நாட்டு வீரர்கள், கறுப்பர்கள் போல, அல்லது அரேபியர் போல தோன்றுகின்றனர். அவர்களின் செயல்கள் காட்டுமிராண்டித் தனமானவை. சுருங்கக் கூறின், மேற்கத்திய நாகரீகத்திற்கும், கிழக்கத்திய காட்டுமிராண்டித்தனத்திற்கும் இடையிலான போர். இன்றைய இளம் தலைமுறைக்கு இன மேலாதிக்க அரசியல் பிரச்சாரம் செய்ய, ஹாலிவுட் கண்டு பிடித்த சரித்திரக் கதை அது.

ஸ்பார்ட்டா மக்கள் எந்த அளவு நாகரீகமடைந்திருந்தனர்? ஏதென்ஸ் இற்கும், ஸ்பார்ட்டாவிற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருந்தன. முரண்பாடுகள் முற்றி இவ்விரு அரசுகளுக்கும் இடையில் சில நேரம் யுத்தம் மூண்டது. "கிரேக்கர்களின் உள்நாட்டு யுத்தம்" என்று அப்போது அது அழைக்கப்பட்டது. ஏதென்ஸ் நகரமயமாக்கப்பட்ட சமூகமாக இருந்தது. அதற்கு மாறாக ஸ்பார்ட்டா கிராமங்களின் தேசம். ஆனால் அதி தீவிர இராணுவமயப்பட்ட பாஸிச சமூகத்தைக் கொண்டிருந்தது. ஒவ்வொரு குடும்பமும் தமது ஆண் குழந்தைக்கு பத்து வயதானவுடன் அரசாங்கத்தின் பொறுப்பில் ஒப்படைத்து விட வேண்டும். அன்றில் இருந்து இராணுவ முகாம்களில் வாழ நிர்ப்பந்திக்கப்படும் இளைஞர்களுக்கு, கடுமையான இராணுவ பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் தமது பதின்ம வயதில் சித்தி அடையும் போது, தயக்கத்தைப் போக்குவதற்காக, கண்ணில் படும் அடிமையை கொலை செய்யுமாறு பணிக்கப்படுவர்.

ஸ்பார்ட்டாவில் அடிமைகளின் உரிமை பற்றி யாருக்கும் அக்கறை இருக்கவில்லை. இராணுவ பயிற்சிக்காக கொல்லப்பட்டும் பலியாடுகள் அவர்கள். இந்த அடிமைகள் முந்தின போர்களில் வெற்றி கொள்ளப்பட்ட இடங்களில் வாழ்ந்த மக்கள். அதாவது போர்க் கைதிகள். எண்ணிக்கையில் அதிகமாக இருந்த அடிமைகள் தமக்கெதிராக கிளர்ந்தெழக் கூடாது என்பதற்காக, இராணுவ பயிற்சியின் போது வேட்டையாடப் பட்டனர். ஒரு முறை ஸ்பார்ட்டாவில் ஏற்பட்ட கடுமையான பூமி அதிர்ச்சி, அடிமைகளை விடுதலை செய்தது. அடிமைகள் ஒன்று திரண்டு, ஸ்பார்ட்டா அரசுக்கெதிராக கிளர்ச்சி செய்தனர். ஐந்து வருடங்களாக அந்தக் கிளர்ச்சியை அடக்க முடியவில்லை. இறுதியில் ஏதென்ஸின் மத்தியஸ்தத்தின் பின்னர், கிளர்ச்சியாளர்கள் பாதுகாப்பாக வெளியேறிய பின்பே, அமைதி திரும்பியது. அந்த கிளர்ச்சிக்குப் பின்னர், ஸ்பார்ட்டா அதிகாரிகள், அடிமைகளை ஓரளவு மனிதத்தன்மையுடன் நடத்தலாயினர்.

இன்றைய மேற்குலக அரசுகளும், அன்றைய கிரேக்க அரசுகளும் பிரச்சாரம் செய்தது போல, கிழக்கில் இருந்த பாரசீக நாட்டில், காட்டுமிராண்டிக் கலாச்சாரம் நிலவவில்லை. பாரசீகப் பொருளாதாரம் அடிமைகளை நம்பி இருக்கவில்லை. சமுதாயத்தில் மிக மிகக் குறைவான அடிமைகளே இருந்தனர். மேலும் சீருஸ் சக்கரவர்த்தி போட்ட சட்டம், அடிமை முறையை தடை செய்திருந்தது. கி.மு. 6 ம் நூற்றாண்டில் பொறிக்கப்பட்ட சீருஸ் சக்கரவர்த்தியின் சட்டம், "உலகின் முதலாவது மனித உரிமைகள் சாசனம்" என்று புகழப் படுகின்றது. ஐ.நா.மன்றம் அதனை பல்வேறு உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிட்டுள்ளது. "பிற மதங்கள் மீதான சகிப்புத் தன்மை, அடிமை முறை ஒழிப்பு, விரும்பிய தொழிலை செய்யும் உரிமை...." போன்ற தனி மனித சுதந்திரங்கள் அந்த சாசனத்தில் உறுதிப்படுத்தப் பட்டிருந்தன. ஒரு காலத்தில் மத்திய கிழக்கின் இன்னொரு பேரரசின் தலைநகராக இருந்த பாபிலோன் சீருஸ் சக்கரவர்த்தியின் படைகளால் கைப்பற்றப்பட்டது. அப்போது கூட, பாபிலோன் மக்களுக்கு தாம் ஆக்கிரகிக்கப் பட்டிருக்கிறோம் என்ற எண்ணம் எழாதபடி ஆளப்பட்டனர். சக்கரவர்த்தியின் உத்தரவின் பிரகாரம், பாபிலோனியர்கள் தமது சொந்த மதத்தை வழிபட சுதந்திரம் வழங்கப்பட்டது. அத்தோடு எந்தவொரு பாபிலோனியனும் அடிமையாக்கப் படவில்லை.

மேற்குலகம் போதனை செய்வதைப் போல, அவர்கள் ஜனநாயகப் பாரம்பரியத்தில் வந்தவர்களுமல்ல, மத்திய ஆசியாவை சேர்ந்தவர்கள் காட்டுமிராண்டிகளும் அல்ல. வரலாற்றில் தமக்குப் பிடித்த பகுதிகளை மட்டும் தெரிவு செய்து கற்பதால் தான் இந்த குளறுபடி ஏற்படுகிறது. இன்று ஊடகங்களில் சித்தரிக்கப்படும் "காட்டுமிராண்டிக் குணாம்சங்கள்" எல்லாம் ஐரோப்பிய வரலாறு கண்டு வந்தவை தான். உதாரணத்திற்கு, தற்கொலைத் தாக்குதல்கள். இன்று நீங்கள் சாதாரண ஐரோப்பியனை (அல்லது அமெரிக்கனை) கேட்டால், "பைத்திக்காரத் தனம்" என்று ஒரு வார்த்தையில் பதிலளிப்பார்கள். 1831 ம் ஆண்டு, நெதர்லாந்தில் இருந்து பெல்ஜியம் பிரிவினைக்காக யுத்தம் செய்த காலத்தில், நடந்த சம்பவமொன்று தற்கொலைப் பயங்கரவாதத்தை நினைவுபடுத்தும். யன் வான் ஸ்பைக் என்ற ஒல்லாந்து வணிகன், எதிரிப்படைகளிடம் தனது கப்பல் அகப்படும் தருணத்தில், தனது கப்பலை வெடிக்க வைத்து தானும் மாண்டான். அதிகம் பேசுவானேன், முன்னர் குறிப்பிட்ட 300 ஸ்பார்ட்டா வீரர்கள் மரணத்தை எதிர்நோக்கிச் சென்ற தற்கொலைக் கொலையாளிகள் தான்.

இன்றைய அமெரிக்கா தன்னை பண்டைய கிரேக்கத்துடன் ஒப்பிடும் ஒவ்வொரு தடவையும், யாருக்கும் எந்த தீங்கும் நினைக்காத, தானுண்டு தன் வேலையுண்டு என்று இருந்து வருவதாக அப்பாவி வேஷம் போடுகின்றது. அதாவது தனக்கு ஏகாதிபத்திய ஆதிக்க வெறி ஒரு போதும் இருக்கவில்லை என்பது போல. இந்த விடயத்தில் கூட நம் காலத்து ஏகாதிபத்தியம், பண்டைய கிரேக்க ஏகாதிபத்தியத்துடன் ஒத்த தன்மைகளைக் கொண்டுள்ளது. அனேகமாக "கிரேக்க ஏகாதிபத்தியம்" குறித்து சரித்திர நூல்கள் குறிப்பிடுவதில்லை. "அலெக்சாண்டர் என்ற தனி மனிதனின் உலகை ஆளும் ஆசை" பற்றி மட்டும் எடுத்துக் கூறுகின்றன. வட கிரேக்க, மசிடோனியா நாட்டை சேர்ந்த அலெக்சாண்டர், பாரசீக நாட்டை அடக்குவதாக கூறித் தான் அனைத்து கிரேக்கர்களின் ஆதரவைப் பெற்றுக் கொண்டான். போரில் பாரசீக பேரரசை தோற்கடித்த பின்னர், இளம் வயதில் அலெக்சாண்டர் மாண்டது உண்மை தான். ஆனால் அத்துடன் சரித்திரம் முற்றுப் பெறவில்லை. அலெக்சாண்டரின் பின்னர் அந்தப் பேரரசை நிர்வகித்தவர்கள் அனைவரும் கிரேக்கர்கள். இன்றைய ஈரான் முதல் எகிப்து வரை கிரேக்க நகரங்கள் தோன்றியிருந்தன. அங்கெல்லாம் கிரேக்கர்கள் சென்று குடியேறினர். உள்ளூர் மக்கள் தொழிலுக்காக கிரேக்க மொழி கற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. கிரேக்க காலனிகளின் மக்கள், உள்ளூர் மக்களுடன் ஒன்று கலக்காது, உயர்ந்த அந்தஸ்தைப் பேணி வந்தனர்.

கிரேக்க காலனிய காலகட்டத்தில் இருந்து, அதாவது 2500 வருடங்களாக, ஆசிய நாடுகளை சேர்ந்த மக்கள், மேலைத்தேய நாகரீகத்தை வியப்புடன் நோக்கினர். வேறுவிதமாக கூறினால், மேற்கத்திய மேலாண்மைக்கு அடிபணிந்தனர். தமது சொந்த கலாச்சாரம் பிற்போக்கானது என்றும், மேலைத்தேய கலாச்சாரம் முற்போக்கானது என்று நம்பினார். நமது நாட்டில், தமக்குள் ஆங்கிலத்தில் உரையாடும், ஆங்கிலப் பெயர் சூட்டிக் கொள்வதை பெருமையாகக் கருதும், நடுத்தர வர்க்கத்தை ஒரு கணம் எண்ணிப் பாருங்கள். அப்படியானவர்கள் எல்லா ஆசிய நாடுகளிலும், எல்லாக் காலத்திலும் இருந்து வந்துள்ளனர். அதாவது மேலைத்தேய நாகரீகம், தானே உலகில் உயர்ந்தது, மற்றதெல்லாம் காட்டுமிராண்டிகளின் நாகரீகம், என்பதை நிலை நாட்ட பாடுபடுகின்றது. அந்தக் கருத்துக்கு ஆதரவளிக்கும் உள்ளூர் மக்களும் இருந்தனர்/இருக்கின்றனர். ஆனால் தற்போது இந்த சிந்தனை மாறி வருகின்றது.


குறிப்பாக சீனா, ரஷ்யா போன்ற நாடுகள், மேற்குலகிடம் இருந்து தமக்கு கற்றுக் கொள்ள எதுவும் இல்லை என்று கூறி விட்டன. அவர்கள் மேற்குலக நாகரீகத்தை கண்ணை மூடிக் கொண்டு பின்பற்ற மறுக்கிறார்கள். சிறந்ததை மட்டும் பின்பற்றுவோம், மற்றவற்றை விட்டு விடுவோம் என்று நடந்து கொள்கின்றனர். (அதற்கு மாறாக, மேற்குலக குப்பைகளை எல்லாம் அள்ளிக் கொண்டு வரும் நாடுகளும் இருக்கின்றன.) ரஷ்யாவிலும், சீனாவிலும், ஒரு காலத்தில் தமது பிரசைகள், மேற்குலக செல்வாக்கிற்கு உட்பட்டு விடுவார்களோ என்ற அச்சம் நிலவியது. அதற்காக கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. தற்போது அந்த அச்சம் மறைந்து வருகின்றது. ரஷ்ய, சீன அரசுகள் பெரும்பான்மை மக்களின் ஆதரவைப் பெற்றுள்ளன. ரஷ்யா ஜோர்ஜியா மீது போர் தொடுத்த காலத்தில், சீனா திபெத் கிளர்ச்சியை அடக்கிய நேரமும், மேற்குலக கண்டனங்களுக்கு உள்ளாகின. ஆனால் அப்போதெல்லாம் பெரும்பான்மை மக்கள் தமது அரசின் பக்கமே நின்றனர். அந்த நேரம் மேற்குலக கண்டனங்கள் அவர்களுக்கு எரிச்சலையே ஊட்டின. அதற்குக் காரணம், மேற்குலகின் "இரட்டை அளவுகோல் கொள்கை." "மாமியார் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தால் பொன்குடம்," என்ற பழமொழிக்கேற்ப மேற்குலக நாடுகளின் நடத்தைகள் அமைந்துள்ளன. உலக மக்கள் அனைவரும் இந்த இரட்டை வேஷம் குறித்து நன்றாகவே அறிந்து வைத்திருக்கின்றனர். அதனால் "மேற்குலகின் உயர்ந்த நாகரீகம்" தற்போது, சந்தையில் விலைப்படாமல் தேங்கிக் கிடக்கின்றது.

7 comments:

jothi said...

அருமை. உங்கள் எழுத்துகளில் சமுக கண்ணோட்டம் நிற்கிறது. பெயர் சொல்லும் படைப்புகள்,..

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

மிக நன்று!

Kalaiyarasan said...

நன்றி ஜோதி & பிரதீப்.

பதி said...

பல சரித்திர சம்பவங்களை கோர்வையாக விளக்கியுள்ளீர்கள். அருமை... :))

rrmercy said...

I come to know your blog by marudhan blog(http://marudhang.blogspot.com/).
He recommends your blog.

Be a media (கலையரசன்) - it's really Good.

Thanks a lot for your contribution. your doing a great job. This article is really good. thanks

Kalaiyarasan said...

rrmercy & பதி
Thank you for the comment.

Saminathan said...

நன்றி கலையரசன்.
அற்புதமான பதிவு.