Wednesday, April 29, 2009

நைஜீரியா: எண்ணை வளம் தொல்லை இந்த வல்லரசில் !

ஆப்பிரிக்கர்கள் கண்டுபிடித்த இருண்ட ஐரோப்பா - 4

முதன் முதல் ஐரோப்பிய வெள்ளையரைக் கண்ட ஆப்பிரிக்க கறுப்பர்கள் என்ன நினைத்திருப்பார்கள்? “நீலக் கண்களைக் கொண்ட, வெண்ணிற மேனியரைப் பார்த்த ஆப்பிரிக்கர்கள் கடவுள்கள் வந்து விட்டதாக நினைத்தார்கள்.” என்று ஐரோப்பிய மையவாத வரலாற்றாசிரியர்கள் எழுதி வைத்துள்ளனர். அதை அப்படியே நாமும் நம்பி வந்திருக்கிறோம். ஆனால் கடவுள் என்ற கற்பிதமே, அந்தந்த பிரதேச மக்களின் பிம்பமாக இருப்பது யதார்த்தம். வெள்ளையரின் கடவுள் வெள்ளையாக இருந்தார். அதே போல கறுப்பர்களின் கடவுளும் கறுப்பாக இருந்ததை, இப்போதும் காணப்படும் ஆப்பிரிக்க மத சிற்பங்கள் நிரூபிக்கின்றன. ஆகவே “கடவுளைக் கண்ட வரலாறு” ஒரு ஐரோப்பிய மையவாத கட்டுக்கதை.

முதன்முதல் கறுப்பின ஆப்பிரிக்க மக்களை கண்ட ஐரோப்பியர்கள், அவர்களை மனிதக் குரங்குகளாக கருதினார்கள். அதே நேரம் ஆப்பிரிக்கர்கள், வெள்ளையின ஐரோப்பியரை பன்றி வகையை சேர்ந்த விசித்திர மிருகமாக கருதினர். ஐரோப்பியர்கள், பன்றியின் தோல் நிறத்தை ஒத்த, செந்நிற மேனியைக் கொண்டிருந்தது மட்டுமல்ல, அவர்கள் உடலில் இருந்து வந்த நாற்றமும் அப்படி நினைக்க வைத்தது. “வெள்ளையர்கள் புதைகுழிகளில் இருந்து எழுந்து வந்த ஆவிகள்” என்ற அறியாமை, வெள்ளைக்காரரை கண்டவுடன் கறுப்பின மக்களை பீதியடைந்து ஓட வைத்தது.

நைஜீரியாவில் கால் பதித்த ஐரோப்பியர்கள், வர்த்தக நிலையங்களை ஸ்தாபித்து, அடிமைகளை வேட்டையாடத் தொடங்கிய காலம், இன்னொரு வதந்தி பரவியது. ஒரு பக்கம் அடிமைகளைப் பிடித்து ஏற்றுமதி செய்து கொண்டே, மறு பக்கம் துணி விற்று வியாபாரம் நடத்திக் கொண்டிருந்தனர். அவர்கள் விற்ற துணியின் நிறம் சிவப்பாக இருந்தது. வெள்ளையர்கள் அடிமைகளை கொன்று இரத்தம் எடுத்து துணிகளுக்கு சாயமிடுவதாக கறுப்பர்கள் நம்பினார்கள். பெருந்தொகை அடிமைகள் அமெரிக்காவிற்கு அனுப்பப்பட்டுக் கொண்டிருந்த விடயம், அன்று அவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இந்த விபரங்களை 1857 ல் நைஜீரியாவிற்கு கிறிஸ்தவ மதம் பரப்பச் சென்ற ஜோன் டெயிலர் என்ற பாதிரியார் எழுதி வைத்துள்ளார்.

ஐரோப்பிய காலனியாதிக்கவாதிகள் 19 ம் நூற்றாண்டில் தான் ஆப்பிரிக்க கண்டத்தை காலனிப்படுத்த தொடங்கியதை முன்னர் குறிப்பிட்டிருக்கிறேன். ஆனால் அதன் அர்த்தம், அது வரை ஐரோப்பியர்கள் எவரும் அந்தக் கண்டத்தில் கால் பதித்திருக்கவில்லை என்பதல்ல. ஐரோப்பிய வர்த்தகர்கள், மேற்கு ஆப்பிரிக்க கடற்கரையோரமாக சிறு நிலத்தை கையகப்படுத்தி, அங்கே கோட்டை கட்டி தமது தேசங்கடந்த வர்த்தக கழகத்தை நடத்தி வந்தனர். இதனால் இன்றும் பல ஆப்பிரிக்க நாடுகளின் தலைநகரங்கள் கடற்கரையோரமாக அமைந்துள்ளதைக் காணலாம். ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த வர்த்தகர்கள், உள்ளூர் கறுப்பர்கள் சிலரை தமது முகவர்களாக அமர்த்திக் கொண்டனர். அவர்களது வேலை, நாட்டின் உட்பகுதிக் கிராமங்களை சுற்றிவளைத்து, திடகாத்திரமான உழைக்கும் வயதில் உள்ள (ஆகவே சிறுவர்களும், வயோதிபர்களும் தேவையில்லை) ஆண்களையும், பெண்களையும் அடிமைகளாக பிடித்து வந்து விற்பது. நைஜீரியாவிலிருந்து கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு அடிமைகளாக அமெரிக்கா அனுப்பப்பட்டு விட்டதால், ஒரு காலத்தில் அந்நாட்டின் மத்திய பகுதியில் இளமையான உழைப்பாளிகளைக் காண்பது அரிதாக இருந்தது. ஆப்பிரிக்க நாடுகள் அபிவிருத்தியில் பின்தங்கியமைக்கு இதுவும் ஒரு காரணம்.

நைஜீரியாவில் ஐரோப்பியர்கள் மட்டும் வந்து அடிமைகளை வாங்கிச் செல்லவில்லை. அரேபியருக்கு தேவைப்பட்ட அடிமைகளை அன்று வடக்கு நைஜீரியாவில் இருந்த “கானெம்” இராச்சியம் பிடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தது. (ஒரு முஸ்லீமை அடிமையாக வைத்திருக்க முடியாது என்ற விதிமுறை பின்பற்றப்பட்டது). துனிசியாவில் இருந்த சந்தையில் நைஜீரிய அடிமைகள் விற்கப்பட்டனர். அல்ஜீரியாவை பிரான்ஸ் கைப்பற்றிய பின்னர், கானெம் தேசத்திற்கு பெருமளவு வருமானம் ஈட்டித்தந்த அடிமை வர்த்தகம் நெருக்கடிக்கு உள்ளானது. அடிமை வியாபாரம் மட்டுமல்ல, சாயப்பட்டறை, தோல் பதனிடும் தொழிலகங்கள் போன்ற தொழிற்துறை வளர்ச்சியினால், அன்று வடக்கு நைஜீரியாவில் பல நகரங்கள் தோன்றி இருந்தன. இந்த நகரங்களை ஒரு (கறுப்பின) சுல்த்தான் தலைமையிலான அதிகார மையம் நிர்வகித்து வந்தது. “கானெம்” முழுக்க முழுக்க ஒரு கறுப்பின அரசாட்சியாக இருந்தது. 13 ம் நூற்றாண்டில் இன்றைய லிபியாவின் பகுதிகளை உள்ளடக்கிய, மாபெரும் சாம்ராஜ்யமாக திகழ்ந்தது. இஸ்லாமிய அரேபியருடன் ஏற்பட்ட வர்த்தக தொடர்புகளால், புலானி மற்றும் ஹவுசா இன மக்கள் இஸ்லாமிய மதத்தை தழுவிய பின்பு, அந்த இராச்சியத்தை உருவாக்கி இருந்தனர். அன்றும் இன்றும் அந்தப் பிராந்தியத்தில் ஹவுசா மொழியே பொது மொழியாக உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியிலும் இஸ்லாமிய மதராசாக்கள் சுதந்திரமாக இயங்கி வந்தன. இதனால் பெரும்பாலான நைஜீரிய முஸ்லீம்கள் ஆங்கில மொழிப் புலமை பெற்றிருக்கவில்லை. இது பின்னர் கிறிஸ்தவ மிஷனரி பாடசாலைகளில், ஆங்கிலத்தில் கல்வி கற்ற தெற்கத்திய இனங்களுடன் முரண்பாடுகளை தோற்றுவித்தது.

ஐரோப்பியர் வருவதற்கு முன்னர், ஆப்பிரிக்கர்களிடம் ஒழுங்கமைக்கப்பட்ட இராணுவமோ, அல்லது துப்பாக்கிகளோ இருக்கவில்லை என்று ஐரோப்பிய வரலாற்றாசிரியர்கள் இன்னொரு கட்டுக்கதையை பரப்பி வந்துள்ளனர். 1823 ல் டிக்சன் டென்ஹம் என்ற பிரயாணி, கானேம் இராச்சியத்திற்கு சென்று வந்த முதலாவது ஐரோப்பியராவார். தன்னை வரவேற்க வந்திருந்த ஆயிரக்கணக்கான ஆயுதந்தரித்த, சீருடையணிந்த, குதிரைவீரர்களை கண்டு திகைப்படைந்ததாக குறிப்பெழுதி வைத்துள்ளார். ஐந்நூறு வருடங்களுக்கு மேல் பழமை வாய்ந்த கானோ நகரத்திற்கு செல்பவர்கள், இப்போதும் குதிரைப்படையினரின் அணிவகுப்பை பார்வையிடலாம். கானெம் இராச்சிய இராணுவவீரர்கள் தாங்கியிருந்த துப்பாக்கிகள் அரேபியரின் தொடர்பால் கிடைக்கப்பெற்றவை. ஐரோப்பியர்கள் துப்பாக்கிகள், பீரங்கிகள் பற்றி அறிந்தே இருக்காத காலத்தில், அரேபியர்கள் அவற்றை போரில் திறமையாக பயன்படுத்தி உள்ளனர். 1500 வருடங்களுக்கு முன்னர் ஐரோப்பிய கண்டத்தில் இருந்த, மிகப்பெரிய கிறிஸ்தவ நகரமான கொன்ஸ்டாண்டிநொபெல் (இஸ்தான்புல்) வீழ்ச்சிக்கு (அன்றைய) நவீன கண்டுபிடிப்பான சுடுகருவிகள் காரணமாக இருந்தன.

பிரிட்டிஷாரின் நைஜீரியாவிலும், சுதந்திரத்திற்குப் பின்னரும், இராணுவத்தில் முஸ்லீம் அதிகாரிகள் அதிகமாக காணப்பட்டமைக்கு, கானெம் இராச்சிய பாரம்பரியமே காரணம். பிரிட்டிஷாரின் காலனிய ஆட்சிக்காலம் தொடங்கிய போது, வடக்கே இருந்த இஸ்லாமிய தேசத்தை, தெற்கில் பல்வேறு இனங்களின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசங்களுடன் இணைத்து, நைஜீரியா என்ற புதிய நாட்டை உருவாக்கினார்கள். பிரிட்டிஷ் நைஜீரியாவினுள் 250 மொழிகளைப் பேசும் இனங்கள் அடங்கின. இன்று மொத்த சனத்தொகையில் 50 வீதமாக உள்ள நைஜீரிய முஸ்லீம்கள் மத்தியிலும் இன இனவேறுபாடு இருந்த போதிலும், இஸ்லாம் என்ற மதம் அவர்களை ஒன்றிணைக்கும் சக்தியாக உள்ளது. அதற்கு மாறாக தெற்கில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளால் அடிக்கடி வன்முறை வெடிக்கின்றது. ஒவ்வொரு இனமும் தனது இனத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே சிறந்தவர்கள் என்றும், மற்றவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கருதும் போக்கு உள்ளது. (மத முரண்பாடுகளைப் பற்றி பின்னர் பார்க்கலாம்) சுதந்திரத்திற்கு பின்னர் நைஜீரியாவின் அரசியல் அதிகாரம் இன/மத முரண்பாடுகளால் தீர்மானிக்கப்படுகின்றது.

ஜனநாயகத் தேர்தல்கள் நடைபெறும் காலங்களில், அரசியல் கட்சி தலைவர்கள் தமது இன வாக்குகளை பெறுவதிலேயே அதிக அக்கறை காட்டுவார்கள். அதனால் அரசியல்வாதிகளின் நலன்களுக்காக இனங்களுக்கிடையில் வன்முறைகள் தூண்டிவிடப்படும். அந்த உணர்ச்சி அலையை வைத்து அவர்கள் வாக்குகளை அறுவடை செய்வர். பணத்தை வாரியிறைத்து வாக்காளருக்கு லஞ்சம் கொடுத்து வாக்கு வேட்டையாடுவதும், எதிர்க்கட்சிக்கு ஆதரவானவர்களை அடியாட்படையை ஏவி மிரட்டுவதும், குறிப்பிட்ட அரசியல்வாதியின் தேர்தல் வெற்றியை உறுதிப்படுத்தும். வாக்குச் சாவடியில் நின்று கொண்டு வாக்களிக்க வரும் மக்கள் எந்த வேட்பாளருக்கு போட வேண்டுமென்று அடாவடித்தனம் பண்ணுவது அங்கே சாதாரண நிகழ்வு. பணபலம், ஆட்பலம் இல்லாத வேட்பாளர் தேர்தலில் நிற்க முடியாது. பாராளுமன்றத்திற்கோ, அல்லது மாநில சட்டசபைகளுக்கோ தெரிவாகும் இந்த வேட்பாளர்கள் பதவிக்கு வந்தால் செய்யும் ஒரேயொரு வேலை, பொது மக்கள் சொத்தை கொள்ளையடிப்பது மட்டுமே. இதனால் நாட்டில் ஊழலை ஒழிக்கப் போகிறேன் என்று அறிவித்து விட்டு, அடிக்கடி இராணுவ அதிகாரிகள் சதிப்புரட்சி மூலம் அதிகாரத்தை பறிப்பார்கள். அப்போது கூட ஊழல் ஒழியாது என்பது மட்டுமல்ல, பகைமை கொண்ட இனத்தை சேர்ந்த வேறொரு அதிகாரி, அந்த இராணுவ சர்வாதிகாரியை ஒழித்து விட்டு ஆட்சியை கைப்பற்றுவார்.

தெற்கே யொரூபா இனமும், இக்போ இனமும் பெரும்பான்மையாக உள்ளன. நைஜீரியா சுதந்திரம் பெற்று சிலவருடங்களில், இக்போ இனத்தின் ஆளுமைக்குட்பட்ட பிரதேசத்தில் எண்ணை கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் அவர்கள் தமது பகுதியை “பயாபிரா” என்ற தனி நாடாக அறிவித்தனர். உடனடியாகவே நைஜீரிய இராணுவம் பயாபிரா சுதந்திர பிரகடனத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. பிரிட்டனும், சோவியத் யூனியனும் நைஜீரிய இராணுவத்திற்கு பக்கபலமாக நின்ற போதிலும், பயாபிரா போராளிகள் ஓரிரு வருடங்கள் தாக்குப் பிடித்தனர். முற்றுகைக்குள்ளான பயாபிரா மக்களை பணிய வைக்கும் நோக்கில் நைஜீரியா அரசு, திடீரென தேசிய நாணயத்தின் நோட்டுகளை மாற்றியது. இதனால் ஏற்கனவே பொருளாதாரத்தடை இருந்த காரணத்தால், மக்கள் உணவின்றி பட்டினி கிடந்தது சாகும் அவலம் நேர்ந்தது. சுமார் அரை மில்லியன் மக்களாவது பட்டினியால் செத்தனர். அப்போது தான் முதன்முதலாக அமெரிக்க விளம்பர நிறுவனமொன்று, எலும்பும் தோலுமாக ஒட்டிய வயிறோடு இருக்கும் ஆப்பிரிக்க மக்களின் காட்சிகளை படம் பிடித்து உலக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பியது.

2000 ம் ஆண்டு, வட நைஜீரிய முஸ்லீம் மாநிலமொன்று ஷரியா சட்டம் கொண்டு வந்த போது, நைஜீரியா மீண்டும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை பெற்றது. ஷரியா சட்டத்திற்கு மேற்கத்திய நாடுகள் காட்டிய எதிர்ப்பை நைஜீரிய முஸ்லீம்களால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையில் பெரும்பான்மை மக்கள் ஆதரவுடன் தான் ஷரியா சட்டம் நடைமுறைக்கு வந்தது. இஸ்லாமிய மத நிறுவனங்களின் தூண்டுதல் இருந்த போதிலும், பெரும்பாலும் அதிகரித்து வரும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்தவே இஸ்லாமிய மத சட்டம் கொண்டுவரப்பட்டது. தற்போது நைஜீரியாவில் தெற்கே குற்றச் செயல்கள் மலிந்த லாகோஸ் நகரிற்கு எதிர்மாறாக, வடக்கே ஓரளவு பாதுகாப்பான சூழ்நிலை நிலவுகின்றது. மேலும் சுதந்திரத்திற்குப் பின்னர் மேற்கத்திய கலாச்சார சீர்கேடுகள் விரைவாகப் பரவி வந்தன. மக்களின் மேற்கத்தியமயமாகலைத் தடுத்து, காலனிய காலத்திற்கு முந்திய இஸ்லாமிய கடந்த காலப் பெருமையை மீட்டெடுப்பதுவுமே, ஷரியா சட்டம் கொண்டு வரப்பட்டதன் நோக்கங்கள். மேற்கத்திய எதிர்ப்பிற்கு, நைஜீரிய முஸ்லீம்கள், ஒசாமா பின் லாடன் படம் பொறித்த டி-ஷேர்ட்களை அணிந்து எதிர்வினையாற்றினர். இப்போதும் அங்கே ஒசாமா ஒரு மாபெரும் வீரனாக கொண்டாடப்படுகின்றார்.

நைஜீரிய சனத்தொகையில் கிறிஸ்தவர்கள் 50 வீதம் (புராதன ஆப்பிரிக்க மதங்களைப் பின்பற்றும் சிறு தொகை தவிர) இருக்கலாம். கடந்த பத்தாண்டுகளாகவே கிறிஸ்தவர்களுக்கும், இஸ்லாமியருக்குமிடயிலான உறவு சீர்கெட்டு வருகின்றது. சில நேரம் அற்ப விடயம் கூட கலவரங்களை தூண்டி விடுகின்றது. கலவரத்தில் இருதரப்பிலுமே நூற்றுக்கணக்கானோர் மரணமடைகின்றனர். சொத்துகள் அழிக்கப்படுகின்றன. மேற்குலக நாட்டு ஊடகங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளே கலவரத்திற்கு காரணம் என்று, ஒரு தலைப்பட்சமாக செய்தி அறிவிக்கின்றனர். உதாரணத்திற்கு, உலக அழகிப் போட்டியை காரணமாக வைத்து முஸ்லீம்கள் கலவரத்தை தொடங்கியது உண்மை. ஆனால் கலவரத் தீயை பற்ற வைப்பதில் கிறிஸ்தவர்களும் சளைத்தவர்கள் அல்லர். இரண்டு மதங்களிலும் மத அடிப்படைவாதிகள் உள்ளனர். சவூதி அரேபியா, ஈரான் போன்ற நாடுகள் இஸ்லாமிய அடிப்படைவாத நிறுவனங்களை நிதி கொடுத்து பராமரிக்கின்றன. அதே நேரம் அமெரிக்க கிறிஸ்தவ மத அடிப்படைவாதிகள், நைஜீரிய புரட்டஸ்தாந்து அல்லது பெந்தேகொஸ்தே சபைகளுக்கு பணம் கொடுத்து ஊக்குவிக்கின்றனர்.

பிரிட்டிஷ் காலனிய காலத்தில், அதாவது 19 ம் நூற்றாண்டில், அடிமை வியாபாரம் தடை செய்யப்பட்டு விட்டதால், விடுவிக்கப்பட்ட அடிமைகள் சிலர் கிறிஸ்தவ பாதிரிகளாக பயிற்றுவிக்கப்பட்டனர். தென் நைஜீரியாவில் ஆப்பிரிக்க மதங்களை பின்பற்றிய மக்களை, கிறிஸ்தவர்களாக மாற்றும் பணியில் இவர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். அதே நேரம் சில கறுப்பின பாதிரிகள், பிரிட்டிஷ் பொருட்களை நைஜீரியாவில் சந்தைப்படுத்தும் விற்பனைப் பிரதிநிதிகளாகவும் செயற்பட்டனர். கத்தோலிக்க, அங்க்லிக்கன் மதப்பிரிவுகள் இவ்வாறு முதலாளித்துவத்துடன் கைகோர்த்துக் கொண்டு தான் நைஜீரியாவில் காலூன்றின. இதனால் இன்றைக்கும் மத நம்பிக்கையுடன், கூடவே வியாபார மனோபாவமும் பெரும்பாலான நைஜீரியர்களின் இரத்தத்தோடு ஊறியிருப்பதைக் காணலாம். ஆப்பிரிக்காவின் திறமையான தொழிலதிபர்கள் பலர் நைஜீரியர்கள் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

கத்தோலிக்க, அங்க்லிக்கன் திருச்சபைகள் விதிக்கும் கட்டுப்பாடுகள் சில நைஜீரிய மக்களை சங்கடத்திற்குள்ளாக்குகின்றது. உதாரணத்திற்கு, பலதார மணம் அந் நாட்டில் காலங்காலமாக இருந்து வரும் வழக்கங்களில் ஒன்று. அரசாங்கம் ஒரு முறை இதை தடுக்க சட்டம் கொண்டு வந்த போது, எதிர்பாராவிதமாக பெண்களிடம் இருந்து எதிர்ப்பு வந்தது. அனேகமாக சமூகத்தில் ஏழைக் குடும்பத்தை சேர்ந்த பெண்கள், பணக்கார ஆண்களுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது மனைவியாவதனால் குடும்ப பாரத்தை குறைக்க முடிகின்றது, என்பது அவர்களது வாதம். வறுமை காரணமாக மேற்கத்திய நாடுகளை நோக்கி பயணம் செய்யும் பெண்கள், மாபியாக் குழுக்களால் விபச்சார அடிமைகளாக்கப்படுகின்றனர். ஒருபுறம் செல்வத்தை குவித்து வைத்துள்ள சிறுபான்மை பணக்கார வர்க்கம், மறுபுறம் அன்றாட உணவுக்கே வழியில்லாத பெரும்பான்மை ஏழை மக்கள். இந்த சமூக ஏற்றத்தாழ்வு பல பிரச்சினைகளின் தோற்றுவாயாக உள்ளது. இருப்பினும் அங்கே “வர்க்கப் பிரிவினை” என்ற சொற்பதம் யாராலும் பாவிக்கப்படுவதில்லை. அதற்கு மதம் ஒரு காரணம்.

“இவ்வுலக வாழ்வில் கஷ்டப்படுபவர்கள், இறந்த பின் சொர்க்கத்தில் செல்வந்தர்களாகலாம்” என்று போதிக்கும் கத்தோலிக்க மதத்தை விட்டு பலர் விலகி வருகின்றனர். அதிருப்தியாளர்களை பல்வேறு பெந்தெகொஸ்தெ சபைகள் சேர்த்து வருகின்றன. அமெரிக்க மூலதனத்தில் இயங்கும் அந்த சபைகள், தொழில் வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தாவது மக்களை கவர்கின்றன. ஆரம்பத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு உதவுவதாக காட்டிக் கொள்ளும் சபைகள், உறுப்பினர்களை சேர்த்துக் கொண்ட பின்னர் வருமானத்தில் பத்து வீதம், அங்கத்துவ பணமாக செலுத்த வேண்டும் என வற்புறுத்துகின்றன. நைஜீரியாவில் பெந்தெகொஸ்தெ சபைகளின் பாதிரிகள் ஆடம்பர பங்களாவில் வசிப்பதும், சொகுசு காரில் பயணம் செய்வதும், பிள்ளைகளை அமெரிக்கா அனுப்பி படிக்க வைப்பதும் சர்வசாதாரணம்.

நைஜீரியா ஆப்பிரிக்காவின் எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடுகளில் ஒன்று. பெற்றோலியத்தை இலகுவில் பிரித்தெடுக்கக் கூடிய அளவு, நைஜீரிய எண்ணை தரமானது. நெதர்லாந்து அரச குடும்பத்தின் முதலீட்டில் இயங்கும் ஷெல் நிறுவனம், பெருமளவு நைஜீரிய எண்ணையை அகழ்ந்து சர்வதேச சந்தையில் விற்று வருகின்றது. ஒரு பகுதி லாபம் ஆளும் வர்க்கத்தின் பாக்கெட்டுக்குள் போவதால், பொது மக்களுக்கு எந்தப் பலனும் கிடைப்பதில்லை. மொத்த உற்பத்தியில் பத்து சதவிகிதம் உள் நாட்டு பாவனைக்கு ஒதுக்கப்பட்டாலும், அங்கே பற்றாக்குறை நிலவுகின்றது. பெட்ரோல் நிலையங்களில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டி நேருவதும், அடிக்கடி விலை உயர்வதும், நைஜீரியா உண்மையிலேயே எண்ணை ஏற்றுமதி செய்யும் நாடா? என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கும். நம்பினால் நம்புங்கள். உள்ளூர் பாவனைக்கு தேவையான பெரும் பகுதி பெட்ரோல் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படுகின்றது. மோசமான முகாமைத்துவத்தை கொண்ட எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், அயல்நாடுகளுக்கு கடத்தப்பட்டு அதிக விலைக்கு விற்றல், போன்ற காரணங்களால் இந்த தட்டுப்பாடு ஏற்படுகின்றது.

ஊழல் பெருச்சாளிகளால் ஆளப்படும் நாட்டில் சட்டம், ஒழுங்கை எதிர்பார்ப்பது முயல்கொம்பை தேடுவதற்கு ஒப்பானது. பொறுத்துப் பொறுத்து பார்த்த மக்கள் சட்டத்தை தமது கைகளில் எடுத்தனர். எண்ணை குழாய்களை துளையிட்டு, எண்ணை திருட தொடங்கினர். அல்லது குழாய்களை சேதமாக்கி விட்டு, கம்பெனி ஊழியர்கள் வரும் வரை காத்திருந்து அவர்களை பிடித்து சிறை வைத்தனர். சில நேரம் இது போன்ற அழிவு வேளைகளில் சிக்கி பொது மக்கள் மரணமடைவதும் உண்டு. ஆயினும் அவர்களுக்கு பகாசுர எண்ணைக் கம்பெனிகளை எதிர்த்து போராடுவதைத் தவிர வேறு வழியில்லை. எண்ணை வளம் அவர்களது வாழ்க்கையை வளம் படுத்த செலவிடப்பட வேண்டும், என்ற நியாயமான கோரிக்கையே அவர்களது போராட்டம். சில தன்னிச்சையான ஆயுதக் குழுக்கள், எண்ணை கம்பெனி ஊழியர்களைக் கடத்தி, தமது கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வைத்தனர். கென் சரவீவ என்ற காந்தீய வழயில் போராடிய ஒருவர், நைஜீரிய பாதுகாப்பு படையினரால் கொலை செய்யப்பட்டதைத் தொடர்ந்து, சர்வதேச மன்னிப்புச் சபை நைஜீரிய பிரச்சினையை உலகறிய வைத்தது. இந்தக் கொலையில் ஷெல் நிறுவனமும் சம்பந்தப்பட்டிருப்பதற்கான ஆதாரங்கள் உள்ளன.

ஷெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாகியை, ஒரு பத்திரிகையாளர் பேட்டி கண்ட போது, “அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பவர்களை தனக்குப் பிடிக்காது.” என்று கூறினார். ஆமாம், நைஜீரிய சர்வாதிகாரிகளுடன் கூடிக் குலாவுவது, லஞ்சம் கொடுப்பது, எதிர்ப்பவர்களை ஆள் வைத்து கொலை செய்வது, வரி ஏய்ப்பு செய்து கொள்ளையடிப்பது… இவ்வாறான கிரிமினல் வேலைகளை ஷெல் செய்து வருவது, நைஜீரியாவில் அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஒரு பக்கம் எல்லா பாவ காரியங்களையும் செய்து கொண்டு, மறு பக்கம் தன்னை கொடை வள்ளலாக காட்டி புண்ணியம் தேடுகின்றது. பாடசாலைகள், வைத்தியசாலைகள், மற்றும் பல சமூக நல தொண்டு சேவைகளுக்கு ஷெல் “நன்கொடை” வழங்கி வருகின்றது. அதே நேரம் தனது இருப்பிற்கு ஆபத்து நேரா வண்ணம், முன்பு தன்னை எதிர்த்து போராடியவர்களை சேர்த்து, தனியார் பாதுகாப்புப்படை ஒன்றை உருவாக்கி உள்ளது.

உலக நாடுகளைப் பொறுத்த வரை, நைஜீரியாவில் நடக்கும் மனித உரிமை மீறல்கள் ஒரு பொருட்டல்ல. நைஜீரியா ஆப்பிரிக்காவின் பெரிய நாடுகளில் ஒன்று மட்டுமல்ல, தொழிற்துறையில் வளர்ச்சியடைந்த முதலாளித்துவ நாடுமாகும். அது மட்டுமல்ல பயபிரா போருக்குப் பின்னர், போரியல் அனுபவத்தை பெற்ற இராணுவமானது, நாட்டின் இன்றியமையாத நிறுவனமாக வளர்ந்துள்ளது. இராணுவத்தின் ஆசீர்வாதம் இருந்தால் மட்டுமே அங்கே ஜனநாயகம் நிலைக்க முடியும். நைஜீரியா, எல்லாம் வல்ல அமெரிக்காண்டவரின் அங்கீகாரம் பெற்ற நாடு. அதனால் ஐக்கிய நாடுகள் சபை தலையீட்டில் எந்தவொரு ஆப்பிரிக்க நாட்டிற்காவது சமாதானப்படை அனுப்ப நேர்ந்தால், அதிலே நைஜீரியா முக்கிய பங்காற்றும். ஆனால் சமாதானம் என்ற பெயரில் நைஜீரியா பிராந்திய வல்லரசு மனப்பான்மையுடன் செயற்படுகின்றது. யுத்த பிரபுக்களுக்கு சார்பாக நடந்து கொள்கின்றது. வேலியே பயிரை மேய்வது போல, மனித உரிமை மீறல்களைப் புரிகின்றது. சியாரா லியோனில் வைர வியாபாரத்தில் கூட ஈடுபட்டதற்கு ஆதாரங்கள் உள்ளன. இத்தனை குறைபாடுகளுக்கு மத்தியில், நைஜீரிய ஆட்சியாளர்கள் இன்னமும் வல்லரசு கனவு காண்கின்றனர். பல்வேறு இனங்களும், மதங்களும் தமக்குள் முட்டி மோதிக் கொண்டிருக்கும் ஒரு தேசத்தில் அது ஒரு பகற்கனவாக மட்டுமே இருக்கும்.

– தொடரும் –

4 comments:

jothi said...

good analysis,..

Kalaiyarasan said...

Thank you jothi.

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

Audio documentary concentrating on Chevron in Nigeria.

Drilling and Killing
http://www.democracynow.org/2003/7/11/transcript_of_drilling_and_killing_documentary

Kalaiyarasan said...

Thank you for the link, Pratheep.