Wednesday, April 29, 2020

பெல்ஜியம், பிரான்ஸில் நடந்த Lockdown கலவரங்கள்

பெல்ஜியத்தில் நடந்த லோக்டவுன் கலவரம் 

11 ஏப்ரல் 2020
பெல்ஜியத் தலைநகர் புருசல்சில் சிறுபான்மையின மக்கள் அதிகமாக வாழும் Anderlecht பகுதியில் கலவரம் வெடித்தது. இளைஞர்கள் ஒன்று திரண்டு பொலிஸ் நிலையத்தை தாக்கினார்கள். பொலிஸ் கண்ணீர்ப்புகை குண்டு வீசியதும் நிலைமை மோசமடைந்தது. பொலிஸ் கார்கள் கற்களால் தாக்கி சேதமாக்கப் பட்டன. சில இடங்களில் தீவைக்கப் பட்டது.

அங்கு நடந்த கலவரத்திற்கு காரணம், முதல்நாள் நடந்த கொலை. பொலிஸ்காரர்கள் ஒரு 19 வயது இளைஞனை கைது செய்வதற்காக விரட்டி உள்ளனர். வெருண்டு ஓடிக்கொண்டிருந்த இளைஞனை எதிரில் வந்த பொலிஸ் கார் மோதியதால் அந்த ஸ்தலத்திலேயே மரணம் சம்பவித்துள்ளது. அந்த மரணத்திற்கு பழிவாங்கக் கிளம்பிய இளைஞர்கள் கும்பல் தான் பொலிஸ் நிலையத்தை தாக்கியது.

பொதுவாகவே புருசெல்ஸ் நகரில் Anderlecht பகுதி எப்போதும் பதற்றமாக இருக்கும். அங்கு பெரும்பான்மையாக வாழும் சிறுபான்மையின மக்கள் பெல்ஜிய பேரினவாத அரசு தம்மீது ஒடுக்குமுறை பிரயோகிப்பதாக குறைப்படுவதுண்டு. அந்த உணர்வுகள் ஒரு கட்டத்தில் கொதிநிலைக்கு வந்ததும் வன்முறைகள் வெடிப்பதுண்டு.

******

பிரான்சில் lockdown கலவரம்

20 April 2020
பாரிஸ் புறநகர்ப் பகுதியான Villeneuve-la-Garenne எனும் இடத்தில் இன்று அதிகாலை வரை கலவரம் நடந்துள்ளது. நேற்றிரவு அங்கு வாழும் அரபு சிறுபான்மையின இளைஞர்களுக்கும், போலீசாருக்கும் இடையில் மோதல் இடம்பெற்றது. பொலிஸ் கண்ணீர்ப் புகைக் குண்டுகளை வீசி கலவரத்தை அடக்கப் பார்த்தது. அங்கு சில வாகனங்களும் எரிக்கப் பட்டுள்ளன. பிரான்சின் பல பகுதிகளிலும் lockdown காலத்தில் பல இனவாத அத்துமீறல்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விளைவாகவே நேற்று இந்தக் கலவரம் நடந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

நேற்றிவு நடந்த கலவரத்திற்கு காரணம் ஒரு விபத்து. அந்தப் பகுதியில் சனிக்கிழமை இரவு மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை பொலிஸ் கார் மோதியதில் கடுமையாக காயமடைந்துள்ளான். அவனது நண்பர்கள் இதனை காவல்துறையின் இனவெறித் தாக்குதல் எனக் கண்டித்துள்ளனர். Villeneuve-la-Garenne பிரதேச மேயர், முன்பு National Front என அழைக்கப்பட்ட இனவாதக் கட்சியின் உறுப்பினராக இருப்பதாலும், அந்தப் பகுதியில் இனங்களுக்கு இடையிலான உறவுகள் மிகவும் மோசமடைந்துள்ளன.

*****


26 April 2020
பிரான்ஸ் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள லிமொஜ் (Limoges) நகருக்கு அருகில் உள்ள போபிறேய் (Beaubreuil) எனும் இடத்தில் கடந்த சில நாட்களாக கலவரம் நடக்கிறது. போலிஸை நோக்கி பெட்ரோல் குண்டுகள் வீசப் பட்டன. கண்காணிப்பு கமெராக்கள் அடித்து நொறுக்கப் பட்டன. நகர சபை கட்டிடமும் எரிக்கப் பட்டது.

புதன்கிழமை லொக்டவுன் நேரத்தில் விபத்து ஒன்று தான் கலவரத்திற்கு காரணம் என தெரிய வருகின்றது. ஆப்பிரிக்க அல்லது அரேபிய சிறுபான்மையினத்தை சேர்ந்த இளைஞர் ஸ்கூட்டரில் சென்ற நேரம் ஏதோ ஒரு காரணத்திற்காக பொலிஸ் விரட்டியதால் விபத்து நடந்துள்ளது.

******

"உலகம் எரிகிறது. வங்கிகள் எப்போது எரியப் போகின்றன?" - சுவிட்சர்லாந்தில் ஒரு ரயிலில் வரையப்பட்ட வாசகம்.

***** 

Tuesday, April 28, 2020

இத்தாலியில் கொரோனா மரணங்களுக்கு காரணமான முதலாளிகள்

இத்தாலியில் தற்போது கொரோனா வைரஸ் தொற்று குறைந்து வருவதால், அங்கு என்ன தவறு நடந்தது என்பது பற்றி ஆராய்கிறார்கள். இது தொடர்பாக சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப் படுகின்றன. அதில் பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன.


- வடக்கு இத்தாலியில் உள்ள லொம்பார்டியா (Lombardia) மாகாணம் தான் வைரஸ் தொற்றினால் பெருமளவு பாதிக்கப் பட்டுள்ளது. கிட்டத்தட்ட அரைவாசி மரணங்கள் அங்கு இடம்பெற்றுள்ளன.

- குறிப்பாக மருத்துவ மனைகளில் பெருமளவு மரணங்கள் சம்பவித்துள்ளமை அதிர்ச்சியளிக்கிறது. ஜனவரி மாதம் நோயாளிகள் அனுமதிக்கப் பட்ட நேரம், அதனை சுவாசப்பை அழற்சி என்று நினைத்து மருத்துவர்கள் அலட்சியமாக இருந்துள்ளனர்.

- பெப்ரவரி 21 அன்று தான் கொரோனா வைரஸ் தொற்று கண்டுபிடிக்கப் பட்டது. அப்போதும் இது சாதாரண சளிக்காய்ச்சல் போன்று பரவாது என்று WHO கூட அறிவித்திருந்தது. அதாவது மிகக் குறைவாக எடைபோட்டுள்ளனர்.

- தற்செயலாக இத்தாலி தான் கொரோனா வைரஸ் தொற்றுதலுக்குள்ளான முதலாவது ஐரோப்பிய நாடாக இருந்தது. அதனால் அது குறித்து எதுவும் தெரியாத படியால் எந்தக் கவனமும் எடுக்கவில்லை. இதே நேரம் பிற ஐரோப்பிய நாடுகள் இத்தாலியில் இருந்து பாடம் படித்துக் கொண்டதுடன் தமது நாடுகளை பாதுகாத்துக் கொண்டன.

- இத்தாலி எந்தக் காலத்திலும் இது போன்ற பெருந்தொற்றுக்கு தயாராக இருக்கவில்லை. அங்கு மருத்துவமனைகளில் 100000 பேருக்கு 9 ICU கட்டில்கள் இருந்தன. அவசர சிகிச்சைப் பிரிவு கட்டில்கள் நிரம்பி வழிந்த படியால் பெருமளவு நோயாளிகள் வீடுகளில் வைத்து பராமரிக்கப் பட்டனர். அதுவே அவர்களது சாவுக்கும் காரணமாகி விட்டது.

- மிலானை தலைநகராகக் கொண்ட லொம்பார்டியா மாகாணம் இத்தாலியின் தொழிற்துறை மையப் பகுதி எனலாம். அங்கு தான் பெருமளவு தொழிற்சாலைகள் உள்ளன. தேசத்தின் மொத்த வருமானத்தில் இருபது சதவீதத்தை உற்பத்தி செய்கிறது. பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த தொழிற்துறை நகரங்களை மூடி விடுவதற்கு அரசும், முதலாளிகளும் தயாராக இருக்கவில்லை. இந்தளவு பாரதூரமான வைரஸ் தொற்று ஏற்படும் என்று அவர்கள் கனவிலும் நினைத்திருக்கவில்லை.

- இத்தாலி தொழிலதிபர்களின் சங்கமான Confindustria தொழிற்சாலைகளை மூடுவதற்கு முன்வரவில்லை. தொழிற்சாலைகள் தொடர்ந்தும் இயங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்று, முதலாளிகள் அரசுக்கு அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். உற்பத்தி நிறுத்தப் பட்டால் இலாப வருமானம் பாதிக்கப்பட்டு விடும் என்பதால் தொழிற்சாலைகளை தொடர்ந்தும் இயங்க வைத்துக் கொண்டிருந்தார்கள்.

- தேசத்தின் பொருளாதாரமும் பாதிக்கப் படக் கூடாது, அதே நேரம் மக்களின் சுகாதாரமும் பாதிக்கப்படக் கூடாது. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் அரசு தவித்துக் கொண்டிருந்தது. 7 மார்ச் lockdown அறிவிக்கப் பட்ட பின்னரும் சில தொழிற்சாலைகள் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தன. இந்த நிலைமை தொடர்ந்தால் வேலைநிறுத்தம் செய்யப் போவதாக தொழிலாளர்கள் தொழிற்சங்க நடவடிக்கை எடுத்த பின்னர் தான் அவை மூடப்பட்டன.

- லொம்பார்டியா மாகாணத்தில் தான் அறுபது வயதைக் கடந்த வயோதிபர்கள் அதிகமாக இருந்தனர். அதனால் அவர்களே வைரஸ் தொற்றினால் மோசமாக பாதிக்கப் பட்டனர். மேலும் மருத்துவமனை சீர்கேடுகள் குறித்து நிறைய முறைப்பாடுகள் வந்துள்ளன. உதாரணத்திற்கு, முகக்கவசம் அணிவதற்கு பல மருத்துவமனைகளில் தடைவிதிக்கப் பட்டிருந்தது! ஏனென்றால் முகக்கவசம் தேவையற்ற பயத்தை உண்டாக்கும் என்று கூறப்பட்டது. (அதாவது முகக் கவசம் அணிந்தவருக்கு தான் நோய் இருக்கிறதென்று நினைத்து மற்றவர்கள் அஞ்சுவார்கள் என்று காரணம் சொல்லப்பட்டது.)

- தற்போது நடக்கும் விசாரணை லொம்பார்டியா மாகாணத்தில் உள்ள மருத்துவமனைகளில் நடந்த குற்றங்களை பற்றி மட்டுமே ஆராய்கிறது. மே மாதம் நாடு முழுவதும் lockdown எடுக்கப் பட்ட பின்னர் மேலதிக விசாரணைகள் நடக்கும். அப்போது இன்னும் பல உண்மைகள் தெரிய வரும்.

Sunday, April 26, 2020

Fake News: வைரஸ் இழப்புகளுக்கு சீனாவிடம் இழப்பீடு கோரும் அமெரிக்கா

எச்சரிக்கை! FAKE NEWS!! 
"வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் வூஹான் சோதனைக்கூடம்" என்பது ஒரு பொய்ச் செய்தி. 
தீவிர வலதுசாரி விஷமிகள் பரப்பும் வதந்தி.


பிரான்ஸ், பாரிஸில் வசிக்கும் குமாரதாசன் (Kumarathasan Karthigesu) என்பவர் "வைரஸ் பரம்பலின் மூலஸ்தானம் என்று குறிப்பிட்டுக் குற்றஞ்சாட்டப்படும் சீனாவின் யுஹான் பரிசோதனைக்கூடம்" என்ற தலைப்பில் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதிய பொய்ச் செய்தியை இதுவரை 152 பேர் பகிர்ந்துள்ளனர். இதை எழுதியவர் ஒரு பிரபல ஈழத்து "ஊடகவியலாளர்"(?) என்று சொல்கிறார்கள். அப்படியான ஒருவரே இந்தத் தகவலின் உண்மைத் தன்மை குறித்து ஆராயாமல் எழுதியுள்ளார். ஒருவேளை அவரும் ஒரு தீவிர வலதுசாரியாக இருந்தால், தனது வழமையான அரசியல் பிரச்சாரத்திற்கு சாதகமாக இந்த வதந்தியை பயன்படுத்தி இருக்கலாம். எது எப்படி இருந்தாலும் விஷமிகள் விரிக்கும் சூழ்ச்சி வலைக்குள் நாமும் விழுந்து விடக் கூடாது.

இந்த விஷமத்தனமான வதந்தியின் ஆதி மூலம் அமெரிக்கா. வேறு யார்? குறிப்பாக ஜனாதிபதி டிரம்பிற்கு நெருக்கமான தீவிர வலதுசாரிகள். யார் இந்த டிரம்ப்? கிருமிநாசினி குடித்தால் கொரோனா வைரஸ் செத்து விடும் என்று கூறிய "அறிவாளி". இன்று வரையில் உலகிலேயே அதிகப்படியான கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளும், உயிரிழப்புகளும் அமெரிக்காவில் மட்டுமே நடந்துள்ளன. கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிக் கொண்டிருந்த காலத்தில், ஜனாதிபதி டிரம்ப் விமானநிலையங்களை மூடாமல் lock down கொண்டு வர மறுத்து வந்தார். Lockdown போட்டால் பொருளாதாரம் ஸ்தம்பித்து விடும் என்பதற்காக தனது சொந்த மக்களை பலி கொடுக்கவும் தயங்காத அரசுத் தலைவர்.

இதுவரை நாற்பதாயிரம் பேரை பலி வாங்கிய கொரோனா வைரஸ் பரவுதலுக்கு பொறுப்பேற்க மறுக்கும் டிரம்ப் தன்னைத் தவிர மற்ற எல்லோரையும் குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறார். உலக சுகாதார நிறுவனம் கூட இவரது குற்றச்சாட்டுக்கு தப்பவில்லை. கொரோனா மரணங்களுக்கு காரணம் அமெரிக்க அரசின் நிர்வாக குறைபாடுகள் என்பதை மறைப்பதற்காக வேண்டுமென்றே பல பொய்யான செய்திகள் புனைந்து பரப்பப் படுகின்றன. டிரம்புக்கு ஆதரவான தீவிர வலதுசாரி இணையத் தளங்களிலும், Fox news தொலைக்காட்சியிலும் இந்த பொய்ச் செய்திகள் பரப்பப் படுகின்றன.

கொரோனா வைரசானது சீனாவில் வூஹான் ஆய்வுகூடத்தில் உருவாக்கப் பட்டது, அல்லது அங்கிருந்து தப்பியது, வேண்டுமென்றே பரப்பப் பட்டது என்பதற்கான ஆதாரம் எதுவும் இல்லை. அமெரிக்க நுண்ணுயிரியல் விஞ்ஞானிகளே இது உண்மையல்ல என்று மறுத்துள்ளனர். இது விஞ்ஞானபூர்வமான தகவல் அல்ல என்றும் அரசியல் நோக்கங்களுக்காக பரப்பப் படும் வதந்தி என்றும் கூறியுள்ளனர்.

ஒரு வதந்தியை மட்டும் "ஆதாரமாக" வைத்துக் கொண்டு குமாரதாசன் தனது கற்பனைக் குதிரையை தட்டி விட்டுள்ளார். உலகம் முழுவதும் வைரஸ் பரவியதற்கு சீனாவே பொறுப்பு என்றும், அதனால் அமெரிக்க, ஐரோப்பிய நாடுகள் "தங்களது இழப்புகளுக்குரிய 'பில்' லை சீனாவிடம் கொடுக்கத் தயாராகின்றன" என்று சிறுபிள்ளை கூட நம்ப முடியாத விடயங்களை எல்லாம் கற்பனை செய்து எழுதுகிறார். அதே மாதிரி, எபோலாவை பரப்பியதற்கு ஆப்பிரிக்க நாடுகள் அமெரிக்காவிடம் 'பில்' கொடுக்கலாமா என்பதையும் கேட்டுச் சொன்னால் நல்லது. (எபோலா வைரஸ் அமெரிக்காவில் தோன்றியதற்கான ஆதாரம் உள்ளது.)

ஒரு பேச்சுக்கு இது சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும், பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய உயிரியல் யுத்தத்திற்காக வட கொரியா, வியட்நாம், சீனா, கியூபா, போன்ற பல உலக நாடுகள் அமெரிக்காவுக்கு 'பில்' அனுப்பி நஷ்டஈடு கோரக் காத்திருக்கின்றன. இவையெல்லாம் அமெரிக்கா திட்டமிட்டு செய்த இனப்படுகொலைகளுக்குள் அடங்கும். இது விடயத்திலும் சர்வதேச ரீதியான விசாரணை ஒன்று பின்னராக நடத்தப்படுவதற்கு வாய்ப்புகள் உண்டல்லவா ஊடகவியலாளரே?

அமெரிக்காவில் தீவிர வலதுசாரிகள் பரப்பும் பொய்ச் செய்திகளை, தமிழ் பேசும் தீவிர வலதுசாரிகள் தமிழில் மொழிபெயர்த்து எழுதி பரப்பியுள்ளனர். இதுவும் அவர்களது தீவிர வலதுசாரி அரசியல் பிரச்சாரத்தின் ஒரு பகுதி தான். இந்த விஷமிகள் குறித்து தமிழ் மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும்.

இது ஒரு பொய்ச் செய்தி என்பதை நிரூபிப்பதற்கான நிறைய ஆதாரங்கள் இந்த இணைப்பில் உள்ளன:
Scientists Haven’t Found Proof The Coronavirus Escaped From A Lab In Wuhan. Trump Supporters Are Spreading The Rumor Anyway. 
https://www.buzzfeednews.com/article/ryanhatesthis/coronavirus-rumors-escape-lab-china-fox-news-trump?fbclid=IwAR3xsqG7pWS5y6e78l6CllDAPkzHttHUqqKMK3996RKqanyEZl297BDseQc

அமெரிக்காவின் பிரச்சாரம் COVID-19 க்கு சீனாவை குற்றம்சாட்டும் பொய்களை ஊக்குவிக்கிறது

நெதர்லாந்து தொலைக்காட்சி வெளியிட்ட செய்தி. அதிலும் மேற்படி வூஹான் ஆய்வுகூடம் பற்றிய பொய் செய்தியை பரப்பியது டிரம்ப் சார்பான தீவிர வலதுசாரி இணையத் தளங்கள் என்று தெளிவாகக் குறிப்பிடப் பட்டுள்ளது.
 

Wednesday, April 22, 2020

நெதர்லாந்து "ஆன்மீக உதயம்" இதழில் வெளியான எனது நேர்காணல்

நெதர்லாந்து கத்தோலிக்க திருச்சபையினரால் வெளியிடப் படும் "ஆன்மீக உதயம்" என்ற காலாண்டிதழில், "தேடல்" என்ற தலைப்பின் கீழ் பிரசுரமான எனது நேர்காணல்:



1)நெதெர்லாந்து நாட்டில் சமயப் பின்னணி அன்றும் இன்றும் எப்படி இருக்கிறது?

சமயம் என்பதை விட சமய நிறுவனம் என்பது தான் பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். நெதர்லாந்தும் ஒரு காலத்தில் "மத அடிப்படைவாத" நாடாக இருந்தது தான். அதன் அர்த்தம் மக்கள் ஏதாவதொரு மத நிறுவனத்திற்கு கட்டுப்பட்டு வாழ்ந்தனர். ஒரு புறம் கத்தோலிக்க- கிறிஸ்தவ நிறுவனமும், மறுபுறம் புரட்டஸ்தாந்து- கிறிஸ்தவ நிறுவனமும் தமது உறுப்பினர்களை கட்டுப்பாட்டில் வைத்திருந்தன. அவற்றிற்கு கட்டுப்பட மறுத்தவர்கள் சமூக நீக்கம் செய்யப் பட்டனர். அவ்வாறு சமூக நீக்கம் செய்யப் பட்டவருடன் சொந்தக்காரர்களும் தொடர்பு வைக்க முடியாது. மேலும் கத்தோலிக்க, புரட்டஸ்தாந்து சமூகங்களுக்கு இடையிலான தொடர்பாடலும் மிகக் குறைவாக இருந்தது. அதாவது ஒரு கத்தோலிக்கரும், புரட்டஸ்தாந்துகாரரும் திருமணம் செய்வதை நினைத்துப் பார்க்க முடியாத காலம் இருந்தது.

உண்மையில் இதுபோன்ற அதீத கட்டுப்பாடுகள் காரணமாகத் தான் இன்றைய மதச்சார்பற்ற அரசுக்கு மக்கள் ஆதரவு கிடைத்தது என நினைக்கிறேன். பொருளாதார வளர்ச்சி காரணமாக நகரங்களில் சனத்தொகை பெருகியதும் மதக் கட்டுப்பாடுகளில் இருந்து விட்டு விலகக் காரணமாக அமைந்திருந்தது. அதே நேரம் முன்பு மத நிறுவனங்கள் செய்து வந்த வேலைகளை எல்லாம் அரசு பொறுப்பெடுத்தது. உதாரணத்திற்கு, முன்பெல்லாம் ஏழைகள், வேலையற்றவர்கள், தேவாலயத்தின் கதவைத் தட்டி உதவி கேட்டு வந்தனர். தற்போது நலன்புரி அரசுத் திட்டங்கள் அனைத்து நலிவடைந்த பிரிவனருக்கும் உதவுகின்றன. இதனால் பெரும்பாலான மக்கள் மத்தியில் மத நம்பிக்கை குறைந்து கொண்டு சென்றது. தற்காலத்தில் ஆன்மிகம் என்பது ஒருவரது தனிப்பட்ட வாழ்க்கை, அல்லது தேடல் சம்பந்தப் பட்ட விடயமாகி விட்டது.

2) தாங்கள் ஒரு இடதுசாரி முனைப்புடையவரா அவ்வாறு இருப்பதற்கு காரணம் என்ன?

இதற்கும் நெதர்லாந்து வரலாற்றில் இருந்து உதாரணம் காட்டலாம் என நினைக்கிறேன். பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் வாழ்ந்த Domela Nieuwenhuis நெதர்லாந்து சோஷலிச இயக்கத்தின் தந்தையாக போற்றப் படுகிறார். அவர் ஒரு காலத்தில் பாதிரியாராக கிறிஸ்தவ மதப் பிரசங்கம் செய்து வந்தார்! ஜெர்மன் - பிரான்ஸ் போரில் ஏற்பட்ட அழிவுகளை கண்ட பின்னர் சமாதானத்தை விரும்புவோராகவும், சமத்துவக் கருத்துக்களில் ஈடுபாடு கொண்டவராகவும் மாறினார். தொழிலாளர்களின் கூலி உயர்வுக்கான போராட்டங்களை நடத்தினார். மன்னர், மத நிறுவனம், முதலாளித்துவம், மதுபானக் கடை போன்றவற்றிற்கு எதிராக பிரச்சாரம் செய்தார்.

இது போன்ற எழுச்சிக் கருத்துக்கள் எல்லாம் "இடதுசாரித்தனம்" என்றால் நானும் அதைப் பின்பற்றுவதில் தவறென்ன? எப்போதும் சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, அடித்தட்டு மக்களின் நலன்களுக்காக பாடுபடுகிறவர் இடதுசாரியாகத் தான் இருக்க முடியும். தென் அமெரிக்காவில் ஒரு காலத்தில் மார்க்சியத்தையும், கிறிஸ்தவத்தையும் கலந்து "விடுதலை இறையியல்" போதித்த கத்தோலிக்க பாதிரியார்கள் அங்குள்ள ஏழை மக்கள் மத்தியில் பிரபலமாக இருந்தமையும் குறிப்பிடத் தக்கது. இயேசு கிறிஸ்துவின் போதனைகளில் கூட நிறைய இடதுசாரிக் கருத்துக்கள் உள்ளன. அவர் ஏழைகள் அனுபவிக்கும் இன்னல்களுக்கு தீர்வாக பரலோக ராஜ்ஜியத்தில் நம்பிக்கை வைக்கச் சொன்னார். நான் பூலோகத்தில் ஒரு சொர்க்கத்தை உருவாக்க வேண்டும் என்கிறேன். அதாவது தற்போதுள்ள அரசு, பொருளாதார அமைப்புகளில் மாற்றம் கொண்டு வருவதன் மூலம், செல்வத்தை எல்லோருக்கும் பகிர்ந்து கொடுக்க வேண்டும்.

3) தாங்கள் ஒரு சிறந்த பன்மொழி அறிவு திறன் கொண்டவர் என்பதை நான் நினைக்கின்றேன் இவ்வாறு தங்களை வளம்படுத்த காரணம் ஏதும் உண்டா?

எனது வாழ்நாளில் பெரும் பகுதியை பன்முகக் கலாச்சார சமுதாயத்தில் கழித்ததும் ஒரு காரணமாக இருக்கலாம். சிறுவயதில் இருந்தே உலகின் பிற நாடுகளுக்கும் சென்று அங்குள்ள நிலைமையை நேரில் கண்டறிய வேண்டும் என்ற பேரவா இருந்தது. "ஒரே இடத்தில் இருந்து குப்பை கொட்டுவது" ஒத்துவரவில்லை. "நாடோடியாக அலைவது" பிடித்த விடயமாக இருந்தது. அதற்கு பல மொழிகளையும் கற்பது அவசியம் எனக் கண்டுகொண்டேன். "ஆங்கிலம் தெரிந்தால் உலகில் எங்கு வேண்டுமானாலும் போகலாம்" என்பது ஒரு முன்முடிவு. அது உண்மையல்ல. நாம் கற்றுக்கொள்ளும் ஒவ்வொரு அந்நிய மொழியும் ஒரு புதிய உலகத்திற்கான திறவுகோல். குறைந்தது பத்து சொற்களை அறிந்து கொண்டாலே பல புதிய அனுபவங்கள் கிடைக்கும். எமது அறிவும் விசாலமடையும். ஆயிரம் புத்தகங்களை படிப்பதை விட, ஆயிரம் மைல்கள் பயணம் செய்வது சிறந்தது என்றொரு சீனப் பழமொழி உள்ளது.

4) தங்கள் பார்வையில் புலம் பெயர் தமிழர்களின் தமிழ் பற்று எவ்வாறு உள்ளது?

தமிழர் மட்டுமல்லாது, ஒவ்வொரு புலம்பெயர் சமூகமும் குறிப்பிட்ட சில காலம் தாயக பிரிவுத் துயரில் சிக்கியிருக்கும். அண்மையில் நெதர்லாந்து பத்திரிகையில் ஒரு கட்டுரை வாசித்தேன். நியூசிலாந்தில் குடியேறிய டச்சுக் காரர்கள் தங்களது மொழி, கலாச்சாரத்தை இன்னமும் பாதுகாத்து வைத்திருக்கிறார்கள். அவர்கள் நியூசிலாந்து சமூகத்துடன் கலப்பதில்லை. ஒரு தனியான பிரதேசத்தில் மூடப்பட்ட சமூகமாக வாழ்கிறார்கள். பலர் டச்சு மொழி மட்டுமே பேசுகிறார்கள். டச்சு மரபு வழி உணவை உண்கிறார்கள். அவர்களுக்கென தனியாக ஒரு டச்சு மொழி பத்திரிகையும் வெளிவருகிறது. ஆகவே இது உலகம் முழுவதும் உள்ள தோற்றப்பாடு தான்.

புலம்பெயர் தமிழர்களின் தமிழ்ப்பற்று இன்று ஓர் அடையாள அரசியலாக மாறிக் கொண்டிருப்பதை காணக் கூடியதாக உள்ளது. அதாவது, சுற்றி வர வேறொரு மொழி பேசும், வேற்றின கலாச்சாரத்தில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் காரணமாக தங்களது தனித்துவத்தை தக்க வைப்பதற்கான போராட்டம். இரண்டாவது தலைமுறையினர் இதில் ஆர்வமில்லாத மாதிரி காட்டிக் கொண்டாலும், அன்றாடம் சந்திக்கும் சமூகப் பிரச்சினைகள் அவர்களையும் அடையாளம் தேட வைக்கிறது. இதற்குள் ஐரோப்பிய அரசுக்களின் பிரித்தாளும் அரசியல் இருப்பதையும் வருத்தத்துடன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.

5) அண்மைக்காலமாக எமது தாயகத்தில் திடீர் என்று சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது இதற்கான கரணம் என்ன என்பதை எம்மோடு பகிர முடியுமா?

இருபத்தியோராம் நூற்றாண்டில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் சமய முரண்பாடுகள் அதிகரித்து செல்கின்றது. இதில் இலங்கையும் விதிவிலக்கல்ல. உண்மையில் இது மதங்களுக்கு இடையிலான முரண்பாடு அல்ல. ஒரு சிலர் மதத்தின் பெயரால் அரசியல் செய்கிறார்கள். அதற்குப் பல அப்பாவிகள் பலியாகிறார்கள். ஒவ்வொரு மதத்திலும் அடிப்படைவாதிகள், தீவிரவாதிகள் இருக்கிறார்கள். ஆனால், முப்பது வருடங்களுக்கு முன்னர் அவர்கள் சொல்வதை யாரும் கேட்கவில்லை. சரியாகச் சொன்னால், அரசு ஆதரவு இருக்கவில்லை என்று சொல்லலாம். ஆனால், இப்போதைய நிலைமை வேறு. அரசு மறைமுகமாக மதத் தீவிரவாதிகளை ஊக்குவிக்கிறது. பெரும்பான்மை, சிறுபான்மை என்றில்லாமல் எல்லா மதங்களிலும் இது நடக்கிறது.

ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று சொல்வார்கள். மக்கள் மதரீதியாக பிளவுபட்டால் ஆளும் வர்க்கத்திற்கு கொண்டாட்டம். உண்மையில் அரசு செய்ய வேண்டிய கடமைகள் நிறைய இருக்கின்றன. ஒரு பிரஜைக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, இவையெல்லாம் அரசின் கடமைகள் என அரசமைப்பு சட்டத்தில் எழுதப் பட்டுள்ளது. அதைவிட அரசியல்வாதிகள் பொதுச் சொத்துக்களை கொள்ளையடிப்பது, ஊழல் செய்வது தனிக் கதை. அது பற்றி மக்கள் கேள்வி கேட்பதை தடுக்க வேண்டும் என்றால், அவர்களது கவனத்தை வேறு பக்கத்திற்கு திசை திருப்பி விட வேண்டும். அதற்கு சமய முரண்பாடுகள் உதவுகின்றன. சமய முரண்பாடுகள் மட்டுமல்ல, இனக்கலவரம், யுத்தம் போன்றன கூட ஆட்சியாளர்களின் நலன்களை பாதுகாக்க உதவுகின்றன.

Saturday, April 18, 2020

மக்டொனால்ட்ஸ் உடைத்து ஏழைகளுக்கு உணவளித்த தொழிலாளர்கள்


பிரான்ஸில் சூடு பிடிக்கும் வர்க்கப் போராட்டம்!

- கொரோனா வைரஸ் பரவலின் பின்னர் பல வாரங்கள் பட்டினியால் வாடும் ஏழை மக்களுக்கு உணவளிப்பதற்காக, தொழிலாளர்கள் ஒரு மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட் டை தமது கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். இந்த நடவடிக்கையை நிர்வாகம் எதிர்த்த போதிலும் தொழிலாளர்கள் தன்னிச்சையாக முடிவெடுத்து ரெட்ரான்ட் திறந்துள்ளனர்.

- கிட்டத்தட்ட ஒரு மாத கால லாக் டவுன் காரணமாக ஏழைகள் உணவின்றி பட்டினி கிடக்கின்றனர். மார்செய் நகரிலும் அது தான் நிலைமை. மார்செய் வடக்கில் உள்ள Saint-Barthélemy வட்டாரத்தில் ஒரு மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் வேலை செய்த தொழிலாளர்களே இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். உண்மையில் அவர்களும் அடித்தட்டு உழைக்கும் வர்க்க மக்கள் தானே? தமது உற்றார் உறவினர்கள் பட்டினி கிடப்பதை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?

- மார்செய் நகரில் பெரும்பாலும் வெளிநாட்டு குடியேறிகள் வசிக்கும் பகுதிகளில் வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை மிக அதிகம். பிரான்ஸ் முழுவதும் வேலையற்றவர் எண்ணிக்கை 8.5%. ஆனால் இந்தப் பகுதிகளில் 25 சதவீதமாக உள்ளது. அது மட்டுமல்ல மார்செய் நகரில் 39 சதவீத மக்கள் வறுமைக் கோட்டுக்கு கீழே வாழ்கிறார்கள்.

- கடந்த காலத்தில் நடந்த வேலையிழப்புகள், சம்பளக் குறைப்புகள் இத்துடன் அண்மைக் காலத்தில் கொரோனா தொற்று நோயால் ஏற்பட்ட ஊரடங்கு தனிமைப்படுத்தலும் சேர்ந்து கொள்ளவே நிலைமை இன்னும் மோசமடைந்தது. அந்தப் பிரதேசத்தில் வாழ்பவர்கள் உணவு போன்ற அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய முடியாத நிலைமையில் உள்ளனர். அந்தப் பிரதேச மக்களின் நலன் பேணும் Maison Blanche அமைப்பின் சார்பில் பேசிய போது, தம்மிடம் சாப்பிட எதுவுமில்லை என்று பல குடும்பங்கள் தம்மிடம் முறையிடுவதாக தெரிவித்தார். ஒரு தாய் தனது பிள்ளைகளுக்கு மூன்று நாட்களுக்கு வெங்காய சூப் மட்டும் கொடுத்ததாக கூறினார்.

- அங்கு "கலக்டிவ்" என பொதுவுடைமை கொள்கை அடிப்படையில் இயங்கும் அமைப்புகள் உள்ளன. அத்தகைய அமைப்புகளில் நிர்வாகி என்று யாரும் கிடையாது. அதில் அங்கம் வகிக்கும் ஒவ்வொருவருக்கும் சம உரிமை உண்டு. ஏழைகளுக்கு உணவுப் பொட்டலங்களை கொடுத்து வருகின்றன. பிரெஞ்சு அரசாங்கம் கூட அவர்களிடம் உதவி கேட்குமாறு சொல்லும் அளவிற்கு இந்த கலக்டிவ் சிறப்பாக செயற்படுகின்றது.

- இருப்பினும் உதவி கோருவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால் Syndicat des quartiers populaires de Marseille (மார்செய் பொதுச் சங்கம்) போன்ற கலக்டிவ் அமைப்புகள் மக்டொனால்ட்ஸ் ரெஸ்டாரன்ட்டை உடைத்து திறப்பது என்று முடிவெடுத்தன. Forc e Ouvrière (தொழிலாளர் சக்தி) அமைப்பின் பிரதிநிதி Kamel Guémari இவ்வாறு கூறினார்: "அவசர காலத்தில் எமது பிரதேசத்தில் வாழும் நாம் நடவடிக்கை எடுக்கா விட்டால் வேறு யார் செய்வார்கள்?"

- மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கையகப் படுத்திய தொழிலாளர்கள் அங்கு ஏற்கனவே வைத்திருந்த உணவுப் பொருட்களுடன், கடைகள், தனிநபர்கள் தானமாகக் கொடுத்த உணவு பொருட்களையும் சேர்த்து உணவு தயாரித்து பெட்டிகளில் அடைத்து தயாராக வைத்திருந்தார்கள். அவற்றை தொண்டர்கள் எடுத்துச் சென்று வீடு வீடாக விநியோகித்தனர். இந்த செயற்பாடுகள் யாவும் சுகாதார முறைகளுக்கு அமையவே நடந்துள்ளன. எல்லோரும் கிளவுஸ், முகக்கவசம் அணிந்தே வேலை செய்தார்கள்.

- இருப்பினும் பிரான்ஸ் நாட்டின் மக்டொனால்ட்ஸ் தலைமை நிர்வாகம் இந்த நடவடிக்கையை கண்டித்துள்ளது. தொழிலாளர்கள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் இது குறித்து La Marseillaise பத்திரிகையுடனான பேட்டியில் விளக்கம் கொடுத்தார்: "ஏற்கனவே நிர்வாகத்துக்கு தெரிவித்திருந்த போதிலும் அவர்கள் இதற்கு சம்மதிக்கவில்லை." அதாவது, மயிலே மயிலே இறகு போடு என்றால் அது நடக்குமா?

- இந்த நடவடிக்கையில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் பிரெஞ்சு உழைக்கும் வர்க்கமான வெளிநாட்டு குடியேறிகள் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. குறிப்பாக அல்ஜீரியா, மொரோக்கோ போன்ற வட ஆப்பிரிக்க காலனிகளை சேர்ந்தவர்கள் மார்செய் நகர சனத்தொகையில் கிட்டத்தட்ட அரைப் பங்கினர். "இஸ்லாமியர்கள் இடதுசாரி அரசியலில் ஈடுபடுவதில்லை" என்ற பலரது தப்பெண்ணம் இந்த சம்பவத்தின் மூலம் சுக்குநூறாகி விட்டது. பிரான்சில், ஐரோப்பாவில் இதுவரை காலமும் இருந்து வந்த "இஸ்லாமியர் பிரச்சினை" உண்மையில் இனப்பிரச்சினையாகவும், அதன் அடிப்படையாக வர்க்கப் பிரச்சினையாகவும் உள்ளது. பல்லின உழைக்கும் மக்களுக்கு இடையிலான ஒற்றுமை ஒரு வர்க்கப் போராட்டத்திற்கு வழி வகுக்கும். அதைத் தான் மக்டொனால்ட்ஸ் உணவகத்தை கைப்பற்றிய தோழர்கள் நிரூபித்துக் காட்டி உள்ளனர். அவர்களுக்கு எமது தோழமையுள்ள வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வோம்.