Thursday, August 24, 2023

கிளப் ஹவுசில் நடந்த சாதி ஒளிப்பு 🤡 நாடகம் ⁉️

 

கிளப் ஹவுசில் இனவாத- பாஸிஸ்டுகள் ஒன்று சேர்ந்து "சாதி ஒழிப்பு மகாநாடு" நடத்தினார்கள். அங்கே இரண்டு கோமாளி "மார்க்சியர்களும்"(?) சிறப்பு விருந்தினர்களாக பங்குபற்றினார்கள். அவர்கள் தமது வழக்கமான இனவாதத்திற்கு வெள்ளையடிக்கும் வேலையை திறம்பட செய்து கொண்டிருந்தார்கள். அவர்கள் பேசியது எதுவும் புரியா விட்டாலும் இனவாத தற்குறிகள் "ஆஹா... ஓஹோ..." என்று புகழ்ந்து "மார்க்சிய"(?) கோமாளிகளை பப்பாசி மரத்தில் ஏற்றி விட்டுக் கொண்டிருந்தார்கள்.

"அடடே... என்ன இது இனவாதிகள், அதிலும் சிலர் தீவிர சாதிவெறியர்கள், திடீரென சமூக அக்கறையுடன் பேசுகிறார்களே!" என்று எட்டிப் பார்த்தால் ஒரே வழ வழா, கொள கொளா பாணியில் பேசிக் கொண்டிருந்தார்கள். மகாநாட்டில் கலந்து கொண்ட "அறிவுஜீவிகள்" சாதி ஒழிப்புக்கு (திருத்தம்: ஒளிப்புக்கு) முன்மொழிந்த தீர்வுகள்: 
- எல்லோருக்கும் கல்வி அறிவூட்டி சாதியை ஒழித்து விடுவார்களாம். ஏற்கனவே இலங்கையில் 95% எழுத்தறிவு இருப்பதை இவர்களுக்கு யாராவது சொல்லி விடுங்கள்.

- பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு நன்னெறி போதித்து சாதி தவறு என்று உணர வைத்து விடுவார்களாம். பாலர் வகுப்பில் இருந்தே ஆத்திசூடி சொல்லிக் கொடுக்கிறார்கள். :""சாதி இரண்டொழிய வேறில்லை" என்றும் கற்பிக்கிறார்கள். அட போங்கப்பா... நன்னெறி போதிக்கும் ஆசிரியரே தனிப்பட்ட வாழ்வில் சாதி பார்ப்பார். இங்கே ஊருக்கு தான் உபதேசம்.

இனவாத- பாஸிஸ்டுகள் திடீரென சமூக அக்கறை கொள்வது ஒன்றும் புதிய விடயமல்ல. ஒரு தடவை சாதியே இல்லை என்பார்கள். இன்னொரு தடவை அதே வாயால் சாதிப் பிரச்சினை பற்றி உரையாடுவோம் என்பார்கள். அதற்கு காரணம் உள்ளது. சமுதாயத்தில் உள்ள மிக முக்கியமான பகை முரண்பாடுகளான சாதிய/வர்க்க பிரச்சினைகள் மேலெழும் போதெல்லாம் அதை தணிப்பதற்கு, மறுபடியும் கிடப்பில் போடுவதற்கான நாடகம்.

உலகில் உள்ள எல்லா பாஸிஸ்டுகளும் ஒரே மாதிரியான சிந்தனைப் போக்கு கொண்டவர்கள். ஹிட்லரின் கட்சியின் பெயர் "ஜெர்மன் தேசிய சோஷலிச தொழிலாளர் கட்சி". அந்த கட்சிக்கும் சோஷலிசத்திற்கும், தொழிலாளர்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால் சுருக்கமாக நாஸி (தேசியம்) என்ற சொல்லை மட்டும் பயன்பாட்டில் வைத்திருந்தார்கள்.

"அந்த கூட்டத்திற்கு உங்களையும் அழைத்தார்கள் தானே? அப்போது (சாதி ஒழிப்புக்கான) தீர்வையும் சொல்லி இருக்கலாமே?" என்று கடிந்து கொண்டார் ஒரு நண்பர். வாஸ்தவம் தான். ஆனால் முதலில் என்னை பேச விட்டால் தானே? ஏற்கனவே அழைத்து விட்டு அடித்து துவைக்க காத்திருந்த இனவாத- பாஸிஸ்டுகள் நடத்திய கூட்டத்தில் நான் எந்த கருத்தை வைத்திருந்தாலும் பாய்ந்து பிடுங்கி இருப்பார்கள். உண்மையில் அது தான் நடந்தது.

"சிங்களவர்களிடம் சாதி இல்லை என்று டிவிட்டரில் எழுதினீர்களாமே?" என்று புலனாய்வுத்துறை அதிகாரி போன்றிருந்த ஒருவர் விசாரணையை ஆரம்பித்தார். உடல் ரீதியாக சித்திரவதை செய்யாத குறை. (ஆனால் உளவியல் சித்திரவதைக்கு குறைவில்லை) "சிங்களவர்கள் மத்தியில் சாதி இல்லை என்று எப்போது சொன்னேன்?" நான் கேட்டதற்கு எந்த ஆதாரமும் கொடுக்கவில்லை.

அட தற்குறிகளே! சிங்களவர் மட்டுமல்ல, பாகிஸ்தானியர் மத்தியிலும் கூட சாதிகள் உள்ளன. "என்னால் ஜப்பானில் உள்ள சாதியம் பற்றியும் கூற முடியும். ஆனால் அதைப் பற்றி இவர்களுக்கென்ன கவலை?" - இதை அங்கே நேரடியாக கேட்டிருந்தேன்.

சிங்களவர்கள் மட்டுமல்ல, மட்டக்களப்பு, திருகோணமலையில் வாழும் தமிழர்களும் தீண்டாமை கடைப்பிடிப்பதில்லை என்று அழுத்தம் திருத்தமாக சொன்னேன். என்னை விசாரணைக்கு அழைத்த புலனாய்வுத்துறை அதிகாரிக்கு ஒரு காது மட்டுமே கேட்கும் போலிருக்கிறது. மட்டக்களப்பு, திருகோணமலை தமிழர்களை மட்டும் விட்டு விட்டு, சிங்களவர்களை மட்டும் தூக்கிப் பிடித்தார். (அட... அப்போது தானே இனத்துரோகி பட்டம் சூட்டலாம்? புலனாய்வுத்துறை மூளை என்றால் சும்மாவா?)

ஆகவே, அவர் என்னிடம் ஒப்புதல் வாக்குமூலம் வாங்கி விட்டாராம். குற்றப் பத்திரிகை வாசித்தார். "கனம் கோட்டார் அவர்களே, குற்றம் சாட்டப்பட்ட நபர் சிங்களவர்களுக்கு ஆதரவாக பேசி விட்டதால் அவரை தமிழினத்தில் இருந்தே ஒதுக்கி வைக்கிறேன். அவர் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாக வாழ வேண்டும். அவருக்கு எந்த தமிழனும் சோறு, தண்ணி கொடுக்க கூடாது." என்று வழக்காடினார்.

என்ன கொடுமை இது? சாதி ஒளிப்பு, ஸாரி மழுப்பு, ச்சே ஒழிப்பு மகாநாட்டில் பேச வந்த என்னையே தீண்டத்தகாதவன் ஆக்கி விட்டார்களே? ஒருவேளை காலச்சக்கரத்தில் ஏறி 17ம் நூற்றாண்டுக்கு வந்து விட்டேனோ? எதற்கும் ஒரு தடவை மொபைல் நாட்காட்டியை தட்டிப் பார்த்தேன். ஆண்டு 2023 எனக் காட்டியது. அப்பாடா... இப்போது நடப்பது 21ம் நூற்றாண்டு தான்.

கிளப் ஹவுஸில் கைகோர்ட் நீதிபதி மாதிரி இருந்த ஒருவர் தீர்ப்பளிக்க முன்னர் ஒரு கேள்வி கேட்டார்: "நீவிர் யாழ்ப்பாணத்தில் மட்டும் சாதிய- தீண்டாமை இருப்பதாக சொல்கிறீர். யாழ்ப்பாணத்தார் மீது அப்படி என்ன வன்மம்?" என்று ஒரே போடாகப் போட்டார்.

ஐயயோ, இனி நீதிபதி ஷரியா சட்டத்தின் படி அல்லாவின் நாமத்தால் கல்லால் அடிக்கும் தண்டனை கொடுக்கப் போகிறார். அல்லாவே, ஆட்டுக்குட்டியே என்னை காப்பாற்ற வேண்டுமென மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன்.

யோவ், மூளையை தலைப்பாகை சுருட்டி வைத்திருக்கும் அநீதிபதி! - அப்படி சொல்ல வந்ததை வாய்க்குள் வைத்துக் கொண்டு, "அடக்குமுறையை எதிர்த்தால் அது வன்மமா... சமூக ஒடுக்குமுறை பற்றி பேசினால் வன்மம் என்பீர்களா? இது என்ன நியாயம்?" என்று கேட்டு விட்டேன்.

நான் அப்படி கேட்பேன் என்று நீதிபதி எதிர்பார்த்திருக்கவில்லை போலிருக்கு. ஒரு நொடி வாயடைத்து போனவர் சுதாகரித்துக் கொண்டே "அது வந்து... போயி... சிங்களவர்களிடமுள்ள தீண்டாமையை பற்றி பேச மட்டும் அனுமதிக்கப் படும். யாழ்ப்பாணத்தில் உள்ள தீண்டாமையை பற்றி பேசக் கூடாதென ஆயத்துல்லா பாணியில் ஃபத்வா உத்தரவு போட்டார்.

என்னடா இது? தப்பித் தவறி ஒருவேளை ஆப்கான் தாலிபான்களின் கிளப் ஹவுஸுக்கு வந்து விட்டேனோ? நான் யோசிக்க கொண்டிருக்கும் பொழுதே ரூமை விட்டு ரிமூவ் பண்ணி விட்டார்கள். அப்பாடா, மறுபடியும் நிஜ உலகிற்கு வந்து விட்டேன்.

No comments: