Friday, May 22, 2020

கிழக்கு தீமோரும், தமிழீழமும் ஒன்றல்ல! இரண்டையும் ஒப்பிட முடியாது!!


முள்ளிவாய்க்கால் நினைவு நாள் தொடர்பாக நாடுகடந்த தமிழீழ அரசு, முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதி ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் உரையின் காணொளியை வெளியிட்டுள்ளது. அதில் அவர் இலங்கையில் தமிழ் மக்கள் சமஷ்டி உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டும் என்று தெரிவித்து இருக்கிறார். அதாவது தமிழீழம் சாத்தியம் இல்லை என்பதையும் மறைமுகமாக குறிப்பிட்டு பேசி இருக்கிறார். அத்துடன் பெரும்பான்மை சிங்கள மக்களுடன் பகைமை கொள்ளாமல் நட்புணர்வுடன் நடந்து கொள்வதே சிறுபான்மைத் தமிழருக்கும் பயன்தரத்தக்கது என்று கூறி இருக்கிறார்.(வீடியோ லிங்க் கீழே உள்ளது.)

இது பல தமிழீழவாதிகளின் கோபத்தை தூண்டி விட்டிருக்கிறது. கவனிக்கவும்: நான் இங்கே அவர்களை தமிழ்த்தேசியவாதிகள் என்று குறிப்பிடவில்லை. காரணம், எல்லா தமிழ்த்தேசியவாதிகளும் தமிழீழம் கோருவதில்லை. ஈழப்போருக்கு முன்னரும் பின்னரும் சமஷ்டித் தீர்வை எதிர்பார்க்கும் தமிழ்த்தேசியவாதிகளும் இருந்து வருகின்றனர். ஆகவே இது இன்றைக்கும் தமிழீழம் சாத்தியம் என்று தீவிரமாக நம்பும் அரசியல் பிரிவினருக்கானது. அவர்களது பிடிவாதக் குணம், தமிழீழத்திற்கு குறைவான எந்தத் தீர்வையும் ஏற்றுக் கொள்ளாது. "கிழக்கு தீமோர் தனிநாடு காணலாம், நாங்கள் தமிழீழம் கோரினால் தவறா?" என்று துள்ளிக் குதிக்கின்றனர். இதில் என்ன வேடிக்கை என்றால், இதே தமிழீழவாதிகளும், நாடுகடந்த தமிழீழ அரசும் தான் முன்பு ஒரு காலத்தில் கிழக்கு தீமோர் சுதந்திர நாடானதை பற்றி சொல்லிப் புளுகிக் கொண்டிருந்தார்கள்.

இங்கு சில விடயங்களை தெளிவு படுத்த வேண்டி உள்ளது. இதில் எதுவும் தமிழீழத்திற்கு பொருந்தாது: 
  • 1. காலனிய நீக்கம் 
  • 2. கம்யூனிச எதிர்ப்பு 
  • 3. பன்மொழிக் கலாச்சாரம்

இவற்றை தனித்தனியாக பார்ப்போம்:

1. கிழக்கு தீமோர் ஏற்கனவே சுமார் ஒரு வருட காலம் (1975-1976) தனியான சுதந்திர நாடாக இருந்தது. அதற்குக் காரணம் அது ஒரு போர்த்துகேய காலனி. 1974 ம் ஆண்டு போர்த்துக்கலில் ஒரு கம்யூனிச புரட்சி நடந்ததன் விளைவாக, ஆசியாவிலும், ஆப்பிரிக்காவிலும் இருந்த போர்த்துக்கேய காலனிகள் சுதந்திரம் பெற்றன. கிழக்கு தீமோரும் அவற்றில் ஒன்று. மேலும் இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஐ.நா. சபை காலனிய நீக்கம் தொடர்பான தீர்மானம் கொண்டு வந்தது. அதுவரை காலமும் ஐரோப்பிய காலனிகளாக இருந்த இலங்கை, இந்தியா போன்ற நாடுகள் விடுதலை பெற வேண்டும் என்பதே அந்தத் தீர்மானம். அந்த நாடுகளின் பட்டியலில் கிழக்கு தீமோர் இருந்தது. ஆனால் தமிழீழம் இருக்கவில்லை.

2. இந்தோனேசியா கிழக்கு தீமோர் மீது படையெடுத்து ஆக்கிரமிப்பதற்கு மூன்று காரணங்கள் இருந்தன:

ஒன்று: காலனிய காலகட்டத்திற்கு பின்னர், அந்தப் பிரதேசத்தில் இருந்த தீவுகள் அனைத்தும் தனக்கே சொந்தம் என ஜகார்த்தா உரிமை கோரியது. காளிமந்தான் தீவின் வட பகுதி மலேசியாவாக உள்ளது. அது கூட தனக்கே சொந்தம் என்று இந்தோனேசியா உரிமை கோருகின்றது. ஆனால் அங்கு படையெடுப்பை நடத்தினால் மலேசியாவுடன் போர் மூளும் என்பதால் பேசாமல் இருக்கிறது.

இரண்டு: கிழக்கு தீமோரில் நிறைய எண்ணை வளம் உள்ளது. அவற்றை இந்தோனேசியா தானே கைப்பற்றி சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்ற பொருளாதாரக் காரணம். பிற்காலத்தில் அதே காரணத்திற்காக தான் சர்வதேச சமூகம் கிழக்கு தீமோர் சுதந்திரத்தை ஆதரித்தது என்பது வேடிக்கையானது. இன்று கிழக்கு தீமோர் எண்ணை வளத்தை அவுஸ்திரேலியா மேற்பார்வை செய்து வருகின்றது.

மூன்று: கிழக்கு தீமோர் போர்த்துகேய காலனியாதிக்கத்தில் இருந்து சுதந்திரம் பெற்றதும் அங்கு அதிகாரப் போட்டி நடைபெற்றது. ஆயுதமேந்திய Fretilin (The Revolutionary Front for an Independent East Timor) இயக்கம் அரசைக் கைப்பற்றும் அளவிற்கு செல்வாக்காக இருந்தது. அதிலென்ன பிரச்சினை? Fretilin கிழக்கு தீமோரை ஒரு சோஷலிச நாடாக மாற்ற விரும்பியது. அது மார்க்சிய லெனினிச சித்தாந்தத்தை பின்பற்றியது. இதைக் காரணமாகக் காட்டி, அதாவது கம்யூனிச அபாயத்தை தடுப்பதாக சொல்லித் தான் இந்தோனேசியா படையெடுத்து ஆக்கிரமித்தது. அதற்கு அமெரிக்கா ஆசீர்வாதம் வழங்கியது. எங்கெல்லாம் கம்யூனிசம் தலைதூக்குகிறதோ அங்கெல்லாம் இராணுவத் தலையீடு செய்வது தானே அமெரிக்காவின் வெளிவிவகார கொள்கை?

3. கிழக்கு தீமோர் தனியொரு மொழியை பேசும் மக்களின் தேசியம் அல்ல. அது ஒரு பன்மொழித் தேசியம். அங்கே பதினைந்து வெவ்வேறு மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்கள் எல்லோரையும் ஒன்றிணைப்பது போர்த்துக்கேய காலனிய வரலாறு மட்டும் தான். நாங்கள் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாக அல்லது பொது மொழியாக பேசுவது மாதிரி, கிழக்கு தீமோர் பிரஜைகள் போர்த்துக்கேய மொழியை பொது மொழியாக கொண்டுள்ளனர். இதிலே வேடிக்கை என்னவென்றால், மேற்கு தீமோர் இன்றைக்கும் இந்தோனேசியாவின் ஒரு பகுதியாக தொடர்கின்றது. அங்கேயும் கிழக்கு தீமோரில் உள்ள அதே மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கிறார்கள்.

கிழக்கு தீமோர் சுதந்திரம் பெறக் காரணமாக இருந்ததாக இங்கு குறிப்பிட்ட விடயங்களில் ஏதாவதொன்று தமிழீழத்திற்கு பொருந்துகிறதா? அது சரி, நாடு கடந்த தமிழீழ அரசு ஏன் அந்த வீடியோவை வெளியிட வேண்டும் என்று கேட்கலாம். என்ன தான் தமிழீழம், தமிழ்த் தேசியம் பேசினாலும், மேற்கத்திய ஏகாதிபத்திய நலன்களை பாதுகாப்பது தான் அவர்களது பிரதானமான அரசியல் கொள்கை ஆகும்.

அதே தான் முன்னாள் கிழக்கு தீமோர் ஜனாதிபதியான, நோபல் பரிசு பெற்ற ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவின் கொள்கையும். அவர் முன்னொரு காலத்தில் மார்க்சிய Fretilin இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றவர். வெளிப்படையாகவே மேற்குலக நலன் சார்ந்த அரசியலுக்கு தன்னை மாற்றிக் கொண்டவர். அதனால் தான் நோபல் பரிசையும் வென்றார். ஆகவே, ஓரினப் பறவைகள் ஒன்றாகப் பறக்கும் என்பதைப் போல, நாடுகடந்த தமிழீழ அரசும், ஜோசே ரமோஸ் ஹோர்த்தாவும் ஒரே புள்ளியில் சந்தித்துக் கொண்டனர்.

https://www.youtube.com/watch?v=pk1yJxfJECg&fbclid=IwAR2DA1hfxh-yUHzvTOKJeiomYTNFulLLFgf1pswwwIgCDhl_dYjxDVZ3J_M

No comments: