Monday, May 18, 2020

முள்ளிவாய்க்கால் டயரிக் குறிப்புகள்

2009 ம் ஆண்டு, இறுதியுத்தம் நடந்து கொண்டிருந்த நேரம், புலம்பெயர்ந்த நாடுகளில் ஆர்ப்பாட்டங்கள் நடத்த உதவியவர்கள் அந்தந்த நாடுகளில் இருந்த இடதுசாரிகள் தான். இப்போதும் இடதுசாரிகள் மட்டுமே இலங்கை இனப்படுகொலை பற்றி பேசுகிறார்கள். இதுவரை காலமும், இடதுசாரி ஊடகங்களில் மட்டுமே விரிவான தகவல்கள் வந்துள்ளன. 

இருப்பினும், நன்றியுணர்வில்லாத போலித் தமிழ்த்தேசியவாதிகள், எப்போது பார்த்தாலும் இடதுசாரிகளை திட்டிக் கொண்டிருப்பார்கள். இவர்களை கால் தூசுக்கும் மதிக்காத வலதுசாரிகளுக்கு செம்பு தூக்குவார்கள்.  புலம்பெயர் நாடுகளில் உள்ள வலதுசாரிகள் அப்போதும் இப்போதும் தமிழரைக்  கண்டுகொள்வதில்லை. 

ஒரு தடவை, பிரித்தானியாவின் பிரபல வலதுசாரி பத்திரிகையான Sun, லண்டனில் உண்ணாவிரதம் இருந்த தமிழ் இளைஞர் பேர்கர் சாப்பிட்ட படத்தை போட்டு அவமானப் படுத்தியது. அதே பிரித்தானியாவில் வெளிவரும் அத்தனை வலதுசாரி ஊடகங்களும், இறுதிப்போரில் இலங்கை அரசை வெளிப்படையாக ஆதரித்து வந்தன. 

டொரோண்டோ நகரில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் ஒரு நெடுஞ்சாலையை மறித்து போராடினார்கள். இதனால் வாகனப் போக்குவரத்து தடைப்பட்டது. இது குறித்து செய்தி வெளியிட்ட, அந்நாட்டு வலதுசாரி ஊடகங்கள் "தமிழர்களின் அடாவடித்தனம்" என்று எதிர்மறையாக குறிப்பிட்டன. 

நெதர்லாந்தில், டென் ஹாக் நகரில் உள்ள  பாராளுமன்ற முன்றலில் ஒரு சிலர் கூடாரம் அடித்து உண்ணாவிரதம் இருந்தனர். அடுத்த நாளே அங்கு வந்த பொலிஸ், "இங்கிருந்து மரியாதையாக கலைந்து செல்லாவிட்டால், கைது செய்து அடைத்து வைப்போம். பிற்காலத்தில், உங்களது தொழில், படிப்பு பாதிக்கப்படும்..." என்று மிரட்டியது. பிறகென்ன? தமது எதிர்காலத்தை பாழாக்க விரும்பாத இளைஞர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

நெதர்லாந்திலும் வலதுசாரி ஊடகங்கள் எதுவும் இறுதிப்போரை கவனத்தில் எடுக்கவில்லை. அதிக பட்சம், பத்திரிகைகளில் ஒரு சிறு பெட்டிச்செய்தி. தொலைக்காட்சியில் பத்து செக்கன்ட் செய்தி. இவ்வளவு தான் முள்ளிவாய்க்கால் பேரவலத்திற்கு அவர்கள் கொடுத்த முக்கியத்துவம். ஒரு தடவை, தமிழர்கள் ஒரு பிரபல டச்சு தொலைக்காட்சியான RTL 4 நிறுவனத்தின் அலுவலகத்திற்கு முன்னால் சென்று ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அதைக் கூட அன்றைய தினம் செய்தி அறிக்கையின் முடிவில் பத்து செக்கன்ட் மட்டுமே காண்பித்தார்கள்.

- Kalaiyarasan 
18-05-2020

No comments: