Thursday, May 14, 2020

புலிப் போராளிகள் ஏழ்மையில் வாழ்ந்த ஓலைக் கொட்டில் வீடுகள்

(படத்திற்கு நன்றி: யோ. புரட்சி)
ஈழப்போர் முடிந்த பின்னர் கவனிக்காமல் விடப்பட்டுள்ள முன்னாள் போராளிகளின் அவல நிலை குறித்து பலரும் பலரும் கவலை தெரிவித்து விட்டனர். இது குறித்து வட இலங்கையில் வாழும் சமூக சேவை ஆர்வலரான யோ.புரட்சி தனது பேஸ்புக் சுவரில் பகிர்ந்த தகவல்:
//ஒரு பிள்ளை பெண் மாவீரர், ஆண்பிள்ளை கரும்புலி மாவீரர். தனித்து வாழும் விதவைத் தாயார். நீர் வார்த்த குடும்பம் கிணறுமின்றிய நிலை.//

(இது தொடர்பாக அவர் சில படங்களையும் வெளியிட்டுள்ளார். அவருக்கு நன்றி கூறி அந்தப் படங்களை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.)

 ******

உங்களில் பலர் அறிந்திராத புலிப் போராளிகள் பிறந்து வளர்ந்த வீடுகள் இப்படித் தான் இருக்கும். எந்த வசதியுமற்ற ஓலைக் குடிசைகள். அதாவது, தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் இன்னொரு இனமான ஏழைகள் வாழும் வீடுகள். அவர்களது அவலம் எப்போதும் கண்டுகொள்ளப் படுவதில்லை. தமிழ் இன உணர்வு அரசியல் பேசும் யாரும் கணக்கெடுப்பதில்லை.

இவர்களது தியாகத்தை காட்டி வெளிநாடுகளில் நிதி திரட்டியவர்கள், தாம் "உலகப் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்று விட்டதாக" பெருமையாக சொல்லிக் கொள்கிறார்கள். "உழைப்பால் உயர்ந்த தமிழர்கள்..." என்று அடித்த கொள்ளையை நியாயப் படுத்தும் குட்டி பூர்ஷுவா கும்பல் ஒன்று இப்போதும் உண்டு. முதலாளித்துவத்தை ஆராதிக்கும் அந்த வெட்கங் கெட்ட பிழைப்புவாத கும்பல் இலங்கையிலும் உண்டு. தமது பூர்ஷுவா வர்க்க நலனை தமிழ்த் தேசியம் என்ற போர்வையால் மறைத்துக் கொண்டு வாழ்வார்கள்.

"உழைத்து முன்னேறலாம் என்றால் எதற்காக வாழ்நாள் முழுவதும் கஷ்டப் பட்டு உழைக்கும் ஏழைகள் இன்னமும் இது போன்ற குடிசைகளில் வாழ்கிறார்கள்?" என்று கேட்டால் பதில் வராது. அது "கர்ம வினைப் பயன்... கடவுள் அப்படி சிலரை படைத்து விட்டார்..." என்று மதத்தை இழுத்து போதனை செய்வார்கள்.

முதலாளித்துவ சுரண்டல் பற்றிய பேச்செடுத்தால், "கம்யூனிசம் பேசாதே!" என்று வாயடைக்க வைப்பார்கள். இவர்கள் பிரச்சாரம் செய்வது மாதிரி கம்யூனிசம் இன்னும் காலாவதியாகவில்லை. அது இன்னமும் ஈழத்திலும் உயிர்ப்புடன் இருக்கிறது. உழைத்து உருக்குலைந்த ஏழைத் தமிழ் மக்கள் மனத்தில் இருக்கிறது. அந்த உண்மை அவர்களுக்கும் தெரியும்.

இந்த ஏழைகள் ஈழப் போருக்கு முன்னர் எப்படி வாழ்ந்தனரோ இப்போதும் அப்படியே வாழ்கின்றனர். அவர்கள் உழைத்தும் முன்னேற முடியாத காரணத்தால் தான் புலிப் போராளிகளாக மாறி மாவீரர்கள் ஆனார்கள். தமிழீழம் என்ற சமநீதி கொண்ட இன்னொரு உலகம் சாத்தியமே என்று கனவு கண்டார்கள்.

அவர்கள் கண்ட தமிழீழக் கனவு இன்னொரு தேசியம் அல்ல, சோஷலிசம். பாவம், தமிழ் தேசிய அடையாளத்தின் பின்னால் தம்மை மறைத்துக் கொள்ளும் தமிழ் பூர்ஷுவாக்கள் எப்போதும் போன்று முதலாளிகளுக்கே அடிவருடப் போகிறார்கள் என்ற உண்மை அந்த அப்பாவிப் போராளிகளுக்கு தெரியாது. "சுதந்திரத்" தமிழீழத்திலும் மீண்டும் தாம் ஏழைகளாக ஒடுக்கப் படுவோம் என்பதை அறிந்திருக்க மாட்டார்கள்.

தமிழ்த் தேசியம், புலித் தேசியம் பேசும் மத்தியதர வர்க்க அறிவுஜீவிகளுக்கு, ஏழைகள் எனும் இன்னோர் இனம் தமக்குள் ஒடுக்கப் படுவது தெரியாது. தெரிந்தாலும் எந்த உணர்வும் இன்றி உதாசீனப் படுத்துவார்கள். "தமிழர்களுக்குள் ஒடுக்கப் படும் பாட்டாளி வர்க்கமா? அப்படி எதுவும் கிடையவே கிடையாது..." என்று கற்பூரம் அணைத்து சத்தியம் செய்வார்கள்.

"இந்த ஏழைகள் தான் எமக்காக போராடினார்கள்." என்றால், "ஓ அவர்கள் தமிழர்கள்." என்று இன முத்திரை குத்தி மறைக்கப் பார்ப்பார்கள். ஏழைக் குடும்பங்களில் இருந்து சென்ற 99% போராளிகள் புலிகள் இயக்கத்தில் சேர்ந்து போராட சென்றதற்கு காரணம் வர்க்க உணர்வு என்ற உண்மையை மறைப்பார்கள். அதற்கு இன உணர்வு என்ற சாயம் பூசி மகிழ்வார்கள். இன முரண்பாடுகள் அடிப்படையில் வர்க்க முரண்பாடுகள் என்பதை புரியும் அளவிற்கு அவர்களுக்கு அரசியல் அறிவும் போதாது.

"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். 

மடிப்பு குலையாத சட்டையுடன் உத்தியோகம் பார்க்கும் குட்டி பூர்ஷுவா தமிழ்த் தேசியர்கள், தாம் மட்டும் சொகுசாக வாழ்ந்து கொண்டு, மீண்டும் இன விடுதலையின் பெயரால் அப்பாவி ஏழைகளை பலி கொடுக்கலாமா என்று பார்க்கிறார்கள். காலம் எப்போதும் ஒரே மாதிரி இருப்பதில்லை. மீண்டும் அதே வரலாறு திரும்பினால் கோமாளித்தனமாக இருக்கும்.

"குட்டக் குட்ட குனிகிறவனும் மடையன். குனியக் குனியக் குட்டுகிறவனும் மடையன்." என்றொரு பழமொழி உள்ளது. இந்த ஏழைத் தமிழர்கள் எப்போதுமே பூர்ஷுவா வர்க்க நலன் காக்கும் வேள்விக்கு பலி கொடுப்பதற்காக வளர்க்கப் படும் ஆடுகளாக எப்போதும் இருக்கப் போவதில்லை. அவர்கள் ஆறறிவுள்ள உழைக்கும் வர்க்க மனிதர்கள். அடுத்த கட்ட ஆயுதப் போராட்டம் இன விடுதலைக்கானது அல்ல. அது வர்க்க விடுதலைக்கானது.


- கலையரசன்
 14.05.2020

3 comments:

Jegan Nathan said...

ஜாதி வெறி, மத வெறி, முதலாளித்துவ சிந்தனையை தான் சிலோன் பிரச்சினை. தீர்வு - தமிழ் பாட்டாளியும் சிஙகள பாட்டாளியும் கூட்டாளியானால் ஒரே இரவில் இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை இனகுழுவகக்கும் சுயநினைய உரிமையை பெறமுடியும்

Jegan Nathan said...

ஜாதி வெறி, மத வெறி, முதலாளித்துவ சிந்தனையை தான் சிலோன் பிரச்சினை. தீர்வு - தமிழ் பாட்டாளியும் சிஙகள பாட்டாளியும் கூட்டாளியானால் ஒரே இரவில் இலங்கையில் வாழும் அனைத்து சிறுபான்மை இனகுழுவகக்கும் சுயநினைய உரிமையை பெறமுடியும்

Prithiviraj kulasinghan said...

//"இன்றைய சூழ்நிலையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா, இல்லையா?" என்று இப்போதும் சில மேதாவிகள் மயிர் பிளக்கும் விவாதம் செய்கிறார்கள். நிச்சயமாக இந்த சொகுசுப் பேர்வழிகள் போராடப் போவதில்லை. இழப்பதற்கு எதுவுமற்ற ஏழைப் பாட்டாளிகள் மட்டுமே போராட முன்வருவார்கள். இந்த உண்மை அவர்களுக்கும் தெரியும். //

உண்மையில் ஆயுதப் போராட்டம் சாத்தியமா என்ற கேள்விக்குப்பின்னால் இன்று ஆயுதப் போரொன்றைத் தொடங்க வேண்டுமா என்ற கேள்வி தான் நிற்கிறது. அதாவது நொறுக்கப்பட்டுள்ள அடிநிலை மக்களை இன்னமும் கொஞ்சம் அழிக்கவேண்டுமா என்ற கேள்வி.
இந்தக் கேள்வியைக் கேட்பவர்கள் (அதன் மூலம் இன்று ஆயுதப் போராட்டம் வேண்டாம் என்பவர்கள்) பல தரப்பினர்.
1. இந்த மக்கள் வாழும் நிலை கண்டு பரிதாபப் படுபவர். யாருடையதோ நலனுக்காக நடக்கும் போராட்டத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தப் படாத அடிநிலை மக்கள் அதற்குள் இழுப்பப் படுவதை விரும்பாதவர்கள். அந்த மக்களின் நலன் சார்ந்து சிந்திப்பவர்கள்.
2. இன்னொரு போராட்டம் தொடங்கினால் அது தமது கையைவிட்டுப் போய் விடும் என்பதால் எதிர்ப்பவர்கள். (உள்ளுர் தலைமைக்கும் சர்வதேசத்தில் தமிழர் தரப்பை குத்தகைக்கு எடுப்பவர்களுக்கும் அடையேயான முரண்பாடு காரணமாக)
3. ஏகாதிபத்திய சக்திகள்: இவர்கள் எந்தப் போராட்டத்தையும் எதிர்ப்பவர்கள். அரசியல் ஸ்திர நிலை இவர்களிற்கு மிக முக்கியம்.
4. இந்தப் போராட்டத்தில் சிதைக்கப்பட்டு இன்று தங்கள் வாழ்வே கேள்விக்குறியாக இருப்பவர்கள்,அல்லது அப்போது தான் மேலெழுந்து வந்து கொண்டிருப்பவர்கள்: இன்னொரு யுத்தத்திற்கு இவர்கள் இன்னமும் தயாரில்லை. இவர்களது நாளாந்த வாழ்வே இன்னொரு போராட்டம் தான்.

ஆகவே இன்று ஆயுதப் போராட்டத்திற்கு எதிரான சக்திகளை சொகுசுப் பேர்வழிகள், மேதாவிகள் என்று மட்டும் வரையறை செய்துவிட முடியாது. அப்படி குறுகிய முடிவுக்கு வருவது அரை வேக்காட்டுத் தனமும் கற்றுக் குட்டித்தனமும் ஏன் இடதுசாரி கம்யுனிசம் என்று லெனினாலேயே வர்ணிக்கப்பட்ட இளம்பருவக் கோளாறுமாகும்.