Tuesday, May 19, 2020

பிரித்தானியாவில் நடந்த "கேப்டன் ஸ்விங் புரட்சி"!


மார்க்சியத்தின் அரிச்சுவடி கூட தெரியாமல் விமர்சிப்பவர்கள் பலருண்டு. "கார்ல் மார்க்ஸ் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை வெளியிட்டு நூற்றைம்பது ஆண்டுகள் ஆகியும் ஐரோப்பாவில் புரட்சி நடக்கவில்லை தானே?" என்று ஒரு சிலர் தங்களை புத்திசாலிகள் என நினைத்துக் கொண்டு கேள்வி கேட்பார்கள். இது அவர்களது அறியாமை காரணமாக உருவான தப்பெண்ணம்.


 இங்கிலாந்தின் தெற்குப் பகுதிகளில் 1830 ம் ஆண்டு ஆங்கிலேய விவசாயக் கூலித் தொழிலாளர்கள் ஒரு வன்முறைப் புரட்சியில் ஈடுபட்டனர். இது கேப்டன் ஸ்விங் புரட்சி (Captain Swing Riots) என்று அழைக்கப் படுகின்றது. அந்தப் பெயர் வரக் காரணம் உள்ளது. தென் இங்கிலாந்தில் முதலாளிகள், நிலப்பிரபுக்களுக்கு அனுப்பப்பட்ட எச்சரிக்கைக் கடிதங்கள் யாவும் கேப்டன் ஸ்விங் என்ற பெயரால் ஒப்பமிடப் பட்டிருந்தன. அது புரட்சியாளர்கள் உருவாக்கிய ஒரு கற்பனைப் பாத்திரம். சொத்துடமை வர்க்கத்தினரின் இயந்திரங்கள், வீடுகளை எரிக்கப் போவதாக அந்தக் கடிதங்களில் குறிப்பிடப் பட்டிருந்தன. அதே மாதிரி பல இடங்களில் எரித்து சேதப் படுத்தப் பட்டன.

கேப்டன் ஸ்விங் புரட்சியானது பிரித்தானியாவில் நடந்த தொழிற்புரட்சியின் எதிர்விளைவு எனலாம். தொழிற்புரட்சிக் காலத்தில் முதலாளிகள் புதிய இயந்திரங்களை உருவாக்கி தொழிற்துறைகளில் ஈடுபடுத்தி வந்தனர். அதனால் பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலையிழந்தனர். குறிப்பாக வயல்களில் நூற்றுக்கணக்கான விவசாயக் கூலிகள் செய்து வந்த அதே வேலையை ஒரு இயந்திரம் செய்தது. இதனால் நாட்டுப்புறங்களில் வேலையில்லாப் பிரச்சினை அதிகரித்தது. வேலையிழந்தவர்கள் மட்டுமல்லாது, வேலை செய்தவர்கள் கூட வறுமையில் வாடினார்கள். காரணம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட கூலி மிகவும் குறைவு.

இதனால் வெகுண்டெழுந்த உழைக்கும் மக்கள் நவீன கண்டுபிடிப்புகளான விவசாய இயந்திரங்களை தீயிட்டுக் கொளுத்தினார்கள். அது மட்டுமல்ல பண்ணையார்கள், நிலவுடமையாளர்களின் வீடுகளும், சொத்துக்களும் எரிக்கப் பட்டன. அந்த நேரத்தில் பிரான்ஸ், பெல்ஜியம், என்று அயலில் இருந்த ஐரோப்பிய நாடுகளில் புரட்சிகள் நடந்து விட்டிருந்தன. பிரித்தானியாவிலும் அதே பாணியில் புரட்சி நடக்கப் போகிறது என்று ஆட்சியாளர்கள் அஞ்சினார்கள்.

பத்தொன்பதாம் நூற்றாண்டு பிரிட்டனில் பாராளுமன்றம் இருந்தாலும், தேர்தல்கள் நடப்பதில்லை. அது மக்களுக்கு கடமைப்படாத ஒரு சர்வாதிகார அரசு. அப்போது ஆட்சியில் இருந்த டொரி கட்சியினர் (தற்கால கன்சர்வேட்டிவ் கட்சியின் முன்னோடி) வெளிப்படையாகவே முதலாளிகளுக்கு சார்பாக நடந்து கொண்டனர். அவர்கள் மக்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்காமல் கிளர்ச்சியை நசுக்கும் நடவடிக்கையில் இறங்கினார்கள். ஆயிரக் கணக்கான புரட்சியாளர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். குறைந்தது இருபது பேருக்கு மரணதண்டனை விதிக்கப் பட்டது. அன்றைய புரட்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கான ஏழைகள், அன்று சிறைக் காலனியாக இருந்த அவுஸ்திரேலியாவுக்கு நாடுகடத்தப் பட்டனர்.

இருப்பினும் கேப்டன் ஸ்விங் புரட்சி சில வெற்றிகளையும் பெற்றுத் தந்தது. விவசாய கூலித் தொழிலாளர்களின் சம்பளம் அதிகரிக்கப் பட்டது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுப்பகுதி வரையில் இயந்திரங்களின் பாவனை தடுக்கப் பட்டது. மேலும் தொழிற்சங்கம் அமைப்பதற்கான தடைச்சட்டம் நீக்கப் பட்டது. போராடாமல் எதுவும் கிடைப்பதில்லை. அன்று பிரிட்டிஷ் கூலித் தொழிலாளர்கள் போராடி வாங்கித் தந்த உரிமைகளை தான் நாம் இன்றைக்கு அனுபவிக்கிறோம். இங்கிலாந்தில் நடந்த கேப்டன் ஸ்விங் புரட்சி குறித்து கார்ல் மார்க்ஸ் தனது மூலதனம் நூலில் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.

No comments: