Friday, May 29, 2020

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்" - ஒரு புலி நீக்க அரசியல்!

சீமானின் "சாப்பாட்டு ராமன் கதைகள்", அநேகமாக புலி நீக்க அரசியல் செய்யும் நோக்கில் பரப்பப் பட வாய்ப்புண்டு. இந்தக் கதைகள் மூலம், புலிகளின் அரசியல் தலைமையை கேலி செய்து, புலிப் போராளிகளின் அர்ப்பணிப்பு, தியாகத்தை கொச்சைப் படுத்துவதே சீமானின் நோக்கமாக இருக்கிறது. இதற்கு ஈழத்து சைக்கிள் கட்சியும் ஒத்துழைக்கிறது. தமிழ் சமூகத்தில் புலி நீக்கம் செய்த பின்னர், தமது தனித்துவமான மேட்டுக்குடி அரசியலை திணிக்கும் உள்நோக்கம் மறைந்திருக்கிறது.

முன்பு புலிகளின் முகாமில் தங்கியிருந்த காலத்தில் அங்கிருந்த வாழ்க்கை முறை பற்றி பல முன்னாள் போராளிகள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். தினந்தோறும் ஒரே மாதிரியான "அடிப்படை உணவு" மட்டுமே கிடைத்து வந்ததாக கூறினார்கள். சோறுடன், பருப்பு, கத்தரிக்காய், மற்றும் கௌப்பி எனப்படும் அவரைக்காய் உணவு எப்போதும் கிடைக்கும். அன்று வன்னியில் பெருமளவு விவசாய நிலங்களில் கௌப்பி பயிரிடப் பட்டு வந்தது. அது ஒன்றே சத்தான உணவாக கருதப் பட்டது. 

அதை விட வாரத்திற்கு ஒரு தடவை இறைச்சி பெரும்பாலும் மாட்டிறைச்சி கொடுத்து வந்தனர். சில நேரம் புட்டு, இடியப்பம் ஆகியன சமைத்துப் பரிமாறுவார்கள். ஆனால், இட்லி, தோசை, வடை போன்ற, சீமான் விவரித்த உணவு வகைகள் மிக அரிதாகத் தான் கிடைக்கும். ஆமைக்கறியை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.  

இதற்கு இன்னொரு பக்கம் உள்ளது. சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், குறிப்பாக 2002 ம் ஆண்டுக்குப் பிறகு ஏராளமான வெளிநாட்டு பிரமுகர்கள் வன்னிக்கு சென்று வந்தனர். ஊடகவியலாளர்கள், NGO பிரதிநிதிகள், இராஜதந்திரிகள் இப்படிப் பலர் சென்று வந்தனர். அவர்களுக்கு அறுசுவை உணவுடன் விருந்து கொடுத்து உபசரிப்பது புலிகளின் வழக்கமாக இருந்தது. இதனை சீமான் கொஞ்சம் மிகைப் படுத்தி சொல்கிறார். என்னவோ தனக்கு மட்டுமே ராஜமரியாதை கிடைத்தது மாதிரிப் புளுகுகிறார். அவ்வளவு தான். 

அந்தக் காலகட்டத்தில் தென்னிலங்கையில் இருந்து சென்ற சிங்கள-தமிழ் ஊடகவியலார்களை விசாரித்தால் புலிகளின் விருந்தோம்பல் பற்றி கதை கதையாக சொல்வார்கள்.  தங்களுக்கு கிடைத்த விருந்து சாப்பாடு அங்கிருந்த மக்களுக்கு அல்லது போராளிகளுக்கு கிடைக்கும் என்று நினைத்துக் கூட பார்க்க முடியாது என்று சில ஊடகவியலாளர்கள் சொல்லக் கேள்விப் பட்டிருக்கிறேன். 

அந்தக் காலத்தில், அரசின் பொருளாதாரத் தடை காரணமாக, அடிப்படை உணவாகக் கருதப்படும் அரிசி, பருப்பு போன்றன கிடைப்பதே கஷ்டமாக இருந்தது. போஷாக்கின்மை காரணமாக குழந்தைகளும், சிறுவர்களும், கர்ப்பிணித் தாய்மாரும் பெருமளவில் பாதிக்கப் பட்டிருந்தனர். 

சீமான் தனது புளுகுக் கதைகள் மூலம் சொல்ல விரும்புவது இது தான்:

  • - புலிகள் எப்போதும் சாப்பிடுவதில் மட்டுமே குறியாக இருந்தார்கள். அதனால் போரிடுவதில் கவனம் செலுத்தவில்லை.  
  • - வெளிநாடுகளில் இருந்து வந்த பிரமுகர்களை நன்றாக கவனித்த புலிகள், தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் வாழ்ந்த தமிழ் மக்களை புறக்கணித்தார்கள்.
  • - புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில், இயக்கத்தின் தலைமை உட்பட, ஒரு பிரிவினர் வசதியாக வாழ்ந்து வந்தனர். பொருளாதாரத் தடை, உணவுப் பற்றாக்குறைக்கு மத்தியிலும் இந்தப் பிரிவினர் அறுசுவை உணவு உண்டு களித்து சொகுசாக வாழ்ந்தனர். 

இது தான் புலி நீக்க அரசியல் எனப்படும். இதற்கு வரலாற்றில் இருந்து பல உதாரணங்களை காட்டலாம். நாற்பது வருடங்களுக்கு முன்பு, தமிழர் விடுதலைக் கூட்டணிக்கு தான் பெரும்பான்மையான ஈழத் தமிழர்களின் ஆதரவு கிடைத்து வந்தது. அப்போது வெறும் பத்துப் பேருடன் இயங்கிய புலிகள் போன்ற இயக்கங்கள், கூட்டணி பற்றியும், அதன் தலைவர் அமிர்தலிங்கம் பற்றியும் கேலி, கிண்டல் செய்து பேசி வந்தனர். தமது வெளியீடுகளில் நையாண்டி செய்தனர். அதே நேரத்தில், தாம் தமிழர் விடுதலைக் கூட்டணி கட்டிக்காக்கும் தமிழ்த்தேசியக் கொள்கையை பின்பற்றுவதாக கூறி வந்தனர். நிகழ்காலத்தில் மக்கள் மத்தியில் பிரபலமாக உள்ள அமைப்பை தாமும் ஏற்றுக் கொள்வதாக காட்டிக் கொண்டு, தக்க தருணம் வந்தவுடன் அதைக் கைகழுவி விடுவது ஒரு அரசியல் தந்திரோபாயம். அரசறிவியலில் "மாக்கியவல்லித்தனம்" என்பார்கள். 

அது சரி, சீமான் தான் வேறு நாட்டிலிருந்து சென்று ஒரு சில நாட்கள் மட்டுமே தங்கியிருந்த படியால் தவறாக கருதிக் கொள்கிறார் என்று ஒரு காரணம் கூறலாம். ஏன் புலம்பெயர்ந்த ஈழத்தமிழரில் ஒரு சாரார் சீமானுக்கு முட்டுக் கொடுக்க வேண்டும்? அதை விட, காலங்காலமாக ஈழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் சைக்கிள் கட்சி எனப்படும் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும் அங்கிருந்த உண்மை நிலவரம் தெரியாதா? 

உண்மையைச் சொன்னால், இவர்கள் யாருமே களத்தில் நின்று போராடியவர்கள் அல்ல! இவர்கள் ஒன்றில் வெளிநாடுகளுக்கு சென்று வசதியாக வாழ்பவர்கள். அல்லது உள்நாட்டிலேயே மருத்துவர், ஆசிரியர் என்று மத்தியதர வர்க்க தொழில் செய்து வசதியாக வாழ்பவர்கள். இவர்களது அரசியலும், சீமானின் அரசியலும் ஒன்று தான். ஒருபுறம் புலிகளை ஆதரிப்பதாக நடித்துக் கொண்டே, மறுபுறம் அவர்களை கொச்சைப் படுத்தி வருகின்றனர். இத்தகைய புலி நீக்க அரசியல் மூலம், சமூகத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநாட்ட விரும்புகின்றனர். 

சீமானுக்கு முட்டுக் கொடுக்கும் ஈழத்தமிழர் குழுவில் உள்ள முன்னாள் போராளிகளை விரல் விட்டு எண்ணி விடலாம். அப்படியே இருந்தாலும், அவர்கள் தமது தற்போதைய வசதியான வாழ்க்கை காரணமாக கடந்த காலத்தை மறந்து விட்டவர்களாக இருப்பார்கள். உதாரணத்திற்கு, முன்னொரு காலத்தில் ஏழைகளாக கஷ்டப் பட்டவர்கள், நிறையப் பணம் கைக்கு வந்ததும் திமிராக நடந்து கொள்வார்கள். ஏழைகளை மதிக்க மாட்டார்கள். ஏனென்றால் இந்த சமூக அமைப்பு அப்படித் தான் இருக்கிறது.

No comments: