Friday, February 14, 2020

என்வர் ஹோஷாவின் மர்ம தேசம்! - அல்பேனிய பயணக்கதை - 3

(பாகம் : மூன்று)


"அல்பேனியர் என்றோர் இனமுண்டு, தனியே அவர்க்கோர் குணமுண்டு!" அல்பேனியர், தமிழர் ஆகிய இரண்டு தேசிய இனங்களும் இரண்டு வேறுபட்ட மதத்தவர்களை ஒன்றிணைத்து மொழியை மட்டும் அடிப்படையாகக் கொண்டு உருவானவை. அல்பேனிய மொழி ஐரோப்பாவில் வேறெந்த மொழியுடனும் தொடர்பில்லாத மிகப் பழமையான மொழி. அதனால் அவர்களும் தமிழர்கள் மாதிரி மிகப் பழமையான மொழியை பேசுவதாக பெருமை கொள்கின்றனர்.

தமிழர்கள் போன்று அல்பேனியர்களும், எந்நேரமும் சர்வதேசம் தங்களையே உற்று நோக்குவதாக கருதிக் கொள்கிறார்கள். இது அவர்களது நினைப்பு மட்டுமே. கடந்த பல தசாப்த காலமாக, அல்பேனியா ஏன் தனிமைப் படுத்தப் பட்டிருந்தது என்பதை புரிந்து கொள்வது கடினம் அல்ல. இது அல்பேனிய இனத்தவரின் விசேட குணம்! பெரிதாக எந்த வளமும் இல்லாத சிறிய நாடான அல்பேனியாவை, அயலில் உள்ள வல்லரசு நாடுகள் எதுவும் பெரிதாக கண்டுகொள்வதில்லை. ஆனால் எல்லோரும் தங்கள் மீது படையெடுக்க காத்திருக்கிறார்கள் என்பது போல அல்பேனியர்கள் நினைத்துக் கொண்டனர். சில வரலாற்று நிகழ்வுகளும் அவர்களது அச்சத்திற்கு காரணம். 


நாற்பது வருட காலமாக அல்பேனியாவை ஆண்ட என்வர் ஹோஷா ஒரு "ஸ்டாலினிச சர்வாதிகாரி... எந்த நேரமும் பயந்து சாகும் தன்மை கொண்ட சந்தேகப் பேர்வழி.... எந்நேரமும் அந்நிய படையெடுப்பு நடந்து விடும் என்ற அச்சத்தில் நாடு முழுவதும் இலட்சக் கணக்கான பங்கர்கள் கட்டிய கிறுக்குப் பேர்வழி..." இப்படித் தான் மேற்குலக ஊடகங்களால் பரப்புரை செய்யப் பட்டது.

என்னைப் பொறுத்தவரையில் இது அல்பேனியரின் தனிப்பட்ட குணாம்சம். இதற்கும் கம்யூனிசத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அன்றிருந்த எந்தவொரு சோஷலிச நாட்டுடனும் அல்பேனியா தொடர்பு வைத்திருக்கவில்லை என்பதும் இங்கே குறிப்பிடத் தக்கது. அயல்நாடுகளான இத்தாலியும், கிறீஸும் முதலாளித்துவ பகை நாடுகள். அத்துடன் நேட்டோ இராணுவக் கூட்டமைப்பில் பங்காளிகள். யூகோஸ்லேவியாவின் ஆட்சியாளர்கள் சோஷலிசத்திற்கு துரோகம் செய்த திருத்தல்வாதிகள். அதனால் அதுவும் ஒரு பகை நாடு. ஆகவே, அல்பேனியாவின் நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை.

அன்றைய அல்பேனியாவை இன்றைய வட கொரியாவுடன் ஒப்பிடலாம். குறைந்தது இரண்டு தசாப்த காலமாவது அல்பேனியா உலகில் எந்தவொரு நாட்டுடனும் இராஜதந்திர தொடர்பை கொண்டிருக்கவில்லை. சீனாவுடன் இருந்த தொடர்பும் மாவோவின் மரணத்தின் பின்னர் அறுந்து விட்டது. எந்த நாட்டுடனும் குறைந்த பட்ச பொருளாதார தொடர்பு கூட இல்லாமல், அல்பேனியா எவ்வாறு தாக்குப் பிடித்தது என்பது இன்று வரை பலருக்கும் புரியாத புதிர்.

அல்பேனியா கம்யூனிஸ்ட் கட்சியானது இரண்டாம் உலகப்போர் காலத்தில் யூகோஸ்லேவிய கம்யூனிஸ்டுகளால் உருவாக்கப் பட்டது. அதற்கு முன்னர் உதிரிகளான கம்யூனிச குழுக்கள் இருந்த போதிலும், ஒரு கட்சியாக நிறுவனமயமாவதற்கு யூகோஸ்லேவியர்கள் உதவி இருந்தனர். அதுவும் கொமிந்தேர்ன் வழிகாட்டலில் தான். யூகோஸ்லேவியாவில் ஒரே மொழி பேசும் கொசோவோ மாகாணத்தை சேர்ந்த அல்பேனியர்கள் யூகோஸ்லேவிய கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்ததும் ஒரு காரணமாக இருக்கலாம்.


போர் முடிந்து அல்பேனியா விடுதலை அடைந்த ஆரம்ப காலங்களில், யூகோஸ்லேவியாவுடன் நெருங்கிய தொடர்பு இருந்தது. ஒரு கட்டத்தில் அல்பேனியாவை இன்னொரு யூகோஸ்லேவிய குடியரசு ஆக்குவதற்கான பேச்சுவார்த்தைகளும் நடந்தன. ஆரம்பத்தில் அதற்கு விருப்பம் தெரிவித்த என்வர் ஹோஷா, பின்னர் மறுத்து விட்டார். அதற்குக் காரணம் அல்பேனியரின் தீவிரமான தேசிய இன உணர்வு மட்டுமே. அதனால் கொசோவோவுக்கு உரிமை கோருவதையும் விட்டுக் கொடுத்தனர். (இன்று வரை அல்பேனிய தேசியவாதிகள் என்வரின் விட்டுக்கொடுப்பை ஒரு துரோகமாக பார்க்கின்றனர். இன்று கொசோவோ தனிநாடாக பிரிந்திருந்த போதிலும் அல்பேனியாவுடன் ஒன்று சேரவில்லை என்பதும் குறிப்பிடத் தக்கது.)

எது எப்படியோ 1949 ம் ஆண்டு யூகோஸ்லேவியாவுடனான உறவு முற்றாகத் துண்டிக்கப் பட்டது. அபிவிருத்தித் திட்டங்களில் உதவிய யூகோஸ்லேவிய நிபுணர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப் பட்டனர். அது மட்டுமல்லாது, கம்யூனிஸ்ட் கட்சிக்கு யூகோஸ்லேவிய ஆதரவு நிலைப்பாட்டுடன் இருந்தவர்கள் களையெடுக்கப் பட்டனர். கட்சியில் செல்வாக்கு மிக்க தலைவர்களில் ஒருவராக இருந்த தலைவர்களில் ஒருவரான உள்துறை அமைச்சர் கோசி சோஷே கூட பதவியிறக்கப் பட்டு சுட்டுக் கொல்லப் பட்டார்.

யூகோஸ்லேவியாவுடனான தொடர்புகளை துண்டிப்பதற்கு சொல்லப் பட்ட காரணம், அன்றைய அதிபர் மாஷல் டிட்டோ ஒரு திருத்தல்வாதி என்பது தான். அந்தக் காலகட்டத்தில் டிட்டோவின் யூகோஸ்லேவியா ஸ்டாலின் தலைமையிலான கொமின்தேர்ன் அமைப்பில் இருந்து விலகியிருந்தது. டிட்டோவுக்கும் ஸ்டாலினுக்கும் இடையில் ஏற்பட்ட விரிசலின் விளைவு அல்பேனியாவிலும் உணரப்பட்டது. மிகப் பலமான சோஷலிச சகோதர நாடான யூகோஸ்லேவியாவின் தொடர்பை துண்டிப்பதென்பது, மிகச் சிறிய சோஷலிச நாடான அல்பேனியாவுக்கு பெரியதொரு இழப்பு தான். இருப்பினும் கொள்கை முக்கியம் என்று பிடிவாதமாக இருந்தது.


அல்பேனிய- யூகோஸ்லேவிய முரண்பாட்டை காட்டும் வீடியோ ஆவணம் ஒன்று பார்க்கக் கிடைத்தது. அது திரானா நகர மத்தியில் உள்ள "இலைகளின் வீடு" (House of Leaves) மியூசியத்தில் காண்பிக்கப் படுகின்றது. அந்தக் கட்டிடம் ஒரு காலத்தில் "சிகுரிமி"(Sigurimi) என்ற புலனாய்வுத்துறையினரின் தலைமை அலுவலகமாக இருந்தது. இப்போதும் அந்தக் கட்டிடம் சனநெருக்கடி மிக்க நகர்ப் பகுதியில் இருந்த போதிலும் வெளியுலகில் இருந்து தனிமைப் படுத்தப் பட்ட உணர்வைக் கொடுக்கிறது.

இன்றைய அல்பேனிய ஆட்சியாளர்கள், கம்யூனிச கடந்த காலத்தில் நடந்த கொடுமைகளை காட்டுவதற்கு இது போன்ற மியூசியங்களை அமைத்துள்ளனர். இலைகளின் வீடு மாதிரி "பங்கார்ட்"(Bunk Art) எனும் இன்னொரு மியூசியமும் உள்ளது. அது பற்றி பின்னர் எழுதுகிறேன். அன்றைய பாதுகாப்புத்துறை அதிகாரிகள் எவ்வாறு கைதிகளை சித்திரவதை செய்தனர் என்பது இரண்டு மியூசியங்களிலும் உள்ள பொதுவான விடயம். ஆனால், இலைகளின் வீடு பெரும்பாலும் சிகுரிமியின் வேவு பார்க்கும் நுட்பங்கள் பற்றி விளக்குகிறது. 

அல்பேனியா ஒரு சோஷலிச நாடாக பிரகடனப் படுத்தப் பட்டதும், தேசப் பாதுகாப்புக்காக உருவாக்கப் பட்ட அமைப்பு தான் சிகுரிமி. அல்பேனிய மொழியில் பாதுகாப்பு என்ற சொல்லை அடியாகக் கொண்டது. எதிர்ப்புரட்சியாளர்கள், வர்க்க எதிரிகளை இனங்கண்டு ஒடுக்குவது தான் அதன் தலையாய கடமை. சந்தேகத்திற்கு இடமானவர்கள் பற்றிய உளவுத் தகவல்கள் சேகரிக்கப் பட்டு, தனித்தனி கோப்புகளில் ஆவணப் படுத்தப் பட்டன. வீடுகள், அலுவலகங்களில் நடக்கும் சம்பாஷணைகளை ஒட்டுக் கேட்பதற்கு பயன்படுத்தப் பட்ட டிரான்ஸ்மிட்டர் கருவிகள், அவற்றைப் பொருத்தும் விதம் என்பன மியூசியத்தில் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன.அத்துடன் அந்தக் காலத்தில் பயன்படுத்தப் பட்ட டேப் ரெக்கார்டர்கள், வீடியோ கமெராக்கள் என்பனவும் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. அந்தக் காலத்து உளவுக் கருவிகளை பார்க்கும் பொழுது இந்தக் காலத்தில் வாழ்பவர்களுக்கு சிறுபிள்ளை விளையாட்டாகத் தோன்றும். இன்று சாட்டலைட், இணையம் மூலம் மிக இலகுவாக உளவறியும் வகையில் தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

மியூசியம் அமைந்துள்ள கட்டிடம் சிறு சிறு அறைகளாக பிரிக்கப் பட்டுள்ளது. அவை அந்தக் காலத்தில் கைதிகளை விசாரிக்கும் அறைகளாகவும், பிலிம் ரோல்கள் கழுவும் ஆய்வுக் கூடமாகவும், மேலும் அலுவலகமாகக் கூட பயன்படுத்தப் பட்டிருக்கலாம். "எச்சரிக்கை: இந்த அறையில் ஒட்டுக் கேட்கும் கருவி பொருத்தப் பட்டுள்ளது!" என்ற வாசகம் ஒவ்வொரு கதவின் மேலும் எழுதப் பட்டுள்ளது. அதை வாசிக்கும் பொழுது சிரிப்புத் தான் வருகின்றது. நாம் தற்போது அரசு உளவுத்துறை எமது மொபைல் போன்களை ஒட்டுக் கேட்கும் காலத்தில் வாழ்கிறோம் ஐயா! 


அன்றைய காலங்களில் உள்நாட்டவர் மட்டுமல்லாது வெளிநாட்டவர் கூட உளவு பார்க்கப் பட்டனர் என்று ஓர் அறையின் சுவரில் எழுதப் பட்டிருந்தது. மியூசியத்தில் எல்லா இடங்களிலும் அல்பேனிய மொழியில் மட்டுமல்லாது, ஆங்கிலத்திலும் விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். அந்த அறைக்குள் இருந்த சுவரில் முன்பு சிகுரிமி வைத்திருந்த வீடியோ ஆவணப் படம் ஒன்று ஓடிக் கொண்டிருந்தது. அதில் யூகோஸ்லேவிய தூதுவராலய ஊழியர் ஒருவரை பின்தொடர்ந்து வீடியோ எடுத்திருக்கிறார்கள். அந்த வீடியோவில் வரும் பெண்மணி, சிறிது தூரம் நடந்து சென்று அடுக்கு மாடி வீடொன்றில் வசிக்கும் இன்னொரு பெண்ணை சந்திக்கிறார். இருவரும் பொருட்களையும், பணத் தாள்களையும் பரிமாறிக் கொள்கின்றனர்.

அந்த வீடியோவில் பின்னணியில் ஒரு குரல் சம்பவங்களை விவரித்துக் கொண்டிருக்கிறது. அதன் சாராம்சம் இது தான். யூகோஸ்லேவிய இராஜதந்திரியான அந்தப் பெண், தனது நாட்டிலிருந்து விசேடமாக கொண்டு வரப்பட்ட பொருட்களை விற்பனை செய்கிறார். அந்தப் பொருட்களை வாங்கும் அல்பேனிய பெண் அவற்றை உள்ளூரில் தனக்குத் தெரிந்தவர்களிடம் விற்று விட்டு பணம் கொடுக்கிறார். இது கறுப்புச் சந்தை வியாபாரம். கடத்தல் தொழில். யூகோஸ்லேவிய போலி சோஷலிஸ்டுகள் இது போன்ற சமூகவிரோத செயல்களில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கிறார்கள். அல்பேனிய மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்..." அன்றைய காலத்தில் அல்பேனியாவுக்கும், யூகோஸ்லேவியாவுக்கும் இடையிலான உறவு எந்தளவு மோசமாக இருந்தது என்பதற்கு இந்த வீடியோவே சாட்சி.

திரானாவில் உள்ள இன்னொரு கம்யூனிச எதிர்ப்பு மியூசியம் "பங்கார்ட்". அதுவும் நகர மத்தியில் பழைய அமைச்சுக் கட்டிடங்களுக்கு அருகாமையில் உள்ளது. என்வர் ஹோஷா ஆட்சிக் காலத்தில் நாடு முழுவதும் ஏராளமான அரைக் கோளம் வடிவிலான பங்கர்கள் கட்டப்பட்டன. வெளியில் சிறிதாக காணப்படும் பங்கர் கீழே சுரங்க அறைகளையும் குண்டு துளைக்க முடியாத கொங்க்ரீத் கதவுகளையும் கொண்டுள்ளது. பங்கர் மியூசியத்தில் உள்ள நிலக்கீழ் சுரங்கப் பாதை ஒன்று உள்துறை அமைச்சு அலுவலகத்திற்கு செல்கிறது என்று ஓரிடத்தில் எழுதப் பட்டிருந்தது. 


இன்று வரை மேற்குலகில் கிண்டலடிக்கப் படும் பங்கர் கட்டமைப்புகள் அல்பேனியாவுக்கு மட்டுமே விசேடமான ஒரு விடயம் அல்ல. சுவிட்சர்லாந்திலும் நாடு முழுவதும் நூற்றுக் கணக்கான பங்கர்கள் கட்டப் பட்டுள்ளன. அவை இன்னமும் சிறந்த முறையில் பராமரிக்கப் படுகின்றன. ஆனால், அல்பேனியர்கள் தமது பங்கர்களை கைவிட்டு விட்டார்கள். அவை தற்போது பாழடைந்து காணப்படுகின்றன.

பங்கார்ட் மியூசியத்தில் அல்பேனிய காவல்துறை பற்றிய வரலாற்றுத் தகவல்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. 1920 இல் தொடங்கும் வரலாறு 1991 இல் முடிகிறது. அதற்குப் பின்னர் அல்பேனியாவில் காவல்துறை இயங்கவில்லையா என்று கேட்டு விடாதீர்கள். 1991 ம் ஆண்டு வரை அல்பேனிய மக்களை அடக்கி வைத்திருந்த கம்யூனிச சர்வாதிகாரம் முடிவடைந்து, அவர்கள் இப்போது "சுதந்திரமான தேசத்தில்" வாழ்கிறார்கள். தற்போது பொலிஸ் மக்களின் நண்பன்! ஆகவே தற்போது எல்லாம் சுபமே!

இன்றுள்ள "ஜனநாயக காவல்துறை" ஊழல்மயமானது என்றும் அதற்குள் மாபியா கிரிமினல்களால் ஊடுருவி உள்ளதாகவும் அல்பேனிய மற்றும் மேற்கத்திய ஊடகங்களில் அடிக்கடி செய்திகள் வருகின்றன. அரசாங்கத்தில் உள்ள அரசியல்வாதிகள் அனைவரும் கிரிமினல்கள் என்று சாதாரண பொது மக்கள் பேசிக் கொள்கின்றனர். இன்னமும் அல்பேனியாவை ஐரோப்பிய ஒன்றியத்தில் சேர்க்க மறுப்பதற்கு அதிகார மட்டத்தில் நிலவும் அளவுகடந்த ஊழல் ஒரு முக்கிய காரணம்.மியூசியத்தின் ஓர் அறைக்குள் கைதிகளை விசாரிக்கும் இடம் என்று எழுதப் பட்டுள்ளது. அதற்குள் மின்குமிழ் விட்டு விட்டு எரிகிறது. கதவருகில் உள்ள சுவரில் விசாரணைக் கைதிகளின் விபரங்கள் அடங்கிய கோப்புகள் ஓட்டப் பட்டுள்ளன. இன்னொரு பக்கம் ஓர் ஆள் படுப்பதற்கு மட்டுமே இடமுள்ள சிறைக்கூண்டு. கடுமையான தண்டனைக் கைதிகள் மட்டுமே தனிமைச் சிறையில் அடைத்து வைக்கப் பட்டனர். 

பங்கார்ட் மியூசியத்தில் கம்யூனிச ஆட்சிக் காலத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் எப்படி எல்லாம் சித்திரவதை செய்யப் பட்டனர் என்ற விளக்கக் குறிப்புகள் எழுதப் பட்டுள்ளன. மின்சாரக் கம்பியால் சதையில் குத்துதல், தலைகீழாக கட்டிவைத்து அடித்தல் இப்படிப் பல. மியூசித்தில் இருந்த சித்திரவதைக் குறிப்புகளை வாசிக்கும் பொழுது எனது மனதில் எழுந்த எண்ணம் இது தான். இத்தகைய சித்திரவதைகள் பிற உலக நாடுகளிலும் நடந்துள்ளன. ஏன் இன்று வரையில் இலங்கையிலும், இந்தியாவிலும் நடந்து கொண்டிருக்கின்றன. ஆப்கானிஸ்தான், ஈராக்கில் அமெரிக்க இராணுவம் செய்த கொடூரமான சித்திரவதைகள் பற்றிய தகவல்கள் உலகை உலுக்கின. அந்த நாடுகளிலும் சித்திரவதைக் கதைகளை கூறும் மியூசியம் கட்டினால் பெருமளவு சுற்றுலாப் பயணிகளை கவரலாம்.

உண்மையில் அன்றைய சோஷலிச அல்பேனியாவில் நடந்த சித்திரவதைகள், வன்முறைகள் யாவும் அந்நாட்டு அரசமைப்பு சட்டத்திற்கு முரணான மீறல்கள் தான். அதாவது ஒரு கைதியை சித்திரவதை செய்யக்கூடாது என்று சட்டத்தில் எழுதப் பட்டிருந்தாலும், நடைமுறை அதற்கு மாறாக இருந்துள்ளது. எப்படித் தெரியும்? சில நேரம் பெரும் பதவிகளில் இருந்தவர்களும் கைதிகளாக சித்திரவதை அனுபவித்துள்ளனர். அவர்கள் தமக்கு நடந்த சித்திரவதைக் கொடுமைகள் பற்றி அதிபர் என்வர் ஹோஷாவுக்கு கடிதம் எழுதி இருக்கிறார்கள். இந்த விபரமும் பங்கார்ட் மியூசியத்தில் உள்ளது.

மேற்குறிப்பிட்ட சித்திரவதைக் குற்றங்களை காட்சிப் படுத்தி தான் "கம்யூனிசம் எத்தனை கொடுமையானது" என்று போதிக்க வேண்டியிருப்பது அவலமானது. உண்மையான கம்யூனிஸ்டுகளும் களையெடுப்பு நடவடிக்கைகளில் பாதிக்கப் பட்டு சித்திரவதைகளை அனுபவித்துள்ளனர். அவர்கள் உருவாக்கிய அரசு இயந்திரத்திற்கு அவர்களும் பலியானார்கள். இருப்பினும் அவர்கள் சாகும் வரை கம்யூனிஸ்டுகளாக இருந்தனர். அந்தத் தகவல்களும் மேற்குறிப்பிட்ட இரண்டு மியூசியங்களிலும் உள்ளன.

இலங்கையில் ஈழப்போர் காலத்தில் தமிழ் அரசியல் கைதிகளுக்கு நடந்த சித்திரவதைகள் பற்றிக் கேள்விப் பட்டவர்களுக்கு, இவை ஒன்றும் புதினமாகத் தெரியாது. இந்த ஒப்பீட்டை விரும்பாதவர்கள் ஒரு நொண்டிச் சாட்டுடன் வருவார்கள். இலங்கையில் நடந்த சித்திரவதைகளுக்கு காரணம் அங்கு நிலவிய போர்ச் சூழல். அப்படியானால் அல்பேனியாவிலும் போர் நடந்து கொண்டிருந்ததா?

பனிப்போர் என்ற சொற்பதத்தை பலர் தவறாகப் புரிந்து கொள்கிறார்கள். பனிப்போர் என்பது ஒரு நிழல் யுத்தம். ஆயுதங்களுடன் மோதிக் கொள்வதில்லை என்பது உண்மை தான். அதற்குப் பதிலாக வேறு வழிமுறைகளை கையாளுகிறார்கள். எதிர்ப்புரட்சியாளர்கள் என்று சந்தேகப் படுவோரை உளவுபார்த்து, தேவைப்பட்டால் கைது செய்து சிறையில் அடைப்பது, தேசத்துரோகக் குற்றவாளிகளை சுட்டுக் கொல்வது, இவையெல்லாம் போர் இன்னும் முடியவில்லை என்பதற்கான அறிகுறிகள் தான். மாற்றுக்கருத்தாளர்கள் மட்டுமல்லாது, ஒரே கட்சிக்குள் துரோகிகளாக மாறியவர்கள் என்றும் பலர் இதற்குப் பலியாகலாம்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் வரலாற்றை, அதன் செயற்பாடுகளை அறிந்தவர்களுக்கு இதெல்லாம் புதினம் அல்ல. ஈழத்தில் மிகவும் கட்டுக்கோப்பான இயக்கம் என்று பெயரெடுத்த புலிகள் என்ன காரணம் சொல்லி தமது வன்முறைகளை நியாயப் படுத்தினார்கள் என்பது எல்லோருக்கும் தெரியும். அதை சரியென ஏற்றுக் கொள்ளவும் ஒரு மக்கட் பிரிவினர் இருந்தனர். அதையே தான் அன்று அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சியும் செய்துள்ளது. அதிகாரத்தை தக்க வைப்பதற்காக அல்லது ஒரு பொதுவான குறிக்கோளின் பேரில் துரோகிகள் ஒழிப்பு, களையெடுப்பு போன்றவை நடந்துள்ளன. இரண்டு இயக்கங்களுக்கும் இடையில் கொள்கை வேறுபாடு இருக்கலாம். ஆனால், யதார்த்த அரசியல் இப்படித் தான் உள்ளது என்பது மாக்கியவல்லியின் அரசறிவியல் நூல்களை வாசித்தவர்களுக்கு புரியும்.

பங்கார்ட் மியூசியத்தின் இன்னொரு அறையில் எல்லைக் காவல்துறையின் செயற்பாடுகள் விளக்கப் பட்டுள்ளன. ஆயிரக்கணக்கனோர் நாட்டை விட்டு ஓடியதாகவும் அவர்களில் பலர் எல்லையில் வைத்து சுட்டுக் கொல்லப் பட்டதாகவும் எழுதப் பட்டுள்ளது. அதற்கென விசேட பயிற்சி அளிக்கப் பட்ட நாய்களுடன் ரோந்து செல்லும் படையினர் பற்றிய தகவல்களும் படங்களுடன் விபரமாக குறிப்பிடப் பட்டுள்ளன.

அல்பேனியர்கள் இப்போதும் அகதிகளாக வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். (நெதர்லாந்தில் மட்டும் கடந்த சில வருடங்களாக நூற்றுக் கணக்கான அல்பேனிய அகதிகள் பொருளாதார பிரச்சினையை காரணமாகக் காட்டி அகதித் தஞ்சம் கோரினார்கள். ஆனால் திருப்பி அனுப்பப் பட்டனர்.) தொண்ணூறுகளில் அல்பேனியாவின் எல்லைகள் திறக்கப் பட்ட பின்னர், ஆயிரக்கணக்கானோர் கப்பல்களில் ஏறி இத்தாலிக்கு சென்றனர். ஆனால் இத்தாலி அரசு அவர்களை திருப்பி அனுப்பியது. அது மட்டுமல்ல, இத்தாலி கடற்படைக் கப்பல்கள் அகதிகளை ஏற்றிச் சென்ற படகுகளை முட்டி மோதிய சம்பவங்களில் பல நூறு அல்பேனியர்கள் கொல்லப் பட்டனர்.

அல்பேனியா முதலாளித்துவ நாடாக மாறிய பின்னர், அயலில் உள்ள மேற்கத்திய முதலாளித்துவ நாடுகள் அவர்களை இருகரம் நீட்டி வரவேற்கவில்லை. மாறாக வேண்டாவிருந்தாளிகளாக பாரபட்சம் காட்டின. அயல் நாடுகளான இத்தாலியும், கிறீஸும் அங்கு வேலை தேடிப் பிழைக்க வந்த அல்பேனியர்களை தீண்டத்தகாதவர்கள் போன்று நடத்தின. திருடர்கள், பாலியல் தொழிலாளர்கள், குற்றவாளிகளை அதிகமாகக் கொண்ட சமூகம் என்ற ஒரே காரணத்தை கூறி ஒதுக்கி வைத்தனர். எந்தவித பொருளாதார நடவடிக்கையும் இல்லாமல் முடங்கிக் கிடக்கும் அல்பேனியாவின் மலைப் பகுதிக் கிராமங்களில் வறுமை தாண்டவமாடுகிறது. அவர்களுக்குத் தெரிந்த ஒரே வழி மேற்கைரோப்பிய நாடுகளுக்கு வேலை தேடி புலம்பெயர்வது தான்.

நான் அல்பேனியாவுக்கு பயணம் செய்வதற்கு முன்னர், நெதர்லாந்தில் என்னோடு சேர்ந்து வேலை செய்த அல்பேனிய தொழிலாளியிடம் என்வர் ஹோஷா பற்றிய கருத்தைக் கேட்டேன். அதற்கு அவர் எதிர்மறையாக பதிலளித்தார். அந்தக் காலத்தில் என்வர் ஹோஷா தனது குடும்பத்திற்கு மட்டும் சொத்துக்களை சேர்த்து பணக்காரனாக இருந்ததாகவும், சாதாரண மக்களுக்கு பணம் சேர்க்கும் சுதந்திரம் இருக்கவில்லை என்றும் குறைப்பட்டார். ஆனால் அது உண்மையல்ல என்பது அங்கு சென்ற பின்னர் தான் தெரிய வந்தது. அநேகமாக சோஷலிச, முதலாளித்துவ பொருளாதார உற்பத்திக்கு இடையிலான வித்தியாசத்தை புரிந்து கொள்ள முடியாத சாமானியர்கள் இது போன்ற கதைகள் மூலம் எளிமைப் படுத்த முனைகின்றனர். 


என்வர் ஹோஷாவை எதிர்ப்பவர்கள் அவரை ஒரு சர்வாதிகாரி என்று தூற்றினாலும், தனிப்பட்ட முறையில் சொத்துக்களை சேர்த்ததாக ஒரு குற்றச்சாட்டை முன் வைக்கவில்லை. ஆதாரமாக, Blendi Fevziu என்ற அல்பேனிய ஊடகவியலாளர் எழுதிய "Enver Hoxha The iron fist of Albania" என்ற நூலில் கூட அப்படி எந்தத் தகவலும் இல்லை. அது முழுக்க முழுக்க ஹோஷா எதிர்ப்பு பார்வையில் எழுதப்பட்ட நூல். திரானாவில் புளொக்கு (Blloku) என்றொரு பகுதி உள்ளது. அங்கு தான் அன்றைய கம்யூனிச அரசுத் தலைவர்கள் குடும்பத்தோடு வாழ்ந்து வந்தனர். அந்தக் குடியிருப்புகள் இப்போதும் அங்கே உள்ளன. இன்றைய உயர் மத்தியதர வர்க்கத்தினர் வசிக்கும் குடியிருப்புகள் அவற்றை விட வசதியானவை. (தற்போது அங்கே நவீன வசதிகள் கொண்ட புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன.) 

சுருக்கமாக, "சர்வாதிகாரி" ஹோஷாவின் குடும்பம் ஓர் ஆடம்பர மாளிகையில் வசிக்கவில்லை. மிக எளிமையாக, சாதாரணமான ஒரு நடுத்தர வர்க்கத்தினர் வசிக்கும் ஒரு வீட்டில் வாழ்ந்தது. என்வர் ஹோஷா சேர்த்து வைத்த சொத்துக்கள் எல்லாம் புத்தகங்கள் தான். அவர் தனது நூலகத்தில் சேர்த்து வைத்த புத்தகங்கள் மட்டுமல்லாது, அவர் எழுதிய அரசியல் கோட்பாட்டு நூல்களும் நிறைய உள்ளன. தன்வரலாறு கூறும் நினைவுக்குறிப்புகள் பத்துக்கும் குறையாத நூல்களாக வெளிவந்தததுடன், பல்வேறு உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன. 


(தொடரும்) 

இந்தத் தொடரின் முன்னைய பகுதிகளை வாசிப்பதற்கு: 
1. "அச்சச்சோ கம்யூனிச பூதம்!' - அல்பேனியா பயணக்கதை 
2. ஐரோப்பாவின் நாஸ்திக - முஸ்லிம் நாடு! அல்பேனியா பயணக்கதை - 2

No comments: