Sunday, August 14, 2016

இலங்கையில் இந்து - பௌத்த பாசிஸ்டுகளின் இன நல்லிணக்க கூட்டமைப்பு!

இது கனவல்ல, நிஜம். அகண்ட பாரதக் கனவுகளோடு, ஈழத்தை நோக்கி இதோ வருகிறார்கள் இந்து பாசிஸ்டுகள்! ஈழத்து ஆதிக்க சாதி வெறியர்களும், போலித் தமிழ்த் தேசியர்களும் அவர்களுக்கு அடிபணிகிறார்கள். தீவிர புலி விசுவாசிகளும், சிங்களப் பேரினவாதிகளும் ஒன்று சேர்கிறார்கள். ஒன்றிணைந்த இந்து - பௌத்த இலங்கைக்காக, இந்துத்துவா கொள்கையை பின்பற்ற உறுதி பூணுகின்றனர். அவர்களது  முதலாவது எதிரிகள் முஸ்லிம்கள். இரண்டாவது எதிரிகள் இடதுசாரிகள். மூன்றாவது எதிரிகள் தாழ்த்தப் பட்ட சாதியினர். 

இது ஒரு காலத்திலும் நடக்கவே முடியாத விடயம் அல்ல. இன்று எம் கண்முன்னால் அது தான் நடக்கிறது. (இன/மத) அடிப்படைவாத சித்தாந்தமும், வலதுசாரிய சார்புத்தன்மையும், அவர்களை ஒன்று சேர்க்க போதுமானது. கடந்த பத்து வருட காலமாக, இந்திய இந்த்துவா சக்திகள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன. எல்லாம் மிக இரகசியமாக நடந்து கொண்டிருந்தது. ஆனால், எதிர்பாராமல் நடந்த விபத்து ஒன்று அவர்களின் திட்டத்தை அம்பலப் படுத்தி விட்டது.

சில நேரம் எதிர்பாராமல் நடக்கும் விபத்துக்கள் இரகசியங்களை வெளிப்படுத்துவதுண்டு. துருக்கியில் ஒரு தடவை சாலையில் வாகன விபத்தொன்று நடந்தது. அந்தக் காரில் பயணம் செய்த அனைவரும் விபத்தில் கொல்லப் பட்டு விட்டனர். அவர்கள் யாரென்ற விபரம் வெளியான நேரம், அந்தத் தகவல் துருக்கியை மட்டுமல்ல ஐரோப்பா முழுவதையும் உலுக்கியது. மாபியா குழுத் தலைவர்கள், ஆளும் கட்சித் தலைவர்கள், இவர்களுடன் ஓர் அழகு ராணியும் அந்த விபத்தில் சிக்கி இறந்தனர். அரசியல்வாதிகளுக்கும், மாபியாக் குழுக்களும் இடையிலான இரகசிய உறவை அது பகிரங்கப் படுத்தியது.

சில தினங்களுக்கு முன்னர், கொழும்பு நகரில் வேலாயுதம் முரளிதரன் என்பவர் மாரடைப்பால் மரணமடைந்தார். அந்தத் திடீர் மரணம் பல இரகசியங்களை அம்பலப் படுத்தியது. காலமான முரளிதரன், "இந்து - பௌத்த ஒற்றுமையை கட்டியெழுப்ப பாடுபட்டவர்" என்று புகழும் அஞ்சலிச் சுவரொட்டிகள் கொழும்பு நகரெங்கும் ஒட்டப் பட்டிருந்தன. 

இலங்கையில் முக்கியமான அரசியல் பிரமுகர்கள், அவரது மரணச் சடங்கில் கலந்து கொண்டனர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவரும், மற்றும் ஒரு தமிழ் அமைச்சரும் அரசு தரப்பில் கலந்து கொண்டனர். அதை விட பொது பல சேனா தலைவர் ஞானசார தேரோவும் மரணச் சடங்கிற்கு வந்திருந்தார். இவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்த சக்தி எது? இந்துத்துவா சித்தாந்தம்.

பொதுபல சேனா பற்றி நான் இங்கே அதிக விளக்கம் கொடுக்கத் தேவையில்லை. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சர்வாதிகார ஆட்சிக் காலத்தில், இஸ்லாமிய சிறுபான்மையினருக்கு எதிராக கலவரங்களை தூண்டி விடும் நோக்கில் உருவாக்கப் பட்ட பாஸிச, பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் தான் பொது பல சேனா. சிங்கள - பௌத்த பேரினவாத சித்தாந்தம் இலங்கையின் ஆட்சியாளர்களினால் நடைமுறைப் படுத்தப் பட்டாலும், இவ்வளவு காலமும் அது நிறுவன மயப் படுத்தப் படாமல் இருந்தது.

அதாவது, இரண்டு பெரும்பான்மைக் கட்சிகளும் தமது அரசியல் சுயநலத்திற்காக பௌத்த மதத்தை பயன்படுத்தி வந்தன. அதற்காக சக்திவாய்ந்த பெரிய மடாலயங்களுக்கு அள்ளிக் கொடுத்தார்கள். ஆன்மீகத் தலைவர்களும் இவர்களை ஆட்டிப் படைத்தார்கள். ஆனால், இலங்கையில் உருவான, அல்கைதா பாணியிலான பௌத்த மத அடிப்படைவாத இயக்கம் பொதுபல சேனா தான். நடைமுறை அரசியலில் தாக்கம் செலுத்தும் சக்திவாய்ந்த ஆன்மீக மதகுருக்களுக்கு போட்டியாக மகிந்த ராஜபக்சவினால் உருவாக்கப் பட்டது.

சமாதான பேச்சுவார்த்தை காலத்தில், அரசுக்கும், புலிகளுக்கும் நடுவில் அனுசரணையாளராக செயற்பட்ட நோர்வே, இலங்கையின் இனப்பிரச்சினையை ஆழமாக ஆராய்ந்தது. "வெளியுலகில் தமிழர்களின் பிரச்சினை தெரிந்த அளவிற்கு, சிங்களவர்களின் பிரச்சினைகள் தெரிந்திருக்கவில்லை." என்று சில நோர்வீஜிய பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர். சமாதான பேச்சுவார்த்தை காலத்தில் நோர்வே புலிகளுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. அவர்களது அத்துமீறல்களையும் கண்டுகொள்ளாமல் விட்டிருந்தது. ஏராளமான பணம் கொடுத்ததுடன் ஆயுதங்கள் தருவதாகவும் ஆசை காட்டினார்கள். ஆனால், போருக்குத் திரும்புவதில் புலிகள் பிடிவாதமாக இருந்த படியால், நோர்வேயின் "தீர்வுத் திட்டம்" கைவிடப் பட்டது.

போர் முடிந்து சில வருடங்களின் பின்னர், நோர்வே வேறொரு அணுகுமுறையை கடைப்பிடிக்கத் தொடங்கியது. இம்முறை அது அரசுக்கு நெருக்கமாக நடந்து கொண்டது. ஒரு பக்கம் முன்னாள் அனுசரணையாளர்கள் ராஜபக்சே ஆட்சியின் கொடுங்கோன்மையை விமர்சித்துக் கொண்டிருந்தார்கள். மறுபக்கம் ராஜபக்சே உருவாக்கிய பொதுபல சேனாவை ஒரு NGO போன்று அங்கீகரித்து நிதியுதவி செய்தனர்.

2011 ம் ஆண்டு, ஒஸ்லோ நகரில் ஓர் இரகசியமான மகாநாடு நடந்தது. பொதுபல சேனாவின் முக்கிய தலைவர்கள் வந்திருந்தனர். நோர்வேயில் இயங்கும் புலி ஆதரவு அமைப்புகளை சேர்ந்த சிலரும் கலந்து கொண்டனர். நோர்வீஜிய அரச பிரதிநிதிகள் அங்கும் அனுசரணையாளராக இருந்தனர். மகாநாட்டில் விவாதிக்கப் பட்ட விடயங்களை வைத்து அதை யாரும் தவறாக கணிப்பிட முடியாது. அதாவது, இலங்கையில் இன நல்லிணக்கம், சமாதானம், அபிவிருத்தி போன்றவற்றை பற்றி கலந்துரையாடப் பட்டதாக சொல்லப் பட்டது.

இங்கே எழும் கேள்வி என்னவெனில், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் முகவராக செயற்படும் நோர்வேக்கும், இலங்கையின் பௌத்த பாஸிச இயக்கமான பொது பல சேனாவுக்கும் இடையிலான உறவு என்ன? அவர்களது எதிர்கால திட்டங்கள் எவை? அதற்கு விடை கண்டுபிடிப்பதற்கு நாங்கள் இன்னும் சில வருடங்கள் காத்திருக்க வேண்டி இருக்கும். இலங்கையின் சிங்கள ஊடகங்கள் சில, நோர்வேக்கும், பொதுபல சேனாவுக்கும் இடையிலான தொடர்புகளை அம்பலப் படுத்தின. நோர்வீஜிய அரசு அதை மறுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. (பார்க்க: Statement regarding the alleged connection between Bodu Bala Sena and Norway; http://www.norway.lk/News_and_events/News/Statement-regarding-the-alleged-connection-between-Bodu-Bala-Sena-and-Norway/#.V7Ajx_mLSUk)

இந்தியாவின் இந்துத்துவா சக்திகள், நோர்வே மாதிரி ஒளிந்து மறைந்து வேலை செய்ய வேண்டிய அவசியமில்லை. அவர்கள் நேரடியாகவே களத்தில் இறங்கி செயற்பட்டு வருகினர். இந்தியாவில் தீய வழியில் பிரபலமான இரண்டு இந்து மத அடிப்படைவாத அமைப்புகள் உள்ளன. ராஷ்ட்ரிய சுயம் சேவாசங் (RSS) பெரும்பாலும் இந்தியாவிற்குள் மட்டும் கவனம் செலுத்தி வருகின்றது. ஆனால், விஸ்வ ஹிந்து பரிஷத் (VHP) இலங்கையிலும் கிளை பரப்பியுள்ளது.

சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில் VHP அமைப்பாளர்கள் வடக்கு, கிழக்கிற்கு சென்று சில ஈழத் தமிழ் இந்து ஆதரவாளர்களை வென்றெடுத்தனர். அவர்கள் புலிகளையும் சந்தித்துப் பேசி, இந்துத்துவா கொள்கையை ஏற்றுக்கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்தனர். ஆனால், புலிகள் அந்த வேண்டுகோளை உதாசீனப் படுத்தி விட்டனர். அநேகமாக, தமக்கு பக்கபலமாக இருந்த கத்தோலிக்க திருச்சபையை பகைக்க விரும்பாமை காரணமாக இருந்திருக்கலாம்.

இந்திய இந்துத்துவா பாசிஸ்டுகள் ஈழத்தமிழ் இந்துக்கள் மத்தியில் காலூன்ற முடிந்தது எப்படி? அது ஒன்றும் கடினமான விடயம் அல்ல. ஈழப்போர் தொடங்கிய காலத்தில், "நாம் இந்துக்கள் என்பதால் இந்தியா படையனுப்பி தமிழீழம் பிரித்துத் தரும்" என்று அப்பாவித்தனமாக நம்பியோர் பலருண்டு. பாமரர்கள் மட்டுமல்ல படித்தவர்களும் அப்படி நம்பினார்கள். போர் முடிந்த பின்னர், ஈழப் போராட்டத்தை இந்து மயமாக்கும் முயற்சியில் சில அரசியல்வாதிகள் இறங்கினார்கள்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் ஒரு இந்து அடிப்படைவாதி. அவர் இந்தியா சென்று RSS, VHP ஆகிய மதவாத அமைப்புகளை சந்தித்துப் பேசினார். ஈழப்போரில் இந்துக்கள் எந்தளவு பாதிக்கப் பட்டுள்ளனர். எத்தனை இந்துக் கோயில்கள் அழிக்கப் பட்டன என்றெல்லாம் எடுத்துரைத்ததாக அவரே சொல்லி இருக்கிறார். இருப்பினும், ஈழத்தில் இந்துத்துவா கொள்கைகளை பரப்புவதற்கு சிவாஜிலிங்கமும் ஒத்துழைத்தாரா என்பதற்கு ஆதாரம் இல்லை.

ஈழத் தமிழ் இந்துக்களை இந்துத்துவா நலன்களுக்கு சாதகமாக வென்றெடுப்பதற்கு இலகுவாக, முஸ்லிம்களுடனான இனப்பிரச்சினை உள்ளது. இன்றைக்கும் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் செய்யும் இந்துத் தமிழர்கள் பலருண்டு. சமூகவலைத் தளங்களில் அவர்களது கருத்துக்களை காணலாம். 

அண்மையில் காத்தான்குடியில் புலிகள் முஸ்லிம்களை படுகொலை செய்த சம்பவம் பற்றி ஒருவர் முகநூலில் எழுதி இருந்தார். அந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் காத்தான்குடிப் படுகொலைகள் பற்றி நான்கு வரிகள் எழுதி, அதற்கு ஏற்கனவே புலிகள் மன்னிப்புக் கேட்டு விட்டார்கள் என்று முடித்துக் கொள்கிறார். ஆனால், அதைத் தொடர்ந்து, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது நடத்திய படுகொலைகளை பட்டியலிட்டு விலாவாரியாக எழுதி இருந்தார்.

அதாவது, "சிங்களவர்கள் மாதிரி, முஸ்லிம்களும் தமிழர்களை பூண்டோடு அழிப்பதற்கு கங்கணம் கட்டிக் கொண்டிருப்பவர்கள். அதற்கு எதிர்வினையாக நடத்தப் பட்டது தான் காத்தான்குடிப் படுகொலை." என்பது அவர் முன்வைக்கும் நியாயம். இந்தக் கட்டுரை முகநூலில் நூற்றுக் கணக்கில் பகிரப் பட்டு, நூற்றுக் கணக்கில் லைக் செய்யப் பட்டது. 

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது மாதிரி, இது ஓர் உதாரணம் மட்டுமே. சிங்கள இனவாதிகளும், முஸ்லிம் இனவாதிகளும் இதே பாணியில் தான் வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள். இனவாதத்தை தூண்டி விட்டு மக்களை பிரித்து விடுவதன் மூலம் தான் தமது மேலாதிக்கத்தை திணிக்கலாம் என்பது அவர்களுக்குத் தெரியும்.

இலங்கையில் மூவின மக்கள் மத்தியிலும் இனவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் தம்மின மக்களின் இழப்புகளுக்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பார்கள். எதிரி இனத்தின் இழப்புகளை உதாசீனப் படுத்துவார்கள். இது உலகம் முழுவதும் உள்ள இனவாதிகளின் வழமையான அரசியல் தான். எல்லா சமூகங்களிலும் உள்ள இனவாதிகளின் எண்ணிக்கை ஒரு சதவீதம் கூட இல்லை. ஆனால், அவர்களால் பேரழிவைத் தரும் நாசங்களை ஏற்படுத்த முடியும். 

இந்துத் தமிழர்கள் மத்தியில் உள்ள தமிழ் இனவாதிகள், எவ்வாறு இந்துத்துவாவாதிகளின் வலைக்குள் சிக்கிக் கொள்கிறார்கள் என்பதைத் தான் இங்கே எடுத்துக் காட்டினேன். இந்தியாவிலும் இந்துத்துவா வாதிகளின் எதிரி முஸ்லிம்கள். இலங்கையில் பொது பல சேனாவின் எதிரியும் முஸ்லிம்கள். ஈழத்தில் தமிழினவாதிகளின் எதிரியும் முஸ்லிம்கள். ஆகவே "பொது எதிரிக்கு" எதிராக ஒன்றிணைவது நடைமுறைச் சாத்தியம் இல்லாததா?

யுத்தம் முடிந்த பின்னர், வடக்கில் தமிழ்ப் பிரதேசங்களில் புதிதாக புத்தர் சிலைகளும், பௌத்த விகாரைகளும் கட்டப் பட்டுள்ளன. ஆரம்பத்தில் இராணுவ முகாம்களில் இருந்த பௌத்த மத படையினர் வழிபடுவதற்கு சிறிய அளவில் கட்டப் பட்டன. போர் முடிந்த பின்னர் நகர மத்தியில் பெரியளவில் கட்டப் பட்டு வருகின்றன. தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும், ஊடகவியலாளர்களும் அதற்கு எதிரான தமது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அவர்களது கண்டனங்களில் "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் பௌத்த மத சின்னங்கள்" பற்றி சிலாகிக்கின்றனர்.

மலையகப் பகுதியில் வாழும் தமிழர்கள் இந்திய வம்சாவளியினர் என்பதால், அங்கு மிக நீண்ட காலமாகவே இந்திய அரசின் தலையீடு அதிகமாக இருந்து வந்துள்ளது. ரம்பொட எனுமிடத்தில் மலையுச்சியில் ஐந்து மீட்டர் உயரமான, பிரமாண்டமான அனுமார் சிலை ஒன்றும், அதனருகில் கோயிலும் கட்டப் பட்டுள்ளது. இலங்கையில் இந்துத்துவாவாதிகள் ஊடுருவதற்கு அதுவே அடிகோலியது எனலாம். அனுமார் சிலை கட்டப் பட்டதில் இருந்து இந்த்துவா நடவடிக்கைகளும் அதிகரித்து வந்துள்ளன. அதற்கு சிறிலங்கா அரசும் அனுமதிக்கின்றது. அனுமார் சிலை கட்டுவோர், அதை ஆதரிப்போர், புத்தர் சிலைகளை எதிர்க்கும் தார்மீகப் பலத்தை இழந்து விடுகின்றனர்.

இலங்கை அரசின் மத அரசியல் இவ்வாறு தான் இயங்கி வருகின்றது. அரசு இலங்கையை ஒரு பௌத்த சிங்கள நாடு என்று அறிவித்து விட்டு, பௌத்த மடாலயங்களுக்கு நிதி அள்ளிக் கொடுக்கும். அதே நேரம், இந்து ஆலயங்களுக்கும் நிதி வழங்கும். அதற்காக இந்து அறநிலைத் துறை என்றொரு தனியான அமைச்சு இயங்குகின்றது.

புலிகளால் துரோகியாக சபிக்கப் பட்ட டக்லஸ் தேவானந்தா குறிப்பிட்ட காலம் இந்து அறநிலைத்துறை அமைச்சராக இருந்தார். புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் இடிந்த கோயில்களை புனரமைப்பதற்கும் டக்லஸ் நிதி வழங்கிய வேடிக்கையும் நடந்துள்ளது. (சில சமயம் புலிகள் தலையிட்டு தடுத்த சம்பவங்களும் உண்டு.)

விஸ்வ ஹிந்து பரிஷத் போன்ற இந்த்துவா பாஸிச அமைப்புகள், "இந்துக்களின் பூமியில் அத்துமீறும் புத்தர் சிலைகளை" எதிர்க்க முன்வருவார்களா? அப்படி யாராவது எதிர்பார்த்தால் ஏமாந்து போவார்கள். இந்தியாவில் புத்த சமயத்தை இந்து மதத்தின் ஒரு பிரிவாகப் பார்க்கும் போக்கு உள்ளது. புத்தர் விஷ்ணுவின் பத்து அவதாரங்களில் ஒன்று என்று கூறும் புராணக் கதையும் பிரபலமாக உள்ளது. வட இந்தியாவில் அம்பேத்கார் தலைமையில் மகர் சாதியினர் பௌத்த மதத்தை தழுவிக் கொண்டனர். இன்று இந்துத்துவாவாதிகள் அம்பேத்காரை தூக்கிப் பிடிக்கிறார்கள்.

அண்மையில் யாழ்ப்பாணத்தில் உள்ள இந்திய தூதுவராலயம், அம்பேத்காரின் நூறாண்டு நினைவு தினத்தை விமரிசையாக கொண்டாடியது. அதற்கு ஈழத் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். குறிப்பாக ஆதிக்க சாதியினர், இதன் மூலம் தமிழகத்து தலித் அரசியல் யாழ்ப்பாணத்திற்கு வந்து விடும் என்று அஞ்சினார்கள். 

தமிழ் நாட்டில் தலித்திய இயக்கங்கள் அம்பேத்காரை போற்றுவது ஒரு பக்கம் இருக்கட்டும். இந்திய அரசு அம்பேத்காருக்கு முக்கியத்துவம் கொடுக்க என்ன காரணம் என்று சிந்தித்தார்களா? ஆதிக்க சாதி பார்ப்பனர்களினால் நிர்வகிக்கப் படும் இந்திய அரசு தலித்தியத்தை அங்கீகரிக்கும் என எதிர்பார்ப்பது அறியாமை.

ஈழத் தமிழ் மக்களின் அரசியல் போக்கை தீர்மானிப்பதில் மேலாண்மை பெற்றுள்ள தமிழ்த் தேசியவாதிகளில் ஒரு பொதுவான தன்மையைக் காணலாம். ஈழத் தமிழர்கள் மத்தியில் சாதிப்பிரச்சினை, வர்க்கப் பிரச்சினை எழும் போதெல்லாம் திடீரென "நடுநிலைவாதி" வேஷம் போடத் தொடங்கி விடுவார்கள். தீக்கோழி மாதிரி மண்ணுக்குள் தலையை புதைத்து வைத்துக் கொள்வார்கள். தமிழ் தேசியத்தை உடைப்பதற்கு சிங்களத்தின் சதி என்று ஒப்பாரி வைப்பார்கள். 


இப்போது அதற்கு என்ன என்று கேட்கிறீர்களா? ஈழத்தில் இந்துத்துவா மத அடிப்படைவாதிகள் வளர்வதற்கு சாதகமான சமூகக் காலநிலையும் அது தான். "வர்க்கப் பிரச்சினை பற்றி பேசக் கூடாது. சாதிப் பிரச்சினை பற்றிப் பேசக் கூடாது. இடதுசாரியம் தீங்கானது. தலித்தியம் நஞ்சானது....."

இப்படியே அது கூடாது, இது கூடாது என்று, எந்தவொரு முற்போக்கான அரசியல் சிந்தனையும் ஈழத் தமிழரை நெருங்க விடாமல் தடுப்புச் சுவர் எழுப்பி வருகின்றனர். அதே நேரம், இந்து மத அடிப்படைவாதம், தமிழ் இனவாதம் போன்ற பிற்போக்கான அரசியல் கோலோச்சுவதற்கு எந்தத் தடையும் விதிக்க மாட்டார்கள்.


இலங்கையில் உள்ள இனப்பிரச்சினை இரண்டு மொழி பேசும் இனங்களுக்கு இடையிலான பிரச்சினையாக மட்டும் புரிந்து கொள்ளப் படுகின்றது. அங்கு மதப் பிரச்சினை இல்லையென்று பொதுவாக நம்பப் படுகின்றது. அதைப் பற்றி யாரும் பேசுவதில்லை என்பதால் மதம் ஒரு பிரச்சினை அல்ல என்ற முடிவுக்கு வருவதும் தவறானது. சிங்கள - தமிழ் தேசியவாதிகள் பிரச்சாரம் செய்வதற்கு மாறாக, மொழிப்பிரச்சினை கடந்த நூறாண்டுக்குள் உருவான புதிய தோற்றப் பாடு. அதற்கு முன்னர், சிங்கள, தமிழ் மேட்டுக்குடியினர் சகோதர பாசத்துடன் நெருக்கமாக வாழ்ந்து வந்தனர்.

தமிழ் தேசியத்தின் பிதாமகர்களில் ஒருவராக மதிக்கப் படும் சேர் பொன் இராமநாதன் ஒரு சாதிவெறியராக இருந்தார். அது மட்டுமல்லாது, முஸ்லிம்களுக்கு எதிரான மத வெறுப்புணர்வும் கொண்டிருந்தார். 1915 ம் ஆண்டு, சிங்கள பௌத்தர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் மூண்டது. அப்போதிருந்த பிரிட்டிஷ் காலனிய அரசு கலவரத்திற்கு காரணமான சிங்கள அரசியல் தலைவர்களை சிறையிலடைத்தது. அவர்களில் சிலர் பிற்கால வரலாற்றில் தமிழருக்கு எதிரான இனவாத அரசியலை முன்னெடுக்கவிருந்தனர்.

தமிழ்த் தேசியத் தலைவர் சேர் பொன் இராமநாதன் என்ன செய்தார்? "பிசாசின் வழக்கறிஞர்" போன்று நடந்து கொண்டார். பிரிட்டனுக்கு சென்று வழக்காடி தனது வாதத் திறமையால் சிங்கள இனவாதத் தலைவர்களுக்கு விடுதலை வாங்கித் தந்தார். தாயகம் திரும்பிய இராமநாதனை சிங்களவர்கள் பல்லக்கில் காவிச் சென்று நன்றி தெரிவித்தனர். சேர் பொன் இராமநாதனுக்கு சிங்களவர் வைத்த சிலை இன்றைக்கும் காலி முகத் திடலில் உள்ளது.

இன்றைய தமிழ்த் தேசியவாதிகளின் கொள்கைப் படி, சேர். பொன் இராமநாதனுக்கு துரோகி முத்திரை குத்தியிருக்க வேண்டும். ஆனால், இன்றும் கூட "துரோகி" இராமநாதனை போற்றிப் புகழும் ஈழத் தமிழ்த் தேசியவாதிகள், எந்தவொரு தருணத்திலும் அவரது இனத்துரோகம் பற்றிப் பேசுவதில்லை. அதற்குக் காரணம் என்ன? முஸ்லிம்களுக்கு எதிரான நிலைப்பாடு "இனத் துரோகத்திற்குள் அடங்காது!" இந்த விடயத்தில் சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும் ஒன்று சேர்ந்து விடுவார்கள். இனம் இனத்தோடு தானே சேரும்? அதிலென்ன ஆச்சரியம்?

ஆகவே, இலங்கையில் தமிழ் இந்துக்களும், சிங்கள பௌத்தர்களும், எந்தக் காலத்திலும் ஒன்று சேர மாட்டார்கள் என்று யாரும் வாதாட முன்வர வேண்டாம். "இனிமேல் சிங்களவரும், தமிழரும் சேர்ந்து வாழமுடியாது" என்று சொல்வதெல்லாம் பசப்பு வார்த்தைகள். சிங்கள - தமிழ் மேட்டுக்குடியினரும், சிங்கள - தமிழ் வலதுசாரிகளும், கொள்கை வேறுபாடின்றி ஒன்று சேரக் கூடியவர்கள். அதுவே இந்துத்துவா சக்திகள் வளர்வதற்கு உரமாக அமைய முடியும்.

இதற்கெல்லாம் ஆதாரம் எங்கே என்று கேட்டு நச்சரிக்காதீர்கள். RSS, VHP  ஆகிய மதவாத அமைப்புகள், ஏற்கனவே சில ஈழத் தமிழ் கைக்கூலிகளுக்கு நிதி கொடுத்து சமூக வலைத் தளங்களில் இயங்க வைத்துள்ளன. முகநூலில் பல்வேறு போலிப் பெயர்களில் வந்து தாக்குதல் நடத்தும் கருத்துக் கந்தசாமிகள் பலருண்டு. இவர்கள் சிலநேரம் "புலிகளின் தீவிர விசுவாசிகள்" போன்று நடிப்பதால் யாரும் சந்தேகப் படுவதில்லை. ஆனால், அவர்களது குறிக்கோள் எப்போதும் இனவாதம், மதவாதத்தை தூண்டி விடுவதாக இருக்கும். உள்ளூர் முஸ்லிம்களுக்கு எதிராக மட்டுமல்லாது, உலக முஸ்லிம்களுக்கு எதிராகவும் கொந்தளிப்பார்கள்.

இந்து மத அடிப்படைவாதம் பேசும் ஈழத் தமிழரின் முகநூல் பக்கங்கள் தனியாக ஆரம்பிக்கப் பட்டுள்ளன. அதற்கும், விஸ்வ ஹிந்து பரிஷத்தின் முகநூல் பக்கத்திற்கும் தொடர்பிருப்பதை காணலாம். இவர்கள் தமக்குள் ஒரே மாதிரியான தகவல்களை பகிர்ந்து கொள்கிறார்கள். அண்மையில் கொழும்பு நகரில் பௌத்த - இந்து ஒற்றுமையை கட்டி எழுப்புவதற்கான மகாநாடு ஒன்று இடம்பெற்றது. அதில் உரையாற்றிய அறிஞர்கள், "இலங்கையில் எவ்வாறு பௌத்தர்களும், இந்துக்களும் ஆயிரமாயிரம் வருடங்களாக சகோதரர்களாக வாழ்ந்தார்கள்" என்று போதித்தார்கள்.

இலங்கையில் புத்தர் சிலைகள் கட்டுவதற்கும் இந்துக்கள் உதவியுள்ளனராம். ஆகவே, இனிமேல் யாராவது "இந்து பூமியில் அத்துமீறும்" புத்தர் சிலைகளை கண்டால், அதை மத நல்லிணக்க அடையாளமாக கருத வேண்டும் என்று போதிக்கிறார்கள். புத்தர் சிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் தமிழ்த் தேசியவாதிகள் இதற்கு என்ன சொல்லப் போகிறார்கள்? ஒன்றும் சொல்ல மாட்டார்கள். வழமை போல கள்ள மௌனம் சாதிப்பார்கள்.

ஜெர்மனியில் நாஸி கட்சியினர் வளர்ந்து வந்த பொழுது, ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் ஜெர்மன் மக்களுக்கு பின்வருமாறு எச்சரிக்கை விடுத்தார்: "நமது எதிரி வேறு யாருமல்ல. அவன் எமக்குள்ளே இருக்கிறான்." தமிழ் மக்களின் உண்மையான எதிரிகள் சிங்களவர்களோ, முஸ்லிம்களோ அல்ல. உலகம் முழுவதும் மக்களின் உண்மையான எதிரிகள் பாசிஸ்டுகள் தான். ஒரே மொழி பேசினாலும், ஒரே மதத்தை பின்பற்றினாலும், பாசிஸ்டுகள் எப்போதும் மக்கள் விரோதிகள் தான்.


மேலதிக விபரங்களுக்கு கீழே உள்ள ஆதாரங்களை பார்க்கவும்:


No comments: