Monday, August 29, 2016

காலனிய இலங்கையில் விற்கப் பட்ட தமிழ்/சிங்கள அடிமைகள் : ஒரு வரலாறு

கிழக்கிந்திய கம்பெனி (VOC) ஆவணத்தில் இருந்து :  
"இலங்கைத் தீவை காலனிப் படுத்தி, நிலங்களை அபகரித்த ஐரோப்பியர்கள், அங்கு இந்திய, இந்தோனேசிய அடிமைகளை கொண்டு வந்து குடியேற்றி வேலை வாங்கினார்கள்."
"டச்சு கிழக்கிந்தியக் கம்பெனியில் கூலிப் படையாக சேர்ந்திருந்த வீரர்கள் கூட, இலங்கையில் பெருமளவு நிலங்களுக்கு சொந்தக் காரர்களாக இருந்தனர். அவர்கள் போர்த்துகீசிய காலனியாதிக்கவாதிகளின் நிர்வாக முறையை பின்பற்றினார்கள்."


"1660 ம் ஆண்டளவில், தென்னிந்தியாவில் பெரும் பஞ்சம் நிலவியது. அங்கிருந்த அடிமைச் சந்தையில் பிள்ளைகளை மிகக் குறைந்த விலைக்கு வாங்க முடிந்தது. பள்ளிக்காட்டில் இருந்த கிழக்கிந்தியக் கம்பனி அலுவலகம் ஊடாக வாங்கப்பட்ட 5000 அடிமைகள் இலங்கைக்கு கொண்டு செல்லப் பட்டனர்."

"அப்போது தான் இறக்குமதியான பட்டுப் புழுக்களை கொண்டு புடவைத் தொழிற்சாலைகள் தொடங்கப் பட்டன. அதில் வேலை செய்வதற்கு தென்னிந்திய கைவினைஞர்கள் தேவைப் பட்டனர். ஏனையோர் நெல் வயல்களில் வேலை செய்யப் பணிக்கப் பட்டனர்."

Radermacher என்ற கிழக்கிந்தியக் கம்பெனி (VOC) அலுவலகர் எழுதிய குறிப்பொன்றில் இருந்து:
 "1753 ம் ஆண்டு கொச்சி துறைமுகத்தில் நங்கூரமிட்டிருந்த கப்பலில் ஏற்றுவதற்கு 161 அடிமைகள் வாங்கப் பட்டனர். ஒவ்வொரு கப்பல் பணியாளருக்கும் எட்டு அடிமைகளை கொண்டு செல்ல அனுமதிக்கப் பட்டிருந்தது.

(தென்னிந்தியாவில் இருந்த) ஐரோப்பிய பிரஜைகளும், "சுதந்திரமான" கிறிஸ்தவ சுதேசிகளும் அடிமைகளை கொண்டு வந்து விற்றனர். அங்கிருந்த கிறிஸ்தவ மதபோதகர்களும் அடிமை வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தனர்."

அமெரிக்க கண்டங்களுக்கு பிடித்துச் செல்லப் பட்ட ஆப்பிரிக்க அடிமைகள் பற்றி அறியாதவர் யாரும் இல்லை. ஆப்பிரிக்காவிலிருந்து அமெரிக்கா வரையிலான, "அட்லான்டிக் அடிமை வாணிபம்" பற்றி ஏராளமான நூல்கள் எழுதப் பட்டுள்ளன. நிறையத் திரைப்படங்கள், ஆவணப் படங்களும் வெளிவந்துள்ளன. ஆனால், ஆசிய அடிமை வாணிபம் பற்றி எந்தத் தகவலும் இல்லை. எந்த வரலாற்று ஆசிரியரும் அது குறித்து அக்கறை காட்டுவதில்லை. இந்த நிலைமை ஏன் ஏற்பட்டது?

சில முக்கியமான காரணங்களை ஊகிக்க முடிகின்றது:
1. கிழக்கிந்தியக் கம்பெனி தனது "வணிக இரகசியங்கள்" எதையும் வெளியே விடாமல் மிகவும் இரகசியமாக வைத்திருந்தது. இப்போதும் இன்னும் வெளிவராத பல இரகசியங்கள் டென் ஹாக் (தி ஹேக்) ஆவணக் காப்பகத்தில் மறைந்திருக்கின்றன. அங்கு ஆய்வு செய்யும் கல்வியாளர்கள் கூட, ஆசிய அடிமை வாணிபம் பற்றி அக்கறை காட்டவில்லை.
2. அமெரிக்கக் கண்டத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இடையில் அடிக்கடி கப்பல் போக்குவரத்து நடந்து கொண்டிருந்தது. அமெரிக்காவில் கொள்ளையடிக்கப் பட்ட செல்வம் முழுவதும் ஐரோப்பாவை நோக்கி சென்று கொண்டிருந்தது.
3. ஆசிய அடிமை வாணிபம் ஆசிய காலனிகளுக்கு இடையில் மட்டுமே நடந்து கொண்டிருந்தது. அதாவது, மடகஸ்கார் - இந்தியா - இலங்கை - இந்தோனேசியா, இந்த நாடுகளுக்கு இடையில் தான் அடிமைகள் பரிமாறப் பட்டனர்.

அடிமை வியாபாரம் எல்லா இடங்களிலும் ஒரே மாதிரி நடக்கவில்லை. இந்தியாவில் வங்காள விரிகுடாவை அண்மித்த பகுதிகளில், மன்னர்களுக்கிடையில் நடந்த போர்களில் பிடிபட்ட போர்க் கைதிகள் ஐரோப்பியரால் அடிமைகளாக வாங்கப் பட்டனர். மடகஸ்காரில் உள்நாட்டு மன்னர்கள் விற்ற அடிமைகளை, அரேபிய வணிகர்களும், ஐரோப்பிய வணிகர்களும் வாங்கினார்கள். அந்நாட்டு குடிமக்கள் பல்வேறு காரணங்களால் அடிமைகளானவர்கள். உதாரணத்திற்கு, கடன் திருப்பிச் செலுத்த முடியாதவர்கள், அல்லது குற்றங்களுக்காக தண்டிக்கப் பட்டவர்கள்.

பருவ வயதில் இருந்த சிறுவர், சிறுமிகள், குறைந்த விலையில் வாங்கப் பட்டனர். அவர்களை இலங்கை, இந்தோனேசியாவில் அதிக விலைக்கு விற்றனர். கேரளாவில் கொச்சி நகரிலும், இலங்கையில் கொழும்பு நகரிலும் அடிமைகளை விற்கும் சந்தைகள் இருந்துள்ளன. பெருமளவு இந்திய அடிமைகளை விநியோகம் செய்யும் இடமாக கொச்சி துறைமுகம் இருந்துள்ளது.

முன்பின் அறிந்திராத இடங்களில் குடியேற்றப் பட்ட அடிமைகள், பரிச்சயமற்ற வேற்று மொழி பேசும் மக்களுக்கு இடையில் வாழ வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. ஆசிய காலனிகளில், அடிமை முறை இருந்திருக்கலாம் என்று ஏற்றுக் கொள்பவர்களும், அவர்கள் வீட்டு வேலையாட்களாக மட்டுமே இருந்தனர் என நினைத்துக் கொள்கிறார்கள். இது ஒரு பகுதி உண்மை மட்டுமே.

வீட்டுப் பணியாட்களாக மட்டுமல்லாது, உற்பத்தித் துறையிலும் அடிமைகள் ஈடுபடுத்தப் பட்டனர். வாசனைத் திரவியங்களுக்கான தோட்டங்கள், நெல் வயல்கள், கரும்புத் தோட்டங்களில் அடிமை உழைப்பாளிகள் வேலை செய்தனர். அது மட்டுமல்லாது, கப்பல்கள் கட்டுதல், திருத்துதல் போன்ற தொழில்களிலும் ஈடுபடுத்தப் பட்டனர். துறைமுகங்களில் கப்பல்களில் பொருட்களை ஏற்றி இறக்கும் வேலை செய்தவர்களும் அடிமைகள் தான்.

வீட்டு வேலை செய்த அடிமைகள், சமையலறையில் அல்லது களஞ்சிய அறையில் படுத்துறங்கினார்கள். கிழக்கிந்தியக் கம்பெனிக்கு வேலை செய்த அடிமைகளுக்கு தனியான இடம் ஒதுக்கப் பட்டிருந்தது. சுமாத்திரா தீவில் சுரங்கத் தொழிலில் ஈடுபடுத்தப் பட்ட அடிமைகள் முகாம்களில் தங்க வைக்கப் பட்டனர். ஐநூறுக்கும் அதிகமான ஆண், பெண் அடிமைகள் தனித் தனியாக பிரிக்கப் பட்ட முகாம்களுக்குள் வாழ்ந்தனர்.

இன்றைக்கும் பலர் அறியாத உண்மை என்னவென்றால், ஒரு காலத்தில் ஆசியாவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கை, அமெரிக்காவில் இருந்த அடிமைகளின் எண்ணிக்கையை விட அதிகமாக இருந்தது! உதாரணத்திற்கு, 1700 ம் ஆண்டளவில், VOC நிர்வகித்த ஆசியக் காலனிகளில் 68000 அடிமைகள் இருந்தனர். அதே VOC நிர்வகித்த அமெரிக்க காலனிகளில் 23500 அடிமைகள் இருந்தனர். 1775 ம் ஆண்டுக்குப் பின்னர், அமெரிக்கக் கண்டத்தில் பெருந்தோட்டங்கள் உருவாகின. அதற்குப் பிறகு தான் அங்கு அடிமைகளின் எண்ணிக்கை அதிகரித்தது.

இதிலே குறிப்பிடப் பட வேண்டிய முக்கியமான விடயம் ஒன்றுள்ளது. அமெரிக்காவில் நடந்ததைப் போன்று, ஆசியாவில் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டும் அடிமைகளை குவிக்கவில்லை. அடிமை வாணிபத்தில் ஈடுபட்ட கப்பல் போக்குவரத்து குறிப்பிட்ட ஒரு புள்ளியில் இருந்து இன்னொரு புள்ளியை நோக்கிச் செல்லவில்லை. ஒரு நாட்டில் இருந்த அடிமைகளை இன்னொரு நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள். அதே மாதிரி, அங்கிருந்த அடிமைகளை மற்ற நாட்டில் கொண்டு சென்று விட்டார்கள்.

இதைக் கொஞ்சம் விரிவாக சொல்வதென்றால், இந்தோனேசிய அடிமைகள் இலங்கைக்கு கொண்டு வரப் பட்டனர். அதே மாதிரி, இலங்கை அடிமைகள் இந்தோனேசியா கொண்டு செல்லப் பட்டனர். தென்னாபிரிக்கா, இந்தியா, இலங்கை, இந்தோனேசியா ஆகிய நாடுகளுக்கு இடையில் இவ்வாறு அடிமைகள் பரிமாறப் பட்டனர். இதனால் அந்நாடுகளில் குடிசனப் பரம்பலில் மாற்றம் ஏற்பட்டிருக்கலாம்.

இன்றைய இந்தோனேசியர்களில், சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலந்திருக்கலாம். அதே மாதிரி, இன்றைய இலங்கையில் உள்ள சிங்களவர், தமிழர்களில், இந்தோனேசியர்கள் கலந்திருக்கலாம். இலங்கையில் சிங்களவர்களும், தமிழர்களும், "ஆயிரமாயிரம் ஆண்டு கால தூய்மை பேணும் வேறு பட்ட இனங்கள்" என்பது ஒரு கற்பனை. இனவாதிகள் மட்டுமே அப்படியான கட்டுக்கதைகளை பரப்பி வருகின்றனர். இந்தோனேசியர்கள், இந்தியத் தமிழர்கள், மலையாளிகள், ஆப்பிரிக்கர்கள், போன்ற பல்வேறு இனத்தவர்களையும் சேர்த்துக் கொண்ட கலப்பினம் தான், இன்றுள்ள சிங்களவரும், தமிழரும்! இதை நம்ப மறுப்பவர்கள் தாராளமாக மரபணு சோதனை செய்து பார்க்கலாம்.

(இலங்கையில் வெளியாகும் "புதுவிதி" வார இதழில் பிரசுரிக்கப் பட்டது.)No comments: