Friday, July 08, 2016

இறுதிப்போர்: ஐ.எஸ். அழிப்புப் போருக்கு தயாராகும் இருபது உலக நாடுகள்!

ஐ.எஸ். கட்டுப்பாட்டுப் பிரதேசமான "நடைமுறை இஸ்லாமிய தேசம்" சுருங்கிக் கொண்டிருக்கிறது. அது தற்போது இறுதிப்போருக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. 

ஒரு காலத்தில் ஐ.எஸ். இயக்கத்தை வளர்த்து விட்ட அமெரிக்கா, சவூதி அரேபியா, துருக்கி போன்ற நாடுகள் அதைக் கைவிட்டு விட்டன. மேற்கத்திய நாடுகள், அரபு நாடுகள், துருக்கி, ரஷ்யா, ஈரான் ஆகிய எதிரும் புதிருமான நாடுகள் ஒன்று திரண்டு ஐ.எஸ். அழிப்புப் போரை ஆரம்பித்துள்ளன.

இறுதிப்போரின் முடிவில் முள்ளிவாய்க்கால் பாணியிலான படுகொலைகள் நடக்க வாய்ப்புண்டு. அதாவது, ஐ.எஸ். இயக்கத் தலைவர்கள், போராளிகள், ஆதரவாளர்கள், பொதுமக்கள், ஒரு குறிப்பிட்ட இடத்தினுள் சுற்றி வளைக்கப் படலாம். கனரக ஆயுதங்களை பயன்படுத்தி அவர்கள் கொன்றொழிக்கப் படலாம். வரலாறு திரும்புகிறது. ஈழப்போரில் ஏற்பட்ட முள்ளிவாய்க்கால் முடிவு இம்முறை சிரியாவில் ஏற்படவுள்ளது.

ஐ.எஸ். தற்போது நாலாபுறமும் எதிரிப் படைகளால் தாக்கப் பட்டு வருகின்றது. ஈராக்கிய படைகள் முன்பு ஐ.எஸ். வசமிருந்த பல இடங்களை விடுவித்துள்ளது. மொசுல் மட்டும் தான் எஞ்சியுள்ள பெரிய நகரம் ஆகும். சிரியாவில் "இஸ்லாமிய தேசத்தின் தலைநகரம்" என்று கருதப்படும் ராக்கா நகரம் தாக்குதலுக்குள்ளாகி வருகின்றது. வடக்கே YPG எனும் குர்திய விடுதலைப் படையினர் பல கிராமங்களை கைப்பற்றி விட்டனர். தற்போது அவர்கள் ராக்கா நகரில் இருந்து ஐம்பது கி.மீ. தூரத்தில் நிற்கின்றனர்.

இதற்கிடையே, ரஷ்ய போர்விமானங்கள் ராக்கா நகர் மீது குண்டு வீசி வருகின்றன. சிரியா இராணுவம் தெற்குப் பக்கமாக படைநகர்வுகளை மேற்கொண்டு வருகின்றது. சிரியா இராணுவம் முன்னேறி வந்து ராக்காவை கைப்பற்றி விட்டால், குர்தியரின் பிரதேசத்தையும் கைப்பற்ற நினைக்கலாம். ஏற்கனவே சிரிய அரசு தேசத்தை ஒன்றிணைப்பது பற்றிப் பேசி வருகின்றது. அதனால், சிரியா இராணுவம் வருவதற்கு முன்னர், YPG படைகள் கைப்பற்றி விடத் துடிக்கின்றன.

ஆசாத் அரசுக்கு எதிரான அரபு மொழி பேசும் சிறிய கிளர்ச்சிக் குழுக்கள், குர்தியர்களுடன் பொது உடன்பாட்டுக்கு வந்துள்ளன. "சிரிய ஜனநாயகக் கூட்டணி" என்று அதற்குப் பெயரிட்டு, அமெரிக்காவும் உதவி வருகின்றது. அமெரிக்க இராணுவ உயர் அதிகாரி ஒருவரும், இரகசியமாக சிரியாவுக்கு சென்று ஜனநாயகக் கூட்டணியினரை சந்தித்துப் பேசியுள்ளனர். சிரியா வான் பரப்பில் பறக்கும் அமெரிக்க விமானங்கள் அவர்களுக்கு ஆயுதப் பொதிகளை போட்டுள்ளன.

புலிகளுக்கு கிளிநொச்சி நகரம் எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்ததோ, அதே மாதிரி ஐ.எஸ்.சிற்கு ராக்கா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ராக்காவை இழந்தால் அது ஐ.எஸ். போராளிகள், ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை உண்டாக்கும். "இனி எல்லாம் முடிந்து விட்டது" என்ற சோர்வு மனப்பான்மையை ஏற்படுத்தும். அதானால், என்ன விலை கொடுத்தாவது ராக்கா நகரை பாதுகாப்பதற்கு ஐ.எஸ். முயன்று வருகின்றது.

இதற்கிடையே, எதிர்காலத்தில் சிரியா மீது படையெடுப்பதற்கு, துருக்கியும், சவூதி அரேபியாவும் தயாராகி வருகின்றன. அதற்கு முன்னேற்பாடாக சவூதி அரேபியா, சிரியா எல்லைக்கு அருகில் உள்ள துருக்கியின் Incirlik இராணுவ தளத்திற்கு, நான்கு F-16 போர் விமானங்களை அனுப்பவுள்ளது. துருக்கி-சவூதி படையெடுப்புக்கு தடையாக ரஷ்யா உள்ளது. ஒரு தடவை சிரியாவுக்குள் சென்று விட்டால், ரஷ்யாவுடன் மோதல் நிலைமை தோன்றுவதை தவிர்க்க முடியாது.

ஒரு காலத்தில், துருக்கியும், சவூதி அரேபியாவும் தான், ISIS இயக்கத்திற்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி வளர்த்து விட்டன. அவை எதற்காக ஐ.எஸ். அழிப்புப் போரில் இறங்க வேண்டும்? "அரசியலில் நண்பனும் இல்லை, பகைவனும் இல்லை. நிலையான நலன்கள் மட்டுமே உள்ளன." எண்பதுகளில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்களும், நிதியும் வழங்கி உதவிய இந்தியா, 2009 ம் ஆண்டு புலிகளை அழிக்கும் போரில் இறங்கவில்லையா? அதே கதை தான் சிரியாவிலும் நடக்கிறது.

சர்வதேச அரசியல் சூழ்நிலை தமக்கு எதிராகத் திரும்பி இருப்பதும், முன்னாள் நண்பர்கள் பகைவர்களானதும் ஐ.எஸ். உணராமல் இல்லை. அதனால் தான் ஐ.எஸ். தற்போது துருக்கி, சவூதி அரேபியாவிலும் வெடி குண்டுத் தாக்குதல்களை நடத்தியுள்ளது. 

துருக்கியில் அங்காரா, இஸ்தான்புல் நகரங்களில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று துருக்கி அரசு அறிவித்துள்ளது. அதே மாதிரி, சவூதி அரேபியாவில் மெதீனா, ஜெத்தாவில் நடந்த தாக்குதல்களுக்கு ஐ.எஸ். காரணம் என்று சவூதி அரசு அறிவித்துள்ளது.

துருக்கியில் பொருளாதார இலக்கான விமான நிலையத்தில் நடத்திய தாக்குதலில் நூறு பேரளவில் கொல்லப் பட்டனர். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் துருக்கி முஸ்லிம்கள். சவூதி அரேபியாவில் இஸ்லாமிய மதத்தவரின் புனித ஸ்தலமான மெதீனாவில் குண்டு வைத்ததன் மூலம், ஐ.எஸ். உலக இஸ்லாமியரின் வெறுப்புக்கு ஆளானது.

ஐ.எஸ். இஸ்லாமிய புனித ஸ்தலங்களை தாக்குவது இதுவே முதல் தடவையல்ல. சிரியா, ஈராக்கில் இருந்த ஆயிரம் வருட கால வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மசூதிகளை குண்டு வைத்துத் தகர்த்துள்ளனர். அப்போது அதனை ஆதரித்து வந்த இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள், மெதீனா தாக்குதலின் பின்னர் தான் விழித்துக் கொண்டனர்.

"ஐ.எஸ். எதற்காக இஸ்லாமிய‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" இந்த‌க் கேள்வியே அறியாமை கார‌ண‌மாக‌ எழுகின்ற‌து. "புலிக‌ள் எத‌ற்காக த‌மிழ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" "ஜேவிபி எத‌ற்காக‌ சிங்க‌ள‌வ‌ர்க‌ளை கொல்ல‌ வேண்டும்?" ஏனெனில் இது அர‌சிய‌ல் அதிகார‌த்திற்கான‌ போர்.

ISIS தொட‌ங்கிய‌ ஆர‌ம்ப‌ கால‌த்தில் ஒரே குறிக்கோளுட‌ன் போரிட்ட‌ ச‌க‌ இய‌க்க‌ங்க‌ளை அழித்து அதிகார‌த்தை கைப்ப‌ற்றிய‌து. அப்போது ஆயிர‌க்க‌ண‌க்கான‌ முஸ்லிம்க‌ள் ச‌கோத‌ர‌ யுத்த‌த்தில் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

அது ம‌ட்டும‌ல்லாது அவ‌ர்க‌ளது "de facto இஸ்லாமிய‌ தேச‌ம்" என்ற‌ க‌ட்டுப்பாட்டுப் பிர‌தேச‌த்தினுள் வாழ்ந்த‌ ஷியா முஸ்லிம்க‌ள் ப‌டுகொலை செய்ய‌ப் ப‌ட்ட‌ன‌ர். அதை விட‌ "துரோகிக‌ள்" என்றும் ப‌ல‌ இஸ்லாமிய‌ர்க‌ள், சில‌ நேர‌ம் இய‌க்க‌ உறுப்பின‌ர்க‌ளும் கொல்ல‌ப் ப‌ட்ட‌ன‌ர்.

ஒரு கால‌த்தில், ஐ.எஸ். இய‌க்க‌ம் சிரியா, ஈராக்கில் ஷியா, குர்து முஸ்லிம்க‌ளை கொன்று குவித்துக் கொண்டிருந்த‌து. அது ப‌ற்றி நான் ப‌ல‌ த‌ட‌வைக‌ள் எழுதி இருக்கிறேன். அப்போதெல்லாம், சில‌ இஸ்லாமிய‌ ந‌ண்ப‌ர்க‌ள், ச‌வூதி- வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாளர்க‌ள், என்னை க‌டுமையாக‌ எதிர்த்தார்க‌ள். "விடுத‌லைப் போராட்ட‌த்தின்" பெய‌ரால் நியாய‌ப் ப‌டுத்தி, ஐ.எஸ். ஸுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கினார்க‌ள்.

த‌ற்போது வ‌ள‌ர்த்த‌ க‌டா மார்பில் பாய்ந்த‌ மாதிரி, ஐ.எஸ். த‌ன‌து எஜ‌மானின் நாடான‌ ச‌வூதி அரேபியாவில் தாக்குத‌ல் ந‌ட‌த்தியுள்ள‌து. ஒரு கால‌த்தில் தார்மீக‌ ஆத‌ர‌வு வ‌ழ‌ங்கிய‌வ‌ர்க‌ளுக்கு திடீரென‌ ஞான‌ம் பிற‌ந்து "ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம்" என்கிறார்க‌ள். அந்த‌ உண்மை இப்போது தானா தெரிந்த‌து?

சிரியா, ஈராக்கில் ஐ.எஸ். பெரும‌ள‌வு இட‌ங்க‌ளை இழ‌ந்து வ‌ருகின்ற‌து. தோல்விய‌டைந்து வ‌ரும் இய‌க்க‌த்தால் இனிப் பிர‌யோச‌ன‌ம் இல்லையென்று கொடையாளிக‌ள் கைவிட்டு விட்டார்க‌ள். புலிக‌ள் ராஜீவ் காந்திக்கு குண்டு வைத்த‌ மாதிரி, ஐ.எஸ். மெதீனாவில் குண்டு வைத்துள்ள‌து.

ப‌ல‌ வ‌ருட‌ கால‌மாக‌ புலிக‌ளுக்கு ஆத‌ர‌வாக‌ வ‌க்கால‌த்து வாங்கி வ‌ந்த‌ இந்திய‌ மேலாதிக்க‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள், ராஜீவ் கொலைக்கு பின்ன‌ர், "புலிக‌ள் ஒரு த‌மிழ‌ர் விரோத‌ இய‌க்க‌ம்" என்றார்க‌ள். அதே நிலைமை தான் இன்று ச‌வூதி அரேபியா - ஐ. எஸ். விட‌ய‌த்திலும் ஏற்ப‌ட்டுள்ள‌து. வ‌ல்ல‌ர‌சுக‌ள் ஆடும் ஆட்ட‌த்தில் அப்பாவி ம‌க்க‌ள் ப‌லியாகிறார்க‌ள்.

அது ச‌ரி. ஐ.எஸ். ஒரு இஸ்லாமிய‌ விரோத‌ இய‌க்க‌ம் என்ப‌தை ஒத்துக் கொள்ளும் ச‌வூதி வ‌ஹாபிச‌ ஆத‌ர‌வாள‌ர்க‌ள் சுய‌ விம‌ர்ச‌ன‌ம் செய்ய‌த் த‌யாராக‌ இருக்கிறார்க‌ளா? இப்போதாவ‌து ஷியாக்க‌ளையும், சோஷ‌லிச‌ குர்திய‌ர்க‌ளையும் முஸ்லிம்க‌ளாக‌ ஏற்றுக் கொள்கிறார்க‌ளா?

இஸ்லாமிய‌ ச‌மூக‌ங்க‌ளுக்கு இடையிலான‌ ப‌கை முர‌ண்பாடுக‌ள் க‌ளைய‌ப் ப‌ட்டு, ப‌ர‌ஸ்பர‌ புரிந்துண‌ர்வு ஏற்ப‌ட வேண்டும். ‌ இல்லாவிட்டால், எதிர்கால‌த்தில் இன்னொரு ஐ.எஸ். உருவாவ‌தை யாராலும் த‌டுக்க‌ முடியாது.

No comments: