Tuesday, July 12, 2016

முகநூல் தணிக்கை செய்த காஷ்மீர் பற்றிய பதிவுகாஷ்மீர் விடுதலைப் போராளி புர்ஹான் வானி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஜோஷ்வா ஐசக் ஆசாத் (Joshua Isaac Azadhttps://www.facebook.com/joshuaisaac.tamizhmaravan) எனும் தமிழ்நாட்டில் வாழும் தலித்- கிறிஸ்தவ அரசியல் ஆர்வலர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். சில மணிநேரங்களுக்குள் அந்தப் பதிவு நீக்கப் பட்டது. மீண்டும் அதைப் பதிவு செய்த போதிலும், பேஸ்புக் திரும்பவும் நீக்கி விட்டது. அதே பதிவை நானும் எனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்து கொண்டேன். அதுவும் சில மணி நேரங்களுக்குள் நீக்கப் பட்டது.

சமூக வலைத்தளங்களில் உள்ள கருத்துச் சுதந்திரம் ஒரு கண்துடைப்பு நாடகம். யார் எதைப் பேசினால், தமது அதிகாரத்திற்கு ஆபத்தில்லை என்பதை ஆட்சியாளர்கள் தீர்மானித்து வைத்திருக்கிறார்கள். தமிழர்கள் விடுதலைப் புலிகளை புகழ்ந்து, அல்லது தமிழீழ விடுதலையை ஆதரித்து எப்படியும் எழுதலாம். அதே மாதிரி, முஸ்லிம்கள் காஷ்மீர் போராளிகளை புகழ்ந்து, காஷ்மீர் விடுதலையை ஆதரித்து எழுதலாம். அதிகார வர்க்கம் அவற்றைக் கண்டுகொள்ளப் போவதில்லை. அதையெல்லாம் ஊக்குவித்துக் கொண்டிருக்கும்.

ஆனால், இந்த விதிமுறைகளுக்கு மாறாக, சிங்களவர்கள் தமிழீழ விடுதலையை ஆதரிப்பதும், தமிழர்கள் காஷ்மீர் விடுதலையை ஆதரிப்பதும், ஆட்சியாளர்களுக்கு ஆபத்தான விடயம். அப்படியான சமூக மாற்றம், அதிகார வர்க்கத்தை ஆட்டம் காண வைத்து விடும். ஆகையினால், தமது ஆட்சிக்குட்பட்ட மக்களை, இனம், மதம் என்ற குறுகிய மனப்பான்மைக்குள் வைத்திருப்பதே அவர்களது நோக்கமாக உள்ளது.

******

பேஸ்புக் தணிக்கை செய்த  புர்ஹான் வானி பற்றிய பதிவு இது: 
(சிலநேரம் இதை புளொக்கரும் தடை செய்தால் ஆச்சரியப் பட எதுவும் இல்லை.)"புர்ஹான் வானி" காஷ்மீர் விடுதலைப் போராட்ட வீரன்

இந்திய அரசாலும், ராணுவத்தாலும், ஊடகங்களாலும் மிகப்பெரிய வெற்றியாக கொண்டாடப்பட்டு வருவது புர்ஹான் வானி என்னும் 21 வயது இளைஞனின் மரணமாகும். நமக்கெல்லாம் தீவிரவாத இயக்கமாக அறியப்பட்ட ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் இளம் தளபதிகளுள் ஒருவர் இவர். நேற்று நடைபெற்ற இந்திய ராணுவத்துடனான சண்டையில் தனது இரண்டு தோழர்களுடன் கொல்லப்பட்டுள்ளார். காஷ்மீர் மாநிலத்தில் தெற்கில் உள்ள புலவாமா மாவட்டத்தில் ட்ரால் நகரத்தில் வசிக்கும் அரசுப் பள்ளி தலைமையாசிரியர் முசாபர் வானியின் இரண்டாவது மகன் தான் புர்ஹான் வானி.

2008 மற்றும் 2010ஆம் ஆண்டுகளில் இந்தியாவின் ஒடுக்குமுறைக்கு எதிராக காஷ்மீரில் நடைபெற்ற எழுச்சி மிகுந்த போராட்டங்கள் காஷ்மீர் விடுதலை போராட்டத்துக்கு ஒரு புதிய பரிணாமத்தை கொடுத்தது. இதன் முக்கியத்துவம் என்னவென்றால், 1990களில் நடைபெற்ற வீரியமான ஆயுதம் தாங்கிய போராட்டத்தைப் பற்றியும், இந்திய ராணுவத்தால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்ட அப்பாவிகள், கூட்டு பாலியல் வன்முறைக்குள்ளாக்கப்பட்ட பெண்கள், நூற்றுக்கணக்கில் காணாமல் போக செய்யப்பட்டவர்கள் என நடந்த அட்டூழியங்களை நேரில் அனுபவிக்காத, வெறும் வரலாறாக மட்டுமே அறிந்திருந்த ஒரு புதிய இளம் தலைமுறை இந்த போராட்டத்தை முன்னெடுத்தது என்பது தான்.

2010ல் அவர்கள் கையாண்ட போராட்ட வடிவமும் பயன்படுத்திய ஆயுதமும் மிகவும் எளிமையான ஒன்று. அது இந்திய ராணுவத்தினர் மீது கற்களை வீசி எறிவது. மிகச் சாதாரணமாக தோன்றும் இந்த போராட்டத்தில் ராணுவத்தால் நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே அவர்களின் போராட்டத்தின் வீரியத்தை உணர்த்தும். இதில் பெரும்பான்மையானவர்கள் நன்கு படித்த, வசதியான குடும்பப் பின்னணி கொண்ட இளைஞர்கள். இந்திய அரசும் ராணுவமும் தாக்குபிடிக்க முடியாமல் விழித்தது. ஏதும் இல்லாதவன் போராடுவது வேறு ஆனால் எல்லாம் இருப்பவன் போராடுவதை அவர்களால் புரிந்துக்கொள்ள முடியவில்லை, தடுக்க முடியவில்லை.

இந்த மாற்றத்தைக் குறித்து சொல்லும் சமூக ஆய்வாளர்கள், 1990களில் காஷ்மீருக்கான விடுதலை/ 'ஆசாதி' என்னும் முழக்கம் முன்னிலை வகித்தது. ஆனால் இன்றைய தலைமுறைக்கு இந்திய ஆக்கிரமிப்பு அரசின் ஒடுக்குமுறையை எதிர்ப்பதும், அதன் ஒடுக்குமுறை கருவிகளான ராணுவம், போலீஸ், அரசு கட்டமைப்புகளை தாக்குவது தான் முதன்மையாகவும் அதற்கடுத்து தான் ஆசாதி வருகிறது என்கிறார்கள். இந்த புதிய விதையின் விளைச்சல் தான் புர்ஹான் வானி.

தனது 16ஆவது வயதில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு பத்து நாட்களுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறுகிறான் புர்ஹான். ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பில் சேர்கிறான். அவன் தலைக்கு இந்திய அரசு 10 லட்சம் ரூபாய் விலை வைக்கிறது. தன்னுடைய 21வது வயதில் அந்த அமைப்பின் முக்கிய தளபதியாக கொல்லப்படுகிறான். தீவிரவாதியாக 'நம்மால்' கொல்லப்பட்டவனின் இறுதிச் சடங்கு புகைப்படங்களை இணையத்தில் தேடி பாருங்கள். ஆயிரக்கணக்கில் மக்கள் கூடி அழுகிறார்கள், முழக்கமிடுகிறார்கள், மசூதிகளில் அவன் மரணத்திற்காக தொழுகை நடக்கிறது, காஷ்மீர் பள்ளத்தாக்கு முழுவதும் போராட்டம் வெடித்துள்ளது, கற்கள் வீசப்படுகிறது, ராணுவ முகாம்கள் தாக்கப்பட்டுள்ளது, இணைய சேவையை அரசு முடக்கியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் இதுவரை ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

ஏன் இத்தனை கொந்தளிப்பு? வெறும் 21 வயது 'தீவிரவாதி' கொல்லப்பட்டதற்காகவா இவ்வளவும் நடக்கிறது? அப்படி தன் வாழ்நாளில் அவன் என்ன தான் செய்துவிட்டான் அந்த மக்களுக்காக? அவன் பெரிதாக எதுவும் செய்யவில்லை. அம்மக்களுக்கு நம்பிக்கையை தந்துள்ளான். காஷ்மீரிகளின் போராட்டத்திற்கு புதிய முகம் கொடுத்துள்ளான்.

கடந்த ஐந்தாண்டுகளில் இணையத்தில் பரவலாக தொடர்பு வைத்திருந்தான் புர்ஹான். காஷ்மீர் பள்ளத்தாக்கின் காடுகளில் தன் தோழர்களுடன் பயிற்சி எடுப்பது, கிரிக்கெட் விளையாடுவது, குழுவினரோடு படம், பேட்டி என அதன் காணொளிகள், புகைப்படங்கள் இணையத்தில் வெளியிட்டான். மிக சமீபமான ஒரு வீடியோவில் ராணுவத்தையும் போலீசையும் எச்சரித்தும், அவர்களைக் குறித்து ஒரு பட்டியல் தயார் செய்ய வேண்டும் என்று பேசியுள்ளான். பேஸ்புக்கில் இப்போதும் அவை கிடைக்கிறது.

சர்வ வல்லமை பொருந்திய இந்திய அரசை எதிர்க்கும் துணிச்சலை மக்களிடம் ஏற்படுத்தினான். ராணுவத்தால் பெண்கள் பாதிக்கப்பட்டாலோ, போலியாக தீவிரவாதியென இளைஞர்கள் கொல்லப்பட்டாலோ ஆயிரக்கணக்கில் ஆண்களும் பெண்களும் வீதியில் இறங்குகிறார்கள். ராணுவத்துக்கும் போராளிகளுக்கும் இடையே சண்டை நடைபெறும் இடங்களில் போராளிகளை பாதுகாக்க பொதுமக்கள் ராணுவத்தின் மீது கல்லெறிகிறார்கள், ராணுவ வாகனங்களை சிறைபிடிக்கிறார்கள். இதற்குமுன்பு இது போல் மக்கள் செயல்பட்டதில்லை என்று அரசே சொல்கிறது. இப்போது 16லிருந்து 30 வயதுக்கும் குறைவாகவே உள்ள இளைஞர்கள் தான் போராட்ட பாதைக்கு அதிகம் வந்துள்ளனர்.

புர்ஹான் அவர்களுக்கு ஒரு ஆதர்ச நாயகனாகவே இருக்கிறான். ஆதிக்க எதிர்ப்பின் அடையாளமாக மாறியுள்ளான். நாட்டுப்புற கதைகளின் நாயகனைப் போல் மக்கள் அவனை கொண்டாடுகின்றனர். காஷ்மீர் பள்ளத்தாக்கில் அவனைப் பற்றிய சாகச கதைகள் ஏராளம் உண்டு. புர்ஹான் வானியின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு ஒரு பேட்டியில் சொல்கிறார் 'காஷ்மீர் போராளிகளின் சராசரி வாழ்க்கை அளவு 7 வருடம் தான். என் மகன் 6 வருடங்கள் வாழ்ந்துவிட்டான். விரைவில் அவன் இறந்தால், இந்த வீட்டிற்கு அவன் ஒரு ஷாஹித்தாக (உயிர் தியாகம் செய்தவர்) தான் திரும்ப வேண்டும்'. இன்று அவ்வாறே திரும்பியுள்ளான்.

காஷ்மீரில் ஊரடங்கு உத்தரவு, இணைய சேவை துண்டிப்பு, ஆங்காங்கே கலவரம் என்று சொல்லி வெறிச்சோடி கிடக்கும் சாலைகளையும், நடுவே மறித்து போடப்பட்டிருக்கும் தடுப்பு கம்பிகளையும் அடைக்கப்பட்ட கடைகளையும் அருகே துப்பாக்கி ஏந்தி நிற்கும் ராணுவத்தையும் தான் ஊடகங்கள் நமக்கு காட்டுகிறது. இந்திய அரசின் உத்தரவு அப்படி. ஆனால் தகவல் தொழில்நுட்பம் வளர்ந்து நிற்கும் காலகட்டத்தில் இன்னும் எவ்வளவு காலகட்டத்திற்கு இவர்கள் பொய் சொல்லி திரிவார்கள். நாமும் 'பாகிஸ்தான் தீவிரவாதிகள்' என்று நம்பிக் கொண்டிருப்போம்.

இணையத்தில் தேடுங்கள். படியுங்கள். கேளுங்கள். பாருங்கள். ஒரு பெரும் மக்கள் கூட்டம் நம் பெயரில், இந்தியாவின் பெயரில் ஒடுக்கப்பட்டு, நசுக்கப்பட்டு கிடக்கிறது. துப்பாக்கி முனையில், அமைதி என்ற பெயரில் வளர்ந்த ஒரு தலைமுறை அதை கேள்வியெழுப்ப தொடங்கியுள்ளது. ஒரு மகத்தான போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. நான் தொடங்கிவிட்டேன். 20 ஆண்டுகளுக்கும் மேலாக எனக்கு சொல்லித் தரப்பட்ட, திணிக்கப்பட்ட பொய் திரைகளை கிழித்து உண்மையை நோக்கிய என் பயணத்தை. மிகவும் கடனமாகத்தான் உள்ளது. ஆனாலும் தொடங்கிவிட்டேன். நீங்கள்?

ஷாஹித் புர்ஹான் வானிக்கு வீரவணக்கம்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

******

மேலே உள்ள பதிவு நீக்கப் பட்டது தொடர்பாக, தோழர் ஜோஷ்வா ஐசக் ஆசாத் அருமையான விளக்கம் கொடுத்திருக்கிறார்:

நாம் தோழர்கள்.

நான் கடந்த அஞ்சு வருசமா தலித்துகளின் படுகொலை, பாலியல் வன்கொடுமைகள், தீண்டாமை கொடுமைகள், சேரிகளின் மீதான தாக்குதல்கள், தலித்துகளின் மீதான போலீஸ் அடக்குமுறைகள் என மையநீரோட்ட ஊடகங்களால் மறைக்கப்பட்ட செய்திகளை புகைப்படங்கள், காணொளி ஆதரங்களோட பதிவு செஞ்சுன்னு வரேன். அப்பப்ப சாதி மதவெறி கூட்டம் கும்பலா வந்து வெத்து சவுண்ட் கொடுத்துட்டு போய்டுவாங்க. அந்த பதிவெல்லாம் அவர்களுக்கு சாதாரணமா இருந்துச்சு. இவன் ஒரு விடுதலைச் சிறுத்தை, ஒரு தலித் கிறிஸ்தவன், மத்தவங்கள போல இல்லாம இங்லீஸ்ல எழுதுறான் அவ்வளவு தான் வித்யாசம். அவங்க சிஸ்டத்துக்குள்ள நாம எந்த மாதிரியான எதிர்ப்ப காட்டணும், எதையெல்லாம் பேசணும், எப்ப பேசணும்னு கைடு போட்டு வெச்சிருக்கானோ அதன்படியே என் பதிவுகள் இருந்தது. என் மூலமா அந்த சிஸ்டத்துக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லனு ப்ரீயா உட்டுட்டாங்க.

இத்தன வருசத்துல நா போட்ட பதிவ ரிப்போர்ட் பண்ணி நீக்கியிருக்கும் முதல் பதிவு காஷ்மீரின் ஷாஹித் புர்ஹான் வானியோட பதிவு தான். பதிவு போட்ட கொஞ்ச நேரத்திலேயே இதுக்கு முன்ன எந்த தொடர்பும் இல்லாத காக்கி டவுசர்கள் குவியத் தொடங்குனாங்க. ஒருத்தன் எடுத்ததும் 'போடா பாகிஸ்தானுக்கு'னு சொல்லிட்டான். அவன்கிட்ட டேய் நா கிறிஸ்டியண்டா. என்ன எதாச்சு அமெரிக்கா ஆஸ்திரேலியா ஐரோப்பானு அனுப்பி வெச்சுடுங்கனு கோரிக்க வெச்சேன். சாய்ந்தரம் பதிவ தூக்கிட்டாங்க. தமிழ்நாட்டிலுருந்து விடுதலைச் சிறுத்தைகளில் இருக்கும் ஒரு தலித் கிறிஸ்தவன் காஷ்மீரின் புர்ஹான் வானிக்காக பேசுவான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்ங்க சிஸ்டத்தின் டிசைனும் அதை ஏற்கவில்லை. இவனை என்னவென்று திட்டலாம் என்று குழம்பியிருப்பார்கள். அப்போது தான் நான் ஒரு அச்சுறுத்தலாக மாறினேன்.

புர்ஹான் வானி பற்றி இஸ்லாமியர்கள் பேசுவது அவர்களுக்கு அச்சுறுத்தல் இல்லை. முதலில் காஷ்மீரிகளின் விடுதலை போராட்டத்தில் அவர்களின் மதம் ஒரு முக்கிய பங்கை வகித்தாலும் அதுவே முக்கிய பாத்திரமில்லை. ஒடுக்குமுறை - ஆக்கிரமிப்பு - ஆதிக்க எதிர்ப்பு தான் அவர்களின் போராட்டத்தில் முதலிடம் வகிக்கிறது என்பதை நாம் உணர்ந்துக் கொள்ள வேண்டும். ஒரு இஸ்லாமிய தோழனால் சொல்ல முடியாத நேர்மையான உண்மையான கருத்தை நாம் சொல்லலாம். அவர்களை ஆதரித்து பேச வேண்டும் என்றில்லை. முதலில் பேசத் தொடங்குவோம். அங்கு நடப்பதை தெரிந்துக் கொள்வோம். தலித்துகளுக்காக தலித்தல்லாதவர்கள் பேச வேண்டியது போன்று தான் இதுவும்.

வீட்டை விட்டு வெளியே வந்து தெருவில் நடப்பதற்கே உரிமை மறுக்கப்படுபவர்கள் நாம். வீட்டிற்கு வெளியே ஒவ்வொரு பத்து அடிக்கும் துப்பாக்கி முனையில் வாழ்பவர்கள் அவர்கள். நம்மையும் அவர்களையும் இணைக்குக் ஒரே உறவு - நாமிருவரும் ஒடுக்குமுறைக்கு எதிரானவர்கள் என்பதே.

இதைத் தான் புரட்சியாளன் சேகுவாரா அன்றே சொல்லிவிட்டார்.

~~~ ஜோஷ்வா ஐசக் ஆசாத் ~~~

No comments: