Tuesday, July 19, 2016

இனவாதப் பொறிக்குள் விழுந்த யாழ் பல்கலைக்கழக மாணவர்கள்

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் புதிய மாணவர்களை வரவேற்கும் கலாச்சார நிகழ்வு சம்பந்தமாக தமிழ், சிங்கள மாணவர்களுக்கிடையில் மோதல் நடந்துள்ளது.

யாழ் பல்கலைக் கழகத்தில் ஒவ்வொரு வருடமும் பெருமளவு சிங்கள மாணவர்களும் படிக்க வருகிறார்கள். வழமையாக நாதஸ்வரம், தவில், பரதநாட்டியம், என்று "தமிழ் கலாச்சார" முறையில் வரவேற்பு விழாக்கள் நடைபெறுவது வழக்கம். இந்த வருடம், "சிங்கள கலாச்சாரமான" கண்டிய நடனத்தையும் அதில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று சிங்கள மாணவர்கள் கேட்டுக் கொண்டார்கள். (பரத நாட்டியம் மட்டுமல்ல, கண்டிய நடனமும் இந்திய கலாச்சாரத் தாக்கத்தால் உருவானவை.)

பல்கலைக்கழக நிர்வாகம் அதற்கு சாதகமான பதில் கூறாத நிலையில், அனுமதி பெறப் படாமலே, சிங்கள மாணவர்களின் கண்டிய நடனக் காரர்களும் வரவேற்பு வைபவத்தில் கலந்து கொண்டனர். இதை தமிழ் மாணவர்கள் எதிர்த்த படியால், அங்கு இரண்டு தரப்பினருக்கும் இடையில் வாக்குவாதம் நடந்து கைகலப்பில் முடிந்துள்ளது. சில மணிநேரங்களுக்குள் நிலைமை விபரீதமாகவே, பல்கலைக்கழகம் மூடப் பட்டு, பாதுகாப்புப் படையினரால் சிங்கள மாணவர்கள் வெளியேற்றப் பட்டனர்.

இது தான் அங்கு நடந்த சம்பவம். இருந்த போதிலும், வெறும் வாய் மென்று கொண்டிடிருந்த இனவாதிகளுக்கு அவல் கிடைத்தது போலாகி விட்டது. சிங்களவர், தமிழர் இரண்டு தரப்பிலும் "தமது உறவுகளுக்கு" வக்காலத்து வாங்கும் வேலையில் இரு தரப்பு இனவாதிகளும் இறங்கினார்கள். உலகம் முழுவதும், உயர்கல்வி கற்கும் வாய்ப்புப் பெற்ற பல்கலைக்கழக மாணவர்கள் மத்தியில் இருந்து தான் அரச எதிர்ப்பு போராட்டங்கள் ஆரம்பிப்பது வழமை.

ஒரு சில மாதங்களுக்கு முன்னர் தான், நியூ டெல்லியில் ஜே.என்.யு. பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் இந்தியா முழுவதையும் உலுக்கியது. அயல்நாடான இலங்கையில் அது போன்ற போராட்டம் வெடிக்கக் கூடாது என்பதில் அரசு கவனமாக இருக்கும். அதைத் தடுப்பதற்கு ஒரே வழி, மாணவர்களை அரசியல் நீன்க்கம் செய்யப் பட்ட இனவெறி கொண்ட விலங்குகளாக வளர்க்க வேண்டும்.

உண்மையில் "படித்த முட்டாள்களை" உருவாக்குவது தான் அரசின் நோக்கமும். அதற்கு ஒத்துழைப்பதற்கு சிங்கள இனவாதிகள் மட்டுமல்ல, தமிழ் இனவாதிகளும் தயாராக இருக்கிறார்கள். அது சரி, இந்த விடயத்தில், தமிழ் மாணவர்கள் பக்கம் நியாயம் பேசும் தமிழ் அறிவுஜீவிகள், வேண்டுமென்றே சம்பவம் பற்றிப் பேசுவதை தவிர்க்கிறார்கள்.

அங்கு என்ன நடந்தது என்று ஆராயப் போனால், தமிழ் மாணவர்களிலும் பிழை இருப்பதை ஒத்துக் கொள்ள வேண்டியிருக்கும். அதனால், சம்பவத்தை பற்றிப் பேசாமல் மகாவம்ச கால புராணக் கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள். பல்கலைக்கழக மாணவர்களின் மோதலுக்கும், மகாவம்சத்திற்கும் என்ன சம்பந்தம் என்று யாரும் கேட்டு விடக் கூடாது. அவர்கள் சொல்வதை திருப்பிச் சொல்ல பழக வேண்டும்.

இதே நேரத்தில், சிங்களப் பகுதிகளில் என்ன பேசிக் கொள்கிறார்கள் என்று யாராவது விசாரித்தார்களா? அதெல்லாம் அவர்களுக்கு "தேவையில்லாத விடயம்." சம்பவம் தொடர்பாக சில சிங்கள இளைஞர்கள் சமூக வலைத்தளங்களில் எழுதியதை, இனவாத அமைச்சர் சம்பிக்க ரணவக்கையும் எதிரொலித்துள்ளார்.

அதாவது, "தமிழர்கள் மோசமான இனவெறியர்கள் என்பதை மீண்டும் ஒரு தடவை நிரூபித்து விட்டார்கள்" என்று சிங்களவர்கள் சொல்கிறார்கள். காலங்காலமாக சிங்கள மக்கள் மத்தியில் தமிழர்கள் பற்றிய விம்பம் இப்படித் தான் இருக்கிறது. தமிழர்களும் அப்படித் தான் சிங்களவர்கள் பற்றி நினைத்துக் கொள்கிறார்கள் என்பதை குறிப்பிடத் தேவையில்லை.

கடந்த பல தசாப்த காலமாக இலங்கையில் இது தான் நடந்து வருகின்றது. இரண்டு இனத்தவரும் மாறி மாறி மற்றவர்களை குற்றம் சாட்டிக் கொண்டிருப்பார்கள். தமிழர்கள் பார்வையில், "சிங்களவர்கள் எல்லோரும் இனவெறியர்கள்". சிங்களவர்கள் பார்வையில், "தமிழர்கள் எல்லோரும் இனவெறியர்கள்". இன்று வரையும் சிங்கள- தமிழ் பொதுப்புத்தியில் உறைந்து விட்ட விடயம் இது. தற்போது இது அடுத்த தலைமுறைக்கும் கடத்தப் படுகின்றது.

"என்னுடைய இனம் மட்டுமே ஒடுக்கப் படுகின்றது... எதிரி இனத்தவர்கள் இனவாதிகள்..." என்று தான், சிங்களவர்கள், தமிழர்கள், இரண்டு இனத்தவர்களும் நினைத்துக் கொண்டு வாழ்கிறார்கள். இதற்கும் மகாவம்சத்தில் விடை இருக்கிறது என்று சில அறிவுஜீவிகள் சொல்லிக் கொண்டு வருவார்கள்.

வெளிநாட்டில் (அதாவ‌து ஐரோப்பாவில்) இன‌ம், மர‌பு, ம‌த‌ம், க‌லாச்சார‌ம், எதையும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் அனுமதிப்ப‌தில்லை. அது மாண‌வர்க‌ளின் த‌னிப்ப‌ட்ட‌ விட‌ய‌ம். இலங்கை இன்ன‌மும் ப‌ழைய‌ நில‌ப்பிர‌புத்துவ க‌லாச்சார‌த்தில் இருந்து விடுப‌ட‌வில்லை. ப‌ல்லின‌ மாண‌வ‌ர்க‌ள் படிக்கும் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் குறிப்பிட்ட‌ ஒரு இன‌த்தின் க‌லாச்சார‌த்திற்கு ம‌ட்டும் முக்கிய‌த்துவ‌ம் கொடுப்ப‌து பிர‌ச்சினைக‌ளை ஏற்ப‌டுத்தும். 

இதே நிலைமையில் தான் சிங்க‌ள‌ப் ப‌குதிக‌ளில் படிக்கும் த‌மிழ் மாண‌வ‌ர்க‌ளும் உள்ள‌ன‌ர். அவர்கள் அங்கு த‌மது க‌லாச்சார‌த்தை சேர்த்துக் கொள்ள‌க் கேட்டால் அதை "உரிமை" என்று நியாய‌ப் படுத்துவீர்க‌ள். யாழ் ப‌ல்க‌லைக்க‌ழ‌க‌த்தில் சிங்க‌ள‌ மாண‌வ‌ர்க‌ளும் த‌ம‌து உரிமையை தானே கேட்டார்க‌ள்? என‌க்கு வ‌ந்தால் இர‌த்த‌ம், அவ‌னுக்கு வ‌ந்தால் த‌க்காளி ச‌ட்னியா?

"அவர்கள் தமது மரபை பேணுகிறார்கள், ஆகையினால் நாங்களும் எமது மரபை பேணுகின்றோம்." என்பது தான் இனவாதிகளால் முன்வைக்கப் படும் வாதம். "அவன் ஒரு முட்டாளாக இருக்கிறான். ஆகவே, நானும் ஒரு முட்டாளாக இருக்கிறேன்." என்று சொல்கிறார்கள். அதாவது, மற்றவன் கிணற்றில் குதித்தால் தானும் குதிக்கும் தற்கொலை மனோபாவம். முதலில் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் அங்கே கல்வி கற்பதற்காக செல்கிறார்கள் என்பதை எல்லோரும் மறந்து விடுகிறார்கள்.

மாணவர்கள் தமது இனத்தின் மரபு, கலாச்சாரங்களை முன்னேற்றுவதற்காக பல்கலைக்கழகம் செல்லவில்லை. மரபு,கலாச்சாரம் என்பன மாணவர்களை பிரித்து விடுமானால், பல்கலைக் கழக நிர்வாகம் அதை தடை செய்ய வேண்டும். அங்கு எழும் பிரச்சனைகளை சமாதான முறையில் தீர்த்து வைத்திருக்க வேண்டும். "நாங்கள்". "அவர்கள்" என்று இன அடிப்படையில் சிந்திப்பவன் ஒரு மாணவனாக இருக்க முடியாது.

இன, மத வேறுபாடுகளுக்கு அப்பால் எல்லோரும் மாணவர்கள் என்ற உணர்வு வர வேண்டும். இன உணர்வு கொண்டவர்கள் பல்கலைக்கழகம் போகத் தேவையில்லை. மாண‌வ‌ர்க‌ள் ஒன்று சேர்ந்து சிங்க‌ள‌-த‌மிழ் இன‌வாத‌த்திற்கு எதிராக‌ போராட்ட‌ம் ந‌ட‌த்த‌ வேண்டும். ப‌ழ‌மைவாதிகள், ம‌ர‌புவாதிக‌ளை அடித்து விர‌ட்ட‌ வேண்டும்.

பல்கலைக்கழகம் ஓர் அறிவாலயம். தனியார் தவிர, அரசால் நடத்தப் படும் பல்கலைக்கழகங்கள் அனைத்து பிரஜைகளுக்கும் பொதுவானவை. தற்போது சிலர் விதண்டாவாதம் செய்வது போல, "சிங்கள, தமிழ், முஸ்லிம் பல்கலைக்கழகம் எதுவும் கிடையாது." அது ஒரு சிலரின் கற்பனை. எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்த மாணவனாக இருந்தாலும், அடிப்படையில் அவர்கள் மாணவர்கள். பல்கலைக்கழகம் ஒரு பொதுவான இடம்.

ஐரோப்பாவில் இருப்பதைப் போன்று, இலங்கையிலும் உண்மையான மதச் சார்பற்ற சமுதாயம் ஒன்றை உருவாக்க வேண்டும். பாடசாலைகள், பல்கலைக்கழகங்களில் மதப் பிரார்த்தனைகள், மத அடையாளங்கள் தடை செய்யப் பட வேண்டும். "இனப் பெருமை, கலாச்சாரம், மரபு" பற்றிப் பேசுவோர் வெளியேற்றப் பட வேண்டும்.

எதற்காக இலங்கை அரசை ஒரு பேரினவாத அரசு என்று சொல்கிறோம்? ஏனென்றால், அதனது கொள்கைக்காக. மக்களை இன அடிப்படையில் பிரித்தாள்வது தான் அரசின் நோக்கம். எதற்காக பல்கலைக்கழக மாணவர்கள் அரசு வைத்த பொறிக்குள் விழ வேண்டும்? பல்கலைக்கழக மாணவர்கள் என்றால் "புத்திசாலிகள்" என்று எமது சமூகத்தில் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், சமூகத்தில் அவர்கள் தான் முட்டாள்கள் என்பதை, சமீபத்தில் யாழ் பல்கலைக்கழகத்தில் நடந்த சம்பவங்கள் நிரூபிக்கின்றன.

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

No comments: