Thursday, July 07, 2016

9/11 மர்மம் : ஜோர்ஜ் புஷ் மறைக்க விரும்பிய பயங்கரவாதி யார்?


2001/09/11 நியூ யார்க் இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப் பட்ட தாக்குதலை நடத்தியது யார் என்ற மர்மம் இன்னும் துலங்கவில்லை. ஆப்கானிஸ்தானில் ஒரு மலைக் குகைக்குள் பதுங்கியிருந்த, முன்னாள் சி.ஐ.ஏ. உளவாளி ஒசாமா பின்லாடன் தான் தாக்குதல் நடத்தியதாக, அன்றைய ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் அறிவித்திருந்தார். அந்த அறிவிப்பை தொடர்ந்து, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்க இராணுவம் படையெடுத்து ஆக்கிரமித்திருந்தது.

அன்றிலிருந்து இன்று வரை, 9/11 ஒரு உள்வீட்டு சதி என்று நம்புவோர் இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கற்பனை என்று புறந்தள்ளி ஒதுக்குவோர் கூட ஏற்றுக் கொள்ள வேண்டிய உண்மை ஒன்றுள்ளது. 9/11 தாக்குதலில் சவூதி அரேபிய அரசின் பங்கு என்ன? விமானக் கடத்தல்காரர்கள் என்று அடையாளப் படுத்தப் பட்ட நபர்களில் பெரும்பான்மையானோர் சவூதி அரேபிய பிரஜைகள். அமெரிக்க அரசும், அரச அடிவருடி ஊடகங்களும், சவூதி அரேபியாவின் பெயரை குறிப்பிடாமல் தவிர்த்து வந்த காரணம் என்ன?

அமெரிக்க பாராளுமன்றத்தின் உண்மை அறியும் குழுவினர், 2004 ம் ஆண்டு தமது விசாரணையை முடித்து அறிக்கை சமர்ப்பித்தார்கள். ஆனால் அந்த அறிக்கையில் 28 பக்கங்கள் காணாமல் போயுள்ளன! அவற்றை மறைக்கச் சொல்லி உத்தரவிட்டது வேறு யாருமல்ல, அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் தான்! இன்று வரையில் இரகசியமாக வைத்திருப்பதற்கு, அந்த 28 பக்கங்களில் என்ன எழுதி இருந்தது?

9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் அமைப்பாக திரண்டுள்ளனர். அவர்கள் அந்த 28 பக்கங்களை பகிரங்கப் படுத்த வேண்டும் என்று அழுத்தம் கொடுத்து வருகின்றனர். ரிப்பளிக்கன் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் அவர்களுக்கு ஆதரவளிக்கிறார்கள். பாராளுமன்ற விசாரணை அறிக்கையை எவ்வாறு ஜனாதிபதி தடை செய்ய முடியும் என்றும் கேள்வி எழுப்பப் படுகின்றது.

பாராளுமன்ற தீர்மானத்தின் நோக்கம், அன்றைய தாக்குதலில் சவூதி அரேபியாவின் பங்களிப்பு என்ன என்பதை அம்பலப் படுத்துவது தான். மே மாதம், செனட் சபையில் டெமோக்கிராட்டிக் கட்சி உறுப்பினர் Chuck Schumer ஒரு பிரேரணையை முன்மொழிந்தார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகளின் பட்டியலில் சவூதி அரேபியாவையும் உள்ளடக்க வேண்டும் என்பது அதன் சாராம்சம். ஆனால், அதை நடைமுறைப் படுத்த விடாமல், ஜனாதிபதி ஒபாமா தனது வீட்டோ உரிமையை பாவித்து தடுத்து விட்டார். ஏனென்றால், "சவூதி அரேபியா போன்ற நட்பு நாடுகளுடனான உறவைப் பாதித்து விடும்" என்பது தான் காரணம்.

2004 ம் ஆண்டு வெளியான 9/11 அறிக்கையில் நீக்கப் பட்ட 28 பக்கங்களில் சவூதி அரேபியா பற்றிய விபரங்கள் இருந்தன என்று சந்தேகிக்கப் படுகின்றது. இது தொடர்பாக புலனாய்வுத்துறைக்கு ஏற்கனவே தெரிந்திருந்த போதிலும் வாயை திறக்கவில்லை. இது ஒரு பாராளுமன்ற விசாரணை அறிக்கை என்ற படியால், அந்த 28 பக்கங்களையும் வெளியிடுவது அல்லது மறைப்பது தொடர்பாக பாராளுமன்றமே முடிவெடுக்க வேண்டும் என்று 9/11 தாக்குதலில் பலியானவர்களின் உறவினர்கள் நம்புகிறார்கள்.

இதற்கிடையில் "28pages" என்ற பெயரில் அமைப்பு வடிவமாக திரண்ட உறவினர்கள், இன்னொரு இரகசிய அறிக்கையும் இருப்பதாக தெரிவித்துள்ளனர். "File 17" என்று பெயரிடப் பட்ட அந்த அறிக்கையில், விமானக் கடத்தல்காரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பதினெட்டு சவூதி பிரஜைகளின் பெயர்கள் உள்ளன. அவர்கள் எல்லோரும் சவூதி அரச மட்டத்தில் செல்வாக்கான நபர்கள். அந்த அறிக்கை கடந்த வருடம் வெளியிடப் பட்டாலும், "மேலதிக விசாரணைகளுக்காக" அது உடனடியாக மறைக்கப் பட்டது.

அந்த இரகசிய அறிக்கையில் இருந்த ஒருவர்: ஒமார் அல் பயூமி (Omar Al-Bayoumi), சவூதி அரசுடன் நெருங்கிய தொடர்பை பேணும், கலிபோர்னியாவில் வசிக்கும் அரேபியர். 2000 ம் ஆண்டு, ஜனவரி மாதம், அவர் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதுவராலயத்தில் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அதைத் தொடர்ந்து, சான்டியேகோ நகருக்கு பயணம் செய்து, உணவு விடுதி ஒன்றில் Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இருவரையும் சந்தித்துள்ளார். 

Nawaf al-Hazmi, Khalid al-Mihdhar ஆகிய இரண்டு பேரும், 9/11 தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் பட்டியலில் இருந்தனர்! ஒமார் அல் பயூமி அந்த இரண்டு பயங்கரவாதிகளுக்கும் வாடகை வீடு ஒழுங்கு படுத்திக் கொடுத்துள்ளார். வீட்டின் வாடகை ஒப்பந்தமும் அவரது பெயரில் தான் இருந்தது. சான்டியேகோ நகரில் வாழும் முஸ்லிம் சமூகத்தில், ஒமார் அல் பயூமி புலனாய்வுத்துறைக்கு வேலை செய்வதாக பலருக்குத் தெரிந்திருந்தது. இந்த விபரம் எல்லாம் File 17 ல் எழுதப் பட்டுள்ளன.

இன்னொரு உதாரணம்: சாலே அல் ஹுசைன் (Saleh Al-Hussayen). அவர் சவூதி உள்துறை அமைச்சில் வேலை செய்த அரச அதிகாரி. தாக்குதல் நடப்பதற்கு முதல் நாள், அதாவது 10 செப்டம்பர் 2001 அன்று, விமானக் கடத்தல்காரர்கள் தங்கியிருந்த அதே ஹொட்டேலில் இருந்துள்ளார். 

ஒரு மத அறிஞருமான சாலே அல் ஹுசைன், FBI விசாரணையின் போது கடத்தல்காரர்களை தனக்குத் தெரியாது என்று கூறினார். ஆனால், அவர் பொய் சொல்வதாக விசாரணை அதிகாரிகள் நம்பினார்கள். அவர் திடீரென மயங்கி விழுந்த படியால், அல்லது அப்படி நடித்த படியால், விசாரணை இடைநிறுத்தப் பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட சில நாட்களில் அமெரிக்காவை விட்டு வெளியேறி விட்டார்.

இங்கே எழும் முக்கியமான கேள்வி என்னவெனில், 9/11 தாக்குதலில் சவூதி அரசுக்கு மட்டுமல்லாது, அமெரிக்க அரசுக்கும் பங்கிருக்கிறதா? இதற்குப் பின்னணியில் உள்ள அரசியல், பொருளாதார ஆதாயங்கள் என்ன? ஜோர்ஜ் புஷ் குடும்பமும், சவூதி மன்னர் குடும்பமும், கார்லைல் ஆயுத நிறுவனத்தின் பங்குதாரர்கள். ஆப்கானிஸ்தான், ஈராக் மீதான ஆக்கிரமிப்புப் போர்களில் ஆயுத விற்பனை மூலம் பெருமளவு இலாபம் சேர்த்து விட்டனர். சிலநேரம், 9/11 தாக்குதலை நடத்தியதன் நோக்கமே அதுவாக இருக்கலாம்.

மேலதிக தகவல்களுக்கு:

No comments: