Wednesday, July 01, 2015

சென்னை வாசிகளே! வட கொரியாவில் மெட்ரோ ரயில் டிக்கட் விலை 2 ரூபாய் மட்டுமே!


சென்னை மெட்ரோ ரயில் டிக்கட் விலை அதிகமாக இருப்பதாகவும், சாதாரண உழைக்கும் வர்க்க மக்களுக்கு பயணம் செய்ய முடியாமல் இருப்பதாகவும் பலர் குறைப் படுகின்றனர். பொதுப் போக்குவரத்து சேவை அனைத்து மக்களுக்குமானது. அது மிகவும் குறைந்த கட்டணத்தில் பயணம் செய்யும் வகையில் வசதி செய்து தரப் பட வேண்டும்.

சென்னை மெட்ரோ பயணச் சீட்டின் விலை 40 இந்திய ரூபாய்கள். (0.62 USD) வட கொரியாவில், பியாங்கியாங் நகர மெட்ரோ பயணச் சீட்டின் விலை 2 இந்திய ரூபாய்கள் மட்டுமே! (5 WON = 0.03 USD). சென்னையில் வாழும் அடித்தட்டு மக்கள் நாற்பது ரூபாய் கொடுத்து மெட்ரோவில் பயணம் செய்ய முடியாது.

வட கொரியாவில் அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில், மெட்ரோ டிக்கட் விலையை வேண்டுமென்றே குறைத்து வைத்திருக்கிறார்கள். அதுவும், முதலாளித்துவ பொருளாதார சீர்திருத்தங்கள் கொண்டு வரப்பட்ட, கடந்த பத்தாண்டுகளில் இருந்து தான் இந்த விலை அதிகரிப்பு. அதற்கு முன்னர் இருந்த பயணச்சீட்டின் விலை 0.25 இந்திய ரூபாய்கள் மட்டுமே!

ஆகவே, அடித்தட்டு மக்களும் மெட்ரோவில் பயணம் செய்ய வேண்டுமானால், இந்தியாவிலும் சோஷலிசம் கொண்டு வரப் பட வேண்டும்.

(பிற்குறிப்பு: நாற்பது ரூபாய் கொடுத்து பயணம் செய்யும் வசதி படைத்த மத்தியதர வர்க்கத்தினர் இதற்கு எந்தவிதமான வியாக்கியானமும் கொடுக்கத் தேவையில்லை. அடித்தட்டு மக்களை முதலில் பேச விடுங்கள். நன்றி.)

*******

மேற்கு ஐரோப்பாவில் தேனும், பாலும் ஆறாக ஓடுவதாக நினைத்துக் கொண்டிருக்கும் அப்பாவிகளின் கவனத்திற்கு:

பொருளாதார ஏற்றத் தாழ்வு, இன்றளவும் மேற்கைரோப்பிய சமுதாயத்தை ஏழை - பணக்காரன் என்று பிரித்து வைத்துள்ளது. அந்த இடைவெளி வர வர அதிகரித்துச் செல்கின்றதே தவிர குறையவில்லை.

மருத்துவ வசதிகளில் காட்டப்படும் பாரபட்சம் அதற்கு ஓர் உதாரணம். நெதர்லாந்தில், மருத்துவ வசதி முழுவதும் தனியார் நிறுவனங்களிடம் உள்ளது. இங்கே அரசு மருத்துவமனை எதுவும் கிடையாது. மருத்துவக் கல்லூரியின் மருத்துவமனையிலும் நோயாளிகளுக்கு விசேட சலுகை எதுவும் கிடையாது.

இந்த நாட்டில் அனைத்துப் பிரஜையும் மருத்துவக் காப்புறுதி எடுத்திருக்க வேண்டும். அதற்காக மாதாமாதம் குறிப்பிட்ட தொகை செலுத்த வேண்டும். பொதுவாக, ஆரோக்கியமான ஒரு நபர், குறைந்த பட்ச கட்டணமாக 100 யூரோ செலுத்த வேண்டும். ஆனால், கடுமையான நோயாளி அதை விட இரண்டு மடங்கு தொகை கட்ட வேண்டி இருக்கும்.

அப்படியே அதிகத் தொகை கட்டினாலும், தரமான மருத்துவ வசதியை எதிர்பார்க்க முடியாது. ஏனென்றால், அதிலும் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்ப்பார்கள். குறிப்பாக, புற்றுநோயால் அவதிப்படும் நோயாளிகள் பாரபட்சமாக நடத்தப் படுகிறார்கள்.

பணக்கார புற்றுநோய் நோயாளிகளுக்கு மட்டும், உடனடியாக தரமான மருத்துவ சிகிச்சை கிடைக்கிறது. ஏழைகள் ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்க வைக்கப் படுகிறார்கள். காரணம்? புற்றுநோய் மருந்துகளின் விலை அதிகம் என்பதால், பண வசதி இல்லாதவர்களுக்கு சிகிச்சை அளிக்காமல் இழுத்தடிக்கிறார்கள்.

இந்தத் தகவல், இன்று நெதர்லாந்து ஊடகங்களில் முக்கிய செய்தியாக இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர்களும், புற்றுநோயாளிகளுக்கு காட்டப் படும் பாரபட்சம் குறித்து கண்டனம் தெரிவித்துள்ளனர்.(ஆதாரம் : NOS நெதர்லாந்து வானொலி - தொலைக்காட்சி செய்தி நிறுவனம்.)

வட கொரியாவில், மருத்துவ வசதிகள் அனைத்துப் பிரஜைகளுக்கும் இலவசமாகக் கிடைக்கிறது என்பது தெரிந்ததே. உலக சுகாதார நிறுவனத்தின் (WHO) 2008 ம் வருடத்திய அறிக்கையின் படி, வட கொரியாவில் சிசு மரணவீதம் 1000 க்கு 45 என்ற விகிதத்தில் உள்ளது. உலகின் பிற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் ஒப்பிடுகையில், இது மிகக் குறைவாகும்.

உதாரணத்திற்கு, ஆப்பிரிக்காவில் உள்ள சாட் நாட்டில், 1000 க்கு 120 என்ற விகிதத்தில் உள்ளது. உலக நாடுகள் பற்றிய சி.ஐ.ஏ. அறிக்கையின் படி, வட கொரியா, சாட் இரண்டும் ஏறக்குறைய ஒரேயளவு மொத்த பொருளாதார உற்பத்தியைக் கொண்டுள்ளன.

வட கொரியாவின் பொருளியல் உற்பத்தி குறித்த சரியான தகவல்கள் இல்லாத குறைபாட்டையும், மருத்துவ வசதிகள் ஐம்பதுகளின் தரத்தில் இருப்பதையும் சேர்த்துப் பார்த்தால், அந்த நாட்டின் சிசு மரணவீதம் வளர்ந்த நாடுகளை எட்டிப் பிடிப்பதாக அமைந்துள்ளது.

மருத்துவ பணியாளர்களைப் பொருத்தவரையில், வட கொரியா போன்ற "சர்வாதிகார நாடுகள்" ஒரு வரப்பிரசாதம் என்று, பஞ்ச நிவாரணப் பணிகளின் போது , அங்கு சென்று வந்த வெளிநாட்டு மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

"அனர்த்த நிவாரண உதவி வழங்கலின் போது, அனைவருக்கும் உடனடியாக சுகாதார வசதிகள் கிடைக்கும் அளவிற்கு, அரசு அங்குள்ள மக்களை தீவிரமாக கண்காணித்து வந்ததுள்ளது. இதுவே வளர்ந்த நாடாக இருந்தால் கூட, அங்கு அனைவரையும் ஒரே இடத்தில் கூட வைப்பது சிரமமாக இருந்திருக்கும்" என்றனர்.

வட கொரியாவின் சுகாதார வசதிகள் உலகத்தரத்தை விடக் குறைவானது தான். ஆனால், மனிதர்களுக்கு ஏற்படும் பல நோய்கள் வயோதிப காலத்திலேயே முற்றுவதால், சிகிச்சையளிப்பதும் கடினமாகின்றது. அதற்குப் பதிலாக, தொட்டதற்கெல்லாம் மருத்துவ பரிசோதனை செய்யப் படுவதால், பல நோய்களை முன்கூட்டியே தடுக்க முடிகின்றது. இதனால் வைத்திய செலவும் மிச்சம்.

வட கொரியாவில் பணியாற்றும் மருத்துவர்களின் சம்பளமும் குறைவு தான். அவர்கள் சாதாரண அரசு ஊழியரை விட பெரிதாக சம்பாதிப்பதில்லை. ஆயினும், மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால், அவர்கள் சிலநேரம், பிற நாடுகளில் தாதியர் செய்யும் வேலைகளையும் தம் பொறுப்பில் எடுக்கின்றனர்.

வட கொரியாவில் 10000 பேருக்கு 32.9 மருத்துவர்கள் வீதம் இருக்கின்றனர். அந்தத் தொகை அமெரிக்காவை விட அதிகமாகும். அங்கு 10000 பேருக்கு 26.7 மருத்துவர்கள். (ஆதாரம்: World Health Statistics 2011, World Health Organization)


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:
சன் தொலைக்காட்சியில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சி : "நிஜம்" என்ற "பொய்"!
வட கொரியா புலிகளுக்கு ஆயுதங்களை வழங்கி உதவியது!

1 comment:

சிரிப்புசிங்காரம் said...

அங்கே ஊழல் செஞ்சாலோ, மதரீதியா பிரச்சினை பண்ணினாலோ சுட்டுடுவான் இங்கேயும் வச்சுகலாமா.?