Wednesday, July 22, 2015

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் சி.ஐ.ஏ. ஊடுருவியது எப்படி?


உலகில் பல நாடுகளில், உள்நாட்டு யுத்தங்களை உருவாக்குவது மட்டுமல்ல, முடித்து வைப்பது கூட சி.ஐ.ஏ. யின் பணிகளில் ஒன்றாக இருந்துள்ளது. இலங்கையிலும், கடந்த பல தசாப்த காலமாக சி.ஐ.ஏ. ஊடுருவி செயற்பட்டு வந்துள்ளது. முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க கொலையிலும் அது சம்பந்தப் பட்டிருப்பதாக நம்பப் பட்டது.

அண்மைக் காலமாக, சி.ஐ.ஏ. நேரடியாக தலையிடுவதை குறைத்துக் கொண்டு, பல தொண்டு நிறுவனங்களின் ஊடாக உளவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றது. USAID எனும் தொண்டு நிறுவனம், சி.ஐ.ஏ. தன்னை உருமறைப்பு செய்து கொள்வதற்கு பயன்படுகின்றது. அண்மைக் காலத்தில், USAID ஊழியர்கள் உளவு பார்த்த குற்றச்சாட்டில், கியூபா, பொலீவியா, எக்குவடோர் ஆகிய லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து வெளியேற்றப் பட்டனர்.

இறுதிப்போருக்கு முன்னரும், பின்னரும், இலங்கையின் வடக்கு கிழக்குப் பகுதிகளில், USAID பலவிதமான திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றது. "தமிழர்களுக்கு ஜனநாயகம் போதிப்பது" என்ற பெயரின் கீழ், ஊடகத்துறையில் இருப்பவர்களுக்கு, அல்லது ஆர்வம் உள்ளவர்களுக்கு வகுப்புகள் நடந்துள்ளன. சி.ஐ.ஏ.யினால் பயிற்றுவிக்கப்பட்ட "ஊடகவியலாளர்கள்" யாரென்பதை இனங்காண்பது மிகவும் எளிது. 

சி.ஐ.ஏ. இடம் பயிற்சி பெற்ற தமிழ் பேசும் "ஊடகவியலாளர்கள்", வெளியில் "தமிழ் தேசியம்" பேசினாலும், உள்ளுக்கு அமெரிக்காவுக்கு விசுவாசமாக இருப்பார்கள். வலதுசாரி சிந்தனையுடன் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக வக்காலத்து வாங்குவார்கள். கியூபா, வெனிசுவேலா, பொலீவியா, வட கொரியா போன்ற நாடுகளைப் பற்றி, எதிர்மறையான பிரச்சாரங்களில் ஈடுபடுவார்கள். 

சுருக்கமாக: சி.ஐ.ஏ. கற்பித்த பாடங்களை, தமது சொந்தக் கருத்துக்கள் மாதிரி சொல்லிக் கொண்டிருப்பார்கள். தமிழ் தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை, இணையத்தளம் எங்கும், சி.ஐ.ஏ. ஆசிரியர்களிடம்  அரசியல் பயின்ற மாணவர்களை காணலாம்.

முன்பு பனிப்போர் நிலவிய காலத்தில், சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்த எச்சரிக்கை உணர்வு இருந்தது. யாழ்ப்பாணத்தில், அலன் தம்பதிகள் என்ற இரண்டு அமெரிக்கப் பிரஜைகள், ஈ.பி.ஆர்.எல்ப். இனால் கடத்திச் சென்று பயணம் வைக்கப் பட்டனர். அவர்கள் சி.ஐ.ஏ. உளவாளிகள் என்று குற்றஞ் சாட்டப் பட்டது. இருப்பினும் அந்தக் குற்றச்சாட்டுகளை நிரூப்பிக்க முடியாமல் போனது. 

ஈழப்போர் தொடங்கிய ஆரம்ப காலங்களில், Tamil Refugee’s Rehabilitation Organisation (TRRO) என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வந்த கந்தையா கந்தசாமி, ஈரோஸ் இயக்கத்தினரால் கடத்திச் செல்லப் பட்டார். அவரைக் கொண்டு செல்லும் வழியில் மாரடைப்பினால் மரணமடைந்து விட்டதால், உடலைத் தூக்கி கழிவுத் தொட்டிக்குள் போட்டு விட்டுச் சென்று விட்டனர்.

TRRO தலைவர் கந்தசாமி "கொலை", அன்று பல வதந்திகளுக்கு காரணமாகி இருந்தது. அந்த சம்பவத்திற்குப் பின்னர், மேற்கத்திய நாடுகளில் இயங்கிய TRRO அமைப்புகளை புலிகள் பொறுப்பேற்றுக் கொண்டனர். அண்மைக் காலம் வரையில், வெளிநாடுகளில் பெரும்பாலான புலிகளின் செயற்பாடுகள் யாவும், TRRO என்ற பெயரின் கீழ் தான் நடந்து வந்தன. ஆகையினால், கந்தசாமி கொலையில் புலிகள் சம்பந்தப் பட்டிருந்ததாக கருதப் பட்டது. ஆனால், அது உண்மையல்ல.

உண்மையில், கந்தசாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகத்தின் பெயரில் தான் கடத்தப் பட்டார். ஈரோஸ் இயக்கத்திற்கு, RAW அது குறித்த தகவல்களை வழங்கியது. அன்றைய பனிப்போர் காலத்தில், இந்தியா சோவியத் முகாமுக்குள் இருந்தது என்பதையும், அதனால் சி.ஐ.ஏ. ஊடுருவல் குறித்து எச்சரிக்கை உணர்வுடன் இருந்தது என்பதையும் இங்கே குறிப்பிடத் தேவையில்லை. (பார்க்க:The truth behind TRRO Kandiah Kandasamy's death; http://www.srilankaguardian.org/2012/03/truth-behind-trro-kandiah-kandasamys.html?utm_source=feedburner&utm_medium=email&utm_campaign=Feed%3A+srilankaguardian%2FIGKI+%28Sri+Lanka+Guardian%29)

எண்பதுகளில், ஈரோஸ் இயக்கத்தினர், சர்வோதயா இயக்கத்தின் யாழ் மாவட்டத் தலைவர் கதிரமலையை கடத்தி கொலை செய்திருந்தனர். சர்வோதயா அமைப்பு காந்திய வழியில் அமைக்கப் பட்ட தொண்டு நிறுவனமாகும். இலங்கையின் முதலாவதும், பெரியதுமான சர்வோதயா அமைப்பு, பௌத்த - மேட்டுக்குடியினரின் உள்நாட்டு தொண்டு நிறுவனம் (NGO) ஆகும். அதற்குள் நீண்ட காலமாகவே சி.ஐ.ஏ. ஊடுருவல் இருந்து வந்துள்ளது. அன்று கதிரமலையை ஈரோஸ் இயக்கத்தினர் கொலை செய்வதற்கும், அவர் ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்ற சந்தேகம் காரணமாக இருந்தது.

அன்று ஈரோஸ் கதிரமலையை கொன்றதற்கு பலர் கண்டனம் தெரிவித்திருந்தனர். "காந்திய பாணி தொண்டு நிறுவனம்" என்ற போர்வை அதன் உண்மையான நோக்கத்தை மறைப்பதற்கு பெரிதும் உதவியது. தனிநபர் வாதம், நுகர்வுக் கலாச்சாரத்தை ஊக்குவிப்பதால் முதலாளித்துவத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னாலும், சர்வோதயா அடிப்படையில் ஒரு கம்யூனிச எதிர்ப்பு இயக்கம் ஆகும். ஈழப்போருக்கும், சர்வோதயா அமைப்பிற்கும்,சி.ஐ.ஏ.க்கும் இடையிலான தொடர்பு இன்னும் அறுந்து விடவில்லை.

2009, இறுதிப்போரின் பின்னர், சிறிலங்கா அரச படைகளிடம் சரணடைந்த புலிப் போராளிகள், புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பப் பட்டமை அனைவரும் அறிந்ததே. அங்கு முன்னாள் போராளிகளுக்கு ஆங்கில மொழிக் கல்வியும், மொபைல் தொலைபேசிகளை திருத்துவது போன்ற தொழில்நுட்பப் பயிற்சிகளும் வழங்கப் பட்டன. அதன் மூலம், முன்னாள் போராளிகள், உலகமயமாக்கப் பட்ட முதலாளித்துவத்திற்கு சேவை செய்யும் தொழிலாளர்களாக மாற்றப் பட்டனர்.

முன்னாள் புலிப் போராளிகளுக்கான புனர்வாழ்வு முகாம்கள் பற்றி, பலருக்குத் தெரியாத உண்மை ஒன்றுள்ளது. அந்த முகாம்களை யார் நடத்தினார்கள்? யார் நிதி வழங்கினார்கள்? பெரும்பாலான முகாம்கள், சர்வோதயா தொண்டு நிறுவனத்தின் நிர்வாகத்தின் கீழ் நடந்தன. அவர்களுக்கு தேவையான நிதியை USAID வழங்கிக் கொண்டிருந்தது. 

முன்னாள் புலிப் போராளிகளின் புனர்வாழ்வுக்கு, சி.ஐ.ஏ. மறைமுகமாக உதவிக் கொண்டிருந்தது. (பார்க்க: USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA; http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html) இந்த உண்மை தெரியாத சில தமிழ் இன உணர்வாளர்கள், சிறிலங்கா படைகள் முன்னாள் புலிப் போராளிகளை இன்னும் விடுவிக்கவில்லை என்று, அமெரிக்காவிடம் முறைப்பாடு செய்து கொண்டிருந்தார்கள்!

சிலநேரம், "சி.ஐ.ஏ. யார்? அது ஈழத்தில் என்ன செய்கின்றது?" என்பன போன்ற விபரங்கள், அன்று புலிகளின் தலைவர்களுக்கே தெரியாமல் இருந்திருக்கலாம். வலதுசாரி - "தமிழ் தேசிய" அறிவுஜீவிகளின் அறிவுரைகளை நம்பி, அமெரிக்கர்கள் தமது கட்டுப்பாட்டுப் பிரதேசத்திற்குள் உளவு பார்ப்பதற்கு, தாமே அனுமதித்து இருக்கலாம். பிரபா-ரணில் ஒப்பந்தம் கைச்சாத்திடப் பட்ட பின்னரே, வடக்கு, கிழக்கில் சி.ஐ.ஏ. ஊடுருவல்கள் அதிகரித்தன. அதற்கு அவர்கள் ஒரு அபிவிருத்தித் திட்டம் ஒன்றை உருவாக்கி, புலிகளின் நன்மதிப்பை சம்பாதித்து இருந்தனர்.

Office of Transition Initiatives (OTI) என்ற பெயரில், USAID, மற்றும் அமெரிக்க தூதுவராலயத்தினால், திருகோணமலையில் ஒரு அபிவிருத்தித் திட்டம் தொடங்கப் பட்டது.இது ஏற்கனவே பல உலக நாடுகளில் இயங்கி வருகின்றது. அது நிகரகுவாவில் இருந்த சான்டிஸ்டா கம்யூனிசப் புரட்சியாளர்களின் அரசைக் கவிழ்க்கும் நோக்கில், கொன்றாஸ் கிளர்ச்சியாளர்களுக்கு உதவி வந்துள்ளது. 

வெனிசுவேலாவில் சாவேஸ் அரசைக் கவிழ்ப்பதற்காக நடந்த சதிப்புரட்சியிலும் OTI சம்பந்தப் பட்டிருந்தது. அண்மையில், கியூபாவில் காஸ்ட்ரோ எதிர்ப்பாளர்கள் தொடர்பு கொள்வதற்கு வசதியமைத்துக் கொடுக்கும் டிவிட்டர் வலைத்தளத்தை உருவாக்கி அம்பலப் பட்டது. (பார்க்க: US secretly created 'Cuban Twitter' to stir unrest; http://bigstory.ap.org/article/us-secretly-created-cuban-twitter-stir-unrest)

2003 ம் ஆண்டு, அம்பாறை மாவட்டத்தில், புலிகளின் அக்கரைப்பற்று அலுவலகத்தில், USAID பிரதிநிதிகள், அன்றைய பொறுப்பாளர் கௌசல்யனை சந்தித்துப் பேசி உள்ளனர். அதைத் தவிர, கிளிநொச்சி, திருகோணமலையிலும், USAID, புலிகள் சந்திப்பு நடந்துள்ளது. (பார்க்க: USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARA; https://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html

USAID நிறுவனமானது, தனது Office of Transition Initiatives திட்டத்திற்கு புலிகளின் ஒப்புதல் வாங்கிக் கொள்வதை பிரதான நோக்கமாக கொண்டிருந்தது. புலிகளைப் பொறுத்தவரையில், தமக்கு சார்பான NGO நிறுவனங்களுக்கு அமெரிக்க நிதியுதவியை பெற்றுக் கொள்ள முடியும் என்று நம்பினார்கள். அதை அவர்கள் USAID இடம் நேரடியாகவே கேட்டுமுள்ளனர்.

USAID, யாழ்ப்பாணத்தில் இருந்த தனது அலுவலகத்திற்கு, வன்னி ஊடாக நிவாரணப் பொருட்களை அனுப்புவதற்கு புலிகளின் ஒத்துழைப்பை எதிர்பார்த்தது. (அன்றைய நிலையில், புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தை தவிர்க்க வேண்டுமானால், விமானம் மூலம் போக்குவரத்து செய்வது செலவு பிடிக்கும் விடயமாக இருந்தது.) USAID, ஒரு சி.ஐ.ஏ. நிறுவனம் என்ற உண்மையை அறிந்திராத புலிகளும் அதற்கு அனுமதி கொடுக்க சம்மதித்தனர்.

அது மட்டுமல்ல, புலிகள் அமெரிக்க நிவாரணப் பொருட்களுக்கு வரி விலக்கு அளிக்கவும் சம்மதித்திருந்தனர். இது அன்று பல தொண்டு நிறுவனங்களுக்கு பொறாமையை ஏற்படுத்தி இருக்கும். ஏனெனில், அன்று புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதி ஊடாக சென்ற அனைத்து வாகனங்களும் மறிக்கப் பட்டு, தனி நபர்களுக்கும், பொருட்களுக்கும், அளவுக்கு அதிகமான வரி அறவிடப் பட்டு வந்தது. USAID புலிகளுடனான ஒத்துழைப்புடன் வட மாகாணத்தில் எந்தத் தடையும் இன்றி இயங்கிக் கொண்டிருந்தது. இத்தனைக்கும், அமெரிக்க அரசு புலிகளை வெளிநாட்டு பயங்கரவாத இயக்கங்களின் பட்டியலில் இருந்து எடுக்கவில்லை.

மேலதிக விபரங்களுக்கு: 
USAID WORKING-LEVEL MEETING WITH LTTE IN AMPARAhttps://www.wikileaks.org/plusd/cables/03COLOMBO2025_a.html
USAID opens new office in Trincomalee;
 https://www.tamilnet.com/art.html?catid=13&artid=10724
USAID SUPPORT FOR RECONSTRUCTION OF EASTERN SRI LANKA;
 http://leakwire.org/cables/cable/09COLOMBO1109.html


இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
IMF, உலகவங்கி ஆதரவில் நடந்த தமிழின அழிப்பு! "தமிழ் தேசியவாதிகள்" இருட்டடிப்பு!
யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!
கயானா நாட்டுப் பிரதமர் ஒரு "சென்னைத் தமிழர்"! ஆனால் சி.ஐ.ஏ. கைக்கூலி!
யாசின் மாலிக்கின் வருகையும், சீமானின் சி.ஐ.ஏ. தொடர்பாடலும்

4 comments:

SaraK said...

அமேரிக்காவை பொருத்த மட்டில் புலிகள் வெகு இலகுவாக தான் இருந்திருக்கின்றனர்.

ஒரு சந்தேகம் - புலிகளுக்கு அமேரிக்கா நடத்தும் உலக அரசியல் நாடகம் தெரியாமலா இருந்தார்கள்...

மேலும்:
Rajiv Gandhi Assasination The Untold Story Part 1 of 7

https://www.youtube.com/watch?v=g4uinmueUqg

இதில் திருச்சி வேலுசாமி புலிகள் ராஜிவை கொலை செய்யவேயில்லை என சொல்கிறார். இது உண்மையானு இன்னும் நான் தலையை பீந்து கொண்டு இருக்கிறேன்...

Kalaiyarasan said...

ராஜீவ் கொலை பற்றி பலர் ஆளாளுக்கு வியாக்கியானம் சொல்லிக் கொண்டிருப்பார்கள். ராஜீவை கொன்றதை புலிகள் மறைமுகமாக ஏற்றுக் கொண்டிருந்தார்கள். சிவராசன், தாணு போன்றோர் புலி உறுப்பினர்கள் என்பது நிரூபிக்கப் பட்ட விடயம். ஆனால், இவர்கள் சுற்றி வளைத்து சொல்வதும், சொல்லாமல் விடுவதுமான ஒரு தகவல் உள்ளது. இஸ்ரேலிய மொசாட் அல்லது வேறொரு மேற்கத்திய புலனாய்வுத்துறை, புலிகளுடன் கூட்டுச் சேர்ந்து இந்தக் கொலையை செய்திருக்க வாய்ப்புண்டு. சுப்பிரமணியம் சுவாமி ஒரு சி.ஐ.ஏ. உளவாளி என்பதும் இரகசியமல்ல. அந்தக் காலத்தில் பலருக்கும் ராஜீவை கொலை செய்ய வேண்டிய தேவை இருந்தது. ராஜீவ் பிரதமராக வந்தால் மீண்டும் இந்திய இராணுவத்தை அனுப்புவார் என்று புலிகள் அஞ்சினார்கள். அதே நேரம், ஈழப்போர் முடிந்து விடும், அதனால் ஆயுத விற்பனை நின்று விடும் என்று, சதியில் சம்பந்தப்பட்ட மேற்கத்திய புலனாய்வுத்துறை அஞ்சியது.

பார்க்கவும்:
ஈழத்தமிழர் மரணத்தில் பணம் சம்பாதித்த இஸ்ரேலியர்கள்
http://kalaiy.blogspot.nl/2010/10/blog-post_29.html

யார் இந்த சுப்பிரமணிய சாமி? ஒரு சி.ஐ.ஏ. ஆசாமி!
http://kalaiy.blogspot.nl/2014/10/blog-post_27.html

SaraK said...

நன்றி அய்யா....

வேலுச்சாமியும் கிட்ட தட்ட இதே விடேயத்தை தான் சொல்கிறார். இதில் சி.ஐ.ஏ உடந்தை இருக்கு என்று ஆனால், உங்களை போன்று விளக்காமாக கூற இயவில்லை.

ஒன்றை மட்டும் உறுதியாக கூறுகிறார் சு.சாமிக்கு ராஜீவ் காந்தி கொலைத்திட்டத்தை பற்றி நன்றாக தெரியும். அவரை விசாரித்தால் ராஜீவின் கொலைக்கான காரணத்தையும், உண்மையில் யார் செய்தார்கள் என்பதையும் உலகிற்கு தெரியபடித்தலாம் என்கிறார்.

இந்த உண்மையெல்லாம் எப்போ உலகத்திற்கு சொல்லி புரியவைக்க போரோமோ... அவ்வ்வ்....

TamilRockers said...

வணக்கம் நண்பர்களே!, தங்கள் அருமையான பதிவுகளை TamilBM (http://tamilbm.com/) திரட்டியிலும் இணையுங்கள்.