Monday, July 13, 2015

பிரபாகரன் மீண்டும் வந்தால் "புலி ஆதரவாளர்களே" காட்டிக் கொடுப்பார்கள்!


தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு,

நீங்கள் எந்த நாட்டில் ஒளிந்திருந்தாலும் பரவாயில்லை. தமிழீழத்தில் மட்டும் காலடி எடுத்து வைத்து விடாதீர்கள்! "இந்த நன்றி மறந்த தமிழர்களுக்காகவா போராடினேன்" என்று, வருந்த வேண்டி இருக்கலாம்!

நீங்கள் மீண்டும் தமிழ் தேசிய அரசியலுக்கு வந்தால், உங்களுக்கும் "புலனாய்வுத் துறையின் கைக்கூலி" முத்திரை குத்துவார்கள். நீங்கள் மீண்டும் ஆயுதமேந்தினால், சிங்கள இராணுவத்திடம் பிடித்துக் கொடுக்கவும் தயங்க மாட்டார்கள்.

அவர்கள் வேறு யாருமல்ல. நீங்கள் நம்பிக் கெட்ட, அதே "புலி ஆதரவாளர்கள்" தான்! நீங்களே உருவாக்கி விட்ட, தமிழ் முதலாளிகளும், தமிழ் வலதுசாரிகளும், தற்போது சிறிலங்காவின் "ஜனநாயக நீரோட்டத்தில்" ஐக்கியமாகி விட்டார்கள்.

இந்தத் துணுக்கு சிரிப்பதற்கு மட்டுமல்ல, சிந்திப்பதற்கும் தான். இலங்கையில் இன்றைக்கு தமிழ் தேசிய அரசியலுக்குள் நடக்கும் கூத்துக்களைப் பார்க்கும் பொழுது இதெல்லாம் நடப்பதற்கான சாத்தியக்கூறுகள் நிறையவே உள்ளன.
(பார்க்கவும்: 1.தமிழ் வாக்குகள் சிதறுமா? திரளுமா?; 2.பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்)

தேர்தல் வரும் காலங்களில் தான், பல கட்சி ஜனநாயகம் பற்றிப் பீற்றிக் கொண்டிருக்கும், போலி ஜனநாயகவாதிகளின் முகமூடிகள் கிழிந்து தொங்குகின்றன. அவர்களது "ஜனநாயகம்" எப்போதும், இரண்டு கட்சிகளின் சர்வாதிகார ஆட்சி தான் என்பதை புரிந்து கொள்வது மிகவும் எளிது.

இலங்கை அரசியல் நிலவரத்தில், "தனித் தமிழீழத்திற்கான சுதந்திர தாகம்" கொண்ட, போலித் தமிழ் தேசியவாதிகள் கூட, சிங்களப் பேரினவாத SLFP க்கு எதிராக, இன்னொரு சிங்களப் பேரினவாத கட்சியான UNP யை ஆதரிப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா ஜனநாயகம்!" என்பார்கள்.

அதே நேரம், வடக்கு, கிழக்கு மாகாணங்களில், எப்போதும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மட்டுமே வெல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். காரணம் கேட்டால், "அது தாண்டா தமிழ் தேசியம்" என்பார்கள். எல்லாத் தேர்தல்களிலும் ஒரே கட்சி தான் வெல்ல வேண்டுமென்றால், அதற்குப் பெயர் ஜனநாயகமா? மெத்தப் படித்த அறிவாளிகளே பதில் கூறுங்கள்.

இலங்கையில் மீண்டும் பாராளுமன்ற பொதுத்தேர்தல் கூத்துக்கள் ஆரம்பமாகி விட்டன. முன்னர் ஒரு தடவை, ஜனாதிபதி தேர்தல் நடந்த நேரம், நான் பொதுத் தேர்தல்களின் ஜனநாயகமற்ற தன்மையை விமர்சித்து எழுதி இருந்தேன்.

அப்பொழுது, முன்னாள் போலித் தமிழ் தேசியவாதியும், இந்நாள் போலி ஜனநாயகவாதியுமான ஒருவர், பின்வருமாறு எதிர்வினையாற்றினார்:
  "மிஸ்டர் கலையரசன், இலங்கையில் ஒரு புரட்சி நடக்கும் என்று கனவு காணாதீர்கள்!"

இந்தப் போலி ஜனநாயகவாதி முன்னொருகாலத்தில் புலிகளை ஆதரித்தவர், அல்லது அப்படி பாசாங்கு செய்தவர். அந்தக் காலத்தில் புலிகள் நடத்தியது புரட்சி இல்லாமல், புடலங்காயா? உங்களது பாராளுமன்ற தேர்தல்களில் நம்பிக்கை இழந்த படியால் தானே புலிகள் ஆயுதமேந்தினார்கள்?

ஏற்கனவே இருக்கும் அரச கட்டமைப்பை மாற்றியமைப்பதற்குப் பெயர் தான் புரட்சி. அதைப் புலிகள் நடைமுறையில் செய்து காட்டினார்கள். நீங்கள் விரும்பினால் அதற்கு "தமிழ் தேசியப் புரட்சி" என்று பெயரிட்டுக் கொள்ளுங்கள்.

கம்யூனிஸ்டுகள் மட்டும் தான் புரட்சி நடத்த வேண்டுமென்ற கட்டாயம் இல்லை. ஈரானில் இஸ்லாமியப் புரட்சி நடக்கலாம் என்றால், இலங்கையில் தமிழ் தேசியப் புரட்சி நடக்க முடியாதா?

தமிழர் விடுதலைக் கூட்டணி பாராளுமன்ற வாக்குகளால் சாதிக்க முடியாத பல விடயங்களை, புலிகள் ஆயுத பலத்தால் செய்து காட்டினார்கள். சிறிலங்கா பாராளுமன்ற அதிகார மையத்தின் உத்தரவுகளுக்கு கீழ்ப்படியாத கட்டுப்பாட்டுப் பிரதேசம் ஒன்றை உருவாக்கி ஆட்சி நடத்தினார்கள்.

இறுதிப்போர் நடப்பதற்கு சில மாதங்களுக்கு முன்னர் கூட, புலிகளை ஜனநாயக வழிக்கு திரும்புமாறு அமெரிக்கா வலியுறுத்தி இருந்தது. ஏன் அதை உதாசீனப் படுத்தினார்கள்? போலி ஜனநாயகவாதிகள் பெருமையுடன் பீற்றிக் கொள்ளும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு சிறந்தது என்றால், அதை அன்று ஏற்றுக் கொண்டிருக்கலாமே?

வசதி படைத்த தமிழ் மேட்டுக்குடியினருக்கு, பதவிகளை அமைத்துக் கொடுப்பதற்காக புலிகள் போராடவில்லை. தமிழ்ச்செல்வன் போன்ற அடித்தட்டு உழைக்கும் வர்க்க சமூகத்தை சேர்ந்த உறுப்பினர்களும் உயர்ந்த அந்தஸ்துக்கு வருவதற்கு உதவினார்கள். அந்த சமூகத்து மக்களைப் பொறுத்தவரையில், அது ஒரு புரட்சி தான்.

ஈழத் தமிழ் மேட்டுக்குடி வர்க்கமும், தமிழ் முதலாளிய வர்க்கமும், புலிகளை தமது கருவிகளாக நினைத்து பயன்படுத்தி வந்தனர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் உத்தரவை ஏற்று, சிங்களப் பேரினவாத அரசுடன் கூட்டுச் சேர்ந்தவுடன் புலிகளை கை கழுவி விட்டனர். அதன் விளைவாகத் தான், முன்னாள் புலிப் போராளிகள் தற்போது தீண்டத்தகாதவர்களாக சமூகத்தில் ஒதுக்கப் படுகின்றனர். இதே நிலைமை, புலிகளுக்கு தலைவராக இருந்த பிரபாகரனுக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம்?இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
பாட்டாளி வர்க்க புலிப் போராளிகளை ஒதுக்கும் கூட்டமைப்பின் மேட்டுக்குடி அரசியல்
தீவிர- மிதவாத ஈழத் தமிழ் தேசியவாதிகளுக்கு இடையிலான பனிப்போர்
தேர்தலில் மலர்ந்த "தமிழர் அரசு"! - ஓர் ஆய்வு

5 comments:

Unknown said...

ரொம்ப மன வருத்தத்தோட தான் இந்த செய்திய இங்க பதிவு செய்கிறேன். . . ஐ.நா மன்றம் இலங்கைல் நடந்தது இனப்படுகொலை தான் என்று சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிரூபிக்க மக்களிடமிருந்து 1 மில்லியன் அதாவது 10 இலட்சம் வாக்குகள் கேட்டு இருக்கிறது. . .

ஆனாலும் இப்போ வரைக்கும் 2 இலட்சம் வாக்குகள் தான் வந்து இருக்கு. . .

இத நினைத்து கண்டிப்பா நாம எல்லாம் வெட்கப்படனும். . உலகத்துல கிட்ட தட்ட 13 கோடி தமிழ் மக்கள் பரவி வாழ்கிறோம் . . குறைந்தபட்சம் 1 கோடி பேராவது இணையதளம் பயன்படுத்றோம். . .

ஆனாலும் வெறும் 10 இலட்சம் வாக்குகளுக்கு இந்த முக்கு முக்குறோம். . .

இதோ இந்த இணைப்பை பயன்படுத்தி 10 இலச்சத்தில் நீங்களும் ஒருவர் ஆகுங்க. . . www.tgte-icc.org

அதோடு நிறுத்தாமல் கட்டாயம் உங்க நண்பர்களுக்கு பகிருங்கள். . இவ்வளவு குறைவான வாக்குகளுக்கு காரணம் மக்களிடம் முழுமையா போய் சேரவில்லை என்பது தான். . . எனவே தயவு செய்து பகிருங்கள். . .
.
இப்படிக்கு உங்களில் ஒருவன்

SaraK said...

ஒரு சந்தேகம்...
ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக்கும் ஒரு குழு / கட்சி ஜனநாயக ரீதியிலான இன்னும் ஒரு குழுவையோ / கட்சியையோ நடத்த முடியாதா...
அப்படி செய்ய முடியும் என்றால் திரு.பிரபாகரன் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை...

Kalaiyarasan said...

//ஒரு சந்தேகம்...
ஆயுதம் ஏந்திய போராட்டத்தில் இருக்கும் ஒரு குழு / கட்சி ஜனநாயக ரீதியிலான இன்னும் ஒரு குழுவையோ / கட்சியையோ நடத்த முடியாதா...
அப்படி செய்ய முடியும் என்றால் திரு.பிரபாகரன் அவர்கள் ஏன் அதை செய்யவில்லை...//

இந்த ஆலோசனையை புலிகளின் தலைமைக்கு பலரும் சொல்லி இருந்தனர். புலி ஆதரவு அறிவுஜீவிகள் முதல், இந்தியா, அமெரிக்கா வரையில் நேரடியாகவே கேட்டிருந்தார்கள். ஆனால், பிரபாகரன் அந்த யோசனைக்கு சம்மதிக்கவில்லை. புலிகள் இயக்கத்தின் அரசியல் பிரிவு கூட, இராணுவத்திற்கு கட்டுப்பட்ட, முக்கியத்துவம் குறைந்த அமைப்பாக இருந்தது. பாராளுமன்ற அரசியல் பற்றி புலிகளிடம் என்றைக்குமே நல்ல அபிப்பிராயம் இருக்கவில்லை. அதனை இழிவானதாக கருதினார்கள். அவர்கள் தமது பலம் ஆயுதங்களில் தங்கி இருக்கிறது என்று நம்பினார்கள். தேர்தல்களில் கிடைக்கும் வெற்றி, தோல்விகளை சந்திப்பதற்கு புலிகள் தயாராக இருக்கவில்லை என்றும் ஒரு சாரார் கூறுகின்றனர். இருப்பினும், புலிகள் ஒட்டுமொத்தமாக பாராளுமன்ற அரசியலை நிராகரித்திருந்தனர் என்பது யதார்த்தம்.

அவ்வாறான ஒரு இராணுவவாத இயக்கம், அரசியல் கட்சி ஒன்றை உருவாக்காமல் இருந்தது வியப்பில்லை. வரலாற்றில் ஒரேயொரு தடவை. மாத்தையா தலைமையில் "மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி" என்ற பெயரில் அரசியல் கட்சி ஒன்று பதிவு செய்யப் பட்டது. பிரேமதாசாவுடனான பேச்சுவார்த்தை காலத்தில் சில காலம் இயங்கியது. மீண்டும் போர் தொடங்கியவுடன் அதன் செயற்பாடுகள் நின்று விட்டன. பிற்காலத்தில் மாத்தையாவும், அவரது ஆதரவாளர்களும் களையெடுக்கப் பட்டனர். அதன் பிறகு அரசியல் கட்சி பற்றிய பேச்சை யாரும் எடுக்கவில்லை.

ரணிலுடனான சமாதானப் பேச்சுவார்த்தை காலத்தில், பழைய அரசியல் கட்சியை புதுப்பிக்குமாறு மத்தியஸ்தர்கள் கேட்டிருந்தனர். ஆனால், புலிகள் அதை விரும்பவில்லை. அதற்குப் பதிலாக தமிழ் தேசியக் கூட்டமைப்பை உருவாக்கினார்கள். கூட்டணி, டெலோ, ஈபிஆர்எல்ப் ஆகிய கட்சிகளில் புலிகளுக்கு ஆதரவான அரசியல்வாதிகளை தெரிந்தெடுத்து, மேலதிகமாக "நேரடியான" புலி ஆதரவு அறிவுஜீவிகளையும் ஒன்று சேர்த்து தான் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப் பட்டது. அதன் மூலம் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தவறுகள் தங்களைப் பாதிக்காது என்று புலிகள் நம்பி இருக்கலாம்.

SaraK said...

Thank You Sir...!!!

sevvelar said...

வெள்ளையர்களின் மற்றும் உலகில் உள்ள வல்லாதிக்க அரசியல் அமைப்புகளின் கோட்பாடுகளை புரிந்துகொண்ட புரட்சிஇயக்கம் எந்தமாதிரியான வெளிப்படைத் தன்மைகளை கொண்டிருக்க வேண்டும் என்பதையும், எவற்றையெல்லாம் மறைமுகமாக வைத்திருக்க வேண்டும் என்பதையும், தமிழ் மக்களிடையே பொருளாதார மற்றும் சமூக (சாதி) ஏற்றத்தாழ்வு உணர்ச்சிகளை ஒடுக்கும்படியான ஒரு தூய ஒழுக்கப் பண்பாட்டு அடிப்படை இல்லாமல் விடுதலைப் புரட்சிக்கான அரசியல் போராட்டமோ ஆயுதப் போராட்டமோ முழுமையான தூய ஒற்றுமையுடனும் முழு வலிமையுடனும் இயங்கமுடியாது என்பதையும், மேலும் இந்திய அரசியலின் ஆரியஇனவாதத் தன்மையையும் இந்திய அரசியலையும் ஆட்டிப்படைக்கும் மேற்குலக வல்லான்மையும் தமிழகத்தில் இருக்கும் திராவிட மனப்பான்மையும் தமிழர் விடுதலை அரசியலுக்கு ஏற்றதில்லை என்பதையும், எனவே தமிழகத்தில் தமிழின அரசியலுக்குரியவர்களை அறிந்து அவர்களையும் தகுந்தபடி வலுப்படுத்தி பக்கபலமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதையும் புலித் தலைவர் உணர்ந்திருக்கவில்லை.