Friday, April 25, 2014

ஆப்கான் அகதிகள் - ஈரானில் இன்னலுறும் தீண்டத்தகாதவர்கள்

தமிழ்நாட்டு முகாம்களில் வாழும், ஈழத் தமிழ் அகதிகளின் துயரக் கதைகளை பலர் கேள்விப் பட்டிருப்பார்கள். ஈரானில் தஞ்சம் கோரியுள்ள, ஆப்கானிஸ்தான் அகதிகளின் நிலைமையும், அதற்கு சற்றும் குறைந்தது அல்ல. ஈரானில் கட்டிடத் தொழில் செய்யும் ஒரு இடத்தில் படுத்துறங்கும் இந்தக் குழந்தையின் படமே, அவர்கள் படும் இன்னல்களை புரிந்து கொள்ள போதுமானது.

ஈரானில் எங்கு பார்த்தாலும், அடி மட்டத் தொழிலாளிகள் ஆப்கானிய அகதிகளாகவே இருப்பார்கள். புதிய கட்டிடங்கள் கட்டப் படும் இடங்களில் அவர்களைக் காணலாம். அவை பெரும்பாலும், ஈரானியர்கள் செய்ய விரும்பாத, கடின உழைப்பைக் கோரும் வேலைகள். ஆப்கான் அகதிகள் மட்டுமே, கொதிக்கும் வெயிலில்,கடினமான வேலை செய்யத் தயாராக இருப்பார்கள். அவர்களுக்கு கிடைக்கும் கூலியும் குறைவு. அவர்களது உழைப்பை சுரண்டும் ஈரானிய முதலாளிகள், சில நேரம் மாதக் கணக்காக சம்பளம் கொடுக்காமல் ஏமாற்றுவார்கள். அதற்கு எதிராக எங்கேயும் முறைப்பாடு செய்ய முடியாது. ஏழை சொல் அம்பலம் ஏறாது.

ஆப்கானிய அகதிகளும், ஈரானியர்கள் போன்று முஸ்லிம்கள் தான். ஈரான் அதிகார வர்க்கமான இஸ்லாமிய மதத் தலைவர்கள், அகதிகளின் துயரைத் துடைப்பதற்கு துரும்பைக் கூட எடுத்துப் போடவில்லை. இதே மதத் தலைவர்கள் தான், ஆப்கானிஸ்தானில் போராடிக் கொண்டிருந்த முஜாகிதீன் குழுக்களுக்கு கொடுப்பதற்காக, பள்ளிவாசல்களில் நிதி சேகரித்துக் கொடுத்தார்கள். அந்த நிதியில் பெரும்பகுதி ஆயுதங்கள் வாங்கப் பயன்பட்டது.

ஈரானிய "தொப்புள்கொடி உறவுகள்" அனுப்பிய நிதியும்,ஆயுதங்களும் ஆப்கான் போரினை தீவிரப் படுத்தியது. அதன் விளைவாக, அப்பாவிப் பொதுமக்கள் அகதிகளாக ஈரானுக்குள் நுளைந்தார்கள். ஆப்கான் போராளிகளுக்கு உதவுவதற்காக நிதி சேகரித்துக் கொடுத்த மதத் தலைவர்கள், தமது நாட்டிற்குள் புகலிடம் கோரிய அகதிகளை கண்டுகொள்ளாமல் புறக்கணிக்கின்றனர்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகளின் நிலைமை, இந்தியாவில் வாழும் தீண்டத்தகாத சாதியினருடன் ஒப்பிடத் தக்கது. அவர்களை யார் வேண்டுமானாலும், என்னவும் செய்யலாம். அரசாங்கமும், மதத் தலைவர்களும் ஏனென்று கேட்க மாட்டார்கள். ஆப்கான் அகதித் தொழிலாளர்கள், உழைப்புச் சுரண்டலுக்கு மட்டும் பலியாவதில்லை. பணக்கார ஈரானியர்களின் வீடுகளில் வேலைக்காரிகளாக பணியாற்றும் பெண்கள், பாலியல் சுரண்டலுக்கும் ஆளாகின்றனர்.

எண்பதுகளில், ஆப்கான் போர் தொடங்கிய காலத்தில் இருந்து, இலட்சக் கணக்கான ஆப்கான் அகதிகள் ஈரானில் தஞ்சம் கோரியுள்ளனர். பெரும்பாலும், ஈரானில் பேசப் படும் பார்சி (டாரி) மொழி பேசும் ஆப்கானியர்கள் தான், ஈரானுக்கு அகதிகளாக சென்றுள்ளனர். (பஷ்டூன் மொழி பேசும் ஆப்கானியர்கள் பெரும்பாலும் பாகிஸ்தான் பக்கமாக புலம்பெயர்ந்தனர்.) டாரி மொழி பேசும் மக்கள் ஈரான் எல்லையோரம் அமைந்துள்ள ஹெராட் நகரிலும், அதைச் சூழவும் வாழ்கின்றனர். ஆகையினால், ஈரானியர்களும், ஆப்கானிய அகதிகளும், இனத்தால், மொழியால், மதத்தால் ஒன்று பட்டவர்கள். அப்படி இருந்தும் ஏனிந்த பாரபட்சம்?

ஈரானில் தங்களுக்கு வரவேற்பு இல்லை என்பதும், பல இன்னல்களை சகித்துக் கொண்டு, அவல வாழ்க்கை வாழ வேண்டும் என்பதும், ஆப்கான் அகதிகளுக்கு தெரியும். இருந்தாலும், சமாதானம் நிலவும் ஒரு நாட்டில் வாழ்கிறோம் என்று திருப்திப் பட்டுக் கொள்கின்றனர். நிரந்தர யுத்த பூமியாகி விட்ட ஆப்கானிஸ்தானில், மரணம் எந்த நேரத்தில் வரும் என்று தெரியாது. ஈரானில் மரண பயம் இல்லை என்பதால், எல்லாக் கஷ்டங்களையும் சகித்துக் கொண்டு வாழ்கிறார்கள்.

ஈரானில் வாழும் ஆப்கான் அகதிகள் ஒரே மொழியை பேசுகின்றார்கள். ஒரே மதத்தை பின்பற்றுகிறார்கள். எதற்காக ஈரானிய முதலாளிகள் அவர்களை இரக்கமின்றி சுரண்ட வேண்டும்? எதற்காக ஈரானிய அரசு அவர்களை பாரபட்சமாக நடத்த வேண்டும்? இதே கேள்விகளை, தமிழகத்தில் வாழும் ஈழத் தமிழ் அகதிகள் விடயத்திலும் கேட்கலாம்.

இதற்கெல்லாம் விடை ஒன்று தான். மத உணர்வு, மொழி உணர்வு, இன உணர்வு, தேசிய உணர்வு, இவை எல்லாம் மக்களை மூளைச் சலவை செய்து, முட்டாள்களாக வைத்திருப்பதற்கு மட்டுமே உதவும். எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை நம்பினாலும், முதலாளிகளின் குணம் ஒன்று தான். அவர்களால் சுரண்டப் படும் மக்களின் பிரச்சினைகளும் ஒன்று தான்.


2 comments:

mubarak kuwait said...

எல்லாவற்றையும் பணம் தான் தீர்மானிக்கின்றது. எந்த நாட்டில் வாழ்ந்தாலும், எந்த மொழி பேசினாலும், எந்த மதத்தை நம்பினாலும், முதலாளிகளின் குணம் ஒன்று தான். அவர்களால் சுரண்டப் படும் மக்களின் பிரச்சினைகளும் ஒன்று தான்.
well said

Anonymous said...

இந்தியாவில் வாழும் "தீண்டத்தகாத" சாதியினருடன் ஒப்பிடத் தக்கது// சரியான சொற் பிரயோகம் அல்ல அவர்களை "தாழ்த்தப்பட்ட" அல்லது "தீண்டத்தகாதவர்களாக்கப் பட்ட" என்று தான் இருக்க வேண்டும். அவர்கள் உங்களுக்கும் "தீண்டத்தகாதவர்கள்" தானா ? இதுவும் "உயர்" சாதி மன நிலை தான் இதை வன்மையாக கண்டிக்கிறேன்