Wednesday, April 23, 2014

நெதர்லாந்தில் ஓர் "இனவாதக் கிராமம்"


"சிங்கள, தமிழ் பாட்டாளி வர்க்க ஒற்றுமை எப்படி சாத்தியமாகும்? சிங்கள ஏழைகள், பாட்டாளிகள் தான், தீவிரமான இனவெறியர்களாக உள்ளனர்." தமிழ் தேசியத்தை ஆதரிக்கும் மேட்டுக்குடித் தமிழ் அரசியல் ஆர்வலர்கள் சிலர், இது போன்ற வாதங்களைக் கூறி, இடதுசாரியத்தை நிராகரிப்பதுண்டு. இது சிங்கள பாட்டாளிகளுக்கு மட்டுமே பொதுவான குணாம்சம் அல்ல. உலகம் முழுவதும் அப்படித் தான். "பணக்கார மேற்கத்திய நாடான" நெதர்லாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல.

அண்மைக்காலமாக, டய்ன்டோர்ப் (Duindorp) எனும் கிராம மக்கள், வெளிநாட்டவர்களுக்கு எதிரான இனவெறிச் செயல்களில் ஈடுபடுவதாக, டச்சு ஊடகங்களில் பரபரப்பாக பேசப் படுகின்றது. அரசாங்க மட்டத்திலும், டய்ன்டோர்ப் மக்களின் இனவெறிக்கு எதிராக கண்டனங்கள் தெரிவிக்கப் பட்டுள்ளன.

டய்ன்டோர்ப், நெதர்லாந்தின் அரசியல் தலைநகரமான டென் ஹாக் (The Hague) கிற்கு அருகில் உள்ள ஒரு மீன்பிடிக் கிராமம். அங்கு வாழும் பூர்வீக டச்சு மக்களில் பெரும்பாலானோர், குறைந்தளவு வருமானம் ஈட்டும் மீனவர்கள் அல்லது தொழிலாளர்கள். அதாவது பாட்டாளி வர்க்க மக்கள். அது ஒரு "மூடுண்ட சமுதாயம்". வெளியார் யாரும் அங்கு வந்து குடியேறுவதை, அவர்கள் அனுமதிப்பதில்லை.

டய்ன்டோர்ப் கிராமத்தில், பல குடியிருப்புகளை கட்டியுள்ள Vestia நிறுவனம், பல வெளிநாட்டவர்களையும் குடியமர்த்தி உள்ளது. அங்கு வாழும் வெளிநாட்டவர்கள், தினசரி இனத் துவேஷத்திற்கு முகம் கொடுக்க வேண்டியுள்ளது. அவர்களின் வீட்டு ஜன்னல்கள் கல் வீசி உடைக்கப் பட்டுள்ளன. வீட்டுச் சுவர்களில், கதவுகளில், "நாஸி ஸ்வாஸ்திகா" சின்னம் வரையப் பட்டது. வீதியில் நடந்தால், இனவாதக் கூச்சல்களை சகித்துக் கொண்டு செல்ல வேண்டியுள்ளது.

அங்கு நடக்கும் சம்பவங்களை ஆவணப் படுத்தச் சென்ற உள்ளூர் தொலைக்காட்சி கமெராவுக்கு முன்னாலேயே இனவாதம் பேசுகின்றனர். வெளிநாட்டவர்கள் அங்கிருந்து வெளியேறி, தமது நாட்டுக்கு திரும்பிச் செல்ல வேண்டும் என்று சொல்கின்றனர்.

டய்ன்டோர்ப் கிராமத்தில் தான், இனவாதக் கட்சியான PVV க்கு அதிக வாக்குகள் (35%) கிடைத்துள்ளன. டய்ன்டோர்ப் மக்கள் உண்மையிலேயே இனவாதிகள் தானா? இது குறித்து சில ஊடகங்கள் ஆராய்ந்த பொழுது, அந்த மக்களின் அடிப்படைப் பிரச்சினை பொருளாதாரம் என்பது தெரிய வந்துள்ளது.

எந்த நாட்டில் பொருளாதாரப் பிரச்சினை இருந்தாலும், அடித்தட்டு மக்கள் தான் அதிகமாகப் பாதிக்கப் படுவார்கள். டய்ன்டோர்ப்வாசிகளில் அதிகமானோர், வேலை வாய்ப்பின்மையால் அரச உதவித் தொகையில் வாழ்கின்றனர். முன்பு அவர்கள் செய்து வந்த மீன்பிடித் தொழிற்துறை நலிவடைந்து விட்டது. அதே நேரம், வாடகை வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனம், வீட்டுமனை சந்தையை கட்டுப்படுத்துவதற்காக, குறைந்தளவு வீடுகளையே குறைவான வாடகைக்கு விடுகின்றது. (நெதர்லாந்தில், வாடகை வீடுகளை வழமையாக பெரிய நிறுவனங்கள் தான் கட்டிக் கொடுக்கின்றன.)

வீட்டு மனை நிறுவனம், "பழைய கட்டிடங்கள்" என்று கூறி, ஏழைகளின் வீடுகளை உடைத்து, அங்கே புதிய கட்டிடங்களை கட்டி வருகின்றது. (இது வழமையாக நாடு முழுவதும் நடக்கின்றது.) நவீன வசதிகளுடன் கூடிய புதிய வீடுகளுக்கு, வாடகை கட்டி குடியேறும் அளவிற்கு, அங்குள்ள மக்களிடம் பண வசதி இல்லை. டய்ன்டோர்ப்வாசிகளின் வளர்ந்து விட்ட பிள்ளைகளுக்கு, வீடு கிடைப்பது குதிரைக் கொம்பாக உள்ளது.

படிப்பறிவில்லாத பாமர மக்களுக்கு, பொருளாதாரப் பிரச்சனைகளை புரிந்து கொள்ளும் பக்குவம் கிடையாது. அவர்களின் கண்களுக்கு தெரிவதெல்லாம், தமது இடத்தில் குடியேறியுள்ள வெளிநாட்டவர்கள் தான். தங்களுக்கு வீடு கிடைக்காத பொழுது, எங்கிருந்தோ வரும் வெளிநாட்டவர்களுக்கு எப்படிக் கிடைக்கின்றது என்ற பொறாமை உணர்வும், இனவாதத்தை தூண்டி விடுகின்றது. உண்மையில், ஒரு சிறு தொகையினர் தான் இனவெறிச் செயல்களில் ஈடுபடுகின்றனர். ஆனால், அவர்கள் தான் உள்ளூர் அரசியலில் தாக்கம் செலுத்துகின்றனர்.

பொதுவாக, நெதர்லாந்து மக்களிடம் இனவாதம் கிடையாது என்று, பிற ஐரோப்பிய நாடுகளில் வாழும் வெளிநாட்டவர்கள் நினைக்கின்றனர். உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் நடப்பதைப் போன்று, நெதர்லாந்திலும் பொருளாதாரப் பிரச்சினைகள் வரும் நேரம், இனவாதம் அதிகரிக்கின்றது. நெதர்லாந்தில் மூன்று தலைமுறைகளாக வாழும், துருக்கி, மொரோக்கோ நாட்டவர்கள் அதை உணர்ந்துள்ளனர்.

சுமார் ஐம்பது வருடங்களுக்கு முன்னர், நெதர்லாந்தில் வேலை வாய்ப்புக் கிடைத்து வந்து குடியேறிய முதலாவது தலைமுறையினர், உள்ளூர் டச்சு மக்களினால் வரவேற்கப் பட்டனர். அன்று பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து கொண்டிருந்தது. அப்போது, இந்த நாட்டில் வாழும் அனைவருக்கும் வேலை கிடைத்து வந்த காலம் அது. இன்று காலம் மாறி விட்டது. பூர்வீக டச்சு சமுதாயத்திலும், வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகின்றது. கூடவே வறுமையும் அதிகரிக்கின்றது. கஷ்டமான காலத்தில், மக்கள் மத்தியில் ஏற்படும் மனக் கசப்புகள், அரசுக்கும், முதலாளித்துவத்திற்கும் எதிராக திரும்பி விடும் அபாயம் உள்ளது.

இனவாதக் கட்சிகள், அந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றன. ஏழை மக்களை இனவாதிகளாக மாற்றும் சதிவேலைகளில் ஈடுபடுகின்றன. இந்த இனவாதக் கட்சிகளுக்கு பின்புலத்தில், பெரும் முதலாளிகள் இருப்பது ஒன்றும் இரகசியம் அல்ல.

மேலதிக தகவல்களுக்கு : 
Duindorp: is Nederland racistischer geworden?; http://www.eenvandaag.nl/binnenland/50801/duindorp_is_nederland_racistischer_geworden_ Allochtonen weggepest in Duindorp; 
http://nos.nl/artikel/637119-allochtonen-weggepest-in-duindorp.html

No comments: