Wednesday, February 05, 2014

ஈழப் போராட்டமும், ஸ்டாலின் ஆட்சியும் - சில ஒற்றுமைகள்

(ஸ்டாலினின் மறு பக்கம்: 
 உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்) 
 (ஏழாம்  பாகம்)


ஸ்டாலின் பற்றிய மீள்பார்வை என்பதன் அர்த்தம், ஸ்டாலின் செய்த தவறுகளை நியாயப் படுத்துவதல்ல. ஒரு வரலாற்று நாயகனை, அன்றைய வரலாற்று காலகட்டத்துடன் புரிந்து கொள்ள வேண்டும் என்பது தான். உதாரணத்திற்கு, “முஸ்லிம்களின் இறைதூதர் ஒரு முகமது ஒரு பயங்கரவாதி, பல இலட்சம் பேரைக் கொன்ற கொலைகாரன்…” என்று, ஐரோப்பாவில் சில தீவிர வலதுசாரி கட்சியினர் பிரச்சாரம் செய்கின்றனர். இஸ்லாம் என்ற புதிய மதத்தை உருவாக்குவதற்கான போரில், முகமது நேரடியாகவே நிறையக் கொலைகளை செய்திருக்கலாம். ஆனால், அவற்றை 1500 வருடங்களுக்கு முன்பிருந்த அரேபியாவின் சமூக - அரசியல் நிலைமையுடன் புரிந்து கொள்ள வேண்டும்.

இன்று அதியுயர்ந்த நாகரீகம் அடைந்து விட்டதாக பீற்றிக் கொள்ளும் மேலைத்தேய நாடுகளிலும் அது தான் நிலைமை. இன்றைக்கு நாம் மதிக்கும் பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு, 19 ம் நூற்றாண்டில், அல்லது 20 ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான தோற்றப்பாடு தான். அப்போது கூட, பெண்களுக்கும், வருமானம் குறைந்த ஏழைகளுக்கும் வாக்களிக்கும் உரிமை இருக்கவில்லை. அது வரையும், ஐரோப்பிய நாடுகளில் மிகவும் கொடூரமான சர்வாதிகாரிகள் ஆட்சி செய்தனர். பல ஐரோப்பிய நாடுகளில், மன்னராட்சி, அல்லது நிலப்பிரபுத்துவ ஆட்சி நிலவியது.

பிரிட்டனில், குரொம்வெல் மன்னராட்சியை தூக்கி எறிந்து விட்டு, பாராளுமன்ற ஆட்சியை கொண்டு வந்தார். ஆனால், அதற்காக பிரிட்டிஷ் மக்கள் பெரிய விலை கொடுக்க வேண்டியிருந்தது. சுருக்கமாக, "குரொம்வெல் இன்னொரு ஸ்டாலின் மாதிரி… அல்லது ஸ்டாலின் இன்னொரு குரொம்வெல் மாதிரி" என்று கூறலாம். பிரிட்டனில் பாராளுமன்றம் தோன்றிய புரட்சி நடந்த காலத்திலும், அதற்குப் பின்னரும் பல இலட்சம் மக்கள் பலியானார்கள். குரொம்வெல்லுடன் சேர்ந்து போராடிய தோழர்களும், பிற்காலத்தில் கொல்லப் பட்டனர். ஆனால், நாம் ஏன் அதைப் பற்றிப் பேசுவதில்லை? ஏனென்றால், இன்று நாங்கள் அனுபவிக்கும் பாராளுமன்ற முறையின் தோற்றுவாய் அது தான். பிரிட்டனில் ஒரு குரொம்வெல் தோன்றியிரா விட்டால், இன்றைக்கு எந்த நாட்டிலும் பாராளுமன்ற ஜனநாயகம் இருந்திராது.

பிரெஞ்சுப் புரட்சி பற்றி பெருமையாகப் பேசும் பலர், அந்தக் காலத்தில் நடந்த படுகொலைகளை அறிந்து வைத்திருப்பதில்லை, அல்லது அறிந்து கொள்ள விரும்புவதில்லை. எனது நண்பர் ஒருவர், முன்பு ட்ராஸ்கியவாதியாக இருந்து, தற்போது தமிழ் தேசியவாதியாக மாறி இருக்கிறார். அவர் பிரெஞ்சுப் புரட்சியின் பின்னர் தோன்றிய சர்வாதிகாரி ரொபெஸ்பியர் பற்றி, உயர்வாகப் பேசிக் கொள்வார். பிரபாகரனுடன் ஒப்பிட்டுப் பார்க்குமாறு கூறுவார். ஆனால், அவருக்கு இன்றைக்கும் ஸ்டாலினைப் பிடிக்காது. கொடுங்கோலன், கொலைகாரன் என்று ஸ்டாலினை வெறுப்பதற்கான காரணங்களை அடுக்குவார். இப்படித் தான் பலர், தமக்குள்ளே முரண்பட்டுக் கொள்கின்றனர்.

ரொபெஸ்பியர் பிரான்சில் என்ன செய்தாரோ, அதையே தான் ஸ்டாலின் ரஷ்யாவில் செய்தார். இருவரும் பல்லாயிரம் பேர்களின் கொலைகளுக்கு காரணமாக இருந்துள்ளனர். ரொபெஸ்பியர், பிரெஞ்சுப் புரட்சியில் முன்னுக்கு நின்று போராடிய தோழர்களையும் விட்டு வைக்கவில்லை. கருத்து முரண்பாடு கொண்ட அத்தனை பேரையும் கழுத்து வெட்டிக் கொன்றான். ரொபெஸ்பியரின் ஆட்சியை, ஒரு பயங்கரவாத ஆட்சி என்று தான் இன்றைக்கும் பல சரித்திர ஆசிரியர்கள் கூறுகின்றனர். 

பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர், தாம் விடுதலை பெற்று விட்டதாக நம்பிய பிரெஞ்சு மக்கள், ரொபெஸ்பியரின் கொடுங்கோல் ஆட்சியின் கீழ், எந்த நேரம் கழுத்துக்கு கத்தி வருமோ என்று பயந்து கொண்டு வாழ்ந்தனர். இருந்தாலும், ரொபெஸ்பியர் ஆட்சியினால் ஒரு நன்மை விளைந்தது. ஆட்சியை விட்டு அகற்றப்பட்ட மன்னர்களும், நிலப்பிரபுக்களும் மீண்டும் தலை காட்டவில்லை. இன்று, எந்தவொரு உலக நாட்டிலும், முன்பிருந்ததைப் போல, நிலப்பிரபுத்துவ- மன்னராட்சி இல்லையென்றால், அதற்கு ரொபெஸ்பியரின் கொடுங்கோன்மை ஒரு முக்கிய காரணம்.

ஸ்டாலினை விமர்சிக்கும் பலர், மேற்குறிப்பிட்ட வரலாற்றுக் காரணிகளை கவனத்தில் எடுப்பதில்லை. ஸ்டாலின் ஆட்சியில், 1937 - 1938 ஆகிய இரண்டு வருடங்களில் மட்டும், இலட்சக் கணக்கானோருக்கு பேர் மரண தண்டனை விதிக்கப் பட்டது. “மக்கள் விரோதி” என்ற குற்றச்சாட்டில் தான், அநேகமான கைதுகள் இடம்பெற்றன. சார் மன்னராட்சி ஆதரவாளர்கள், முதலாளிகள், நிலப்பிரபுக்கள், பணக்கார விவசாயிகள், எதிர்க் கட்சியினர், ஆகிய “வழமையான” சோவியத் அரச எதிர்ப்பாளர்கள், எப்போதும் போல கைது செய்யப் பட்டனர்.

ஸ்டாலினை எதிர்ப்பவர்கள் கூறுவது போன்று, மேற்குறிப்பிட்ட அரச எதிர்ப்பாளர்கள் மட்டும் கைது செய்து, கொலை செய்யப் படவில்லை என்பது உண்மை தான். ஏராளமான கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள், தலைவர்கள் கூட கைது செய்யப் பட்டு, சுட்டுக் கொல்லப் பட்டனர். சில நேரம், அவர்களது மனைவிமாரும் கைது செய்யப் பட்டனர். அவர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். தந்தையும், தாயும் கைதானதால், திடீரென அநாதரவான நிலைக்கு தள்ளப்பட்ட அவர்களது பிள்ளைகள், அநாதை இல்லங்களில் சேர்க்கப் பட்டனர்.

அது மட்டுமல்ல, பெரிய பதவியில் இருக்கும் ஒருவர் கைது செய்யப் பட்ட சந்தர்ப்பங்களில், அவரது குடும்பம், உறவினர்கள், நண்பர்கள், அவருக்கு கீழ் வேலை செய்தவர்கள், என்று ஒரு பெரும் பட்டாளமே ஒட்டுமொத்தமாக கைது செய்யப் பட்டது. மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டவருடன் தொடர்பு வைத்திருந்தவர்கள், அது அவரது மனைவி, பிள்ளைகளாக இருந்தால் கூட, குற்றம் சாட்டப் பட்டவருடனான தொடர்புகளை துண்டித்துக் கொள்ள வேண்டும். பொது வெளியில், அவர் மீதான குற்றச் சாட்டுகளை சுமத்தி, கண்டிக்க வேண்டுமென்ற நிர்ப்பந்தம் இருந்தது. 

இரண்டாம் உலகப்போர் வெடித்தவுடன், முன்னரங்க நிலைகளில், நாஜி படைகளை எதிர்த்து போரிட்ட சோவியத் செம்படை வீரர்களுக்கு, இன்னொரு நெருக்கடியும் சேர்ந்து கொண்டது. அவர்கள் யாரும் எதிரியிடம் சரணடையவோ, அல்லது உயிருடன் பிடிபடவோ கூடாது என்று, ஸ்டாலின் கண்டிப்பான உத்தரவு போட்டார். எதிரியிடம் சரணடைந்த அல்லது பிடிபட்ட படையினரின் மனைவிமார் கூட கைது செய்து சிறையில் அடைக்கப் பட்டனர். பல வருடங்கள், கடூழிய தடுப்பு முகாம்களில் போட்டு தண்டிக்கப் பட்டனர். (எதிரிப் படையினரிடம் சரணடையுமாறு, மனைவிமாரே தூண்டி இருக்கலாம் என்ற சந்தேகம் நிலவியது. சில குடும்பங்களில் அப்படியும் நடந்துள்ளது.) 

ஜேர்மனிய நாஜி படையினரிடம் பிடிபட்ட (அல்லது சரணடைந்த) ஸ்டாலினின் மகன் லெப்டினன்ட் யாகோப்பிற்கும், அவனது மனைவிக்கும் அதே அவல நிலைமை ஏற்பட்டது. தனது மகன் என்பதற்காக, ஸ்டாலின் கருணை காட்டவில்லை. சட்டத்திற்கு முன்னால் அனைவரும் சமம் என்று கண்டிப்பாக கூறி விட்டார்.

ஜெர்மனி, தன்னிடம் பிடிபட்ட ஸ்டாலினின் மகனை ஒரு பகடைக் காயாக பயன்படுத்த விரும்பியது. சோவியத் செம்படையினரிடம் பிடிபட்ட, ஜெர்மன் பீல்ட் மார்ஷல் (அல்லது ஹிட்லரின் மைத்துனர்) ஒருவருக்கு பதிலாக, ஸ்டாலினின் மகனை கைதிப் பரிமாற்றம் செய்ய விரும்புவதாக, ஜெர்மனி தகவல் அனுப்பியது. அதற்கு ஸ்டாலின் அனுப்பிய பதில்: “ஒரு லெப்டினன்ட்டுக்கு பதிலாக மார்ஷலை பரிமாற்றம் செய்ய முடியாது. எனக்கு யாகோப் என்ற பெயரில் ஒரு மகன் கிடையாது. எதிரியிடம் சரணடைந்த அத்தனை பேரும் துரோகிகள்.”

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்ற குற்றச்சாட்டிற்கு வலுச் சேர்பதற்காக, சிலர் மேற்குறிப்பிட்ட ஆதாரங்களை காட்டலாம். சிலர் இன்னும் ஒரு படி மேலே சென்று, "ஸ்டாலின் ஒரு பாசிஸ்ட்"  என்று அவதூறு செய்கின்றனர். ஏற்கனவே, மேற்கத்திய நாடுகளில், ஸ்டாலினை ஹிட்லரோடு ஒப்பிட்டுப் பேசும் போக்கு பரவலாக இருந்து வருகின்றது. சில தமிழர்களும் அதனை அப்படியே உள்வாங்கி, நம்மிடையே வாந்தி எடுத்து வருவது தெரிந்த விடயம்.

ஆப்பிளையும், தக்காளியையும் ஒப்பிட முடியாது. எதை எதனுடன் ஒப்பிடுவது என்றில்லாமல், பலர் குதர்க்க வாதம் செய்கின்றனர். உதாரணத்திற்கு, பிரபாகரனையும், மகிந்த ராஜபக்சவையும் ஒப்பிட்டுப் பேசும் சிலர் இருக்கின்றனர். ஆனால், அந்த ஒப்பீடு, புலிகளை ஆதரிக்கும் தமிழ் தேசியவாதிகளின் காதுகளுக்கு எட்டினால், திட்டோ திட்டென்று திட்டி, சொன்னவரை உண்டு இல்லை என்று ஆக்கி விடுவார்கள். ஆனால், அவர்கள் கூட, சில நேரம், ஸ்டாலினையும் ஹிட்லரையும் ஒப்பிடும் தவறைச் செய்கின்றனர். (அது அவர்களது வலதுசாரி முதலாளிய நம்பிக்கையின் வெளிப்பாடு.)

“தமிழின அழிப்புப் போரை நடத்திய, சிங்களப் பேரினவாதியான மகிந்த ராஜபக்சவுடன், தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய பிரபாகரனை ஒப்பிட முடியாது.” உண்மை தான். அதே நியாயம், அன்று ஐரோப்பா முழுவதையும் ஆக்கிரமித்துக் கொண்டிருந்த, பாசிச இனவெறிப் பூதத்தை எதிர்த்துப் போரிட்ட, ஸ்டாலினுக்கும் பொருந்தும் என்பதை பலர் உணர்வதில்லை.

முதலில், பாசிஸ்ட் என்ற சொல்லையே, பலர் அதன் அர்த்தம் தெரியாமல் தவறாகப் பயன்படுத்தி வருகின்றனர். இத்தாலியில் தோன்றிய முசோலினியின் பாசிஸ்ட் கட்சி, பாசிசம் என்ற சொல்லை நவீன உலகிற்கு அறிமுகப் படுத்தியது. “தீவிர தேசியவாதம், தனது இனம் அல்லது மொழி உலகிற் சிறந்தது என்ற எண்ணம், தாம் ஆளப் பிறந்த இனம் என்ற கோட்பாடு, தன்னைச் சுற்றிய பிற இனங்களை தாழ்வாக கருதுவது…” இது போன்ற பல கொள்கைகளை கொண்டது தான் பாசிசம்.

ஹிட்லரின் நாஜிசம், இன்னும் ஒரு படி மேலே சென்று, இனவெறிக் கொள்கையை புகுத்தியது. ஐரோப்பிய வெள்ளை இனத்தை, (ஹிட்லரின் மொழியில்: தூய ஆரிய இனம்) மனித நாகரீக வளர்ச்சியில் உயர்ந்த ஸ்தானத்தில் உள்ள இனமாக கருதியது. யூதர்கள், ஜிப்சிகள், ஸ்லாவியர்கள், கருப்பர்கள் போன்ற பிற இனங்களை மனிதர்களாக கருதவில்லை.

ஹிட்லரும், நாஜிகளும், பிழையான இனத்தில் பிறந்த காரணத்திற்காக பலரைக் கொன்று குவித்தார்கள்.  இனவெறி, அந்தக் கொலைகளுக்கான அடிப்படைக் காரணமாக இருந்துள்ளது. ஹிட்லரின் தடுப்பு முகாம்கள், யூதர்கள், ஜிப்சிகள் போன்ற “தாழ்ந்த” இனங்களை சேர்ந்த மக்களை, ஒரே இடத்தில் வைத்திருந்து, அழித்தொழிக்கும் நோக்கில் உருவாக்கப் பட்டன. ஆனால், சோவியத் யூனியனில் இருந்த குலாக் சிறை முகாம்களின் நோக்கம் வேறு. அங்கு சிறை வைக்கப் பட்டிருந்த கைதிகள் மரணத்தை எதிர்நோக்கி இருக்கவில்லை. சில இடங்களில், குலாக் கைதிகளுக்கு பதவியும், கல்வி கற்கும் வாய்ப்பும் கிடைத்தது. அவர்கள் செய்த வேலைக்கு ஏற்றவாறு சம்பளம் வழங்கப் பட்டது. தண்டனைக் காலம் முடிந்து, விடுதலையாகும் நேரம், கைநிறையப் பணத்துடன் வீடு திரும்பியவர்கள் ஏராளம். 

ஸ்டாலின் காலத்தில், வர்க்க எதிரிகள் என்று அடையாளம் காணப் பட்டவர்கள் மட்டுமே சிறைப் பிடிக்கப் பட்டனர். எந்தவொரு கைதுக்கும், கொலைக்கும் பின்னால் இனவெறி காரணமாக இருக்கவில்லை. (இரண்டாம் உலகப்போரில், சோவியத் யூனியனின் ஐரோப்பிய கண்டப் பகுதியில் வாழ்ந்து வந்த சிறுபான்மை இனங்கள், பலவந்தமான இடப்பெயர்வுகளால் பாதிக்கப்பட்டன. ஆனால், அன்று அவர்களுக்கு ஏற்பட்ட அத்தனை கொடுமைகளையும், ரஷ்யர்களும் அனுபவித்தனர் என்பதை மறந்து விடுகின்றனர். )

“போரில் யாரும் உயிருடன் பிடிபடவோ, சரணடையவோ கூடாது” என்று ஸ்டாலின் போட்ட உத்தரவு, பலருக்கு மனிதநேயமற்றதாக தோன்றும். சரணடைந்த அல்லது பிடிபட்ட இராணுவவீரர்களின் மனைவிமாரையும், ஸ்டாலின் சிறையில் போட்டு வருத்தினான். அதனால், அவன் ஒரு மனிதநேயமற்ற கொடுங்கோலன் என்பதற்கு அதைக் காரணமாக காட்டலாம். ஸ்டாலின் மீதான் அவர்களது குற்றச்சாட்டுக்கு பக்க பலமாக இன்னொரு தகவலையும் நானே சொல்லி விடுகிறேன். 

ஜெர்மனியுடன் போர் தொடங்கிய காலத்தில், போர்க் களத்தில் இருந்து புறமுதுகிட்டு ஓடும் இராணுவ வீரர்களை கண்டுபிடித்து தண்டிக்கவும், ஸ்தலத்திலேயே சுட்டுக் கொல்லவும் என, NKVD யின் விசேட பிரிவொன்று இயங்கியது. போர்க் களத்தில் இருந்து தப்பியோடும் வீரர்களை தண்டிக்கும் வழக்கம் எல்லா நாடுகளிலும் உண்டு. போரில் பின்வாங்கும் போராளிகளை சுட்டுக் கொல்லும் வழக்கம், புலிகள் அமைப்பினுள்ளும் இருந்தது.

மேற்குறிப்பிட்ட சம்பவங்கள், இன்றைய நாகரிக சமுதாயத்திற்கு ஒவ்வாததாக இருக்கலாம். போர் நடக்கும் காலங்களில், அறம் காணாமல் போய் விடுகின்றது. போரில் வெல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கில், பல கடுமையான விதிகள் பின்பற்றப் படுவதுண்டு. நாங்கள் எப்போதும் மேற்கத்திய கலாச்சார விழுமியங்களுடன் சிந்திக்கப் பழகி விட்டதால், எமக்கு அவை அதிர்ச்சி அளிக்கலாம். ஆனால், கீழைத்தேய கலாச்சாரத்தில் அவை சாதாரணமாக எடுத்துக் கொள்ளப் படுகின்றன.

ஒரே கொள்கை கொண்ட எல்லோரும் உலகம் முழுவதும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று எதிர்பார்ப்பது மடமைத்தனம். உதாரணத்திற்கு, ஒரு ஐரோப்பிய கிறிஸ்தவனும், இந்தியக் கிறிஸ்தவனும், ஒரே மதத்தை, ஒரே கடவுளை நம்பும் காரணத்தால், ஒரே மாதிரி செயற்படுவார்களா? அதே மாதிரி, ஸ்டாலின் ஒரு கம்யூனிஸ்ட் தான். ஆனால், அவரது செயற்பாடுகள் பல, மேற்கு ஐரோப்பிய கம்யூனிஸ்டுகளுக்கு கூட விசித்திரமாகத் தோன்றும். ஏனென்றால், அவர்கள் பிறந்து வளர்ந்த கலாச்சாரம் வேறு வேறு. 

தயவுசெய்து, யாரும் இதனை ஒரு "நிலப்பிரபுத்துவ பண்பாட்டுக் கூறு" என்று குதர்க்கமாக விவாதிக்க வேண்டாம். அது ஒரு மேலைத்தேய கண்ணோட்டம். அப்படியானால், நாங்கள் எமது தமிழ்க் கலாச்சாரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோமா? ஒரு தமிழன் முஸ்லிமாக, கிறிஸ்தவனாக, லிபரலாக, கம்யூனிஸ்டாக அல்லது வேறெதுவாக இருந்தாலும், அவனது பண்பாட்டுக் குணாம்சம் மாறுபடாது.

சில மேற்கத்திய வரலாற்று ஆசிரியர்கள், அன்று நடந்த கொடுமைகளுக்கு காரணமாக, கலாச்சாரப் பின்னணியை ஆராய விரும்புகினர். ஸ்டாலின் ஜோர்ஜிய இனத்தை சேர்ந்தவர். ஜோர்ஜியாவில் பிறந்து, வளர்ந்தவர். ஸ்டாலினின் பல செயல்களில், ஜோர்ஜிய கலாச்சாரத்தின் தாக்கம் இருந்திருக்கக் கூடும். ஜோர்ஜியர்கள், தோற்றத்தில் பிற ஐரோப்பியர்கள் மாதிரி இருப்பார்கள். ஆனால், அவர்களது கலாச்சாரம் கீழைத்தேய மரபு சார்ந்தது. சுருக்கமாக சொன்னால், ஒரு ஆங்கிலேயனை விட, ஒரு இந்தியன் ஜோர்ஜிய கலாச்சாரத்திற்கு நெருக்கமாக உணர்வான்.

ஜோர்ஜியா பல நூறாண்டுகளாக, துருக்கி ஓட்டோமான் சாம்ராஜ்யத்தின் ஒரு மாகாணமாக இருந்தது. அதனால் துருக்கிய கலாச்சாரத்தின் பாதிப்பு அதிகமாக உள்ளது. அதே நேரம், ரஷ்யாவும், அதனோடு அண்டிய சிறிய நாடுகளும், பல நூறாண்டுகள் மொங்கோலியர்களின் ஆளுகையின் கீழ் இருந்துள்ளன. மொங்கோலியர்கள் ஒரு துருக்கி இனத்தை சேர்ந்தவர்கள். மொங்கோலிய துருக்கியரின் அரசியல், இராணுவ, கலாச்சார தாக்கத்தின் விளைவாக, மொஸ்கோவை மையமாகக் கொண்ட ரஷ்ய ராஜ்ஜியம் தோன்றியது. இன்றைக்கும் அதற்கு சாட்சியமாக, கிரெம்ளின் கட்டிடம் உள்ளது. 

மத்திய ஆசியாவை சேர்ந்த துருக்கி இனத்தவர்களின் பண்பாடுகளும், போர்க் கால நெறிகளும் விசித்திரமானவை. (நாங்கள் “தமிழ்க் கலாச்சாரம்” என்று நம்பும் பல விடயங்களின் மூலம் துருக்கி கலாச்சார மரபு ஆகும்.) கீழைத்தேய மரபில், சமூகம் ஒருவரை குற்றவாளியாக கருதினால், அவரது குடும்பத்தினரும் ஒதுக்கப் படுவார்கள். எவ்வாறு பழிவாங்கும் படலத்தில், ஒட்டு மொத்த குடும்ப உறுப்பினர்களும் பாதிக்கப் படுகிறார்கள் என்பதை அறிந்து கொள்வதற்கு, தமிழ் சினிமாவை பார்த்தாலே போதும். ஒருவன் கொலை செய்யப் பட்டால், அவனுக்காக பழிவாங்க மற்றவர்கள் காத்திருப்பார்கள் என்பது, அதற்கு கூறப் படும் காரணம்.

ஸ்டாலின் காலத்தில், ஒருவர் மக்கள் விரோதி என்று கைது செய்யப் பட்டு விட்டால், அவரோடு சேர்ந்த உறவினர்கள், நண்பர்களும் கைது செய்யப் பட்டதன் காரணம் அது தான். சில நேரம் அவர்கள் பழிவாங்கும் எண்ணத்தோடு இருக்கலாம், அல்லது யாருக்கும் தீங்கு விளைவிக்காத அப்பாவியாகவும் இருக்கலாம். ஆனால், “ஒரு ஆபத்து வரும் முன் காத்துக் கொள்ளும்” நடவடிக்கை காரணமாக, அப்பாவிகள் பலரும் பாதிக்கப் பட்டனர்.

தமிழர்களுக்கு, அவர்களுக்கு நன்கு தெரிந்த சில உதாரணங்கள் மூலம் அதனை புரிய வைக்கலாம். ஈழப் போராட்டத்தில், புலிகள் பிற இயக்கங்களை “சமூக விரோதிகள்” அல்லது “இந்திய, இலங்கை அரசுகளின் கைக்கூலிகள்” போன்ற காரணங்களை கூறி, அவற்றை தடை செய்திருந்தனர். அப்போது, தடைசெய்யப் பட்ட உறுப்பினர்கள் மட்டும் கைது செய்யப் பட்டு சுட்டுக் கொல்லப் படவில்லை. சில நேரம், நெருங்கிய உறவினர்களும் பாதிக்கப் பட்டனர்.

புலிகள் அமைப்பினுள்ளே பிளவுகள் தோன்றிய காலங்களிலும், பழிவாங்கும் படலம் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தது. ஒட்டு மொத்தமாக, பிரிந்து சென்ற எல்லோரையும் தண்டிப்பதன் மூலம் தான், அந்தக் கலகங்கள் ஒடுக்கப் பட்டன. மாத்தையா குழு, கருணா குழு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்கப் பட்ட காலத்தில், ஒரு குற்றமும் செய்திராத அப்பாவி உறுப்பினர்களும் சுட்டுக் கொல்லப் பட்டனர். புலிகளால் சமூக விரோதி, அல்லது ஒட்டுக் குழு உறுப்பினர் என்று குற்றம் சாட்டப்பட்ட நபரின் குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள் எல்லோரும் சந்தேகத்திற்குள்ளானார்கள்.

ஈழப் போராட்டத்தில் மட்டுமல்ல, தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியின் போதும், இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஸ்ரீலங்கா அரச படையினரும், ஜேவிபி யினரும், ஆயுதமேந்திய நபர்களை மட்டும் குறி வைக்கவில்லை. அவர்களோடு தொடர்பான, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள், நண்பர்கள், எல்லோரும் பாதிக்கப் பட்டனர். அவ்வாறு தான் போரில் பல அப்பாவிகளும் கொல்லப் பட்டனர்.

மேலே குறிப்பிட்டது போன்ற சம்பவங்களுக்கு பொறுப்பானவர்களின் மனநிலை எப்படி இருந்திருக்கும்? எதற்காக அப்படி மனிதநேயமற்று நடந்து கொண்டார்கள்? அதைத் தான் இங்கே "கீழைத்தேய கலாச்சார மரபு" என்று குறிப்பிடுகின்றேன். இப்போதும் சில புலி ஆதரவாளர்கள் மத்தியில், அத்தகைய மனப் போக்கு காணப் படுகின்றது. அவர்கள் எந்த அளவுகோலை வைத்து மற்றவர்களுக்கு துரோகி முத்திரை குத்துகின்றார்கள் என்பதை சற்று ஆராய்ந்தால் போதும். ஸ்டாலின் காலத்திலும் அதே நிலைமை தான் இருந்தது.

இங்கே ஒரு வித்தியாசம் என்னவென்றால், எல்லாவற்றிற்கும் ஸ்டாலின் என்ற தனி மனிதனே காரணம், என்று ஒட்டு மொத்த பழியையும் அவரின் தலை மேல் போட்டு விடுகின்றனர். பிரபாகரன் என்ற தனி மனிதன் மேல் எல்லாப் பழியையும் போட்டு விட்டு, புலிகளை ஆதரித்த மக்களில் ஒரு பிரிவினர், தமது பொறுப்புகளில் இருந்து தம்மை விடுவித்துக் கொள்வது போன்றது தான் இதுவும். அன்று ஸ்டாலின் சில உத்தரவுகளைப் பிறப்பித்திருக்கலாம். ஆனால், ஸ்டாலினை ஆதரித்த பெரும்பான்மை சோவியத் மக்களும் அன்று நடந்த சம்பவங்களுக்கு பொறுப்பேற்க வேண்டும்.

புலிகள் இயக்கம் விட்ட பல தவறுகள், தமிழ் மக்களை பகைத்துக் கொண்ட நடவடிக்கைகள், "தலைவர் பிரபாகரனுக்கு தெரியாமல் நடந்திருக்கலாம்" என்று, இன்றைக்கும் பலர் நம்புகின்றனர். ஸ்டாலின் கால சோவியத் யூனியனிலும், அத்தகைய நிலைமை இருந்தது. எந்தக் குற்றமும் செய்திராத அப்பாவிகள் கைது செய்யப் பட்டதற்கு, சில NKVD அதிகாரிகளின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகள், அதிகார துஷ்பிரயோகம் காரணம் என்று மக்கள் நம்பினார்கள். இதெல்லாம் ஸ்டாலினுக்கு தெரியாது என்று தான் நம்பினார்கள். சில இடங்களில் அது துலக்கமாகத் தெரிந்தது. 

ஒருவரது வசதியான வீட்டை அபகரிக்க நினைத்தவர்கள், ஒருவரது அழகான மனைவி மீது ஆசைப் பட்டவர்கள், ஒருவரது திறமை மீது பொறாமை கொண்டவர்கள், இப்படிப் பல தனிப்பட்ட காரணங்களுக்காக, தமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்த NKVD அதிகாரிகளும் இருந்தனர். அவர்கள் ஏதாவது ஒரு பொய்க் குற்றச்சாட்டை சுமத்தி, அப்பாவிகளை கைது செய்து கொண்டு சென்றனர்.

இறுதியில், NKVD உளவு நிறுவனத்தின் தலைமை அதிகாரி, ஏசுவா மீது மக்களின் சந்தேகம் திரும்பியது. ஏசுவா பற்றி பல வதந்திகள் உலாவின. உண்மையிலேயே, ஏசுவா தனது இறுதிக் காலத்தில், ஆடம்பர வாழ்க்கையிலும், சிற்றின்பக் களியாட்டங்களிலும் பொழுதைக் கழித்து வந்தார். இந்தத் தகவல் எல்லாம் ஸ்டாலினின் காதுகளை எட்டியது. ஏசுவாவும் மக்கள் விரோதி என்ற குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப் பட்டார்.

2 பெப்ரவரி 1940 அன்று, NKVD தலைமையகத்தில், ஏசுவா பல அப்பாவிகளை சித்திரவதை செய்து கொன்ற அதே இடத்தில் வைத்து, அவருக்கு மரண தண்டனை விதிக்கப் பட்டது. ஜெர்மன், போலிஷ் அரசுகளுக்கு உளவு பார்த்ததாக, மிகக் கடுமையான தேசத் துரோகக் குற்றச்சாட்டு ஏசுவா மீது சுமத்தப் பட்டது. ஏசுவா சுட்டுக் கொல்லப் பட்ட பின்னர், “ஸ்டாலினிச பயங்கரவாதம்” என்று அழைக்கப்படும் காலம் முடிவுக்கு வந்தது. 

உண்மையில், அன்று சோவியத் யூனியனில் வாழ்ந்த மக்கள், அந்தக் காலகட்டத்தை “ஏசுவா பயங்கரவாதம்” என்று தான் கூறி வந்தனர். மேற்கத்திய சரித்திர ஆசிரியர்கள், அதனை “ஸ்டாலினிச  பயங்கரவாதம்” என்று திரித்தார்கள். NKVD யின் புதிய தலைமை அதிகாரியாக, பெரியா பதவியேற்ற பின்னர், அனைத்து அரசியல் கைதிகளின் கோப்புகளும் மீள்பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப் பட்டன. 

கவனிக்கவும்: "ஸ்டாலின் எத்தனை இலட்சம் பேரை கொன்றான்" என்று, புள்ளி விபரக் கணக்கு காட்ட நிறையப் பேர் உள்ளனர். ஆனால், ஸ்டாலினது காலத்திலேயே, இலட்சக் கணக்கான கைதிகள் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டார்கள் என்ற உண்மையை சொல்ல மாட்டார்கள். 

1940 ம் ஆண்டு வரையில், ஒன்றரை மில்லியன் கைதிகளின் வழக்குகள் திரும்பவும் விசாரிக்கப் பட்டன. இன்னமும் தீர்ப்பு சொல்லப் படாமல், நிலுவையில் இருந்த நான்கு இலட்சத்திற்கும் அதிகமானோரின் வழக்குகள் இரத்து செய்யப் பட்டன. ஒரு இலட்சத்திற்கும் அதிகமானோர் நிரபராதிகள் என்று விடுதலை செய்யப் பட்டனர். சிறைத் தண்டனை அனுபவித்துக் கொண்டிருந்த முப்பதாயிரம் பேர் உடனடியாக விடுதலை செய்யப் பட்டனர். அத்துடன், குலாக் தடுப்பு முகாம்களில் மூன்று இலட்சத்திற்கும் அதிகமானோர் விடுதலை செய்யப் பட்டனர்.

இந்த நடவடிக்கை காரணமாக, சோவியத் மக்களுக்கு, சோவியத் நீதித் துறை மீது நம்பிக்கை வந்தது. உண்மையில், ஸ்டாலின் அன்று சோவியத் நாட்டில் நடந்த எல்லாவற்றையும் உன்னிப்பாக கவனித்து வந்ததால் தான், பெருந்தொகையான நிரபராதிகள் விடுதலை செய்யப் பட்டனர். எந்தக் காரணமும் இன்றி, ஒட்டு மொத்தமாக பலரை கைது செய்வதால், எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை என்பதை ஸ்டாலின் வலியுறுத்தி வந்தார். ஆதாரம், சாட்சியம் எதுவுமற்ற குற்றச்சாட்டுகள் நிராகரிக்கப் பட வேண்டும் என்று கருதினார்.

மேலும், எழுந்தமானமாக பலரைக் கைது செய்வதன் மூலம், தேசத்தை ஆபத்தில் இருந்து காப்பாற்றி விட்டதாக, தற்பெருமை அடித்துக் கொண்ட அதிகாரிகளும் இருந்தனர். போலி என்கவுண்டர் செய்து விட்டு, பதவி உயர்வை எதிர்பார்க்கும், நம்மூர் பொலிஸ் அதிகாரிகள் போன்று தான் அவர்களும் நடந்து கொண்டனர். அப்படியான, பதவிப் பித்தர்கள் ஸ்டாலினால் கடுமையாக எச்சரிக்கப் பட்டனர்.

ஸ்டாலின் ஒரு கொடுங்கோலன் என்பதை நிரூபிக்க, ஸ்டாலினால் கொல்லப்பட்ட, கொடுமைப் படுத்தப் பட்ட மக்களின் எண்ணிக்கையை, புள்ளி விபரமாக எடுத்துப் போட்டு, நம்மை எல்லாம் அசர வைக்கும் அறிவுஜீவிகளுக்கு இந்த விபரங்கள் எதுவும் தெரியாதா? அவர்கள் படித்தவர்கள், அறிவாளிகள் என்பதால், ஸ்டாலினின் மறுபக்கமும் தெரிந்திருக்கும். ஆனால், அதை எல்லாம் மறைக்க வேண்டிய தேவை ஒன்று, அவர்களது மனதைப் பிடித்தாட்டுகின்றது. அது என்ன?

அன்றைய சோவியத் வரலாற்றை, நாங்கள் இன்னொரு கோணத்தில் இருந்து பார்ப்போம். சரி, நமது அறிவுஜீவிகள் சொல்வது மாதிரியே, அவர்களது ஆலோசனைகளுக்கு இணங்க, ஸ்டாலின் நடந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். என்ன நடந்திருக்கும்? இன்றைய உலக அரசியல் நிலவரம்,  முற்றிலும் வேறு விதமாக காட்சியளித்திருக்கும்.

(தொடரும்)இந்தத் தொடரின் முன்னைய பதிவுகள்:

1.ஸ்டாலினின் மறு பக்கம்: உலகில் மறைக்கப் பட்ட உண்மைகள்
2.நாட்டாண்மைகளை விரட்டிய நாட்டுப்புற ஏழைகள்
3.மேட்டுக்குடி அறிவுஜீவிகள் ஸ்டாலினை வெறுப்பது ஏன்?
4.சிறைக் கைதிகளும் படித்து, பதவி உயர்வு பெற உதவிய ஸ்டாலின்
5.ஆயிரம் உயிர் வாங்கிய அபூர்வ சர்வாதிகாரி!
6.“ஸ்டாலினிச பொற்காலம்”: மேட்டுக்குடியினரை காட்டிக் கொடுத்த மக்கள்  


(பிற்குறிப்பு: இந்தக் கட்டுரையில் குறிப்பிடப் படும் தரவுகள் எதுவும், ஸ்டாலினை மகிமைப் படுத்தும் சோவியத் பிரச்சார நூல்களில் இருந்து எடுக்கப் பட்டதல்ல. ஸ்டாலினை விமர்சிக்கும், மேற்கத்திய நலன் சார்ந்த எழுத்தாளர்கள் எழுதிய நூல்களில் கிடைத்த தகவல்கள் ஆகும். பழைய சோவியத் ஆவணங்கள், அந்தக் காலத்தில் வாழ்ந்த மக்களின் அனுபவக் குறிப்புகள் ஆகியவற்றை ஆதாரமாகக் கொண்டு எழுதி இருக்கிறார்கள்.) ____________________________________________________________________________________________

ஸ்டாலின் பற்றிய முன்னைய பதிவுகள்:
1.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்?
2.ஸ்டாலினைக் கண்டு அஞ்சுவோர் யார்? (பகுதி - 2)
3.பணக்கார பெற்றோரை வெறுத்த புதிய தலைமுறை இளைஞர்கள்
4.ஸ்டாலின் கால வாழ்க்கை: "எல்லாமே புரட்சிக்காக!"
5.குலாக் முகாம்கள்: உண்மைகளும் புனைவுகளும்

No comments: