Monday, October 28, 2013

பனங்கள்ளில் பிறக்கும் தமிழ் தேசிய பாட்டாளிகளின் நாட்டுப் பற்று


யாழ்ப்பாணத்தில் பரவும் மதுக் கலாச்சாரம், மது பான விற்பனை நிலையங்கள் பற்றி, அனேகமாக எல்லா எல்லா ஊடகங்களும் எமக்கு எச்சரித்துள்ளன. அதிலும் தீவிர தமிழ் தேசிய ஊடகம் என்றால், "சிங்களவன் யாழ்ப்பாணத்தில் மது பாவனையை ஊக்குவித்து, தமிழரின் பணத்தை சுரண்டுவதுடன், நுணுக்கமாக இனவழிப்புச் செய்கிறான்." என்று எழுதும்.
ஆனால், சிங்களவன் கொண்டு வந்து விற்கும் மது பானங்கள் எல்லாம், பெரும் வணிக நிறுவனங்களினால் உற்பத்தி செய்யப் படுபவை. ஒன்றில் அது யாராவது ஒரு மேலைத்தேய முதலாளியின், அல்லது தென்னிலங்கை முதலாளியின் நிறுவனமாக இருக்கும். அந்த உயர் வகை சாராயங்களை விரும்பிக் குடிப்பவர்கள், தமிழ் நடுத்தர வர்க்கத்தினர் ஆவர். ஏனெனில், அவர்களிடம் தான் அவற்றை வாங்குவதற்கு தேவையான பணம் இருக்கிறது. 


ஒரு பக்கத்தில், யாழ்ப்பாண படித்த மத்தியதர வர்க்கம், சிங்களவன் விற்கும் மதுவை வாங்கிக் குடித்து விட்டு, சிங்களவனுக்கு அடிமையாக விழுந்து கிடக்கின்றனர். இன்னொரு பக்கத்தில், தமிழ் பாட்டாளி வர்க்கத்தினர், சிங்களவன் காலில் மண்டியிடாமல் சுயமரியாதையுடன் வாழ்கின்றனர். 

யாழ்ப்பாணத்தின் பாரம்பரிய மது பானமான, தென்னங் கள் அல்லது பனங் கள் விற்கும் தவறணைகள், இன்றைக்கும் அங்கே காணப் படுகின்றன. தவறணைகளில் விற்கப்படும் கள்ளின் விலையும் மலிவு. அத்தோடு, இயற்கையில் கிடைக்கும், உடல்நலத்திற்கு கேடு விளைவிக்காத சத்துள்ள பானம். யாழ்ப்பாண கள்ளிறக்கும் தொழிலாளர்களினால், உள்ளூரில் உற்பத்தி செய்யப் படுவதால், அதனால் கிடைக்கும் வருமானமும், யாழ்ப்பாண தமிழ் மக்களிடமே திரும்பிச் செல்கின்றது. 

இன்றைக்கும், பகலில் உழைத்துக் களைத்த கூலித் தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள் தான் கள்ளுத் தவறணைக்கு செல்கின்றனர். போலிக் கெளரவம் குறைந்து விடுமென்று நினைக்கும் தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், அந்தப் பக்கம் எட்டியும் பார்ப்பதில்லை. அவர்களுக்காகத் தான் சிங்களவன் மதுக் கடைகளை திறந்து வைத்திருக்கிறான். 

தமிழ் நடுத்தர வர்க்கத்தினர், சிங்களவன் விற்கும் விஸ்கியையும், சாராயத்தையும் வாங்கிக் குடித்து விட்டு, தமிழ் தேசியம் பேசி, தமிழீழக் கனவு காண்கிறார்கள். அவர்களோடு ஒப்பிடும் பொழுது, தமிழ் பாட்டாளி வர்க்கத்தினர், உண்மையான தமிழ் தேசியவாதிகள். 


என்ன இருந்தாலும், பாட்டாளி வர்க்கத்திற்கு, எப்போதும் நாட்டுப் பற்று அதிகமாக இருக்கும்.

~~~~~~~~~~~~~~~~~~

2 comments:

-தோழன் மபா, தமிழன் வீதி said...

இலங்கை மட்டுமல்ல தோழர், இங்கு (தமிழகத்தில்) அரசே மது பானம் விற்பதால், தமிழ் இளைஞர்கள் குடியின் பிடியில் சிக்கிக்கொண்டு கிடக்கின்றனர்.

Unknown said...

முன்னரைப் போலவே பனை, னெ்னங் கள்ளுகளை அவற்றை இறக்குவோர்கள் சில கட்டுப்பாடுகளுக்கும், நடைமுறைச் சட்டத்திற்கும் அமைவாக கள் இறக்கும் இடத்திலோ, அல்லது கள்ளு இறக்குபவர் தனது வீட்டிலோ விற்கும் முறை ஒரு சிறு கைத்தொழில்போல் புகுத்தப்படுமேயாயின், பியர், சாராயம், விஸ்கி, பிரண்டி குடிகப்பவர்களது எண்ணிக்கை பெருமளவில் குறையும்.ஒரு பனையில் கள் இறக்க வருடத்திற்கு இவ்வளவு வரி எனவும், தென்னையில் கள் இறக்க இவ்வளவு வரி எனவும் வசூலிக்கமுடியும்!