Monday, January 16, 2012

எல்லாளன்: இன சமத்துவக் காவலனான சமணத் தமிழ் மன்னன்



[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 3)

"ஏலாரா என்ற ஒரு தமிழ்க்குடிமகன்,சோழ நாட்டில் இருந்து வந்து, அசெலாவை வென்று நாற்பத்தி நான்கு ஆண்டுகள், நண்பன் பகைவன் என்று பாராமல் நீதி செலுத்தினான்." (மகாவம்சம்)

துட்ட கைமுனு மகாவம்சத்திற்குப் பிடித்த கதாநாயகனாக இருந்த போதிலும், அவன் எதிரியான எல்லாளனை பற்றியும் வானளாவப் புகழ்கின்றது. "எமது நண்பர்கள் எல்லாம் நல்லவர்கள். நமது எதிரிகள் எப்போதுமே கெட்டவர்கள்." என்ற கறுப்பு, வெள்ளைப் பார்வை, குறுகிய அரசியல் நலன்களை பெற்றுத் தரலாம். ஆனால், உண்மையை அறிந்து கொள்வதற்கு உதவப் போவதில்லை. சிங்கள இனவாதிகள், துட்டகைமுனுவை தமது மாவீரனாக போற்றுவதற்கு கூறும் நியாயம், "எல்லாளன் ஒரு அந்நிய ஆக்கிரமிப்பாளன்" என்பது தான். மகாவம்சம் குறிப்பிடும் முதலாவது அந்நிய ஆக்கிரமிப்பானது, விஜயனதும், அவன் தோழர்களினதும் வருகை தான். தம்மை விஜயனின் வம்சாவளியினர் என்று கூறிக் கொள்ளும் சிங்கள இனவாதிகள், எல்லாளன் போன்றோரை ஆக்கிரமிப்பாளர்களாக காட்டுவது வேடிக்கையானது. உண்மையில், இருபதாம் நூற்றாண்டு சிங்கள-தமிழ் முரண்பாட்டு அரசியலுக்கு ஏற்றவாறு, தம்மை பூர்வ குடிகளாக காட்டுவதே அவர்களது நோக்கம். இலங்கையின் வரலாற்றை எடுத்துப் பார்த்தால், சிங்களவர்கள், தமிழர்களின் முன்னோர்கள் இலங்கையின் பூர்வகுடிகளாக இருந்துள்ளனர். அதே நேரம், இந்தியாவில் இருந்து வந்து குடியேறிய மக்கள் திரளுடனும் கலந்துள்ளனர். இன்றுள்ள சிங்களவர்களும், ஈழத் தமிழரும் கலப்பினங்கள் தான். குறுகிய மனோபாவம் கொண்ட இனவாதிகள் மட்டும், அதனை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.

வட இந்தியாவில் (வங்காள தேசம்?) இருந்து வந்து குடியேறிய விஜயனும், தோழர்களும் பேசிய மொழி என்ன? அவர்களது மதம் என்ன? அவர்கள் முதலில் பழங்குடி இனமான இயக்கர் இனப் பெண்களையும், பின்னர் பாண்டிய நாட்டுப் பெண்களையும் மணம் முடித்து வாழ்ந்துள்ளனர். அவர்களது சந்ததியினர் சிங்களவர்களா, அல்லது தமிழர்களா? உண்மையில், கி.பி. பத்தாம் நூற்றாண்டுக்கு முன்னர், சிங்களவர், தமிழர் என்ற பேதம் உருவாகி இருக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில், இலங்கையில் மட்டுமல்ல, உலகம் முழுவதும் மொழி ஒரு இனத்தின் குறியீடாக கருதப் படவில்லை. ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரே நிறுவனமயப் படுத்தப் பட்ட மதங்கள், உலகில் தோன்றலாயின. அது ஒரு "மதப் புரட்சி". நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் தன்னை, நிறுவனமயப் பட்ட மதத்துடன் இனம் கண்டான். மேற்குலகில் யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் ஆகியன அரசுகளால் அங்கீகரிக்கப் பட்ட மத நிறுவனங்கள். இந்திய உப கண்டத்தில், பௌத்தமும், சமணமும் நிறுவன மயப் பட்ட மதங்களாக கருதப் பட்டன. இந்து மதத்தை ஒரு மதமாக கருத முடியாதா? அன்றிருந்த இந்து மதம், இன்றுள்ளதை விட மிகவும் வித்தியாசமானது. யாரும் இந்து மதத்தில் புதிதாக சேர முடியாது, அந்த மதத்தில் பிறந்திருக்க வேண்டும். இத்தகைய கடுமையான விதிகளால், பிராமணர்கள் மட்டுமே இந்துக்களாக இருந்தனர். அதனால், பிற சாதிகளை சேர்ந்த மக்கள், ஒன்றில் பௌத்த மதத்திற்கு, அல்லது சமண மதத்தில் சேர்ந்ததில் வியப்பில்லை.

தமிழகத்தில் பல்லவர் காலத்தில், இந்து மதம் மீளுயிர்ப்புப் பெற்றது. மக்களுக்கு புரியக் கூடிய மொழியிலேயே மதப் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்பதை சைவ சமயக் குரவர்களும், வைஷ்ணவ ஆழ்வார்களும் உணர்ந்து கொண்டனர். அவர்கள் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து கொண்டு, பௌத்த, சமண மதத்தவர் மீது புனிதப் போரை தொடுத்தார்கள். சோழர்கள் காலத்தில், மக்களை கட்டாய மதமாற்றம் செய்யும் புனிதப் போர் தீவிரமடைந்தது. ஆனால், தமிழகத்தில் இந்து மதம் தலை தூக்குவதற்கு முன்னர், இன்னொரு மதப்போர் நடந்தது. பௌத்தர்களுக்கும், சமணர்களுக்கும் இடையிலான போர் அது. அந்தப் போரில் சமணர்கள் வென்றனர். தமிழ் பௌத்தர்கள் பலர், புத்த மதத்தின் கோட்டையாக விளங்கிய இலங்கைக்கு சென்று அடைக்கலம் கோரினார்கள்.
"பௌத்தமும், சமணமும் வன்மையாகப் போரிட்டு வந்தன.சில காலத்திற்குள் பௌத்த மதத்தின் செல்வாக்கு குறைந்து விட்டது. ....... கி.பி. 8 ம் நூற்றாண்டில் சமண சமயக் குருவான பேர்பெற்ற ஆச்சாரிய அகளங்கர் காஞ்சிபுரத்தில் பௌத்த கோயிலாக இருந்த காமாட்சி அம்மன் ஆலயத்தில் பௌத்த பிக்குகளுடன் சமயவாதம் செய்து அவர்களை வென்றார். தோல்வியுற்ற பிக்குகள், இலங்கைக்கு சென்று விட்டனர்." (சமணமும் தமிழும், மயிலை சீனி. வேங்கடசாமி)

இன்றைக்கு பௌத்த மதத்தை பின்பற்றும் அனைவரும் சிங்களவர்களாகவும், இந்து மதத்தை பின்பற்றும் அனைவரும் தமிழர்களாகவும் உள்ளனர். ஆனால், இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னரும் இதே மாதிரித் தான் இருந்திருப்பார்களா? இந்துக்களின் "தாய் நாடான" இந்தியாவிலேயே, இந்து மதம் அழிந்து கொண்டு சென்றது. இலங்கையில் அது தனியாக நிலைத்து நின்றிருக்குமா?
"தமிழ் நாட்டிலே சமண சமயம் பரவுவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. மீன் பிடித்தல், வேட்டையாடுதல் போன்ற உயிர்க்கொலை செய்யும் தொழில்களைத் தவிர, ஏனைய தொழில்களை எல்லாம் இந்த மதம் சிறப்பித்து போற்றி வந்தது. மிகச் சிறந்த தொழிலான பயிர்த் தொழிலை,பிராமண மதம் எனப்படும் வைதீக மதம் இழிவான தொழில் என்று தாழ்வு படுத்தியது போலல்லாமல்,சமண சமயம் பயிர்த் தொழிலை சிறந்த தொழில் என்று போற்றியது.....சேர, சோழ,பாண்டிய, பல்லவ அரசர்களில் சமண சமயத்தை சேர்ந்திருந்தனர். இவர்களால் சமண சமயத்திற்கு ஆசியும், செல்வாக்கும் ஏற்பட்டன." (சமணமும் தமிழும்)

ஒரு காலத்தில் தமிழ் நாடு முழுவதும் சமண மதம் பரவியிருந்திருப்பின், இலங்கையிலும் பரவியிருக்க வாய்ப்புண்டல்லவா?
அன்று தமிழகத்தில் நிலவிய சூழ்நிலை போன்று தான், இலங்கையிலும் காணப்பட்டது. மக்கள் ஒன்றில் பௌத்தர்களாக, அல்லது சமணர்களாக இருந்தனர். வட பகுதியில் சமணர்களும், தென் பகுதியில் பௌத்தர்களும் பெரும்பான்மையாக இருந்திருப்பார். மக்கள் சிங்களம், தமிழ் எந்த மொழியைப் பேசினாலும், அவர்கள் இவ்விரண்டு மதங்களில் ஒன்றைப் பின்பற்றினார்கள். அனுராதபுரத்தில் உள்ள அபயகிரி விகாரை, முன்னொரு காலத்தில் சமணக் கோயிலாக இருந்ததற்கான சான்றுகள் உள்ளன. அது போன்று, வேறு பல சமணக் கோயில்கள், பிற்காலத்தில் பௌத்த விகாரைகளாக அல்லது சைவக் கோயில்களாக மாற்றப் பட்டிருக்கலாம்.

ஈழத்தில் சமண சமயம் சீரும் சிறப்புடனும் இருந்ததைக் குறிக்கும் இன்னொரு சான்று, எல்லாளனின் வரலாறு. எல்லாளன் சமண மதத்தை சேர்ந்தவன் என்பதற்கு ஆதாரம் என்ன? அதற்கு முதலில், எல்லாளன் ஒரு இந்து மன்னன் என்பதற்கு, யாராவது ஆதாரத்தை காட்டியுள்ளனரா? இலங்கையை ஆண்ட இந்து- சோழ மன்னர்கள், சைவக் கோயில்களைக் கட்டியதற்கான சரித்திர சான்றுகள் உள்ளன. எல்லாளன் ஒரு சைவக் கோயிலையாவது கட்டியதாகத் தெரியவில்லை. ஆனால், அனைத்து மதங்களையும் சமமாக நடத்தியதாக பல குறிப்புகள் தெரிவிக்கின்றன. "எல்லாளன் சென்ற தேர் ஒரு தடவை, புத்த ஸ்தூபியின் ஒரு இடத்தில் இடித்து விட்டது. அரசன் அதனை வேண்டுமென்றே செய்யா விட்டாலும், தேரின் மீதிருந்து இறங்கி வீதியில் படுத்துக் கொண்டு, தான் மீது தேரைச் செலுத்த சொன்னான். ஆனால், பிட்சுக்கள் அதனை அனுமதிக்கவில்லை..... அவன் அந்த பதினைந்து ஸ்தூபிகளை செப்பனிட்டு விட்டுப் புதிதாக நிறுவ, பதினைந்தாயிரம் காசுபணம் செலவிட்டான்." (மகாவம்சம்)

எல்லாளனின் நீதி வழங்கும் நெறி முறைக்கு உதாரணமாக, படுக்கையின் மேல் கட்டப் பட்ட மணி பற்றிய கதை கூறப் படுகின்றது.
" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற போது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்." (மகாவம்சம்) ஒரு பசுவுக்கு நீதி வழங்குவதற்காக, தனது மகனைக் கொன்ற நியாயவானாக எல்லாளன் மகாவம்சத்தால் புகழப் படுகிறான். இந்தப் பெருமை வேறெந்த தமிழ் மன்னனுக்கோ, அல்லது சிங்கள மன்னனுக்கோ கிடைக்கவில்லை. இதிலே கவனிக்கப் பட வேண்டிய இரண்டு அம்சங்கள். ஒன்று, மிருகங்களையும் மனிதருக்கு சமமாக மதிக்கும் ஜீவகாருண்யம். இரண்டு, பசுவும்,பறவையும் கூட நீதி கேட்டு வரக் கூடியதாக கட்டப்பட்ட மணி. இவையெல்லாம், இந்து மரபு அல்ல. சமண மத நம்பிக்கைகள். இன்றைக்கும் தீவிர சமண மதப் பற்றாளர்கள், வெளியில் போகும் பொழுது வாயை துணியால் கட்டிக் கொள்வார்கள். அதற்கு காரணம், தெரியாமல் எந்தப் பூச்சியாவது வாய்க்குள் அகப்பட்டு சாகக் கூடாது என்பது தான்.

நமது காலத்திய இனவாதிகள், எல்லாளன்- துட்ட கைமுனு போரை, சிங்கள- தமிழ் போராக திரித்துக் கூறிக் கொண்டிருக்கிறார்கள். அது சிங்கள-தமிழ் முரண்பாட்டால் எழுந்த போரல்ல. அதே நேரம், பௌத்த - இந்து மதங்களுக்கு இடையிலான யுத்தமும் அல்ல. ஒரு வேளை, தமிழகத்தில் தீர்க்கப்படாத பௌத்த - சமண மோதல், இலங்கையில் தொடர்ந்திருக்கலாம். ஆனால் அந்தக் கருத்தை உறுதிப் படுத்தும் சான்றுகள் கிடைக்கவில்லை. துட்ட கைமுனுவின் பக்கத்தில் தமிழ் வீரர்கள் போரிட்டனர். அதே போன்று, எல்லாளனின் படையில் சிங்கள வீரர்கள் மட்டுமல்ல, சிங்கள சேனாதிபதிகளும் இருந்துள்ளனர். போர் முடியும் வரையில், சிங்கள தளபதிகளும், வீரர்களும் எல்லாளனுக்கு விசுவாசமாக இருந்துள்ளனர். ஒருவர் கூட எல்லாளனுக்கு துரோகமிழைத்து விட்டு, "சிங்கள மன்னனான" துட்ட கைமுனுவிடம் போய்ச் சேரவில்லை. எல்லாளனின் படையில் முன்னணி அரங்கில் நின்று போரிட்ட சிங்கள சேனாதிபதிகளின் பெயர் விபரம் பின்வருமாறு: தீகபாய, தீகஜந்து, காமினி, நந்திதா .... இந்த சிங்கள சேனாதிபதிகளின் பட்டியலில், துட்ட கைமுனுவின் ஒன்று விட்ட சகோதரனான தீகபாய செனாவியின் பெயரும் இருப்பது குறிப்பிடத் தக்கது. இன்னொரு முக்கியமான தகவல். தீகபாய சேனாவி, துட்ட கைமுனு பக்கம் நின்ற (சிங்கள) குறுநில மன்னர்கள் மத்தியில், எல்லாளனுக்கு ஆதரவு திரட்டும் இராஜதந்திர நகர்வுகளை செய்துள்ளான்!

எல்லாளன் - துட்ட கைமுனு போர், நமது காலத்திய இனப் பிரச்சினையுடன் எந்த விதத்திலும் ஒத்துப்போகவில்லை என்பது தற்போது தெளிவாகியிருக்கும். சிங்கள இனவாதிகளும், தமிழ் இனவாதிகளும் வரலாற்றைத் திரித்து, தமக்கேற்றவாறு அரசியல் பிரச்சாரம் செய்கின்றனர். அவர்களது செயற்பாடுகள் யாவும், எல்லாளனுக்கும், துட்ட கைமுனுவிற்கும் அபகீர்த்தியை தேடித் தருகின்றன. துட்ட கைமுனுவுக்கு சிங்கள முலாம் பூசியதும், எல்லாளனுக்கு சைவ முலாம் பூசியதும், மன்னிக்க முடியாத வரலாற்று மோசடிகளாகும். நமது காலத்திய இனவாதிகள் பெரிதும் விரும்பும், இன அல்லது மத முரண்பாட்டுப் போர்கள், கி.பி. 9 ம் அல்லது 10 ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் தோன்றின. ராஜராஜ சோழனின் காலத்தில் சோழ சாம்ராஜ்யம் இலங்கை வரையில் விஸ்தரிக்கப் பட்டது.

சோழர்கள் "தமிழுணர்வு" கொண்டவர்கள் அல்ல, மாறாக "சைவ ஆகம மத உணர்வு" கொண்டவர்கள். அவர்களது செயற்பாடுகள் பல மத அடிப்படைவாதிகளின் செயல்களை ஒத்துள்ளன. சோழர்களின் ஆக்கிரமிப்புப் படைகளால், இலங்கையில் பௌத்த மதம் நசுக்கப் பட்டது. புத்த விகாரைகள் இடிக்கப் பட்டன, புத்த பிக்குகள் கொல்லப் பட்டனர். பிற்காலத்தில், விஜபாகு அரசனால் சோழர்கள் வெளியேற்றப் பட்டாலும், அப்போது பௌத்த மதத்தை வளர்ப்பதற்கு ஒரு பிக்கு கூட இருக்கவில்லை! அதனால் பர்மாவில் இருந்து புத்த பிக்குகளை இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது!! இத்தகைய கொந்தளிப்பான காலகட்டத்தின் பின்னணியில் தான் மகாவம்சம் எழுதப் பட்டது. பௌத்த மதத்திற்கு நேர்ந்த நெருக்கடிகளை பட்டியலிடும் மகாவம்சம், சோழர்களால் பாதிக்கப் பட்ட ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை. அந்த வகையில், மகாவம்சம் ஒரு பக்கச் சார்பாகவே எழுதப் பட்டுள்ளது.

(முற்றும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
2.துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!
1.மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

4 comments:

baskar said...

//" அவனுடைய படுக்கைக்கு மேல் ஒரு மணி கட்டப் பட்டிருந்தது. நீதி கேட்டு வந்தவர்கள், எந்த நேரத்திலும் அதை அடித்து அரசனை அழைக்கலாம். அந்த அரசனுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் உண்டு. ஒரு நாள் திசா குளத்திற்கு அந்த மகன் தேரில் சென்ற பொது, தெரியாமல் தாய்ப்பசுவுடன் படுத்துக் கிடந்த கன்றுக் குட்டியின் கழுத்தில் தேரை ஏற்றிக் கொன்று விட்டான். அந்தப் பசு மனவேதனையில் மணியை அடித்தது. அதே தேர்ச் சக்கரத்தின் அடியில் மகனைக் கிடத்தி கழுத்தின் மீது தேரைச் செலுத்தித் தலையைத் துண்டித்தான்." (மகாவம்சம்)//மனுநீதி சோழன் என்ற பெயரில் சிறு வயதில் எனது பாடப்புத்தகத்தில் படித்தேன். இப்போது உள்ளதா என்று தெரியவில்லை. இங்கிருந்து அங்கு சென்றதா? அங்கிருந்து இங்கு வந்ததா? ஆனால் பார்பனர்களின் இந்து கதை திருட்டுகள் நாம் அறிந்ததென்பதால் அங்கிருந்துதான் திருடி இருப்பார்கள் என்று நம்புகிறேன்.

Kalaiyarasan said...

ஆமாம், பாஸ்கர், நான் அந்தக் கதையை படித்திருக்கிறேன். ஒரே மாதிரியான கதை எவரு வந்தது என்று தெரியவில்லை. நீங்கள் கூறுவது போன்று,திருடப்
பட்டிருக்கலாம்.

சிவக்குமார் said...

பல உண்மைகளைப் புரிய வைத்த தொடர்

Pathman said...

சிவ மேனகை என்பவர் னமுகப்புத்தகத்தில் எழுதிய விமர்சனம்::: தமிழ் மன்னன் எல்லாளன் சமய சமத்துவம் உடையவன் என்பதை ஏற்றுகொண்டாலும் இடையில் வந்த சமண சமண சமயத்தை சார்ந்தவன் என்ற கூற்று வரலாறுகளை திசை திருப்புவதாகவே இருக்கின்றது ,,,,,மகாவம்ச சிங்கள இனவெறி ஆளர்களும் தமிழரை தவறான திசைக்கு கொண்டு சென்ற தமிழ் குறும் சிந்தனை ஆளர்களும் பிரிவினையை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் தமிழ் அரசர்களையும் சிங்களவன் ஆக்கியது வரலாற்று தவறு ,,,அபயன் ,,,இவனே சிங்களம் சொல்லும் துஷ்ட காமினி,,,,,இவன் தாத்தா மகாசிவன் மூத்தசிவன் காக்க வண்ணதீசன் சூர தீசன் அசேலன் ,,,,காக்க வண்ண தீசன் தமிழ் இளவரசி அஸ்வரியாவையே திருமணம் செய்து இருந்தான் ,,உடல் அழகால் அவனை மயக்கிய கல்யாணி நாட்டு இளவரசி மகா தேவி இவனுடன் உறவு கொண்டு பிறந்தவனே அபயன் என்கின்ற துஷ்ட காமினியான துட்ட கைமுனு ,,,,,இந்த மகாதேவியையே ,,எல்லாளன் தேர் விகாரையில் முட்டியதை குற்றமாக தட்டி கேட்டதாக வைத்து விகாரமா தேவி என்று அழைத்தார்கள் ,,,,,,,இனவாதிகள் செய்த தவறால் வீடு இரண்டு பட்டது ,,,இது கூத்தாடிகளுக்கு கொண்டாட்டமாகி இன்று எந்த தெளிவில் இல்லாமல் நிற்கின்றோம் ,,,, ,,,,