Thursday, January 12, 2012

துட்ட கைமுனு: தமிழர்களை வெறுத்த தமிழ் மன்னன்!

[மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்] (பாகம் : 2)

துட்டகைமுனு என்ற பண்டைய சரித்திர கால மன்னன், இன்று சிங்கள தேசியவாதிகளின் ஒப்பற்ற கதாநாயகன். தமிழர்களுடனான இன முரண்பாட்டுப் போரில், துட்டகைமுனுவின் பெயர் அடிக்கடி உச்சரிக்கப் பட்டது. சிறிலங்கா அரசு கூட, தனது சிறப்புப் படையணிக்கு, "கெமுனு படைப்பிரிவு" என்று பெயரிட்டிருந்தது. "துட்டகைமுனு என்ற சிங்கள மன்னன், எல்லாளன் என்ற தமிழ் மன்னனை போரிட்டு வென்றதாலேயே", அவனுக்கு அவ்வளவு மரியாதை. இந்தக் கதையானது, பாடசாலை மாணவர்களுக்கான, சிங்கள மொழிப் பாட நூலில் கூட எழுதப் பட்டுள்ளது. அப்படியாயின், சரித்திரப் பாட புத்தகத்தில் என்னவெல்லாம் எழுதியிருக்கும் என்பதை இங்கே விளக்கத் தேவையில்லை. சிங்கள, தமிழ் பாடசாலைகளுக்கான அரச பாடத்திட்டம், ஒரே மாதிரியான சரித்திரத்தை தான் போதிக்கின்றது. இதிலே குறிப்பிட்டளவு பகுதி, மகாவம்சத்தை அடிப்படையாகக் கொண்டது. வேடிக்கை என்னவென்றால், சிங்கள தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், ஒரே கதைக்கு வெவ்வேறு விதமான பொழிப்புரைகள் வழங்கி வருகின்றனர்.

எமக்கு சரித்திரம் படிப்பித்த ஆசிரியர் பின்வருமாறு விபரிப்பார். "எமது தமிழ் மன்னர்கள், சிங்களவர்களை ருஹுனு (தென் பகுதி) வரை ஓட ஓட விரட்டி அடித்தார்கள். இன்னும் கொஞ்சம் போனால் கடலுக்குள் குதித்திருப்பார்கள்." வகுப்பறையில் சிரிப்பொலி அடங்க வெகு நேரமாகும். "மகாவம்ச மனோபாவம்", சிங்களவர்களை மட்டுமல்லாது, தமிழர்களையும் ஆட்டிப் படைக்கின்றது. பண்டைய மன்னர்களின் சரித்திரத்தை, சிங்கள, தமிழ் முரண்பாடாக மாற்றுவதில் மகாவம்சம் குறிப்பிடத் தக்க பங்காற்றியுள்ளது. இருப்பினும், அது முழுக்க முழுக்க தமிழின விரோதக் கருத்துக்கள் கொண்டது எனக் கூறி விட முடியாது. மகாவம்சத்தைப் பொறுத்த வரையில், புத்த மதத்தை பாதுகாத்து பேணி வளர்க்கும் மன்னர்கள் எல்லோரும் அதற்கு நாயகர்கள் தான். பௌத்த ஆலயங்களை கட்டிய, அல்லது தானம் வழங்கிய, தமிழ் மன்னர்கள், அமைச்சர்கள், தளபதிகளின் பெயர்களை குறிப்பிடத் தவறவில்லை.
"ஸ்ரீசங்கபோதியின் சேனைத் தலைவனாக விளங்கிய பொத்தசதா என்ற தமிழன், ஜெத்தவன விகாரைக்கு ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான். மகாகந்தன் என்ற தமிழ் அமைச்சன், தனது பெயரில் ஒரு பிரிவேனா கட்டிக் கொடுத்தான்." ( சூளவம்சம். 22 )
அதே நேரம், புத்த விகாரைகளை நாசப்படுத்தி, மத வழிபாட்டை ஒடுக்கிய மன்னர்களை வில்லன்களாக சித்தரிக்கின்றது. சீதாவாக்க ராஜசிங்க என்ற "பௌத்த-சிங்கள மன்னன்", இந்து மதத்திற்கு மாறி, பல புத்த பிக்குகளை கொன்ற கதை ஒன்று மகாவம்சத்தில் உள்ளது.

"இலங்கையில் முதன்முதலாக பௌத்த சமயத்தை தழுவிய தேவநம்பிய தீசன் என்ற மன்னன் ஒரு தமிழன் தெரியுமா?" என்று கூறி, தமிழ்த் தேசியவாதிகள் நம்மை வியப்பில் ஆழ்த்துவார்கள். ஆனால், அவர்களிடம் "துட்டகைமுனு யார்?", என்று கேட்டால், ஒரு சிங்களவன் என்ற பதில் வரும். தேவநம்பியதீசன் என்ற தமிழ் அரசனின் பரம்பரையில் வந்த துட்டகைமுனு எப்படி சிங்களவன் ஆனான்? துட்டகைமுனுவின் பாட்டன், முப்பாட்டன் பெயர்கள் எல்லாம், "மூத்தசிவன், காக்கவண்ண திஸ்ஸ" என்று தமிழ்ப் பெயராகக் காணப்படுகின்றன. இதனை தமிழ்த் தேசிய இணையத் தளமான Tamil Canadian விரிவாக விளக்குகின்றது.
It may be of interest and value to note that all kings from Muthu Siva (307-247 B.C.) right down to the beginning of the Christian era (a period of 300 years), were Tamils and barring King Muthu Siva, others were Buddhist by faith. The much adored and admired King Duttu Gemunu was a Tamil, both from his father`s side Kavan Tissa, and his mother`s side Vihara Devi, daughter of the Naga King of Kelaniya and a direct descendent of King Uttiya. They were of course, Buddhist by faith. (Source : www.tamilcanadian,com)

அப்படியானால், தமிழ் மன்னர்களான எல்லாளனுக்கும், துட்டகைமுனுவுக்கும் இடையில் எதற்காக போர் மூள வேண்டும்? ஒரே இன மக்களிடையே நிலவும், உறவினரின் கொலைக்காக பழிவாங்கும் பகையுணர்ச்சி தான் காரணம். பரம்பரை பரம்பரையாக பழிவாங்கும் வழக்கம். துட்டகைமுனுவின் பாட்டனான அசெலாவை கொன்று தான், எல்லாளன் ஆட்சியைக் கைப்பற்றினான். தேவநம்பிய தீசன் காலத்தில் இருந்து, இலங்கை முழுவதையும் ஆட்சி செய்து வந்த, புகழ்பெற்ற உள்நாட்டு அரச பரம்பரைக்கு, அது ஒரு பேரிழப்பு. பண்டைய இலங்கையில், எத்தனையோ அரச பரம்பரைகள் இருந்த போதிலும், முதன் முதலாக பௌத்த மதத்தை ஏற்றுக் கொண்ட அரச வம்சம் என்பதால், மகாவம்சத்தினால் போற்றப் பட்டது. தெற்குப் பகுதி குறுநில மன்னர்களை போரில் வென்று, ருஹுனு மாநிலத்தை ஒன்றாக்கிய பெருமை, துட்டகைமுனுவின் தந்தை கவன்திஸ்ஸவை சேரும்.

துட்டகைமுனுவும், அவன் சகோதரனும் சிறுவர்களாக இருந்த காலத்தில், தந்தையான கவன்திஸ்ஸ அவர்களுக்கு தினசரி உணவூட்டுவான். அப்பொழுது "தமிழர்களிடம் யுத்தம் செய்வதில்லை" என்று உறுதிமொழி தருமாறு கேட்டிருக்கிறான். சகோதரர்கள் இருவரும், உறுதிமொழி கொடுக்க மறுத்து சாப்பிடாமல் போயிருக்கிறார்கள். துட்டகைமுனு வாலிபனாக வளர்ந்த காலத்தில், "தமிழர்களுடன் போரிட மறுத்த" தந்தையை சேலை கட்டிக் கொள்ளுமாறு பரிகசித்துள்ளான். ஏதோ ஒரு காரணத்திற்காக, கவன்திஸ்ஸ எல்லாளனுடன் போரிடுவதை விரும்பவில்லை. அந்தக் காரணம் என்ன? அதனை மகாவம்சம் விளக்கவில்லை. ஒரு வேளை, "எல்லாளனுடன் போரிடுவதற்கு இது ஏற்ற தருணம் அல்ல, என்று கவன்திஸ்ஸ நினைத்திருக்கலாம். நீதியும், நேர்மையும் மிக்க மன்னனாக இலங்கை மக்களால் மதிக்கப்பட்ட எல்லாளனை எதிர்ப்பது புத்திசாலித் தனமானதல்ல." என்று நினைத்திருக்கலாம். துட்டகைமுனு இலங்கையை விட்டு புலம்பெயர்ந்து, பல வருடங்கள் மலேயாவில் தங்கியிருந்திருக்கிறான். அவன் தகப்பனின் சொல் கேளாத தனயன் என்பதால் தான், "துஷ்ட காமினி" (துட்ட கைமுனு அல்லது துட்ட கெமுனு) என்று பெயர் வந்தது.

இலங்கை முழுவதும், சிங்களவர், தமிழர் பேதமின்றி, அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் எல்லாளனின் புகழ் பரவியிருந்தது. இந்துக்கள் மட்டுமல்லாது, பௌத்தர்களாலும் மதிக்கப் பட்ட எல்லாளனை, போரிட்டு வெல்வது அரசியல் தற்கொலைக்கு சமமாகும். மலேயாவில் இருந்து திரும்பிய துட்டகைமுனு, எல்லாளன் மீது போர் தொடுக்க தக்க தருணம் பார்த்துக் காத்திருந்தான். எல்லாளன் நீதிநெறி தவறாத அரசனாக ஆட்சி புரிந்த போதிலும், அவனது பிற்கால ஆட்சிக் காலத்தில், சில பௌத்த விரோத நடவடிக்கைகள் இடம்பெற்றன. குறுகிய மதவாத, இனவாதக் கண்ணோட்டத்துடன் செயற்பட்ட, சில குறுநில மன்னர்களும், தளபதிகளுமே அதற்கு காரணம். அவர்களால் துன்புறுத்தப்பட்ட புத்த பிக்குகள் எல்லாளனின் நாட்டை விட்டோடி, துட்டகைமுனுவின் நாட்டில் அடைக்கலம் புகுந்தனர்.

உண்மையில், எல்லாளனின் வீழ்ச்சி அப்போதிருந்தே ஆரம்பமாகி இருக்க வேண்டும். துட்டகைமுனு, "பௌத்த மதத்தை மீட்பதற்கான புனிதப்போரை" அறிவிப்பதற்கு, அது போன்ற சம்பவங்கள் களம் அமைத்துக் கொடுத்தன. எல்லாளனின் பூர்வீகம் சோழ மண்டலம் என்பதால், அன்னியர்கள் மீதான வெறுப்புணர்வும் சேர்ந்து கொள்ளவே, அதிர்ஷ்டக் காற்று துட்டகைமுனு பக்கம் வீசியது. எல்லாளனின் ஆட்சிக் காலத்தில், இந்துக்களும், பௌத்தர்களும் ஒரு தாய் மக்களாக சரிசமமாக நடத்தப் பட்டனர். அதனால் தான், எல்லாளனின் ஆட்சியை நாற்பத்துநான்கு ஆண்டுகள் யாராலும் அசைக்க முடியவில்லை. இந்த உண்மையை, குறுகிய இனவாத மனோபாவம் கொண்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு வேளை, எல்லாளன் இன்று ஆண்டிருந்தால், சிங்களவர்களையும், தமிழர்களையும் சகோதரர்களாக கருதிய காரணத்திற்காக, அவனுக்கு துரோகிப் பட்டம் சூட்டியிருப்பார்கள்.

துட்டகைமுனு ஒரு தமிழன், அவனது படையில் தமிழ் வீரர்களும் இருந்துள்ளனர். அப்படியாயின், மகாவம்சம் எதற்காக தமிழர்களை எதிரிகளாக சித்தரிக்கின்றது? இதற்கான விடையை, கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.

கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. மகாவம்சத்தில் காணப்படும் தமிழர் விரோத கருத்துகளின் மூலமும், நோக்கமும் அது தான். அதாவது, பௌத்த மதத்தை பின்பற்றிய தமிழர்கள், தமக்கென சொந்தமாக சிங்கள மொழி ஒன்றை உருவாக்கிக் கொண்டனர். வரலாற்றில் செயற்கையாக உருவாக்கப் படும் இனம் ஒவ்வொன்றும், தனக்கென பிரத்தியேகமான பூர்வீகக் கதைகளையும் கற்பித்துக் கொள்ளும். அதற்கு சிங்கள இனமும் விதி விலக்கல்ல.

மகாவம்சம் பற்றிய பல்வேறு வாதப் பிரதிவாதங்களுக்கு காரணம், அதனது தவறான மொழிபெயர்ப்பு. இந்திய இந்துக்களுக்கு சமஸ்கிருதம் போன்று, இலங்கை (சிங்கள) புத்தர்களுக்கு பாளி புனித நூல்களின் மொழியாகவிருந்தது. சமஸ்கிருதம் போன்றே, பாளி மொழியும் பிற்காலத்தில் யாராலும் பேசப்படாமல் அழிந்து போனது. 19 ம் நூற்றாண்டில், இலங்கையை ஆண்ட ஆங்கிலேயர்கள் மகாவம்சத்தை கண்டெடுத்தார்கள். 1837 ல், George Turnour என்ற ஆங்கிலேய அரச அதிகாரி, மகாவம்சத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தார்.

ஆங்கிலேயர்களைப் பொறுத்த வரையில், "இலங்கை சிங்களவர்களின் நாடு. தமிழர்கள் இந்திய படையெடுப்பாளர்களின் பின்னால் ஒட்டிக் கொண்டு வந்தவர்கள்." இன்றைக்கும் பல பிரிட்டிஷ்காரர்களின் மனதில் மறைந்துள்ள தவறான அபிப்பிராயம், மகாவம்சத்தை மொழிபெயர்த்த காலத்திலும் இருந்திருக்கும். இன்றைக்கு நாம் வாசிக்கும் மகாவம்ச மொழிபெயர்ப்புகள் யாவும், ஆங்கில மொழியில் எழுதப் பட்ட மூலப் பிரதியில் இருந்து மொழிபெயர்க்கப் பட்டவை தான். சிங்களவர்களை ஆரியர்கள் என்றும், தமிழர்களை திராவிடர்கள் என்றும் சமூக விஞ்ஞானம் போதித்த ஆங்கிலேய இனவாத கற்பிதத்திற்கு ஏற்றதாக, இந்த மொழிபெயர்ப்புகள் (மொழி திரிப்புகள்) அமைந்துள்ளன.

மகாவம்சத்தின் சிங்கள மொழிபெயர்ப்பும் பிற்காலத்தில் எழுதப் பட்டது தான். இதனால், இந்த மொழிபெயர்ப்புகள் யாவும் மூலப் பிரதியில் இருந்து மாறியிருக்க வாய்ப்புண்டு. துட்டகைமுனுவின் தாயின் வரலாற்றைக் கூறும் கதையில் காணப்படும் முரண்பாடே அதற்கு ஒரு உதாரணம். துட்டகைமுனுவின் தாயான விஹாரமகாதேவி, களனி நாட்டை (இலங்கையின் மேல் மாகாணம்) சேர்ந்த இளவரசி என்று, ஒரு மொழிபெயர்ப்பில் எழுதப் பட்டுள்ளது. அவள் கல்யாணி நாட்டை சேர்ந்த இளவரசி என்று இன்னொரு மொழிபெயர்ப்பு கூறுகின்றது. இவ்விரண்டில் எது சரியானது? இது ஒன்றும் கவனக்குறைவால் ஏற்பட்ட எழுத்துப் பிழையல்ல.

கல்யாணி நாடு, மலேசியா அல்லது இந்தோனேசியாவுக்கு அருகில் இருந்த தீவாகும். அதனை சுனாமி தாக்கி அழித்தாக செவிவழிக் கதை ஒன்றுண்டு. அதன் அடிப்படையில் பார்த்தால், ராணி விஹாரமகாதேவி ஒரு சிங்களத்தியோ, அல்லது தமிழச்சியோ அல்ல என்பது நிரூபணமாகின்றது. ஆனால், ஒரு அந்நிய நாட்டுப் பெண்ணான, வேறொரு இனத்தை சேர்ந்த விகாரமகாதேவி தான், அதிகமான தமிழர் விரோதப் போக்கை கொண்டிருந்தாள் என்பது வியப்புக்குரியது. தனது மகன் துட்டகைமுனு குழந்தையாக இருக்கும் பொழுதே, அவன் மனதில் தமிழர்கள் மீது வெறுப்புணர்வை ஊட்டி வளர்த்திருக்கிறாள். போர்க்களத்திற்கு நேரில் சென்று படை நகர்த்திய பெண்ணாக போற்றப்படும், விகாரமகாதேவி தமிழர்களை வெறுக்க காரணம் என்ன?

(தொடரும்)


தொடரின் முன்னைய பதிவுகள் :
மகாவம்சம் : சிங்கள இனவாதிகளின் கேலிச் சித்திரம்

8 comments:

எஸ் சக்திவேல் said...

முற்காலத்தில் தமிழ்/சிங்கள வேறுபாடு இவ்வளவு மோசமாக இருந்ததில்லை. உண்மையில் யார் தமிழர்/யார் சிங்களவர் என்ற கவலை புராதனகாலத்தில் இருந்ததில்லை என வாசித்தேன். எல்லாளின் படையில் சிங்கள வீரர்களும் இருந்தார்கள் என்று அண்மையில் செங்கை ஆழியானின் புத்தமொன்றில் பார்த்தேன்.

மா.குருபரன் said...

வணக்கம்.
தமிழர் வரலாறு தொடர்பான ஒரு ஆவண வலைப்பதிவு (ஆவணங்கள் மற்றும் அறிந்தவை தெரிந்தவையை வைத்துக் கொண்டு) ஒன்று செய்து கொண்டிருக்கிறேன். உங்கள் வலைத்தளத்தில் இருந்து சில தகவல்களை அல்லது பதிவுகளை உங்களது பெயருடன் நேரடியாக பதிவு செய்ய அனுமதி உண்டா? webkuru@gmail.com
நன்றி
மா.குருபரன்

Kalaiyarasan said...

மா.குருபரன் , எனது பதிவுகளை அப்படியே பிரசுப்பதாயின் நல்லது. எனது பெயரையும், வலைப்பூவின் முகவரியையும் குறிப்பிட வேண்டுகிறேன்.

மா.குருபரன் said...

நன்றி. உங்கள் பதிவுகள் எடுக்கப்ட்டால் நிட்சயமாக முழுமுகவரியும் கொடுப்பேன்.
மா.குருபரன்

ஆதித்த கரிகாலன் said...

களனி என்பதன் பழைய பெயரே கல்யாணி என இலங்கையின் பழைய சரித்திர சாதாரண தர பாடப்புத்தகத்தில் உள்ளது.

Pon Kulendiren said...

கதிர்காமம் கந்தன் வேடவ்ர்கள் உருவைகி கோவில் . மண்டூர் தந்திரி மலை போன்றவை வேடவர்களின் முருகன் கோவில்கள் இன்றும் வெடவப் பெண்கள் பூசையின் பிரசாதம் கொண்டு சென்று விளக்கு ஏற்றுவார்கள் விஜயன் இலங்கைக்கு வர முன்பு இருந்தே இக்கோவில் இருந்திருகலாம். ஐந்து ஈஸ்வரங்கள் எப்போ தோன்றியது என்ற பதிவுகள் இல்லை. அண்ணல் இர்ம்யந்தில் இரமன் போரில் வென்ற பின் சீதையோடு அயோத்தி நகருக்கு புஷ்பக விமானத்தில் திரும்புப்ம் த்ப்டு முன்னேஸ்ச்வாரத்தில் வணங்கி சென்றதாக இராமயணத்தில் பதிவுண்டு, மாந்ததை மாண்டோதரியின் தந்தை ஆண்ட பகுதி ஆகவே ஈஸ்வங்கள் கிமு10000 மட்டில் இருந்திருக்கலாம் ஆகவே இலங்கையில் இருந்த மதம் இந்து மதம்

Pon Kulendiren said...

காளனிய நதி விழும் இடம் என்பதால் களனி இராட்சியம் என்று சொல்லப்ட்டிருக்கலாம் இரவணன் தம்பி வவீபிசனன் ஆண்ட இராச்சியம்

Prithiviraj kulasinghan said...

உங்கள் பதிவில் சில தவறுகள் இருக்கின்றன.
//கிறிஸ்தவ மத வரலாற்றில் இருந்து புரிந்து கொள்ளலாம். அதாவது, இயேசுவும், அவரது சீடர்களும் யூதர்கள். ஆனால், விவிலிய நூலின் புதிய ஏற்பாட்டில் யூதர்களுக்கு எதிரான வாசகங்கள் காணப் படுகின்றன. மகாவம்சம் தமிழர்களை பகைவர்களாக சித்தரிக்கும் அதேயளவு வன்மத்துடன், பைபிள் யூதர்களை சித்தரிக்கின்றது. அதற்கு காரணம், ஆதிக் கிறிஸ்தவ பரப்புரையாளர்களின் பூர்வீகம் யூத இனமாக இருந்த போதிலும், அவர்கள் கிரேக்க மொழி பேசினார்கள்.

கிரேக்க மொழியை தாய்மொழியாகக் கொண்ட யூதர்கள் தான், பிற்காலத்தில் கிறிஸ்தவ மதத்தை தழுவினார்கள். அவர்கள், யூத சமயத்தை பின்பற்றிய ஒரே இனத்தை சேர்ந்த மக்களிடம் இருந்து, தங்களை "வேறு இனமாக" காட்டிக் கொள்ள விரும்பினார்கள். அதன் விளைவு தான், யூதர்களை கெட்டவர்களாக சித்தரிக்கும் பிரச்சார அணுகுமுறை. //

தவறு. பைபிளில் யூதர்கள் பற்றிய எதிர்மறைக் கருத்துகளிற்குக் காரணம் அவர்களின் மத ரீதியான முரண்பாடு. முக்கியமாக இரண்டு வகையான சந்தர்ப்பங்களில் அது வெளிப்படுகிறது.
1. கடவுள் யூதர்களிற்கு எதிராகப் பேசியதாக அவர்களது இறைவாக்குரைப்பவர்கள் (Prophets) கூறிய தருணங்கள். இங்கு அது மதம், யூதா என்பவரது வழித்தோன்றல்கள் மற்றும் நாடு (Judeism,Jude & Judea) சார்ந்து வருகின்றது.
2. முக்கியமாக Paul (பவுல், சின்னப்பர்) நற்செய்திப்பணி செய்த இடங்களிவ் யூதர்களுடன் வரும் முரண்பாடுகள். அந்த இடங்களில் யூத மதம் சார்ந்தவர்களையும் யூத மதத்தின் மேற் குடியினரையும் (இது சாதி அடிப்படியிலானது அல்ல. பரிசேயர் முதலான மத போதகர்கள் உயர்வாக மதிக்கப்பட்டார்கள்.) குறிக்க பயன்பட்டது. மற்றப்படி அந்நாட்களில் பெரும்பாலான யூத மக்கள் - மதத்தலைவர்கள், இயேசு உட்பட - அரமேயு என்ற மொழியைத் தான் பேசினார்கள். எழுத்தில் எழுதப்பட்ட விடயங்கள் தான் கிரேக்க மொழியில் எழுதப்பட்டன. எபிரேய மொழி மத அனுஷ்டானங்களிற்குத் தான் பெருமளவில் பயன்பட்டது. இது மகா அலெக்சாந்தரது காலத்து செல்வாக்கினால் விளைந்த விடயம்.
மற்றப்படி கிரேக்க மொழி பேசிய யூதர்கள் தான் கிறிஸ்தவர்களானார்கள் என்பது தவறு. பல மொழி பேசிய யூதர்கள் கிறிஸ்தவர்களானார்கள் என்பதே வரலாறு. (ஏனனில் அக்காலத்திலேயே பல யூதர்கள் சிதறுண்டு வேறு மொழி பேசுபவர்களிடையே வாழ்ந்து வந்தார்கள்.)