Monday, September 06, 2010

அவுஸ்திரேலியா உங்களை வரவேற்கின்றது

அவுஸ்திரேலியாவுக்கு ஒரு வரலாறு உண்டு. 19 ம் நூற்றாண்டின் சட்டவிரோதக் குடியேறிகளான ஆங்கிலேயரின் வருகையுடன் ஆரம்பிக்கிறது அந்த வரலாறு. வந்தவுடனேயே இனப்படுகொலை, இனச் சுத்திகரிப்பு என்று தொடங்கி, அவுஸ்திரேலியாவுக்கு பெருமை சேர்த்தார்கள். நவீன உலக வரலாற்றில் இதுவரை யாரும், இனப்படுகொலை செய்வதில் ஆங்கிலேயரின் சாதனையை முறியடிக்கவில்லை. அவுஸ்திரேலியாவின் தெற்கே ஒரு பெரிய தீவு இருந்தது. (உலகில் 26 வது பெரிய தீவு) ஒல்லாந்து மாலுமி ஒருவரின் பெயரான தாஸ்மானியா என்று பெயர் சூட்டப்பட்டது. காலங்காலமாக அங்கே வாழ்ந்து வந்த பூர்வகுடிகளை, (சட்டவிரோத) பிரிட்டிஷ் குடியேறிகள் வேட்டையாடி அழித்து விட்டனர். நவீன உலக வரலாற்றில் முதன்முறையாக, மனித இனம் ஒன்று முற்றாக அழித்தொழிக்கப் பட்டது. அந்த அரும்பெரும் சாதனையை, பிற்காலத்தில் ஹிட்லராலும் முறியடிக்க முடியவில்லை. இருபதாம் நூற்றாண்டில் அவுஸ்திரேலியா வெள்ளையரை பெரும்பான்மையாக கொண்ட நாடாகி விட்டது. அவர்களுக்கு அண்மையில் ஆசியாக் கண்டம் இருந்தது. ஆனால் வெள்ளையின குடியேறிகள் பழுப்பு நிற ஆசியராக இனங்காட்டிக் கொள்ள விரும்பவில்லை. அதனால் அயலில் இருக்கும் நியூசிலாந்தையும் சேர்த்துக் கொண்டு, அவுஸ்திரேலியா என்ற தனிக் கண்டத்தை அறிவித்தனர்.

அதன் பின்பு, அவுஸ்திரேலியாவில் ஐரோப்பிய மக்களின் குடியேற்றம் அதிகரித்தது. அந்த நாட்டில், அதாவது புதிய கண்டத்தில், "வெள்ளையர்கள் மட்டுமே குடியேறலாம்" என்ற சட்டம் 1970 ம் ஆண்டு வரை அமுலில் இருந்தது. அமெரிக்கா, கனடா கூட ஒரு காலத்தில் "வெள்ளையர் மட்டும்" சட்டத்தை கொண்டிருந்தன. நாகரீக உலகின் மாற்றங்களுக்கேற்ப, இடதுசாரி தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் தான் அவுஸ்திரேலியா சட்டத்தை மாற்றியது. தொழிலாளர் கட்சி ஆசிய நாடுகளுடனான வர்த்தக உறவுக்கு முக்கியத்துவம் கொடுத்தது. இதனால் தவிர்க்கவியலாமல் ஆசிய மக்களின் குடியேற்றங்களையும் ஏற்றுக்கொள்ள வேண்டியேற்பட்டது. இதற்கிடையே இரண்டாம் உலகப் போரின் பின்னர், ஐரோப்பாவில் ஏற்பட்ட பொருளாதார முன்னேற்றம் காரணமாக ஐரோப்பிய குடியேறிகளின் வருகை வெகுவாக குறைந்திருந்தது.

புதிய குடியேற்றக்காரரை அனுமதிக்கத் தொடங்கிய காலத்தில் இருந்து அவுஸ்திரேலியா பல்லின கலாச்சாரத்தைக் கொண்ட நாடாக மாறி விட்டது. ஆசிய நாட்டவரின் குடியேற்றம் வர வர அதிகரித்துக் கொண்டே போனது. சீனர்கள், வியட்நாமியர்கள், இந்தியர்கள், இலங்கையர்கள் ஆகியோர் புதிய சிறுபான்மை இனங்களாக பெருகத் தொடங்கினர். இவர்களில் பலர் சிறந்த கல்வித் தகமைகளை பெற்றிருந்தனர். குறிப்பாக சீன வர்த்தகர்கள் பங்குச் சந்தையிலும் ஊடுருவி விட்டனர். இதனால் வெள்ளையர்களின் மனதில் இனத்துவேஷம் வேர் விட்டது. அன்றிலிருந்து இன்று வரை, சீன- வியட்னாமியரைக் குறிக்கும் மஞ்சள் அபாயம் பற்றி பேசப் படுகின்றது. அண்மைக் காலமாக இந்தியர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் இடம்பெறுகின்றன. மறு பக்கத்தில் அரசாங்கமோ, இனவாதம் கூடாது என்று பிரச்சாரம் செய்யவில்லை. வெள்ளையின பிரஜைகளின் அச்சத்தை மெய்ப்பிப்பது போல புதிய சட்டங்களை கொண்டு வந்து குடியேறிகளை தடுக்கப் பார்க்கின்றது.

2001 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத இறுதியில் 438 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று அவுஸ்திரேலியா நோக்கி வந்தது. பாராளுமன்றத்தில் அகதிக் கப்பலை என்ன செய்வதென்ற விவாதம் சூடு பிடித்தது. பிரதமர் அகதிகளை உள்ளே விட மாட்டேன் என்று சூளுரைத்தார். இறுதியில் அவுஸ்திரேலியாவுக்கு கப்பம் கட்டும் சிற்றரசான நவ்று தீவில் கொண்டு சென்று இறக்கி விட்டார்கள். கப்பலில் ஆப்கானிஸ்தான், இலங்கையை சேர்ந்த அகதிகள் இருந்தனர். அந்த நாடுகளில் எல்லாம் மனித உரிமைகள் மீறப்படுவதாக நீலிக்கண்ணீர் வடிக்கும் அவுஸ்திரேலிய அரசு, அகதிகளுக்கு உதவ முன்வரவில்லை.

சர்ச்சைக்குரிய அகதிக் கப்பல் விவகாம் வரலாற்றில் ஒரு முன்னுதாரணத்தைக் கண்டுள்ளது. இரண்டாம் உலகப்போர் வெடிப்பதற்கு முன்னர், இதே போல யூத அகதிகளை ஏற்றிச் சென்ற கப்பல் ஒன்று அட்லாண்டிக் சமுத்திரத்தில் தத்தளித்துக் கொண்டிருந்தது. யூத இன வெறுப்பு அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் பரவிருந்த காலம் அது. அதனால் பிரிட்டன், பிரான்ஸ், பெல்ஜியம் என்று எந்தவொரு நாடும் யூத அகதிகளை ஏற்றுக் கொள்ளவில்லை. மேற்குலகம் அன்றிலிருந்து இன்று வரை ஒரே மாதிரியான அரசியலை தான் பின்பற்றி வருகின்றன. நாம் தான் அவர்கள் மாறி விட்டார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுள்ளோம்.

சட்டவிரோதமாக வரும் அகதிகளை அவுஸ்திரேலிய அரசு தடுப்பு முகாம்களுக்கு அனுப்புகின்றது. இந்த தடுப்பு முகாம்கள் ஒன்றில் பாலைவனத்தின் மத்தியில் இருக்கும். அல்லது முதலைகள் உலாவும் காட்டினுள் அமைந்திருக்கும். பன்னாட்டு அகதிகளைக் கொண்ட முகாம்களில், பெண்கள், குழந்தைகள் என்று பாரபட்சம் இல்லாமல் அடைத்து வைக்கின்றனர். முகாமில் சிறுவர், சிறுமியர் பாலியல் துஷ்பிரயோகங்களுக்கு உள்ளாவதாக செய்திகள் கசிந்துள்ளன. அதிகாரிகள் அகதிகளை இலக்கம் சொல்லியே அழைக்கின்றனர். மருத்துவ வசதிகள் கிடைப்பது அரிது. கடும் நோய்வாய்ப் பட்டவர் எனில் அடிக்கடி தண்ணீர் குடிக்குமாறு அறிவுறுத்தப் படுகின்றனர். முகாமில் வைத்தே தஞ்சக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு திருப்பி அனுப்பப் படுகின்றனர்.

நிலைமையை மோசமடைய வைப்பது போல, தடுப்பு முகாம்களை ACM என்ற தனியார் வர்த்தக நிறுவனம் நிர்வகிக்கின்றது. இது ஒரு அமெரிக்க நிறுவனம் என்பதும், அமெரிக்காவில் சிறைச்சாலைகளை பராமரித்து வருவதும் குறிப்பிடத் தக்கது. ஆனால் முகாம்கள் "Department of Immigration and Multicultural Affaires" என்ற அரசு நிறுவனமே நிர்வகிப்பதாக அரசாங்கம் கூறுகின்றது. தடுப்புமுகாம்களை சென்று பார்வையிட மனித உரிமை நிறுவனங்கள் அனுமதி கேட்ட போதிலும், அரசு விடவில்லை. அதற்கு குடிவரவு அமைச்சு கூறும் காரணம் இது:"நாம் எப்படி முகாம்களை நிர்வகிக்க வேண்டும் என்று கூற உங்களுக்கு உரிமை இல்லை." உலகில் மனித உரிமைகளை மீறும் நாடுகளின் பட்டியலில் அவுஸ்திரேலியாவும் இடம்பெறுகின்றமை, அந்த நாட்டுக்கு பெருமை சேர்க்கலாம். ஆனாலும் என்ன? அவுஸ்திரேலியா மீது அமெரிக்காவோ, ஐ.நா. சபையோ எந்த அழுத்தத்தையும் பிரயோகிக்கப் போவதில்லை.

7 comments:

rajasekar said...

dear friend in your bloger message is very useful to me

i have a blogger

but i don't know how to improve my blogger

this is my email address

r.rajasekarswathi@gmail.com

plz send some information

www.rajasekarmba.blogspot.com

thank you

Kalaiyarasan said...

நன்றி நண்பரே, பல பிளாக்குகளை அடிக்கடி பார்வையிட்டு வந்தால் நீங்களே பல விஷயங்களை கற்றுக் கொள்வீர்கள். உதவி தேவை என்றால் என்னை தொடர்பு கொள்ளவும்.

ராம்ஜி_யாஹூ said...

பதிவிற்கு நன்றிகள்.
இந்த மாதிரி ஆஸ்திரேலியா , நியு சிலாந்து, கனடா போன்ற நாடுகளில் நடக்கும் உண்மை பழக்கங்களை , கலாச்சாரங்களை, இன பாகுபாட்டை விரிவாக எழுதவும். இது தெரியாமலா இந்தியாவில் இருந்து பலர் இந்த நாடுகளுக்கு குடியேறலாம் என்று முகவர்களிடம் பணம் கட்டி பின்பு அங்கு போய் கஷ்டப் படுகின்றனர்.

Sanchayan said...

//2001 ம் ஆண்டு, ஆகஸ்ட் மாத இறுதியில் 438 அகதிகளை ஏற்றிய கப்பல் ஒன்று "நோர்வேயை"** நோக்கி வந்தது.

**Should be Australia

Kalaiyarasan said...

தவறை சுட்டிக்காட்டியதற்கு நன்றி, சஞ்சயன். அது அவுஸ்திரேலியா நோக்கி வந்த நோர்வேக் கப்பல் என்று இருந்திருக்க வேண்டும்.

kumar said...

எப்போதோ படித்தது.வெள்ளையர் இங்கிலாந்து மகாராணிக்கு கடிதம் எழுதி அனுமதி கேட்டதாக.
இந்த பகுதியில் மனித இனத்திற்கும் - குரங்கு இனத்திற்கும் இடைப்பட்ட ஒன்று நிறைய இருக்கிறது.அவற்றை நாங்கள் வேட்டையாடலாமா?
அனுமதி கிடைத்ததாகவும்,அவ்வாறு வேட்டையாடப்பட்டது ஆஸ்திரேலியாவின் பூர்வீக குடிகள்
என்றும்.இது உண்மையா?

Kalaiyarasan said...

பஷீர், ஒரு வேளை இருக்கலாம். பூர்வீக மக்களை கொன்றதை நியாயப் படுத்தவும் அப்படி ஒரு கதையை பரப்பி இருப்பார்கள்.