Sunday, September 12, 2010

ஊழியர்களின் ஊதியத்தை திருடும் முதலாளிகள்

(மேற்கு ஐரோப்பா சென்று, என்ன வேலை செய்தாவது சம்பாதிக்க விரும்பும் இளைஞர்கள் உரிமைகளற்ற தொழிலாளர்களாக சுரண்டப்படுகின்றனர். சட்டப் பதிவின்றி பணியாற்றும் ஊழியர்களுக்கு தொழிற்சங்க உதவியும் கிடைப்பதில்லை. பெல்ஜிய முதலாளிகளால் சுரண்டப்படும் உரிமைகளற்ற தொழிலாளருக்கு உதவி செய்யும் நிறுவனம் ஒன்று வழங்கிய தகவல்கள் கீழே உள்ளன. பெல்ஜியத்தின் நெதர்லாந்து மொழி சஞ்சிகை ஒன்றில் வந்த கட்டுரையை இங்கே சுருக்கமாக மொழிபெயர்த்துள்ளேன்.)

45 வயது அப்தர் ரஹீம் 2001 ம் ஆண்டு, மொரோக்கோவில் இருந்து தனது பல்கலைக்கழக சான்றிதழுடன் பெல்ஜியம் வந்தார். சட்டப்படி வேலை செய்து வீட்டுக்கு பணம் அனுப்புவதே அவரது குறிக்கோளாக இருந்தது. எந்த வேலைக்கும் தயாரான, மலிவான உழைப்பாளர்கள், சட்டவிரோத தொழில்துறையை இயக்கிக் கொண்டிருக்கிறார்கள். அப்தர்ரஹீம் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் எட்டு உழைப்பாளிகளைக் கொண்ட அடுக்கு மாடி வீடொன்றுக்கு குடிபெயர்ந்தார். புருசெல் மாநகரின் வெளிநாட்டவர்களின் வட்டாரமாக கருதப்படும் அந்தப் பகுதியில், பல முதலாளிகளின் கீழ் தற்காலிகமாக வேலை பார்த்துள்ளார். முதலாளிகள் பெல்ஜியர்கள் மட்டுமல்ல, மொரோக்கோ, துருக்கி போன்ற பல்லினத்தவர்கள். சட்டவிரோதமான தொழில் என்பதால், ஒரு நாளைக்கு 25 - 30 யூரோ கிடைத்தாலும், நிரந்தரமான வேலை இல்லை. அவர் கடைசியாக செய்த வேலையில் ஓரளவு நல்ல வருமானம் வந்து கொண்டிருந்தது. (ரெஸ்டாரன்ட்) சமையல்காரனாக, உபசரிப்பாளனாக சுதந்திரமாக வேலை செய்ய முடிந்தது. முதலாளியும் அன்பாக, கனிவுடன் நடந்து கொண்டான். (அல்லது அப்தர்ரஹீம் அப்படி நினைத்துக் கொண்டிருந்தார்.)

டிசம்பர் 2009 ல், ஒரு நாள் வேலையில் இருந்த அப்தர் ரஹீம் படியால் தவறி விழுந்தார். பல நாட்கள் ஓய்வற்ற உழைப்பும் விபத்துக்கு காரணமாக இருந்தது. நிலை தடுமாறி விழுந்ததால் தலை அடிபட்டு காதால் ரத்தம் கொட்டியது. சுயநினைவற்ற நிலையில் இருந்த போதிலும் முதலாளி மருத்துவமனைக்கு கொண்டு செல்லவில்லை. ஆரம்பத்தில் ரஹீமும் அதனை விரும்பவில்லை. மருத்துவ உதவி கிடைக்காததை விட, சட்டவிரோதமாக வேலை செய்த குற்றத்திற்காக தண்டனை கிடைக்கலாம் என்ற அச்சம் அதிகமாக இருந்தது. இருப்பினும் உடைந்த பற்கள், தோள்மூட்டு வலி, தாங்க முடியாத இடுப்பு வலி, என்று வேதனையின் உச்சியில் வலி போருக்க மாட்டாமல் மருத்துவமனை செல்ல வேண்டி நேரிட்டது. ஸ்கேன் செய்து பார்த்த பொழுது மண்டை உடைந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சிகிச்சைக்கு அதிக பணம் (2100 யூரோ) செலவாகும் என்பதால், முதலாளி ரஹீமை கைவிட்டு விட்டார். அது வரை காலமும் முதலாளி தான் மீது பாசமாக இருப்பதாக நம்பிய அப்தர்ரஹீம் அதனை எதிர்பார்க்கவில்லை. மரத்தால் விழுந்தவனை மாடேறி மிதித்தது போல, முதலாளி கடைசி மூன்று மாத சம்பளப்பணத்தை கொடுக்கவில்லை.

வேண்டிய அளவு வேலை வாங்கி விட்டு, இப்போது உடைந்து போன பொருளை தூக்கி வீசுவதைப் போல நடந்து கொள்ளும் முதலாளியிடம் இருந்து, சல்லிக்காசு கூட பெற முடியாது என்று உணர்ந்த ரஹீம், உதவி நிறுவனம் ஒன்றை நாடினார். PAG-ASA என்ற தொண்டு நிறுவனத்திடம் தனது பிரச்சனைகளை எடுத்துக் கூறினார். அவர்கள் ரமீமை ORCA (Organisatie voor Clandestiene Arbeidsmigranten ) என்ற உரிமைகளற்ற தொழிலாளர்களின் சங்கத்திடம் ஒப்படைத்தனர். இவர்களின் உதவியால் பல சட்ட ஆலோசனைகளை பெற முடிந்தது. பொருளாதார சுரண்டலால் ரஹீமுக்கு ஏற்பட்ட பாதிப்பை அளவிடும் ஆய்வு இன்னும் முடியவில்லை. ரஹீமைப் போன்ற நூற்றுக்கணக்கான உரிமைகளற்ற தொழிலாளரின் கதைகள் அந்த நிறுவனத்திடம் உள்ளன.

பெல்ஜியத்தில் பத்திரங்கள் இன்றி சட்டவிரோதமாக வேலை செய்த பதினேழு உழைப்பாளிகளுக்கு சேர வேண்டிய பணம் இதுவரை கணக்கிடப்பட்டுள்ளது. அதன் படி இந்த பதினேழு பேருக்கும், 83.870 யூரோ அவர்களது முதலாளிகள் கொடுக்க வேண்டியுள்ளது. பெல்ஜியத்தில் வாழும் பெரும்பாலான வெளிநாட்டு உழைப்பாளர்களுக்கு இப்படியான தொழிற்சங்கம் இருப்பதே தெரியாது. தெரிந்தாலும் பலர் நேரே வந்து முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றனர். தாம் சட்டவிரோதமாக தங்கியிருந்து வேலை செய்வது தெரியவந்தால், தாயகத்திற்கு திருப்பி அனுப்பப்படுவோம் என்ற அச்சம் நிலவுகின்றது. அரசால் பதியப்படாத தொழிலாளர்கள், கூலித் தொகையை முதலாளிகளுடன் பேசி முடிவு செய்கின்றனர். அது அநேகமாக சட்டப்படி தீர்மானிக்கப்பட்ட குறைந்த பட்ச ஊதியத்தை விட குறைவாகவே இருக்கும். இப்படியான முறைப்பாடுகளை அரசும், நீதிமன்றமும், ஆட்கடத்தல் குற்றத்தின் கீழ் பதிவு செய்கின்றன. ஆனால் ORCA விடம் உதவி கோரி வந்தவர்களில், ஒருவரைத் தவிர எல்லோரும் முதலாளிகள் திருடிய சம்பளப் பணம் குறித்து முறையிடுகின்றனர்.

(நன்றி: Mondiaal Nieuws, 25-08-2010)

3 comments:

Good citizen said...

வேலை சட்டவிரோதமானது என்று நீங்களெ சொல்லிவிட்டீர்கள்,அப்புறம்
என்ன புடலங்கா ஞாயம்,,சட்டவிரோதம்
என்றாலே அது தான் எழுத படத சட்டம்
இவ்வளவு எழுதிய நீங்கள் அந்த ஊழியரின் பேராசையை எழுத மறந்துவிட்டீர்களெ,எந்த வழியிலேனும்
வெளிநாட்டுக்கு வந்து எப்படியாயினும்
பணத்தை சம்பாதித்து விடவேண்டும் என்கிற பேராசையை ஏன் எழுத ம்றந்துவிட்டீர்கள்,அதற்காக முதலாளிகள் செய்தது ஞாயம்தான்
என்று வாதாட வரவில்லை,பணத்
தாசையால்(குருகிய காலத்தில் பெரும் பணத்தை சம்பாதித்துவிட
வேண்டும்) திருட்டுதனமாயினும்
வெளிநாட்டுக்கு வந்து பல இன்னல்களில் மாட்டிகொண்டு அவதியுறும் இந்த்ய இளைஞர்களுக்கு
இதுபோன்ற சம்பவங்கள் பாடமாக
அமையட்டும்,,இதில் யாரை குற்றம் சொல்வது,,வாழ்வாரத்திற்கு வேலை தராத இந்திய அரசாங்கத்தையா?அல்லது வேலை வாய்ப்புகளுக்கு எந்த நலத்திட்டத்தையும் தீட்டாத அரசியல் வாதிகளையா? இதில் வேறு இருபதாம் நூற்றாண்டில் வல்லரசாம்,
தூத்தெறி,,மனசு வலிக்கிறதையா,,

J.P Josephine Baba said...

வெளிநாட்டில் நிலையை பற்றி கூறியுள்ளீர்கள். இந்தியாவில் பாளையம்கோட்டை பகுதியில் கணக்குகள் தணிக்கை செய்யும் அலுவலகம் வைத்து கனடாவை சேர்ந்த தமிழக இந்தியர் நடத்துகின்றார். எனது கணவரும் கானடா கம்பனி நல்ல ஊதியம் கிடைக்கும் என சேர்ந்தார். முதல் 3 மாதம் 8 ஆயிரம் பின்பு கூட்டுவோம் என வேலையில் சேர்த்தனர். என்னவருக்கும் கானடா செல்லும் வாய்ப்பு கூட கிடைக்கலாம் என்ற ஆசையில் சேர்ந்து கொண்டு 3 வருடம் உழைத்தார். முதலாளியோ திருநெல்வேலிக்கு நான் தரும் ஊதியம் அதிகமே, என சொல்லி அடுத்தமுறை வரும் போது கூட்டலாம் என கூறி ஏமாற்றி கொண்டே வந்தார். இங்குள்ள விடுமுறையும் கிடையாது, முதலாளி சனிகிழமை ஆலயம் செல்வதால் என்னவருக்கும் ஞாயிருகளில் வேலை மாலை 5 மணி துவங்கி நடு நிசி 2 வரை வேலை பின்பு காலை 9 தொடங்கி மதியம் 2 மணிவரை வேலை. அதே போன்றே சென்னையிலும் ஏஜன்று வழியே வேலை, நமக்கு கணக்கு தருவது 30 ஆயிரம் என்பதாக இருக்கும் கிடைப்பதோ 15 மட்டுமே.

Kalaiyarasan said...

Josephine, உங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. இது போன்ற பிரச்சினைகள் வெளியே பேசப்பட வேண்டும்.