Monday, September 20, 2010

காவிய நாயகர்களா? கடற்கொள்ளையர்களா?


"பீட் ஹைன் பீட் ஹைன்
அவரது பெயர் சிறிது
செயல் பெரிது"

17 ம் நூற்றாண்டு நெதர்லாந்து நாட்டில், மக்களால் விரும்பிப் பாடப்பட்ட பாடல். அந்தப் பெருமைக்குரிய தேசிய நாயகன் பீட் ஹைன் நினைவாக பல வீதிகளுக்கு பெயர் சூட்டப்பட்டன. இன்றைக்கும் பாடசாலை நூல்கள் பீட் ஹைனை ஒரு வீர புருஷனாக சித்தரிக்கின்றன. மேற்கிந்திய வர்த்தக கழகத்தில் அட்மிரல் ஸ்தானத்தில் பணியாற்றிய பீட் ஹைன், 1629 ல் ஆம்ஸ்டர்டாம் துறைமுகத்தை வந்தடைந்த பொழுது, நகரம் முழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தது. அவர் சார்பாக ஒவ்வொரு நாளும் களியாட்ட விழாக்கள் நடந்தன. நெதர்லாந்து மக்களால் தேசிய நாயகனாக போற்றப்படும் அளவிற்கு "அட்மிரல்" பீட் ஹைன் செய்த செயற்கரிய செயல் எது? வேறொன்றுமில்லை. அவர் செய்ததெல்லாம் கரீபியன் கடலில் ஸ்பானிய சரக்குக் கப்பலை கொள்ளை அடித்தது தான். ஆமாம், ஒரு கடற்கொள்ளைக்காரன் தான் நெதர்லாந்து தேசத்தின் காவிய நாயகன்.

அன்று ஸ்பானிய காலனியாக இருந்த கியூபா அருகில், தங்கம், வெள்ளி போன்ற விலைமதிக்க முடியாத சரக்குகளை ஏற்றிக் கொண்டு கப்பல்கள் அணி ஒன்று ஸ்பெயின் சென்று கொண்டிருந்தது. அந்தக் கப்பல்களை வழிமறித்து தாக்கி, (1629 ) அத்தனை கப்பல்களையும் நெதர்லாந்து டெல்ப் துறைமுகத்திற்கு கொண்டு வந்தார்கள். அவர்கள் கொள்ளையடித்த சரக்குகளின் பெறுமதி அன்றைய மதிப்பில் பன்னிரண்டு மில்லியன் கில்டர்கள். (கிட்டத்தட்ட ஆறு மில்லியன் யூரோ) அன்றைய உலக பொருளாதார நிலவரப்படி அது ஒரு மாபெரும் கடற்கொள்ளை. அந்தப் பணத்தால், ஏழை நாடாக இருந்த நெதர்லாந்து ஒரே நாளில் பணக்கார நாடாகியது. இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவெனில், கடற்கொள்ளைக்கு நெதர்லாந்து அரசு வழங்கிய அங்கீகாரம். அன்று நெதர்லாந்தும், ஸ்பெயினும் போரில் ஈடுபட்டிருந்தன. ஸ்பெயினின் மேலாதிக்கத்தில் இருந்து போராடிக் கொண்டிருந்த நெதர்லாந்திடம் பெரிய அளவு பணம் இருந்திருக்க வாய்ப்பில்லை. போர் வேறு சொத்துகளை அழித்துக் கொண்டிருந்தது. இதனால் ஸ்பெயினுக்கு எதிரான போருக்கான நிதியாக, ஸ்பெயின் கப்பல்களை கொள்ளையடிப்பதை நியாயம் என்று வாதாடினார்கள்.

கிட்டத்தட்ட அதே கால கட்டத்தில் வாழ்ந்த மோர்கன் என்ற கடற்கொள்ளைக்காரனின் புகழ் இங்கிலாந்தின் பட்டிதொட்டி எங்கும் பரவியிருந்தது. ஜமைக்காவில் ஒரு பள்ளத்தாக்குக்கு மோர்கனின் பெயர் சூட்டப்படது. ஜமைக்கா ஒரு காலத்தில் ஆங்கிலேய கடற்கொள்ளையர்களின் புகலிடமாக இருந்தது. போர்த்துகீசியர்களும், ஸ்பானியர்களும் அமெரிக்க கண்டத்தில் தங்கம் அள்ளுகின்றார்கள் என்றால், ஆங்கிலேயருக்கு அந்த ஆசை இருக்காதா? ஆங்கிலேயர்கள் கனடா சென்றார்கள். அங்கே தங்கத்தை காணாமல் ஏமாற்றமடைந்தார்கள். அதற்காக வருந்தவில்லை. கரீபியன் கடலில் சென்ற ஸ்பானிய கப்பல்களை கொள்ளையடித்து தங்கம் சேர்த்தார்கள். ஸ்பானியர்கள் தென் அமெரிக்க செவ்விந்திய குடிகளை அடிமைகளாக வேலை வாங்கி தங்கத்தை கொள்ளை அடித்துச் சென்றார்கள். அதனால் "கொள்ளையர்களிடம் இருந்து தானே கொள்ளையடித்தோம்", என்று இங்கிலாந்து ஒரு காரணம் சொல்லலாம்.

அன்றைய ஒல்லாந்து அரசியல்வாதிகள் கணிப்பிடதைப் போலவே, ஒரு மாபெரும் கடற்கொள்ளை உலக பொருளாதாரத்தில் பாரிய மாற்றங்களை உருவாக்கியது. போருக்கு தேவையான வளங்களும் குறைந்து ஸ்பெயின் பலவீனமடைந்தது. மறுபக்கத்தில் ஒரு சிறிய நாடான நெதர்லாந்து வல்லரசு ஸ்தானத்திற்கு உயர்ந்து செல்வத்தை பெருக்கியது. ஒரு காலத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளை சுரண்டி பலம் வாய்ந்த வல்லரசாக இருந்த ஸ்பெயின் கடற்கொள்ளைகளால் செல்வம் அனைத்தையும் இழந்தது. ஒல்லாந்துக்காரர்கள் மட்டும் ஸ்பெயினிடம் கொள்ளை அடித்து பணக்காரர்கள் ஆகவில்லை. ஆங்கிலேயர்களும் அதே வழியை பின்பற்றித் தான் "சூரியன் மறையாத" சாம்ராஜ்யத்தை நிறுவினார்கள். நெதர்லாந்தும், இங்கிலாந்தும் ஆரம்பத்தில் பெரும் படை அனுப்பி, வீரர்களாக போரிட்டு சாம்ராஜ்யம் கட்டவில்லை. கொள்ளையடித்து குறுக்கு வழியில் பணம் சேர்த்து முன்னுக்கு வந்தார்கள். அப்பாவி ஏழை மக்கள் தான், கொள்ளையடிப்பது, திருடுவது பாவ காரியம் என்று நம்பிக் கொண்டிருக்கிறார்கள்.

கடற்கொள்ளயர்களை அனுப்பி கொள்ளையடிப்பது படையெடுப்பை விட இலாபகரமானது. நமது காலத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமது மேற்கத்திய எஜமானர்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கிறோம், அடக்கப்பட வேண்டிய கிரிமினல்களாக பார்க்கிறோம். அதே நேரம் ஒல்லாந்து, ஆங்கிலேய கடற்கொள்ளையர்களை காவிய நாயகர்கள் என்று புகழ்கிறோம். அவர்களை மேன் மக்கள், கனவான்கள், நாகரீகத்துடன் பிறந்தவர்கள் என்று நம்புகிறோம்.
மேலதிக தகவல்களுக்கு:
Piet Hein (zeevaarder)
Henry Morgan


7 comments:

Robin said...

//நமது காலத்தில், சோமாலிய கடற்கொள்ளையர்கள் தமது மேற்கத்திய எஜமானர்களை பின்பற்றி வருகின்றனர். ஆனால் நாங்கள் அவர்களை கொள்ளைக்காரர்கள் என்று அழைக்கிறோம்// ஒரு காலத்தில் நியாயமெனக் கருதப்பட்ட அடிமைத்தனம், சதி, தீண்டாமை எல்லாம் இப்போது தவறாகக் கருதப்படவில்லையா, அது போலத்தான் இதுவும்.

Kalaiyarasan said...

நீங்கள் தவறாக கருதலாம். ஆங்கிலேயரும், ஒல்லாந்தரும் அப்படிக் கருதவில்லை.
ராபின் நீங்கள் என்ன பேசுகின்றீர்கள் என்று உங்களுக்கே புரிகின்றதா? மேற்கத்திய நாடுகளில் இவையெல்லாம் குற்றமாக இன்றும் கூட கருதப்படவில்லை என்பதைத்தான் கட்டுரை முழுக்க குறிப்பிட்டிருக்கிறேன். வெள்ளையன் செய்தால் மாபெரும் வீரச் செயல், கருப்பன் செய்தால் அது குற்றச் செயல்.

Kalaiyarasan said...

//ஒரு காலத்தில் நியாயமெனக் கருதப்பட்ட அடிமைத்தனம், சதி, தீண்டாமை எல்லாம் இப்போது தவறாகக் கருதப்படவில்லையா, அது போலத்தான் இதுவும்.//


இன்றைக்கும் இவற்றை நியாயம் என்று வாதாடும் இந்து மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் கனவு காணும் இந்து ராஜ்ஜியம் உருவானால் அவற்றை எல்லாம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவார்கள்.

Anonymous said...

//இன்றைக்கும் இவற்றை நியாயம் என்று வாதாடும் இந்து மத அடிப்படைவாதிகள் இருக்கிறார்கள். அவர்கள் கனவு காணும் இந்து ராஜ்ஜியம் உருவானால் அவற்றை எல்லாம் மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வருவார்கள்.//

ஏன் இப்படி குறிப்பிடுகிறீர்கள்?

Kalaiyarasan said...

//ஏன் இப்படி குறிப்பிடுகிறீர்கள்? //

ஆர். எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்து பாசிச அமைப்புகள் இவற்றை வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

Anonymous said...

//ஆர். எஸ்.எஸ்., சிவசேனா போன்ற இந்து பாசிச அமைப்புகள் இவற்றை வெளிப்படையாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.//

உண்மைதான். அதற்காக அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ அல்லது தனிநாட்டுக்காக (இந்து நாட்டுக்கான) போராட்டம் எதிலும் ஈடுபடவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.

Kalaiyarasan said...

//உண்மைதான். அதற்காக அவர்கள் இந்திய இறையாண்மைக்கு எதிராகவோ அல்லது தனிநாட்டுக்காக (இந்து நாட்டுக்கான) போராட்டம் எதிலும் ஈடுபடவில்லை என்பதையும் குறிப்பிட விரும்புகிறேன்.//

மத வெறியும், பாசிசமும் இந்திய இறையாண்மைக்கு எதிரானவை. இந்திய மக்களின் ஒற்றுமையை சீர்குலைப்பவை. தனி நாட்டுக்காக போராடுபவர்கள் தங்களது சுதந்திரத்திற்காக போராடுகிறார்கள். இந்து பாசிஸ்ட்கள் மற்றவர்களின் சுதந்திரத்தை பறிப்பதற்காக போராடுகிறார்கள்.