Wednesday, October 28, 2009

தமிழர்களும் யூதர்களும்: அபாயந் தரும் ஒப்பீடு


(தமிழரது நிலையை யூதர்களது நிலையுடன் ஒப்பிட்டு அரசியல் முடிவுகளை எடுப்பதன் ஆபத்தை ஆராயும் கட்டுரையின் முதலாவது பகுதி. புதிய பூமி பத்திரிகையில் வந்த கட்டுரை நன்றியுடன் மீள்பிரசுரமாகின்றது.)

1. வரலாற்று உடன்பாடின்மை

இலங்கைத் தமிழரின் நிலையை இஸ்ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம் 1960களில், 1961இல் சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்த பிறகு, தீவிரமடைந்து சிலகாலம் ஓய்வு பெற்று இருந்தது.

தமிழர் எல்லா நாடுகளிலும் உளர், தமிழருக்கு ஒரு நாடு இல்லை என்பது முன்பு யூதச் சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது. எனினும் அது பொருந்தாத உவமை. பெருவாரியான தமிழர் தமது சொந்த மண்ணிலேயே தமிழகத்திலும் இலங்கையிலும் வாழ்ந்து வந்துள்ளனர். தமிழரில் ஒரு பகுதியினர் கொலனி ஆட்சிக் காலத்திற் தமிழகத்திலிருந்த இடம் பெயர்க்கப்பட்டு இலங்கை, மலாயா, ஃபிஜி, மடகஸ்கர், தென்னாபிரிக்கா போன்ற நாடுகட்கும் பிற இந்தியத் துணைக் கண்டச் சமூகத்தினருடன் சேர்ந்து மேற்கிந்தியத் தீவுகட்கும் பிற பிரித்தானியக் கொலனிகட்கும் அனுப்பப் பட்டனர். அந் நாடுகளிற் சிலவற்றில் அவர்கள் தம் இன, மொழி அடையாளங்களுடன் வாழுகின்றனர். சில நாடுகளில் இன அடையாளம் பேணுகின்றனர். பிறவற்றிற் தம்மைப் பிற சமூகங்களுடன் சங்கமாக்கி உள்ளனர். எனினும் தமிழருக்குரிய பிரதான நிலப்பரப்புத் தமிழகமே. தமிழினம் என்பது இன அடையாளமன்றி மொழி அடையாளமாகவே பெரிதும் அறியப் படுகிறது. இன்றைய தமிழரிற் கணிசமானோர் பிற இந்தியச் சமூகங்களிலிருந்து வந்தவர்களின் பரம்பரையினர். அவ்வாறே தமிழரும் பிற சமூகங்களுடன் ஒன்றியுள்ளனர்.

யூதர்கள் இன அடையாளத்தை வலியுறுத்துவது போக, யூத மதமும் அந்த அடையாளத்துக்கு நெருக்கமாக உள்ளது. மிக அரிதாகவே எவரும் யூத மதத்தைத் தழுவ இயலும். யூத மதம் பல பிரிவுகளைக் கொண்டது. எப் பிரிவிலும் இல்லாத யூதர்களும் உள்ளனர். பெரும்பாலான யூதர்கள் தமது மண்ணை விட்டு பதினைந்து நூற்றாண்டுகட்கு முன்னரே சிதறிச் சென்றுவிட்டனர். மத்திய கிழக்கிலும் வட ஆபிரிக்காவிலும் அவர்கள் பிற சமூகத்தினருடன் பகைமை இல்லாது வாழ்ந்தனர் எனலாம். ஐரோப்பாவில் முதலாளியத்தின் எழுச்சியுடன் யூத சமூகத்தினின்று வணிகம், கடன் வழங்கல் என்பனவற்றின் வழியாகச் செல்வந்தர்கள் தோன்றினர். அதைவிட, வழமையான நிலவுடைமைச் சமூகத்தின் ஒரு பகுதியாக ஏற்கப்படாத யூதர்கள் தமக்கான சேரிகளில் வாழ்ந்தனர். அவ் வழக்கம் முதலாளித்துவத்தின் எழுச்சியுடன் இறுக்கமடைந்தது. கலைகளிலும் பொழுதுபோக்கு, கணித, அறிவியற் துறைகளிலும் யூதரிடையே ஈடுபாடுடையோர் தோன்றுவதற்கு அவர்கள் நிலவுடைமைச் சமுதாயத்திற்குப் புறம்பானவர்களாக இருந்தமை ஒரு காரணியாயிற்று.

அப்போது உலகளாவிய யூத உணர்வு என்று ஒன்று இருந்ததாகக் கூற இயலாது. தீவிர மதப் பற்றாளரிடையே தமது சொந்த நாட்டுக்கு (பல நூறு ஆண்டுகள் முன்பு விட்டுச் சென்ற இஸ்ரேலுக்கு) மீளுவோம் என்ற மதவழியான நம்பிக்கை இருந்தது. முதலாம் உலகப் போரை ஒட்டிய காலத்திலேயே யூதர்கட்கான தாயகம் என்ற கருத்து பிரித்தானிய கொலனிய ஆட்சியாளர்களது துணையுடன் உருவாக்கப் பட்டது. அதற்கு நியாயங்கள் இருந்தன. அக் காலத்தில் யூதர்கள் பல ஐரோப்பிய நாடுகளிலும் தொடர்ச்சியான கொடுமையை அனுபவித்தனர். ரஷ்யப் பேரரசு உட்பட்ட பல நாடுகளிலும் அவர்கட்கெதிரான இன ஒழிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. எனினும் ஜேர்மன் ஃபாசிசவாதிகளின் கீழ் இரண்டாம் உலகப் போருக்கு முன்பிருந்து யூதர்கள் அனுபவித்த கொடுமைகளே யூதர்கட்கு ஒரு தாயகம் தேவை என்ற கருத்துக்கு வலிமை சேர்ந்தன. அப்போது யூதர்களிடம் வங்கி மூலதன வலிமை இருந்தது. அந்தப் பொருள் வலிமையும் அவர்களது செல்வாக்கிற்கு உதவியது.

எனினும் யூதர்கட்கான தாயகத்தை அவர்கள் எப்போதோ விட்டுச் சென்ற மண்ணிலே நிறுவதற்காக, ஸியோனிஸவாதிகள் எனப்படும் யூத இனவாதிகள் பயங்கரவாத அமைப்புக்களைக் கொண்டு அராபியர்களை வன்முறை மூலம் விரட்டத் தொடங்கினர். முடிவில், ஐ.நா சபையின் ஆசிகளுடன் 1948இல் இஸ்ரேல் நிறுவப்பட்டது. அதன் பின்பும் அராபியரை விரட்டுவதும் பலஸ்தீனத்தில் ஆக்கிரமிப்பையும் திட்டமிட்ட குடியேற்றங்களையும் மேற்கொள்வதும் தொடர்ந்தது.

இஸ்ரேல் உருவானதிலிருந்து இஸ்ரேலிய அரசு இரண்டு முக்கியமான காரியங்களைச் செய்தது. ஒன்று யூத இனவெறியை வளர்த்துப் பலஸ்தீன மண்ணின் வளமான பகுதிகள் அனைத்தையும் அராபியரிடமிருந்து பறிக்கிற ஆக்கிரமிப்பும் திட்டமிட்ட வன்முறையுமாகும். மற்றது மத்திய கிழக்கில் அமெரிக்காவின் ஆதிக்கத்தின் காவலரணாக இஸ்ரேல் கடந்த அரை நூற்றாண்டுகளாக இயங்கி வந்துள்ளது.

இஸ்ரேல் கடந்த அறுபதாண்டுகளாகப் பலஸ்தீன மக்களுக்கு எதிராக இழைத்து வந்துள்ள கொடுமைகள் விரிவாக ஆவணப்படுத்தப் பட்டுள்ளன. பலஸ்தீன மக்களுடைய எழுச்சியின் விளைவாக அவர்களது விடுதலை இயக்கமான பலஸ்தீன விடுதலை இயக்கம் 1974இல் ஐ.நா. சபையால் அங்கீகரிக்கப்பட்டது. எனினும் பலஸ்தீன மக்களால் இன்னமும் பறிக்கப்பட்ட தமது மண்ணுக்கு மீற இயலாதுள்ளது. அதற்கான காரணம் இஸ்ரேலின் அரச இயந்திரத்தின் வலிமையும் பலஸ்தீன மக்களின் ஒற்றுமையின்மையும் அரபு நாடுகட்கு இடையிலான பகைமைகளும் என்று சிலர் விளக்க முற்படுகின்றனர். ஆனால் அத்தனைக்கும் ஆதாரமாக இருப்பது அமெரிக்கா என்கிற பெரு வல்லரசு இஸ்ரேலுக்கு வழங்கிவந்துள்ள நிபந்தனையற்ற ஆதரவேயாகும். அமெரிக்காவின் பொருளாதார, இராணுவ உதவியின்றி இஸ்ரேலால் நிலைக்க முடியாது. சர்வதேச அரங்கில் இஸ்ரேலை உலக நாடுகள் புறக்கணிக்காமலும் தண்டிக்காமலும் இருப்பதற்கும் அமெரிக்காவின் ஆதரவு முக்கியமானது.

இந்த உண்மைகளை மனதிற் கொள்ளும் எவருக்கும் இஸ்ரேல் என்கிற நாட்டுடனும் யூத இனத்துடனும் இலங்கைத் தமிழரின் நிலையைப் பொருத்திப் பார்ப்பது எத்துணை அபத்தமானது என்று விளங்கும்.


(நன்றி: புதிய பூமி)

4 comments:

தமிழ் உதயம் said...

நாடுகளின் எல்லைக் கோடுகள் நிரந்தரமலல். அது காலத்திற்கு காலம் மாறுவன. என்று முஸ்லீம் நாடு ஒன்று வல்லரசாக உருவாகிறதோ - அன்று இன்றைய எல்லைகள் மறைந்து பல புதிய நாடுகள் உருவாகும். இஸ்ரேலின் நிலைமை என்னவாகும் என்று தெரியாது. இன்று ஐ.நா என்கிற நந்தியால்- பல நாடுகளின் உதயங்கள் தடுக்கப்படுகின்றன. ஐ.நா என்கிற அமைப்பு சிதையும் போது (நிச்சயம் சிதையும்) இன்னும் பல நாடுகள் உருவாகலாம். இலங்கைக்கு இன்று உதவுவதற்கு ஆள் இல்லாமல் போய் இருந்தால் ஏறக்குறைய ஈழம் மலர்ந்து இருக்கும். பல்லாயிரம்கோடிகளை அள்ளி கொடுக்க கூடிய அளவிற்கு இன்று பல நாடுகளின் பொருளாதாரம் அதீத வளர்ச்சியில் உள்ளது. பொருளாதார சூழல் இதே போன்று எதிர்காலத்திலும் நிலவும் என்று சொல்ல முடியாது. எதிர்காலத்தில் பொருளாதார வளர்ச்சியின் கட்டுமானம் பெருமளவு சிதையும் போது பல புதிய நாடுகள் உருவாகலாம். துண்டு துண்டாக பல தேசங்கள் உடையும். தங்களை தக்க வைத்து கொள்வதே சிக்கலாக இருக்கும் பல பெரிய நாடுகளுக்கு. அந்த சூழ்நிலையில் அடுத்த நாட்டுக்கு உதவுவது என்பது இயலாத காரியம். மேலும், பல நூற்றாண்டுகளாக மிகப்பெரிய அளவுக்கு இயற்கை அழிவு எதுவும் ஏற்படவில்லை. அப்படி எதிர்காலத்தில் ஏற்படும் பட்சத்தில் பல தேசங்கள் உடையும். மேலும் இரண்டே இரண்டு மதங்கள் உலகம் முழுக்க ஊடுருவி, நீயா நானா என்கிற போட்டியில் பல நாடுகளின் எல்லைக்கோடுகள் மாறும். உலகத்தின் கடந்தகால வரலாற்றையும், நிகழ்கால சூழலையும் பார்க்கும் போது நிச்சயம் எதிர்காலத்தில் ஈழம் மலரும். கால அளவு. சொல்வதற்கில்லை.
by சேரசோழபாண்டியன்

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

நல்ல கட்டுரை... மிகவுமே அருமையான பின்னூட்டம்!

இந்தியாங்கிற நந்தி ஒன்னு நமக்கு இருக்கே, tamilpage....

Anonymous said...

கொலனி ஆட்சிக்கு முன்னரே இலங்கையில் தமிழர்கள் வாழ்ந்து வாந்துள்ளனர் என்பதை குறிப்பிட்டிருந்தால் நன்றாக இநுருந்திருக்கும்.

முகமது பாருக் said...

உண்மையிலேயே ஆபத்தான ஒப்பீடு தோழரே.. கேணல் ரூபன் கடிதத்தில் பார்த்தும் மிகுந்த வேதனையும் ஏமாற்றமும் அடைந்தேன். பிறகு புலம்பெயர்ந்த ஈழத் தமிழர்களும், தாயக தமிழர்களும் இதையே உதாரணம் காட்டத் தொடங்கினர். நமது தவறான உதாரணம் கூட சில நேரங்களில் பல எதிரிகளை உண்டாக்கி விடும் என்பதை அறிய மாட்டேன்கிறாங்க நம்மாளுக..

இதுல என்ன கொடுமைனா ஆரம்ப காலத்தில் பாலஸ்தீன போராளிகளுடன் பயிற்சி பெற்ற குழுக்களும் நம்மிடம் உண்டல்லவா.. இது நமது எதிரியை அம்பலப்படுத்த முடியாமல் எதையாவது உதாரணம் காட்டி நம்மை காத்துக்கொள்ள மட்டுமே உதவும் தவிர வேறொரு பயனுமில்லை, மேக்கொண்டு பாதகம்தான் அதிகம் உள்ளது இந்த ஒப்பீட்டால்.

தோழமையுடன்

முகமது பாருக்

(பெயர் கூப்பிட மட்டுமே பயன்படும் என நினைப்பவன்)