Saturday, September 26, 2009

உய்குர் துருக்கிஸ்தான், சீனாவின் துரதிர்ஷ்டம்

"ஆயிரத்தொரு இரவுகள்", சிறு பராயத்தில் அனைவரையும் கவர்ந்த மாயாஜாலக் கதைகள். கற்பனையோ, புனைவோ, சில கதைகளில் வரும் இடங்களின் பெயர்கள், மத்திய ஆசியாவை நினைவுபடுத்துகின்றன. குறைந்தது ஒரு கதையாவது வட-மேற்கு சீன மாநிலமான சிஞ்சியானை பின்புலமாக கொண்டு சொல்லப்பட்டிருக்கும். சீனாவில் துருக்கி மொழி பேசும் உய்குர் முஸ்லிம் சிறுபான்மையினர் பிரச்சினை, வெளி உலகம் அதிகம் அறியாத ஒன்று. விரிவாகச் சொன்னால், துருக்கியிலும், முஸ்லிம் நாடுகளிலும் உய்குர் பிரச்சினை பற்றி பேசப்பட்டு வந்துள்ளது. இருப்பினும் மேற்குலகின் அக்கறையின்மை காரணமாக, உலகின் பிற பாகங்களுக்கு செய்தி கொண்டுசெல்லப்படவில்லை. திபெத் பிரச்சினையில் சீனாவுடன் பகைத்துக் கொண்ட இந்தியா, உய்குர் பிரச்சினையில் கண்களையும், காதுகளையும் பொத்திக் கொண்டிருக்கிறது. இதற்கு காரணம், சீனாவுக்கு உய்குர் போன்று, இந்தியாவுக்கு காஷ்மீர் சில ஒத்த தன்மைகளைக் கொண்டிருப்பது தான். ஜூலை மாதம் உரும்கி நகரில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களும், அதற்கு மேற்கத்திய வெகுஜன ஊடகங்கள் கொடுத்த அதீத முக்கியத்துவமும், உலகின் பார்வையை பதிய வைத்தன. இனங்களுக்கிடையிலான வன்மம், இனக்கலவரங்கள் வரை இட்டுச் செல்வது பல நாடுகளிலும் நடப்பது தான். ஆனால் இம்முறை மேற்குலகிற்கே சவால் விட்ட சீனா என்பதால், சர்வதேச ஊடகங்களும் பிரத்தியேக கவனமெடுத்தன. இதனால் உய்குர் சிறுபான்மையினர் பிரச்சினை சர்வதேசமயப்படுத்தப் பட்டாலும், திரைமறைவில் தொடரும் குழிபறிப்பு வேலையையும் கருத்திற் கொள்வது அவசியம்.

சீனா குறித்து நாம் அறிந்திருக்கும் பொதுமைப்படுத்தப்பட்ட சித்திரத்திலிருந்து, சிங்ஜியான் மாநிலம் முற்றிலும் வேறுபடுகின்றது. மண்ணின் மைந்தர்களான "உய்குர்" மக்கள், துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த மொழி பேசுவதுடன், இஸ்லாமிய மதத்தை பின்பற்றுகின்றனர். கிட்டத்தட்ட ஈரான் அளவான மாநிலத்தில், பாலைவனத்தையும், அதில் திரியும் அடர்ந்த ரோமங்கள் கொண்ட ஒட்டகங்களையும் அங்கே காணலாம். எரிபொருள் தாகம் கொண்ட சீன பொருளாதாரத்திற்கு, சிங்ஜியாங்கில் கொட்டிக் கிடக்கும் எண்ணையும், எரிவாயுவும் வரப்பிரசாதங்கள். இதனால் சின்ஜியாங் "சீனாவின் குவைத்" என்று பொருளாதார அறிஞர்கள் செல்லப்பெயர் சூட்டியிருந்தனர். செல்வச் செழிப்புடன் திகழ வேண்டிய மாநிலத்தில், பொருளாதார ஏற்றத்தாழ்வு இரு வேறுபட்ட இனங்களை எதிரிகளாக்கியுள்ளது. சீனர்களால் சுரண்டப்படுவதாக துருக்கி இனத்தவர்கள் குமுறுகின்றனர். தொழிற்துறை விருத்தி சீனர்களுக்கே சாதகமாக அமைவதாக மனம் வெதும்புகின்றனர். வசதிபடைத்த நகரமயமாக்கப்பட்ட இடங்கள் சீனரின் வாழ்விடமாகவும், ஏழ்மையும், குறைபாடுகளும் கொண்ட குடியிருப்புகளில் உய்குர் மக்களும் இரு வேறு உலகங்களில் வாழ்கின்றனர். திட்டமிட்ட அல்லது பொருளாதார நலன்களுக்காக குடியேறும் சீன மக்கள், மாநிலத்தின் குடிசனப் பரம்பலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தி வருகின்றனர். இதனால் தமது பாரம்பரிய மண்ணில், தாம் சிறுபான்மையினராகி வருவதாக துருக்கி இனத்தவர்கள் முறையிடுகின்றனர். இந்த முறைப்பாட்டில் உண்மையில்லாமல் இல்லை.

உய்குர் பிரச்சினைக்கு சரித்திரப் பின்னணி தேடும் அரசியல் ஆய்வாளர்கள், அண்மைய பொருளாதார மாற்றங்களை கணக்கெடுப்பதில்லை. முன்னொரு காலத்தில் உய்குர் சாம்ராஜ்யம் இருந்திருக்கிறது. எனினும் அது செங்கிஸ்கான் போன்ற ஆசியாவை ஆண்ட துருக்கியின சக்கரவர்த்திகளின் காலத்தில் தான். துருக்கி மொழியின் பூர்வீகம் மொங்கோலியா போன்ற மத்திய ஆசியாவில் இருந்து தொடங்குகின்றது. சீனப்பெருஞ்சுவர் பற்றி பலருக்கு தெரிந்திருந்தாலும், சீனர்கள் அதைக் கட்டிய நோக்கம் குறித்து அறிந்தவர் சிலரே. வடக்கே இருந்து அடிக்கடி படையெடுத்து வரும், மொங்கோலிய (துருக்கி இனத்தவர்) நாடோடிக் கும்பல்கள், சீனாவின் செல்வத்தை சூறையாடிச் செல்வதை வழமையாகக் கொண்டிருந்தனர். சீன விவசாயிகள் உழைத்து சேமித்த சொத்துகளை கொள்ளையடித்து செல்வதுடன் நில்லாது, பாதுகாப்பற்ற மக்களை கொடூரமாக கொன்று, கிராமங்களையும் அழித்து விட்டு செல்வார்கள். கொள்ளையரின் படையெடுப்புகளை தடுக்கும் நோக்கில் சீனப் பெருஞ்சுவர் கட்டப்பட்டாலும், பிற்காலத்தில் மொங்கோலியர்கள் அதையும் மீறி உள்ளே வந்து சீனா முழுவதையும் ஆக்கிரமித்திருந்தார்கள். சில நூறாண்டுகள் மொங்கோலிய துருக்கி இனத்தவரின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த சீனா, பின்னர் ஹான் (சீன) அரச குடும்பத்தினரால் வெற்றி கொள்ளப்பட்டது. வட மேற்குப் பிராந்தியத்தில் மொங்கோலியருக்கும், சீனருக்கும் இடையிலான ஆதிக்கப் போட்டி, கி.மு. 60 ம் ஆண்டளவில் ஒரு முடிவுக்கு வந்தது. அப்போது அமைக்கப் பட்ட எல்லைப் பாதுகாப்பு நிலையம் "சின்ஜியாங்" (புதிய எல்லை) என அழைக்கப்பட்டது.

சீனாவில் பெரும்பான்மையானவர்கள் "ஹான்" மொழி பேசும் மக்கள். சீனா முழுவதையும் ஒரு குடையின் கீழ் ஆண்ட ஹான் அரச வம்ச ஆட்சியின் கீழ், இன்றுள்ள சீன மொழி (மாண்டரின்) பரவியது. அரசகரும மொழியை தமது தாய் மொழியாக வரித்துக் கொண்டவர்களின் சந்ததி, இன்று வரை "ஹான் சீனர்கள்" என அழைக்கப்படுகின்றது. இன்றைய சீனாவில், ஹான் பெரும்பான்மை இனத்தவர்கள் அரசியல், பொருளாதார துறையில் செலுத்தும் ஆதிக்கம், மத்திய காலங்களிலேயே நிலை நிறுத்தப்பட்ட தோற்றப்பாடு. மேலைத்தேய கருத்தியலாளர்கள் மாவோவின் கம்யூனிச காலத்தில் ஹான் சீனர்கள் திட்டமிட்டு குடியேற்றப்பட்டதாக தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர். 18 ம் அல்லது, 19 ம் நூற்றாண்டில், " கிங்" அரச வம்சத்தின் காலத்தில், பொருளாதார விருத்திக்காகவும், எல்லைப் பாதுகாப்புக்கும் என, ஹான் சீனர்கள் சின்ஜியாங் பிரதேசத்தில் சென்று குடியேற ஊக்குவிக்கப்பட்டது. சின்ஜியாங் மாநிலத்தில் மட்டுமல்ல, திபெத், மொங்கோலியா (இன்றைய மொங்கோலிய குடியரசல்ல, சீனாவின் மாநிலம்) போன்ற அனைத்து சிறுபான்மையினரின் வாழ்விடங்களிலும் ஹான் சீனர்கள் சென்று குடியேறினார்கள். அமெரிக்க சரித்திரத்தில், 19 ம் நூற்றாண்டில் புதிதாக வெற்றி கொள்ளப்பட்ட கலிபோர்னியா போன்ற மேற்கத்திய மாநிலங்களில் பிரிட்டிஷ் அமெரிக்கர்கள் சென்று குடியேறிய நிகழ்வுடன் இது ஒப்பிடத்தக்கது.

மாவோவின் காலத்திலும் ஹான் சீன குடியேற்றம் தொடர்ந்து கொண்டிருந்ததை மறுப்பதற்கில்லை. அன்று கல்விப் புலமை, அல்லது தொழிற் தேர்ச்சி பெற்றவர்கள் அனேகமாக ஹான் சீனர்களாக இருந்தனர். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு அவர்களின் பங்களிப்பு இன்றியமையாததாக இருந்தது. அந்த நிலைமை இன்று வரை தொடர்கின்றது. சின்ஜியாங் மாநிலத்தில், எண்ணை, எரிவாயு அகழும் வேலை வாய்ப்புகள் பெரும்பாலும் ஹான் சீனர்களுக்கே வழங்கப்படுகின்றன. இதனால் சீனாவின் பிற பாகங்களில் இருந்து குடியேறிய ஹான் சீனர்கள், சின்ஜியாங் தலைநகர் உரும்கியில் இன்று பெரும்பான்மை இனமாக(74 %) மாறி விட்டனர். உய்குர் மக்கள் வெறும் 12 % மட்டுமே. நாட்டுப்புறங்களில் மட்டுமே உய்குர் துருக்கியர்கள் அதிகளவு சனத்தொகையை கொண்டுள்ளனர். அதுவும் 45 % மட்டுமே. 41 வீதமான ஹான் சீனர்கள், விரைவில் முழு மாநிலத்திலும் பெரும்பான்மை இடத்தை பிடித்து விடுவார்கள் என்று அஞ்சப்படுகின்றது.

சீனாவின் உய்குர் இனப்பிரச்சினை சரித்திர பின்னணியைக் கொண்டது என்பதை விட, நவீன அரசியல்-பொருளாதார குறைபாடுகளின் விளைவு எனக் கூறுவதே பொருத்தம். மாவோவின் காலத்தில், சீனாவில் எங்கேயும் இனப்பாகுபாடு பற்றிய பிரச்சினை எழவில்லை. அதற்குக் காரணம் அரச சித்தாந்தமான "வர்க்கப் போராட்டம்" அனைத்து இனங்களையும் பாதித்திருந்தது தான். எந்த இனத்தை சேர்ந்தவராக இருந்தாலும், "வர்க்க எதிரி" என்ற பட்டம் கிடைப்பது கெட்ட கனவாக கருதப்பட்டது. முதலாளித்துவ, நிலப்பிரத்துவ பின்னணி கொண்டவர்கள் தீயவர்களாக ஒதுக்கப்பட்டார்கள். இருப்பினும், கலாச்சாரப் புரட்சியின் போது, சிறுபான்மையினங்களின் கலாச்சார பாரம்பரியம் மிக்க சொத்துகள் சில அழிக்கப்பட்டன. நிலப்பிரபுத்துவ எச்சசொச்சங்களை அழித்தல், என்று அதற்கு நியாயம் கற்பிக்கப்பட்டது. உய்குர் மக்களின் தனித்துவமான கட்டடக்கலையை பிரதிபலித்த இஸ்லாமிய வழிபாட்டு ஸ்தலங்கள் பல அவ்வாறு காணாமல் போயின. தற்போதும், நவீனமயமாக்கல் என்ற பெயரில் சில புராதன கட்டிடங்கள் அழிக்கப்பட்டு, அங்கே 21 ம் நூற்றாண்டு நகரங்கள் உருவாகின்றன.

துருக்கி மொழி பேசும் மக்களைக் கொண்ட மத்திய ஆசியா, நீண்ட காலமாக இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் ஒரு பகுதியாக இருந்தது. ஆரம்ப காலத்தில், ஈரானில் இருந்து சென்ற இஸ்லாமிய படையெடுப்பாளர்கள், மத்திய ஆசியாவை இஸ்லாமிய மயப்படுத்தினர். காலப்போக்கில் உள்ளூர் முஸ்லிம் அரசர்கள் தோன்றலாயினர். அன்று பாரசீக (ஈரான்) மொழியே ஆட்சி மொழியாக இருந்த போதிலும், துருக்கிய கலாச்சாரமும் கூடவே வளர்ந்தது. உதாரணத்திற்கு "கான்" என்ற பெயரும், "தந்தூரி" சமையலும், இஸ்லாமிய-துருக்கி சாம்ராஜ்ய காலத்தில் இந்தியாவிலும் பிரபலமாகியது. இஸ்லாமிய மன்னர்களின் ஆட்சிப்பரப்பிற்குட்பட்ட மத்திய ஆசியாவில், பல்வேறு துருக்கி மொழிகளைப் பேசும் மக்கள் வாழ்கின்றனர். சீனாவின் வட-மேற்கு சின்ஜியாங் மாநிலத்தின் உய்குர்-துருக்கி மொழி பேசும் மக்களும் ஒரு காலத்தில் இஸ்லாமிய சாம்ராஜ்யத்தின் குடிமக்களாக வாழ்ந்தவர்கள் தான். அன்றைய காலங்களில் உய்குர் மக்கள் மேற்கே (மெக்கா) பார்த்து வாழ்ந்து வந்தனர். கிழக்குப்புறமாக இருந்த சீனர்கள் குறித்து அவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கவில்லை.

சீனாவில் "கிழக்கு துர்க்கிஸ்தான்" என்ற சுதந்திர நாடாக்குவதற்கான இயக்கம், சின்ஜியாங் மாநிலத்தில் தலைமறைவாக இயங்கி வருகின்றது. இவர்களிலும் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரு பிரிவு இருந்தாலும், "கிழக்கு துர்க்கிஸ்தான்" தேசியவாத சித்தாந்தம், உய்குர் இளைஞர் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. தனித்துவமான உய்குர் (துருக்கி) மொழி, இஸ்லாம் போன்ற அடையாளங்கள் தேசியவாத இயக்கத்திற்கு உந்துவிசையாக உள்ளன. 18 வயதிற்கு உட்பட்டவர்கள் மசூதிக்கு செல்ல அரசாங்கம் தடை விதித்துள்ளது. இதனால் பல இளைஞர்கள் (தலைமறைவாக இயங்கும்) இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் பால் ஈர்க்கப்படுகின்றனர். இதற்கிடையே "கிழக்கு துர்க்கிஸ்தான்" என்ற நாமம், மேற்கத்திய அகழ்வாராய்ச்சியாளரின் கண்டுபிடிப்பு என்று கருதப்படுகின்றது. உண்மையில் கம்யூனிச சீனா, இருபது வருடங்களுக்கு முன்பு முதலாளித்துவ சீனாவாக மாறிய பிறகு தான்; இன்றைய இன, மத முரண்பாடுகள் மேலோங்கி வருகின்றன.

மத்திய ஆசியாவில், நீண்ட காலமாகவே இஸ்லாமிய மதவாத சக்திகள், நிலப்பிரபுக்களுடன் சேர்ந்து கொண்டு புதிய கம்யூனிச ஆட்சியாளருக்கு தலையிடியைக் கொடுத்து வந்துள்ளனர். 1920 ல் கசக்கஸ்தான் போன்ற துருக்கி மொழி பேசும் மத்திய ஆசியப் பகுதிகள் சோவியத் யூனியன் வசமாகிய போது, மதவாத பிற்போக்கு சக்திகள் சீன எல்லையைக் கடந்து உய்குர் மக்களிடம் புகலிடம் கோரின. போல்ஷெவிக் புரட்சியின் போது பல்லாயிரக்கணக்கான அகதிகள் சீனாவின் சின்ஜியாங் பிரதேசத்தில் தஞ்சம் புகுந்தனர். ஐம்பதுகளில் சீனக் கம்யூனிச புரட்சியின் போது, இஸ்லாமியவாத சக்திகளுக்கு மீண்டும் நெருக்கடி தோன்றியது. இம்முறை அங்கிருந்து, சோவியத் பகுதிகளுக்குள் தஞ்சம் புகுந்தார்கள். இவ்வாறு இஸ்லாமிய-நிலப்பிரபுத்துவ சக்திகள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தாலும், தமது இஸ்லாமிய சாம்ராஜ்யக் கனவை மட்டும் அடுத்த தலைமுறைக்கு கொடுத்து விட்டுச் சென்றனர்.

தொன்னூறுகளில் ஆப்கானிஸ்தானை தனது இரும்புப் பிடிக்குள் ஆட்சி செய்த தாலிபான்-அல் கைதா கூட்டணிக்கு ஒரு பெருங் கனவு இருந்தது. இழந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை மீளக் கட்டிஎழுப்ப வேண்டும், அதற்காக நீண்டதொரு ஆயுதப் போராட்டம் நடத்த வேண்டும். கனவை நனவாக்கும் முயற்சியில் இறங்கிய தாலிபான் அரசு, மத்திய ஆசியாவின் இஸ்லாமிய தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் கொடுத்தது. வேண்டிய அளவு உறுப்பினர்களை சேர்த்துக் கொடுக்கலாம். அவர்களுக்கு பயிற்சியளிப்பது அல் கைதாவின் பொறுப்பு. விரும்பினால் தாலிபானுடன் யுத்தத்தில் பங்குபற்றி, போர்க்கள அனுபவங்களையும் பெற்றுக் கொள்ளலாம். உய்குர் மக்களிடமிருந்து தோன்றிய "கிழக்கு துர்கிஸ்தான் இஸ்லாமிய இயக்க" உறுப்பினர்களும் ஆப்கானிஸ்தானில் பயிற்சி எடுத்தனர். இவர்களில் சிலர், 2001 ம் ஆண்டு அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் கைது செய்யப்பட்டு, குவாந்தனமோ சிறையில் அடைக்கப்பட்டனர்.

அமெரிக்காவின் "9/11 பயங்கரவாத எதிர்ப்பு போர்" காலகட்டத்தின் போது, போரில் தானும் இணைந்து கொள்வதாக சீனா அறிவித்தது. உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகளை சர்வதேசரீதியாக அடக்க முனைந்தது. ஆனால் சீனாவின் வேண்டுகோள் செவிடன் காதில் ஊதிய சங்காகிப் போனது. அமெரிக்காவுக்கோ செச்செனிய, உய்குர் இஸ்லாமிய தீவிரவாதிகள் குறித்து எந்தவிதமான அக்கறையும் இருக்கவில்லை. பயங்கரவாத தாக்குதல்களை செய்திருந்தாலும், அமெரிக்க வெளிவிவகார கொள்கை அவர்களை விடுதலைப் போராளிகளாக கணித்தது. மேற்கத்திய ஊடகங்கள் அவர்களின் போராட்டத்தின் நியாயத்தன்மையை நேரமெடுத்து சொல்லிக் கொண்டிருக்கும். அதே நேரம், உதாரணத்திற்கு பாலஸ்தீன இயக்கங்களின் வன்முறையை அர்த்தமற்ற பயங்கரவாத பைத்தியக்காரத்தனம் என சித்தரிக்கும். அமெரிக்க அரசின் வெளிவிவகாரத் துறை, "நல்ல பயங்கரவாதிகள்", "கெட்ட பயங்கரவாதிகள்" என்று இரண்டு வகை இருப்பதாக கருதுகின்றது. அமெரிக்காவை அல்லது மேற்குலகை எதிர்ப்பவர்கள் எல்லோரும் கெட்ட பயங்கரவாதிகள். மற்றவர்கள் நல்ல பயங்கரவாதிகள். அதனடிப்படையில், அண்மையில் குவாந்தனமோ சிறையில் இருந்து விடுதலை செய்த உய்குர் தீவிரவாதிகளை சீன அரசிடம் ஒப்படைக்கவில்லை.

உய்குர் தீவிரவாதிகள் சீன எல்லையோரமுள்ள அண்டை நாடுகளான தஜிகிஸ்தான், கசகஸ்தானில் தளம் அமைத்து இயங்கி வருகின்றனர். அங்கிருந்து கொண்டே உய்குர் கெரில்லாக்கள் சின்ஜியாங் மாநிலத்தில், அவ்வப்போது சீன பாதுகாப்புப் படையினர் மீது தாக்குதல்களை நடத்தி வந்துள்ளனர். ஆனால் இம்முறை (ஜூலை மாதம்) உரும்கியில் இடம்பெற்ற இனக்கலவரத்திற்கு "உலக உய்குர் காங்கிரஸ்" (WUC ) என்ற அமைப்பே உரமிட்டது என்று சீன அரசு குற்றஞ்சாட்டியுள்ளது. அமெரிக்க காங்கிரஸின் நிதியில் இயங்கும் NED என்ற தன்னார்வ நிறுவனம், சீனாவில் மனித உரிமைகளை மேம்படுத்தும் தர்மகாரியத்தில் இறங்கியுள்ளது. இதற்காக " உலக உய்குர் காங்கிரஸ்" சிற்கு வருடந்தோறும் இரண்டு லட்சம் டாலர்கள் நிதி வழங்கி வருகின்றது. தலாய் லாமாவிற்கு அடுத்தபடியாக, சீனாவின் தேசிய எதிரி என கணிக்கப்படுகின்ற WUC தலைவி ரெபியா கதீர் அமெரிக்காவில் தஞ்சம் புகுந்துள்ளார். ஒரு மனித உரிமைவாதியாக அமெரிக்க அரசின் அரவணைப்பில் வாழ்கிறார். இவர் முன்பு சீனாவில், உய்குர் பிரிவினைவாதத்தை தூண்டிய குற்றச்சாட்டில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவர். உய்குர் விடுதலை கோரும் ஆர்வலர்கள் ஜெர்மனி முனிச் நகரில் WUC தலைமையகத்தை கொண்டுள்ளனர். அங்கிருந்த படியே, சின்ஜியாங் மாநிலத்தில் குழப்பத்தை உண்டுபண்ணி வருவதாக சீன அரசு கூறி வருகின்றது. இதற்கிடையே முன்பொரு காலத்தில் ஐரோப்பிய கம்யூனிச நாடுகளுக்கென பிரச்சார ஒலிபரப்புகளை நடத்திக் கொண்டிருந்த "சுதந்திர வானொலி" உய்குர் ஆர்வலர்களையும் பணிக்கு அமர்த்தியுள்ளதாக தெரிய வந்துள்ளது.


அண்மைக்கால சீன வரலாற்றில் இடம்பெற்ற மோசமான இனக்கலவரம் என வர்ணிக்கப்படும், உரும்கி வன்முறை ஆரம்பிக்க காரணம் ஒரு வதந்தி எனக் கூறப்படுகின்றது. ஜூன் மாதம், உரும்கி நகரில் ஒரு தொழிலகத்தில் இரு ஹான் சீனப் பெண்களை, உரும்கி இளைஞர்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உட்படுத்தியதாக ஒரு வதந்தி பரவியது. அதைத் தொடர்ந்து ஹான் இளைஞர்கள் கோஷ்டியொன்று, உய்குர் தொழிலாளர் விடுதிக்குள் புகுந்து தாக்கியதில் ஒருவர் கொல்லப்பட்டார். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக உய்குர் மத்திய சதுக்கத்தில் உய்குர் மக்கள் ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். பொலிஸ் தடியடிப் பிரயோகம் செய்து ஆர்ப்பாட்டத்தை கலைத்துள்ளது. அதைத் தொடர்ந்து ஆவேசம் கொண்ட கும்பல் ஹான் சீனர்களை, அவர்களின் சொத்துகளை குறிவைத்து தாக்கியது. பல வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. கலகத்தடுப்பு போலிசும் இரும்புக்கரம் கொண்டு கலவரத்தை அடக்கியது. கலவரத்தில் 150 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாக சீன அரசு தெரிவிக்கின்றது. 500 க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதாக, ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதாக உலக உய்குர் காங்கிரஸ் தெரிவிக்கின்றது. மேற்குலகில் ஊடக சுதந்திரமற்ற நாடாக காட்டப்படும் சீனாவில், கலவரம் குறித்த செய்திகள் தணிக்கை செய்யப்படாமலே வெளியாகின. முதல் நாள் உலகம் முழுவதும் வலம் வந்த கலவரக் காட்சிகள் யாவும் சீன தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

உய்குர் கலவரத்தின் எதிரொலியாக சீனர்களைத் தாக்கப் போவதாக, முஸ்லிம் சகோதரத்துவ கொள்கையை உயர்த்திப் பிடிக்கும், "மஹ்ரெப் அல் கைதா" எச்சரித்துள்ளது. யாரிந்த அல் கைதா? 2001 ம் ஆண்டிலிருந்தே, அல் கைதா என்ற ஆவி, ஊடகங்களின் கற்பனை என்பதை பலர் வலியுறுத்தி வந்துள்ளனர். இவ்வளவு காலமும், "பின்லாடன் அண்ட் கோ" ஆப்கான்-பாகிஸ்தான் எல்லையில் இருந்து கொண்டு அல் கைதா என்ற பன்னாட்டு பயங்கரவாத நிறுவனத்தை நடத்தி வருவதாக நம்பிக் கொண்டிருந்தோம். இப்போது புதிதாக "மஹ்ரெப் அல் கைதா" என்ற ஒன்று முளைத்திருக்கிறது. அரபு மொழியில் "மஹ்ரெப்" என்பது அல்ஜீரியா, மொரோக்கோ ஆகிய வட ஆப்பிரிக்க பிரதேசங்களைக் குறிக்கும். மிகச் சரியாக சொன்னால், அல்ஜீரியா. அந்த நாட்டில் மட்டும் இருபதினாயிரத்திற்கும் குறையாத சீனர்கள் பல்வேறு கட்டுமானப் பணிகளில் கடமையாற்றுகின்றனர்.

அல்ஜீரிய சீனர்களின் உயிருக்கு ஆபத்து என்றால், அபிவிருத்திப் பணிகள் பாதிப்புக்கு உள்ளாகும். சில வருடங்களுக்கு முன்னர், குறைந்தது 50000 பேரை பலி வாங்கிய உள்நாட்டுப் போரில், அல்ஜீரிய அரசுடன் மோதி தோற்றுப் போன இஸ்லாமிய ஆயுதபாணி இயக்கங்கள் "மஹ்ரெப் அல் கைதா" என்று புது அவதாரம் எடுத்துள்ளன. ஒரு தசாப்தமாக தொடர்ந்த போரில் அல்ஜீரிய அரசாங்கத்திற்கு பிரான்சும், இஸ்லாமியவாதிகளுக்கு அமெரிக்காவும் மறைமுகமாக உதவி வந்துள்ளன. பிரான்சை தமது எதிரியாக பிரகடனம் செய்த இஸ்லாமியவாதிகள், இன்று வரை அமெரிக்காவுக்கு எதிராக சுண்டுவிரலைக் கூட அசைத்தது கிடையாது. அல்ஜீரியாவை விட்டு பிரெஞ்சுக்காரர்களை விரட்ட முடியாத "மஹ்ரெப் அல் கைதா", சீனர்களை விரட்டப் போகிறதாம். பொறுத்திருந்து பார்ப்போம்.

உய்குர் கலவரம் குறித்து மத்திய கிழக்கு முஸ்லிம் நாடுகள் மௌனம் சாதிக்கின்றன. பாலஸ்தீன இஸ்லாமிய சகோதரர்களுக்காக இஸ்ரேலை அழிக்கப் போவதாக சூளுரைத்த ஈரானின் அதிபர் அஹமதிநஜாத், உய்குர் முஸ்லிம்களுக்காக அனுதாபம் கூட தெரிவிக்கவில்லை. லிபரல் எதிர்க்கட்சி தலைவர் ரப்சன்ஜானி மட்டும், சீனாவை பொது மேடையில் போட்டு தாக்கிக் கொண்டிருக்கிறார். அதே போல துருக்கி பிரதமர் குல், "சீனாவில் உய்குர் முஸ்லிம்கள் இனப்படுகொலை" செய்யப்படுவதாக கண்டிக்கிறார். யார் எங்கே நிற்கிறார்கள் என்பது தெளிவாகின்றது. மேற்குலக சார்பான துருக்கிய 'குல்'லும், ஈரானிய ரப்சன்ஜானியும் சீன எதிர்ப்பு நிலையெடுக்கின்றனர். ஜூலை 5 ம் திகதி உய்குர் கலவரம் நடப்பதற்கு சில தினங்களுக்கு முன்னர் தான், ரஷ்யாவில் "ஷாங்கை கூட்டமைப்பு மகாநாடு" நடைபெற்றது. யகத்தரினாபூர்க் நகரில் நடந்த மகாநாட்டில் ஈரானுக்கு (இந்தியாவிற்கும்) பார்வையாளர் அந்தஸ்து வழங்கப்பட்டது. ரஷ்யா, கசகஸ்தான், சீனா ஆகிய நாடுகள் இணைந்து ஸ்தாபித்த "ஷாங்கை கூட்டமைப்பு" அமெரிக்காவின் கண்களை உறுத்திக் கொண்டிருந்தது. இது ஒரு பொருளாதாரக் கூட்டமைப்பு என்று சொல்லப்பட்ட போதும், ஒருங்கிணைந்த இராணுவ ஒத்திகைகளும் நடத்தப்பட்டன. அத்தகைய கூட்டமைப்பில் ஈரானும் பங்கு பற்றுவது, பூகோள அரசியல் களத்தில் பெறும் மாற்றங்களை உருவாக்கும். இப்போது ஒரு கேள்வி எழுகின்றது. சீனா, உரும்கியில் நடந்த கலவரம் தற்செயலானதா?"
ஷாங்கை கூட்டமைப்பின் பொருளாதார திட்டங்களில் ஒன்று, ரஷ்ய எரிபொருளை சீனாவுக்கு நேரடியாக விற்பது. அசுரகதியில் வளர்ந்து வரும் சீனப் பொருளாதாரம், தனக்கு தேவையான எரிபொருளை மத்திய கிழக்கில் இருந்து, இந்து சமுத்திரத்தை சுற்றி எடுத்து வருகின்றது. சீனாவுக்கு அருகிலேயே அபரிதமான எண்ணை வளம் கொண்ட கசகஸ்தானும், ரஷ்யாவும் இருக்கையில், எதற்காக அதிக பணம் செலவழித்து கடல்மார்க்கமாக எண்ணை இறக்குமதி செய்யவேண்டும்? சாதாரணமாக உலக வரைபடத்தை நோக்கும் எவருக்கும் இயல்பாக எழும் கேள்வி தான். உலகில் எல்லாமே தலைகீழாக தான் நடந்து கொண்டிருக்கிறது. சீனாவுக்கு ரஷ்ய/கசகஸ்தான் எண்ணையை கொண்டுவருவதில் நடைமுறைச் சிக்கல்கள் உள்ளன. புதிதாக குழாய்ப் பாதை அமைக்கப்பட வேண்டும். திட்டமிடப்பட்ட அந்தப் பாதை உய்குர் மக்கள் தனிநாடு கோரும் சின்ஜியாங் மாநிலத்தை ஊடறுத்து செல்கின்றது. யகதரினபூர்க் மகாநாட்டில் இந்தத் திட்டத்தின் சாத்தியப்பாடு குறித்து ஆராயப்பட்டது. எதிர்பாராத விதமாக ஜூலை 5 ம் திகதி உரும்கியில் கலவரம் இடம்பெற்றுள்ளது. எல்லாமே தற்செயல் தானா?


_____________________________________________________________________________________
"உன்னதம்" (August 09)இதழில் பிரசுரமானது.

3 comments:

சிங்கக்குட்டி said...

உங்கள் தனி பாணியில் மற்றொரு நல்லா பதிவு :-))

எஸ் சக்திவேல் said...

அது செங்கிஸ்கான் போன்ற ஆசியாவை ஆண்ட துருக்கியின சக்கரவர்த்திகளின் காலத்தில் தான்//

Is he Monoglian? Are all Mogolian's Turks?

Kalaiyarasan said...

//Is he Monoglian? Are all Mogolian's Turks?//

Yes, of course.