Thursday, September 17, 2009

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை

"புதிய பூமி" (ஜூலை-ஆகஸ்ட் 09) பத்திரிகையில் வெளியான ஈழத் தமிழ் தேசிய வரலாற்றுத் தொடர்:

வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை
- சி.கா. செந்திவேல் -

தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தைத் தோற்றகடித்து விட்டதையும் அத்துடன் யுத்தம் முடிவுக்கு வந்ததையும் கடந்த மே மாதம் 18ஆம் திகதி முல்லைத்தீவின் இறுதிப் போர்க்களத்திலிருந்து இலங்கை இராணுவம் அறிவித்துக் கொண்டது. அதற்கு முதல் நாள் தமது துப்பாக்கிகளை மௌனிக்கச் செய்து விட்டதாக அமெரிக்காவின் ஒபாமா நிர்வாகத்திற்கும் மேற்குலகிற்கும் புலிகள் இயக்கம் அறிவித்து தமது தோல்வியை ஒப்புக் கொண்டது. 

அதனைத் தொடர்ந்து விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனும் ஏனைய உயர் மட்டத் தலைவர்கள் அனைவரும் கொல்லப் பட்டிருப்பதையும் இராணுவம் உறுதிப்படுத்திக் கொண்டது. மே மாதம் 19ஆம் திகதி பாராளுமன்றத்தில் நாட்டு மக்களுக்கு சிறப்பு உரையாற்றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச முப்பது வருட கால யுத்தம் முடிவுற்று உள்ளதையும் 'பயங்கரவாதம" அழிக்கப் பட்டிருப்பதையும் உத்தியோக பூர்வமாகப் பிரகடனம் செய்து கொண்டார். இது கடந்த மூன்று தசாப்த கால யுத்த-போராட்டக் காலத்தின் ஒரு பாரிய திருப்பு முனைக்கு வழிவகுத்தது.

தமிழீழப் பிரகடனம் செய்யப்பட்ட வட்டுக்கோட்டைத் தீர்மானத்திற்கும் புலிகள் இயக்கத்திற்கும் ஒரே வயதாகும். 1976இல் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தை வென்றெடுக்க ஆயுதம் தூக்கிய புலிகள் இயக்கமும் அதன் போராட்டமும் 33 வருடங்களுக்குப் பின்பு முல்லைத்தீவின் முடிவுக்கு வந்துள்ளன. இதுவரை ஈழப் போர் என அவர்களால் அழைக்கப்பட்டு வந்த மூன்று கட்டப் போர்களின் படை வலுவின் மூலமும் உயிர்ப் பலிகள் ஊடாகவும் தம்மைப் பாதுகாத்து நிலைநிறுத்தி வந்த புலிகள் இயக்கம், நாலாங் கட்டப் போர் என்ற முல்லைத்தீவுச் சமரில் தோற்கடிக்கப் பட்டிருக்கிறார்கள். 


அன்று பெரும் எழுச்சி முழக்கங்களுடன் வட்டுக்கோட்டையில் நிறைவேற்றப்பட்ட தமிழீழத்திற்கான தீர்மானம் வரலாறு காணாத மக்கள் அழிவுகளுடன் முல்லைத்தீவிற் சோகமான முடிவுக்கு வந்துள்ளது. முதற் கோணல் முற்றிலுங் கோணல் என்பதாக முடியும் என்ற வரலாற்றின் பாடத்தையும் இத் தோல்வியின் போது காண முடிந்தது. மேலும், 1975ஆம் ஆண்டு வட்டுக்கோட்டைத் தொகுதியின் பொன்னாலைக் கடலோரம் அமைந்துள்ள கிரு~;ணன் கோவில் முன்றலில் வைத்து அன்றைய யாழ் மாநகர சபையின் முதல்வரின் படுகொலையாக முதலாவது வேட்டுத் தீர்க்கப்பட்டது. 

வரலாற்று விநோதம் என்னவெனில் 34 வருடங்களுக்குப் பின் அந்த முதல் வேட்டைத் தீர்த்தவரான வேலுப்பிள்ளை பிரபாகரன் முல்லைத்தீவின் நந்திக் கடலோரம் உள்ள முள்ளிவாய்க்காலில் இராணுவ எதிர்வேட்டின் மூலம் கொல்லப்பட்டிருப்பது தான். படுகொலையில் ஆரம்பித்துப் படுகொலைகளின் ஊடாக முன்னெடுக்கப்பட்ட 'புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்" என்ற தராக மந்திரந் தாங்கிய அவர்களின் ஈழத்திற்கான போர் மக்களையும் அழித்துத் தங்களையும் அழித்துத் தமிழ்த் தேசிய இனத்தை அந்தகார இருள் சூழ்ந்த அரசியல் வனாந்தரத்தில் விட்டுள்ள சூழலையே இன்று காண முடிகின்றது.

இத்தகைய அவலங்களுக்கும் அந்தகார அரசியற் சூழல்களும் உருவாகியுள்ள இன்றைய நிலையிற், தமிழ்த் தேசிய இனத்தின் எதிர்காலம் பற்றிய தூரநோக்கு மிக்க அரசியற் பாதையும் அதற்கான பயணத் திசையும் தேர்ந்தெடுக்கப் படுவது அவசியமாகின்றது. அதற்கான முன்தேவையாக அமைவது கடந்த காலம் பற்றிய மறுமதிப்பீடும் சுயவிமர்சனமமாகும். கடந்த காலம் பற்றிய மதிப்பீடும் விமர்சனமுந் தான் எதிர்காலத்திற்கு உரிய தெளிவான பாதையைக் காட்ட வல்லன. 


அவ்வாறு நோக்கும் போது, கடந்த முப்பது வருட கால இன ஒடுக்குமுறை யுத்தமும் அதற்கெதிராகத் தமிழ்த் தேசியவாத நிலை நின்று முன்னெடுக்கப்பட்ட இன விடுதலைப் போராட்டமும் பற்றிய அரசியல் விமர்சனத்தை மாக்சிச லெனினிசக் கண்ணோட்டத்தில் அணுகி ஆராய வேண்டியுள்ளது. இத்தகைய கண்ணோட்ட அணுகுமுறை இப்போது தான் முன்வைக்கப்படும் ஒன்றல்ல. 

கடந்த முப்பது வருடங்கட்கும் மேலான காலப் பகுதியில் மாக்சிச லெனினிசவாதிகளாகிய நாம் எமது கட்சியின் மூலம் இப் போராட்டம் பற்றியும் அதற்கான எண்ணக்கரு, கருத்தியல், கொள்கை, நடைமுறை, போராட்டத் தந்திரோபாயம் போன்றவற்றில் எமது நிலைப்பாட்டையும் விமர்சனங்களையும் அவ்வப்போது முன்வைத்து வந்திருக்கிறோம். யுத்தம்-போராட்டம் என்பதில், எப்போதும் அடக்கி வந்த ஆளும் வர்க்கப் பக்கத்தில் அன்றி அடக்கப்பட்ட உழைக்கும் மக்களின் பக்கத்தில் நாம் உறுதியாக நின்று வந்திருக்கின்றோம். அதே வேளை செயற்பட்டு வந்த அல்லது தமது நிலைப்பாட்டை மாற்றி ஆளும் வர்க்க சக்திகளுடன் இணைந்து நின்ற எந்தவொரு இயக்கத்துடனோ, கட்சியுடனோ குழுவுடனோ சேர்ந்து நின்றதும் இல்லை, பின்னால் இழுபட்டுச் சென்றதும் இல்லை. 

எமது மாக்சிச லெனினிச மாஓ சேதுங் சிந்தனை நிலைப்பாட்டின் தனித்துவத்துடன் செயலாற்றி வந்திருக்கின்றோம். அதன் காரணமாகக் கடந்த முப்பது வருட காலத்தில் பேரினவாத ஆளும் வர்க்க அரசாங்கப் பக்கத்திலிருந்தும் பல்வேறுபட்ட நெருக்கடிகள், அச்சுறுத்தல்கள், இழப்புகள், சிறை சித்திரவதைகள் போன்றனவற்றை எமது கட்சி அனுபவித்து வந்துள்ளது. 

எனவே, தமிழ் மக்கள் மத்தியில் நாம் எவற்றைச் சாத்தியமற்றவையும் தவறானவையும் என்றும் மக்களுக்கு விரோதமானவை என்றுங் கூறி வந்தோமோ அவை இன்று மக்களின் பேரழிவுகளுக்கு மத்தியில் நடைமுறையில் நிரூபணமாகி உள்ளன. இது மகிழ்ச்சிக்குரிய ஒன்றல்ல. மக்களுக்கும் அவர்கள் மத்தியில் உள்ள நேர்மையான அரசியல் செய்வோருக்கும் வேதனை தருவதாகும். அதற்காக அழுது புலம்பியவாறோ அல்லது வெறுமனே குற்றம் சுமத்தியவாறோ மட்டும் இருந்து விட முடியாது. ஒன்றுக்குப் பதிலாக மற்றொரு ஆதிக்க அரசியலை நிலைநிறுத்தவும் முடியாது. நியாயப் படுத்தி முன்செல்லவும் முடியாது.

ஆதலாற், கடந்த முப்பது வருட யுத்த வளர்ச்சிப் போக்கில், மூன்று வர்க்க அரசியல் ஆதிக்க சக்திகள் பிரதான பங்காற்றி வந்துள்ளன என்பது தெளிவானதாகும். ஒன்று, பௌத்த சிங்கள பேரினவாத முதலாளித்துவ ஆளும் வர்க்க சக்திகள். இரண்டாவது, பழைமைவாத தமிழ்க் குறுந் தேசியவாத ஆதிக்க அரசியற் சக்திகள். 


மூன்றாவது, இந்திய-அமெரிக்க-மேற்குலக மேலாதிக்கச் சக்திகள். இம் மூன்றில் முதலாவதையும் மூன்றாவதையும் பற்றிய பன்முகப்பட்ட விடயங்கள் ஆராயப்பட்டு அவ்வப்பேது மாக்சிச லெனினிசக் கண்ணோட்டக் கருத்துகளாகவும் விமர்சனங்களாகவும் முன்வைத்து வந்துள்ளோம். ஆனால் மூன்றாவது விடயமான பழைமைவாதத் தமிழ்க் குறுந்தேசியவாத நிலைப்பாடடைப் பற்றிக் கூறிவந்த அதே வேளை, தமிழீழக் கோரிக்கை மீதான ஆயுத நடவடிக்கைகள் பற்றி விரிவாக விவாதிப்பது இன்றைய சூழலில் அவசியமாகிறது.

இன்று இருபது, முப்பது வயதிற்கு மேலான எந்தவொரு தமிழ் இளைஞனுக்கோ யுவதிக்கோ தமிழீழக் கோரிக்கை உருவாகிய சூழல் பற்றியோ அதன் நோக்கம் பற்றியோ மட்டுமன்றித் தமிழர் மத்தியில் அதனை முன் வைத்த வர்க்கச் சக்திகள் பற்றியுந் தெரிந்திருக்க நியாயமில்லை. தந்தை செல்வா, அண்ணன் அமிர்தலிங்கம், தம்பி பிரபாகரன் என்ற தமிழ்த் தேசியவாத மகுடங்களைப் பற்றி மட்டுமே அறிந்திருக்கக் கூடியவர்களுக்குக் கூட, அவர்கள் எந்த வர்க்கத்தின் சார்பாக எத்தகைய ஆதிக்கச் சக்திகளின் பின்புலத்துடன் அரசியலை முன்னெடுத்து வந்தார்கள் என்பது தெரியாது.

எனவே இன்று முல்லைத்தீவிற் தோற்கடிக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படும் வட்டுக்கோட்டைத் தீர்மானமாக நிறைவேற்றப்பட்ட தமிழீழக் கோரிக்கையும் அதன் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றிய அரசியற் பாடத்தைப் படிக்க வேண்டியுள்ளது. அதனையொட்டி வெளிவருவதே "வட்டுக்கோட்டையில் இருந்து முல்லைத்தீவு வரை" எனுங் கட்டுரைத் தொடராகும்.

1965 முதல் 1970கள் வரையான அரசியற் சூழல்

1976ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதத்தில் வட்டுக்கோட்டைத் தொகுதியில் அமைந்துள்ள சுழிபுரத்தில் இடம்பெற்ற தமிழரசுக் கட்சி ஏற்பாடு செய்த மாநாட்டிலேயே தனித் தமிமீழக் கோரிக்கை பிரகடனஞ் செய்யப் பட்டது. அதனை வென்றெடுக்க என்று தமிழர் ஐக்கிய முன்னணியும் தோற்றுவிக்கப் பட்டது. இத் தமிழீழக் கோரிக்கையை தமிழ் மக்கள் மத்தியில் முன்வைத்து புதியதொரு அரசியல் சூழலை உருவாக்க வேண்டிய தேவை அன்று தமிழரசுக் கட்சிக்கும் தமிழ்க் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினருக்கும் ஏற்பட்டிருந்தது.

1965-70 காலகட்டத்தில் ஐக்கிய தேசியக் கட்சி ஒரு கூட்டு அரசாங்கத்தை அமைத்து நடாத்தி வந்தது. டட்லி சேனநாயக்கா தலைமையிலான அவ் அரசாங்கத்தில் பச்சை இனவாதியான கே.எம்.பி. ராஜரத்தின, சி.பி. டி சில்வா, பிலிப் குணவர்த்தன போன்றோருடன் தமிழரசுக் கட்சி பங்கு பற்றி அமைச்சர் பதவியும் பெற்றிருந்தது. முன்னாள் செனற்றரான மு. திருச்செல்வம் அமைச்சர் பதவி; பெற்றிருந்தார். அவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்தின் நெருங்கிய சகாவும் தமிழரசுக் கட்சியின் கொள்கை வகுப்பாளர்களில் ஒருவருமாக இருந்தவர். 


அன்றைய டட்லி-தமிழரசு அரசாங்கத்தினால் உழைக்கும் மக்களுக்குரிய எதையும் வழங்க முடியாத நிலை போன்றே தமிழ் மக்களின் உரிமைகளையும் வழங்க முடியவில்லை. குறிப்பாக டட்லி-செல்வா ஒப்பந்தம் என்பதன் ஊடாகச் சில உரிமைகளைப் பெறத் தமிழரசுக் கட்சி முனைந்த போதும் வழமை போன்று எதிர்க் கட்சியான சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து தீவிர இனவாத எதிர்ப்பு டட்லி-செல்வா ஒப்பந்தத்திற்குக் காட்டப்பட்டது. அந்த எதிர்ப்புக்குப் பாராளுமன்ற இடதுசாரிகளான சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆதரவு தெரிவித்துத் தமது சந்தர்ப்பவாதத்தை வெளிப்படுத்திக் கொண்டன. 

அன்று தம்மைப் பரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியாகத் தகவமைத்து நின்ற தோழர் நா. சண்முகதாசன் தலைமையிலான கட்சியும் அதன் இலங்கைத் தொழிற்சங்க சம்மேளனத்தில் இணைந்திருந்த தொழிற்சங்கங்களும் மேற்படி இனவாத நிலைப்பாட்டை மிகக் கடுமையாக எதிர்த்தன. அதனால் 1966 ஜனவரி மாதம் 08ஆம் திகதி இடம்பெற்ற டட்லி-செல்வா ஒப்பந்தத்திற்கு எதிரான ஊர்வலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியும் அதன் தொழிற்சங்கங்களும் கலந்து கொள்ளவில்லை. 

அவ் வேளையிற் கட்சி வாலிபர் இயக்கத்தில் இணைந்திருந்த றோஹண விஜேவீரவும் சில வாலிபர்களும் மேற்படி ஊர்வலத்தில் கலந்து கொண்டமைக்காக அவர்கள் கட்சி வாலிபர் இயக்கத்திலிருந்து நீக்கப்பட்டனர் என்பது குறிப்பிட வேண்டியதாகும். அன்றே விஜேவீரவினதும் ஜே.வி.பியினதும் இனவாத அரசியல் தன்னை வெளிப்படுத்த ஆரம்பித்தது.

மேலும் 1965-1970 காலகட்டத்திற் தமிழ் மக்கள் மத்தியிற் தமிழரசுக் கட்சி கடுமையான கண்டனத்திற்கும் அதிருப்திக்கும் ஆளாகிக் கொண்டது. அதே காலகட்டத்தில் வடபுலத்திற் புரட்சிகரக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையிற் சாதிய தீண்டாமைக்கு எதிரான வெகுஜன எழுச்சியும் போராட்டங்களும் வேகத்துடன் இடம் பெற்றன. மக்கள்மயப் படுத்தப்பட்ட அப் போராட்டங்களின் வன்முறை புரட்சிகரமானதாகவும் மக்கள் விரோதம் இன்றியும் மக்களால் முன்னெடுக்கப்பட்டது. 


அதனால், அப் போராட்டங்கள் தமிழ் மக்கள் சனத்தொகையில் மூன்றில் ஒரு பங்கினரான தாழ்த்தப்பட்ட மக்களை ஐக்கியப்படுத்தியும் உயர் சாதியினர் எனப் பட்டோரின் மத்தியிலான ஜனநாயக, நல்லெண்ணச் சக்திகளின் ஆதரவைப் பெற்றும் முன்சென்றது. அதே வேளை தமிழரசு-தமிழ்க்;காங்கிரஸ் கட்சியினர் இம் மக்கள் முன்னெடுத்த அவ் வெகுஜனப் போராட்டங்கட்கு எதிராகவோ மௌனமாகவோ இருந்தனர். 

இது தாழ்த்தப்பட்ட மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்துக் கொண்டது. அதே வேளை வடபுலத்தில் புரட்சிகர கம்யூனிஸ்ற் கட்சியின் தொழிற் சங்கங்கள் முன்னெடுத்த தொழிற் சங்கப் போராட்ங்களிற் தொழிலாளர்கள் அணி திரண்டனர். இவற்றிலும் தமிழரசுக் கட்சியானது தனது முதலாளித்துவ வர்க்க நிலைப்பாட்டுடன் தொழிலாளர் விரோதமாகவே நடந்து கொண்டது.

அதே வேளை வளர்ந்து வந்த பௌத்த சிங்களப் பேரினவாதத்திற்கும் அது காலூன்றி நின்ற நிலவுடைமை வழிவந்த முதலாளித்துவ ஏகாதிபத்திய ஆதரவு சக்திகளுக்கும் எதிராகத் தமிழ் மக்களின் நியாயபூர்வமான உரிமைகளுக்கு உரிய கொள்கையை தமிழரசு-காங்கிரஸ் கட்சிகளாற் சரியான தளங்களில் நின்று முன்வைக்க முடியவில்லை. 


அதற்குப் பதிலாக அவை பழைமைவாதக் கருத்தியல் வழியிலான குறுந் தேசியவாதத்தையே தமது அடிப்படை நிலைப்பாடாகக் கொண்டிருந்தன. அத்தகைய கொள்கையானது வெறும் பாராளுமன்ற வெற்றிகட்கு உரியதாக இருந்ததே தவிரப், பரந்துபட்ட தமிழ் மக்களின் வாழ்வுரிமைகளை வென்றெடுப்பதாக ஒரு போதும் இருந்ததில்லை. அதற்குக் காரணம் அவர்களது உயர் வர்க்க உள்ளடக்கமும் இனத்துவப் போர்வையுமாகும்.

1970இன் பொதுத் தேர்தலும் அதன் பின்பும்

1965-70 காலகட்டத்தில் வடபுலத்தில் இடம்பெற்ற சாதிய தீண்டாமைக்கு எதிரான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களும் தொழிற்சங்கப் போராட்டங்களும் எழுபதுகளில் வெற்றி பெற்று முன்சென்ற சூழலே நிலவியது. அதே வேளை, தமிழரசு-தமிழ்க் காங்கிரஸ் மீதான அதிருப்தியும் எதிர்ப்பும் குறிப்பிட்ட சில பிரதேசங்களிற் காணப்பட்டது. இத்தகைய அரசியற் சூழலிலேயே 1970ஆம் ஆண்டின் ஜூலைப் பொதுத் தேர்தல் இடம்பெற்றது. இத் தேர்தலில் வடபுலத்தின் மூன்று முக்கிய தமிழரசு, காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது தொகுதிகளிற் படுதோல்வி கண்டனர். 


ஒருவர் 'தமிழரசுத் தளபதி" என வர்ணிக்கப்பட்ட தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் அ. அமிர்தலிங்கம். அவர் வட்டுக்கோட்டைத் தொகுதியிற் தோல்வி கண்டார். இரண்டாமவர் 'இரும்பு மனிதர்" எனக் கூறப்பட்டு வந்த தமிழரசுக் கட்சித் தலைவர்களில் ஒருவரான டாக்டர் ஈ.எம்.வி. நாகநாதன். அவர் நல்லூர்த் தொகுதியிற் தோல்வியடைந்தார். மூன்றாவமவர் 'உடுப்பிட்டிச் சிங்கம்" என்று கூறப்பட்ட தமிழ் காங்கிரஸ் பொதுச் செயலாளரான மு. சிவசிதம்பரம். 

அவர் உடுப்பிட்டித் தொகுதியில் தோற்கடிக்கப் பட்டார். அவர் டட்லி-தமிழரசு (1965-70) அரசாங்கத்தில் உப சபாநாயகராகப் பதவி பெற்றிருந்தவர். மேலும் 'தனிப்பெருந் தலைவர்" எனக் கூறப்பட்டு வந்த தமிழ்க் காங்கிரஸின் தலைவர் ஜி.ஜி. பொன்னம்பலம் யாழ்ப்பாணத் தொகுதியில் இறுதியாக நின்று தோல்வி கண்டார். இவ்வாறு, 1970ஆம் ஆண்டின் ஜூலைப் பொதுத் தேர்தலானது தமிழரசு-தமிழ்க் காங்கிரஸ் தலைவர்களுக்குப் பெரும் அதிர்ச்சியையுந் தாங்க முடியாத அரசியல் அவமானத்தையும் கொடுத்திருந்தது.

தென்னிலங்கையில் இத் தேர்தலில் சிறி லங்கா சுதந்திரக் கட்சியானது சமசமாஜ-கம்யூனிஸ்ட் கட்சிகளுடன் இணைந்து பெரு வெற்றி பெற்று மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசாங்கம் அமைத்துக் கொண்டது. அதே வேளை தமிழரசு-காங்கிரசின் தென்னிலங்கைச் சகாவான ஐக்கிய தேசியக் கட்சி தோல்வி கண்டமை குறிப்பிடத் தக்கதாகும்.

திருமதி சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கம், தனக்கிருந்த மூன்றில் இரண்டு பாராளுமன்றப் பெரும்பான்மையை வைத்துத் தான் நினைத்தவற்றையெல்லாம் நடைமுறைப்படுத்தும் திட்டங்களைக் கொண்டிருந்தது. புதிய அரசியலமைப்பை வரைவதற்கான முயற்சிகளை முன்னெடுத்த அதே வேளை, தமிழ் மக்களின் உரிமைகளையோ மலையகத் தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளையோ கவனத்திற் கொள்ளாது புறந்தள்ளி வந்தது. 


தமிழரசுக் கட்சியும் அதன் தலைவரான எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் முன்வைத்த தமிழ் மக்கள் சார்பான ஆறு அம்சக் கோரிக்கைகளை ஐக்கிய முன்னணி அரசாங்கம் புறந்தள்ளிக் கொண்டது. அக் கோரிக்கைகளை முன் வைத்த தமிழரசுக் கட்சியைப் பழிவாங்குவதாக நடந்து கொண்ட அவ் அரசாங்கம் அக் கோரிக்கைகளில் உள்ளடங்கியிருந்த தமிழ் மக்களின் உரிமைகளையும் அபிலாக்i~களையும் காணத் தவறிக் கொண்டது. 

இந் நிலையில் ஐக்கிய முன்னணி அரசில் அங்கம் பெற்றிருந்த பாராளுமன்ற இடதுசாரிகள் எனப் பட்டவர்கள் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக எதனையும் செய்யாது, தமது முன்னைய நிலைப்பாடுகட்கு நேர் விரோதமாக நடந்து அவமானத்தைத் தேடிக் கொண்டனர். இத்தகைய அரசின் பேரினவாதப் போக்கு எதிர் நிலையில் பாராளுமன்ற அரசியலில் பலவீனமடைந்திருந்த தமிழரசு-தமிழ்க் காங்கிரஸ் கட்சிகட்கு ஊட்டமளிப்பதாகவே அமைந்திருந்தது.

தமிழ்த் தேசியவாதத்தின் பாராளுமன்றத் தலையானது எப்பொழுதும் தெற்கின் நிலவுடைமை முதலாளித்துவ ஏகாதிபத்திய சார்பு நிலைப்பாடுடைய தரகு முதலாளித்துவ ஐக்கிய தேசியக் கட்சியுடன் உள்ளுரவும் வெளிப்படையாகவும் பிணைப்பு உடையதாகவே இருந்து வந்தது. இது இனத்துவத்திற்கு அப்பாலான வர்க்க ஐக்கியமாக நீடித்து வந்தது. இத்தகைய சிங்கள-தமிழ் மேட்டுக்குடி அந்நியோன்யம் கொலனித்துவ காலத்திலிருந்து நிலைபெற்று வந்த பாரம்பரியத்தைக் கொண்டிருந்தது. 


அதே வேளை, ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய மற்றொரு நிலவுடைமை வளவுக்கார குடும்பத்தவரான எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்க சிறி லங்கா சுதந்திரக் கட்சியை ஐம்பதுகளின் ஆரம்பத்தில் அமைத்தார். ஐந்து சக்திகளை (தொழிலாளரகள், விவசாயிகள், ஆசிரியர்கள், பௌத்த பிக்குமார், ஆயுர்வேத வைத்தியர்கள்) உள்ளடக்கிய தேசியவாதக் கொள்கைகளை பண்டாரநாயக்க முன்வைத்து அரசியலில் எழுச்சி பெற ஆரம்பித்தார். பண்டாரநாயக்க முன்வைத்த எல்லைக்குட்பட்ட தேசியக் கொள்கைகளும் கொலனிய ஏகாதிபத்திய சார்பற்ற நோக்கும், அவற்றிற்கு முன்பாகவே இலங்கையில் வளர்ச்சி பெற்று வந்த இடதுசாரி இயக்கத்தின் வழிவந்த இடதுசாரிகளுடனான நெருக்கத்திற்கு வழிவகுத்தது. 

இருப்பினும் அவர் உயிருடன் இருக்கும் வரை இடதுசாரிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் முழுமையான நெருக்கத்தைக் கொண்டிருக்கவில்லை. ஆனால் அவரால் வெற்றி கொள்ள முடியாத பாராளுமன்ற இடதுசாரிகளை அவரது மனைவியான சிறிமாவோ பண்டாரநாயக்கவால் வெற்றி கொள்ள முடிந்தது மட்டுமன்றி அவ் இடதுசாரிகளின் தனித்துவங்களையும் படிப்படியாக இல்லாமற் செய்ய முடிந்தது. ஆனால் தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் இடதுசாரிகளின் கூட்டிணைவைக் கடூரமாக எதிர்த்து வந்தமை குறிப்பிடப்பட வேண்டியதாகும்.

1970ஆம் ஆண்டின் தோல்வியிலும் அரசியற் பலவீனத்திலும் இருந்து தம்மை மீட்டெடுத்துத் தொடர்ந்தும் பாராளுமன்ற அரசியலில் புதிய வேகத்துடன் முன் செல்ல வேண்டிய தேவையும் நிர்ப்பந்தமும் தமிழ்த் தேசியவாதத் தலைமைக்கு இருந்தது. அதற்குரிய சந்தர்ப்பங்களை அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கம் மேற்கொள்ள ஆரம்பித்த இனவாத நடவடிக்கைகள் வழங்கி வந்தன. 


1971ஆம் ஆண்டு ஜே.வி.பி. முன்னெடுத்த இளைஞர் ஆயுதக் கிளர்ச்சி நடவடிக்கை தெற்கில் இடம் பெற்றது. தவறான தலைமைத்துவத்தாற் தவறான வழிமுறைகள் மூலம் முன்னெடுக்கப்பட்ட அக் கிளர்ச்சி ஐக்கிய முன்னணி அரசால் முறியடிக்கப் பட்டது. இந்தியாவின் மட்டுப்படுத்தப்பட்ட ஆதரவுடன் அடக்கப்பட்ட அக் கிளர்ச்சியில் சுமார் இருபதாயிரம் சிங்கள இளைஞர் யுவதிகள் வரை கொல்லப் பட்டனர். தலைவர்களும் ஊழியர்களும் சிறைகளிலுந் தடுப்பு முகாம்களிலும் அடைக்கப் பட்டனர். 

வடக்கு-கிழக்கில் இக் கிளர்ச்சிக்கு ஆதரவு இல்லாத போதும் இளந் தலைமுறையினரால் இக் கிளர்ச்சி உற்று நோக்கப்பட்டது. ஏற்கனவே சாதிய தீண்டாமைக்கு எதிரான புரட்சிகர வெகுஜனப் போராட்டங்களாலும் தாழ்த்தப்பட்ட மக்களிடையே இடம்பெற்ற ஆயுதம் தாங்கிய நடவடிக்கைப் போராட்டங்களாலும் தமிழ் இளைஞர்கள் மத்தியில் சிந்தனை ஓட்டங்கள் தீவிரமடைந்து இருந்தன. 

அப் போராட்டங்கள் போன்று ஏன் இன விடுதலைக்குத் தமிழ் இளைஞர்கள் போராட முடியாது என்ற வினாக்கள் எழுப்பப்பட்டு விவாதிக்கப் பட்டன. தமிழ் இன விடுதலையைப் பரந்துபட்ட பரட்சிகர வெகுஜனப் போராட்டப் பாதையில் முன்னெடுப்பதா அன்றிக் குறுகிய இனத்துவ நிலைப்பாட்டில் நின்று முன்னெடுப்பதா என்பதே அவ் விவாதத்தின் சாராம்சமாக இருந்தது.

தமிழ் இளைஞர்களைத் தமிழ்த் தேசியவாதத்தின் பழைமைவாதக் கருத்தியலின் ஊடான குறுந் தேசியவாத எல்லைக்குள் வைத்திருப்பதையே தமிழரசுக் கட்சித் தலைவர்களும் ஏனையவர்களும் விரும்பினார்கள். சாதிய தீண்டாமைக்கு எதிரான புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சியின் வழிகாட்டலில் இடம்பெற்ற போராட்டங்களாற் கவர்ந்திழுக்கப்படும் தமிழ் இளைஞர்கள் தேசியவாதத்தின் முற்போக்கான கூறுகளையோ அல்லது இடதுசாரிச் சிந்தனைப் போக்குகளையோ பற்றிக் கொள்ளாமற் பார்த்துக் கொள்வதிற் தமிழர் தேசியவாதத் தலைமைகள் கண்ணுங் கருத்துமாக இருந்து வந்தன. 


ஏற்கெனவே ஏகாதிபத்திய விசுவாசமும் கம்யூனிச விரோதமும் கொண்டிருந்த தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் இரண்டும் புதிய நிலைமைகளாற், குறிப்பாக வடக்கிற் புரட்சிகர கம்யூனிஸ்ட் கட்சி முன்னெடுத்த போராட்ட இயக்கங்களால், இளைஞர் யுவதிகள் ஈர்க்கப்பட்டு விடுவார்களோ என்றுந் தமிழ் மக்களின் உழைக்கும் மக்கள் இடது பக்கம் சென்று விடுவார்களோ எனவும் அச்சங் கொண்டிருந்தனர். எனவே, இவ் இடதுசாரிச் சார்பு அபாயத்திலிருந்து தமிழ் மக்களினதும் இளந்தலைமுiயினரதும் கனவத்தைத் திசை திருப்ப வேண்டிய கட்டாயத்திலும் தமிழரசுத் தலைமை கவனத்துடன் இருந்தது. இதில் அந்நியச் சக்திகளின் வழி காட்டல் இல்லை என்றுங் கூறிவிட முடியாது.

இக் காலகட்டத்திற் தான் 1970-71ஆம் ஆண்டுப் பகுதியிற் கிழக்குப் பாகிஸ்தான் தனிநாடாகும் போராட்டம் இடம்பெற்று உச்ச நிலைக்கு வந்தது. அங்கு கம்யூனிஸ்ற்றுகளும் முற்போக்கான தேசியவாதிகளும் ஆட்சி அதிகாரத்தை நிறுவவும் வங்காள தேசம் உருவாகவுங்கூடிய சூழல் காணப்பட்டது. அதனை விரும்பாத இந்திய ஆளும் வர்க்கம் முஜிபூர் ரகுமான் தலைமையிலான பிற்போக்கான தேசியவாத இயக்கத்தை விடுதலைப் போராட்டத்தின் முன்னணி சக்தியாகக் காட்டியது. கிழக்குப் பாகிஸ்தானுக்குள் இந்தியப் படைகள் புகுந்து கொண்டன. 


கிழக்குப் பாகிஸ்தானின் இராணுவம் இந்திய இராணுவத்தாற் சிறைப் பிடிக்கப்பட்டதுடன் தேசியவாதிகளுந் தேசபக்தர்களுங் கம்யூனிஸ்டுக்களும் மட்டுமன்றிச் சாதாரண மக்களும் கொன்றழிக்கப் பட்டனர். இந்திய மேலாதிக்க விசுவாசிகள் முஜிபூர் ரகுமானின் தலைமையில் ஆட்சி அமைத்து பங்ளாதேஷ் என்ற நாடு உருவாக்கம் பெற்றது. இதனை உருவாக்கிக் கொடுத்தவர் அன்றைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தியாவார். 1971இல் இடம்பெற்ற பிரிவினையும் பங்ளாதே~; தனி நாடாகிக் கொண்டமையும் இலங்கைத் தமிழர்கள் மத்தியில் தமிழ்க் குறுந்தேசியவாத அரசியல் நடாத்தி வந்த தமிழரசுக் கட்சிக்கு உற்சாகம் தரும் நம்பிக்கையாக அமைந்தது. 'அன்னை" இந்திராவையும் 'தாய் நாடு" இந்தியாவையுந் தமிழரசுக் கட்சித் தலைமை தமிழீழக் கனவுடன் வணங்கி நின்றது.

1970ஆம் ஆண்டு வரை தமிழரசுக் கட்சித் தலைவர்களுக்கு இலங்கையிற் பிரிவினை மூலம் தமிழர்களுக்கான தனிநாடு அமைக்கும் எவ்வித எண்ணமும் கொள்கை ரீதியாக எழவில்லை. அவர்கள் சமஷ்டி அமைப்புப் பற்றியே உரத்துப் பேசி வந்தனர். அதனைத் தென்னிலங்கையிற் சிங்கள இனவாதிகள் பிரிவினை என்றே சித்தரித்துக் காட்டினார். 


1957இல் பண்டாரநாயக்க-செல்வநாயகம் ஒப்பந்தம் ஏற்பட்டுப் பிரதேச சபைகள் மூலமான தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண முற்பட்ட போது ஜே.ஆர். தலைமையில் ஐக்கிய தேசியக் கட்சி அதனை நாட்டைப் பிரித்து தமிழர்களுக்கு வழங்கும் திட்டம் என்று கூறிக் கண்டி யாத்திரை நடாத்தியது. அன்றிலிருந்து இன்று வரை, தமிழ் மக்களுக்கான எந்தவொரு குறைந்தபட்ச அதிகாரப் பரவலையும் பிரிவினையாகச் சிங்கள மக்களுக்கு காட்டும் போக்கு நீடித்து வருவதையே காண முடிகின்றது.

தமிழரசுக் கட்சி சமஷ்டியை முன் வைத்து வந்த அதே வேளை, மத்திய கிழக்கில் இஸ்ரேல் உருவாக்கப்பட்டமை பற்றியும் அதற்கான எண்ணக்கரு பற்றியுமான அவதானிப்பும் அக்கறையும் அதன் சில தலைவர்களிடம் இருந்து வந்தது. இஸ்ரேல் பற்றிய முன்னுதாரணத்தை மெச்சிச் சிலர் அங்கு பயணம் மேற்கொண்டு திரும்பிவந்து சிலாகித்தும் பேசி வந்தனர். அவர்களில் ஒருவரான தமிழரசுக் கட்சியின் மூளை என வர்ணிக்கப்பட்ட ஊர்காவற்துறை பாரளுமன்ற உறுப்பினராக இருந்த வி. நவரத்னம் முக்கியமானவராவார். அவர் அறுபதுகளின் பிற்கூற்றிலே தமிழரசுக் கட்சி உருவாகிய ஓரங்கட்டும் முரண்பாட்டால் கட்சியை விட்டு வெளியேறித் தமிழர் சுயாட்சிக் கழகத்தை உருவாக்கினார். அவரது முன் மொழிவாகவே தமிழீழம் என்ற எண்ணக்கரு வெளிப்படுத்தப்பட்டது. 


ஏற்கனவே அடங்காத் தமிழன் என்று வர்ணிக்கப்பட்ட ஸி. சுந்தரலிங்கம் போன்ற சிலரும் தனித் தமிழ் இராச்சியம் பற்றிக் கூறியிருந்தனர். அவை எல்லாவற்றையுங், குறிப்பாக வி. நவரத்தினம் முன்வைத்த தமிழீழத்தையும், நிராகரித்து வந்த எஸ்.ஜே.வி. செல்வநாயகமும் அவரது சகாக்களும், 1970ஆம் ஆண்டிற்குப் பின், தனித் தமிழீழக் கோரிக்கைக்கு வந்து சேர்ந்தனர். அதற்கு ஏற்கனவே உருவாகிய வடக்கு-கிழக்கு அரசியல் முன் நிகழ்வுகள் காரணமாகின. அத்துடன் 1970ஆம் ஆண்டின் சிறிமாவோ பண்டாரநாயக்க தலைமையிலான ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் இனவாத முடிவுகளும் நடவடிக்கைகளும் தமிழரசுக் கட்சியின் தமிழீழக் கோரிக்கைக்கான பிரசாரத்திற்கு வலுச் சேர்த்துக் கொண்டன.

1970இல் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையில் ஐக்கிய முன்னணி அரசாங்கம் பதவிக்கு வந்தது. சமசமாஜக் கட்சியின் என்.எம். பெரேரா நிதி அமைச்சராகவும் கொல்வின் ஆர். டி சில்வா அரசியலமைப்பு விவகார அமைச்சராகவும் பதவி வகித்தனர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக பீற்றர் கெனமன் வீடமைப்பு அமைச்சராகினார். சிறி லங்கா சுதந்திரக் கட்சியின் பதியுதீன் முகமட் கல்வி அமைச்சராகப் பதவி வகித்தார். மேலுங் குறிப்பிடக் கூடியஒரு விடயமும் உண்டு. 


ஏற்கெனவே யாழ்ப்பாணத் தொகுதியில் ஜீ.ஜீ. பொன்னம்பலத்தைத் தோற்கடித்துப் பாராளுமனற் உறுப்பினராகிய அல்பிரட் துரையப்பா 1970 தேர்தலில் தோல்வி கண்டார். அவர் ஏற்கனவே சிறி லங்கா சுதந்திரக் கட்சியில் இணைந்தும் இருந்தார். அவரது தோல்விக்குப் பின் மீண்டும் அவர் யாழ் மாநகர சபையின் முதல்வராகிக் கொண்டார். அதனாற் தமிழரசுக் கட்சி விரல் சுட்டிய பாராளுமன்றத் துரோகிகள் பட்டியலில் முதல் ஆளாக்கப்பட்டும் இருந்தார்.

அத்துடன் இத் துரோகப் பட்டியல் நீளத் தொடங்கியது. அ. அமிர்தலிங்கத்தை தோற்கடித்த முன்னாட் பாடசாலை அதிபர் எஸ். தியாகராசாவும் ஈ.எம்.வி. நாகநாதனைத் தோற்கடித்த ஸி. அருளம்பலமும் துரோகிப் பட்டியலிற் சேர்க்கப் பட்டனர். தமிழரசுக் கட்சியினரின் இத் துரோகிப் பட்டியலில் அன்றைய ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற் தபால் அமைச்சர் பதவி பெற்ற செ. குமாரசூரியரும் அடங்குவர். தமிழ்த் தேசியவாத அரசியல் அரங்கில் தமிழ்க் காங்கிரஸ், தமிழரசுக் கட்சிகளின் காலத்திலேயே 'துரோகிகளை" அடையாளப படுத்தித் தத்தமது பாராளுமன்ற வெற்றிக்குப் பிரச்சாரம் செய்யும் போக்கு ஆரம்பித்தது. 


1970 வரை எதிர்ப் பிரசாரமாக மட்டுமே இருந்து வந்த இப் போக்கு துரோகிகளை அழித்தொழிக்கும் நடைமுறையாக்கப் பட்டது. தமிழரசுக் கட்சியின் குறிப்பிட்ட தலைவர்களால் 'ஆமை பிடிப்பார் மல்லாத்துவார் நாமதைச் சொன்னாற் பாவம்" என்ற முதுமொழி போன்று 'துரோகிகள்" என்போர் அடையாளப் படுத்தப்பட்டனர். அத்தகைய துரோகிகளுக்கு இயற்கை மரணம் வரமாட்டாது என்று பகிரங்கமாகவே தமிழரசுக் கட்சியினர் கூறவும் பின் நிற்கவில்லை. இத்தகைய தொடக்கம் எங்கே கொண்டு சென்று விடும் என்ற அபாயத்தை அ. அமிர்தலிங்கம், ப. யோகேஸ்வரன் போன்றோர் தூரநோக்குடன் உணர்ந்திருக்கவில்லை.

ஐக்கிய முன்னணி அரசாங்கம் தமிழரசுக் கட்சியுடன் எவ்விதக் கொடுக்கல் வாங்கலும் செய்யத் தயாராக இருக்கவில்லை. தமக்கு ஆதரவளித்த வட்டுக்கோட்டை உறுப்பினர் எஸ். தியாகராசா, நல்லூர் உறுப்பினர் சி. அருளம்பலம், தபால் அமைச்சர் செ. குமாரசூரியர், தாழ்த்தப்பட்ட மக்களின் பிரதிநிதி எனக் கூறி நியாயமன உறுப்பினராக்கப்பட்ட எம்.சி. சுப்பிரமணியம் ஆகியோர் மூலமான சலுகைகள், அபிவிருத்திகள் போன்றவற்றை அரசாங்கம் செயற்படுத்தி வந்தது.

தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம் ஐக்கிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆறு அம்சக் கோரிக்கைகள் கொண்ட மனுவை அனுப்பி வைத்த போதும் அரசாங்கம் அதனை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. இந்த நிலையிலேயே ஐக்கிய முன்னணி அரசாங்கம் புதிய அரசியலமைப்பை நிறைவேற்றிக் கொண்டது. பௌத்த மதத்திற்கு விசேட இடம் வழங்கியதாலும் ஏற்கனவே சோல்பரி அரசியலமைப்பில் சிறுபான்மையினர் பாதுகாப்பிற்கென பெயரளவில் இடம்பெற்றிருந்த 19வது ஷரத்தை நீக்கியமையாலும் தமிழ் மக்களது கோரிக்கைகட்குரிய ஏற்பாடுகள் எதுவும் இடம் பெறாமையாலும் அப் புதிய அரசியலமைப்பு தமிழர்களுக்கு எதிரானதொன்று என்ற நிலைக்குள்ளாகிறது. 


மேலும் தமிழரசுக் கட்சி அதனை எதிர்த்து நிராகரித்தமையும் அவ் அரசியலமைப்புப் பற்றிய அதிருப்தி வளரக் காணரமாகிக் கொண்டது. அதே வேளை, அவ் அரசியலமைப்பானது இலங்கையைச் சுதந்திரமும் சுயாதிபத்தியமுங் கொண்ட நாடாக்கும் வகையில் பிரித்தானிய ஏகாதிபத்தியத்துடன் இருந்து வந்த அரசியலமைப்பு ரீதியான தொடர்புகளைத் துண்டிக்க வழி ஏற்படுத்தியமை குறிப்பிடத் தக்கதாகும். 1972ஆம் ஆண்டின் பின்னான நிகழ்வுகளையும் தமிழீழக் கோரிக்கைக்கான பிரகடனத்தை அடுத்து வரும் தொடரில் காண்போம்.

(நன்றி: புதிய பூமி)

3 comments:

பிரதீப் - கற்றது நிதியியல்! said...

எனக்கென்னவோ பிரபாகரன் அவர்கள் உங்களையும் எங்களையும் போல blog ஒன்று ஆரம்பித்து போராட்டத்தை முன்னெடுத்து சென்றிருந்தால், இணையம் மூலமாக விடுதலை வென்றெடுத்த முதல் இனமாக தமிழினம் இருந்திருக்கும் என்றே தோன்றுகிறது.

புலிகள் இல்லாத இன்றைய சூழழில், விலைபோகாத அம்மாற்று சக்திகளின் செயல்பாடுகளை, வரலாறு பதியத் தானே போகின்றது....

sugan said...

வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவுவரை

துரையப்பாவிலிருந்து காமினிவரை

வல்வெட்டித்துறையிலிருந்து வட்டுவாகல்வரை

திருநெல்வேலியிலிருந்து நந்திக்கடல்வரை

sugan said...

வட்டுக்கோட்டையிலிருந்து முல்லைத்தீவுவரை

துரையப்பாவிலிருந்து காமினிவரை

வல்வெட்டித்துறையிலிருந்து வட்டுவாகல்வரை

திருநெல்வேலியிலிருந்து நந்திக்கடல்வரை