Sunday, August 09, 2015

முதலாளிய ஆதரவாளர்கள் கம்யூனிசத்தை மறக்கவில்லை!


மிகக் குறைந்தளவே ஆனாலும், மேட்டுக்குடி அறிவுஜீவிகளின் "கம்யூனிச அறிவு" திகைக்க வைக்கின்றது. அவர்கள் கண்மூடித்தனமாக முதலாளித்துவத்தை ஆதரித்தாலும், முதலாளித்துவம் பற்றிய அரிச்சுவடி கூட படித்திருக்கவில்லை என்பது, அவர்களுடனான உரையாடலின் போது தெளிவாகின்றது.

உதாரணத்திற்கு சில:

 - மார்க்ஸ், எங்கெல்ஸ் பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்ல விடயம். ஆடம் ஸ்மித், ரிக்கார்டோ, கெய்ன்ஸ் பற்றித் தெரியுமா?
"................" ???

- மூலதனம் என்ற நூல் இருப்பதை தெரிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. "தேசங்களின் செல்வம்" என்ற நூல் பற்றிக் கேள்விப் பட்டிருக்கிறீர்களா? "................" ???

- ஸ்டாலின், மாவோ பற்றி அறிந்து வைத்திருக்கிறீர்கள். நல்லது. குரொம்வெல், ரொபெஸ்பியர் பற்றி என்ன தெரியும்?
 ".................." ???

- ரஷ்யப் புரட்சிக்குப் பின்னர் உருவான சோஷலிச நாடுகளை உங்களுக்குத் தெரியும். நல்லது. பிரெஞ்சுப் புரட்சிக்குப் பின்னர் உருவான லிபரல் நாடுகளை குறிப்பிட முடியுமா?
"..............." ???

- கம்யூனிசத்தால் கொல்லப் பட்டவர்கள் பற்றிய புள்ளி விபரங்களை விரல் நுனியில் வைத்திருக்கிறீர்கள். அதே மாதிரி முதலாளித்துவம் கொன்ற மக்களைப் பற்றிய புள்ளி விபரம் கிடைக்குமா?
 "............." ???

இப்படி கேட்டுக் கொண்டே போகலாம். ஆனால், எந்தக் கேள்விக்கும் பதில் வராது. இதிலிருந்து ஓர் உண்மை தெளிவாகின்றது. உண்மையில், முதலாளித்துவம் தான், காலாவதியாகிப் போன டைனோசர் காலத்து சமாச்சாரம். அதனால் தான் அதை ஆதரிப்பவர்களுக்கும் ஒன்றுமே தெரியவில்லை. அதற்கு மாறாக கம்யூனிசம் பற்றி ஓரளவாவது தெரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தளவுக்கு இன்றைக்கும் உயிர்ப்புடன் இருக்கிறது.

கார்ல் மார்க்ஸ் பற்றி அறிந்திராதவர்கள் மிக மிகக் குறைவு. கம்யூனிசத்தை வெறுப்பவர்கள் கூட அவரைப் பற்றி அறிந்து வைத்திருக்கிறார்கள். ஆனால், ஹெர்பெர்ட் ஸ்பென்சர் (Herbert Spencer) பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்? முதலாளித்துவ ஆதரவாளர்களே! அவர் தான் உங்களது தத்துவ அறிஞர்! குருவையே மறக்கலாமா?

ஹெர்பெர்ட் ஸ்பென்சர், கார்ல் மார்க்ஸ் வாழ்ந்த அதே காலத்தில் வாழ்ந்த லண்டன்வாசி. இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துள்ளனரா என்பது தெரியாது. ஆனால், இருவரது சமாதிகளும், லண்டன் ஹைகேட் மயானத்தில் அருகருகே உள்ளன!

இதிலே முரண்நகை என்னவென்றால், இருவரும் வாழ்ந்த காலத்தில் எதிரெதிர் துருவங்களில் இருந்தனர். மார்க்ஸின் தத்துவம் ஒட்டு மொத்த மனித இனத்தினதும் முன்னேற்றத்தை கருத்தில் கொண்டிருந்தது. பணக்காரர்களின் செல்வம் திரட்டலுக்கு எதிராக, ஏழைகளின் நல்வாழ்வை முன்நிறுத்தினார்.

அதற்கு மாறாக, ஸ்பென்சரின் தத்துவம், வலியது மட்டுமே பிழைக்கும் என்று ஒரு சிறு மேட்டுக்குடியினரின் முன்னேற்றத்தை மாத்திரம் கருத்தில் கொண்டிருந்தது. இவரது வலியது பிழைக்கும் கொள்கை (உண்மையில் அது டார்வினுடையது அல்ல), இன்றளவும் முதலாளித்துவ ஆதரவாளர்களால் மேற்கோள் காட்டிப் பேசப் படுகின்றது.

ஹைகேட் மயானத்தில் உள்ள கார்ல் மார்க்சின் சமாதி, பிற்காலத்தில் மக்களின் பணத்தில் பெரிதாகக் கட்டப் பட்டது. அதை தரிசிக்க வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வந்த படியால், நினைவுச் சின்னமாக மாற்றப் பட்டது.

இன்றைக்கும் வருடந்தோறும் ஆயிரக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் மார்க்சின் சமாதியை காண வருகிறார்கள். சீனா, இந்தியா போன்ற தொலைதூர நாடுகளில் இருந்தெல்லாம் வருகிறார்கள். ஆனால், "முதலாளித்துவ அறிஞர்" ஸ்பென்சரின் சமாதி அருகில் கேட்பாரற்றுக் கிடக்கிறது. அங்கே அவரது சமாதி இருப்பது யாருக்கும் தெரியாது. ஸ்பென்சரின் உறவினர்களாவது அங்கே வருவார்களா தெரியாது.

"இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும். இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்."

Friday, August 07, 2015

கம்யூனிச எதிர்ப்பு புளுகுகளை எழுதிய போலி "சரித்திர" ஆசிரியர் காலமானார்!


மேற்குலக முதலாளிய எஜமானர்களின் அடியாளாக, வரலாறு என்ற பெயரில் புனைகதைகளை எழுதி வந்த Robert Conquest, தனது 98 வது வயதில் கலிபோர்னியாவில் (3-8-2015) காலமானார். சோவியத் யூனியனில் நடந்த "ஸ்டாலினின் படுகொலைகள்" பற்றிய பொய்களை பரப்புரை செய்த, மேற்குலக "சரித்திர" ஆசிரியர் அவர் தான்.

ஆங்கில-அமெரிக்க பெற்றோருக்கு பிறந்த ரொபேர்ட், பனிப்போர் காலத்தில் டாலர்களை அள்ளிக் கொடுத்த, எஜமானர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்வதற்காக, "ஸ்டாலினின் பயங்கரம்" (The Great Terror) என்ற நூலை எழுதினார்.

அவர் ஓர் உண்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்தால், எதற்கு ஸ்டாலினின் படுகொலைகள் பற்றிய நூலை, சோவியத் யூனியனின் ஜென்ம விரோதியான அமெரிக்காவில் இருந்து வெளியிட வேண்டும்? எதிரி தரப்பினால் தெரிவிக்கப் படும் தகவல்கள் நம்பக் கூடியனவா?

ரொபேர்ட் ஒரு நேர்மையான "சரித்திர" ஆசிரியராக இருந்திருந்தால், அன்று அமெரிக்காவை, அல்லது சோவியத் யூனியனை சார்ந்திராத, "அணிசேரா நாடு" ஒன்றில் இருந்து எழுதி வெளியிட்டிருக்கலாமே? அமெரிக்க அரசின் நிதியுதவியுடன், அமெரிக்காவில் வெளியான ஒரு நூல் எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது?

"கம்யூனிச எதிர்ப்பாளர்களின் பைபிள்" என்று கருதப் படும் அந்த நூலை மேற்கோள் காட்டியே, இன்று வரையில் ஸ்டாலினுக்கு எதிரான அவதூறுகள் பரப்பப் பட்டு வருகின்றன. ஸ்டாலின் இருபது மில்லியன் பேரை கொலை செய்ததாக தெரிவிக்கப்படும் "புள்ளி விபரம்(?)", அந்த நூலில் இருந்து தான் பெறப் பட்டது. (அதற்கு எந்த ஆதாரமும் இல்லாமலே எழுதி இருந்தார்.)

திருஞான சம்பந்தர் தனது ஞானக்கண்ணால் கோயிலைப் பார்த்து தேவாரம் பாடியதைப் போல, இந்த "சரித்திர" ஆசிரியரும், சோவியத் யூனியனுக்கு செல்லாமலே, கற்பனையில் கண்ட காட்சிகளை புத்தமாக எழுதினார். அந்த ஆதாரமற்ற பொய்களை இன்றும் பலர் இரை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பிரச்சார நோக்கில், வேண்டுமென்றே எண்ணிக்கைகளை மிகைப் படுத்தி எழுதுவதாக, அப்போதே இவர் மீது விமர்சனங்கள் எழுந்தன. சோவியத் யூனியன் கலைக்கப் பட்ட பின்னர் வெளிச்சத்திற்கு வந்த இரகசிய ஆவணங்கள், இவரது "தகவல்கள்" யாவும் மிகைப் படுத்தல்கள் என்பதை நிரூபித்து இருந்தன.

சோவியத் யூனியன் பக்கம் எட்டியும் பார்த்திராத, ரஷ்ய மொழி தெரியாத ரொபேர்ட், தனது நூலுக்கு தேவையான "ஆதாரங்களை" எங்கிருந்து பெற்றார்? சந்தேகத்திற்கிடமின்றி ஜெர்மன் நாஸிகளின் பிரச்சார ஊடகங்களில் இருந்து தான். ஏனென்றால், பல வருடங்களாக ஜெர்மன் உளவுத்துறை தான் சோவியத் யூனியனுக்குள் என்ன நடக்கிறது என்ற உளவுத் தகவல்களை சேகரித்துக் கொண்டிருந்தது. அதற்கான வளங்கள் நிறையவே இருந்தன. 

உதாரணத்திற்கு, உக்ரைனிய பாசிஸ்டுகள் அல்லது தேசியவாதிகள், நாஸிகளுடன் தொடர்பில் இருந்தனர். நாஸி ஆக்கிரமிப்புக் காலத்தில், உக்ரைனிய சுயாட்சிப் பிரதேசத்தை வைத்திருந்தனர். உக்ரைனிய பஞ்சம் தொடர்பான பல தகவல்கள் அங்கிருந்து கிடைத்தவை தான்.

அந்த "ஆதாரங்களின்" அடிப்படையில் தான், "உக்ரைனிய பஞ்சத்தில் பல இலட்சம் பேர் மாண்டதற்கு ஸ்டாலின் தான் காரணம்" என்று தனது நூலில் கூசாமல் புளுகினார். ஆனால், அன்று உக்ரைனின் ஒரு பகுதி மட்டுமே சோவியத் பிரதேசமாக இருந்தது என்பதையும், ஐரோப்பிய நாடுகள் எல்லாவற்றிலும் பஞ்சம் தலைவிரித்தாடியது என்பதும், இந்த போலி "சரித்திர" ஆசிரியருக்கு தெரியாமல் போனதில் வியப்பில்லை. (பார்க்க: உக்ரைனிய பஞ்சம்: உண்மையும், புனை கதைகளும்; http://kalaiy.blogspot.nl/2014/11/blog-post_22.html )

ஒரு பகுதி பஞ்சத்திற்கு ஸ்டாலின் காரணமாக இருந்தாலும் கூட, உண்மையில் ஸ்டாலின் அறிமுகப் படுத்திய விவசாய கூட்டுறவு உற்பத்தி முறை, பஞ்சத்தை முடிவுக்கு கொண்டு வந்தது. ரொபேர்ட் அந்தத் தகவலை தலைகீழாக புரட்டிப் போட்டுள்ளார். பொய் சொல்வதற்கு கூட தைரியம் வேண்டும். அது இந்த போலி "சரித்திர" ஆசிரியர் ரொபேர்ட் இடம் நிறையவே உள்ளது.

அவரால் எப்படி பொய்களை துணிந்து பரப்புரை செய்ய முடிந்தது? சாம்ராஜ்யத்தை ஆளும் சக்கரவர்த்திகள் மனது வைத்தால் எதுவும் சாத்தியமே! மேற்குலகில், முதலாளித்துவ கடும்போக்காளர்கள் என மக்களால் வெறுக்கப் பட்ட ஆட்சியாளர்களான, ரொனால்ட் ரீகன், மார்க்கிரட் தாட்சர் போன்றோருக்கு இவர் தான் குரு நாதர். அதனால் தான், அவர்களே நேரடியாக அழைத்துக் கௌரவித்தார்கள்.

அண்மையில் கூட, இனப்படுகொலையாளி ஜோர்ஜ் புஷ் இவருக்கு விருது வழங்கி இருந்தார். 20 ம் நூற்றாண்டில் நடந்த ஸ்டாலினின் படுகொலைகள் பற்றி நூல் எழுதிய ஒருவர், 21 ம் நூற்றாண்டில் படுகொலைகள் செய்த ஜோர்ஜ் புஷ்ஷின் இரத்தக் கறை படிந்த கரங்களால் விருது வாங்குவதற்கு கூச்சப் படவில்லை!

"ரொபேர்ட் எழுதிய நூலை வாசித்த பின்னர் தான், ஸ்டாலின் நடத்திய படுகொலைகள் பற்றிய "உண்மைகளை" தான் அறிந்து கொண்டதாகவும், மரபு மார்க்சியரான கலையரசனுக்கு இவர் இப்போதும் பொய்யரோ?" என்று முகநூலில் ஒரு கம்யூனிச எதிர்ப்பாளர் ஆதங்கப் பட்டிருந்தார். நண்பர்களே, கலையரசன் சொல்கிறார் என்பதற்காக எதையும் நம்பத் தேவையில்லை. 

Robert Conquest யார் என்பதை நீங்களாகவே தேடிப் பாருங்கள். உலகம் முழுவதும் கம்யூனிசத்தை எதிர்த்து பொய்களை பரப்புவதற்காக நியமிக்கப் பட்ட, பிரிட்டிஷ் அரசின் உளவாளியாக வேலை செய்தவர் தான் இந்த போலி "சரித்திர" ஆசிரியர் Robert Conquest! அதற்கான ஆதாரங்கள் உள்ளன!

Information Research Department (IRD)என்பது பிரிட்டிஷ் வெளிவிவகார அமைச்சின் கீழ் செயற்பட்ட புலனாய்வுத்துறை ஆகும். அதிலே ஏராளமான அறிவுஜீவிகளும், ஊடகவியலாளர்களும் கூலிக்கு அமர்த்தப் பட்டிருந்தனர். அவர்களில் ஒருவர் தான் Robert Conquest! அவர்களது வேலையே புனைகதைகள் எழுதுவது தான். கம்யூனிசம், சோவியத் யூனியன், ஸ்டாலின் பற்றி எப்படியான கட்டுக்கதைகளையும், பொய்களையும் எழுதி பரப்புரை செய்யலாம். மக்கள் மனதில் கம்யூனிசத்தின் மேல் வெறுப்பு வரச் செய்ய வேண்டும். அது தான் முக்கியம்.

பல தடவைகள், CIA, IRD, இரண்டும் சேர்ந்து கூட்டு நடவடிக்கைகளை எடுத்துள்ளன. அதன் நடவடிக்கைகள் ஐரோப்பாவுக்குள் மட்டும் நின்று விடவில்லை. குறிப்பாக, இந்தோனேசியாவில் சுகார்னோ அரசுக்கு ஆதரவளித்து வந்த இந்தோனேசிய கம்யூனிஸ்ட் கட்சி, அதன் பொய்ப் பரப்புரைகளினால் கடுமையான பின்னடைவுகளுக்கு உள்ளானது. இந்தோனேசியாவுக்கு அயலில் இருந்த, பிரிட்டிஷ் காலனி நாடுகளான சிங்கப்பூர், மலேசியாவில், அது தளம் அமைத்து செயற்பட்டது. அங்கிருந்து கொண்டு, வானொலி மற்றும் பல ஊடகங்களை பயன்படுத்தி, கம்யூனிச எதிர்ப்புப் பிரச்சாரம் செய்யப் பட்டது.

ஏற்கனவே பிரிட்டிஷ் புலனாய்வுத்துறைக்கு வேலை செய்த ஜோர்ஜ் ஆர்வெல் என்ற நாவலாசிரியர் எழுதிய "விலங்குப் பண்ணை", அரபி, சீனம், போன்ற பல உலக மொழிகளில் மொழிபெயர்க்கப் பட்டு இலவசமாக விநியோகிக்கப் பட்டது. அதற்கான செலவுகளை IRD பொறுப்பெடுத்தது. அப்படிப் பட்ட IRD இன் சேவையில் இருந்த Robert Conquest எழுதிய, ஸ்டாலினைப் பற்றிய "சரித்திர" நூல், எந்தளவு நம்பகத் தன்மை வாய்ந்தது? கம்யூனிச எதிர்ப்புக் காய்ச்சலால் பீடிக்கப் பட்ட அறிவுஜீவிகளே பதில் சொல்லுங்கள்!

Tuesday, August 04, 2015

"இஸ்ரேலியர்கள் சுட்டு வீழ்த்திய இத்தாலி விமானம்!", மர்மம் துலங்குகிறது


மொசாட்டின் சர்வதேச பயங்கரவாதம், ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்தும் அளவிற்கு சென்றுள்ளது. 1980 ம் ஆண்டு (27 June 1980), இத்தாலியின் வடக்கில் உள்ள பொலோன்ஞோ நகரில் இருந்து, தெற்கில் உள்ள பாலேர்மோ நகரிற்கு சென்று கொண்டிருந்த பயணிகள் விமானம், ஊஸ்திச்சா (Ustica) தீவுக்கு அருகில் விழுந்து நொறுங்கியது.

விமானத்தில் பயணம் செய்த, குழந்தைகள், பெண்கள் உட்பட எண்பது பயணிகள் மரணமடைந்தனர். அன்று அது ஒரு விபத்து என்று அறிவிக்கப் பட்டாலும், நடந்த சம்பவம் ஒரு மர்மமாக இருந்தது. அப்போதே அது சுட்டு வீழ்த்தப் பட்டிருக்கலாம் என்று பல வதந்திகள் உலாவின. ஆனால், யாராலும் அதனை ஊர்ஜிதப் படுத்த முடிந்திருக்கவில்லை.

அண்மையில் பகிரங்கப் படுத்தப் பட்டுள்ள இத்தாலி அரச ஆவணங்களில் இருந்து உண்மை தெரிய வந்துள்ளது. அன்றைய இஸ்ரேலிய பிரதமர் மெனாகிம் பெகினின் நேரடி உத்தரவின் பேரில், மொசாட் செலுத்திய ஏவுகணை விமானத்தை சுட்டு வீழ்த்தியது.

மொசாட் ஒரு இத்தாலி பயணிகள் விமானத்தை சுட்டு வீழ்த்துவதற்கு என்ன காரணம்? அந்தக் காலத்தில், ஈராக்கில் சதாம் ஹுசைன் அணு உலை அமைக்கும் திட்டத்திற்கு, பிரான்சும், இத்தாலியும் இரகசியமாக உதவிக் கொண்டிருந்தன.

பிரான்சின் மார்செய் நகரில் இருந்து, அணு உலைக்கு தேவையான பொருட்களை ஏற்றிக் கொண்டு, பிரெஞ்சு விமானம் ஒன்று பாக்தாத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது. அனேகமாக, அந்த விமானத்தை தான் இஸ்ரேலியர்கள் குறி வைத்திருந்தனர்.

ஆனால், இறுதி நேரத்தில், இத்தாலி அரசின் ஏற்பாட்டின் படி, பயணப் பாதை மாற்றப் பட்டது. வரப்போகும் ஆபத்தை அறியாமல் சென்று கொண்டிருந்த இத்தாலி பயணிகள் விமானம் ஏவுகணை தாக்குதலில் அகப்பட்டது.

பிரான்ஸ், இத்தாலி அரசுக்களுக்கு மட்டுமல்ல, அமெரிக்க அரசுக்கும், இஸ்ரேலின் தாக்குதல் திட்டம் முன்கூட்டியே தெரிந்திருந்தது. எல்லோரும் சேர்ந்து, ஒன்றுமறியாத அப்பாவி பயணிகளான 81 இத்தாலி பிரஜைகளை பலி கொடுத்திருந்தனர்.

இந்த சம்பவம் நடந்து, சரியாக ஒரு வருடத்தின் பின்னர், ஈராக் வான் பரப்பிற்குள் ஊடுருவிய இஸ்ரேலிய போர் விமானங்கள், அணு உலையை தாக்கி நிர்மூலமாக்கின. அதற்கு பிறகு ஈராக் அரசு அணு உலைத் திட்டத்தை தொடரவில்லை. 

இத்தாலியில் "ஊஸ்திச்சா படுகொலை" (Strage di Ustica) என்று அழைக்கப் பட்ட அந்த சம்பவம், எண்பதுகளில் பரபரப்பாக பேசப் பட்டது. "விமானம் விபத்தில் சிக்குவதற்கு முன்னர் ராடார் திரையில் இருந்து மறைந்து விட்டதாக" அப்போது அறிவிக்கப் பட்டது. "பயணிகள் எல்லோரும் இறந்து விட்டிருப்பார்கள்" என்ற காரணத்தைக் கூறி, அரசு தேடுதல் நடவடிக்கைகளை தாமதப் படுத்தி இருந்தது. இது போன்ற கூற்றுக்கள், அது ஒரு சதியாக இருக்கலாம் என்று பேசப் பட காரணமாக இருந்துள்ளன. 

அண்மைக் காலமாக, சில விமானங்கள் மர்மமான முறையில் விழுந்து நொறுங்கிய சம்பவங்களுக்கு பின்னணியிலும் ஏதாவது சதி இருக்கலாம் என்பதை சந்தேகிப்பதற்கு இடமுண்டு.

ஏவுகணை தாக்குதல் பற்றிய கதைகள் அப்போதே அடிபடத் தொடங்கி விட்டன. அரசு மட்டத்தில் கூட அது பற்றி விவாதிக்கப் பட்டது. அண்மையில் 2013 ம் ஆண்டு, மீண்டும் அது குறித்து ஆராய்ந்து விட்டு "விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப் பட்டமை உறுதியாகின்றது" என்று சொன்னார்கள்.

இருப்பினும், உண்மையான குற்றவாளிகளையும், அணுவாயுத திட்டங்களையும் மறைப்பதற்காக, வேறு பல காரணங்களை சொன்னார்கள். சிலநேரம், அன்றைய லிபிய அதிபர் கடாபியை குறி வைத்திருக்கலாம் என்றும் சொன்னார்கள். பிரெஞ்சு கடற்படையினர் சுட்டு வீழ்த்தியதாகவும் பரவலாக நம்பப் பட்டது. ஆனால், இதுவரையில் யாரையும் நேரடியாக குற்றஞ் சாட்டவில்லை.

ஐரோப்பாவில் மொசாட் பயங்கரவாத செயல்களில் ஈடுபடுவது இதுவே முதல் தடவை அல்ல. ஏற்கனவே இத்தாலியில் நடந்த ஒரு குண்டுவெடிப்பு சம்பவத்திற்கும், மொசாட் காரணமாக இருந்திருக்கலாம் என நம்பப் பட்டது. மேலும், அன்றிருந்த தீவிர வலதுசாரி இயக்கங்களுக்கு மொசாட் ஆயுத விநியோகம் செய்து வந்ததை, முன்னாள் உளவாளிகள் ஏற்கனவே தெரிவித்திருந்தனர்.

ஊஸ்திச்சா படுகொலையில் மொசாட்டின் பங்கு பற்றிய தகவல்கள், பின்வரும் இத்தாலி மொழி இணையத் தளத்தில் விரிவாக எழுதப் பட்டுள்ளன. அதில் பகிரங்கப் படுத்தப் பட்ட இத்தாலி அரச ஆவணங்களும் உள்ளன.

STRAGE DI USTICA: IL SEGRETO DI ITALIA, ISRAELE, FRANCIA; UNITED STATES OF AMERICA
http://sulatestagiannilannes.blogspot.it/2014/11/strage-di-ustica-il-segreto-di-italia.html?m=1

Monday, August 03, 2015

"இடதுசாரியம் ஓர் இளம்பருவக் கோளாறு" - லெனின்


இந்தக் காலத்திற்கும் வழிகாட்டும் லெனின் எழுதிய சிறு நூல்: "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு". தற்காலத்திற்கும் பொருந்தும் பல ஆலோசனைகள் அந்த நூலில் உள்ளன. (1920 ம் ஆண்டு எழுதப் பட்டது.)

இன்றைக்கு சமூக வலைத்தளங்களில் இயங்கும் முற்போக்கான நண்பர்களுக்கும் இந்த ஆலோசனை தேவையானது. மக்களை எப்படி அணுகுவது? இன்றைய இளைய தலைமுறையினர் பயன்படுத்தும் பேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற தளங்களில் பிரச்சாரம் செய்வது ஆரோக்கியமானது தான். அதை விட, நாங்கள் பிற்போக்காளர்களின் ஒன்றுகூடல் என்று ஒதுக்கும், மத நிறுவனங்கள் மற்றும் பிழைப்புவாத அரசியல் கட்சிகள் மத்தியிலும் வேலை செய்ய வேண்டும்.

"ஏன் பெரும்பான்மையான மக்கள், பாராளுமன்ற பிழைப்புவாதிகளை நம்பி இருக்கிறார்கள்? பிற்போக்கான அரசியல் கட்சிகள் தங்களை ஏமாற்றுவது தெரிந்தும் அவற்றை நம்புகிறார்கள்?" 

இன்றைக்கு இருக்கும் தொழிற்சங்கங்கள், பாராளுமன்ற ஜனநாயக அமைப்பு ஆகியன, எந்தளவு பிற்போக்கானதாக, முதலாளித்துவ பிழைப்புவாதக் கட்சிகளின் ஆதிக்கத்தின் கீழ் இருந்த போதிலும், நாங்கள் அவற்றிற்குள் இறங்கி வேலை செய்ய வேண்டும் என்பதை லெனின் வலியுறுத்துகிறார். ஏனென்றால், மக்கள் அங்கே தான் இருக்கிறார்கள்.

லெனின் இந்த நூலில், ஜெர்மனியில் கம்யூனிஸ்ட் கட்சி விட்ட தவறுகளை சுட்டிக் காட்டுகிறார். வழமையான தொழிற்சங்கங்களில் இருந்து விலகி நின்று, தூய்மையான தொழிற்சங்கம் கட்டுவதும், பாராளுமன்ற தேர்தல்களை முற்று முழுதாக நிராகரிப்பதும் "தீவிர இடதுசாரி தன்மை" ஆகும்.


ரஷ்யாவில் போல்ஷெவிக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை கொண்டிருந்தது. ஒரு பக்கம், இரகசியமான சட்டவிரோதமான வேலைகளை செய்து கொண்டிருந்தது. மறு பக்கம், வெளிப்படையான சட்டபூர்வமான பிரச்சார வேலைகளிலும் ஈடுபட்டது. இவை இரண்டும் அவசியம் என்று லெனின் வலியுறுத்துகிறார்.

லெனின் இந்த இடத்தில், மலினோவ்ஸ்கி என்ற போல்ஷெவிக் கட்சி உறுப்பினரின் உதாரணத்தை எடுத்துக் காட்டுகின்றார். கட்சியின் மத்திய குழு உறுப்பினராகவும் இருந்த மலினோவ்ஸ்கி, சார் அரசினால் அனுப்பப் பட்ட ஊடுருவலாளர். அவர் கட்சிக்குள் இயங்கிய பல செயலூக்கம் கொண்ட உறுப்பினர்களை காட்டிக் கொடுத்து வந்தார். அவரது காட்டிக்கொடுப்புகள் கட்சிக்கு பெரும் பாதிப்புகளை உண்டாக்கி இருந்தது. அவரால் பல தோழர்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இருப்பினும், கட்சியின் நன்மதிப்பை பெறுவதற்காக, மலினோவ்ஸ்கி ஏற்கனவே சட்டபூர்வமான பிரச்சார வேலைகளை செய்ய வேண்டி இருந்தது. சார் அரசின் அனுமதி பெற்ற சட்டபூர்வ ஊடகமான பத்திரிகை ஒன்றை ஸ்தாபித்ததன் மூலம், ஆயிரக் கணக்கான புதிய உறுப்பினர்கள் சேரவும் காரணமாக இருந்தார். உலகின் பல நாடுகளில், வளர்ந்த நாடுகளில் கூட, அரசு பல உளவாளிகளை அனுப்பி கம்யூனிஸ்ட் கட்சிகளுக்குள் ஊடுருவ வைக்கும். இந்த அபாயத்தை எதிர்த்துப் போராட ஒரே வழி, சட்டபூர்வமான வேலைகளையும், சட்டவிரோதமான வேலைகளையும் திறமையாக கையாள வேண்டும்.

இன்றைக்குள்ள தமிழ் மக்களை, அன்றைக்கிருந்த ரஷ்ய, ஜெர்மனிய மக்களுடன் ஒப்பிடலாம். எல்லா நாடுகளிலும் மக்கள் ஒரே மாதிரித் தான் நடந்து கொள்கிறார்கள். பிற்போக்கான அரசியல் செய்பவர்களுக்கு பின்னால் தான் செல்கிறார்கள். அது அவர்களது அறியாமை.

அறியாமையில் கிடக்கும் மக்களுக்கு கற்பிப்பதற்கும், அவர்கள் நம்பும் அதே பாராளுமன்ற அமைப்பின் குறைபாடுகளை சுட்டிக் காட்டுவதற்கும் அங்கே தான் போக வேண்டும். அதன் அர்த்தம் நாங்கள் பிற்போக்காளர்களின் தரத்திற்கு இறங்கிச் செல்வது என்பதல்ல. ஆனால், மக்களை அங்கிருந்து தான் வென்றெடுக்க வேண்டும். அவர்களுக்கு உண்மையை எடுத்துக் கூறி வழிக்கு கொண்டு வர வேண்டும்.

இந்த நூல் எழுதப் பட்ட காலகட்டத்தை மேலெழுந்தவாரியாக பார்ப்பது, இன்னும் அதிக தெளிவைக் கொடுக்கும். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐரோப்பிய நாடுகளில் அப்போது தான் கம்யூனிஸ்ட் கட்சிகள் உருவாக ஆரம்பித்தன. அதற்கு முன்னர் இருந்த சமூக ஜனநாயகக் கட்சிகள் தான் மார்க்சியக் கட்சிகளாக இருந்தன. ஆனால், அவை நடைமுறையில் உள்ள, முதலாளித்துவ பாராளுமன்ற ஜனநாயக அமைப்பிற்குள், புரட்சிகர மாற்றங்களை கொண்டு வரலாம் என்று நம்பின, இப்போதும் நம்புகின்றன.

சர்வதேச அமைப்பான இரண்டாம் அகிலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் மட்டுமே அங்கம் வகிக்கின்றன. அதற்கு மாறாக லெனின் தலைமையில் உருவான மூன்றாம் அகிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகள் அங்கம் வகிக்கின்றன. முதலாளித்துவ அரசுக்களுக்கு முண்டு கொடுத்து வந்த சமூக ஜனநாயகக் கட்சிகளில் இருந்து பிரிந்து சென்றவர்கள் தான் தனியாக கம்யூனிஸ்ட் கட்சிகளை ஸ்தாபித்தார்கள். அதனால், அவர்களுக்கு ஆரம்பத்தில் இருந்தே பாராளுமன்ற முறைமை குறித்து அதிருப்தி காணப்பட்டது. 

முதலாம் உலகப்போர் தொடங்கிய காலத்தில், சமூக ஜனநாயகக் கட்சிகள் போரை ஆதரித்தன. லெனின் அவர்களை "சமூக - பேரினவாதிகள்" (சோஷல் - ஷோவினிஸ்ட்) என்று சாடுகின்றார். ஜேர்மனிய சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர்களில் ஒருவரான கவுட்ஸ்கி, லெனினால் கடுமையாக விமர்சிக்கப் படுகின்றார். சமூக ஜனநாயகவாதிகளின் கொள்கையானது "வலதுசாரியம்" என்று தெளிவாகக் குறிப்பிடுகின்றார்.

வலதுசாரிய சமூக - பேரினவாதிகளை நாங்கள் இன்றைக்கும் பல நாடுகளில் காணலாம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிரான போரை ஆதரித்த வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவன்ச போன்றவர்களை, சமூக- பேரினவாதிகள் என்ற பிரிவுக்குள் அடக்கலாம். (ஈழத்தில் வலதுசாரி தமிழ் தேசியர்கள், இவர்களை வேண்டுமென்றே "இடதுசாரிகள்" என்று தவறாக விளிப்பதன் மூலம் இடதுசாரியத்தை கொச்சைப் படுத்துகின்றனர்.)

சமூக ஜனநாயகவாதிகளின் வலதுசாரிய கொள்கை எந்தளவு ஆபத்தானது என்பது தெரிந்தது தான். ஆகவே, லெனின் இந்த நூலில், கம்யூனிஸ்டுகள் மத்தியில் உள்ள தீவிர இடதுசாரிய போக்கை மட்டும் விமர்சனத்திற்கு எடுத்துள்ளார். வலதுசாரியத்துடன் ஒப்பிடும் பொழுது, இடதுசாரிய குறைபாடு மிகவும் சிறியது. அது இப்போது தான் ஆரம்பமாகியுள்ளது. ஆகவே, இந்த நோயை குணப்படுத்துவது இலகுவானது என்பது தான் லெனினுடைய வாதம். அதற்காகத் தான் இந்த நூலுக்கு "இடதுசாரி கம்யூனிசம் - இளம்பருவக் கோளாறு" தலைப்பிட்டுள்ளார்.

குறிப்பாக ஜெர்மனியில், கவுட்ஸ்கி போன்றோரின் சமூக - பேரினவாத நிலைப்பாட்டை எதிர்த்து தான் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி உருவானது. அதன் தலைவர்களான ரோசா லக்சம்பேர்க், கார்ல் லீப்னெக்ட் போன்றோர் "இடதுசாரிய" நிலைப்பாடு எடுத்தனர். (அவர்கள் இருவரும் லெனினுடன் கருத்து முரண்பாடு கொண்டிருந்தனர்.) "ஜெர்மன் தொழிலாளர்கள் பெருமளவில், பிற்போக்குவாத கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பது பிரயோசனமற்றது, நேரடியாக தொழிலாளர் சோவியத்துகள் அமைப்பது பற்றி ஆராய வேண்டும்" என்பது அவர்களது வாதம். அதையே லெனின் இங்கு "இடதுசாரியம்" என்று சாடுகின்றார்.

லெனின் அந்த வாதத்தை மேற்கோள் காட்டி இவ்வாறு கேட்கிறார்:"இலட்சக் கணக்கான தொழிலாளர்கள் எதிர்ப்புரட்சியாளர்களான கத்தோலிக்க கட்சியை ஆதரிக்கிறார்கள் என்றால், ஜெர்மனியில் பாராளுமன்ற முறைமை இன்னும் காலாவதியாகவில்லை என்று தானே அர்த்தம்? பாராளுமன்ற முறைமை வரலாற்று ரீதியாக காலாவதியாகி விட்டது, அரசியல் ரீதியாக அல்ல. அதனை உலக வரலாற்றுக் காலகட்டத்தில் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்திற்கான சகாப்தம் ஆரம்பமாகி விட்ட காலத்தில், முதலாளித்துவ பாராளுமன்ற முறைமை முடிந்து விடும். ஆனால் அது இன்று அரசியல் ரீதியாக காலாவதியாகி விட்டதா என்பதே கேள்வி."

பாராளுமன்ற முறைமை அரசியல் ரீதியாக காலாவதியாகாமல் உயிர்ப்புடன் இருக்கும் நிலையில், மக்களுக்கு அறிவு புகட்டுவதற்கு தேர்தல்களில் பங்கெடுப்பது அவசியமாகின்றது. மதகுருக்களால் முட்டாள்கள் ஆக்கப்பட்ட மக்களை, பிற்போக்கு நிறுவனங்களில் இருந்து மீட்டெடுக்க வேண்டும். நடைமுறையில் உள்ள பாராளுமன்ற அமைப்பையும், அது சார்ந்த பிற்போக்கான நிறுவனங்களையும், எம்மால் கலைக்க முடியாமல் உள்ள இன்றைய நிலையில் இது அவசியமானது. அவற்றிற்குள் ஊடுருவி வேலை செய்தால் தான், அங்குள்ள மக்களுக்கு உண்மையை எடுத்துக் கூற முடியும்.

லெனின் தனது வாதத்திற்கு வலுச் சேர்பதற்காக, பாரிஸ் கம்யூன் காலத்தில் எங்கெல்ஸ் எழுதியதை மேற்கோள் காட்டுகிறார். உண்மையில், பாரிஸ் கம்யூன் புரட்சி தோல்வியடைந்த பின்னர் தான் மார்க்சிய காலகட்டம் தோன்றியது. அதாவது, பாரிஸ் கம்யூனை ஆதரித்தவர்களிடையே கருத்து முரண்பாடு தோன்றியது. பிளாங்கிஸ்டுகள் எனப்படுவோர் பிற்காலத்தில் அனார்க்கிஸ்டுகள் (அராஜகவாதிகள்) என்று அறியப் பட்டனர். 

பிளாங்கிஸ்டுகள் கூட தம்மை கம்யூனிஸ்டுகள் என்று அழைத்துக் கொண்டனர். ஆனால், இடையில் உள்ள எந்தவொரு அமைப்பையும் சார்ந்திராமல், நேரடியாக கம்யூனிச காலகட்டத்திற்கு செல்ல விரும்புகின்றனர். அதாவது, இன்றைக்குள்ள பாராளுமன்ற அமைப்பு முறையை அவர்கள் கணக்கில் எடுக்காமல் கடந்து செல்லப் பார்க்கின்றனர். இதனை சிறுபிள்ளைத்தனம் என்று சாடும் எங்கெல்ஸ், நடைமுறை அமைப்புகளை புறக்கணித்து விட்டு, நாளைக்கே கம்யூனிச சமுதாயத்தை உருவாக்கி விட முடியாது என்று கூறியுள்ளார். 
(Fr. Engels, "Programme of the Communists- Blanquists)

மக்களுக்கு சேவை செய்ய விரும்பினால், மக்களின் ஆதரவையும், நன்மதிப்பையும் பெற விரும்பினால், எதிர்நோக்கும் தடைகளையும், கஷ்டங்களையும் எண்ணி நாம் அஞ்சக் கூடாது. "மக்களின் தற்போதைய தலைவர்கள்", எங்களைப் பார்த்து ஏளனமாக பேசினாலும், அவமானப் படுத்தினாலும், எதற்கும் கலங்காமல் தொடர்ந்து வேலை செய்ய வேண்டும். எங்கெங்கு மக்கள் கூடுகின்றார்களோ, அங்கெல்லாம் சென்று மக்களுக்கு உண்மைகளை கூற வேண்டும். எந்த விதமான அர்ப்பணிப்புக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். மக்களை எழுச்சியடைய வைக்கும் பரப்புரைகளை படிப்படியாக கொண்டு செல்ல வேண்டும்.

நாம் செல்லுமிடம் மிக மோசமான, படு பிற்போக்கான ஸ்தாபனமாக இருந்தாலும், அங்கெல்லாம் பாட்டாளி வர்க்க மக்களைக் காணலாம். பாட்டாளி வர்க்க மேட்டுக்குடியினருக்கு எதிராகவும் நாம் போராட வேண்டியிருக்கும். அதாவது பாட்டாளி வர்க்கத்தில் உள்ள வசதி படைத்த பிரிவினர் முதலாளித்துவத்திற்கு ஆதரவாக நின்று, எங்கள் கொள்கைகளை எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். நாங்கள் மக்களை ஏமாற்றும் சந்தர்ப்பவாதிகளுக்கும், சமூக - பேரினவாதிகளுக்கும் எதிராக போராடி, உழைக்கும் வர்க்க மக்களை எமது பக்கத்திற்கு கவர்ந்திழுக்க வேண்டும்.



இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Saturday, August 01, 2015

இலவச நூலகம், வீட்டுத் தோட்டம், ஆம்ஸ்டர்டாம் நகரவாசிகளின் சோஷலிசம்


ஆம்ஸ்டர்டாம் நகரில் வசிக்கும் இடதுசாரி சிந்தனையாளர்கள், பல தசாப்த காலமாகவே மக்களுக்கான இலவச திட்டங்களை நடைமுறைப் படுத்தி வருகின்றனர். எழுபதுகளில் எழுந்த இலவச சைக்கிள் திட்டம் உலகப் புகழ் பெற்றது. (அன்றைய பொலிஸ் நிர்வாகம், இலவச சைக்கிள்களை பறிமுதல் செய்து வந்த படியால், பின்னர் அந்தத் திட்டம் கைவிடப் பட்டது.)

அண்மைக் காலமாக, "இலவச நூலகத் திட்டம்", ஆம்ஸ்டர்டாம் நகரின் பல பகுதிகளிலும் பரவி வருகின்றது. பலர் தமது வீடுகளுக்கு அருகில், தெருவோரமாக புத்தக அலுமாரிகளை வைக்கின்றனர். அவற்றில் பாவித்த புத்தகங்கள் உள்ளன. யார் வேண்டுமானாலும் அவற்றை எடுத்துச் சென்று வாசிக்கலாம்.

புத்தகங்களை வாசித்து முடித்து விட்டு, திரும்பக் கொண்டு வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால், மற்றவர்களும் படிக்க வேண்டும் என்ற உணர்வில், பலர் நூல்களை திரும்பக் கொண்டு வந்து வைக்கிறார்கள். இது ஒரு பரிமாற்றமாக நடப்பதால், எல்லோருக்கும் வெவ்வேறு தலைப்புகளினான நூல்களை வாசிக்கும் வாய்ப்புக் கிட்டுகிறது. நூல்கள் மட்டுமல்ல, பிள்ளைகளின் விளையாட்டுப் பொருட்கள் போன்றவற்றையும் இவ்வாறு பரிமாறிக் கொள்கிறார்கள்.

இலவச நூலகத் திட்டத்தின் நோக்கம் என்ன? மேலை நாடுகளிலும் மக்களிடையே வாசிப்புப் பழக்கம் குறைந்து வருகின்றது. அதனால், இது போன்ற திட்டங்கள் வாசிப்பை தூண்டலாம். அதை விட மிக முக்கியமானது இடதுசாரிகளின் பாரம்பரிய சிந்தனை மரபு. அதாவது, பூமியில் உள்ள அத்தனை வளங்களும், அனைத்து மக்களுக்கும் கிடைக்க வேண்டும் என்று நினைப்பது இடதுசாரிய சிந்தனை. 

முதலாளிகள் இலாபம் கருதி, எல்லாவற்றையும் சந்தைப் படுத்தும் நடைமுறை, இன்று தண்ணீரையும், வெகு விரைவில் காற்றையும், விற்பனை செய்யுமளவிற்கு கொண்டு வந்து விட்டுள்ளது. அதனால், முதலாளித்துவ பொருளாதாரம், பலரின் வெறுப்பை சம்பாதித்திருப்பதில் வியப்பில்லை. இருப்பினும், ஒரு சிலரே மாற்று வழி என்னவென்று தேடுகின்றார்கள்.


ஆம்ஸ்டர்டாம் நகரிலும், பிற நகரங்களிலும் வீட்டுத் தோட்டம் செய்யும் நடைமுறையும் பெருகி வருகின்றது. முன்னாள் சோஷலிச நாடுகளிலும், (கியூபாவில் இன்றைக்கும் உள்ளது), வீட்டுத் தோட்டம் வைத்திருப்பது ஊக்குவிக்கப் பட்டது. அதாவது, நாங்களே சில காய்கறிகளை வீட்டில் வளர்க்கலாம். பூஞ்சாடிகளில் பூக்களுக்கு பதிலாக, காய்கறிகளை வளர்க்குமாறு அரச மட்டத்திலான பாரிய பிரச்சாரம் முன்னெடுக்கப் பட்டது. ஒவ்வொருவரும் தமது உணவுத் தேவையில் ஒரு பகுதியை, தாமாகவே பூர்த்தி செய்து கொள்ள வேண்டுமென்பது தான் அதன் நோக்கம்.

முதலாளித்துவ நாடுகளில், பல தசாப்த காலமாக, வீடுகளுக்குள் பூஞ் செடிகளை வைப்பது தான் "வழமையாக" இருந்தது. அண்மையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக்குப் பின்னர், காய்கறிகளை வைக்கும் பழக்கம் உருவாகி உள்ளது. நகரங்களில் வாழும் மக்கள் பெரும்பாலும் அடுக்குமாடிக் கட்டிடங்களில் தான் வாழ்கிறார்கள். அதனால், தோட்டம் வைத்திருப்பது நினைத்துப் பார்க்க முடியாத விடயமாக இருந்தது. 

ஆனால், நகரசபையில் உள்ள இடதுசாரி கட்சிகளின் உறுப்பினர்களின் விடா முயற்சி காரணமாக, அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு அருகில் காய்கறித் தோட்டங்கள் உருவாகின. நகரசபை நிர்வாகம், அதற்கான நிலம் ஒதுக்குவதுடன், விதைகளையும் இலவசமாக வழங்கியது. யார் வேண்டுமானாலும் தோட்டம் செய்ய உரிமையுண்டு. இருப்பினும், நிலப் பற்றாக்குறை காரணமாக, முன்கூட்டியே பதிவு செய்யுமாறு கோரப் படுகின்றது. சில இடங்களில் சுழற்சி முறையில், பலருக்கு பகிர்ந்தளிக்கப் படுகின்றது.

இவற்றைத் தவிர, பணமில்லாத சமுதாயத்தை உருவாக்குவதற்கும் சிலர் முயற்சித்து வருகின்றனர். அதாவது, ஒவ்வொருவரிடமும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். ஒருவர் சிற்பக் கலைஞராக இருக்கலாம். ஒருவர் கற்பிக்கும் திறமை கொண்டவராக இருக்கலாம். எதுவும் இல்லாவிட்டாலும், உடல் ரீதியாக உழைக்கக் கூடியவராக இருக்கலாம். இவர்கள் எல்லோரும் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்கலாம்.

உதாரணத்திற்கு, நீங்கள் ஒரு வீட்டில் பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுக்கிறீர்கள். அதற்கு செலவிட்ட நேரத்தையும், "பணத்தையும்" குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். உங்கள் சேவையை பெற்றவர் அதற்கு உடன்பட்டு கையெழுத்திட்டு கொடுப்பார். எதிர்காலத்தில் உங்களுடைய வீடு திருத்த வேண்டியிருக்கலாம். அதற்கு அவரைக் கூப்பிடுகிறீர்கள். அவர் வந்து செய்த வேலையை, அதே மாதிரி நேரத்தையும், "பணத்தையும்" கணக்கிட்டு குறித்துக் கொள்கிறார். 

இங்கே "பணம்" என்பது, நாம் கண்ணால் காணும் பண நோட்டுக்கள் அல்ல. உழைப்பை அளவிடும் கருவி மட்டுமே. அதைக் கண்ணால் பார்க்க முடியாது. பரிமாற்றம் செய்ய முடியாது. அதற்குப் பதிலாக, மனிதர்கள் தமது உழைப்பை மட்டுமே பரிமாற்றம் செய்து கொள்கிறார்கள்.

இதை வாசிக்கும் பலர், "இதெல்லாம் உண்மையா?" என்று திகைப்படையலாம். நெதர்லாந்தில் பல நகரங்களில், இது பல தசாப்த காலமாகவே நடந்து கொண்டிருக்கிறது. பிற ஐரோப்பிய நாடுகளிலும் நடைமுறையில் உள்ளது. பணமற்ற சமுதாய அமைப்பில் யார் வேண்டுமானாலும் சேரலாம். எந்த சந்தர்ப்பத்திலும் பணம் பயன்படுத்தக் கூடாது என்பது மட்டுமே நிபந்தனை. 

தவிர்க்க முடியாத சில விடயங்களுக்கு மட்டும் பணம் செலவிடப் படுகின்றது. உதாரணத்திற்கு, முன்னர் இதற்காக ஒரு மாத இதழ் வெளியிட வேண்டி இருந்தது. அதில் ஒவ்வொருவரும் தமக்கு என்னென்ன வேலை தெரியும் என்று விளம்பரம் செய்வார்கள். அதற்கு ஒரு சிறிய கட்டணம் கட்ட வேண்டி இருந்தது. மற்றும் படி, சேவைகள் யாவும் "இலவசம்". அதாவது, ஒவ்வொருவரும் மற்றவர்களுக்கு கடமைப் பட்டுள்ளனர்.


இதனோடு தொடர்புடைய முன்னைய பதிவுகள்:
முதலாளித்துவ அமைப்பில் வேலை ஒரு சாபம்!
மேற்கு ஐரோப்பாவில் கணக்காளருக்கும், கட்டிடத் தொழிலாளிக்கும் ஒரே சம்பளம்!
இனவெறிக்கு எதிராக நெதர்லாந்தில் நடந்த புரட்சிகர ஆயுதப் போராட்டம்