Tuesday, February 12, 2013

கமல்ஹாசனின், "அமெரிக்க விசுவாச ரூபம்"


கமல்ஹாசன் ஒரு தலைசிறந்த நடிகன் மட்டுமல்ல. ஒரு காலத்தில் உலக சினிமாக்களின் முதல் தர  இரசிகனாக இருந்தவர். சிறந்த கலைப் படங்களை எடுக்க வேண்டுமென்ற அவா கொண்டிருந்தார். அவரது குணா போன்ற படங்களை சாதாரண இரசிகர்கள் புரிந்து கொள்ள கஷ்டப் பட்டதையும் பார்த்திருக்கிறேன். ஆனால், சொந்தமாக படம் எடுக்க கிளம்பிய பின்னர், தொடர்ந்தும் வணிகப் படங்களாகவே எடுத்துத் தள்ளுகின்றார். தமிழகத்தின் முன்னணி நடிகனாக இருந்த போதும், தான் சேர்த்து வைத்திருந்த கோடிக்கணக்கான பணத்தை வித்தியாசமான கலைப் படங்களில் முதலீடு செய்யாமல், இலாபத்தை மட்டுமே குறிக்கோளாக கொண்ட வியாபாரி போன்றே செயற்படுகின்றார்.

ஆகவே, அத்தகைய வியாபார நோக்கம் கொண்ட கலைஞனிடம் சமூகப் பொறுப்பு வாய்ந்த திரைப் படங்களை எதிர்பார்க்க  முடியுமா என்பது சந்தேகமே. அமெரிக்க அரசுடன் மோதும் நிலையிலும், தான் சரியென்று நம்பிய கொள்கையை விட்டுக் கொடாத Oliver Stone போன்ற தயாரிப்பாளர்கள் மக்கள் மனதில் உயர்ந்து நிற்கின்றனர். கமல்ஹாசன் கலைக்கு சேவை செய்யா விட்டாலும் பரவாயில்லை, இந்திய அரசுக்கு சேவை செய்யாமல் இருந்தாலே போதும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது.  இந்திய அரசின் வெளிவிவகார கொள்கைக்கு அமையவே, தற்பொழுது விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை எடுத்துள்ளார். 

ஆப்கானிஸ்தானில், தாலிபான் ஆட்சிக் காலத்தில் நடந்த கொடுமைகளை பேசும் திரைப் படங்கள் பல ஏற்கனவே வந்துள்ளன. Osama, The Kite Runner போன்ற சினிமாப் படங்கள், உலக அளவில் சிறந்த கலைப் படைப்புகளாக பேசப் பட்டன. தாலிபான் ஆட்சிக் காலத்தில் வாழ்ந்த ஆப்கானிய எழுத்தாளர்கள் தமது அனுபவங்களை நூல்களாக வெளியிட்டிருந்ததும், அவையே பின்னர் படமாக்கப் பட்டதும் அறிந்ததே. எல்லா நாடுகளிலும் குறிப்பிட்ட ஒரு அரசியல் இயக்கத்தை ஆதரிப்பவர்களும், எதிர்ப்பவர்களும் இருக்கவே செய்வர். அது யதார்த்தம். ஈழத்தில் புலிகளை ஆதரித்த தமிழர்களும், எதிர்த்த தமிழர்களும் இருந்தனர். ஆப்கானிஸ்தானில், தாலிபானை ஆதரித்தவர்களில் பெரும்பான்மையானவர்கள், நிலப்பிரபுத்துவ சமுதாயத்தில் ஊறிய மக்கள் ஆவர். 

மேற்கத்திய விழுமியங்களுடன் தம்மை அடையாளப்  படுத்திக் கொண்ட புத்திஜீவிகள் மட்டத்தில், தாலிபானுக்கு ஆதரவு இருக்கவில்லை. தாலிபானுக்கும் தம்மை விட அதிகமாகப் படித்தவர்களைக் கண்டால் பிடிக்கவில்லை. தாலிபானின் கற்கால ஆட்சியை சகிக்க முடியாமல் புலம்பெயர்ந்த, ஆப்கான் அறிவுஜீவிகள் எழுதிய நாவல்கள், தாலிபானை காட்டமாக விமர்சித்து வந்தன. அது அவர்களது படைப்புச் சுதந்திரம். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் கீழ் அவற்றிற்கு மதிப்புக் கொடுக்கப் பட்டது. அந்த நாவல்கள் படமாக்கப் பட்ட போது, அந்தக் கதைகள் உலகம் முழுவதும் பரந்து பட்ட மக்களிடம் போய்ச் சேர்ந்தது. அப்போதெல்லாம், படைப்பின் சுயாதீனம், கலைஞனின் உரிமை, படைப்பு சுதந்திரம், கலைஞனுக்குள்ள சமூகப் பொறுப்பு போன்ற விடயங்களை  அனைவரும் கவனத்தில் எடுத்திருந்தனர். நிச்சயமாக, தாலிபானுக்கும், அதனை ஆதரித்த சலாபி-இஸ்லாமிய கடும்போக்காளர்களுக்கும் அது உவப்பாக இருந்திராது. தாலிபான் எதிர்ப்பாளர்களை, "துரோகிகள்" என்று திட்டித் தீர்ப்பதை தவிர அவர்களுக்கும் வேறு வழி இருக்கவில்லை. 

விஸ்வரூபம் திரைப்படத்தை, ஒரு கருத்துச் சுதந்திர வெளிப்பாடாக கொள்ள முடியாததற்கு, நிறைய காரணங்கள் உள்ளன. முதலில் அது ஒரு கலைப் படைப்பல்ல. வணிக நோக்கில் தயாரிக்கப்பட்ட, பொழுதுபோக்கு அம்சங்கள் நிரம்பிய, வழக்கமான மசாலா படம். மேலும் அது வெளிப்படையாகவே அமெரிக்க அரசின் நிலைப்பாட்டை ஆதரிக்கும்  படமாக தன்னை காட்டிக் கொள்கின்றது. சுருக்கமாக அது ஒரு அரசியல் பிரச்சாரப் படம். அமெரிக்கா, சில்வஸ்டர் ஸ்டெலோனை "ரம்போ"வாக நடிக்க வைத்து, வியட்நாமுக்கும், ஆப்கானிஸ்தானுக்கும் அனுப்பி, தனது வெளியுறவுக் கொள்கைக்கு உலகம் முழுவதும் ஆதரவு திரட்டியது. அதே பாணியில், தற்போது தமிழனான கமலஹாசன், இந்திய அரசு சார்பாக ஆப்கானிஸ்தானுக்குள் நுழைந்திருக்கிறார். 

ஒசாமா, தி கைட் ரன்னர் படங்களைப் போன்று, தாலிபான் ஆட்சிக்காலத்தில் நடந்தவற்றைப் பற்றி, விஸ்வரூபம் பேசவில்லை என்பது இங்கே குறிப்பிடத் தக்கது. விஸ்வரூபம், அமெரிக்க ஆக்கிரமிப்புப் படைகளால் "விடுதலை செய்யப்பட்ட" ஆப்கானிஸ்தானின் நிலைமையை விளக்கிக் கூறுகின்றது. ஒரு நாட்டின் மீதான எந்தவொரு படையெடுப்பும் மனிதப் பேரவலம் இன்றி நிறைவேறவில்லை. இந்து சமுத்திரத்தில் இருந்து ஏவப்பட்ட Tomahawk ஏவுகணைகள், தாலிபானை மட்டும் கொல்லவில்லை. அப்பாவி குடிமக்களும், பெண்களும் குழந்தைகளும் பலியானார்கள். குறைந்தது இருபதாயிரம் பேரை கொன்ற பின்னர் தான், ஆப்கானிஸ்தான் அமெரிக்கப் படைகளின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. ஆப்கான் போரை எதிர்த்து, ஆயிரக் கணக்கான மக்கள், மேற்கத்திய நாடுகளின் தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்தார்கள். அப்போது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்து விட்டு, இப்போது தான் எழுந்தவர் போல, மனிதப் பேரவலத்தை திரைப்படம் என்ற போர்வையால் மூடி மறைப்பதற்கு அசாத்திய துணிச்சல் வேண்டும். 

ஒரு நாட்டின் மீது  அல்லது, சுயாட்சி கோரும் சிறுபான்மை இனத்தின் மீது படையெடுக்கும் ஆக்கிரமிப்பு இராணுவம் எத்தகைய நியாயங்களை முன்வைக்கும் என்பது தெரிந்ததே. 2009 ம் ஆண்டு, "புலிப் பயங்கரவாதிகளிடம் இருந்து தமிழ் மக்களை விடுதலை செய்வதற்காக, வன்னி மீது படையெடுத்ததாக..." ஸ்ரீலங்கா இராணுவம் நியாயம் கற்பித்தது. ஆங்கிலத்தில் "déjà vu" என்று சொல்வார்கள். (ஒரு பிரெஞ்சு மொழி சொற்பதம். அதன் அர்த்தம், ஏற்கனவே பார்த்து விட்டோம்.)  2001 ம் ஆண்டு, "தாலிபான் பயங்கரவாதிகளிடம் இருந்து ஆப்கான் மக்களை விடுதலை செய்வதற்காக, அப்கானிஸ்தான் மீது படையெடுத்ததாக..." அமெரிக்க இராணுவம் நியாயம் கற்பித்தது. 

கமல்ஹாசன், இலங்கை இராணுவத் தரப்பு நியாயங்களை மட்டும் காட்டும் திரைப்படம் ஒன்றை எடுத்திருந்தால், அதனை "கலைஞனின் உரிமை, படைப்புச் சுதந்திரம்" என்றெல்லாம் காரணம் கூறி அங்கீகரிக்க நாம் தயாராக இருக்கிறோமா? அதனை தடை செய்ய வேண்டுமென ஆக்ரோஷத்துடன் போராட மாட்டோமா? ஆகவே, விஸ்வரூபம் அமெரிக்க ஆக்கிரமிப்பு இராணுவத்தின் ஒரு பக்க நியாயத்தை மட்டுமே பேசுவதால், இதனை ஒரு அரசியல் பிரச்சாரப் படமாகவே கருத வேண்டியுள்ளது. இரு தசாப்தங்களுக்கு முன்னர், வியட்நாம் கம்யூனிச எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும், ஜேம்ஸ் பாண்ட் படங்களை திரையிட தடை விதித்திருந்தது. அரசியல் காரணங்களுக்காக திரைப்படங்களை தடை செய்வது, வியட்நாம் போன்ற "கம்யூனிச சர்வாதிகார" நாடுகளில் மட்டுமே நடக்கும் விடயமல்ல. மார்க்சியத்தை பரப்பி தொழிலாளர்களை எழுச்சி கொள்ள வைத்து விடும் என்ற காரணத்தை கூறி,  "பொதெம்கின் போர்க் கப்பல்" (The Battleship Potemkin) என்ற சோவியத் திரைப் படம், ஜெர்மனியிலும் (1933), பிரான்சிலும் (1925) தடை செய்யப் பட்டது. 

பல முஸ்லிம் அமைப்புகளைப் பொறுத்த வரையில், இஸ்லாம் என்பது அவர்களது தேசிய அடையாளமாக இருக்கிறது. "யூத (சர்வ)தேசியவாதம்" உருவாகக் காரணமாக இருந்த அடிப்படை கோட்பாட்டை, "இஸ்லாமிய (சர்வ)தேசியவாதம்" கொண்டுள்ளது. தேசியவாத அரசியல் எப்போதும் மொழி சார்ந்திருக்க வேண்டிய கட்டாயமில்லை. "எங்கேயோ இருக்கும் தாலிபானை பற்றி படம் எடுத்தால், எதற்காக இங்கே துள்ளுகிறார்கள்...?" என்று கேட்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை.

2008 ம் ஆண்டு, விஸ்வரூபம் பாணியில் ஒரு சிங்களத் திரைப்படம் வெளியானது. சிங்கள இனவெறி இராணுவத்திற்கு நன்றி தெரிவித்து தயாரிக்கப்பட்ட, "பிரபாகரன்" என்ற அந்த திரைப்படம், புலிகளை கெட்டவர்களாகவும், ஸ்ரீலங்கா இராணுவவீரர்களை நல்லவர்களாகவும் சித்தரித்திருந்தது. விஸ்வரூபம் திரைப்படத்தில், "அமெரிக்க படைகள் பெண்களையும், குழந்தைகளையும் ஒன்றும் செய்ய மாட்டார்கள்" என்று காட்டுகின்றனர். பிரபாகரன் படத்தில், "ஸ்ரீலங்கா படையினர், பெண்களையும், குழந்தைகளையும் பாதுகாப்பவர்கள்" போன்று சித்தரிக்கப் படுகின்றனர்.  இவ்விரண்டு திரைப்படங்களுக்கும் இடையில் என்ன வித்தியாசம்? 

சென்னையில் உள்ள ஸ்டூடியோ ஒன்றில், பிரபாகரன் படத்தின் டப்பிங் வேலைகள் நடந்து கொண்டிருந்த பொழுது, தமிழ் தேசியக் கட்சிகள் அதை தடுத்து ஆர்ப்பாட்டம் செய்தன. பிரபாகரன் படத்தை தமிழில் டப் செய்து தமிழகத் திரையரங்குகளில் ஓட விட வேண்டுமென, தயாரிப்பாளர் துஷாரா பீரிஸ் நினைத்தது நடக்கவில்லை. சென்னையில் வைத்து இயக்குனருக்கு தர்ம அடி விழுந்தது. பிரபாகரன் என்ற சிங்களத் திரைப்படம்,  புலிகள் அல்லது தமிழர்களை தவறாக சித்தரித்து, அவர்கள் மீதான வெறுப்பை சிங்களவர் மனதில் விதைப்பதை குறியாக கொண்டிருந்தது. அதே போன்று, விஸ்வரூபம் என்ற தமிழ்த் திரைப்படம், தாலிபான் மீதும், முஸ்லிம்கள் மீதும் வெறுப்பை விதைத்துள்ளது. 

பிரபாகரன் திரைப்படத்திற்கு எதிரான தடையையும், போராட்டத்தையும் உங்களால் புரிந்து கொள்ள முடியுமென்றால், விஸ்வரூபம் திரைப்படத்திற்கு எதிரான முஸ்லிம் அமைப்புகளின் போராட்டத்தையும் புரிந்து கொள்ளலாம். முஸ்லிம் அமைப்புகள் இதனை தமது மத நிந்தனை சம்பந்தமான பிரச்சினையாக காட்டும் பொழுது, மறு தரப்பினர் அதையே முஸ்லிம்களுக்கு எதிராக பயன்படுத்த ஏதுவாகின்றது.  அமெரிக்காவின் மேலாதிக்க போர், ஆப்கான் இனப்படுகொலை, அந்நிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிரான தாலிபானின் போராட்டம், இவற்றை விஸ்வரூபம் மூடி மறைக்கும் அயோக்கியத்தனம் போன்றன பேசப் பட வேண்டும். அதற்குப் பதிலாக, இதனை மதம் சம்பந்தமான  பிரச்சினையாக திசை திருப்பியதில், முஸ்லிம் அமைப்புகளுக்கும் பங்குண்டு. அவர்கள் இந்திய/தமிழக அரசுக்களின் மகுடி வாசிப்பிற்கு ஏற்ப ஆடுவதாக எழும் குற்றச் சாட்டுகளையும் மறுப்பதற்கில்லை 

இந்திய மக்களில் பெரும்பகுதியை சினிமா எனும் மாயை கட்டிப் போடுகின்றது. ஆகவே, மக்கள் மத்தியில் செல்வாக்கு செலுத்தும் ஊடகமான சினிமாவை குறைத்து மதிப்பிட முடியாது. ஒரு காலத்தில் குடும்பக் கதை சார்ந்த படங்களுக்கு பேர் போன இந்திய சினிமா தொழிற்துறை, தற்பொழுது நிறைய அரசியல் திரைப்படங்களையும் எடுக்கின்றது. வரவேற்கத் தக்கது தான். ஆனால், அந்தப் படங்கள் அமெரிக்க பாணியில், அரசின் பிரச்சாரப் படங்கள் போல எடுக்கப் படுகின்றன. மணிரத்தினம் ரோஜா படம் எடுத்த பின்னர், காஷ்மீர் போராளிகள் "கெட்டவர்கள்" என்று சாமானியனின் பொதுப் புத்தியில் உறைந்து போனது. அதே மாதிரியான, அல்லது அதிலும் பல மடங்கு தாக்கத்தை விஸ்வரூபம் ஏற்படுத்தலாம். விஸ்வரூபம் என்ற திரைப்படத்தை சுற்றி நடக்கும் கருத்துப் பரிமாற்றத்தில் இருந்தே, சமூகம் எந்தளவு பிளவு பட்டுள்ளது என்பது தெரிகின்றது. 

ஊர் இரண்டுபட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற பழமொழி போல, சமூகம் பிளவுபட்டால் பிரித்தாளுவது இலகுவாக இருக்கும். அந்த விடயத்தில் திரைப்படத்தை தயாரித்த கமல்ஹாசனும், தமிழக அரசும் திறமையாக காய் நகர்த்திக் கொண்டிருக்கின்றனர். திரைப்படத்தை எதிர்த்து போராடும் முஸ்லிம் அமைப்புகளின் தலைவர்களும் அதற்கு ஒத்துழைக்கலாம். அவர்களுக்கு பின்னணியில் சி.ஐ.ஏ. ஆலோசனை வழங்குகின்றதா என்று கேட்கத் தோன்றுகின்றது.   ஐரோப்பாவில் அது நடந்ததை கண்கூடாகக் கண்டிருக்கிறேன். 

நெதர்லாந்தில் முஸ்லிம் விரோத படம் தயாரித்த தெயொ வன் கோக், கெர்ட் வில்டர்ஸ் ஆகியோரின் நடவடிக்கைகள், நெதர்லாந்து சமூகத்தில் விரிசலை உண்டாக்கின. அதற்கு எதிர்வினையாக வன்முறைக்கு தூண்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்களின் பின்னணியில் புலனாய்வுத்துறையின் கரங்கள் இருந்தமை பின்னர் தெரிய வந்தது. தெயொ வன் கொக்கின் Submission, கெர்ட் வில்டர்சின் Fitna ஆகிய குறும்படங்கள், முஸ்லிம் வெறுப்பை கக்கும் கருத்துக்களை பரப்பி வந்தன. அவை நெதர்லாந்திலும், உலகிலும் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக தடை செய்யப் பட்டன. அதே மாதிரியான அதிர்வலைகளை, விஸ்வரூபம் தமிழக சூழலில் ஏற்படுத்த விரும்புகின்றது.  ஊடகங்களால் பரப்பப் பட்ட இஸ்லாம் குறித்த அச்சவுணர்வு, அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பாரிய சமூக மாற்றங்களை ஏற்படுத்தி இருந்தது. தற்போது தமிழகமும் அந்த அடிச்சுவட்டை பின்பற்றுகின்றது.  

முன்னர் ஒரு தடவை, காற்றுக்கென்ன வேலி என்ற திரைப் படத்திற்கு,  திரையிடுவதற்கு முன்னரே தணிக்கை சபை அனுமதி வழங்கவில்லை. அதனால் அந்தப் படம் இந்தளவு பிரச்சினையை கிளப்பவில்லை. மேலும் அண்மையில் வெளியான விஸ்வரூபம், துப்பாக்கி போன்று, வேற்றின மக்களை புண்படுத்தும் காட்சிகள் எதுவும் அந்தப் படத்தில் கிடையாது. விஸ்வரூபம் திரைப்படத்திற்கு தணிக்கை சபை சான்றிதழ் கொடுத்த பின்னர், திரையரங்குகளில் வெளியிட நாள் குறிக்கப் பட்ட பின்னர் தான் தமிழக அரசு தடை செய்துள்ளது. இந்த நடவடிக்கையானது, "கலைஞனின் உரிமைக்காக" அவனது "இரசிகர்களும்" போராடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கியுள்ளது. அதாவது,  "இந்த தடைக்கு காரணம், இஸ்லாமிய மதவாத அமைப்புகள் என்று பழியை அவர்கள் மேல் போட்டதன் மூலம், இந்து மதவாதிகளை எதிர் அணியில் திரட்டவும் சந்தர்ப்பத்தை உருவாக்கிக் கொடுத்துள்ளது.  

ஒரு சராசரி தமிழ் மகன் அதிகமாக ஆர்வம் காட்டாத, ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் பற்றிய கதையை, எதற்காக கமல் தேர்ந்தெடுத்தார்? பெரும்பாலான மக்களுக்கு தெரிந்த காரணம், இது பொதுவாக முஸ்லிம்களை பற்றியது. புலிகளின் மனித உரிமை மீறல்களை மட்டுமே வெளிச்சம் போட்டுக் காட்டி, தமிழர்கள் என்றாலே இரக்கமில்லாத கொடியவர்கள் என்று சித்தரித்த பிரபாகரன் படம், புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருந்த காலத்தில் வெளிவந்தது. அது சராசரி சிங்கள மக்கள் மனதில் எத்தகைய தாக்கத்தை உருவாக்கியது? 2009 ம் ஆண்டு, புலிகளுடன், நாற்பதாயிரம் தமிழ் மக்களும் அழிக்கப் பட்ட போரின் வெற்றியை, சாதாரண சிங்கள மக்களும் இனவெறிக் களிப்புடன் கொண்டாட வைத்தது. அது போன்ற நிலைமையை இந்தியாவில் உருவாக்குவதற்கு, விஸ்வரூபம் குறிப்பிட்டளவு பங்களிப்பை வழங்கலாம். விஸ்வரூபம் தயாரிப்பின் பின்னணியில், அமெரிக்க, இந்திய புலனாய்வுத் துறையினரின் பங்கு எந்தளவு உண்மையாக இருக்க முடியும்? இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையை, விஸ்வரூபம் படத்தின் ஒவ்வொரு காட்சியும் பிரதிபலிக்கின்றது. 

2014 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகள் விலகுவதற்கு நாள் குறிக்கப் பட்டு விட்டது. அமெரிக்கப் படைகள் போனால், அதைத் தொடர்ந்து நேட்டோ படைகளும் விலக்கிக் கொள்ளப் படலாம். அப்போது ஏற்படும் வெற்றிடத்தில், பாகிஸ்தான் நுளைவதற்கு முன்னர், இந்தியா பொறுப்பேற்கத் துடிக்கின்றது. பனிப்போர் காலத்தில், சோவியத் யூனியன் ஆதரித்த நஜிபுல்லாவின் ஆப்கான் அரசை, இந்தியாவும் ஆதரித்தது. அது வீழ்ந்த பின்னர், முஜாஹிதீன் இயக்கங்களும், அவர்களை விரட்டி விட்டு தாலிபானும் ஆட்சியை பிடித்தவுடன், ஆப்கானிஸ்தானில் பாகிஸ்தானின் செல்வாக்கு உயர்ந்தது. அமெரிக்க படையெடுப்பின் பின்னர் உருவான கர்சாயின் பொம்மை அரசு, பாகிஸ்தானை உதறி விட்டு இந்தியாவுடன் சேர்ந்து கொண்டது. தற்போது ஆப்கானிஸ்தானில் தாலிபானின் கை ஓங்கி வருகின்றது. அமெரிக்க படைகள் வெளியேற்றப் பட்டால், கர்சாய் அரசை கவிழ்த்து விட்டு, மீண்டும் தாலிபான் ஆட்சி ஏற்படும் சாத்தியக்கூறுகள் உள்ளன. அந்த தருணத்தில், இந்தியா விரைந்து செயற்படத் துடிக்கிறது. 

ஒரு காலத்தில், ஈழத்தில் இந்திய அமைதிப் படைகள் இறக்கப் பட்டதைப் போல, ஆப்கானிஸ்தானுக்கு இந்திய அமைதிப் படைகள் சென்றாலும் ஆச்சரியப் பட எதுவுமில்லை. ஆப்கானிஸ்தானில் இந்தியாவின் தலையீடு அதிகரிப்பதை, தாலிபானும் உணர்ந்துள்ளது.  2009 ம் ஆண்டு, காபுலில் உள்ள இந்திய தூதரகம் தாலிபானின் தற்கொலைத் தாக்குதலுக்கு உள்ளானது. ஆப்கானிஸ்தானில் இந்திய இலக்குகள் தாக்கப்பட்டது அதுவே முதல் தடவை அல்ல. அதுவே கடைசித் தடவையாகவும் இருக்கப் போவதில்லை. 2009 ம் ஆண்டு, தனது காலின் கீழ் மிதிபட்ட புலிகளை துடைத்தெறிந்த சந்தோஷத்தில் இந்தியா இருந்த நேரத்தில், காபுல் தூதரக குண்டுவெடிப்பு இடியென இறங்கியது. இந்தியாவின் தலையில் உள்ள ஆப்கானிஸ்தானில், தாலிபான்களின் மீள்வருகை, எதிர்காலத்தில் பெரும் தலையிடியைக் கொடுக்கும் என்பது நிச்சயம். ஆப்கானிஸ்தானில் இந்தியா நேரடியாக தலையிடுவதற்கு முன்னர், மக்களை தயார் படுத்த வேண்டியது அவசியம். அந்தக் கடமையை கமலஹாசனின் விஸ்வரூபம் செவ்வனே செய்யும்.

*****************************************

சினிமா தொடர்பான முன்னைய பதிவுகள்:

போதி தர்மரை அவமதிக்கும் ஏழாம் அறிவு!
தமிழ்ப் போதிதர்மர் பற்றி, சீனர்கள் தயாரித்த திரைப்படம்
ஸ்பெயின் பாட்டாளி வர்க்க புரட்சி பற்றிய சினிமா
ஈராக் சினிமாவில் அமெரிக்கா வில்லன்! - திரையிடத் தடை

Friday, February 08, 2013

காலனியாதிக்கவாதிகளால் சுரண்டப் பட்டு வறண்டு போன யாழ்ப்பாணம்

போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும், இலங்கைத் தீவின் மீதான காலனிய மேலாதிக்கத்திற்காக, யுத்தம் செய்த காலத்தில் எழுதப்பட்ட நூல் ஒன்று, தற்செயலாக வாசிக்கக் கிடைத்தது.  "De opkomst van het Nederlandsch gezag over Ceylon" (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலானது, சுமார் 200 வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்ட பழைய டச்சு மொழியில் எழுதி இருப்பதால், வாசிப்பதற்கு சற்று கடினமாக உள்ளது.  காலனிய எஜமானர்கள் தமது நாட்டை பற்றி என்ன எழுதியிருக்கிறார்கள் என்று அறிவதற்கு, இலங்கை மக்களுக்கு ஆர்வம் இருக்கலாம். நான் சிரமப் பட்டு வாசித்த நூலில் இருந்து சில குறிப்புகளை இங்கே பதிவு செய்துள்ளேன். அந்த நூல் தற்பொழுது, எங்கேயும் விற்பனைக்கு கிடைக்காது. ஸ்கேன் செய்யப்பட்ட நூல், இணைய நூலகத்தில் வாசிக்கக் கிடைக்கின்றது. 

அன்று இலங்கைத் தீவானது, தெற்காசியாவில் போர்த்துக்கேயரின் பணக்கார காலனியாக இருந்துள்ளது. இரத்தினக் கற்கள், முத்துக்கள், கறுவாப் பட்டைகள் போன்றன, அன்றைய சர்வதேச சந்தையில் பெருமளவு வருவாயை ஈட்டிக் கொடுத்த பண்டங்கள் ஆகும். அதனால், போர்த்துக்கேயரும் இலங்கை இலகுவாக இழக்க விரும்பாமல், டச்சுக் காரரை எதிர்த்து கடுமையாக போரிட்டு இருக்கிறார்கள். "செய்லோன் (இலங்கை) தீவின் இழப்பானது, மிகுந்த மன வலியை தருவதும், போர்த்துக்கல் தேசத்தின் மிகப் பெரிய இழப்பாகவும் கருதப் பட வேண்டுமென...." போர்த்துகேய கால இலங்கையின் சரித்திரத்தை எழுதிய  frei Fernão de Queiroz குறிப்பிட்டுள்ளார். 

De opkomst van het Nederlandsch gezag over Ceylon (இலங்கை மீதான நெதர்லாந்து ஆட்சியதிகாரத்தின் தொடக்கம்) என்ற நூலில், நான் வாசித்த சில பகுதிகளை இங்கே உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இயற்கையான துறைமுகங்கள், கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த அமைவிடம் காரணமாக, இலங்கைத் தீவு காலனிய எஜமானர்களின் பிரியத்திற்குரிய காலனியாக இருந்துள்ளது. நெதர்லாந்தை சேர்ந்த "கிழக்கிந்திய கம்பனி" என்ற வர்த்தக ஸ்தாபனம், இலங்கையை தளமாக வைத்துக் கொண்டு, இந்தியாவில் தமிழக கரையோரப் பகுதிகளை பிடித்து ஆள்வதற்கு திட்டமிட்டிருந்தது. இலங்கை மட்டுமல்லாது, நாகபட்டினம், தூத்துக்குடி போன்ற தமிழக பகுதிகளின் பொருளாதார முக்கியத்துவமும் இந்த நூலில் விபரிக்கப் பட்டுள்ளது.

இந்த நூலில், யாழ்ப்பாணத்திலும், மன்னாரிலும் நடந்த யுத்தம் பற்றி விபரமாக எழுதப் பட்டுள்ளது. போரில் கொல்லப்பட்ட போர்த்துக்கேயர்கள், மலபாரிகள் (தமிழர்கள்), இவர்களுடன் கறுப்பின அடிமைகளின் எண்ணிக்கையும் குறிப்பிடப் பட்டுள்ளது. இதிலிருந்து ஒரு உண்மை தெளிவாகின்றது.  போர்த்துக்கேயர் ஆண்ட காலத்தில், ஆயிரக் கணக்கான கறுப்பின அடிமைகளையும் இறக்குமதி செய்திருக்கின்றனர். ஆப்பிரிக்க கறுப்பின அடிமைகளின் வம்சாவளியினர் பின்னர் தமிழைப் பேசி தமிழர்களாக மாறி உள்ளனர். (அதே போன்று சிங்களப் பிரதேசத்தில் வாழ்ந்த ஆப்பிரிக்க அடிமைகள் சிங்களவராக மாறி விட்டார்கள்.)

யாழ்ப்பாணத்தை "Jaffena patnam" என்றும், அங்கு வாழ்ந்த மக்களை "மலபாரி" மொழி பேசுவோர் என்றும் குறிப்பிடப் பட்டுள்ளது. (போர்த்துக்கேயரும், டச்சுக்காரரும் தமிழர்களை மலபாரிகள் என்று தான் அழைத்து வந்தனர். அனேகமாக, ஆங்கிலேயரின் காலனிய காலத்தில் தான் தமிழர் என்ற பெயர் பாவனைக்கு வந்திருக்க வேண்டும்.) யாழ்ப்பாணத்தில் வாழ்ந்த போர்த்துக்கேயரை தவிர,  உள்நாட்டு கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை 50000 என்று குறிப்பிடப் பட்டுள்ளது. சிறிதும் பெரிதுமான தீவுகளில் 20000 பேர். மன்னாரில் 7000 பேர். போர்த்துக்கேயர் ஆட்சிக் காலத்தில், 90% மான தமிழர்கள், கத்தோலிக்க கிறிஸ்தவர்களாக இருந்துள்ளனர். 

அந்தக் காலத்தில் இந்து மதத்தை பின்பற்றிய அனைவரும் பிராமணர்களாக, அல்லது எழுதப், படிக்கத் தெரிந்த உயர் சாதியினராக இருந்துள்ளனர். அதனால் இந்துக்களை பிராமணர் என்றே நூலாசிரியர் குறிப்பிடுகின்றார். "Schriftgeleerde of Pandiet" (படித்தவர்கள் அல்லது பண்டிதர்கள்) என்று, பிராமணர் என்ற சொல்லுக்கு அந்த நூலில்  விளக்கம் கொடுக்கப் பட்டுள்ளது. ஆங்கிலேய காலனிய காலத்திற்கு முன்னர், "இந்து" என்ற சொல் பயன்பாட்டில் இருக்கவில்லை என்பதையும், பிராமணர்களை தவிர பிற சாதியினர் இந்துக்களாக இருக்கவில்லை என்பதையும், இந்த சரித்திர ஆவணம் நிரூபிக்கின்றது. 

"30 மைல்  சுற்று வட்டாரத்தை கொண்ட யாழ்ப்பாணம், மலைகளற்ற, சமவெளியான பிரதேசம். நம்ப முடியாத அளவுக்கு வளம் கொழிக்கும் பூமி. நெல்லும், பருத்தியும், பிற தானியங்களும் பயிரிடப் பட்டன. காடுகளுக்குள்  யானைகளும், மான்களும், பிற காட்டு விலங்குகளும் காணப்பட்டன." இவ்வாறு அந்த நூலில் விவரிக்கப் பட்டுள்ளது. போர்த்துக்கேயர் காலம் வரையில் கூட, யாழ்ப்பாணத்தில் இருந்து யானைகள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப் பட்டன. அதனால் தான், ஒரு இடத்திற்கு "யானை இறவு" என்ற பெயர்   ஏற்பட்டது. இதனை வாசிக்கும் போது, எமக்கு அதிர்ச்சி ஏற்படும். ஏனெனில், இன்றைய யாழ் குடாநாடு இலங்கையில் மிகவும் வரட்சியான பிரதேசங்களில் ஒன்று. அங்கே தற்போது காடுகளும் இல்லை, யானைகளும் இல்லை. நெல் உற்பத்தி, யாழ்ப்பாண மக்களின் நுகர்வுக்கே போதாது. 

அப்படியானால், 300 வருட கால காலனிய ஆட்சிக் காலத்தில், சூழலியலை மதிக்காத நிர்வாக சீர்கேடுகளால்,  யாழ்ப்பாண மண் வறண்டு போயிருக்கின்றது. ஆங்கிலேயர் வெளியேறி முப்பது வருடங்களுக்குப் பின்னர், விவசாயப் பொருளாதாரத்தில் பின்தங்கிய, வளமற்ற, வறண்ட   யாழ்ப்பாண மண்ணில் இருந்து, தமிழீழத்திற்கான ஆயுதப் போராட்டம் தோன்றியது.  "காலனிய சுரண்டல் - பொருளாதார பிரச்சினைகள் - ஈழப் போர்"   இவற்றிற்கு இடையிலான தொடர்புகளை,  இன்றைக்கு பல படித்தவர்களும் புரிந்து கொள்வதில்லை. 


இங்கேயுள்ள இணைப்பில் நூலை வாசிக்கலாம்: Full text of "De opkomst van het Nederlandsch gezag over Ceilon. Eerste gedeelte"

Wednesday, February 06, 2013

இந்துக்களின் சகோதரர்களான, "ஆப்கான் ஆரியர்கள்"!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
 நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 21 

 (இறுதிப் பாகம்)

இந்து மதத்தவரின் புனித நூலான இருக்கு வேதத்தில், சோம பானம் பற்றிய செய்யுள்கள் இயற்றப் பட்டுள்ளன. தேவர்களுக்கு பிரியமான சோம பானத்தை பருகினால், சாகா வரம் பெறலாம் என்பது வேத கால மனிதர்களின் நம்பிக்கை. இப்போது அந்த சோம பானம் எங்கே? இந்து மத நம்பிக்கையாளர்களைக் கேட்டால், அது வேத காலத்தில் மட்டுமே உற்பத்தி செய்யப் பட்டது. இன்றைய கலி காலத்தில் அந்தப் பானமும், அதன் மூலப்பொருளான செடியையும் கண்டுபிடிக்க முடியாது." என்று கூறுவார்கள். அது உண்மையா? இல்லை. நீங்கள் ஆப்கானிஸ்தானுக்கு சென்றால், அங்கே இப்போதும் சோம பானம் அருந்தலாம்! சாதாரணமாக தெருவோர தேநீர்க் கடையிலேயே விற்கிறார்கள்.

சீனாவில் இன்றைக்கும் சோம செடியில் இருந்து மருந்து தயாரிக்கிறார்கள். ஆஸ்துமா, மற்றும் பல சளி சம்பந்தமான நோய்களை குணப்படுத்துவதற்கான மருந்து அது. அந்த மருந்து அல்கஹோல்  போல சக்தி அளிப்பதற்கும் பயன்படுவதால், அமெரிக்காவிலும், வேறு சில நாடுகளிலும் தடை செய்யப் பட்டுள்ளது. சோமா செடியின் இன்றைய தாவரவியல் பெயர்: Ephedra Sinica. (http://en.wikipedia.org/wiki/Ephedra) 5000 வருடங்களாக, சீனர்கள் சோமா செடியின் சாறு பிழிந்து அருந்தி வருகின்றனர்.   அப்படியானால், இந்து மதத்தவரின் மூதாதையர், சீனாவில் இருந்து குடிபெயர்ந்தவர்களா? அந்த திசையில் ஆராய்ந்தால், நிறைய தகவல்கள் கிடைக்கின்றன. இந்து மதம் என்பது இந்திய மண்ணில் பிறக்கவில்லை. அது  இந்தியர்களின் மதம் அல்ல என்பதை நான் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றேன். அதனை கற்பனை செய்து கூட பார்க்க முடியாதவர்களிடம், சோம பானம் எங்கே கிடைக்கும் என்று கேட்டால் சொல்வார்களா?

நாம் தமிழில் பாவிக்கும் "சகோதரர்" என்ற சொல்லின் மூலம் சமஸ்கிருதம் ஆகும். அந்த சொல்லின் பூர்வீகம் எதுவென்று தெரியுமா? இன்றைய ஆப்கானிஸ்தானிலும், அதன் எல்லையோரம் உள்ள பாகிஸ்தான் மாநிலங்களிலும் பஷ்டூன் இன மக்கள் வாழ்கின்றனர். அவர்களது மொழியில் "சகா" என்றால் இரத்த உறவினர் என்று அர்த்தம். (தமிழில் சகா என்பது கூட்டாளி என்ற அர்த்தத்தில் பாவிக்கப் படுகின்றது.) பண்டைய காலத்தில், அந்தப் பகுதியில் வாழ்ந்த மக்கள் "சாகா இனத்தவர்கள்" என்று அழைக்கப் பட்டனர். கிரேக்கர்கள் அவர்களை சீத்தியர்கள் (Scythian) என்று பெயரிட்டு அழைத்தனர். கிரேக்க வரலாற்று ஆசிரியர்கள், துருக்கியில் இருந்து வட இந்தியா வரையில் வாழ்ந்த ஈரானிய மொழிகளைப் பேசிய இனங்களை எல்லாம், சீத்தியர்கள் என்ற பொதுப் பெயரில் அழைத்தார்கள்.

பண்டைய கிரேக்க வரலாற்றை எழுதிய ஹெரோடோதுஸ், "Oiorpata" என்ற பெண்களின் கதையை ஓரிடத்தில் எழுதியுள்ளார். கஸ்பியன் கடலோர பகுதியில் வாழ்ந்த ஈரானிய இனம் ஒன்றின் வீர மகளிர் பற்றிய கதை அது. அந்த இனத்தில் பெண்களே போருக்கு செல்வார்கள் என்பதால், "ஆண்களை வெட்டிச் சாய்ப்பவர்கள்" என்ற பொருளில்,  Oior (ஆண்கள்) pata (வெட்டுபவர்கள்) என்று கிரேக்கர்கள் பெயரிட்டார்கள். உண்மையில் இயர் (Oior) என்பது, "வீர்" (வீரர்) சொல்லின் திரிபடைந்த வடிவமாகும். இங்கே இந்தக் கதையை குறிப்பிடுவதற்கு காரணம், ஒரு காலத்தில் உக்ரைன் முதல் வட இந்தியா வரையில், பல்வேறு ஈரானிய மொழிகளை பேசும் மக்கள் வாழ்ந்தனர் என்பதை நிரூபிப்பதற்காகத் தான்.

"இனம்" என்ற சொல், ஒரு இருபதாம் நூற்றாண்டு கண்டுபிடிப்பாகும். உலக வரலாற்றில், எந்தக் காலத்திலும், "இன உணர்வு" கொண்ட மக்கள் வாழவில்லை  அந்தக் காலத்தில், ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், பல்வேறு இனக் குழுக்களாக பிரிந்து போரிட்டனர். ஒருவரின் பிரதேசத்தை மற்றவர் அபகரித்தனர். சீனாவில் உள்ள யுவேசி என்ற வெள்ளையின மக்கள், இன்றைய தஜிக்கிஸ்தான் - உஸ்பெகிஸ்தான் பகுதியில் வாழ்ந்த சாகா (அல்லது சீத்திய) இன மக்களை தெற்கு நோக்கி தள்ளினார்கள். அங்கிருந்து விரட்டப்பட்ட சாகா இன மக்கள், இன்றைய காஷ்மீரை தமது புதிய தாயகமாக்கிக் கொண்டனர். அங்கிருந்து விந்திய மலை வரையில் தமது ஆளுகைக்கு உட்பட்ட பகுதிகள் ஆக்கினார்கள். (The Ethnic of Sakas, http://www.iranchamber.com/history/articles/ethnic_of_sakas.php)  இதெல்லாம் எங்கே எழுதியிருக்கிறது?  புராதன சீனாவின் வரலாற்றை எழுதிய சீமா கியான்  (Sima Qian, கி.மு. 145-86), மற்றும் சங் கியான் (Zhang Qian, கி.மு.195-114) என்ற இராஜதந்திரி ஆகியோர் இவற்றைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளனர். 

நான், "இந்துக்களின் தாயகம் சீனாவில் உள்ளது?" என்ற தலைப்பில் ஒரு கட்டுரைத் தொடரை எழுதிய பொழுது, எதிர்பார்த்த படியே நிறைய எதிர்ப்புகள் வந்தன. நிறையப் பேருக்கு அது ஒரு அதிர்ச்சியான தகவல் தான். சீனா என்றவுடன், சப்பை மூக்கு, சிறிய கண்கள் கொண்ட, குள்ளமான சீனர்களை மட்டுமே நாம் நினைத்துக் கொள்கிறோம். சீனாவின் பெரும்பான்மை இனமான "ஹான்" இனத்தவர்களும் (அவர்கள் பேசுவது தான் சீன மொழி என்ற மாண்டரின் மொழி) தாம் மட்டுமே, அந்த மண்ணின் பூர்வ குடிகள் என்று நம்புகின்றனர். சீனாவில் ஒரு காலத்தில், ஐரோப்பியர் போன்ற வெள்ளையின மக்கள் வாழ்ந்தனர். குறிப்பாக மேற்கு சீன மாநிலமான "உரும்கி" யில் அவர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தனர்.

அதற்கான ஆதாரங்கள் பல அண்மையில் கண்டுபிடிக்கப் பட்டன. "மம்மி" முறையில் பதப்படுத்தப் பட்ட, இரண்டாயிரம் ஆண்டு பழமையான மனித உடல்கள் பல கண்டெடுக்கப் பட்டன. அவர்களின் உடைகள், உடைமைகள் பல மண்ணின் அடியில் இருந்து தொண்டி எடுக்கப் பட்டன. வரலாற்றில் இருந்து மறைந்து விட்ட சீன வெள்ளையின மக்கள், சீனாவின் பிற இனங்களுடன் ஒன்று கலந்திருக்கலாம். (இன்றைக்கும் சீனாவில் நூற்றுக்கும் மேற்பட்ட மொழிகள் பேசப்படுகின்றன. வித்தியாசமான கலாச்சாரங்களை கொண்ட இனங்களும் வாழ்கின்றன.)  குறிப்பாக இன்றைய உரும்கி பிரதேசத்தில் வாழும் துருக்கி மொழி பேசும் உய்குர் மக்கள் அவர்களின் வம்சாவளியினராக இருக்கலாம். மொழி என்பது மாறுபடும் தன்மை கொண்டது. 

சீனாவின் உரும்கி மாநிலத்திலும், அதை அடுத்துள்ள கான்சு மாநிலத்திலும் முற்காலத்தில் இரண்டு வகையான வெள்ளையினங்கள் வாழ்ந்ததாக, புராதன சீன இலக்கியங்கள் கூறுகின்றன. நீலக் கண்கள், செந்நிற தாடி கொண்ட  தோற்றங்களுடன் அவர்கள் காணப் பட்டதாக அவற்றில் எழுதப் பட்டுள்ளது. ரஷ்ய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டெடுத்த மண்டையோடுகளும் அவர்கள் ஐரோப்பிய வெள்ளையர்கள் போன்ற மக்கள் என்பதனை உறுதிப் படுத்துகின்றன. சீனர்கள் தமது மொழியில் அவர்களை முறையே வூசுன்  (Wusun), யுவேசி (Yuezhi) என்று பெயரிட்டு அழைத்தனர். வூ சூன் என்பது பல இனக் குழுக்களை குறித்த பொதுப் பெயராக இருக்கலாம். 

வூசுன்  (Wusun, http://en.wikipedia.org/wiki/Wusun) மக்களிடையே பொதுவான ஒரு மொழி பேசப் பட்டதாக தெரியவில்லை. சில குழுக்கள் இந்தோ-ஐரோப்பிய மொழியையும், சில குழுக்கள் துருக்கி மொழியையும் பேசி வந்தனர். ஆனால், அவர்களின் பூர்வீகம் பற்றிய பொதுவான கதை ஒன்று உலவியது. "வூசுன்" என்ற சீனப் பெயர் ஒரு பட்டப் பெயர் ஆகும். வூசுன் இன மக்களின் முதல் மனிதன் பற்றிய கதை அது. கானகத்தில் கைவிடப் பட்ட  ஒரு மனிதக் குழந்தையை, ஒரு பெண் ஓநாய் பாலூட்டி வளர்த்ததாகவும், அந்தக் குழந்தைக்கு காகங்கள் இரை தேடிக்  கொண்டு வந்து கொடுத்ததாகவும், ஒரு கர்ண பரம்பரைக் கதை அந்த மக்களிடையே உலாவியது. "ஓநாய் பாலூட்டி வளர்த்த முதல் மனிதனின்  கதை", இன்றைக்கும் துருக்கி மொழிக் குடும்பத்தை சேர்ந்த பல்வேறு இன மக்களிடையே நம்பப் பட்டு வருகின்றது. அது மட்டுமல்ல, இத்தாலியில் வாழ்ந்த ரோமர்களும் அதே மாதிரியான பூர்வீகக் கதையை நம்பி வந்தனர். ஐரோப்பிய வெள்ளை இனத்தவரும், மத்திய ஆசியாவின் துருக்கி இனத்தவரும், ஆரம்பத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்திருக்கலாம்.

யுவேசி இன மக்கள், தொக்காரிய (Tocharian) என்ற இந்தோ-ஐரோப்பிய மொழி பேசியதாக தெரிகின்றது. அண்மைக் கால அகழ்வாராய்ச்சிக்கு பின்னர், யுவேசி அல்லது தொக்காரிய இன மக்கள் குறித்து நிறைய தகவல்கள் கிடைத்துள்ளன. சீனாவில், Dunhuang  எனும் இடத்தில் இருக்கும் மலைக் குகைகளில், ஆயிரக் கணக்கான நூல்கள், ஓலைச் சுவடிகளை பாதுகாத்து வைத்த நூலகங்கள் கண்டுபிடிக்கப் பட்டன. அந்தப் பிரதேசத்தில், ஒரு காலத்தில் பல்லாயிரம் மக்கள் வாழ்ந்த நாகரீகமடைந்த நகரம் இருந்தது.  1907 ம் ஆண்டு, திபெத்திய பௌத்த துறவிகள் மூலம் அந்த இடத்தைப் பற்றி கேள்விப்பட்ட, Sir. Aurel  Stein  என்ற அகழ்வாராய்ச்சியாளர், நிறைய சுவடிகளை அள்ளிச் சென்று விட்டார். அவற்றை அவர் காசு கொடுத்து வாங்கினாரா, அல்லது திருடிச் சென்றாரா என்று தெரியவில்லை. 


புராதன கால தொக்காரியன் இன மக்களின் பொக்கிஷங்கள், இன்று லண்டனில் உள்ள பிரிட்டிஷ் மியூசியத்தில் வைக்கப் பட்டுள்ளன. அவற்றை திருப்பித் தருமாறு சீனா கேட்டுக் கொண்டிருக்கிறது. இன்று நிறைய சுற்றுலாப் பயணிகள்,  Dunhuang குகைகளை பார்வையிட சென்று வருகின்றனர். அந்தக் குகைகளுக்குள் ஏராளமான புத்தரின் ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. புத்தருக்கு அருகில் நிற்கும் மனிதர்களின் படங்களை கொண்டு, அன்று அங்கு வாழ்ந்த மக்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். அதிலே ஒரு ஆச்சரியம் என்னவென்றால், அவர்களது தோற்றம் ஐரோப்பிய வெள்ளையர்களைப் போல உள்ளது. ஆனால், ஆடை, ஆபரணங்கள் இந்தியர்களைப் போல உள்ளன. அவர்கள் இந்திய கலாச்சாரத்தின் படி, நெற்றியில் பொட்டு வைத்திருப்பது இன்னும் விசேடமானது. 

நாங்கள் இப்போது சில முடிவுகளுக்கு வரலாம். சீனாவில் யுவேசி (Yuezhi,   http://en.wikipedia.org/wiki/Yuezhi)  என்று அழைக்கப் பட்ட தொக்காரிய மொழி பேசிய மக்கள் இந்திய- ஐரோப்பிய இனத்தை சேர்ந்தவர்கள். அதாவது அவர்கள் தோற்றத்தில் ஐரோப்பியர்கள், ஆனால் கலாச்சாரத்தில் இந்தியர்கள். மதத்தால் பௌத்தர்கள். மொத்தத்தில் பண்டைய காலத்தில் நாகரீகமடைந்த ஒரு இனத்தை சேர்ந்தவர்கள். அவர்களையும் நாங்கள் ஆரியர்கள் என்று நம்பி வந்துள்ளோம். உரும்கியில் இருந்து குடிபெயர்ந்த தொக்காரியன் இன மக்கள், பிற்காலத்தில் காந்தாரம் என்ற ராஜ்ஜியத்தை உருவாக்கினார்கள். காந்தாரம் என்பது என்றைய, அப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது. அப்போதே அந்தப் பிரதேசத்தில் வாழ்ந்த கறுப்பின மக்களுடன் இனக் கலப்பு நடந்துள்ளது. அதன் விளைவாக புதிய இனங்களும், புதிய மொழிகளும் உருவாகின. இதனை பலுசிஸ்தான் பிராந்தியத்தில் வாழும் மக்களின் உதாரணத்தைக் கொண்டு விளக்கலாம்.

பலுச்சிஸ்தான் நாடு, இன்றைய ஈரான், பாகிஸ்தானுக்கு இடையில் இரண்டாக பிரிக்கப் பட்டுள்ளது. பலுச்சி மக்கள் பேசும் மொழி, இந்தோ-ஐரோப்பிய மொழிக் குடும்பத்தை சேர்ந்தது. அதே பிரதேசத்தில், பிராஹுய் என்ற திராவிட மொழி பேசும் மக்களும் வாழ்கின்றனர். தென்னிந்தியாவில் பேசப்படும் தமிழ் போன்ற திராவிட மொழிகளுக்கு நெருக்கமான, பிராஹுய் மொழி, எவ்வாறு பாகிஸ்தானில் தனித்து விடப் பட்டது என்று எண்ணி வியக்காதவர் இல்லை. ஒரே இனத்தை சேர்ந்த மக்கள், முற்றிலும் மாறு பட்ட இரண்டு மொழிகளைப் பேசலாம். பலுச்சி மொழி பேசும் மக்களுக்கும், பிராஹுய் மொழி பேசும் மக்களுக்கும் இடையில் தோற்றத்தில் எந்த வித்தியாசமும் கண்டுபிடிக்க முடியாது. 

அவர்கள் ஒரே கலாச்சாரத்தை பின்பற்றுகின்றனர். அவர்களின் பூர்வீகம் பற்றிய கதைகளும் ஒரே மாதிரி இருக்கின்றன. ஆகவே, அவர்கள் ஒரே இனத்தை சேர்ந்த மக்கள் என்பதை நிரூபிக்க இந்த ஆதாரங்கள் போதுமானவை. பிராஹுய் என்பது திராவிட தனித்துவத்தை கொண்ட மொழியாகவும், பலுச்சி என்பது ஆரிய மேலாதிக்கத்தால் உருவான புதிய  மொழியாகவும் இருக்கின்றன. யார் எந்த மொழியை தேர்ந்தெடுத்தனர் என்பது, அவரவர் தனிப்பட்ட விருப்பத்தை பொறுத்திருந்தது. ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்களே, இரண்டு வெவ்வேறு மொழிகளைப் பேசும் இனங்களாக பிரிந்திருக்கலாம். இதே மாதிரியான வித்தியாசம் தான், இலங்கையில் சிங்களவர், தமிழர் ஆகிய  மொழிகளைப் பேசும் மக்களிடையே உள்ளது. 

இதிலே இன்னொரு விடயத்தையும் குறிப்பிட வேண்டும். பலுச்சி மக்கள், தமது மூதாதையர் அரேபியாவில் இருந்து குடிபெயர்ந்து வந்ததாக கூறுகின்றனர். ஈரானில் சாலமன் மன்னனின் விமான தளம் என்று அழைக்கப் படும் மலை ஒன்றுள்ளது. மேற்கு பாரசீக நாட்டில், பிற்கால பார்சி மொழி பிரபலமடைவதற்கு முன்னர், அரமிய மொழி போன்ற ஒரு மொழி அரச கரும மொழியாக இருந்துள்ளது. எத்தியோப்பியா முதல், வட இந்தியா வரையிலான பிரதேசம் ஒரு ஹீபுரு சக்கரவர்த்தியின் ஆட்சிக்குட்பட்ட சாம்ராஜ்யமாக இருந்ததாக, யூதர்களின் பைபிளில் எழுதப் பட்டுள்ளது. அதே சாம்ராஜ்யம் விக்கிரமாதித்தன் என்ற சக்கரவர்த்தியின் ஆட்சியின் கீழ் இருந்ததாக, இந்திய வேதத்தில் எழுதப் பட்டுள்ளது. இந்தக் கதைகளுக்குப் பின்னால் மறைந்திருக்கும் உண்மை என்ன?

இன்றைய எத்தியோப்பியா, அரேபியா, ஈரான், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில்  செமிட்டிக்-திராவிட மொழிகளைப் பேசிய மக்கள் வாழ்ந்துள்ளனர். அதாவது, அரபு, ஹீபுரு, அரேமிக் போன்ற செமிட்டிக் மொழிகள், ஒரு காலத்தில் திராவிட மக்கள் பேசிய மொழிகளாக இருந்திருக்க வேண்டும். சமஸ்கிருதம், அல்லது ஈரானிய மொழிகள் பிரபலமடையத் தொடங்கியதும் அந்த மொழிகள் மறைந்து விட்டன. சமஸ்கிருதம் (இந்தியா), அவஸ்தான் (ஈரான்) ஆகிய மொழிகளுக்கு இடையில் பெரிய வித்தியாசங்கள் எதுவுமில்லை. அவை இரண்டும் மக்களின் பேச்சு மொழிகளாக இல்லாமல், இலக்கிய மொழிகளாக இருந்தன. ஆனால், அவை அரச நிர்வாக மொழிகளாக இருந்ததால், மக்களின் பேச்சு மொழிகள் மேல் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கின. 

இன்றுள்ள இந்திய மத்தியதர வர்க்கத்தினரால், அமெரிக்க கலாச்சாரம் மிக வேகமாக பின்பற்றப்  பட்டு வருவதைப் போல; அன்றிருந்த இந்திய மேட்டுக் குடியினர் ஆரிய கலாச்சாரத்தை விரும்பி ஏற்றுக் கொண்டிருந்தனர். அதன் ஆதிக்கம் பிற்காலத்தில் தென்னிந்தியா, இலங்கை வரை பரவியது. "ஆரியர்கள்" என்பது ஒரு இனத்தை அல்லது சாதியை குறிக்கும் சொல் அல்ல. அதன் உண்மையான அர்த்தம் "மேன் மக்கள்" என்பதாகும். நாம் இன்று மேட்டுக்குடி வர்க்கம் என்று அழைக்கும் பிரிவினரை, புராதன கால மக்கள் ஆரியர்கள் என்று அழைத்திருக்கலாம். யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட தமிழ் மன்னர்கள் சிலர், தமக்கு "ஆரியச் சக்கரவர்த்தி" என்று பெயர் சூட்டிக் கொண்டனர். ஈரான் என்பதன் அர்த்தம் "ஆரியர்களின் நாடு". ஆனால் அதனை ஆரிய இனத்தவரின் தாயகம் என்று பொருள் கொள்வது அபத்தமானது. ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகள் இஸ்லாமிய மயமாவதற்கு முன்னர், அங்கே நால் வர்ண சாதி அமைப்பு இருந்தது. அதாவது பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் ஆகிய சாதியினர் அரச கட்டமைப்பின் தூண்களாக இருந்தனர். 

வரலாற்றில் குறிப்பிட்ட காலத்தில் ஒரு மொழியை பேசிய மக்கள், பின்னர் ஏதாவது ஒரு காரணத்தினால் வேறு மொழியை பேசத் தொடங்குவது சாதாரணமாக நடந்து கொண்டிருக்கின்றது. இன்றுள்ள தமிழர்கள் கூட, ஒரு காலத்தில் பல மொழிகளைப் பேசிய, பல் வேறுபட்ட இனங்களின் கலவை தான். அவுஸ்திரேலியாவில் வாழும் அபோரிஜின் இனத்தோடு தொடர்புடைவர்களே ஆதி தமிழர்கள். ஆனால், அன்று அவர்கள் தமிழ் மொழி பேசவில்லை.   பிற்காலத்தில் புலம்பெயர்ந்து வந்த மராட்டியர்கள், காஷ்மீரிகள், ஆப்கானியர்கள், ஈரானியர்கள் (பல்லவர்கள்) போன்ற "ஆரியர்களுடன்" இனக்கலப்பு நடந்த பின்னர் தான், தமிழர்கள் தோன்றினார்கள். ஒரு மொழியை அடிப்படையாக கொண்டு, ஒரு இனத்தை வரையறுப்பது, ஒரு மடத்தனமான, அரசியல் உள்நோக்கம் கொண்ட  இனவாதக் கோட்பாடு ஆகும். 

(முற்றும்)



இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!
20.கிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய "பிராமணர்கள்"!

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Tuesday, February 05, 2013

கிரேக்கர்களுக்கு அறிவியல் கற்பித்த எகிப்திய "பிராமணர்கள்"!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! 
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 20

(இருபதாம் பாகம்)

கிரேக்க தத்துவ ஞானிகள் பலர் எகிப்தில் கல்வி கற்றவர்கள். ஆனால், பண்டைய எகிப்தியரின் அறிவியலை, இன்று பாடசாலைகளில் "கிரேக்கர்களின் அறிவியல்" என்று கூறி  கற்பித்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த மாற்றம் எதனால் ஏற்பட்டது? இன்றைய கிரீஸ் ஒரு காலத்தில் எகிப்திய காலனியாக இருந்திருக்கலாம். ஆனால், பிற்காலத்தில் ஒரு சாம்ராஜ்யத்தை கட்டிய கிரேக்கர்கள், எகிப்தையும் அதற்குள் கொண்டு வந்தனர். எகிப்து மட்டுமல்ல, சூடான் கூட கிரேக்க சாம்ராஜ்யத்தின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. ஆனால், அன்றைய கிரேக்கர்கள் எல்லோரும் வெள்ளையர்கள் என்று நம்மால் அறுதியிட்டுக் கூற முடியாது. நானே நேரில் கண்ட உதாரணம் ஒன்றைக் கூறுகின்றேன்.

சைப்ரஸ் நாட்டில், கிரேக்க மொழி பேசும் கறுப்பின சூடானியர்கள் வாழ்கின்றனர். அவர்கள் எல்லோரும் நமது காலத்தில் அகதியாக வந்தவர்கள் தான். ஆனால், அவர்களது பாட்டன், முப்பாட்டன் காலத்தில் இருந்து கிரேக்க மொழியை தாய்மொழியாக பேசி வருகின்றனர். சூடானிய அகதிகளை நாடுகடத்தும் பிரச்சினை வந்த நேரம், சைப்ரஸ் ஊடகங்களின் கவனம் இவர்களின் மேல் திரும்பியது. ஒரு காலத்தில் சூடானில் கிரேக்கர்களின் காலனி இருந்ததால், அவர்கள் கிரேக்க மொழி பேசுகின்றனர் என்றே பெரும்பாலான சைப்ரஸ் மக்கள் அபிப்பிராயப் பட்டனர். ஆனால், அது "வெள்ளையின நிறவாத" கருத்தியலாகவே எனக்குப் படுகின்றது. கிரேக்கர்கள் என்றால், அவர்களின் தோல் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும் என்பது பொதுப் புத்தியில் உறைந்துள்ளது. இன்றைக்கு தமிழ் என்பது மொழி என்பதைக் கடந்து இனம் என்று தவறாகப் புரிந்து கொள்ளப் படுகின்றது. அதே நிலைமை தான் கிரேக்க மொழிக்கும். ஒரு காலத்தில், கிரேக்க மொழி பல இனத்தவர்களின் தாய்மொழியாக, அல்லது இரண்டாம் மொழியாக இருந்தது.

எகிப்தின் தலைநகர் கெய்ரோவை, கிரேக்கர்கள் "ஹேலியோபோலிஸ்" என்று அழைத்தார்கள். (அது இன்று கெய்ரோ மாநகரின் ஒரு பிரிவு.) கிரேக்க சரித்திர ஆசிரியர் ஹெரோடோதுஸ், மற்றும் தத்துவஞானி பிளேட்டோ ஆகியோர், கிரேக்க அறிஞர்கள் ஹேலியொபொலிசில் கல்வி கற்ற அனுபவங்களைப் பற்றி எழுதி உள்ளனர். எகிப்திய மதகுருக்கள் பற்றி அவர்கள் எழுதி இருப்பவை, எமக்கு படிப்பதற்கு சுவாரஸ்யமானவை. பல்துறை அறிஞர்களாக இருந்த எகிப்திய மதகுருக்களிடம் கல்வி கற்ற கிரேக்கர்களும், தாயகம் திரும்பியதும் அவர்களைப் போன்று பாவனை செய்து கொண்டனர். தமது தலையை மொட்டையாக வழித்து, பின்புறம் கொஞ்சம் தலைமுடியை வைத்துக் கொண்டனர். இந்த விவரணைகள், இந்திய பிராமணர்களின் கலாச்சாரத்தை ஒத்துள்ளது.

பண்டைய இந்தியாவில் பிராமணர்கள் மட்டுமே கல்வியறிவு பெற்ற பிரிவினராக இருந்தனர். அவர்களே கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும் இருந்தனர். பண்டைய எகிப்திலும், பிராமணர் போன்ற சாதி ஒன்று இருந்தது. எகிப்திய "பிராமண" சாதியினரும், கோயில் பூசாரிகளாகவும், மன்னர்களுக்கு ஆலோசகர்களாகவும், சிலநேரம் அவர்களே ஆட்சியாளர்களாகவும் இருந்துள்ளனர். கல்வி கற்கும் உரிமையும் அவர்களுக்கு மட்டுமே வழங்கப் பட்டிருந்தது. கிரேக்க அறிஞர்கள் எகிப்தில் கல்வி கற்ற போதிலும், அவர்கள் தமது தாயகத்தில் ஒரு "பிராமண சாதியை" உருவாக்க முனையவில்லை. அதற்கு காரணம், அவர்களது அறிவியல் கிரேக்க மண்ணுக்கு உரியதல்ல, அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதியானது. உதாரணத்திற்கு, நமது நாட்டு அறிவுஜீவிகள் பலர் இங்கிலாந்திலும், அமெரிக்காவிலும் கல்வி கற்று திரும்பினார்கள். அந்த அறிவுஜீவிகள் ஆங்கிலேயரின் நடை உடை பாவனையை பின்பற்றி வாழ்ந்தாலும், தனியான சாதியாக உருமாற முடிந்ததா? அதே நிலைமை தான் பண்டைய கிரேக்கத்தில் காணப்பட்டது.

கேத்திர கணிதம் (Geometry) என்ற அறிவியல், கிரேக்கர்களிடம் இருந்து ஆங்கிலேயர் படித்து, பின்னர் அதை எமக்கு சொல்லிக் கொடுத்தார்கள். ஆனால் அந்த கணிதத்தை கண்டுபிடித்தவர்கள் எகிப்தியர்கள் என்பது பலருக்கு தெரியாது. நைல் நதியில் ஏற்படும் வெள்ளத்தினால், கரையோரப் பகுதிகள் பாதிக்கப் பட்டதால், அவற்றை அளப்பதற்கு கேத்திர கணித அறிவியலை பயன்படுத்தி வந்தனர். பிரபல கிரேக்க தத்துவஞானி அரிஸ்டோட்டில், எகிப்து "கணித அறிவியலின் தொட்டில்" என்று வர்ணிக்கிறார். எகிப்திய மதகுருக்கள், "கணிதக் கலை" ( Mathematikai technai) எனப்படும், எண் கணிதம், கேத்திர கணிதம், வானியல் சாஸ்திரம் போன்ற அறிவியலை கண்டுபிடித்ததாக புகழ்ந்து எழுதியுள்ளார். (பார்க்க: Black Athena, by Martin Bernal)

இந்த தகவல்கள் எல்லாம் எமக்குத் தெரியாமல் போனது எப்படி? இரண்டாயிரம் வருடங்களுக்கு முன்னர், ரோம சாம்ராஜ்யத்தில் பரவிய கிறிஸ்தவம் என்ற புதிய மதமும், அந்த மத அடிப்படைவாதிகள் முன்னெடுத்த கலாச்சார புரட்சியும் வரலாற்றில் திருப்புமுனையாக அமைந்தது. எகிப்தில் கல்வி கற்ற கிரேக்க அறிஞர்கள் எழுதி வைத்த அறிவியல் நூல்களை எல்லாம், "பழைய பஞ்சாங்கம்" என்று கூறி குப்பையில் வீசி விட்டார்கள், அல்லது எரித்து விட்டார்கள்.

பல நூறாண்டுகளுக்கு பின்னர், அரேபியரின் இஸ்லாமிய சாம்ராஜ்யம் உருவான பின்னர் தான் அவை கண்டெடுக்கப் பட்டன. அரேபியர்கள் அவற்றை அரபி மொழியில் மொழிபெயர்த்தார்கள். அரபி மொழியில் எழுதப்பட்ட கிரேக்க அறிவியல் நூல்கள், பண்டைய "இஸ்லாமிய ஸ்பெயினுக்கு" (கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகள் ஸ்பெயின் அரபு-மூர்களால் ஆளப்பட்டது.) கொண்டு செல்லப்பட்டன. சுமார் 500 வருடங்களுக்கு முன்னர், ஸ்பானிஷ்- கிறிஸ்தவ படைகள் போரில் வென்று, முழு ஸ்பெயினையும் கிறிஸ்தவமயமாக்கினார்கள். அப்போது அரேபியர்கள் விட்டுச் சென்ற கிரேக்க அறிவியல் நூல்கள், லத்தீன் மொழியிலும், பின்னர் பல ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்க்கப் பட்டன.

கடந்த 500 வருட கால ஐரோப்பிய வரலாற்றில் நடந்த போர்கள், கறுப்பின மக்களின் நாகரீகத்தை இருட்டடிப்பு செய்வதற்கு வழிவகுத்தன. முதலாவதாக, ஸ்பெயினில் நடந்த புனிதப் போர், அரேபியர்களை வட ஆப்பிரிக்க கடல் எல்லைக்குள் முடக்கியது. இரண்டாவதாக, 19 ம் நூற்றாண்டின் இறுதியில், ரஷ்ய சாம்ராஜ்ய விஸ்தரிப்பு காரணமாக, துருக்கியரின் ஓட்டோமான் சாம்ராஜ்யம் பல பிரதேசங்களை இழந்தது. கிறிஸ்தவ- ஐரோப்பிய நாடுகள் பெற்ற இவ்விரண்டு வெற்றிகளும், வரலாற்றை ஐரோப்பிய மையவாத சிந்தனையுடன் எழுதுவதற்கு ஏடு தொடக்கி வைத்தன.

இனி, இந்தியாவில் "ஆரிய படையெடுப்பு" என்ற புனைவு எப்படி உருவானது என்று பார்ப்போம். ஆரியர் வருகைக்கு முன்னரே, ஹரப்பா நாகரீகம் அழிந்து விட்டது என்று, இன்று பல வரலாற்று ஆசிரியர்கள் ஒத்துக் கொள்கின்றனர். அதாவது ஹரப்பாவில் இருந்த திராவிட நாகரீகம் அழிந்து, பின்னர் அங்கே ஆரிய நாகரீகம் தோன்றியது. ஆனால், அந்த மாற்றத்தை "மெக்சிகோவில் மாயன்களின் நாகரீகம் அழியக் காரணமாக இருந்த, ஸ்பானிஷ் படையெடுப்பு" போன்று நினைத்துக் கொள்வது அபத்தமானது. அப்படி ஒரு படையெடுப்பு நடந்ததற்கான எந்தவொரு சரித்திர சான்றும் கிடையாது. மேலும் அந்நிய படையெடுப்புகளால் மட்டுமே, ஒரு ஆதிக்க மொழி, மதம், கலாச்சாரம் பரவும் என்று கூற முடியாது. அதற்கு உதாரணமாக அரபு-இஸ்லாமிய மயமாகலை கூறலாம். பல நாடுகளில், இராஜதந்திர, வர்த்தக உறவுகள் மூலமாகவும் இஸ்லாம் என்ற புதிய மதம் பரவியது. "ஆரிய படையெடுப்பு", "இஸ்லாமிய படையெடுப்பு", இவை எல்லாம் ஐரோப்பிய மையவாத சிந்தனையில் இருந்து தோன்றிய கருதுகோள்கள் ஆகும்.

 (தொடரும்)


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்
19.தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்

Friday, February 01, 2013

தேர்த் திருவிழா : ஆரிய மன்னர்களின் வெற்றி விழா!

நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்!
நம் தாயகம் ஆப்பிரிக்கா! - 19

(பத்தொன்பதாம் பாகம்)


இன்று பல இந்துத் தமிழர்கள், பகவத் கீதை மற்றும் அது சம்பந்தமான சுவரொட்டிகளை, அலங்காரப் பொருட்களை,  தமது வீடுகளில் வைத்திருக்கின்றனர். யார் பகவத் கீதையை, "இந்துக்களின் புனித                   நூல்" ஆக்கினார்கள் என்று தெரியவில்லை. "கிறிஸ்தவர்களுக்கு விவிலியம் போல,  முஸ்லிம்களுக்கு குர் ஆன் போல, எமது புனித நூலாக பகவத் கீதை இருப்பதாக," இந்துக்கள் கூறிக் கொள்கின்றனர். உண்மையில், இருக்கு, யசுர், சாமம், அதர்வனம் என்ற நான்கு வேதங்களையும், ஒரே நூலாக சுருக்கினால், அதுவே இந்துக்களின் புனித நூலாக இருந்திருக்கும். ஆனால், அங்கே ஒரு நடைமுறைச் சிக்கல் இருக்கிறது. பிராமணர்களை தவிர பிற சாதியினர் வேதம் படிக்கக் கூடாது. அந்த தடையை மீறி யாராவது படித்தால் நாக்கை அறுக்கலாம், படிப்பதை கேட்டுக் கொண்டிருந்தால் காதை அறுக்கலாம், என்று "பிராமண ஷரியா சட்டம்" ஒன்றை போட்டிருக்கிறார்கள்.  இன்றும் கூட, பிராமணரல்லாத பிற சாதி இந்துக்கள் அதனை மதித்து நடக்க வேண்டியுள்ளது. 

இங்கே எமக்கு தேவையானது பகவத் கீதை அல்ல. தேரோட்டும் கண்ணன் அர்ச்சுனனுக்கு கீதோபதேசம் செய்த காட்சியை ஒரு தடவை மனக்கண் முன் கொண்டு வாருங்கள். தேரோட்டும் கண்ணனும், அம்பெய்யும் அர்ச்சுனனும், தேரை இழுக்கும் குதிரைகளும் இந்தக் கட்டுரைக்கு முக்கியமானவை. பல ஓவியர்கள், தமது கற்பனைக்கு எட்டியவாறு அதனை தீட்டியுள்ளனர். மகாபாரதமும், அதில் வரும் பாத்திரங்களும், கீதோபதேசமும் வரலாற்றில் உண்மையாகவே நடந்தனவா என்பது எனக்குத் தெரியாது. ஆனால், அது மாதிரியான போர்கள் வரலாற்றில் நடந்துள்ளன. அதிலும், கண்ணனும், அர்ச்சுனனும் அமர்ந்திருப்பது போன்ற இரதங்கள் போரில் பயன்படுத்தப் பட்டன. ஒரு சிறிய வித்தியாசம். சரித்திர கால இரதம், அர்ச்சுனனின் இரதம் போன்று அவ்வளவு பெரிதாக இருக்காது. ஒரு ஆள் தூக்குமளவு பாரம் குறைந்தது. அனேகமாக இரண்டு சக்கரங்கள் பூட்டப் பட்டிருக்கும். இரண்டு குதிரைகளால் இழுத்துச் செல்லப்படும். குதிரைகளை சாட்டையால் அடித்து தேரை ஓட்டும் ஒருவரும், அம்பு, வில்லுடன் இன்னொருவரும் அமர்ந்திருப்பார்கள். 

பண்டைய காலத்தில், குதிரைகள் பூட்டிய இரதங்களின் பாவனை போரில் வெற்றியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த ஆயுதமாக விளங்கியது.  இருபதாம் நூற்றாண்டில், இராணுவ கவச வாகனம், அல்லது யுத்த தாங்கி எந்தளவு பிரயோசனமாக கருதப் பட்டதோ, அந்தளவு நவீனமான கண்டுபிடிப்பாக அது இருந்தது. குதிரைகளை போருக்கு பழக்கப் படுத்தியது மட்டுமல்ல, சில்லுகள் பூட்டிய வாகனமும், வடக்கே இருந்து குடிபெயர்ந்த வெள்ளையின மக்களுக்கு சரித்திரத்தில் நிலையான இடத்தை பிடித்துத் தந்தது. அதற்காக, "சரித்திரத்தில் வெள்ளையினத்தவர் மட்டுமே குதிரை வண்டிகளை போரில் பயன்படுத்தினார்கள், அதனால் கறுப்பினத்தவர்கள் தோற்கடிக்கப் பட்டனர்..." என்று அர்த்தம் கொள்வது சரியல்ல. பல மேலைத்தேய சரித்திர ஆய்வாளர்கள், வேண்டுமென்றே அது போன்ற தவறான தகவல்களை, "ஆரியரின் படையெடுப்பு" என்ற கோட்பாட்டின் பேரில் பரப்பி வந்துள்ளனர். 

எத்தகைய நவீன ஆயுதமும், ஆரம்ப காலங்களில் அதனை கண்டுபிடித்தவர்களுக்கு சாதகமான விளைவுகளை தரும். ஆனால், காலப்போக்கில் எதிர் தரப்பினரும், அதன் பாவனையை அறிந்து கொண்டு பயன்படுத்த தொடங்கி விடுவார்கள். அமெரிக்கா அணுவாயுதத்தை காட்டி உலகம் முழுவதையும் பயமுறுத்திக் கொண்டிருந்த  காலம் ஒன்றிருந்தது. சிறிது காலத்தின் பின்னர்,  அதன் எதிரி நாடுகளும் அணுவாயுதங்களை  உற்பத்தி செய்யத் தொடங்கவில்லையா? அது போன்று தான் பண்டைய காலத்திலும் நடந்தது. இன்றைய ஈராக்/துருக்கியில் தோன்றிய வெள்ளையின ராஜ்யத்திடம் (பார்க்க: கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்.)  இருந்து, எகிப்தின் கறுப்பின ராஜ்ஜியம் குதிரை வண்டிகளின் பாவனையை கற்றுக் கொண்டது. நவீன காலத்தில் நடப்பதைப் போல, ஆரம்பத்தில் அவற்றை அந்நிய நாட்டில் இருந்து இறக்குமதி செய்திருந்தாலும், பின்னர் அதனை தமது நாட்டில் உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டனர். மேலும், வெள்ளையின குழுக்கள், தமக்குள் போரிட்டுக் கொண்ட பொழுதும், குதிரை வண்டிகளை பயன்படுத்தி வந்தன. உதாரணம்: மகாபாரதம். மகாபாரதக் கதையில், ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள், எதிரெதிரான இரண்டு முகாம்களாக பிரிந்து போரிட்டனர் என்பது குறிப்பிடத் தக்கது. 

வண்டி என்பது ஒரு தமிழ்ச் சொல். நாங்கள் அடிக்கடி "வாகனம்" என்ற  இன்னொரு சொல்லையும் பாவிப்போம். வாகனம் என்பது ஒரு வட மொழிச் சொல்லாகும். "வாகன்" (Wagon) என்ற சொல் இன்று பல ஐரோப்பிய மொழிகளில் காணப்படுகின்றது. அப்படியானால், சமஸ்கிருதம் பேசிய இன மக்களும், ஐரோப்பிய இனங்களும், புராதன காலத்தில் ஒரே இனமாக இருந்து பிரிந்து சென்றிருக்க வேண்டும். மத்திய ஆசியாவில் இருந்து குடிபெயர்ந்த வெள்ளையினத்தவர்கள், ஐரோப்பா, மத்திய கிழக்கு, இந்தியா என்று உலகின் பல பகுதிகளில் ஆதிக்கத்தை நிலைநாட்டுவதற்கு குதிரைகள் பூட்டிய "வாகன்" இன்றியமையாத கருவியாக இருந்தது. 

மகாபாரதக் கதையில் சித்தரிக்கப் பட்டதைப் போன்ற, அதே மாதிரியான இரதங்கள், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பாவிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. ஈராக், துருக்கி, கிரேக்கம் ஆகிய நாடுகளை பெயர் குறிப்பிட்டுச் சொல்லலாம்.  அங்கெல்லாம் அகழ்வாராய்ச்சியாளர்கள்,  மண்ணுக்குள் புதைந்திருந்த, புராதன கால  குதிரை வண்டிகளை தோண்டி எடுத்துள்ளனர். மகாபாரதக் கதையில் வருவதைப் போன்ற இரதங்கள், போருக்கு மட்டும் பயன்படுத்தப் படவில்லை. அவற்றை வைத்து ஓட்டப் பந்தயங்கள் நடத்தினார்கள். வெற்றிவிழா அணிவகுப்புகளில் பயன்படுத்தினார்கள். நமது நாட்டில் உள்ள சைவக் கோயில் திருவிழாக்களில், சுவாமி இரத (தேர்) பவனி வருவதும், ஆரிய இன மன்னர்கள் காலத்து சம்பிரதாயம் ஒன்றின் தொடர்ச்சி ஆகும்.   

எப்போதும் அந்நிய நாடுகளில் குடியேற விரும்புவோரின் குடிசன பரம்பல் நாற்திசையிலும் நடைபெறும். வெள்ளையின மக்கள் ஐரோப்பாவில் மட்டும் சென்று குடியேறவில்லை. மத்திய கிழக்கு, வட இந்தியா, மற்றும் சீனா ஆகிய நாடுகளிலும் சென்று குடியேறினார்கள். எதற்காக ஐரோப்பியர்கள் மட்டும் தூய வெள்ளையினத்தவராக தெரிகின்றனர்? அனேகமாக ஐரோப்பாவில் குடியேறிய வெள்ளையர்கள், எந்தவொரு இனத்துடனும் கலக்காமல் இருந்ததால், தனித் தன்மையை பேணியிருக்கலாம். அதனால் தான் அவர்கள் நாகரீகத்தில் பின்தங்கி இருந்தனர் என்பதையும், இங்கே குறிப்பிட வேண்டும். ஈரான், ஈராக், அரேபியா, எகிப்து, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளில் குடியேறிய வெள்ளையின மக்கள்,  உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்து, பல புதிய இனங்களாக உருவாகி உள்ளனர். 

மத்திய கிழக்கிலும், இந்திய உப கண்டத்திலும் குடியேறிய இந்தோ-ஆரிய வெள்ளையினத்தவர்கள், உள்ளூர் கறுப்பின மக்களுடன் ஒன்று கலந்த பின்னர், சமஸ்கிருதம், பார்சி போன்ற புதிய மொழிகள் தோன்றின. இதிலே எந்த இனம் எத்தனை சதவீதம் கலந்திருந்தது என்றெல்லாம் கண்டுபிடிப்பது கடினம். புதிய கலப்பினத்தில், வெள்ளையின விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் சமஸ்கிருதம் (இன்று ஹிந்தி- உருது) போன்ற "ஆரிய மொழிகள்" பேசப் பட்டன.  கறுப்பினத்தவரின் விகிதாசாரம் அதிகமாக இருந்த இடங்களில் தமிழ் போன்ற "திராவிட மொழிகள்" பேசப்பட்டன. எது எப்படி இருந்தாலும், இன்றைக்கு நாகரீகமடைந்த மொழிகளை பேசும் மக்கள் எல்லோரும், கலப்பினத்தை சேர்ந்தவர்கள் தான். அவ்வாறு இனக் கலப்படையாமல், இனத் தூய்மை பேணியோர் காடுகளிலும், மலைகளிலும் வாழ்கின்றனர். அவர்களை நாங்கள் "நாகரீகமடையாத பழங்குடி இனம்" என்று கூறி ஒதுக்கி வைத்திருக்கிறோம். 

இந்தியாவில் ஆரிய படையெடுப்பு நடக்கவில்லை. ஆனால், ஆரிய குடியேற்றம் நடந்துள்ளது. அதிலும் கி.மு. 3000 வருடங்களுக்கு முன்னர், தெளிவாகத் தெரியக் கூடிய ஆரியப் படையெடுப்புகள்/குடியேற்றங்கள்  நடந்ததாக சரித்திரத்தில் சான்றுகள் கிடையாது. அந்த "ஆரியரும்" ஒரே இனமாக, ஒற்றுமையுடன் நடந்து கொள்ளவில்லை. அவர்கள் தமக்குள் மோதிக் கொண்டார்கள். அரசியல் ஆதிக்கத்திற்காக, ஒரே இனத்தை சேர்ந்தவர்களையும் அழித்தனர். அது மட்டுமல்ல, கறுப்பின அரசர்களுக்கு விசுவாசமான கூலிப்படையாக இருந்தார்கள். அப்படியானவர்கள் தாம் குடியேறிய அல்லது தொழில் செய்த நாடுகளில், கறுப்பின பெண்களை மணந்து கொண்டனர். கறுப்பின மக்களின் நாட்டை பாதுகாப்பதற்காக, படையெடுத்து வந்த இன்னொரு ஆரிய இனத்திற்கு எதிராக போராடினார்கள். 

ஆனால், அது இந்தியா போன்ற ஆசிய நாடுகளில் வெள்ளையின மக்கள் குடியேறிய ஆரம்ப காலகட்டம் ஆகும். சில நூறாண்டுகளுக்கு பின்னர், அல்லது ஆயிரம் வருடங்களுக்குப் பின்னர்,  உண்மையிலேயே சில "ஆரிய-வெள்ளையின" படையெடுப்புகள்  இடம்பெற்றன. மேற்கே இருந்து படையெடுத்த, ஈரானியர்கள் தமது சாம்ராஜ்யத்தை இந்தியா வரை விஸ்தரித்தார்கள். அவர்கள் தான் இந்து மதத்தவர்கள். அதே நேரம், வடக்கே இருந்து வந்த வெள்ளை இனங்கள், இன்றைய ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் பகுதிகளில் "காந்தாரம்" என்ற சாம்ராஜ்யத்தை ஆண்டனர். அது இந்து மதமும், பௌத்த மதமும் கலந்த நாடாக விளங்கியது. இவர்களை அடுத்து, கிரேக்கத்தில் இருந்து அலெக்சாண்டர் தலைமையில் இன்னொரு வெள்ளையினம் படையெடுத்து வந்தது. மேற்குறிப்பிட்ட மூன்று வெவ்வேறான வெள்ளை இன மக்களும், ஈரானிலும், இந்திய உபகண்டத்திலும் வாழ்ந்த கறுப்பின (திராவிட) மக்களுடன் கலந்து விட்டனர். அதனால், அவர்களை எல்லாம் தூய வெள்ளை இன ஆரியர்களாக கருத முடியாது. 

(தொடரும்) 


இந்தத் தொடரின் முன்னைய பதிவுகளை வாசிப்பதற்கு:

1.நாம் கறுப்பர்! நமது மொழி தமிழ்! நம் தாயகம் ஆப்பிரிக்கா!
2.பண்டைய எகிப்தின் பத்தினித் தெய்வம்: கண்ணகி அம்மன்
3.சோமாலியர்கள்: தமிழர்களின் மூதாதையர்கள்
4.தமிழர்கள் தொலைத்த ஆப்பிரிக்கக் கடவுள்
5.கோயிலில் பாலியல் தொழில்
6.ஈராக்கில் தோன்றிய தமிழரின் நாகரீகம்
7.ஆடியில் உயிர்த்தெழுந்த, திராவிடர்களின் "கறுப்பு இயேசு!"
8.வேல் முருகன் குடியிருந்த பாக்தாத் நகரம்
9.சிரியாவில் தமிழுக்கு "தம்முழ்" என்றும் பெயர் !
10.கோபுரங்கள் கட்டுவது, ஆண்டவருக்கு விரோதமானது!
11.சிவபெருமான்: ஈராக்கை ஆண்ட கறுப்பின அரசன்?
12.அரபு நாட்டவர்க்கும் இறைவனான சிவனே போற்றி!
13.ஆதித் தமிழ் சகோதர இனம் வாழ்ந்த "அரபி கண்டம்"
14.அரேபியரும், தமிழரும் : சில கலாச்சார ஒற்றுமைகள்
15.கன்னி மரியாளின் மகனான, குறிஞ்சிக் கடவுள் "குழந்தை அல்லா"!
16.யார் இந்த ஆரியர்கள்?
17.தங்கமலை இரகசியம்: துருக்கியில் குடியேறிய ஐரோப்பிய மூதாதையர்
18.கற்பின் பெருமை கூறும் கிரேக்க புராணக் கதைகள்

*************************
  உசாத்துணை நூல்கள்:
1. From Babylon to Timbuktu, by Rudolph R.Windsor
2. Serpent of the Nile, Women and Dance in the Arab World, by Wendy Buonaventura
3. Myths, Dreams and Mysteries: The Encounter Between Contemporary Faiths and Archaic Realities, by Mircea Eliade
4. Myths of Babylonia and Assyria, by Donald A. Mackenzie
5. Mythology, by C. Scott Littleton
6. Babylon, De Echte Stad en de Mythe, by Tom Boily
7. Civilisation One, by Christopher Knight and Alan Butler
8. Persian Myths, by Vesta Sarkhosh Curtis
9. Precolonial Black Africa, by Cheikh Anta Diop
10. Black Arabia & The African Origin of Islam, by Dr. Wesley Muhammad
11. Kusha-Dwipa: The Kushites of Asia, by Dr. Clyde Winters
12. Lost Cities of China, Central Asia, & India, by David Hatcher Childress
13. The Mummies of Ürümchi, by Elizabeth Wayland Barber
14. Black Athena, by Martin Bernal
15. The Minoans, The World's Greatest Civilizations
16. Empires of the Silk Road, A History of Central Eurasia from the Bronze Age to the Present, by Christopher I. Beckwith
17. தொல்காப்பியத் தமிழர், சாமி. சிதம்பரனார்