Showing posts with label ஷரியா. Show all posts
Showing posts with label ஷரியா. Show all posts

Tuesday, February 04, 2020

ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி? - ஆறுமுகநாவலரின் சைவமத ஷரியா சட்டம்!

ம‌ல‌ங் க‌ழிப்ப‌து எப்ப‌டி?
ஆறுமுக‌நாவ‌லர், யாழ் சைவ‌ வெள்ளாள‌ருக்காக‌ எழுதிய‌‌ "சைவ மத ஷ‌ரியா ச‌ட்ட‌ம்"! சைவ‌ ச‌ம‌யிக‌ள் அனைவ‌ரும் ப‌டித்துப் ப‌ய‌ன் பெறுக‌.




ஆறுமுகநாவலர் எழுதிய சைவ வினாவிடை நூலில் இருந்து ஒரு பகுதி:

6. எந்தத் திக்குமுகமாக இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்?

பகலிலே வடக்கு முகமாகவும், இரவிலே தெற்கு முகமாகவும் இருந்து கொண்டு மலசலங் கழித்தல் வேண்டும்.

7. எப்படி இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்?

தலையயுங் காதுகளையும் வஸ்திரத்தினாலே சுற்றி, மூக்கு நுனியைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருந்து மலசலங் கழித்தல் வேண்டும்.

சௌசம்

8. மலசலங் கழித்தவுடன் யாது செய்தல் வேண்டும்?

எழுந்து, சலக்கரையை அடைந்து, சலத்துடன் ஒரு சாணுக்கு இப்பால் இருந்து கொண்டு சௌசஞ் செய்தல் வேண்டும்.

9. சௌசம் எப்படி செய்தல் வேண்டும்?

மண்ணுஞ் சலமும் கொண்டு, இடக்கையினாலே குறியில் ஒரு தரமும், குதத்தில் ஐந்து தரதிற்கு மேலும், இடக்கையை இடையிடயே ஒருதரமும், பின்னும் இடக்கையை பத்துத் தரமும், இரண்டு கையையுஞ் சேர்த்து ஏழு தரமுஞ் சுத்தி செய்து, சகனத்தைத் துடைத்து கால்களை முழங்கால் வரையும், கைகளை முழங்கை வரையும் ஒவ்வொரு தரங் கழுவுதல் வேண்டும்.

(ஆதார‌ம்: சைவ‌ வினா விடை)

Monday, February 19, 2018

ஸ்டாலின் பற்றி பலர் அறிந்திராத தகவல்கள்


எதற்காக எல்லோரும் ஸ்டாலினை "சர்வாதிகாரி" என்று சொல்கிறார்கள்? ஸ்டாலின் கால சோவியத் ஒன்றியத்தில், மாஸ்கோ மக்கள் மத்தியில் பிரபலமாக பேசப் பட்ட உண்மைக் கதை இது:

ஸ்டாலினின் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்த ஒருவர், பொது மக்களின் பணத்தை சுருட்டி வந்தார். அந்தப் பணத்தில், மாஸ்கோ நகருக்கு வெளியே ஆடம்பரமான பங்களா வீடொன்றை கட்டி வந்தார். வீடு கட்டி முடிந்ததும், ஸ்டாலின் அவரைத் தனது அலுவலகத்திற்கு அழைத்துப் பேசினார்.

"அமைச்சரே! உங்களுக்கு பிள்ளைகள் என்றால் விருப்பமா?"
"ஆமாம், எனக்குப் பிள்ளைகள் மீது கொள்ளைப் பிரியம் உள்ளது." என்றார் அமைச்சர் ஆர்வத்துடன்.
"நல்லது. அப்படி என்றால் நீங்கள் புதிதாக கட்டிய அந்தப் பெரிய வீட்டை, சிறுவர் பராமரிப்பு இல்லத்திற்கு தானமாக கொடுத்து விடுங்களேன்?" என்றார் ஸ்டாலின் அமைதியாக. 
(நன்றி: The Red Executive, by David Granick (1960))

ஸ்டாலின் கால சோவியத் யூனியன், இன்றைய அமெரிக்கா, மேற்கு ஐரோப்பிய நாடுகளை விட பல மடங்கு முற்போக்கானதாக இருந்துள்ளது. தனி நபர் சுதந்திரத்தை மதிப்பதில் சிறந்து விளங்கியது. இந்த 21 ம் நூற்றாண்டிலும், மேற்குலகம் அதை எட்டிப் பிடிக்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கின்றன.

1920 ம் ஆண்டில், ரஷ்யாவின் முஸ்லிம் பிரஜைகள் விரும்பினால் ஷரியா சட்டம் வைத்திருப்பதற்கு, ஸ்டாலின் அனுமதி வழங்கி இருந்தார். இன்று மேற்குலக "ஜனநாயக நாடுகள்" செய்வதைப் போன்று, ஷரியா நடைமுறைப் படுத்தக் கேட்டவர்கள் மீது குண்டு போடவில்லை. தாராள மனதுடன் நடந்து கொண்டார்.

அதன் அர்த்தம், ஷரியா சட்டத்தின் பிற்போக்குத் தனங்களை எல்லாம், ஸ்டாலின் ஏற்றுக் கொண்டார் என்பதல்ல. ஸ்டாலின் ஒரு பக்கம், பாரம்பரிய சம்பிரதாயங்களுக்கு மதிப்புக் கொடுத்த போதிலும், மறுபக்கம் நவீன கல்வி புகட்டுவதன் மூலம் அந்த மக்களின் சிந்தனைப் போக்கை மாற்றியமைக்க திட்டமிட்டார்.

அதனால், காலப்போக்கில் சோவியத் முஸ்லிம்கள் தாமாகவே ஷரியாவை கைவிட்டு விட்டு, நவீன உலகிற்கு ஏற்றவாறு தம்மை மாற்றிக் கொண்டார்கள். கல்வியறிவு பெற்ற மக்கள் பழமைவாதத்தில் இருந்து தம்மைதாமே விடுவித்துக் கொண்டார்கள். மேலும், பெண்களுக்கும் சம உரிமை கிடைத்த படியால், கணவனின் வன்முறைக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவும், உடலை மூடும் மேலங்கியை எடுப்பதற்கான உரிமை கோரவும் முடிந்தது.

இன்றைக்கும் "சுதந்திரம், ஜனநாயகம்" பேசும் மேற்கத்திய நாடுகளில், ஷரியா சட்டம் விவாதத்திற்கு அப்பாற்பட்ட விடயமாக கருதப் படுகின்றது. பல இலட்சக் கணக்கில் முஸ்லிம் பிரஜைகளை கொண்டுள்ள நாடுகள் கூட, "ஷரியா என்றாலே தீவிரவாதம்" என்று, தமது மக்களுக்கு தவறான விளக்கம் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.

இதிலே வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியன் தோன்றிய காலத்தில், அங்கே ஷரியா சட்டம் தடை செய்யப் பட்டதாக மேற்குலகில் பிரச்சாரம் செய்யப் பட்டது. ரஷ்யாவின் டாகெஸ்தான் மாநிலத்திற்கான சுயாட்சி வழங்குவது பற்றிய பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய ஸ்டாலின் பின்வருமாறு தெரிவித்தார்:

"டாகெஸ்தான் பிரதேசத்திற்கு உரிய தனித்துவமான கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் அரசாட்சி நடக்க வேண்டும். டாகெஸ்தான் மக்களுக்கு ஷரியா சட்டம் முக்கியமானது என்று எமக்குக் கூறப் பட்டது. நாம் ரஷ்யாவில் ஷரியாவை தடை செய்து விட்டதாக, சோவியத்தின் எதிரிகள் வதந்திகள் பரப்பித் திரிவதையும் நாம் அறிவோம். அந்த வதந்திகள் பொய்யானவை. ரஷ்ய அரசு தனது மக்கள் ஒவ்வொருவரும் தமக்குரிய சட்டங்கள், மரபுகளின் அடிப்படையில் ஆள்வதற்கான முழு உரிமையும் கொடுக்கிறது. ஷரியா ஒரு பொதுவான சட்டம் என்பதை சோவியத் ஏற்றுக் கொள்கின்றது. டாகெஸ்தான் மக்கள் தமது சட்டங்களையும், மரபுகளையும் தொடர்ந்தும் வைத்திருக்க விரும்பினால், அவற்றை அப்படியே விட வேண்டும்."

ஸ்டாலினின் முழுமையான உரையை வாசிப்பதற்கு: 
Congress of the Peoples of Daghestan
https://www.marxists.org/reference/archive/stalin/works/1920/11/13.ht

"நான் இறந்த பிறகு, எனது சமாதியின் மேல் குப்பைகளை வாரிக் கொட்டுவார்கள் என்பது எனக்குத் தெரியும். ஆனால், வரலாறு எனும் காற்று அவற்றையெல்லாம் கூட்டித் தள்ளி விடும்." - ஸ்டாலின்


Friday, April 03, 2009

ஷரியா: ஏழைகளுக்கான மலிவு விலை சட்டம்

பாகிஸ்தான், சுவாட் மாகாணத்தில் ஷரியா சட்டம் அமுலுக்கு வந்துள்ளது. இது உள் நாட்டிலும் வெளிநாடுகளிலும் அதிர்ச்சியை தோற்றுவித்துள்ளது. பாகிஸ்தான் அரசு தாலிபான் பயங்கரவாத மிரட்டலுக்கு அடிபணிந்து விட்டது என்றும், பிற இஸ்லாமிய மத அடிப்படைவாத சக்திகளை ஊக்குவிக்கும் என்றும் கருத்துகள் தெரிவிக்கப்படுகின்றன. அமெரிக்கா கூட எத்தனை வருடம் சென்றாலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடி அழிக்க வேண்டுமே தவிர, விட்டுக் கொடுக்க கூடாது என்று ஆலோசனை கூறுகின்றது. இதற்கெல்லாம் அப்பால் சுவாட் மாகாணம் ஷரியா சட்டத்திற்காக நீண்ட போராட்டம் நடத்தியுள்ளது. அந்தப் பிரதேச மக்களுக்கு எதற்காக ஷரியா மீது அவ்வளவு மோகம்?

ஒன்றரை வருடங்களுக்கு முன்னர், சுவாட் பள்ளத்தாக்கு பிரதேசத்தில், பாகிஸ்தான் இராணுவம் தனது "பயங்கரவாத எதிர்ப்புப் போரில்" ஈடுபட்டிருந்தது. ஆயிரக்கணக்கான மக்கள் மடிந்து, வீடுகளை துறந்து ஓட வைத்த அந்தப் போரில், பாகிஸ்தான் இராணுவத்தால் வெற்றி பெற முடியவில்லை. இறுதியில் தீவிரவாதிகளுடன் சமாதான ஒப்பந்தம் போட்டது. ஒப்பந்தப்படி அவர்களின் கோரிக்கையான ஷரியா என்ற இஸ்லாமிய சட்டத்தை அமுல் படுத்த ஒப்புக் கொண்டது. இந்த ஒப்பந்தம் நடைமுறைக்கு வருவதற்கு, பத்தாண்டுகளுக்கு முன்னர் ஷரியாவுக்காக ஆயுதப் போராட்டத்திற்கு தலைமை தாங்கி, தற்போது சிறையில் இருக்கும் சூபி மொகமட்டின் மத்தியஸ்தம் பெறப்பட்டது. ஷரியாவுக்கான அரசியல் இயக்கம், சூபி முகமட்டின் சிந்தனையில் உதித்து, தற்போது செயல்வடிவம் பெற்றுள்ளது.

பழங்குடியின மக்கள் வாழும் சுவாட் பள்ளத்தாக்கு மாகாணம், 1969 ம் ஆண்டு வரை, "வாலி" என்றழைக்கப்பட்ட ஆட்சியாளரால் நிர்வகிக்கப்பட்டு வந்தது. மத அடிப்படையில் அமைந்த பாரம்பரிய சட்டங்கள் மக்களுக்கு துரிதகதியில் நீதி வழங்கி வந்ததன. வசதியற்ற விவசாயக் கிராம மக்களுக்கு, தமது தகராறுகளுக்கு மலிவு விலையில் நீதி கிடைத்து வந்தது. ஆனால் 1969 ல் பாகிஸ்தான் அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்த சுவாட் பள்ளத்தாக்கில், மேற்கத்திய சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. பாகிஸ்தானில், இந்தியாவில், இலங்கையில் பிரிட்டிஷார் அறிமுகப்படுத்திய சட்டங்களே, சில திருத்தங்களுடன் இன்றும் பின்பற்றப்படுகின்றது. சட்டம் மட்டுமல்ல, நீதி மன்றம், பொலிஸ் போன்ற நிறுவனங்களும் பிரிட்டிஷார் விட்டுச் சென்ற சொத்துகள் தான். ஆனால் இந்த பிரிட்டிஷ் கால நிறுவனங்கள் மீது, சுவாட் பழங்குடியின மக்களுக்கு திருப்தி இருக்கவில்லை. ஒரு சிறிய பிரச்சினைக்கும் வக்கீலை பிடிக்க ஆகும் செலவு, பெரும் பணச் செலவுக்குப் பின்னரும் வருடக்கணக்காக தாமதமாகும் நீதி என்பன, சுவாட் மக்களுக்கு பாகிஸ்தானிய நீதித் துறை மீது அளவு கடந்த வெறுப்பை ஏற்படுத்தி இருந்தது.

இந்தியாவில் அல்லது இலங்கையில் வாழ்பவர்களுக்கு, பாகிஸ்தான் நிலைமையை விரிவாக விளக்கத் தேவையில்லை. சாதாரண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் எங்கேயும் ஒன்று தான். ஆனால் நூறாண்டுகளுக்கு மேலாக காலனிய ஆட்சியின் கீழ் வாழ்ந்த எமக்கு, அதுவே வாழ்க்கையாக மாறி விட்டது. ஆங்கிலேய நெறிகளை
எமது கலாச்சாரமாக உள்வாங்கிக் கொண்டோம். பெரும்பான்மை பாகிஸ்தானிய மக்களும் அப்படித்தான். ஆனால் ஆப்கானிஸ்தானின் எல்லையோர மாகாணங்கள் மாத்திரம் இதிலே விதிவிலக்கு. காலனிய கால ஆப்கானிஸ்தான் போரில் கைப்பற்றிய அந்தப் பகுதிகள் ஆங்கிலேயரால் ஆக்கிரமிக்கப் பட்டிருந்தன. இருப்பினும் பழங்குடியினரின் பழக்கவழக்கங்களில், உள்ளூர் நிர்வாகத்தில் அவர்கள் தலையிடவில்லை. இன்றைய பாகிஸ்தானிய அரசு தான், அதுவும் அண்மைக் காலத்தில் தான், அங்கே காலனிய நிர்வாக முறையை அறிமுகப்படுத்தியது. இந்த வேடிக்கையான வரலாற்று நாடகம், சுவாட் பள்ளத்தாக்கில் பலத்த எதிர்ப்பிற்கு மத்தியில் தான் அரங்கேறியது.

சுவாட் மாகாணத்திற்கு வடக்கே, "டிர்" என்ற இன்னொரு பழங்குடியின நகரம் உள்ளது. என்பதுகளில் ஆப்கான் ஜிகாதிகளை உருவாக்கிய, மதராசா ஒன்றில் பயின்றவர் தான் சூபி முஹமது. ஆரம்பத்தில் ஜமாத்-எ-இஸ்லாமி என்ற மதவாத அரசியல் கட்சியில் இணைந்து, பின்னர் பிரபல உள்ளூர் தலைவராக உருவெடுத்தார். ஆனால் வெறும் மேடைப் பேச்சுகளில் மட்டுமே வாக்குறுதிகளை அள்ளி வழங்கும் அரசியல், சூபி முஹமட்டிற்கு சலிப்பை தந்தது. கட்சி அரசியலில் வெறுப்புற்ற வேறு சில தோழர்களுடன் இணைந்து, 1992 ல் "ஷரியாவுக்கான இயக்கம்" (TNSM) ஸ்தாபித்தார். அவர்களது இயக்கத்தின் செயல் தளமாக, சுவாட் பள்ளத் தாக்கி தெரிவு செய்தது தற்செயலானதல்ல. ஆப்கானிஸ்தானுக்கும், காஷ்மீருக்கும் நடுவில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த மலைப்பகுதி கெரில்லா யுத்தத்திற்கு பொருத்தமான இடமாகும்.

1994 ம் ஆண்டு, முஹமட்டும் அவரது போராளிகளும் தொடுத்த வெற்றிகரமான திடீர் தாக்குதலில், உள்ளூர் விமான நிலையத்தையும் பிற கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் கைப்பற்றினர். அரசை தமது கோரிக்கைக்கு அடிபணிய வைத்தனர். ஷரியா சட்டம் கொண்டு வர அரசு சம்மதித்தது. ஆனால் நடைமுறையில் அங்கே எதுவும் மாறவில்லை. சில நீதிபதிகள் மட்டும் மாற்றப்பட்டனர். அப்போதும் நீதி அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பொருளாக இருந்தது. சட்டம் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே இருந்தது. முஹமட்டின் போராளிகள் "மீண்டும் ஆயுதங்களை தூக்குவோம்" என சூளுரைத்தனர். இதே நேரம் 2001 ம் ஆண்டு, ஆப்கானிஸ்தான் மீது அமெரிக்கா படையெடுத்தது. அமெரிக்கருடன் போரிட ஆப்கானிஸ்தானுக்குள் சென்ற முஹமட்டும், சில போராளிகளும் அங்கே வைத்து கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.

அத்துடன் கதை முடியவில்லை. சூபி முஹமட்டின் மருமகன் மவ்லானா பஸ்லுல்லா தலைமையில் புதிய தலைமுறை போராளிகள் தோன்றினர். ஆயுதப் போராட்டத்துடன், அரசியல் பிரச்சாரத்திலும் கவனம் செலுத்தினர். "முல்லா வானொலி" மக்கள் மத்தியில் இயக்கத்தின் கருத்துகளை கொண்டு செல்வதில் முதன்மைப் பாத்திரம் ஏற்றிருந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய போர் அவர்களின் பிரச்சாரத்திற்கு உந்துசக்தியாக இருந்தது. "அயல் நாட்டு முஸ்லிம்களை இன அழிப்பு செய்யும் அமெரிக்கர்கள், எப்படி எமது நாட்டு நலன்விரும்பிகளாக இருக்கலாம்?" என்ற பரப்புரைகள், மக்கள் மத்தியில் இலகுவில் எடுபட்டன. "சுவாட் மக்கள் இஸ்லாமிய நெறிமுறைக்கு ஏற்ப வாழ்ந்தாலே, அமெரிக்க அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்" என்று தீர்வையும் சொல்லிக் கொடுத்தனர். பெண்பிள்ளைகள் பாடசாலை செல்லக்கூடாது என்ற கோரிக்கை, பெருமளவு பெண்களிடம் கூட எடுபட்டது. மவ்லானா இஸ்லாமியப் பாடசாலை கட்டுவதற்கு நிதி கோரிய போது, பல பெண்கள் தமது நகைகளை கழற்றிக் கொடுத்தமை குறிப்பிடத் தக்கது.

அப்போது சுவாட் மாகாணத்தில் நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற மிதவாத இஸ்லாமியக் கட்சி ஆட்சியில் இருந்தது. அவர்களைப் பொறுத்த வரை, மவ்லானா குழுவினர் "தீவிரவாதிகள்". ஆகவே 2007 ம் ஆண்டு, தீவிரவாதிகளை ஒழித்துக் கட்டுமாறு இராணுவத்தை ஏவி விட்டனர். ஒரு சிறிய பயங்கரவாதக் குழுவை, பெரிய படை கொண்டு அடக்கி விடலாம் என்று தான் பாகிஸ்தானிய இராணுவம் எதிர்பார்த்தது. ஆனால் நடந்ததோ வேறு. கெரில்லாக்களின் தாக்குதல்களுக்கு இராணுவம் முகம் கொடுக்க முடியாது தடுமாறியது. பாடசாலைகள் உட்பட அரச கட்டிடங்கள் எல்லாம் குண்டுத் தாக்குதல்களுக்கு உள்ளாகின. சந்தைகளிலும், வீதிகளிலும் காணப்பட்ட பெண்கள் விரட்டப்பட்டனர். தீவிரவாதிகளை காட்டிக் கொடுப்போரும், எதிர்ப்போரும் பகிரங்கமாக தூக்கிலடப்பட்டனர்.

சமாதான ஒப்பந்தத்திற்குப் பின்னர், தற்போது அமைதி திரும்பி விட்டது. ஷரியா சட்டம் பூரணமாக நடைமுறைப்படுத்தப் பட்டதால் பெரும்பான்மை மக்களுக்கும் திருப்தி தான். ஆனால் சுவாட் மாகாணத்தில் ஆயுதமேந்திய போராளிகளின் ஆட்சி நடக்கின்றது. பாகிஸ்தான் அரச காரியாலயங்கள், நீதி மன்றங்கள், பொலிஸ் நிலையங்கள், எதுவும் இயங்குவதில்லை. இராணுவம் சண்டையிட முடியாமல் பின்வாங்கி விட்டது. சுவாட்டில் நடந்தது ஒரு வகை வர்க்கப் போராட்டம். "ஷரியாவுக்கான இயக்கம்", வறிய மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தது. ஊழல் ஆட்சிக்கு உறுதுணையாக நின்ற நிலப்பிரபுக்களை எதிரியாகப் பார்த்தது, பலர் கொல்லப்பட்டனர். பெருமளவு ஏழை விவசாயிகள், வேலையற்ற இளைஞர்கள், சிறு குற்றங்கள் புரிந்தோர், ஆகிய அடித்தட்டு மக்கள் அந்த இயக்கத்தில் போராளிகளாக சேர்ந்திருந்தனர். எப்போதும் வறிய மக்களுக்கு மத நம்பிக்கை அதிகம். தமது கஷ்டங்களுக்கு விடிவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தான் ஆண்டவனிடம் சரணடைகின்றனர். எனவே "ஷரியா என்ற இஸ்லாமிய சட்டம்", ஏழைகளுக்கு துரிதகதி நீதி வழங்கும், மலிவுவிலை சட்டமாக இருக்கும் என்றால் யார் தான் ஆதரவளிக்க மாட்டார்கள்?
Taliban in control of Pakistan's Swat Valley - 02 Feb 09



பாகிஸ்தான் தொடர்பான முன்னைய பதிவுகள்:

பாகிஸ்தானில் மதவாத அரசியல் கட்சிகளின் வளர்ச்சி
இஸ்லாமாபாத்தின் இயலாமையும், இஸ்லாமிய இயக்கவியலும்
பாகிஸ்தானில் எல்லை கடந்த ஏகாதிபத்தியவாதம்