Showing posts with label கிம் இல் சுங். Show all posts
Showing posts with label கிம் இல் சுங். Show all posts

Sunday, July 02, 2017

வட கொரியாவில் பொருளாதாரம் வளர்கிறது! மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்கிறது!!


"வ‌ட‌ கொரிய‌ர்க‌ள் ப‌ட்டினி கிட‌க்கிறார்க‌ள்... புல்லைச் சாப்பிடுகிறார்க‌ள்" என்று வாய் கூசாம‌ல் புளுகிய‌ ப‌ன்னாடைக‌ளைக் க‌ண்டால் இதைத் தெரிவியுங்க‌ள்:

பொருளாதார‌த் த‌டைக‌ளுக்கு ம‌த்தியிலும் வட‌ கொரிய‌ பொருளாதார‌ம் வ‌ள‌ர்ந்து கொண்டிருப்ப‌தாக‌வும், ம‌க்க‌ளிட‌ம் தாராள‌மான‌ ப‌ண‌ப் புழ‌க்க‌ம் அதிக‌ரித்துள்ள‌தாக‌வும், நெத‌ர்லாந்து ப‌த்திரிகையான‌ NRC Handelsblad (1-7-17) த‌கவ‌ல் தெரிவித்துள்ள‌து.

பியாங்கியாங் ந‌க‌ரில் வ‌ருடாந்த‌ம் ந‌ட‌க்கும் ச‌ர்வ‌தேச‌ வ‌ர்த்த‌க‌ ச‌ந்தையில் ட‌ச்சு வ‌ணிக‌ர்க‌ளும் க‌டை போட்டிருக்கிறார்க‌ள். அவ‌ர்க‌ளுட‌ன் சென்ற‌ செய்தியாள‌ர் தெரிவித்த‌ விப‌ர‌ங்க‌ள்:

ச‌ந்தையில் பெரும‌ள‌வு சீன‌ வியாபாரிக‌ளை காண‌க் கூடிய‌தாக‌ உள்ள‌து. அடுத்த‌ இட‌த்தில் ஈரானிய‌ர்க‌ள் அதிக‌ம். இந்த‌ இரு நாடுக‌ளும் வ‌ட‌ கொரியாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பால் அதிக‌ ஆதாய‌ம் பெறுகின்ற‌ன‌. வ‌ருடாவ‌ருட‌ம் க‌ண்காட்சி போன்று ந‌ட‌க்கும் ச‌ந்தையில், சாதார‌ண‌ வீட்டுப் பாவ‌னைப் பொருட்க‌ள் ம‌ட்டும‌ல்லாது, கார் கூட‌ விற்ப‌னையாகிற‌து.

அங்கு வ‌ரும் வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்கள் ம‌ருந்துக‌ள், மின்ன‌ணு உப‌க‌ர‌ண‌ங்க‌ள், என்று ப‌ல‌ பாவ‌னைப் பொருட்க‌ளை பெட்டி பெட்டியாக‌ வாங்கிச் செல்கின்ற‌ன‌ர். ஒவ்வொரு வ‌ருட‌மும் விற்ப‌னை கூடிக் கொண்டு செல்வ‌தாக‌ வ‌ர்த்த‌க‌ர்க‌ள் தெரிவித்த‌ன‌ர்.

"என‌து நிறுவ‌ன‌த்திற்கு இலாப‌ம் வ‌ர‌வில்லை என்றால், என்னை எத‌ற்கு வ‌ட‌ கொரியாவுக்கு அனுப்ப‌ப் போகிறார்க‌ள்?" என்று ஒரு சீன‌ விற்ப‌னையாள‌ர் கேட்டார். "தான் முத‌ல் த‌ட‌வையாக,‌ க‌ட‌ந்த‌ வ‌ருட‌ம் வ‌ந்த‌ நேர‌ம், இந்த‌ள‌வு வியாபார‌ம் ந‌ட‌க்கும் என்று நினைத்திருக்க‌வில்லை" என்று ஓர் ஈரானிய‌ர் கூறினார்.

வ‌ட‌ கொரிய‌ வாடிக்கையாள‌ர்க‌ள் கைக‌ளில் அமெரிக்க‌ டால‌ர், சீன‌ ரென்மினி போன்ற‌ ச‌ர்வ‌தேச‌ நாண‌ய‌ங்க‌ள் தாராள‌மாக‌ப் புழ‌ங்குகின்ற‌ன‌. அந்த‌ ச‌ந்தையில் பொருட்க‌ளை வாங்குவ‌த‌ற்கு அந்நிய‌ செலாவ‌ணி அவ‌சிய‌ம். அங்கு யாருமே வ‌ட‌ கொரிய‌ நாண‌ய‌ம் கொடுத்து வாங்க‌வில்லை.

பொருளாதார‌த் த‌டைக‌ளால் நாற்புற‌மும் மூட‌ப் ப‌ட்டுள்ள‌ வ‌ட‌ கொரியாவுக்குள், அந்நிய‌ நாண‌ய‌ங்க‌ள் செல்வ‌து எப்ப‌டி என்ப‌து ஒரு புரியாத‌ புதிர். சீனாவுட‌னான‌ வ‌ர்த்த‌க‌த் தொட‌ர்பு ம‌ட்டும் கார‌ணம் அல்ல‌. ஏராள‌மான‌ வ‌ட‌ கொரிய‌ர்க‌ள், ர‌ஷ்யா, சீனா, ம‌ற்றும் ஐரோப்பிய‌ நாடுக‌ளில் வேலை செய்து ப‌ண‌ம் அனுப்புகிறார்க‌ள். அத்துட‌ன் க‌ட‌த்த‌லும் தாராள‌மாக‌ ந‌ட‌க்கிற‌து.

வ‌ட‌ கொரியாவின் பொருளாதார‌ வ‌ள‌ர்ச்சி கார‌ண‌மாக‌, 2011 ம் ஆண்டில் இருந்து வட‌ கொரிய‌ உழைப்பாளிக‌ளின் ச‌ம்ப‌ள‌ம் வ‌ருட‌த்திற்கு 2% கூடிக் கொண்டிருக்கிற‌து. வீட்டு வாட‌கை இல்லை. கல்வி, மருத்துவ செலவு இலவசம். எரிபொருள், போக்குவ‌ர‌த்து செல‌வும் மிக‌க் குறைவு. இத‌னால் சராசரி வட கொரியரின் கையில் மிஞ்சும் ப‌ண‌மும் கூடியுள்ள‌து.

அண்மைக் கால‌த்தில் வ‌ட‌ கொரிய‌ பொருளாதார‌த்தில் கொண்டு வ‌ர‌ப் ப‌ட்ட‌ சீர்திருத்த‌ங்க‌ளும் அத‌ன் வ‌ள‌ர்ச்சிக்கு கார‌ண‌ம். தென்கொரிய‌ பொருளிய‌ல் நிபுண‌ர்க‌ளே இதை உறுதிப் ப‌டுத்தி உள்ள‌ன‌ர்.

தென் அமெரிக்க மத்திய வங்கியின் கணிப்பின் படி, வட கொரியாவின் பொருளாதார வளர்ச்சி வருடத்திற்கு 1,5 முதல் 3 சதவீதமாக இருக்கலாம். கடந்த ஐந்து வருடங்களில், வட கொரியர்களின் வருடாந்த சம்பளம் 1.000 இலிருந்து 1.500 அமெரிக்க டாலர்களாக அதிகரித்துள்ளது.

பெருமளவு வர்த்தகம் சீனாவுடன் நடக்கிறது என்பது வெள்ளிடைமலை. சந்தையில் நவீன சீன வாகனங்கள் காட்சிக்கு வைக்கப் பட்டுள்ளன. வட கொரிய தெருக்களில் சீன வாகனங்களே போக்குவரத்தில் ஈடுபடுகின்றன. நாட்டில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் சீன இயந்திரங்களே வேலை செய்கின்றன.

சீனாவுடனான மொத்த வர்த்தகம், 1995 ம் ஆண்டு அரை பில்லியன் டாலர் அளவில் இருந்தது. 2016 ம் ஆண்டு அது 5,5 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது. இவை சீன சுங்கத்துறை, மற்றும் உலக வர்த்தக கழகம் ஆகியவற்றில் இருந்து எடுத்த தகவல்கள். சீனாவுக்கும், தென் கொரியாவுக்கும் இடையிலான வர்த்தகத்துடன் (44 பில்லியன் டாலர்) ஒப்பிடும் பொழுது அது ஒன்றுமே இல்லை. இருப்பினும் அந்தத் தொகையானது வட கொரிய மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு போதுமானதாக இருந்தது.

சோவியத் யூனியனின் வீழ்ச்சிக்குப் பின்னர், தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி மறைந்து கொண்டிருக்கிறது. உழவர்கள் வயல்களில் மாடு கட்டி உழுவதும், கையால் உபகரணங்களை பாவிப்பதும், இன்னமும் சில இடங்களில் உள்ளது. ஆனால், நகரங்கள் மட்டுமல்லாது, கிராமங்களும் விரைவாக நவீனமயமாகிக் கொண்டிருக்கின்றன. வொன்சான் போகும் வழி நெடுகிலும், கூரையில் சூரிய ஒளிக் கலங்களுடன், புதிய கல்வீடுகள் கட்டப்படும் காட்சியைக் காணலாம்.

வட கொரிய பொருளியல் நிபுணர்களுடன் பேசினால், இப்போதும் அவர்கள் "தேசியத் தலைவர்" கிம் இல் சுங் பெயரைக் குறிப்பிட்டுப் பேசத் தயங்குவதில்லை. தன்னிறைவுப் பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்ட, கிம் இல் சுங் உருவாக்கிய ஜூச்சே சித்தாந்தம் தற்போதும் நடைமுறையில் இருப்பதாக அரசு சொல்லிக் கொள்கிறது. இருப்பினும், வட கொரியப் பொருளாதாரம் பெருமளவு சீனாவில் தங்கியுள்ளது. எண்ணை கூட சீனாவில் இருந்து தான் வருகின்றது.

சீனாவில் தங்கியிருப்பதானது, ஒரு பக்கத்தில் வரப்பிரசாதமாகவும், மறுபக்கத்தில் பெரும் ஆபத்தாகவும் கருதப் படுகின்றது. அண்மையில், சீன பெற்றோலிய நிறுவனம், இன்னமும் கட்ட வேண்டிய பணம் பாக்கி இருப்பதாக கூறி, வட கொரியாவுக்கான எண்ணை விநியோகத்தை துண்டித்தது. 

அமெரிக்காவின் அழுத்தம் காரணமாக சீனா அவ்வாறு நடந்து கொண்டது என்று வட கொரிய அரசு குற்றம் சாட்டுகின்றது. அணுவாயுத ஏவுகணைத் திட்டத்தை கைவிடச் சொல்லியே அந்த அழுத்தம் பிரயோகிக்கப் பட்டுள்ளது. இருப்பினும், தம்மைத் தலைநிமிர வைத்த அணுவாயுத திட்டத்தை கைவிடுவதற்கு வட கொரியர்கள் தயாராக இல்லை.

Sunday, March 12, 2017

புதிய தலைமுறை டிவியில் வட கொரிய புளுகுகள் (வயது வந்தோருக்கு மட்டும்)

வட கொரியா பற்றி எத்தகைய கட்டுக்கதைகளையும் பரப்பலாம். அதை நம்புவதற்கும் ஆட்கள் உள்ளனர். சில வருடங்களுக்கு முன்னர், சண் டிவி இல் "மர்ம தேசம்" என்று ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பினார்கள். தற்போது, புதிய தலைமுறை தொலைக்காட்சியில் "கிம் தேசம்" என்ற இன்னொரு நிகழ்ச்சியில் வட கொரியா பற்றிய புளுகுகளை ஒளிபரப்பியுள்ளனர். (நிகழ்ச்சியை இந்த இணைப்பில் பார்க்கலாம்:கிம் தேசம்)

"அம்மா தேசத்தில்" இருந்து ஒளிபரப்பான, புதிய தலைமுறை தொலைக்காட்சியின் "கிம் தேசம்" காமெடி நிகழ்ச்சியில் சொல்லப் பட்ட நகைச்சுவை துணுக்குகள் இவை தாம்:

புளுகு 1: 
//அதிபர் கடவுளுக்கு நிகரானவர்!!!// 
வட கொரியாவின் ஸ்தாபகர் என்று கருதப்படும் கிம் இல் சுங், "ஜூச்சே தத்துவம்" என்ற பெயரில் தேசிய சித்தாந்தம் ஒன்றை எழுதியுள்ளார். இன்றைக்கும் அது அங்கே கட்டாய பாடமாக படிக்கப் படுகின்றது. இயற்கையில் மனிதன் தான் எல்லா உயிரினங்களையும் விட சிறந்தவன் என்பது அடிப்படைக் கொள்கை. அந்த வகையில் கடவுள் என்ற கோட்பாட்டுக்கே அங்கே இடமில்லை. அதனால் யாரும் அங்கே அதிபரை கடவுளுக்கு நிகராக கருதப் போவதில்லை.

இதற்கு மாறாக, புதிய தலைமுறை தொலைக்காட்சி ஒளிபரப்பாகும் அம்மா தேசத்தில் (தமிழ் நாடு), முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடவுளுக்கு நிகரானவராக கருதப் பட்டார். ஒரு தடவை சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றங்கள் நிரூபிக்கப் பட்டதால், பெங்களூர் நீதிமன்றம் ஜெயலலிதாவை சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உடனே, தமிழ் நாடு முழுவதும் "கடவுளை தண்டிக்கலாமா?" என்று சுவரொட்டிகள் முளைத்தன. ஆகையினால், அம்மா தேசம் மாதிரித் தான் கிம் தேசம் இருக்கும் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நினைப்பதில் ஆச்சரியமில்லை. பழக்கதோஷத்தில் அப்படி சொல்லி விட்டார்கள்.

புளுகு 2: 
//வட கொரியா தான் உலகை ஆள்வதாக அங்குள்ள மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்!//  
இது உண்மைக்கு புறம்பான பொய்ப் பிரச்சாரம். உலகம் முழுவதும் தங்களை ஒடுக்குவதாக வட கொரிய மக்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று சொல்லலாம். நாங்கள் எல்லோரும் கவனிக்காமல் விடுகின்ற, மிக  முக்கியமான தவறு ஒன்றுள்ளது. இன்றைக்கும் வட கொரியா அமெரிக்காவுடன் யுத்தத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது! இது மிகைப் படுத்தல் அல்ல. உண்மையான நிலவரம் அது தான். 

அதாவது, ஐம்பதுகளில் நடந்த கொரிய யுத்தம் இன்னும் முடியவில்லை. அன்று ஏற்பட்ட யுத்த நிறுத்தம் இன்னமும் தொடர்கின்றது. யுத்த நிறுத்தம் என்றால், சமாதானம் என்று அர்த்தம் அல்ல. அந்த நிலைமையில், மீண்டும் அமெரிக்காவுடன் போர் வெடிக்குமா என்று கொரிய மக்கள் அஞ்சுவதில் தவறேதும் இல்லை. இன்னமும் யுத்தத்தின் மத்தியில் வாழும் மக்கள் எவ்வாறு தமது நாடு உலகை ஆள்வதாக நினைக்க முடியும்? இது போன்ற ஒரு நிகழ்ச்சியை தயாரிப்பதற்கு முன்னர், அந்த நாடு சம்பந்தமான வரலாற்றை ஆராய்ந்திருக்க வேண்டும். எழுந்தமானமாக பேசுவதற்குப் பெயர்: பிரச்சாரம்.

புளுகு 3: 
//படித்தவர்களுக்கும் ஒபாமா, டொனால்ட் டிரம்ப் யாரென்று தெரியாது!// 
இதுவும் ஒரு கலப்படமற்ற பொய். சிலநேரம், தமிழ் நாட்டில் படித்தவர்களை விட, வட கொரியாவில் படித்தவர்களுக்கு அதிக விடயங்கள் தெரிந்திருக்கலாம். குறிப்பாக, அமெரிக்க அரசியல் நிலவரம் அவர்களுக்கு தெரியாது என்று சொல்வது அபத்தமானது. ஏனென்றால், வட கொரியாவுக்கு எதிரான பொருளாதாரத் தடைகள் பற்றிய பேச்சு வரும் போதெல்லாம், தவிர்க்க முடியாமல் ஒபாமா, டிரம்ப் பற்றியும் பேச வேண்டி இருக்கும். 

"வட கொரியாவால் உலகிற்கு அச்சுறுத்தல்" என்று அமெரிக்க ஊடகங்கள் பிரச்சாரம் செய்கின்றன. அதற்கு பதிலாக, "அமெரிக்காவால் தமக்கு அச்சுறுத்தல்" என்று வட கொரிய ஊடகங்கள் பிரச்சாரம் செய்ய மாட்டாதா? இது பிரச்சாரம் என்றால் அதுவும் பிரச்சாரம் தான். இருப்பினும் இவை தலைப்புச் செய்தியாக இடம்பிடிப்பவை. இதைப் புரிந்து கொள்ள பொது அறிவு இருந்தால் போதும்.

புளுகு 4: 
//அதிபர் சிரித்தால் மக்களும் சிரிக்க வேண்டும், அதிபர் அழுதால் அழ வேண்டும்!// 
இது சிறு குழந்தைகளுக்கு சொல்லும் தேவதைக் கதை போலுள்ளது. புதிய தலைமுறை தொலைக்காட்சி தனது பார்வையாளர்களை குழந்தைகளாக கருதிக் கொண்டு அம்புலிமாமா கதை சொல்கின்றது. இதை எல்லாம் நம்புவதற்கும் சில வடி கட்டிய முட்டாள்கள் இருக்கிறார்கள் தானே? அதிபரின் முடியலங்காரத்தை பார்த்து, கொரிய ஆண்கள் முடி திருத்த வேண்டும் என்றும் மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள். அது ஒரு கட்டுக்கதை என்பதை, வட கொரியாவுக்கு சென்ற சுற்றுலாப் பயணிகள் நேரில் கண்டறிந்தனர்.

புளுகு 5: 
//அதிபர் இறந்து விட்டால் துணை நடிகர்களும் தோற்றுப் போகும் அளவிற்கு கதறிக் கதறி அழுவார்கள்.// 
கிம் இல் சுங் இறந்த நேரம் மக்கள் கதறிக் கதறி அழுதது உண்மை தான். அதற்குப் பிறகு அவரது மகன் கிம் ஜோங் இல் இறந்த நேரம் அப்படி நடக்கவில்லை. கிம் இல் சுங்கின் கதை வேறு. பல தசாப்த காலமாக ஜப்பானிய காலனிய ஆக்கிரமிப்பின் கீழ் இருந்த கொரிய தீபகற்பத்தை விடுதலை செய்ததில் கிம் இல் சுங்கின் பங்கு அளப்பெரியது.

சுருக்கமாக, இந்தியாவில் சுபாஷ் சந்திர போஸ் மாதிரி, தமிழர்களுக்கு பிரபாகரன் மாதிரி, கொரியர்களுக்கு கிம் இல் சுங் என்று வைத்துக் கொள்வோம். பிரபாகரன் இறந்ததை கேள்விப் பட்டு தமிழ் நாட்டில் கூட பலர் கதறிக் கதறி அழுதார்கள். அவர்கள் எல்லாம் துணை நடிகர்கள் அல்ல. அப்படிச் சொல்வது சாதாரண மனித உணர்வுகளை புண்படுத்துவதாகும். 

பிரபாகரனின் பிம்பம் மாதிரி, வட கொரியாவில் கிம் இல் சுங் பற்றிய பிம்பமும் உணர்ச்சிவசப் பட்ட மக்கள் குழுமத்தை ஏற்படுத்தி விட்டிருந்தது. வெளியில் இருப்பவர்களுக்கு அது புரிந்து கொள்ள முடியாத விடயம் தான். சாதாரண மக்களின் மனவுணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒதுங்கிக் கொள்வோமே?

புளுகு 6: 
//வட கொரியா உலகில் "ஆபத்தான நாடு", "கலகக் காரர்களின் நாடு" என்று வர்ணிக்கிறார்கள். இங்குள்ள மக்களுக்கு அதெல்லாம் "தெரியாது"!// 
இதற்குப் பதில் ஏற்கனவே சொல்லி விட்டேன். எதற்காக தமது ஜென்ம எதிரியான அமெரிக்காவின் பிரச்சாரங்களை வட கொரிய மக்கள் நம்ப வேண்டும்?

புளுகு 7: 
//ஒருவர் செய்தியாளராக ஆசைப் படுவதும், தோட்டக் காரராக வேலை செய்வதும் ஒன்று தான்!// 
தனது பார்வையாளர்கள் எல்லோரும் பாலர் வகுப்பு மாணவர்கள் என்று புதிய தலைமுறை தொலைக்காட்சி நிர்வாகம் நினைத்துக் கொள்கின்றது. இரண்டும் முற்றிலும் மாறுபட்ட தொழில்கள். வேறு பட்ட தொழிற்துறைகளை சேர்ந்தவை. தமிழ் நாட்டில் அந்தத் தொழில்களை செய்பவர்கள் எப்படி இருக்கிறார்களோ, அதே மாதிரித் தான் வட கொரியாவிலும் இருப்பார்கள். உலகம் முழுவதும் அப்படித் தான். நீங்க காமெடி தான் பண்றீங்க, அதுக்காக இப்படி எல்லாம் அபத்தமாக பேசுவீங்களா?

புளுகு 8: 
//வட கொரியாவில் என்ன நடக்கிறதென்பது யாருக்கும் தெரியாதாம்! அப்படி தெரிந்து கொள்ள முயன்றவர்கள் சிறைகளில் இருக்கிறார்களாம்.// 
ஒவ்வொரு வருடமும் ஆயிரக் கணக்கான உல்லாசப் பிரயாணிகள் வட கொரியா சென்று வருகிறார்கள். பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை சேர்ந்தவர்கள் தான். ஏனென்றால், சுற்றுலாத் துறை வேண்டுமென்றே அதிக பணம் அறவிடுகின்றது. விசா, ஹோட்டல் தங்கும் செலவு, உள்நாட்டு சுற்றுலா எல்லாவற்றுக்கும் அதிக பணம் வாங்குகிறார்கள். சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை குறைவாக வைத்திருப்பதற்காக இந்த ஏற்பாடு.

அதைத் தவிர, அங்கு சுதந்திர வர்த்தக வலையம் தசாப்த காலமாக இயங்குகின்றது. அதாவது, அந்நிய முதலீட்டாளர்கள் தொழிற்சாலைகளை அமைத்து வட கொரிய தொழிலாளர்களை கொண்டு உற்பத்தி செய்யலாம். பெரும்பாலும் தென் கொரிய முதலாளிகள் தான் அங்கே முதலிட்டுள்ளனர். இந்த விபரங்கள் தெரியா விட்டால் தேடிப் பார்த்து அறிந்து கொள்ளவும்.

புளுகு 9: 
//அரசுக்கு எதிராக துரோகம் இழைத்தால், அதிபர் மாமா, அத்தை என்றெல்லாம் பார்க்க மாட்டார். ராக்கட் லாஞ்சர் மூலம் உடனே கொன்று விடுவார்கள்!// 
உண்மையில், இந்த நிகழ்ச்சியை தயாரித்தவர் ஒரு நகைச்சுவை மன்னன் தான். ராக்கெட் லாஞ்சர் அடித்து கொன்று விடுவார்கள் என்று என்ன அழகாக கற்பனை செய்திருக்கிறார்! இன்றைய அதிபர் கிம் ஜோங் உண்ணிற்கு அடுத்த படியாக தலைமை மட்டத்தில் செல்வாக்குப் பெற்றிருந்த அவரது மாமன் கைது செய்யப் பட்டார். அவரை, சிறையில் நாய்களை ஏவி விட்டு கொன்றதாக மேற்குலகில் வதந்திகளை பரப்பினார்கள்.

சீனாவில் ஒரு இணைய ஆர்வலர் எழுதிய நம்பகத் தன்மை இல்லாத தகவலை, மேற்கத்திய ஊடகங்கள் அப்படியே நம்பி விட்டன என்பது பின்னர் தெரிய வந்தது. மேலும், துரோகியாக்கப் பட்ட மாமன் சீனாவின் பொருளாதாரக் கொள்கைகளை பின்பற்ற விரும்பியதாகவும், அதனாலேயே கைது செய்யப் பட்டதாகவும் மேலதிக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர் இப்போதும் சிறையில் இருக்கலாம், சித்திரவதை செய்யப் பட்டிருக்கலாம், மரண தண்டனையும் நிறைவேற்றப் பட்டிருக்கலாம். ஆனால், "ராக்கெட் லாஞ்சர் அடித்தார்கள்", "நாயை விட்டு கடிக்க செய்தனர்" போன்றவை ஆதாரமற்ற வதந்திகள்.

புளுகு 10: 
//கிம் இல் சுங் தொடங்கிய கொரிய தொழிலாளர் கட்சியில் "மார்க்சியம், லெனினிசம், ட்ராஸ்கிசம் என்று எல்லாக் கொள்கைகளும்" கொண்டுள்ளதாம்??? // 
அது வேறொன்றுமில்லை. திரும்பவும் பழக்கதோஷம். அம்மா தேசத்தில், அதிமுக என்ற கட்சியை எம்.ஜி.ஆர். தொடங்கியது மாதிரி என்று, அந்த புதிய தலைமுறை நிகழ்ச்சித் தொகுப்பாளர் நினைத்து விட்டார். எம்ஜிஆர் தொடங்கிய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தில் அண்ணாயிசம், பெரியாரிசம், தமிழிசம், ரவுடியிசம் என்று எல்லாக் கொள்கையும் கொண்டுள்ளதைப் போன்றது இதுவும் என்று நினைத்து விட்டார். பாவம், அவரது அறிவுக்கு எட்டிய வரையில் வட கொரியா பற்றிய நிகழ்ச்சியை தயாரித்திருக்கிறார்.

கொரிய தொழிலாளர் கட்சியை கிம் இல் சுங் தொடங்கவில்லை. அது பல தோழர்களின் தலைமையின் கீழ் ஏற்கனவே இயங்கிக் கொண்டிருந்தது. விடுதலைப் போராட்டம் நடந்து கொண்டிருந்த காலத்தில், கிம் இல் சுங் இராணுவப் பிரிவின் தலைமையில் இருந்தார். வட கொரியா ஸ்தாபிக்கப் பட்டதும், கொரிய தொழிலாளர் கட்சி ஆட்சியதிகாரத்தை பொறுப்பேற்றது. அதில் இன்று வரையில் உட்கட்சி ஜனநாயகத் தேர்தல்கள் நடப்பதுண்டு. இருப்பினும், கிம் இல் சுங் அதிகாரப் போட்டியில் வெற்றி பெற்றதும், தனக்கு விசுவாசமானவர்களை நியமித்துக் கொண்டதும் வரலாறு.

ஆரம்ப காலங்களில் கொரிய தொழிலாளர் கட்சியின் சித்தாந்தம் மார்க்சிய லெனினிசமாக இருந்தது. ஆனால், எழுபதுகளில் கிம் இல் சுங் அதிகாரத்தை முழுமையாக கைப்பற்றியதும், அவரது ஜூச்சே தத்துவம் முன்னுக்கு கொண்டு வரப் பட்டது. மார்க்சிய லெனினிசம் பின்னுக்கு தள்ளப் பட்டு கைவிடப் பட்டது. ஜூச்சே தத்துவம் மார்க்சியத்தை தழுவி எழுதப் பட்டிருந்தது. அதே நேரம், கொரிய தேசியவாதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தது. கிம் இல் சுங்கை பொறுத்தவரையில், கொரிய ஒன்றிணைப்பு முதன்மையானது. அதற்காக தன்னை ஒரு தேசியவாதியாகவும் காட்டிக் கொள்ளத் தயங்காதவர்.

புளுகு 11:
//கொரியர்கள் அனைவரும் விசுவாசத்திற்காக உயிரைத் துறப்பார்கள் என்பது தானாம் கட்சியின் கொள்கை.// 
ஏன் ஐயா இந்த கொலைவெறி? அம்மா தேசத்தில், அல்லது அமெரிக்காவில் இருப்பவர்களுக்கு நாட்டுப்பற்று இருக்கலாம். ஆனால், வட கொரியாவில் இருக்காதா? அவர்களது நாட்டையும் அமெரிக்காவோ, ஜப்பானோ ஆக்கிரமிக்க நினைத்தால், அதை எதிர்த்துப் போராடுவது தவறு என்கிறீர்களா? அடிமையாக அடங்கிப் போகச் சொல்கிறீர்களா? அதை எதற்கு "கட்சியின் கொள்கை", "அதிபர் மீதான விசுவாசம்" என்று திரிபு படுத்தி கொச்சைப் படுத்துகிறீர்கள்? அதனால் தான், புதிய தலைமுறை ஒளிபரப்பிய "கிம் தேசம்" ஒரு அரசியல் பிரச்சார நிகழ்ச்சி என்று குற்றஞ் சாட்ட வேண்டியுள்ளது.

புளுகு 12:
//கட்சிக் கொள்கையை ஆராய்ந்தால் "தலைவர் நினைத்தால் யாரை வேண்டுமானாலும் கொன்று விடலாம்" என்று பொருள் வருமாம்???// 
கட்சிக் கொள்கை என்பது ஜூச்சே சித்தாந்தம் என்பதை ஏற்கனவே குறிப்பிட்டிருக்கிறேன். அந்த வார்த்தை கூட நிகழ்ச்சியில் உச்சரிக்கப் படவில்லை. நிகழ்ச்சித் தொகுப்பாளர் தனது அறியாமையை வெளிப்படுத்தி உள்ளார். அவ்வளவு தான். தமிழர்களை யாரும் எப்படியும் ஏமாற்றலாம் என்று அவரே முடிவு கட்டி விட்டார் போலிருக்கிறது.

புளுகு 13:
//கட்சித் தலைவர்கள் தமது பிள்ளைகளையே நியமிக்க வேண்டுமாம். அதனால் கட்சியில் தந்தைகளும் மகன்களும் நிறைந்திருந்தார்களாம் ??? இன்று வரை கட்சியில் உறவினர்கள் மட்டுமே இருக்கிறார்களாம்!!!// 
இது உங்களுக்கே ஓவராகப் படவில்லையா? பிள்ளைகள் அரசியலுக்கு வரக் கூடாது என்று எந்த நாட்டிலும் சட்டம் இல்லை. அதே நேரம், எல்லாப் பிள்ளைகளுக்கும் அரசியல் ஆர்வம் இருப்பதுமில்லை. வட கொரியா தலைமையிலும் அப்படித் தான். ஒரு அதிபருக்கு நான்கு பிள்ளைகள் இருந்தால், அதில் ஒன்று மட்டுமே அரசியலுக்கு வருகிறதென்றால், மற்ற மூன்று பிள்ளைகளும் வேறு வேலை பார்க்கின்றன என்று தானே அர்த்தம்? எல்லோருக்கும் அரசியலில் ஆர்வம் ஏற்படுவதில்லை. கட்சித் தலைவர்களின் பிள்ளைகள் என்றாலும் அப்படித் தான். ஆனால், உலகில் எல்லாப் பெற்றோரும் தமது பிள்ளைகளை தம்மைப் போன்று வளர்க்கப் பார்ப்பார்கள். நமது சமுதாயத்தில் படித்த பெற்றோரின் பிள்ளைகள் தான் பெருமளவில் பல்கலைக்கழகம் செல்கின்றன.

அது சரி, அம்மா தேசத்தில் தந்தைகளும், மகன்களும் அரசியலில் இருப்பதில்லையா? திமுக தலைவர் கருணாநிதி தந்தை, அவரது பிள்ளை ஸ்டாலின் தான் கட்சியின் அடுத்த தலைவர். காங்கிரஸ், அல்லது இந்திரா காங்கிரஸ் கட்சி பற்றி சொல்லவே தேவையில்லை. நேரு, இந்திரா, ராஜீவ், ராகுல் என்று வட கொரியாவை தூக்கிச் சாப்பிடும் அளவிற்கு வாரிசு அரசியல் மலிந்து போயுள்ளது.

நாங்கள் எத்தனை விளக்கம் கொடுத்தாலும், நமது தமிழ் ஊடகங்கள் அவற்றை புறக்கணித்து விட்டு வழமை போல பிரச்சாரங்களை தொடர்ந்து கொண்டிருக்கும். அது மட்டும் நிச்சயம். சண் டிவியின் மர்ம தேசம், புதியதலைமுறை டிவியின் கிம் தேசம் மாதிரி, இன்னும் பல காமெடிப் படங்களை தயாரித்துக் கொண்டிருப்பார்கள். இந்தப் பொய்களை நம்பி ஏமாறுவதற்கு ஏராளமான பார்வையாளர்கள் இருக்கிறார்கள். அது போதும்.

வட கொரியாவுக்கு சுற்றுலா சென்று வந்த அமெரிக்கப் பயணி ஒருவர், தனது அனுபவக்களை இணையத்தில் பகிர்ந்து கொண்டார். அமெரிக்கர்கள் நினைப்பதற்கு மாறாக வட கொரியர்களும் உலகில் உள்ள பிற மக்களைப் போன்ற சாதாராணமான மனிதர்கள் தான் என்பதை உணர்த்தியுள்ளார். (பார்க்க: My trip to North Korea: 13 misconceptions corrected )

"வடகொரியா மக்கள் சிரிக்கவே மாட்டார்கள்" என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள் பலருண்டு. அவர்களுக்காக வட கொரியர்கள் மத்தியில் பிரபலமான இரண்டு நகைச்சுவைத் துணுக்குகள் :
  • வட கொரியர்களும் விளையாட்டுப் பிரியர்கள் தான். கனடாவில் ஐஸ் ஹாக்கி பிரபலம் என்பதும் அவர்களுக்குத் தெரியும். இது தான் அந்த வயது வந்தோருக்கான ஜோக்: "கனடியர்கள் எதற்காக பின்புறமாக உடலுறவு கொள்கிறார்கள் தெரியுமா?" "தொலைக்காட்சியில் ஐஸ் ஹாக்கி பார்ப்பதை தவற விடக் கூடாது என்பதற்காக!"

  • "ஒரு தடவை எல்லையில் வட கொரிய இராணுவ வீரனும், அமெரிக்க இராணுவ வீரனும் சந்தித்துக் கொண்டார்கள். நட்பின் அடையாளமாக, அமெரிக்க இராணுவ வீரன் தன்னிடமிருந்த அமெரிக்க சிகரட்டை கொடுத்து பரிமாறினான். வட கொரிய இராணுவ வீரனும் அதை தயங்காமல் வாங்கிப் புகைத்தான்.
  • அப்போது அமெரிக்க வீரன் கேட்டான்: "உங்களுக்குத் தான் அமெரிக்கர்களை கண்டால் பிடிக்காதே. எதற்காக அமெரிக்க சிகரட் புகைக்கிறாய்?" அதற்கு பதிலளித்த வட கொரிய வீரன் சொன்னான்: "நான் அதைப் புகைக்கவில்லை, எரிக்கிறேன்!"

இதனுடன் தொடர்புடைய முன்னைய பதிவுகள்:

Wednesday, September 02, 2015

சாதாரண மக்களை மன்னர்களாக சித்தரிக்கும் வட கொரிய ஓவியங்கள்


வெளியுலகில் அதிகம் அறியப் படாத "மர்ம தேசம்" வட கொரியாவின் ஓவியங்களை, அண்மையில் ஒரு கண்காட்சியில் பார்வையிடும் சந்தர்ப்பம் கிட்டியது. அங்கு நான் எடுத்த படங்களை இங்கே பதிவிட்டிருக்கிறேன்.


வட நெதர்லாந்தில், அசென் எனும் நகரில் அமைந்துள்ள Drents Museum அந்தக் கண்காட்சியை நடத்தி இருந்தது. "The Kim Utopia"(http://www.drentsmuseum.nl/exhibitions/exhibition-detail/exhibition/the-kim-utopia-paintings-from-north-korea-102.html) என்ற தலைப்பின் கீழ், 2015, 3 ஏப்ரில் முதல் 30 ஆகஸ்ட் வரையில், நூற்றுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் பார்வைக்கு வைக்கப் பட்டிருந்தன. வட கொரியாவின் புகழ் பெற்ற கலைக்கூடங்களில், திறமையான ஓவியர்களினால் அவை வரையப் பட்டன. 1960 முதல் 2010 வரையிலான காலப்பகுதியில் வரையப் பட்ட ஓவியங்களை, இரண்டு டச்சு வர்த்தகர்கள் சேகரித்திருந்தனர். 

வட கொரிய ஓவியங்களின் கண்காட்சி என்றவுடன், அங்கே "கிம் இல் சுங் மன்னர் பரம்பரையை வழிபடும்" ஓவியங்கள் மட்டுமே இருக்கும் என்று யாராவது நினைத்தால் ஏமாந்து போவார்கள். சாதாரண மக்கள் தான் ஓவியங்களின் கருப்பொருள். 

உழைப்பு போற்றப் பட வேண்டியது. அதனால், தொழிலாளர்கள், விவசாயிகள், மீனவர்கள், ஆசிரியர்கள், விமானிகள், காவல் துறையினர், இராணுவ வீரர்கள், போன்ற பல தொழில்களை புரிவோர் காட்சிப் படுத்தப் பட்டிருந்தனர். தந்தை, தாய், பிள்ளைகள் என சாதாரண குடும்ப உறுப்பினர்களின் அன்றாட வாழ்க்கை பதிவாகி இருந்தது. 

மேற்கத்திய நாடுகளில் ஓவியம் என்பது "அரசியலற்ற" கலைப் படைப்பாக கருதப் படுகின்றது. ஆனால், வட கொரிய சமூகத்தில் ஓவியங்களின் பங்களிப்பு முற்றிலும் வேறானது. ஆரம்ப காலங்களில், எழுத வாசிக்க தெரியாத மக்களுக்கும் ஒரு சேதியை தெரிவிக்கும் நோக்கத்தில் வரையப் பட்டன. 

பெரும்பாலும் மக்களுக்கு கல்வி புகட்டுவதாக ஓவியங்கள் அமைந்திருக்கும். அதனால், தேசத்தின் கடந்த கால வரலாறு, அயல் நாடான தென் கொரிய நிலவரம், மற்றும் நல்லொழுக்கம் போன்றவற்றை போதிப்பதாக இருக்கும்.

கண்காட்சியில் நான் பார்வையிட்ட ஓவியங்களின் புகைப்படங்களை இங்கே தொகுத்துள்ளேன். அவை பெரும்பாலும் சாதாரண மக்களின் வாழ்க்கையை சித்தரிப்பதாக அமைந்துள்ளன.
--------------------------------------------------------------------------------------------------------------------------------------

 

ஒரு இராணுவ அதிகாரி, தனக்கு முன்னர் கல்வி கற்பித்த ஆசிரியைக்கு புதிய மூக்குக்கண்ணாடி ஒன்றை பரிசளிக்கிறார். அந்த அதிகாரி, தனது முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றிய ஆசிரியைக்கு நன்றிக் கடனாக இதைச் செய்துள்ளார். எமக்கு கல்வி கற்பித்த, ஆசிரியர்களை மதித்துப் போற்ற வேண்டும், என்ற சேதியை சொல்வதாக இந்த ஓவியம் வரையப் பட்டுள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------



தொழிற்சாலை ஒன்றில் பொறியியலாளருடன், தமது தொழில்நுட்ப அனுபவங்களை பகிர்ந்து கொள்ளும் தொழிலாளர்கள் பற்றிய ஓவியம். வட கொரியாவில், கிம் இல் சுங் அறிமுகப் படுத்திய சோஷலிசப் பொரளாதார உற்பத்தியில், எவ்வாறு தொழிலாளர்கள் பொறியியலாளருக்கு உதவுகின்றனர் என்பதைக் காட்டுகின்றது. ஒரு பெண் தொழிலாளி விவாதத்திற்கு தலைமை தாங்குவதை அவதானிக்கவும்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------


தொழில்நுட்ப ஆராய்ச்சியின் நடுவில், களைத்துப் போய் உறங்கி விட்ட, பொறியியல் படிக்கும் மகனை பெருமையுடன் பார்த்துக் கொண்டிருக்கும் தந்தை. "மகன்" என்று பெயரிடப் பட்ட இந்த ஓவியத்தை வரைந்தவர், வட கொரிய ஓவியர் Chang Ch'il-lyong
(2000 ம் ஆண்டு)


-------------------------------------------------------------------------------------------------------------------------------------


உப்பளம் ஒன்றில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பற்றிய வட கொரிய ஓவியம். அடடா... இதெல்லாம் "கம்யூனிச பிரச்சாரம்" ஆயிற்றே? நமது தமிழ் தொழிலாளர்கள் அறிந்தால் என்ன நினைப்பார்கள்?

---------------------------------------------------------------------------------------------------------------------------------------

சோளம் மாவில் இருந்து நூடில்ஸ் தயாரிக்கும், தொழிற்சாலை ஒன்றில் வேலை செய்யும் வட கொரிய பெண் தொழிலாளர்கள். தென் கொரியாவில் அரிசி பிரதானமான உணவாக உள்ளது. வட கொரியாவின் மலை சார்ந்த நிலம், அரிசி உற்பத்திக்கு ஏற்றது அல்ல. அதனால், அங்கு அரிசிக்கு பதிலாக, சோளம் மாவில் இருந்து உற்பத்தியான நூடில்ஸ் பிரதான உணவாகி உள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------

மேலும் சில படங்கள்:

அலுவலக வரவேற்பறையில் பணியாற்றும் பெண் காவலர் 

பெண் காவலர்கள் 

நீண்ட காலம் சேவையாற்றிய ரயில் ஊழியருக்கு மக்கள் விழா எடுக்கிறார்கள்   

இராணுவத்திற்கான உணவு சமைப்பவர்கள் 

பாடசாலை ஒன்றுக்கு பால் விநியோகம் செய்யும் பெண் 

விவசாய விளைபொருட்களை விநியோகம் செய்வோர் 

வட கொரியாவுடன் ஒன்றிணைவுக்காக பட்டம் விடும் தென் கொரியச் சிறுவன் 

பனிக் காலத்தில் நிலத்தில் உணவு பயிரிட முடியாது. அதனால், உள்ளக பரிசோதனைச் சாலை ஒன்றில் உணவுப் பயிர் உற்பத்தி செய்கிறார்கள். 

கால் பந்து விளையாட்டு வீரர்கள் 


அமெரிக்காவில் அட்லாண்டா நகரில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், ஜப்பானிய வீராங்கனையுடன் மோதிய வட கொரிய வீராங்கனை தங்கப் பதக்கம் வென்றார் 

மீனவர்கள் 

வயலும் கிராமமும் 


நல்லதொரு குடும்பம் 


தியாகிகளின் நினைவிடத்தில் ஒரு தந்தையும் மகளும் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் சோவியத் போர் விமானங்களை வரவேற்கும் பெண்கள் 

போர்க் காலத்திலும் கலை உணர்ச்சியை கைவிடாத இராணுவ வீராங்கனை 

ஓய்வு நேரத்தில் ரயில் நிலைய பெண் ஊழியரை பாடச் சொல்லும் இராணுவ வீரர்கள் 

கொரிய யுத்த களத்தில் படையினருக்கு உத்தரவு பிறப்பிக்கும் தளபதி 

இராணுவ வீரர்கள் 

ஓய்வு நேரத்தில் படையினர் 

கொரிய யுத்தம் நடந்த காலத்தில் படையினருக்கு உணவு எடுத்துச் செல்லும் மக்கள் 


விமானிகள் 

பியாங்கியாங் நகரில் கட்டப் பட்டுக் கொண்டிருக்கும் புதிய அடுக்குமாடிக் கட்டிடம் 

துப்பாக்கி சுடும் பயிற்சி 


சுற்றுலாப் பயணிகளுக்கு தியாகிகளின் நினைவிடத்தை சுற்றிக் காட்டும் இராணுவ வீரர்கள் 

பனியில் நனையும் சிறுவர்கள் 

பரிசுப் பொருளுடன் உறங்கும் பாடசாலை மாணவி 



ஒரு விவசாயப் பெண்மணியும், ஓர் இராணுவ வீராங்கனையும் வயலில் சேர்ந்து வேலை செய்கின்றனர்.

கொரிய யுத்தம் முடிந்த பின்னர் கைவிடப் பட்ட அமெரிக்க தாங்கியில் விளையாடும் சிறுவர்கள் 

கடுமையான பனிப்  பொழிவின் பின்னர் ஸ்னோ வழிக்க செல்லும் தொழிலாளர்கள் 

தென் கொரியாவில் நடந்த அமெரிக்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் 

உதைபந்தாட்ட மைதானத்தில் இரசிகர்கள் 

தென் கொரியாவில் வீரச் சாவடைந்த சுதந்திரப் போராட்ட வீரரின் கல்லறை 

பியாங்கியாங் நகரம் 

கட்டுமான பணிகளை பார்வையிடும் அதிபர் கிம் இல் சுங் 

கண்காட்சி நடந்த Drents Museum முன்புறம்