Thursday, December 09, 2021

தேசியவாதம், பேரினவாதம், இனவாதம்: நியாயப்படுத்தல்களின் அரசியல்

//சிங்கள "பேரினவாதத்தையும்", தமிழ் "இனவாதத்தையும்" சமப் படுத்தலாமா?// இப்படியான ஒரு கேள்வியின் மூலம் நியாயப்படுத்தலை செய்ய முனைபவர்கள் இருக்கிறார்கள். இந்தக் கேள்வியை நான் கேட்கவுமில்லை, தனிப்பட்ட யாரையும் குறிப்பிடவில்லை. பொதுவாக இப்படியான கேள்விக்கு பின்னால் உள்ள அபத்தங்களை மட்டுமே சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

பேரினவாதம், இனவாதம் இரண்டுமே அடிப்படையில் தேசியவாதக் கருத்தியலில் இருந்து பிறந்தவை தான். ஆனால், நடைமுறையில் முற்றிலும் வேறுபட்ட விடயங்கள். இரண்டையும் சமப்படுத்த நினைப்பது, ஆப்பிளும், தக்காளியும் ஒன்றென நிறுவ முயல்வது போன்று அபத்தமானது. பேரினவாதம், இனவாதம் இரண்டும் குறிப்பிட்ட சிலர் நம்பிக் கொண்டிருக்கும் அரசியல் கொள்கைகள். அதை சிறிது, பெரிது என்று அளந்து பார்க்க முடியாது.

- பேரினவாதம் என்பது பெரிய இனவாதம் அல்ல. அது பெரும்பான்மை இனத்தின் இனவாதமும் அல்ல.

- பேரினவாத சிந்தனை சிங்களவர்களிடம் மட்டுமல்ல, தமிழர்களிடமும் காணப்படலாம். ஏன் ஆங்கிலேயர், பிரெஞ்சுக்காரர், அமெரிக்கர், அரேபியர், ரஷ்யர், சீனர் என்று உலகம் முழுவதும் பல்லின மக்களிடம் பேரினவாத சிந்தனை உள்ளது.

- அதி தீவிர தேசப் பற்று, சுத்த இராணுவவாதம், எல்லா விடயங்களிலும் தேசம், தேசியத்திற்கு முன்னுரிமை கொடுப்பது என்பன பேரினவாதத்தின் அறிகுறிகள். அது தனது தேசிய எல்லைக்குள் அடங்கும் சிறுபான்மை இனங்களை கீழ்ப்படிய வைக்கும். இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தும். ஆனால், அழித்தொழிக்கும் அளவிற்கு போகாது.

- இன்றைக்கும் உலகில் பெரும்பாலான தேசங்களில் பேரினவாத அரசுகள் ஆட்சி செய்கின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், ஸ்பெயின் போன்ற வளர்ந்த நாடுகளும் அதற்கு விதிவிலக்கல்ல. உயர்ந்த வாழ்க்கைத்தரத்தை கொண்டுள்ள ஸ்கண்டிநேவிய நாடுகளும் மிக மோசமான இன ஒடுக்குமுறை வரலாற்றைக் கொண்டுள்ளன. அண்மையில் டென்மார்க்கில் கொண்டுவரப்பட்ட "கெட்டோ" சட்டம் நாசிகளின் காலத்தை நினைவுபடுத்துகிறது. அதாவது, பெரும் நகரங்களில் வாழும் வெளிநாட்டு குடியேறிகள் குறிப்பிட்ட பிரதேசங்களுக்குள் முடக்கப் பட்டுள்ளதுடன், அந்த இடத்தில் அவர்களது எண்ணிக்கை அதிகரிக்க விடாமல் தடுக்கப்படுகின்றது. முன்பு நாஸி ஜெர்மனியில் இவ்வாறு தான் யூதர்களுக்கு என ஒதுக்கப்பட்ட தனியான பிரதேசங்களுக்குள் வாழ நிர்ப்பந்திக்கப் பட்டார்கள்.

பேரினவாதம் என்றால் என்ன?

- பேரினவாதம் என்பது பலர் தவறாக நினைப்பது போன்று பெரிய இனவாதம் அல்ல. அது தேசியவாதத்தின் அதி உச்சகட்ட வடிவம். எந்தவொரு தேசியவாதியும் எல்லை மீறும் பட்சத்தில் பேரினவாதியாக இனங்காணப்படலாம்.

- பத்தொன்பதாம் நூற்றாண்டில் பிரான்ஸில் பேரினவாத கருத்தியல் தோற்றம் பெற்றது. அதே காலகட்டத்தில் இங்கிலாந்திலும் அந்தக் கருத்தியல் பரவி இருந்தது. அப்போது அது ஒரு தேசியப் பெருமிதமாக கருதப்பட்டது. பலர் தம்மைப் பேரினவாதி என்று பெருமையாக சொல்லிக் கொண்டார்கள்.

- முதலாம் உலகப்போருக்கு முன்பு, மேற்கு ஐரோப்பாவில் தேசியவாதம் என்பது கூட பேரினவாதமாக இருந்தது. சொந்த இனத்தின் மீதான இனப்பற்று, அல்லது சொந்த தேசத்தின் மீதான கண்மூடித்தனமான நாட்டுப்பற்று என்பன பேரினவாதத்திற்கு இட்டுச் சென்றன.

- ஆங்கிலேயர்கள் தமது பேரினவாதத்தை ஜிங்கோயிசம் எனச் சொல்லிக் கொண்டனர். அதன் வேர்ச் சொல் ரஷ்யாவுக்கு எதிராக போரிட்ட பிரிட்டிஷ் இராணுவ வீரர்களின் பாடலில் இருந்து உருவானது. ஜிங்கோயிச கொள்கை இங்கிலாந்தில் இருந்து அமெரிக்காவிலும் பரவி இருந்தது. அகண்ட அமெரிக்கா உருவான காலத்தில் ஜிங்கோயிசம் பிரபலமாக இருந்தது.

- பிரெஞ்சுக்காரர்கள் தமது பேரினவாதக் கொள்கையை ஷோவினிசம் என்று அழைத்தனர். நெப்போலியனின் இராணுவத்தில் சேர்ந்து போரிட்ட ஷோவின் என்ற போர்வீரனின் பெயரால் அவ்வாறு அழைக்கப் படுகின்றது. அதற்குக் காரணம், அந்த வீரனின் அதி தீவிர நாட்டுப்பற்று, மற்றும் தலைவன் மீதான விசுவாசம் ஆகும். அப்போது நடந்த போரில் நெப்போலியன் தோற்கடிக்கப் பட்டு, புதிதாக பதவியேற்ற பிரெஞ்சு அரசாலேயே சிறைப்பிடிக்கப் பட்டிருந்தார். பிரான்ஸில் நெப்போலியன் புகழ் மங்கிக் கொண்டிருந்த நேரம், ஷோவின் தனது தலைவனின் பெருமைகளை பற்றிப் பேசிக் கொண்டிருந்தார். தனது தலைவர் நெப்போலியன் மட்டுமே உண்மையான தேசப் பற்றாளர் என்றும், தேசத்தை பாதுகாத்தவர் என்றும் சொல்லிக் கொண்டிருந்தார். அந்த முன்னாள் போர்வீரனை பின்பற்றி, பிரெஞ்சு தேசியவாதம் பேசிய பலரும் தம்மை "ஷோவினிஸ்ட்" என்று சொல்லிக் கொண்டனர்.

- சுருக்கமாக, தேசியவாதத்தின் அதி தீவிர வளர்ச்சிக் கட்டம் தான் பேரினவாதம். அதீத தேசப் பற்று, சொந்த இனத்தின் நலன்களை பற்றி மட்டுமே சிந்திப்பது, கண்மூடித்தனமான தலைமை வழிபாடு, இவை யாவும் பேரினவாதத்தின் குணவியல்புகள் தான். பேரினவாதிகள் எப்போதும் பெரும்பான்மை இனத்தை சார்ந்திருக்க தேவையில்லை. அத்துடன் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. பேரினவாத சிந்தனைப் போக்கு கொண்ட அனைவரும் பேரினவாதிகள் தான்.

- இனவாதம் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட விடயம். அது தனது இனம் மட்டுமே உலகிற் சிறந்தது, முன்தோன்றிய மூத்தகுடி தாமே என பெருமை பாராட்டுவது. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக இனத்தூய்மை பேணப் பட்டு வருவதாக நம்புவது. இனவாதிகளுக்கு எப்போதும் ஏதோவொரு எதிரி இனம் இருக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர்களாக உருவாக்கிக் கொள்வார்கள். எதிரி இனம் பற்றிய எதிர்மறையான கருத்துக்களை பரப்புவதுடன், வெறுப்புப் பிரச்சாரம் செய்வார்கள்.

- இனவாதிகள், தமது தேச எல்லைகளுக்குள் ஒரே மொழி பேசும் தமது இனம் மட்டுமே வாழ வேண்டும் என்று நினைப்பார்கள். இனத்தால், மொழியால், மதத்தால் மாறுபட்டவர்கள் வாழும் உரிமையை மறுப்பார்கள். இப்படியானவர்களும் அரசியல் அதிகாரத்தில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒரு சிறு குழுவினரிடமிருந்து தலைதூக்கும் மதவெறியை கண்டிப்பது போன்று, இனவெறியும் கண்டிக்கப்பட வேண்டும்.

இந்தக் கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிடப் பட்ட கேள்வி, ஒருவேளை இவ்வாறு கேட்கப் பட்டிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும்: //ஒடுக்கும் பெரும்பான்மை இனத்தின் இனவாதத்தையும், ஒடுக்கப்படும் இனத்தின் இனவாதத்தையும் ஒன்றாக சமப்படுத்த முடியுமா?// ஆனால், இதிலும் பிழை இருக்கிறது.

இது முன்கூட்டியே பதிலை மனதில் நினைத்துக் கொண்டு கேட்கப்படும் கேள்வி. இதன் மூலம் அவர்கள் சொல்ல வருவது:

1. நீங்கள் ஒடுக்கப்படும் இனத்தின் பக்கம் நிற்பவர் என்றால், அது கொண்டிருக்கும் இனவாதக் கூறுகளையும் கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள்.

2. ஒடுக்கப்படும் சிறுபான்மை இனம் கொண்டிருக்கும் இனவாதம் அளவிற் சிறியது. அதை பெரும்பான்மை இனம் கொண்டிருக்கும் பெரிய இனவாதத்துடன் ஒப்பிட முடியாது. ஆகவே சமப்படுத்த முடியாது.

இது சரியா?

உலகில் எப்போதும் பெரும்பான்மை இனம் மட்டுமே ஒடுக்குவோராக இருப்பதில்லை. இலங்கை, இந்தியா காலனிய நாடுகளாக இருந்த காலத்தில் மிகச் சிறுபான்மையினமான வெள்ளையின ஐரோப்பியர்கள் ஒடுக்கும் இனமாக இருந்தார்கள். அந்த ஆட்சியாளர்களும் பேரினவாதிகளாக மட்டுமல்லாது, இனவாதிகளாகவும் இருந்திருக்கிறார்கள்.

தொண்ணூறுகள் வரையில் தென் ஆப்பிரிக்கா, சிம்பாப்வே ஆகிய நாடுகளில் சிறுபான்மையின ஐரோப்பியர்கள் ஆட்சியாளர்களாக மட்டுமல்லலாமல், பூரண குடியுரிமை கொண்டவர்களாகவும் இருந்தனர். அந்த மொழி/இனச் சிறுபான்மையினர் தான் மிக மோசமான இனவாதம் கொண்ட அபார்ட்ஹைட் கட்டமைப்பை வைத்திருந்தார்கள்.

ஈராக்கில் சதாம் ஹுசைன் காலம் வரையில் சிறுபான்மை சன்னி முஸ்லிம் சமூகம், பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஆண்டு வந்தது. சிரியாவில் சிறுபான்மை அலாவி முஸ்லிம் சமூகம், இன்னொரு சிறுபான்மையான கிறிஸ்தவ சமூகத்துடன் கூட்டுச் சேர்ந்து பெரும்பான்மை ஷியா முஸ்லிம் சமூகத்தினரை அடக்கி ஆண்டு வருகின்றனர். பெரும்பான்மையோ, சிறுபான்மையோ ஆட்சியதிகாரம் யாரிடம் இருக்கிறது என்பதே முக்கியம்.

ஆகவே ஒரு குறிப்பிட்ட இனம் சிறுபான்மை இனமாக இருப்பதால், அதில் இனவாதிகள் இருக்க மாட்டார்கள் என்ற எண்ணமே தவறு. ஒப்பீட்டளவில் "வீரியம் குறைந்த இனவாதம்" என்பதும் தவறான கருதுகோள் தான்.

இந்த விடயத்தில் சமப்படுத்துவது என்ற சொல்லே பொருத்தமற்றது. அர்த்தமற்றது. இங்கே எதையும் எதனோடும் சமப்படுத்தவில்லை. உள்ளதை உள்ளபடியே பேசுகிறோம். அவ்வளவு தான். திருடனை திருடன் என்றோ, அயோக்கியனை அயோக்கியன் என்றோ அழைப்பதில் என்ன தவறிருக்கிறது? ஒடுக்கப்படும் சிறுபான்மை இனத்தை சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்தால், அவர்கள் திருடர்களோ, அயோக்கியர்களோ இல்லை என்று அர்த்தமா?

"ஒடுக்கப்படும் இனத்தின் வன்முறையை/இனவாதத்தை ஒடுக்கும் இனத்துடன் சமப்படுத்தக் கூடாது" என்றும் கோட்பாடு, இனவெறி, மதவெறி சக்திகளால் அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தப் படுகின்றது என்ற உண்மையையும் உணர வேண்டும். அதற்கு அனைவருக்கும் தெரிந்த இரண்டு உதாரணங்களை காட்டலாம்:

1. இஸ்ரேலில் அப்பாவி மக்கள் கொல்லப்பட்ட மனித வெடிகுண்டு தாக்குதல்களுக்கு உரிமை கொரிய ஹமாஸ் இதே நியாயத்தை முன்வைத்து வந்தது. பிற்காலத்தில் அது பாலஸ்தீன மக்களின் விடுதலைப் போராட்டத்திற்கு பின்னடைவை உண்டாக்குகிறது என்பதை புரிந்து கொண்டு கைவிட்டு விட்டனர்.

2. ஐரோப்பாவில் நடந்த ஐ.எஸ். பயங்கரவாத தாக்குதல்களை நியாயப் படுத்தியவர்களும் அதே வாதத்தை தான் வைத்தார்கள். அதாவது ஒடுக்கும் பெரும்பான்மை இனமான கிறிஸ்தவ- ஐரோப்பியர்களின் பேரினவாத வன்முறைக்கு எதிராக, ஒடுக்கப்படும் முஸ்லிம்- அரபி சிறுபான்மை இனம் பிரயோகிக்கும் வன்முறையை சமப்படுத்தக் கூடாது என்றனர். இதே வாதத்தின் அடிப்படையில் ஐரோப்பியரை வெறுக்கும் இஸ்லாமியர் தரப்பு இனவாதத்தையும் நியாயப் படுத்தினார்கள். "ஒடுக்கும் ஐரோப்பியரின் பேரினவாதத்துடன், ஒடுக்கப்படும் முஸ்லிம்களின் இனவாதத்தை சமப்படுத்தலாமா?" என்று கேட்டனர்.

நிச்சயமாக, அப்படியான நியாயப்படுத்தல்களை செய்தவர்கள் ஐரோப்பிய முஸ்லிம்களில் மிகச் சிறிய எண்ணிக்கையினரான மத அடிப்படைவாதிகள் தான். பெரும்பான்மையான முஸ்லிம்கள் அந்தக் காரணங்களை ஏற்றுக் கொள்ளவில்லை. அவர்களைப் பொறுத்தவரையில், அப்பாவி மக்கள் மீதான தாக்குதலை யார் செய்தாலும் அது தவறு தான். ஐரோப்பிய நாடுகளில் வாழும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் மதவாதம், இனவாதம் இல்லாத சாதாரண மக்கள்.

மேற்கத்திய நாடுகளில் வாழும் வந்தேறுகுடிகளையும், இலங்கையில் வாழும் பூர்வகுடிகளையும் ஒப்பிடலாமா என்று இப்போது ஒரு கூட்டம் கிளம்பி வரும். உலகில் இன்றிருப்பவை எல்லாம் இருபதாம் நூற்றாண்டில் உருவான நவீன தேசங்கள் தான். அனேகமாக எல்லா நாடுகளிலும் வந்தேறுகுடிகளும், பூர்வகுடிகளும் கலந்து தான் வாழ்கிறார்கள். பெரும்பாலான நாடுகளில் குடியுரிமை மரபின வழிப் பிறப்பின் அடிப்படையில் தீர்மானிக்கப் படுவதில்லை. இந்த உரிமைகள் மீறப்படும் பொழுது தான் தேசியவாதம் பேரினவாதமாக அல்லது இனவாதமாக வெளிப்படுத்திக் கொள்கின்றது.

****

No comments: