Friday, March 12, 2021

சீமான் & ஹிட்லர் : அதிசயப்படத்தக்க ஒற்றுமைகள்



ஹிட்ல‌ர் & சீமான், வித்தியாச‌ம் க‌ண்டுபிடிக்க‌வும்: 

ஹிட்ல‌ர்: முத‌லாம் உல‌க‌ப்போரில் ஜெர்ம‌ன் இராணுவ‌ம் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் பெர்லினில் ஆட்சியில் இருந்த‌ ச‌மூக‌ ஜ‌ன‌நாய‌க் க‌ட்சி(SPD) ஜெர்ம‌னிய‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். ஜெர்ம‌னியை ஆள்ப‌வ‌ர்க‌ள் யூத‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ SPD தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் யூத‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் பிரெஞ்சு இராணுவ‌த்தால் ஜெர்ம‌னிய‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கின‌ர். (முத‌லாம்) உல‌க‌ப் போரில் ந‌ட‌ந்த‌ ஜெர்ம‌ன் இன‌ப்ப‌டுகொலையின் சூத்திர‌தாரிக‌ள் SPD, மார்க்சிய‌வாதிக‌ள் ம‌ற்றும் யூத‌ர்க‌ள் தான். 

சீமான்: ஈழ‌ப் போரில் புலிக‌ள் தோற்ற‌த‌ற்கு கார‌ண‌ம் டெல்லியில் ஆட்சியில் இருந்த‌ காங்கிர‌ஸ் க‌ட்சி த‌மிழ‌ருக்கு செய்த‌ துரோக‌ம் தான். த‌மிழ்நாட்டை ஆள்ப‌வ‌ர்க‌ள் தெலுங்க‌ர்க‌ள். (உண்மையிலேயே அன்றைய‌ திராவிட‌க் க‌ட்சிக‌ளின் தலைவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் தெலுங்க‌ர்க‌ளாக‌ இருந்த‌ன‌ர்.) அத‌னால் தான் சிறில‌ங்கா அர‌ச‌ ப‌டைக‌ளால் த‌மிழ‌ர்க‌ள் தோற்க‌டிக்க‌ப் ப‌டுவ‌த‌ற்கு ஒத்துழைப்பு வ‌ழ‌ங்கினார்க‌ள். ஈழ‌ப்போரில் ந‌ட‌ந்த‌ த‌மிழ் இன‌ப்ப‌டுகொலைக்கு கார‌ண‌ம் காங்கிர‌ஸ், திராவிட‌வாதிக‌ள், ம‌ற்றும் தெலுங்க‌ர்க‌ள் தான். 

*****

- ஹிட்லர் ஜெர்மன் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் ஆஸ்திரிய நாட்டு பிரஜை. அன்றைய ஆஸ்திரிய சாம்ராஜ்யத்தில் பல மொழிகளை பேசும் இனங்கள் இருந்தன. ஹிட்லர் ஒரு ஆஸ்திரிய பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் அன்று பிரஷிய ராஜ்ஜியமாக கருதப்பட்ட ஜெர்மனி பற்றியதாக இருந்தது. 

- சீமான் தமிழ் மொழி இனத்தவராக இருந்தாலும், உண்மையில் ஓர் இந்தியப் பிரஜை. இன்றைய இந்தியாவில் பல மொழிகளைப் பேசும் இனங்கள் இருக்கின்றன. சீமான் ஓர் இந்தியப் பிரஜையாக இருந்தாலும், அவருடைய அரசியல் அபிலாஷைகள் முழுவதும் இலங்கையில் வாழும் ஈழத்தமிழர் பற்றியதாக இருக்கின்றது.

 - ஹிட்லர் ஆஸ்திரியாவில் இருந்து ஜெர்மனி சென்று, சக்கரவர்த்தியின் இராணுவத்தில் தானாகப் போய்ச் சேர்ந்தார். அவர் யுத்தகளத்தில் நின்றாலும் எந்தவிதமான சண்டையிலும் ஈடுபடவில்லை. போர் நடந்த இடத்திற்கு வெகுதூரம் தள்ளி பங்கருக்குள் இருந்து விட்டு, பிற்காலத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். அன்று இராணுவ வீரர்களாக இருந்த பலருக்கு ஹிட்லரின் புளுகுகள் எல்லாம் தெரிந்திருந்தன.

 - சீமான் இந்தியாவில் இருந்து, இலங்கையில் புலிகளின் பிரதேசத்திற்கு சென்று போர்க்களத்தில் நின்று விட்டு வந்தார். ஆனால் வன்னியில் சீமான் நின்ற இடம் போர் நடந்த இடத்தில் இருந்து வெகு தூரம். எந்தச் சண்டையும் நேரில் காணவில்லை. பிற்காலத்தில் சீமானும் ஈழத்தில் தனது இராணுவ சாகசங்களை பற்றி புளுகிக் கொண்டிருந்தார். முன்னாள் புலிப் போராளிகள் பலருக்கு சீமானின் புளுகுகள் எல்லாம் தெரியும்.

 - ஹிட்லர், சீமான் இருவரும் சிறந்த பேச்சாளர்கள். கைகளை உயர்த்தி, நரம்பு புடைக்க, சத்தமிட்டுப் பேசும் குணவியல்பைக் கொண்டவர்கள். இன உணர்வைத் தூண்டும் வகையில் உணர்ச்சிவசமாகப் பேசி மக்களைக் கவரும் வல்லமை பெற்றிருந்தனர். 

 - அன்றைய காலகட்டத்தில் ஹிட்லரின் பேச்சுக்களை கேட்டவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைத்தார்கள். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரித்தார்கள். அதே மாதிரி, இன்று சீமானின் பேச்சுக்களை கேட்பவர்கள், அவரை ஒரு கோமாளி என நினைக்கின்றனர். நம்ப முடியாத கதைகளை கேட்டுச் சிரிக்கின்றனர். 

 - ஜெர்மன் குடியரசில் இரகசியமாக கூட்டம் கூடி வந்த சட்டவிரோத தீவிர ஜெர்மன் தேசியவாத அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப் பட்ட ஆள் தான் ஹிட்லர். மியூனிச் நகரில் கூட்டம் ஒன்றுக்கு காவல்துறைக்காக குறிப்பெடுக்க சென்று கொண்டிருந்த ஹிட்லர், பின்னர் அவர்களின் கொள்கைகளால் கவரப் பட்டு அங்கத்தவராக சேர்ந்து கொண்டார். ஆளுமை மிக்க பேச்சுகள் மூலம் பலரை தன்பக்கம் ஈர்த்தார். பெரும்பாலும் மாணவர்கள், இளைஞர்கள் ஹிட்லரால் கவரப் பட்டனர்.

 - தடா, பொடா போன்ற அடக்குமுறை சட்டங்களின் விளைவாக, தமிழ்நாட்டில் இரகசியமாக இயங்கிய தீவிர தமிழ்த்தேசிய அமைப்புகளுக்குள் ஊடுருவ அனுப்பப்பட்டவர் தான் சீமான். 2009 ஆண்டளவில் நடந்த ஈழத்தமிழர் ஆதரவுப் போராட்டங்களில் கலந்து கொண்டு, தனது ஆளுமை மிக்க பேச்சுக்கள் மூலம் பலரை ஈர்த்தார். குறிப்பாக மாணவர்கள், இளைஞர்கள் சீமானால் கவரப் பட்டனர்.

 - அன்று ஜெர்மனியில் இருந்த தீவிர வலதுசாரிக் கட்சிகள் குறிப்பிட்ட அளவு மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே பெற்றிருந்தனர். அதனால் வளர முடியவில்லை. ஏனெனில் அவர்களது ஆதரவுத்தளமாக இருந்த மத்தியதரவர்க்க, பணக்கார வர்க்கத்தினர் மிகச் சிறுபான்மையினர். ஹிட்லர் ஒரு வித்தியாசமான பாதையை தேர்ந்தெடுத்தார். அடித்தட்டு மக்களின் பிரச்சினைகளையும் கவனத்தில் எடுத்து, சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசினார். அது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் ஹிட்லரின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே உலகப்போரில் வென்ற நாடுகள் ஜெர்மனி மீது விதித்த பொருளாதாரத் தடை காரணமாக, அன்று ஏராளமான ஜெர்மன் விவசாயிகள் தற்கொலை செய்திருந்தனர்.

 - இன்று தமிழ்நாட்டில் உள்ள பாஜக, ஆர்எஸ்எஸ் போன்ற தீவிர வலதுசாரிக் கட்சிகள், பிராமணர்கள், உயர்சாதியினர், செல்வந்தர்கள் போன்ற மேட்டுக்குடியினர் ஆதரவை மட்டுமே கொண்டுள்ளனர். அதனால் வளர முடியவில்லை. சீமான் சாதாரண மக்கள் அனைவருக்கும் புரியும் மொழியில் பேசுகிறார். இது வரை காலமும் இடதுசாரிகளால் மட்டுமே பேசப் பட்டு வந்த, வறுமை, வேலையில்லாப் பிரச்சினை, நலிவடையும் விவசாயம் போன்ற பிரச்சனைகள் சீமானின் பிரச்சார உரைகளில் இடம்பெற்றன. உண்மையிலேயே, பொருளாதாரப் பிரச்சினை காரணமாக ஏராளமான தமிழக விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டனர்.

 - அன்று ஜெர்மனிக்கு வெளியே பல ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்த ஜெர்மன் இனத்தவர்கள் ஹிட்லருக்கு ஆதரவளித்தனர். ஆஸ்திரியா தவிர செக்கோஸ்லாவாக்கியா, போலந்து, சுவிட்சர்லாந்து, பெல்ஜியம், பிரான்ஸ், இத்தாலி, ருமேனியா என்று பல நாடுகளில் ஜெர்மனியர்கள் வாழ்ந்தனர். அவர்களில் பலர் ஹிட்லரை தமது இனத்தின் மீட்பராக பார்த்தனர். அதனால் நிறையப் பணம் அனுப்பினார்கள்.

 - இன்று பல மேற்கத்திய நாடுகளில் வாழும் தமிழர்கள் சீமானுக்கு ஆதரவளிக்கின்றனர். இந்தியா, இலங்கைக்கு வெளியே பிரித்தானியா, கனடா, ஜெர்மனி, சுவிட்சர்லாந்து என்று பல நாடுகளில் வாழும் தமிழர்களில் பலர் சீமானை தமது இனத்தின் மீட்பராக பார்க்கின்றனர். அதனால் நிறையப் பணம் அனுப்புகிறார்கள். 

No comments: