Saturday, July 11, 2020

குடிமைகள் - ஈழத்தில் நிலவிய குடிமைச் சாதிய ஒடுக்குமுறை பற்றிய நாவல்

ஈழத்தில் நிலவிய சாதிய ஒடுக்குமுறை பற்றியும், குடிமைத் தொழில் பற்றியும் அறிந்து கொள்ள தெணியான் எழுதிய "குடிமைகள்" நாவலை வாசிக்கவும். இதனை கருப்புப் பிரதிகள் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. சமீபத்திலும் குடிமைத் தொழில் சம்பந்தமாக முகநூலில் வாக்குவாதம் இடம்பெற்றது. இன்றைக்கும் பலர் மனதில் குடிமைத் தொழில் குறித்து சரியான தெளிவு இல்லை. அதற்காக இந்த நூலை அடிப்படையாகக் கொண்டு சில புரிதல்களை ஏற்படுத்த விரும்புகிறேன்.

ஈழத்தில் என்றால், குறிப்பாக யாழ் குடாநாட்டில் அல்லது வட மாகாணத்தில் நிலவிய சாதி அமைப்பை தான் நாம் இங்கே கவனத்தில் எடுக்க வேண்டும். கிழக்கு மாகாணத்தில் இருந்த சாதி அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. யாழ்ப்பாண சாதி அமைப்பானது முந்திய நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பின் எச்சமாக இருந்துள்ளது. அது டச்சு, ஆங்கிலேய காலனியாதிக்கவாதிகளால் மாற்றப் படவில்லை. (முன்பு போர்த்துக்கேயர்கள் காலத்தில் ஏறத்தாள அழிவு நிலையில் இருந்து பின்னர் மீளுருவாக்கம் செய்யப் பட்டது.)

யாழ் சமூகத்தில் குடிமை எனப்படுவது, ஏறக்குறைய ஐரோப்பிய சமூகத்தில் நிலவிய பண்ணையடிமை முறையை ஒத்தது. யாழ்ப்பாணத்தில் நிலவுடைமைச் சாதியாக இருந்த வெள்ளாளர்கள், பஞ்சமர்கள் எனப்படும் தாழ்த்தப் பட்ட சாதியினரை தமது குடிமைகளாக வைத்திருந்தனர். யாராவதொரு வெள்ளாள நிலவுடைமையாளர் தனது காணிக்குள் குடிமைகளை குடியேற்றி இருப்பார். அவர்கள் ஒரு துண்டு நிலத்தில் குடிசை வீடு கட்டி, அதைச் சுற்றி சிறு தோட்டமும் செய்யலாம். ஆனால், அந்த நிலம் அவர்களுக்கு சொந்தமானது அல்ல.

குடிமைச் சாதியினர் வெள்ளாளர்களுக்கு குடிமைத் தொழில் செய்து வாழ வேண்டும். முடி வெட்டும் வேலை செய்யும் அம்பட்டர்கள், துணிகளை சலவை செய்யும் வண்ணார்கள், போன்று பல குடிமைத் தொழில் செய்யும் சாதிகள் இருந்தனர். இதனால் தான் இன்றைக்கு சில வெள்ளாள பரம்பரையில் வந்த அறிவுஜீவிகளும் சாதி என்பது தொழில் சார்ந்த பிரிவினை என்று தவறாக நினைக்கிறார்கள். அது வேறு விடயம். குடிமைகள் நாவலில் முடி வெட்டும் அம்பட்டர் சாதியை சேர்ந்த ஒரு குடும்பத்தின் கதை பற்றிக் கூறப் படுகின்றது. இது ஒரு புனைவு என்றாலும் உண்மைச் சம்பவங்களை வைத்து எழுதப்பட்டது. அநேகமாக ஐம்பதுகளில் அல்லது அறுபதுகளில் கதை நடக்கிறது. அப்போது நகரங்களில் சலூன் கடைகள் போடுவது சர்வசாதாரணமாகி விட்டது. இருப்பினும் கிராமங்களில் வாழ்ந்தவர்கள் குடிமைத் தொழில் செய்ய வேண்டிய நிர்ப்பந்தம் இருந்தது.

வெள்ளாளர்களின் வீடுகளில், யாராவது இறந்தாலும் பிணத்திற்கு முடி வழிப்பதற்கு குடிமைத் தொழில் செய்யும் அம்பட்டனை வரச் சொல்லி அனுப்புவார்கள். அவ்வாறு அடக்கமாக தொழில் செய்து வந்த முத்தன், இன்னொரு ஆதிக்க சாதியான கரையாரிடமும் பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும் பொழுது பிரச்சினை உருவாகிறது. கரையாருக்கு அல்லது பிற சாதியினருக்கு குடிமைத் தொழில் செய்வதற்கு வேறு அம்பட்டர்கள் இருக்கிறார்கள். ஆனால் வழமையாக வெள்ளாளருக்கு குடிமைத் தொழில் செய்பவருக்கு அது அனுமதிக்கப் படுவதில்லை.

இந்த இடத்தில் தான் எவ்வாறு சாதி அமைப்பு, ஒரு நிலப்பிரபுத்துவ அமைப்பாகவும் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது குடிமைத் தொழில் செய்பவருக்கான கூலியை பொருளாகவும், சொற்ப தொகை பணமாகவும் கொடுக்கிறார்கள். இதனால் அவர்கள் ஏழ்மையில் இருந்து மீள முடியாது. காலங்காலமாக வெள்ளாள நிலப்பிரபுக்களில் தங்கியிருக்க வேண்டும். திருமணம் போன்ற குடிமைகள் வீட்டு செலவுகளையும் வெள்ளாள நிலப்பிரபுவே பொறுப்பெடுப்பார். இது ஓரளவு மேற்கு ஆப்பிரிக்காவில் நிலவிய சாதிய அமைப்பை ஒத்துள்ளது.

ஏன் ஒரே குடிமைத் தொழிலை வேறு சாதியினருக்கும் செய்ய அனுமதிக்கவில்லை? இங்கே பணம் சார்ந்த முதலாளித்துவப் பொருளாதாரத்தால் ஏற்பட்ட சமூக மாற்றம் தென்படுகின்றது. அதாவது அவர்கள் பணம் வாங்கிக் கொண்டு குடிமைத் தொழில் செய்தால் வறுமையில் இருந்து மீளக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. சலூன் கடை போடுவதும் அப்படித் தான். அதை ஒடுக்கும் சாதியினரான வெள்ளாளர்கள் விரும்பப் போவதில்லை. அதாவது இது சொத்துடமை சார்ந்த பிரச்சினை. ஒடுக்கப்படும் சாதியினர் பணக்காரர்களாக வருவதை ஒடுக்கும் சாதியினர் எதிர்த்துக் கொண்டிருப்பார்கள். அது இப்போதும் தொடர்கிறது.

முத்தன் பருத்தித்துறை நகரத்தில் சலூன் கடை போடவிருந்த திட்டம் தெரிய வந்ததும் வெள்ளாளர்கள் நிலப்பிரபுக்கள் பல வழிகளிலும் தடுக்கப் பார்க்கிறார்கள். அவ்வாறு கடை போடுவதென்றாலும் கிராமத்தில் செய்யுமாறும், அதனால் வழமையான குடிமைத் தொழில் பார்க்க முடியும் என்றும் தமது சுயநலத்தின் நிமித்தம் பேசுகின்றனர். குடிமைத் தொழில் உண்மையில் அடிமைத் தொழில் என்பதை புரிந்து கொண்ட முத்தன் அதற்கு சம்மதிக்க மறுக்கிறான்.

சாதிவெறியர்கள் தம்மால் சமாளிக்க முடியாத படியால், முதலியார், விதானையார் (இவர் சிறிலங்கா அரசின் பிரதிநிதி என்பது குறிப்பிடத் தக்கது) ஆகியோர் மூலம் மிரட்டிப் பார்க்கின்றனர். அரசாங்கம் நியமித்த கிராம சேவகர் (விதானை) என்றாலும் சாதி அபிமானம் காரணமாக சாதி வெறியர்களுடன் கூட்டுச் சேர்ந்து ஒடுக்குமுறைக்கு துணை போகின்றார். எவ்வாறு அதிகார வர்க்கம் முழுவதும் வெள்ளாள சாதிவெறிக்கு துணைபோனது என்பதை விளக்க இது ஒரு சிறந்த உதாரணம். இந்த நிலைமை ஈழப்போர் தொடங்கும் வரையில் காணப்பட்டது.

முத்தனின் தம்பி மணியன் கொழும்பில் வேலை செய்து அனுப்பிய பணத்தில் பருத்தித்துறையில் சலூன் திறந்து வியாபாரமும் அமோகமாக நடக்கிறது. இதைக் கண்டு பொறாமை கொண்ட வெள்ளாள சாதிவெறியர்கள் அவனைக் கொல்வதற்கு திட்டம் தீட்டுகிறார்கள். ஏற்கனவே சதி செய்து இரண்டு தம்பிமாரை கொன்று விடுகின்றனர். இதற்கிடையே முத்தனின் மனைவி மீது ஆசை கொண்ட குமாரசாமி என்ற சாதிவெறியனை முத்தனின் நண்பர்கள் மறைந்திருந்து தாக்கி விட்டனர். இந்தத் தகவலும் வெள்ளாள சாதிவெறியை கொழுந்து விட்டு எரியச் செய்கிறது. தம் மீது கைவைக்கத் துணிந்த குடிமைச் சாதியினரை சும்மா விடக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு நிற்கின்றனர். அதனால் முத்தனும் மனைவியும் கொழும்புக்கு ரயிலேற, ஊரில் அவனது சலூனும், குடிசை வீடும் எரிக்கப் படுகின்றன.

ஈழத்தில் நிலவுடைமை வெள்ளாளரின் சாதிவெறி எந்தளவு கொடூரமாக இருந்தது என்பது நூலில் பல இடங்களில் குறிப்பிடப் படுகின்றது. "கஞ்சா, அபினுக்கு இல்லாத சாதிவெறி. அது ஒரு விசர் மாதிரி. அந்த சாதி வெறியிலே ஒரு குடலுக்குள்ளே இருந்து வந்த சகோதரம் என்றும் பாரான்கள்.... ஆளை முடிச்சுப் போடுவாங்கள். (ஆணவக் கொலை)"

ஈழத்தில் ஒரு காலத்தில் மிகக் கொடூரமான ஒடுக்குமுறையாக இருந்த சாதியத்தை எவ்வாறு சாதாரணமாக எடுத்துக் கொள்ள முடிகிறது? புலிகளின் காலத்தில் குடிமைத் தொழில் ஒழிக்கப் பட்டது என்று ஒரு நண்பர் முகநூலில் பதிவிட்டிருந்தார். அவர் அறியாத இரண்டு உண்மைகள் உள்ளன.

  1. ஐம்பதுகள், அறுபதுகளில் குடிமைச் சாதியினர் கிளர்ந்தெழுந்து குடிமை முறைக்கு எதிராக போராடினார்கள். அந்த போர்க்குணாம்சம் எவ்வாறு ஏற்பட்டது என்பதை குடிமைகள் நாவல் பதிவு செய்துள்ளது. 
  2. குடிமைச் சாதியினர் ஒரு குறிப்பிட்ட சாதிக்கு (இங்கே: வெள்ளாளர்) மட்டும் தொழில் செய்து அவர்களால் பொருளாதார ரீதியாக ஒடுக்கப் பட்டனர். பிற்காலத்தில் அந்த நிலைமை மாறி விட்டது. பணம் கொடுத்தால் எந்த சாதியினருக்கும் தொழில் செய்ய முன்வந்தனர். அந்தக் காலத்தில் இதுவே ஒரு சமூகப் புரட்சி தான்.

இந்த நூலானது சாதி ஒடுக்குமுறை பற்றி மட்டுமல்லாது, ஒரே சாதிக்குள் நடக்கும் வர்க்க ஒடுக்குமுறை பற்றியும் பேசுகின்றது. குறிப்பாக முத்தனின் தம்பி மணியத்தை தென்னிலங்கையில் பதுளையில் உள்ள தனது சலூனில் வேலை பழக்க அழைத்துச் செல்லும் முதலாளி, அவனை எடுபிடி வேலையாளாக கொடுமையாக நடத்துவது பற்றி பல அத்தியாயங்களில் விவரிக்கப் படுகின்றது. ஈழத்து சாதிப்பிரச்சினையை பற்றி ஆழமாக புரிந்து கொள்ள நீங்கள் வாசிக்க வேண்டிய நூல்களில் ஒன்று குடிமைகள்.

2 comments:

suvanappiriyan said...

அருமையான ஆக்கம்....

தேடல் said...

இதே போல தமிழ்நாட்டிலும் நிலவுகிறது . மிக அருமையான கட்டுரை நன்றி தோழர்