கறுப்பர் கூட்டத்தின் கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக குரல் கொடுப்பது எமது தார்மீகக் கடமை. கறுப்பர் கூட்டம் யூடியுப் சேனல் நடத்தியவர்களை கைது செய்தமை போன்ற சம்பவங்கள் பாகிஸ்தானில் மட்டுமே நடக்கும் என்று பலர் நினைத்துக் கொண்டிருந்தார்கள். அந்நாட்டின் மத நிந்தனை சட்டமானது, கறுப்பர் கூட்டம் வெளியிட்ட கந்த சஷ்டி வீடியோ போன்றவற்றை குற்றமாக கருதுகிறது. அதனால் அவர்களை கைது செய்து சிறையில் அடைக்க முடியும். ஆனால் போலி "மதச்சார்பற்ற" நாடான இந்தியாவிலும் அது நடக்கும் என்பதை தமிழ் நாடு பொலிஸ் நமக்கு உணர்த்தியுள்ளது.
மதச்சார்பின்மை என்றால் கறுப்பர் கூட்டம் போன்று நாத்திக பிரச்சாரம் செய்பவர்களுக்கும் கருத்து சுதந்திர உரிமை இருக்கிறது என்று அர்த்தம். அதாவது ஒரு மதத்தை பிரச்சாரம் செய்பவருக்கும், அதே மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்பவருக்கும் சம உரிமை உள்ளது. அரசமைப்பு சட்டமானது இவ்விரண்டையும் தனி மனித கருத்து வெளிப்பாட்டு சுதந்திரமாக அங்கீகரிக்கிறது.
பாகிஸ்தான் போன்ற மதச்சார்பான நாடுகளில் மட்டுமே பிரஜைகளுக்கு அந்த உரிமை மறுக்கப் பட்டுள்ளது.
ஒரு தடவை டென் மார்க்கில் முகமது கார்ட்டூன் வெளியிட்ட பத்திரிகை நிறுவனத்திற்கு மதவாதிகளிடம் இருந்து அச்சுறுத்தல் வந்த நேரம் அவர்களுக்கு டேனிஷ் அரசு பொலிஸ் பாதுகாப்பு கொடுத்திருந்தது. அதைத் தான் இங்கே தமிழ் நாடு அரசு செய்திருக்க வேண்டும். கறுப்பர் கூட்ட செயற்பாட்டாளர்களுக்கு மதவாதிகள் அச்சுறுத்தல் விடுத்த நேரம், அவர்களுக்கு பாதுகாப்பு கொடுத்திருக்க வேண்டியது தமிழ் நாடு பொலிசின் கடமை.
அதற்கு மாறாக அவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்திருப்பதுடன், அடாவடித்தனமாக யூடியுப் வீடியோக்களையும் அழித்துள்ளமை அப்பட்டமான மனித உரிமை மீறல். இது ஒரு அரச பயங்கரவாதம். இந்த நீதிக்கு புறம்பான செயலை கண்டிப்பதற்கு ஒவ்வொரு மனிதநேயவாதியும் முன்வர வேண்டும்.
இறுதியாக தமிழ் நாடு முதல்வருக்கு ஒரு வேண்டுகோள். நீங்கள் இது போன்ற மனித உரிமை மீறல்களை தொடர்ந்தும் செய்வீர்களானால் தயவுசெய்து மாநிலத்தின் பெயரை "தமிழ்- பாகிஸ்தான் நாடு" என்று சட்ட சபையில் தீர்மானம் போட்டு மாற்றி விடுங்கள். உங்களது மத அடிப்படைவாத அரசு பற்றி மக்கள் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள். இந்த விடயத்தில் தமிழ்நாடு அரசுக்கும், பாகிஸ்தான் அரசுக்கும் இடையிலான ஒற்றுமை என்ன? பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டம் எவ்வாறு அடக்குமுறை அரசினால் தவறாகப் பயன்படுத்தப் படுகின்றது? சில தெளிவுபடுத்தல்களுக்காக அது குறித்தும் விரிவாக ஆராய்வது அவசியமாகிறது.
பாகிஸ்தானில் நடைமுறையில் உள்ள மத நிந்தனை சட்டத்திற்கும் இஸ்லாமிய மதத்திற்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. இஸ்லாமியரின் இறைதூதர் நபிகள் நாயகம் கூட சகிப்புத்தன்மையை மட்டுமே வலியுறுத்தி உள்ளார். மத நிந்தனை ஒரு குற்றம் என்று புனித நூலான குர்ஆனில் எங்குமே எழுதப் படவுமில்லை. இஸ்ரேல் போன்று, பாகிஸ்தானும் ஒரு மதத்தின் அடிப்படையில் உருவாக்கப் பட்ட தேசியம் ஆகும். இஸ்லாம் என்ற மதம் மட்டும் இல்லையென்றால், பல்வேறு பட்ட மொழிகளைப் பேசும் மக்களையும், பழங்குடி இனத்தவரையும் ஒரே குடையின் கீழ் வைத்திருக்க முடியாது. ஆகவே மத நிந்தனைச் சட்டம் கூட மக்களை ஒடுக்குவதற்கான அரசின் கருவியாகவே பயன்படுத்தப் படுகின்றது. இது அரசியல், மதம் அல்ல.
தமிழ் பேசும் முஸ்லிம்கள் மட்டுமல்லாது, பாகிஸ்தான் முஸ்லிம்களிலும் பெரும்பான்மையினருக்கு அரபு மொழி தெரியாது. அவர்களால் அரபு மொழியில் எழுதப்பட்ட குரான் மூல நூலை வாசிக்க முடியாது. பாகிஸ்தான் சனத்தொகையில் அரைவாசிப் பேர் சொந்த மொழியில் மொழிபெயர்க்கப் பட்ட புனித நூலை கூட வாசித்தறிய முடியாத அளவுக்கு கல்வியறிவில் குறைந்தவர்கள். இந்த நிலைமையை சில மத அடிப்படைவாத முல்லாக்கள் தமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள். மக்களின் அறியாமையை பயன்படுத்தி, தாம் விரும்பியவாறு பொழிப்புரை சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குர்ஆனில் இல்லாததை எல்லாம் சொல்லி அப்பாவி மத நம்பிக்கையாளர்களை ஏமாற்றுகிறார்கள்.
பாகிஸ்தானில் எங்காவதொரு கிறிஸ்தவர், இந்து மத நிந்தனை சட்டத்தால் பாதிக்கப் பட்டால் மட்டுமே அது செய்தியாக வெளியுலகத்திற்கு தெரிய வருகின்றது. அங்கே பெருமளவில் பாதிக்கப்படும் முஸ்லிம்களை யாரும் கண்டுகொள்வதில்லை. அவர்கள் சிலநேரம் உயர்பதவி வகித்தால் மட்டுமே செய்தியாகிறது. சொந்த மெய்ப்பாதுகாவலரால் தெருவில் சுட்டுக்கொல்லப் பட்ட பஞ்சாப் மாநில கவர்னர் சல்மான் தசீர் விவகாரம் ஒரு சிறந்த உதாரணம். தசீர் உடலில் இருபது துப்பாக்கி தோட்டாக்களை செலுத்திய கொலையாளி, இஸ்லாமிய மதவாதிகளால் நாயகனாக போற்றப் பட்டான். இந்த சம்பவத்தின் பின்னர் மத நிந்தனை சட்டம் அநீதியானது என்று யாரும் சொல்லத் துணியவில்லை.
சல்மான் தசீர் செய்த "குற்றம்" சர்ச்சைக்குரிய மத நிந்தனை சட்டத்தை நீக்குமாறு குரல் கொடுத்தது தான். பலர் தமது தனிப்பட்ட குரோதத்தை தீர்த்துக் கொள்வதற்கு மத நிந்தனை சட்டத்தை தவறாகப் பயன்படுத்துகிறார்கள். இதை அவர் ஊடகவியலாளர்களை கூட்டி அறிவித்தார். அந்தக் காலத்தில் உலகச் செய்தியாக வலம் வந்த ஆசியா பீபி வழக்கு தொடர்பாக அவ்வாறு பேசி இருந்தார். ஆசியா பீபி என்ற ஒரு எழுத்தறிவற்ற ஏழை கிறிஸ்தவ பெண், தாகத்தை தணிப்பதற்காக ஒரு முஸ்லிம் பெண்ணின் குவளையில் இருந்த தண்ணீரை குடித்த ஒரு அற்பக் காரணத்திற்காக அவர் மீது மத நிந்தனை குற்றம் சுமத்தி சிறையில் அடைத்தார்கள். அவர் மீது மரண தண்டனை விதிக்கப் பட்டிருந்தது.
ஒரு கிறிஸ்தவப் பெண் தண்ணீரை தொட்டு விட்டதால் தீட்டுப் பட்டு விட்டது என்பது தான் அவர்களது பிரச்சினை. சமுதாயத்தில் கிறிஸ்தவர்கள் தாழ்த்தப் பட்ட சாதியினராக இருப்பதால் அவர்கள் அசுத்தமானவர்கள், எதைத் தொட்டாலும் தீட்டாகி விடும் என்பது, கிராமப் புறங்களில் உயர்த்தப்பட்ட சாதியினராக உள்ள முஸ்லிம்கள் பலரின் நம்பிக்கை. அதாவது இது இந்தியாவில் நிலவும் தீண்டாமைக் கொடுமை போன்றது. பாகிஸ்தானிலும் அதே சாதிப் பிரச்சினை தான். எந்த வித்தியாசமும் இல்லை. ஆனால் அங்கே ஆதிக்க சாதியினர் இஸ்லாமிய மதம் சார்ந்த சட்டத்தை தமக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள முடிகிறது என்பது மட்டுமே வித்தியாசம். நண்பர்களே, இது வெறுமனே மதம் சம்பந்தப்பட்ட விடயம் அல்ல. சாதிய, வர்க்க முரண்பாடுகளும் இதற்குள் மறைந்துள்ளன.
இந்தியாவில் பார்ப்பனர்கள் தமது சாதியை மறைத்துக் கொண்டு இந்துக்கள் என்ற பெயரில் அதிகார வர்க்கமாக வலம் வருகிறார்கள். பாகிஸ்தானிலும் அதே போன்ற உயர் சாதிய பெருமிதம் கொண்டவர்கள் தான் இஸ்லாமிய பாதுகாவலர்கள் வேடம் போடுகிறார்கள். (பாகிஸ்தானில் இன்றைக்கும் பலருக்கு பிராமண சாதிப்பெயர்கள் உள்ளன.) பெரும் நிலவுடைமையாளர்களாக, செல்வந்தர்களாக உள்ள உயர் சாதிய அதிகார வர்க்கம் மதத்தின் பெயரால் ஆதிக்கம் செலுத்துகிறது. அது திரைமறைவில் பாகிஸ்தான் அரசை ஆட்டிப் படைக்கிறது. இதிலே வேடிக்கை என்னவென்றால், இந்தியாவில் இந்துத்துவா பாஜக ஆட்சியதிகாரத்தை கைப்பற்றிய மாதிரி, பாகிஸ்தானில் இன்றைக்கும் ஒரு "இஸ்லாமிய- பாஜக" ஆட்சிக்கு வர முடியாமல் உள்ளது. பொதுத் தேர்தலில் அத்தகைய கட்சிகள் ஐந்து சதவீத வாக்குகளை கூட பெறுவதில்லை. அவர்கள் தேர்தலில் வெல்கிறார்களோ இல்லையோ, நடைமுறை அரசியலில் செல்வாக்கு செலுத்துகிறார்கள்.
மத நிந்தனை சட்டம் கிறிஸ்தவ நாடுகளில் இல்லையா என்று கேட்கலாம். ஐரோப்பாவில் பதினெட்டாம் நூற்றாண்டு வரையில் மத நிந்தனை தண்டனைக்குரிய குற்றமாகக் கருதப் பட்டது. அப்போதும் சில அடிப்படைவாத கிறிஸ்தவ மதகுருக்கள் சொல்வதெல்லாம் சட்டமாக இருந்தது. பைபிளை எழுதியது ஒரு மனிதன் என்று யாராவது சொன்னாலே அது ஒரு மத நிந்தனைக் குற்றமாக கருதப் பட்டது. அதாவது மக்களை கேள்வி கேட்க விடாமல் அடிமைகளாக வைத்திருப்பதற்கு மத நிந்தனைச் சட்டம் ஆட்சியாளர்களுக்கு உதவுகிறது. இதை நாங்கள் ஒரு கலாச்சார புரட்சி ஊடாகத் தான் மாற்றியமைக்க முடியும்.
4 comments:
இறைவன் பாவம் இல்லையா? மனிதன் காப்பாற்றாமல் யார் அவனைக் காப்பாற்ற இருக்கிறார்கள்? உங்களைப் போன்றவர்களுக்கு இறைவன்மேல் இரக்கம் இல்லையா?
உண்மையில் கடவுள் ஒருவர் இருந்தால், அவர் சர்வ வல்லமை உடையவரானால் இந்த அற்ப விடயங்களால் கடவுளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
அவ்வளவு பலவுனமானவரா கடவுள்? புரியவில்லை.
உண்மையில் கடவுள் ஒருவர் இருந்தால், அவர் சர்வ வல்லமை உடையவரானால் இந்த அற்ப விடயங்களால் கடவுளுக்கு பாதிப்பு ஏற்படுமா?
அவ்வளவு பலவுனமானவரா கடவுள்? புரியவில்லை.
😁😁😁
Post a Comment