Friday, June 05, 2020

அமெரிக்கப் புரட்சி 2.0

அமெரிக்காவில் நடப்பது கறுப்பின விடுதலைப் போராட்டம் மட்டுமல்ல, அது வர்க்கப் போராட்டமும் தான். முன்னெப்பொதும் இல்லாதவாறு பெருமளவு வெள்ளையின உழைக்கும் மக்கள் போராட்டத்தில் பங்கெடுக்கின்றனர். அவர்களும் பொலிஸ் வன்முறைக்கு பலியாகிறார்கள். 

அண்மைக் கால கொரோனா நெருக்கடியும் அதனால் ஏற்பட்ட வேலையிழப்புகளும் அவர்களை போராடத் தூண்டிய காரணிகள். அங்கு நடக்கும் கொள்ளைகளில் பெரும்பாலும் சிறுவணிகர்களின் கடைகள் பாதிக்கப் பட்டுள்ளன. அவர்களில் கறுப்பின உரிமையாளர்களும் அடங்குவார்கள். அவர்களது வியாபார நிறுவனங்களும் சூறையாடப் பட்டுள்ளன. அதிலென்ன ஆச்சரியம்? கருப்போ, வெள்ளையோ, குட்டி முதலாளிகளின் வர்க்கக் குணம் ஒன்று தான். 

கறுப்பின மேட்டுக்குடியினர் இப்போதும் அரசுக்கு ஆதரவாகவே நடந்து கொள்கிறார்கள். அரசும் முக்கிய கறுப்பின பிரமுகர்களை, விளையாட்டுத்துறை பிரபலங்களை தொலைக்காட்சியில் தோன்றி "அறிவுரை" கூற வைக்கிறது. அவர்களும் "மக்களே, அமைதி வழியில் போராடுங்கள்... கலவரங்களில் ஈடுபடாதீர்கள்... கடைகளை கொள்ளையடிக்காதீர்கள்... இது அராஜகம்... அதனால் எமது இனத்திற்கு தான் பாதகம்..." என்றெல்லாம் கெஞ்சிப் பார்த்தார்கள். அதற்கு யாரும் செவி கொடுக்கவில்லை. வசதி படைத்தவனுக்கு வசதி இல்லாதவனின் வலி புரியாது. 

இன்று போராடும் மக்களிடம் இழப்பதற்கு சங்கிலிகளை தவிர வேறெதுவும் இல்லை. ஆளும் வர்க்கம் கீறிய வட்டத்திற்குள் நின்று கொண்டு போராடுவதற்குப் பெயர் போராட்டம் அல்ல. முட்டையை உடைக்காமல் ஆம்லெட் போட முடியாது. முதலாளித்துவ அமைப்பை தகர்க்காமல் விடுதலை பெற முடியாது. அந்த உண்மையை அமெரிக்க உழைக்கும் மக்கள் எப்போதோ உணர்ந்து விட்டார்கள்.


1 comment:

Yarlpavanan said...

சிறப்பான பதிவு
சிந்திப்போம்