Tuesday, September 17, 2019

பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சுவிஸ் தமிழரின் பண்பாட்டுப் புரட்சி


பெண் ஆணுக்கு கட்டிய தாலி! - சில விளக்கங்கள்:


சுவிட்சர்லாந்தில் வாழும் புலம்பெயர்ந்த ஈழத்தமிழ் சமூகத்த்தில் நடந்த ஒரு திருமணத்தில் மணமக்கள் தமது "தமிழ்ப் பண்பாட்டின் படி" ஒருவருக்கொருவர் தாலி கட்டிக்கொண்ட திருமணம் பலத்த சர்ச்சையை உண்டாக்கி விட்டுள்ளது. குறிப்பாக "பழமைவாதிகளும், இந்து மத அடிப்படைவாதிகளும்" குய்யோ முறையோ என்று தலையில் அடித்து கதறிக் கொண்டிருக்கிறார்கள். அதற்காக ஒரு சிறு விளக்கம்.

சில தினங்களுக்கு சுவிட்சர்லாந்தில் ஒரு மண்டபத்தில் (கோயிலில் அல்ல) நடந்த மேற்படி திருமண நிகழ்வுக்கு பலர் சமூகமளித்து இருந்தனர். மாப்பிள்ளை சுவிஸ் புலிகளின் இளையோர் அமைப்பை சேர்ந்தவர் என்பதால், நிறையப் பேருக்கு அவரைத் தெரியும். இருப்பினும் "மணப்பெண் மணமகனுக்கு தாலி கட்டும்" படம் சமூக வலைத்தளங்களில் பரவிய பின்னர் தான், அது அனைத்துலக தமிழர்கள் மத்தியில் பலத்த சர்ச்சைகளை தோற்றுவித்தது.

முதலில் மணமகன், மணப்பெண் ஆகியோரின் வாழ்க்கைச் சூழல், அரசியல் அபிலாஷைகள் போன்றவற்றை கவனத்தில் எடுக்க வேண்டும். இருவரும் குழந்தைப் பராயத்தில் இருந்தே சுவிட்சர்லாந்தில் வளர்ந்து வரும் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த ஈழத் தமிழர்கள். புலிகளின் தமிழ்த்தேசிய அரசியலின் தீவிர விசுவாசிகள்.

புலம்பெயர்ந்த நாடுகளில் புலிகள் தொடர்பாக மாற்றுக் கருத்துக் கொண்டவர்களும், புலிகளின் பெயரிலான அடையாள அரசியல் பற்றி எந்தக் குறையும் கூறுவதில்லை. அந்தளவு புரிந்துணர்வு உள்ளது. உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் பெற்றோர் புலி எதிர்ப்பாளர்களாக இருப்பார்கள். ஆனால், பிள்ளைகள் தீவிர புலி ஆதரவாளர்களாக இருப்பார்கள். அதற்குக் காரணம் அடையாள அரசியல். வெள்ளையரின் நாடொன்றில் தமிழ் இளையோர் தமக்கான அடையாளத்தை தேடுகின்றனர்.

தமிழ்த்தேசிய அரசியல் என்பது தமிழ்ப் பண்பாட்டையும் உள்ளடக்கியது தான். இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழ் இளையோர் அதற்கு எதிரானவர்களும் அல்ல. மாறாக, பலர் சுயவிருப்பின் பேரில் பண்பாட்டுக் கூறுகளை ஏற்றுக் கொள்கிறார்கள். ஆகையினால், அவர்களுக்கு தெரிந்த "தமிழ்ப் பண்பாட்டை" பின்பற்றி, தாலி கட்டி கல்யாணம் செய்து கொண்டதில் எந்தத் தவறும் இல்லை. இங்கே பெண் ஆணுக்குத் தாலி கட்டியது தான் பழமைவாதிகளின் கண்களை உறுத்துகிறது.

புலம்பெயர் நாடொன்றில் இரண்டாம் தலைமுறையை சேர்ந்த தமிழர்கள் சந்திக்கும் கலாச்சார அதிர்ச்சியை முதலில் நாங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இந்நாட்டு பாடசாலை ஒன்றில் படிக்கும் தமிழ்ச் சிறுமி தனக்கு நடந்த சாமத்திய சடங்கு (மஞ்சள் நீராட்டு) பற்றி பள்ளி மாணவர்களுக்கு எப்படி விளக்குவாள்? இதிலுள்ள சங்கடங்கள் பற்றி ஏற்கனவே பலர் பேசி விட்டனர். அதே போன்ற சங்கடம் தான் தாலி கட்டுவதில் உள்ள பிரச்சினை என்று சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?

பல்லின சமூகங்கள் வாழும் நாடொன்றில் வாழும் மக்கள் மத்தியில் பலதரப் பட்ட கலாச்சாரங்கள் பற்றிய அறிவும் அதிகமாக இருக்கும். உதாரணத்திற்கு துருக்கி திருமண விழாவில் மணமக்களை ஏற்றிச் செல்லும் வாகனத் தொடரணி தெருவில் ஹாரன் அடித்துக் கொண்டே செல்லும். இந்நாடுகளில் ஹாரன் அடிக்கத் தடை இருந்தாலும், அது துருக்கியரின் பண்பாட்டு நிகழ்வு என்பதற்காக அனுமதிக்கிறார்கள். இந்த விடயம் இந்நாடுகளில் வாழும் அனைவருக்கும் தெரியும். பலர் அதைப் பார்த்து இரசிக்கிறார்கள். அந்தளவு ஐரோப்பிய கலாச்சாரம் பன்முகத்தன்மை கொண்டதாக மாறி விட்டது.

இப்போது தாலி கட்டும் விடயத்திற்கு வருவோம். தமிழர்களின் திருமண சடங்கில் ஆண் பெண்ணுக்கு தாலி கட்டுவது எமக்கு வேண்டுமானால் சர்வசாதாரணமாகத் தெரியலாம். ஆனால், வேற்றின மக்களுக்கு அது விசித்திரமாக இருக்கும். நான் வேற்றின நண்பர்களுக்கு தமிழரின் திருமண சடங்கு பற்றி விளக்கம் கொடுக்கும் நேரம், "ஆணும், பெண்ணும் மாறி மாறி தாலி கட்டிக் கொள்வார்கள் தானே?" என்று சர்வசாதாரணமாகக் கேட்பார்கள். நான் அப்படி அல்ல என்று சொன்னால், அதை அவர்களால் புரிந்து கொள்ள முடியாது. இதனை "ஆணுக்கு பாரபட்சம் காட்டும் விடயமாக" எடுத்துக் கொள்வார்கள்.

எனக்கு நேர்ந்த இந்த அனுபவம் ஏனையோருக்கும் ஏற்பட்டிருக்கும். குறிப்பாக சுவிட்சர்லாந்தில் தாலி கட்டிக் கொண்ட மணமக்களின் சொந்த அனுபவமாகவும் இருக்கலாம். ஏனெனில் அவர்களும் சுவிஸ் சமூகத்தில் ஒன்று கலந்து வாழ்கிறார்கள். அவர்களது பள்ளித் தோழர்கள், சக தொழிலாளர்கள் ஆகியோர் பெரும்பாலும் சுவிஸ்காரர்கள், அல்லது பல்வேறு ஐரோப்பிய மற்றும் பல உலக நாடுகளில் இருந்து வந்தவர்கள்.

இங்கு வாழும் தமிழர்கள் குறைந்தது பத்து வேறுபட்ட இனத்தவருடன் நட்பாக இருப்பது சர்வசாதாரணமான விடயம். அவ்வாறான சூழலில் வாழும் மணமக்கள் தமது திருமண சடங்கை பார்ப்பதற்கு பல்லின நண்பர்களுக்கும் அழைப்பு விடுத்திருப்பார்கள். வழமையான திருமணங்களில் நடப்பதைப் போன்று "ஆண் பெண்ணுக்கு தாலி கட்டினால்..." அது தான் இங்கே தவறான விடயமாகக் கருதப் படும்! அதை விட ஆணும் பெண்ணும் ஒருவருக்கொருவர் தாலி கட்டிக் கொண்டால் அதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஆசீர்வதிப்பார்கள்.

பண்பாடு என்பது ஒன்றும் புனிதமானது அல்ல. அது மக்கள் தாமாகவே உருவாக்கிக் கொண்ட பழக்க வழக்கம். அது காலத்திற்கு ஏற்றவாறு மாறக் கூடியது. ஒரு காலத்தில் மஞ்சள் கயிறில் தாலி கட்டியவர்கள் தங்கத்தால் தாலி செய்து போடவில்லையா? இதெல்லாம் கலாச்சாரக் காவலர்களுக்கு ஒரு பண்பாட்டுப் பிறழ்வாக தெரியாதது அதிசயம்!

இன்றைக்கும் தமிழகத்தில், நீலகிரி மலைகளில் வாழும் இருளர் பழங்குடி இன மக்கள் மத்தியில் நடக்கும் திருமணச் சடங்கில் ஆணுக்கும், பெண்ணுக்கும் தாலி கட்டுகிறார்கள். உண்மையிலேயே ஒரு காலத்தில் இந்தப் பழக்கம் பரவலாக இருந்திருக்கும். ஆனால் ஆணாதிக்க சமுதாயம் வளர்ச்சி அடைந்த "நாகரிக" காலகட்டத்தில், தாலி பெண்ணுக்குரியதாக மட்டும் குறுக்கப் பட்டிருக்கலாம். சுவிஸ் மணமக்கள் அந்தப் பிழையை சரியாக்கிக் காட்டி இருக்கிறார்கள்.

பழமைவாதிகளின் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலாக ஒரு பண்பாட்டுப் புரட்சியை நடத்திக் காட்டிய மணமக்களுக்கு வாழ்த்துக்கள்.

No comments: