Monday, May 18, 2015

தமிழ் நாடு, ஈழத் தேசிய விடுதலைப் போராட்டங்கள் - ஒரு மீளாய்வு


ஈழ விடுதலைப் போராட்டம் நடந்த அதே கால கட்டத்தில், தமிழ் நாடு விடுதலைப் போராட்டமும் நடந்தது என்ற தகவல், இன்றைக்கும் பலரால் நம்ப முடியாமல் இருக்கலாம். அதற்கு முக்கியமாக இரண்டு காரணங்களை குறிப்பிடலாம்.


  1. ஆரம்பத்தில் இருந்தே, இந்திய அரசு ஈழத் தமிழரின் பிரச்சினையை, தனது வெளிவிவகார கொள்கையின் ஒரு பகுதியாக கொண்டிருந்தது. அது தனது நாட்டிற்குள் எந்த இடத்திலும் இனப் பிரச்சினை கிடையாது என்று உலகை ஏமாற்றிக் கொண்டிருந்தது. 
  2. ஈழத்தில் தமிழ் பூர்ஷுவா வர்க்கம், சிங்கள பூர்ஷுவா வர்க்கத்துடன் ஏற்பட்ட முரண்பாடுகளை தீர்த்துக் கொள்வதற்காக தனி நாட்டுக் கோரிக்கையை முன் வைத்திருந்தது. இனப் பிரச்சினையில் வட மாகாண குட்டி முதலாளிய இளைஞர்களும் பாதிக்கப் பட்ட பின்னர் தான், அது முப்பதாண்டு கால ஈழப் போராக பரிணமித்தது.


தமிழகத்தில் அண்ணாத்துரை தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகம் தான் முதன் முதலாக தமிழ் தேசியத்தை நிறுவன மயப் படுத்தியது. அதன் தாக்கம் ஈழத்தில் பல இடங்களிலும் எதிரொலித்தது. இலங்கையில் வாழும் தமிழர்களும், தமிழக சினிமாப் படங்களின் இரசிகர்களாக, தமிழக சஞ்சிகைகளின் வாசகர்களாக இருந்து வந்துள்ளனர். இதனால் தமிழகத்தில் நடக்கும் அரசியல் மாற்றங்கள் பற்றிய தகவல்கள், உடனுக்குடன் ஈழத்திற்கும் கடத்தப் பட்டன. ஈழத் தமிழர்கள், திமுக தலைவர் கருணாநிதியை தமிழினத் தலைவராக ஏற்றுக் கொண்டிருந்த காலம் ஒன்றிருந்தது. முதன்முதலாக தமிழீழக் கோரிக்கை வைத்த தமிழர் விடுதலைக் கூட்டணிக் கட்சி, திமுக வின் உதயசூரியன் சின்னத்தை சுவீகரித்து இருந்தது.

தமிழகத்து பூர்ஷுவா வர்க்க நலன் சார்ந்த திமுக, தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டதும், அதற்கு பதிலாக உடனடியாக ஒரு மாற்று இயக்கம் தோன்றவில்லை. இரண்டு தசாப்தங்களுக்குப் பின்னர், நக்சல்பாரி இயக்கத்தில் இருந்து பிரிந்த தமிழரசன் குழுவினர் தமிழ்நாடு விடுதலையை தமிழ் பாட்டாளி வர்க்கக் கோரிக்கை ஆக்கினார்கள். எழுபதுகளுக்குப் பின்னர் ஈழத்தில் எழுந்த குட்டி முதலாளிய வர்க்கத்தின் எழுச்சியின் தீவிரத்திற்கு, த.வி.கூ. வினால் முகம் கொடுக்க முடியவில்லை. அதனால், விரைவிலேயே அரசியல் அரங்கில் இருந்து ஒதுக்கப் பட்டது. ஆனால், ஈழத்தில் எழுந்த மாற்று அரசியல் அமைப்புகள், பிராந்திய வல்லரசான இந்தியாவின் பிடிக்குள் சிக்கிக் கொண்டு தவித்தன.

எழுபதுகளில் சிங்கள இளைஞர்களை திருப்திப் படுத்தும் நோக்கில், இலங்கை அரசு கொண்டு வந்த தரப்படுத்தல் சட்டம், வட இலங்கையை சேர்ந்த குட்டி முதலாளிய வர்க்க இளைஞர்களின் எழுச்சிக்கு வழிவகுத்தது. தமிழகத்திலும், இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம் அது போன்ற எழுச்சியை உண்டாக்கி இருந்தாலும், அதன் பலன்களை ஏற்கனவே திமுக அறுவடை செய்து விட்டிருந்தது. ஈழத்தில் நடந்த இளைஞர்களின் எழுச்சி, மிதவாத தமிழ் அரசியல் தலைமையை கேள்விக்குள்ளாக்கியது. பாராளுமன்ற பாதையை நிராகரித்து, ஆயுதப் போராட்டத்தை தேர்ந்தெடுத்தது. ஆரம்பத்தில், த.வி.கூ. தீவிரவாத இளைஞர்களை தனது அடியாட்படையாக வைத்திருக்க விரும்பியது. ஆயினும், தீவிரவாத இளைஞர்கள் மத்தியில் பரவிய இடதுசாரிக் கருத்துக்கள் தான், மிதவாத அரசியல்வாதிகளின் பித்தலாட்டங்களை அவர்களுக்கு அடையாளம் காட்டியது எனலாம்.

அறுபதுகளில் யாழ்ப்பாணத்தில் நடந்த தீண்டாமை ஒழிப்புப் போராட்டமும், எழுபதுகளின் தொடக்கத்தில் தென்னிலங்கையில் நடந்த ஜேவிபி கிளர்ச்சியும், ஆயுதப் போராட்டம் சாத்தியமே என்ற எண்ணத்தை இளைஞர்கள் மனதில் விதைத்தது. அதே மாதிரி, ஈழப் போராட்ட இயக்கங்களின் துணிச்சல் மிக்க நடவடிக்கைகள் தமிழகத்தில் எதிரொலிகளை உண்டாக்கிய நேரம், தமிழ் நாடு விடுதலைப் படை தோன்றியது. ஒன்றுடன் ஒன்று தொடர்புடைய பௌதிகவியல் விதிகளுக்கு அமைய அனைத்தும் நடந்துள்ளன. அந்த உண்மையை மக்கள் தெரிந்து கொள்வதற்கு முன்னர், அரசுகள் புரிந்து கொள்கின்றன. அதனால் தான், முப்பதாண்டு கால போருக்குப் பின்னர், மிகக் கொடூரமாக புலிகளை அழித்து, தெற்காசிய பிராந்திய விடுதலை இயக்கங்களுக்கு எச்சரிக்கை விடுத்தது.

கடந்த கால அனுபவங்களில் இருந்து படிப்பினைகளை பெறுவதும், அதன் அடிப்படையில் ஒரு விடுதலை இயக்கத்தை கட்டமைப்பதும் ஒடுக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவையாக உள்ளன. ஈழப் போராட்டத்தின் ஆரம்ப காலங்களில், ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் தமிழ் நாடு விடுதலை பற்றிய விழிப்புணர்வும் ஏற்பட்டிருந்தது. பல்வேறு விடுதலை இயக்கங்களின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் சிலர் தமது தனிப்பட்ட கருத்தாக அதனை முன்மொழிந்துள்ளனர். இருப்பினும் தலைமை அது குறித்து எந்தக் கருத்தும் கூறாமல் மௌனமாக இருந்தது. 

இடதுசாரி இயக்கங்கள் கூட, இந்திரா காந்தி மறைவுக்கு அஞ்சலி செலுத்துமளவிற்கு, இந்தியாவின் கைப் பொம்மைகளாக இயங்கினார்கள். ஆயுதங்கள், நிதிகளை வழங்கி, ஈழ விடுதலை அமைப்புகளை இந்தியா தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்தது. அது இறுதியில், இந்தியா விரும்பிய நேரம் அந்த இயக்கங்களை அழிப்பதற்கு வழி வகுத்தது.

ஈழத்தின் விடுதலைப் போராட்டம், தமிழ் பேசும் பூர்ஷுவா வர்க்க கோரிக்கையாக தொடங்கினாலும், அது குட்டி முதலாளிய இளைஞர்களினால் வழிநடாத்தப் பட்டு, பாட்டாளி வர்க்க மக்களின் கைகளில் வந்து சேர்ந்தது. பெரும்பான்மை தமிழ் மக்களின் ஆதரவின்றி, முப்பதாண்டுகள் வெற்றிகரமாக போராட முடிந்திருக்காது என்று வெளிநாட்டு ஆய்வாளர்களும் ஏற்றுக் கொள்கின்றனர். ஆனால், அந்தப் "பெரும்பான்மை மக்கள்" யார்? ஈழத்தின் தமிழ் உழைக்கும் மக்கள் அல்லவா? 

உயிரை அர்ப்பணிக்கத் தயாராக இருந்த போராளிகள் ஒடுக்கப்பட்ட மக்கள் மத்தியில் இருந்து தான் உருவானார்கள். சாதி ஒடுக்குமுறைக்கு பலியான, வறுமையினால் பாதிக்கப் பட்டவர்கள், அதாவது இழப்பதற்கு எதுவுமற்ற மக்கள் தான் போராடினார்கள். அந்த மக்களை நிறுவன மயப் படுத்துவதும், ஓர் இனத்தின் விடுதலைக்கு தலைமை தாங்க வைப்பதும், ஈழத்தில் மட்டுமே சாத்தியமான ஒன்றல்ல. ஆனால், ஒரு தேசிய இனத்தின் சுதந்திரமும், சுய நிர்ணய உரிமையும், அதற்கு அயலில் வாழும் பாட்டாளி வர்க்க மக்களின் ஒற்றுமையினால் மட்டுமே சாத்தியமாகும்.

No comments: