Wednesday, April 29, 2015

அமெரிக்க இனக் கலவரங்கள் : வர்க்கப் புரட்சிக்கான ஒத்திகை


இது தாண்டா அமெரிக்க பொலிஸ்! பால்டிமோர் நகரில், போலீஸ்காரர்களே முதலில் மக்கள் மேல் கல்லெறிந்து தாக்கினார்கள். பதிலுக்கு மக்களும் கற்களால் தாக்கத்தொடங்கியதும், புறமுதுகிட்டு ஓடுகின்றனர்.
(கீழேயுள்ள வீடியோவை பார்க்கவும்)


இது தான் அமெரிக்கா! இந்தப் படங்களை உங்களுக்கு எந்த ஊடகமும் காட்டப் போவதில்லை! அமெரிக்காவில் பால்டிமோர் நகரில், மீண்டும் ஒரு கருப்பின இளைஞன் பொலிசாரால் சுடப்பட்டு மரணமடைந்தான். கொடுமை கண்டு பொங்கி எழுந்த ஆயிரக்கணக்கான மக்கள், இனவெறிப் பொலிஸின் அட்டூழியத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர். அமைதியாக ஆரம்பித்த ஆர்ப்பாட்டம் பெரும் கலவரத்தில் முடிந்துள்ளது. பொலிஸ் வாகனங்கள் தாக்கப் பட்டன.

25 வயதான Freddie Gray என்ற கருப்பின இளைஞனை கைது செய்ய முயன்ற பொலிசார், அவனை சுட்டுக் காயப் படுத்தி இருந்தனர். சம்பவம் நடந்த அன்று முதலுதவி சிகிச்சை அளிக்காத படியால், மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சில நாட்களின் பின்னர் மரணமடைந்தான். முதலுதவி சிகிச்சை அளிக்காதது தங்களது தவறு தான் என்று, பால்டிமோர் பொலிஸ் அதிகாரி தெரிவித்திருந்தார்.

August 9, 2014 பெர்குசன் நகரில் நடந்த கலவரத்தின் தொடர்ச்சியாகவே, பால்டிமோர் கலவரமும் நடந்துள்ளது. இரண்டிலும் இன அடிப்படையிலான பாகுபாடு மாத்திரமல்லாது, வர்க்க வேறுபாடும் கலவரங்களுக்கு காரணமாக இருந்துள்ளது. பெர்குசன் கலவரம் நடந்த போது, நான் எழுதிய குறிப்புக்கள் இவை. அமெரிக்காவில் ஒடுக்கப்பட்ட கருப்பின மக்களின் எழுச்சிக்கான காரணங்களை புரிந்து கொள்ள அவை உதவும்.


பெர்குசன் நகர கலவரம்

அமெரிக்காவில் பெர்குசன் நகரில், காவல்துறையினர் ஒரு கருப்பினச் சிறுவனை சுட்டுக் கொன்றதன் பின்னர் ஏற்பட்ட மக்கள் எழுச்சி ஒரு புரட்சிக்கான ஆரம்பம் ஆகும். பெர்குசன் நகரில் வடக்குப் பகுதியில் கருப்பின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் ஏழைகள் அதிகம்.

தெற்குப் பகுதியில் வெள்ளையின மக்கள் செறிவாக வாழ்கின்றனர். அங்கே தான் பணக்காரர்கள் அதிகம். ஏழைகளின் பகுதியில் மருத்துவ வசதி இல்லை, கல்வி கற்பதற்கு பல மைல் தூரம் செல்ல வேண்டும். பணக்கார குடியிருப்புகளில் எல்லாம் கைக்கு எட்டிய தூரத்தில் உள்ளன. கருப்பு - வெள்ளை எனும் இனப் பாகுபாடு மட்டுமல்லாது, வர்க்க வேறுபாடும் அண்மைய கலவரங்களுக்கு வித்திட்டுள்ளன.

பெர்குசன் நகரில் பலர் வெளி மாநிலங்களில் இருந்து வந்து கலவரத்தில் ஈடுபடுவதாக பொலிஸ் குற்றஞ் சாட்டியது. அதற்குக் காரணம், அங்கு நடந்த சம்பவங்களை, வெறும் கலவரம் என்று சொல்ல முடியாது. எகிப்தில், துனீசியாவில் நடந்தது போன்ற மக்கள் எழுச்சி. இரவு நேரங்களில், பொலிசாருடன் மோதல்கள் நடந்தன. அதே இடங்கள், பகல் நேரங்களில் அரசியல் விவாதங்கள் நடக்கும்.

எகிப்து, துனீசியாவில் நடந்ததைப் போன்று, சமூக வலையமைப்புகள் மக்களை ஒன்று திரட்ட பயன்பட்டன. எல்லோரும் கைத் தொலைபேசி கொண்டு திரிந்து, படம் எடுத்து தகவல்களை இணையம் ஊடாக பரப்பிக் கொண்டிருந்தார்கள். காப்பரேட் ஊடகங்கள், அங்கு நடந்த கடைகளை சூறையாடிய சம்பவங்களை பற்றி மட்டும் சொல்லிக் கொண்டிருந்தன. மக்கள் எழுச்சி பற்றி அவை எதுவும் கூறாமல் மௌனம் சாதித்தன.

பெர்குசன் நகரின் மத்தியில் உள்ள மக்டொனால்ட்ஸ் உணவகத்தில் ஆர்வலர்கள் ஒன்று கூடுவார்கள். எந்த வகையான போராட்டம் நடத்துவது என்பது குறித்து விவாதிப்பார்கள். போராட்டத் தலைவர்கள் யாரும் அரசியல்வாதிகள் அல்ல. சாமானியர்களின் பிரதிநிதிகள். மக்கள் மத்தியில் இருந்து தெரிவு செய்யப் பட்ட குழுவினர் முடிவுகளை எடுக்கின்றது.

பெர்குசன் நகரில் இன்னொரு அதிசயத்தையும் பார்க்கலாம். கிறிஸ்தவ மதகுருக்களும், தீவிர இடதுசாரிகளும் தோளோடு தோள் சேர்ந்து, போராடும் மக்களை வழிநடத்தினார்கள். சில திபெத்திய பௌத்த பிக்குகளும் சேர்ந்து கொண்டார்கள். புதிதாக நிறுவன மயப் பட்ட கருப்பின மக்களின் விடுதலைக்கான கருஞ் சிறுத்தைகள் இயக்க உறுப்பினர்கள் முன்னரங்கில் நின்றார்கள்.

பெர்குசன் கருப்பின சமூகத்தை சேர்ந்த பிரபலமான ராப் பாடகர் ஒருவர், பணம் நிறைய வந்ததும், வெள்ளையின மக்கள் வாழும் பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்று வசித்து வந்தார். அவர் தனது சமூக மக்களை கண்டு பேசுவதற்கு வந்த நேரம், மக்கள் அவரை கூச்சலிட்டு விரட்டி விட்டார்கள்.

கலவரத்திற்கு முன்பு, கருப்பின மக்களின் பிரதேசத்திற்கு சாதாரண வெள்ளையின மக்கள் செல்ல மாட்டார்கள். "குற்றச் செயல்கள் அதிகமாக நடப்பதாக" ஒரு காரணம் சொல்வார்கள். அண்மைய மக்கள் எழுச்சியில் நிறைய வெள்ளையின ஆர்வலர்களும் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்டுகள், அனார்க்கிஸ்டுகளுக்கு பெரும் வரவேற்புக் கிடைத்தது.

பெர்குசன் நகரில் குவிந்திருந்த கலவரத் தடுப்பு பொலிஸ் படையினர், ஓர் இராணுவம் போன்று நடந்து கொண்டனர். அந்தப் பிரதேசம் ஒரு போர்க்களம் போன்று காட்சியளித்தது. எகிப்தில் நடந்தது போல, அமெரிக்கப் பொலிஸ் படையும் அளவுக்கு அதிகமான கண்ணீர்ப் புகை குண்டுகளை வீசியது.

பெர்குசனில் பொலிசை எதிர்த்துப் போராடிக் கொண்டிருந்த மக்களுக்கு, பல உலக நாடுகளில் இருந்தும் ஆதரவாளர்கள் சமூக வலையமைப்புகள் மூலமாக ஆலோசனைகளை வழங்கிக் கொண்டிருந்தார்கள். குறிப்பாக சில பாலஸ்தீன ஆர்வலர்கள், கண்ணீர்ப் புகைக் குண்டுகளில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி என்று சொல்லிக் கொடுத்தார்கள்.

பெர்குசனில் நடந்தது ஒரு முழுமையான அமெரிக்கப் புரட்சி அல்ல. ஆனால், அதற்கான முன்னோட்டம். வருங்காலப் புரட்சியாளர்களின் பயிற்சிக் களம்.இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

No comments: