Tuesday, April 07, 2015

ஏன் சர்வதேசம் கென்யா, முள்ளிவாய்க்கால் படுகொலைகளை கண்டிக்கவில்லை?


கென்யாவில் அல் ஷஹாப் தீவிரவாத இயக்கத்தினால், 147 பல்கலைக்கழக மாணவர்கள் படுகொலை செய்யப் பட்ட தகவல், மேற்கத்திய ஊடகங்களில் அதிக முக்கியத்துவம் பெறவில்லை.

அதே நேரத்தில், ஜெர்மன் விங்க்ஸ் விமான விபத்தில் கொல்லப் பட்ட பயணிகள் பற்றி மட்டுமே அதிக அக்கறை கொண்டிருந்தன.

பாரிஸில் சார்லி ஹெப்டோ தாக்குதலில் கொல்லப் பட்டவர்களுக்காக, "Je suis Charlie" என்று பொங்கி எழுந்தவர்கள், கென்யா படுகொலைகள் பற்றி கவலைப் படவில்லை. எந்தவொரு உலக நாட்டின் தலைவரும் அனுதாபம் தெரிவிப்பதற்காக கென்யாவுக்கு செல்லவில்லை.

இத்தனைக்கும், அல் ஷஹாப் என்ற இஸ்லாமிய மதவெறிக் கும்பல், வேண்டுமென்றே கிறிஸ்தவ மாணவர்களை தெரிவு செய்து படுகொலை செய்திருந்தது. அதைக் கண்டித்து மேற்கத்திய கிறிஸ்தவர்கள் யாரும் பொங்கி எழவில்லை. சர்வதேச முஸ்லிம் எதிர்ப்பாளர்கள் சீறிப் பாயவில்லை.

இந்த சம்பவத்தில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள். அதனால், அவர்களின் உயிர்கள் பெறுமதியற்றவை. இது "ஒற்றுமையற்ற" கருப்பர்களுக்கு இடையில் நடக்கும் பிரச்சினை என்ற காரணத்தால், "சர்வதேச சமூகம்" (அதாவது வெள்ளையின மேலாண்மை நாடுகள்) பாராமுகமாக இருந்துள்ளன.

"ஏன் எந்தவொரு உலக நாடும் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு கண்டனம் தெரிவிக்கவில்லை?" என்று அப்பாவி போலித் தமிழ்தேசியவாதிகள் கேட்கின்றனர். அதற்கும் இது தான் பதில். இலங்கையில் நடந்த ஈழப் போரில் கொன்றவர்களும், கொல்லப் பட்டவர்களும் கருப்பர்கள்.

சிங்கள - தமிழ் இனப் போரானது, ஒரே கருப்பின மக்களுக்கு இடையில், ஒற்றுமையில்லாத காரணத்தினால் நடக்கும் போராகவே மேற்குலகில் கணிக்கப் படுகின்றது. அதனால், வெள்ளையின மேலாண்மை நாடுகள் அது குறித்து கவலைப் படவில்லை. போலித் தமிழ்த் தேசியவாதிகள், இனிமேலாவது உலக யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும்.

No comments: