Monday, March 24, 2014

நாஸிகளால் அழிக்கப் பட்ட கறுப்பின- ஜெர்மனியர்கள்

ஜெர்மனியில் நாஸிகள் கால கட்டத்தில் நடந்த யூத இனப்படுகொலை பற்றி, உலகம் முழுவதும் ஏராளமானோர் அறிந்து வைத்திருக்கின்றனர். அதே நேரம், நாஸிகளால் படுகொலை செய்யப் பட்ட, ஜிப்சிகள், ஜெர்மன் கம்யூனிஸ்டுகள் பற்றி சிலர் அறிந்திருக்கிறார்கள். ஆனால், நாஸிகளால் பாதிக்கப்பட்ட ஆப்பிரிக்க கறுப்பின மக்கள் பற்றி அறிந்தவர்கள் மிக மிகக் குறைவு.

பிற ஐரோப்பிய காலனியாதிக்க வல்லரசுகள் போன்று, ஜெர்மனியும் ஆப்பிரிக்க கண்டத்தில் சில காலனிகளை வைத்திருந்தது. கமெரூன், நமீபியா, தான்சானியா போன்ற நாடுகள், முன்னொரு காலத்தில் ஜெர்மன் காலனிகளாக இருந்தன. முதலாம் உலகப்போரில் ஜெர்மனி தோற்றுப் போனது. அதனால், ஆப்பிரிக்க காலனிகளும் பறி போயின. போரில் வென்ற நாடான பிரிட்டன் அவற்றை எடுத்துக் கொண்டது. 

அதற்குப் பிறகு, ஜெர்மனி ஆப்பிரிக்க காலனிகளுக்கு உரிமை கோருவதை கைவிட்டு விட்டது. அதற்கு, ஹிட்லரின் பூகோள அரசியல் கொள்கையும் ஒரு முக்கிய காரணம். "ஜெர்மனி கிழக்கு ஐரோப்பிய நாடுகளை காலனிகளாக பிடித்து வைத்திருக்க வேண்டும்." என்பது ஹிட்லரின் அவா. இன்றைய ஜெர்மனி, கிழக்கு ஐரோப்பிய நாட்டு அரசியல்- பொருளாதார விடயங்களில், பெருமளவு தலையிட்டு வருவது வேறு கதை.

ஜெர்மனியின் தொழிற்துறை நகரமான ஹம்பூர்க்கில், சில நூறு ஆப்பிரிக்கர்கள் வேலை செய்து வந்தனர். அவர்களில் பெரும்பான்மையானோர், கம்யூனிஸ்ட் தொழிற்சங்கத்தில் அங்கத்தவர்களாக இருந்தனர். 1930 ம் ஆண்டு, ஜெர்மனியில் கறுப்பினத்தவருக்கு எதிராக வளர்ந்து வரும் இனவாதம் பற்றி உரையாடுவதற்காக, ஒரு சர்வதேச மகாநாடு கூட்டப் பட்டது. ஹம்பூர்க் நகரில், கம்யூனிச தொழிலாளர்களால் கூட்டப்பட்ட மகாநாட்டில், ஐரோப்பா, ஆப்பிரிக்கா, கரீபியன் நாடுகளில் இருந்து பேராளர்கள் வந்து கலந்து கொண்டனர்.

நாஸிகள் ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதற்கு முன்னர், ஜெர்மனி இரண்டு துருவங்களாக பிரிந்திருந்தது. வலதுசாரிகளான ஒரு பகுதி மக்கள் நாஸிக் கட்சியை ஆதரித்தார்கள். அதே நேரம், இடதுசாரிகளான இன்னொரு பகுதி மக்கள் கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தார்கள். ஜெர்மனியில் வாழ்ந்த கறுப்பினத்தவர்களும், கம்யூனிஸ்ட் கட்சியை ஆதரித்தமை எதிர்பார்க்கத் தக்கதே. அதனால், நாஸிகளின் சர்வாதிகார ஆட்சி ஏற்பட்டவுடன், ஆப்பிரிக்கர்களும் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் தடுப்பு முகாம்களுக்குள் அடைத்து வைக்கப் பட்டு, பின்னர் படுகொலை செய்யப் பட்டனர்.

நாஸிகள் ஜெர்மன் பொது மக்கள் மத்தியில், கறுப்பினத்தவருக்கு எதிரான நிறவெறியை புகுத்துவதற்கு இலகுவாக, முதலாம் உலகப்போரின் முடிவு அமைந்திருந்தது. அயல் நாடான பிரான்ஸ், வெற்றி பெற்ற நாடுகளில் ஒன்றென்பதால், வெர்சேய் ஒப்பந்தப் பிரகாரம் ஜெர்மனியின் ஒரு பகுதியை ஆக்கிரமித்தது. நெதர்லாந்து, பெல்ஜியம் எல்லையோரம் இருக்கும் ரைன் நதிப் பகுதி முழுவதும் பிரெஞ்சுப் படைகள் ஆக்கிரமித்தன.

ஜெர்மனியில் சனத்தொகை அடர்த்தி அதிகமான, தொழிற்துறை வளர்ச்சி கண்ட ரைன் மாநிலத்தில், எண்பதாயிரம் பிரெஞ்சுப் படையினர் குவிக்கப் பட்டனர். ஏற்கனவே, உணவுக்கு வழியின்றி, பஞ்சத்தில் அடிபட்டு நொந்து போயிருந்த ஜெர்மன் மக்களை, பிரெஞ்சுப் படையினர் மேலும் துன்புறுத்தினார்கள். வெற்றி பெற்ற மமதையில் மிதந்த பிரெஞ்சு இராணுவம், தோற்றுப் போன மக்களை தனது மேலாதிக்கத்தின் கீழ் பணிய வைத்தது.

அன்று ஜெர்மனியில் நிலை கொண்டிருந்த பிரெஞ்சுப் படையில் கடமையாற்றிய வீரர்கள், பிரெஞ்சுக் காலனிகளில் இருந்து வந்திருந்தனர். செனகல், மடகஸ்கார், மொரோக்கோ போன்ற ஆப்பிரிக்க நாடுகளை சேர்ந்தவர்கள், அல்லது வியட்நாம், கம்போடியா போன்ற ஆசிய நாடுகளை சேர்ந்தவர்கள். பிரெஞ்சு இராணுவ சீருடை அணிந்திருந்த பெரும்பான்மையான வீரர்கள், ஆப்பிரிக்க கறுப்பர்களாக இருந்தனர்.

அவர்களில் பலர் உள்ளூர் ஜெர்மன் பெண்களுடன் உடலுறவு வைத்திருந்தனர். அதனால், குறைந்தது ஒரு ஆயிரம் கலப்பினப் பிள்ளைகள் பிறந்திருந்தன. நாஸிகளின் தூண்டுதலின் பேரில், கறுப்பின போர் வீரர்களுடன் தொடர்பு வைத்திருந்த பெண்களை, ஜெர்மன் சமூகம் ஒதுக்கி வைத்தது. அவர்களை பாலியல் தொழிலாளிகள் போன்று நடத்தியது. அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகள் கூட, சமூகத்தில் ஒதுக்கி வைக்கப் பட்டனர். "ரைன்லாந்து வேசிகளின் மக்கள்" என்று, சமூகம் அவர்களுக்கு பட்டப் பெயர் சூட்டியது.

ஜெர்மனியில் நாஸிகளின் சர்வாதிகாரம் ஏற்பட்டதும், கறுப்பின பிரெஞ்சுப் போர்வீரர்களின் பிள்ளைகள் பலர் இரவோடிரவாக காணாமல்போனார்கள். அவர்களில் பலர் மலடாக்கப் பட்டனர், அல்லது தடுப்பு முகாம்களில் அடைக்கப் பட்டு, பின்னர் யூதர்களோடு சேர்த்து படுகொலை செய்யப் பட்டனர். 

ஏற்கனவே, நாஸிகள் கறுப்பின பிரெஞ்சு வீரர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வந்தனர். பிரெஞ்சு யூதர்கள், ஜெர்மானியர்களை வேண்டுமென்றே அவமானப் படுத்துவதற்காக, கறுப்பின போர்வீரர்களை கொண்டு வந்ததாக குற்றஞ்சாட்டினார்கள். ஜெர்மன் பாமர மக்கள், நாஸிகளின் பொய்ப் பிரச்சாரத்தை உண்மை என்று நம்பினார்கள். அதனால், கறுப்பின- ஜேர்மனிய சமூகம் அழிக்கப்பட்ட பொழுது, யாரும் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை.

பிற்காலத்தில் நாஸிகள் படையெடுத்து ஆக்கிரமித்த ஐரோப்பிய நாடுகளிலும், பல கறுப்பர்கள் கம்யூனிஸ்டுகள் என்ற பெயரில் கொல்லப் பட்டிருக்கலாம். உதாரணத்திற்கு, நெதர்லாந்தில், அன்டன் கொம் என்ற சுரினாம் நாட்டவர் ஒருவர், பிரபலமான நாஸி எதிர்ப்பு போராளியாக இன்றைக்கும் கௌரவிக்கப் படுகின்றார். அவர் ஒரு கறுப்பின - கம்யூனிஸ்ட். தென் அமெரிக்காவில் டச்சுக் காலனியான சுரினாமில் பிறந்தவர்.

அன்டன் கொம், சுரினாமில் தொழிற்சங்க நடவடிக்கைகள் மூலம், தொழிலாளர்களை வேலை நிறுத்தம் செய்யத் தூண்டுகிறார், என்ற குற்றச் சாட்டில் நெதர்லாந்திற்கு நாடு கடத்தப் பட்டிருந்தார். அன்டன் கொம் நெதர்லாந்து கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இருந்தவர். நெதர்லாந்து நாட்டை, நாஸிப் படைகள் ஆக்கிரமித்த காலத்தில், கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த இரகசிய கெரில்லா இராணுவத்தில் இயங்கி வந்தார். ஆனால், யாரோ காட்டிக் கொடுத்ததால், நாஸிப் படைகளால் கைது செய்யப் பட்டு கொலை செய்யப் பட்டார்.

இனவெறியர்களான நாஸிகள், ஆப்பிரிக்க கறுப்பர்களை, மனித இனப் படி நிலையில், மிகவும் கீழானவர்களாக கணித்து வந்தனர். ஏற்கனவே, ஆப்பிரிக்கர்களை குரங்குகள் போன்று சித்தரிக்கும் படங்களையும் நாஸிப் பிரச்சார பிரசுரங்களில் வரைந்து வந்தனர். ஜெர்மனியர்கள், ஆப்பிரிக்கர்களுடன் திருமணம் செய்வதையும் எதிர்த்து வந்தனர். முன்னாள் ஜெர்மன் காலனிகளில் பணியாற்றிய ஜெர்மனியர்களுக்கு, ஆப்பிரிக்க வைப்பாட்டிகளும், பிள்ளைகளும் இருந்தன.

ஆப்பிரிக்க காலனிகள் பறி போன பிற்பாடு, ஜெர்மனியர்களுக்கும், ஆப்பிரிக்காவுக்கும் இடையிலான தொடர்பு முற்றாக அறுந்து போனது. அதனால் அந்தக் கலப்பின பிள்ளைகள், பெரிதும் பாதிக்கப் பட்டனர். நாஸிகளின் ஆட்சிக் காலத்தில், அப்படி ஒரு வரலாறு இருந்த சுவடே தெரியாமல் மூடி மறைக்கப் பட்டது. இதிலே ஆச்சரியத்திற்குரிய விடயம் என்னவென்றால், நாஸிகள் ஜெர்மனியின் வரலாற்றை எவ்வாறு மாற்றி எழுத வேண்டும் என்று நினைத்தார்களோ, அது இன்றளவும் கடைப் பிடிக்கப் பட்டு வருகின்றது.


இது தொடர்பான முன்னைய பதிவுகள்:

3 comments:

Massy spl France. said...

ஐயோ பாவம் இந்த கருப்பின மக்கள்! எந்த பக்கம் திரும்பினாலும் இதே அழு குரல்தான்.

மிக சமீபகாலத்தில் உங்கள் அன்புக்கும் மரியாதைக்கும் உரிய ரஷ்ய தலைவர் டெட்செனியாவை தரைமட்டமாக தகர்த்தி அங்குள்ள பூர்வீக முசுலீம் மக்களை கூட்டுக்கொலை செய்ததை பற்றி கொஞ்சம் எழுதுங்கள் கலையரசன்.

Massy spl France. said...

யூதர்களுக்கு நாஜிகள் செய்த கொடுமைகளுக்கு நட்ட ஈடாக இன்றும் ஜெர்மானியர்கள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து கட்டிக்கொண்டு வரும் பணத்தைப்பற்றி அறிந்து எழுதவும்.

Massy spl France. said...

ஆடு நனைகிறதென்று அழுகிறதாம் ஓநாய்.
உக்ரெய்னின் கிரீமியாவை அத்துமீறி ஆக்கிரமித்து தன் வசப்படுத்தியதால் உலக அரங்கில் இன்று ரவுடியாக சுட்டிக்காட்டப்படும் ஓநாய் புத்தினுக்கு வக்காலத்து வாங்கவும் அவர்மீது பச்சாதாபம் ஏற்படுத்தவும் நாஜிகளால் அழிக்கப்பட்டவர்களை தோண்டி எடுத்து காமடி செய்கிறார் கலையரசன்.