Tuesday, March 18, 2014

பாரிஸ் கம்யூன் : பிரான்சில் தோன்றிய பொதுவுடைமைப் புரட்சி


கம்யூனிசம், சோஷலிசம் என்றால், பலருக்கு ரஷ்யா, சீனா தான் மனதில் தோன்றும். ஆனால், "உலகில் முதலாவது கம்யூனிசப் புரட்சியின் தாயகம் பிரான்ஸ்" என்பது நிறையப் பேருக்குத் தெரியாது. 18 மார்ச் 1871, பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பாட்டாளி வர்க்கம் தலைமை தாங்கிய கம்யூனிசப் புரட்சி வெடித்தது. பிரான்ஸ் நாடு பல புரட்சிகளைக் கண்டுள்ளது. 1789 ம் ஆண்டு ஏற்பட்ட பிரெஞ்சுப் புரட்சி,பிரெஞ்சு மொழியில் "பூர்ஷுவா" என்று அழைக்கப் படும், மத்திய தர வர்க்கத்தினரின் புரட்சி ஆகும். பிற்காலத்தில், அந்தப் புரட்சியை ஐரோப்பா முழுவதும் பரப்பும் பொறுப்பை ஏற்ற நெப்போலியன் காலத்தில், பிரெஞ்சு பேரினவாதமாக பரிணாம வளர்ச்சி அடைந்திருந்தது.

பூர்ஷுவா வர்க்கம் ஆளும் உலக நாடுகள் எங்கும், முதலாவது பிரெஞ்சுப் புரட்சிக்கு, இன்றைக்கும் முக்கியத்துவம் கொடுக்கப் படுகின்றது. அது பற்றிய குறிப்புகள், மாணவர்களின் வரலாற்றுப் பாடப் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. ஆனால், பாரிஸ் கம்யூன் புரட்சி முற்று முழுதாக இருட்டடிப்புச் செய்யப் படுகின்றது. ஏனென்றால், 1871 ம் ஆண்டு ஏற்பட்ட புரட்சி, உழைக்கும் வர்க்க மக்களின் முதலாவது பொதுவுடைமைப் புரட்சி ஆகும்.  நமது நாடுகளிலும், முதலாளிகளின் கையில் உள்ள எந்த ஊடகமும், அதைப் பற்றி எதுவும் கூறுவதில்லை. தமிழ் பேசும் பூர்ஷுவாக்கள், அதைப் பற்றி அறிந்திருந்தாலும், தெரியாதது மாதிரி காட்டிக் கொள்வார்கள். அந்தளவுக்கு வர்க்க மனப்பான்மை, எமது சமூகத்தில் கோலோச்சுகின்றது.

1871 ம் ஆண்டு, மார்ச் மாதம் தோன்றிய பாரிஸ் கம்யூன், மே மாதம் பிரெஞ்சு இராணுவத்தினால் கொடூரமாக அழித்தொழிக்கப் பட்டது. மூன்று மாதங்களுக்கு குறைவான காலமே நின்று பிடித்தாலும், உலக வரலாற்றில் குறிப்பிடத் தக்க தாக்கத்தை உண்டாக்கியது. உலகில் உழைக்கும் வர்க்க மக்களின் பொதுவுடைமைப் புரட்சி சாத்தியமே என்பதை நிரூபித்தது. பாரிஸ் உழைக்கும் வர்க்கத்தினரின் புரட்சியை, பல்வேறு பட்ட புரட்சிகர சக்திகள் வழிநடத்தின. அனார்க்கிஸ்ட்கள், மார்க்சிஸ்டுகள், லிபரல்கள் போன்ற பல்வேறு வகையிலான சித்தாந்தங்களை பின்பற்றினாலும், பாட்டாளி வர்க்கம் அதிகாரத்தை கைப்பற்றுவதை நோக்கமாக கொண்டிருந்தனர்.

26 மார்ச், உழைக்கும் வர்க்கப் பிரதிநிதிகள் தெரிவு செய்யப் பட்டு, ஒரு கம்யூன் (பொதுவுடைமை) அரசாங்கம் உருவாக்கப் பட்டது. 28 மார்ச்  1871, "பாரிஸ் கம்யூன்" பிரகடனம் செய்யப் பட்டது. மக்கள் பிரதிநிதிகள் நேரடி ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவு செய்யப் பட்டனர். உலக வரலாற்றில் முதல் தடவையாக, அடி மட்டத் தொழிலாளர்களும், அரசாங்கத்தில் அங்கம் வகித்தனர். ஒரு புதிய சமத்துவ சமுதாயம் உருவானது. உழைக்கும் மக்கள் அனைவருக்கும் சமமான ஊதியம் வழங்கப் பட்டது. முந்திய சமூகத்தில், அமைச்சர், மருத்துவர், முகாமையாளர் என்று உயர்ந்த அந்தஸ்தில் இருந்தவர்களும், ஆலைத் தொழிலாளிக்கு சமமான சம்பளம் பெற்றனர். உயர்ந்த பட்ச சம்பளம், ஆறாயிரம் பிராங்குகள் என்று தீர்மானிக்கப் பட்டது.

அந்தக் காலத்தில், பிரான்சுக்கும், ஜெர்மனிக்கும் இடையில் நடந்த யுத்தத்தின் விளைவாக தான் பாரிஸ் கம்யூன் புரட்சி வெடித்தது. அன்று பிருஷிய பேரரசு என்று அழைக்கப் பட்ட ஜெர்மனியப் படைகள், பாரிஸ் மாநகருக்கு வடக்கே இருந்த பிரதேசங்களை கைப்பற்றி விட்டிருந்தன. பிரெஞ்சு இராணுவம் பாரிசின் தெற்குப் பகுதியில் நிலை கொண்டிருந்தது. பிரெஞ்சு அரசாங்கம், வெர்சேய் நகரினை தற்காலிக தலைநகராக்கி, அங்கிருந்து இயங்கிக் கொண்டிருந்தது. பிரான்சு, ஜெர்மனிக்கு இடையிலான போர் நிறுத்தத்தின் பின்னர், பாரிஸ் நகரை சேர்ந்த, படையினரின் ஆயுதங்களை களைய முயற்சித்த காரணத்தினால் தான் புரட்சி வெடித்தது.

உலகில் உள்ள எல்லா நாடுகளிலும் இருப்பதைப் போல, பாரிஸ் நகரிலும், பெரும்பாலும் பாட்டாளி வர்க்க இளைஞர்கள் தான், இராணுவத்தில் சேர்ந்து இருந்தனர். பாட்டாளி வர்க்கத்தின் கைகளில் ஆயுதங்களை விட்டு வைப்பது, தனக்கு ஆபத்தானது என்று பிரெஞ்சு பூர்ஷுவா அரசு நினைத்தது. அவர்கள் பயந்தது மாதிரியே நடந்தது. பிரெஞ்சு பூர்ஷுவா வர்க்கத்தினால் தேசியவாத வெறியூட்டப் பட்டிருந்த இராணுவமாக இருந்தாலும், பாரிஸ் நகரை சேர்ந்த வீரர்கள் வர்க்க விழிப்புணர்வு கொண்டவர்களாக இருந்தனர். அதனால் தான், பாரிஸ் புரட்சி வெற்றி பெற்றது. பாரிஸ் கம்யூன் உருவானதும், தொழில் முறை இராணுவம் கலைக்கப் பட்டது. அதற்குப் பதிலாக, ஒரு மக்கள் படை உருவானது. வயது வந்த அனைத்துக் குடி மக்களின் கைகளிலும் ஆயுதங்கள் வழங்கப் பட்டன.

பாரிஸ் கம்யூன், மதத்தையும், அரசையும் பிரித்தது. மதத்திற்கு வழங்கப் பட்ட உயர்ந்த அந்தஸ்து இரத்து செய்யப் பட்டது. மத நிறுவனங்களின் சொத்துக்கள் மக்கள் மயமாக்கப் பட்டன. கல்விக் கூடங்கள், அலுவலகங்களில் மாட்டப் பட்டிருந்த சாமிப் படங்கள் அகற்றப் பட்டன. பாடசாலைகள், பணியிடங்களில் பிரார்த்தனை செய்யும் வழமை அகற்றப் பட்டது. அவற்றை விட, முந்திய அரசாங்கம் வைத்திருந்த, பிரெஞ்சு பேரினவாதத்தை பறை சாற்றும் சின்னங்கள் அகற்றப் பட்டன. பேரினவாதம், தேசியவாதம், இனவாதம் எதற்குமே அங்கே இடம் இருக்கவில்லை. பாரிஸ் கம்யூன் என்பது தேசிய அரசு அல்ல. அது ஒரு உலக மக்களின் அரசாங்கம். அதிலே சில வெளிநாட்டவர்களும் அங்கம் வகித்தனர். உலகில் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், உழைக்கும் மக்கள் என்ற பொதுத் தன்மை அவர்களை ஒன்றிணைத்தது.

நமது காலத்தில் இந்தியா, பாகிஸ்தானுக்கு இடையிலான பகைமை உணர்வு மாதிரித் தான், அன்றிருந்த ஜெர்மனி, பிரான்ஸ் ஆகிய ஐரோப்பிய நாடுகளிலும் இருந்தது. இருபதாம் நூற்றாண்டு வரையில், ஜெர்மனியும், பிரான்சும் ஜென்மப் பகையாளிகள். சதா சர்வ காலமும், கீரியும், பாம்புமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தன. அவ்விரண்டு நாடுகளும், ஒரு காலத்தில் சமாதானமாக வாழும் என்று சொன்னால், அன்றைக்கு யாரும் நம்ப மாட்டார்கள். "சிங்களவனும், தமிழனும் இனிமேல் எந்தக் காலத்திலும் ஒன்று சேர்ந்து வாழ முடியாது" என்று, இன்றைக்கு சிலர் பேசுவதைப் போன்று தான், அன்றைக்குப் பலர் ஜெர்மானியர்கள், பிரான்சியர்கள் பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள்.

அன்றைய போரில் வெற்றி, தோல்வி காண முடியாமல், போர் நிறுத்தம் செய்து கொண்ட ஜெர்மனியும், பிரான்சும், பாரிஸ் கம்யூன் புரட்சியின் பின்னர் ஒன்று சேர்ந்தன. அப்போது ஜெர்மன்-பிரெஞ்சு ஆளும் வர்க்கங்களின் வர்க்க உணர்வு விழித்துக் கொண்டது. உலகில் தோன்றிய முதலாவது பாட்டாளி வர்க்கப் புரட்சியை நசுக்குவதற்காக கை கோர்த்துக் கொண்டனர். ஜெர்மன் உதவியுடன் படை நகர்வுகளை மேற்கொண்ட பிரெஞ்சு இராணுவம், மே மாதம் பாரிஸ் கம்யூனின் ஆட்சிக்குட்பட்ட பகுதிகளை கைப் பற்றியது.

பிரெஞ்சு இராணுவ நடவடிக்கை காரணமாக தப்பிச் செல்ல முயற்சிக்கும் புரட்சியாளர்களை, ஜெர்மனி தடுத்து நிறுத்தியது. அவர்களை தப்ப விட வேண்டாம் என்று, வடக்கே நிலை கொண்டிருந்த ஜெர்மன் படைகளுக்கு உத்தரவிடப் பட்டிருந்தது. அதனால், பாரிஸ் கம்யூனில் இருந்த யாரும் தப்பியோட முடியாதவாறு, நாலாபக்கமும் சுற்றி வளைக்கப் பட்டனர். அடுத்து அங்கே ஒரு இனப் படுகொலை அரங்கேறியது. பெண்கள், குழந்தைகள் என்று பேதம் பாராது, அனைவரும் தெருத் தெருவாக, வீடு வீடாக சுட்டுக் கொல்லப் பட்டனர். அன்றைய இனப் படுகொலையில், சுமார் முப்பதாயிரம் நிராயுதபாணிகளான பொது மக்கள், பிரெஞ்சு இராணுவத்தினால் சுட்டுக் கொல்லப் பட்டனர்.

இன்று பாரிஸ் கம்யூனை நினைவுகூரும் இடங்கள் யாவும் அழிக்கப் பட்டு விட்டன. தற்போது எஞ்சியிருப்பது, பாரிஸ் நகரில் உள்ள கம்பட்டா சுடலையில் உள்ள, மதில் சுவர் ஒன்று மட்டுமே. அந்த மதில் சுவருக்கு முன்னாள் வைத்து, இறுதியாக பல நூறு புரட்சியாளர்கள் சுட்டுக் கொல்லப் பட்டனர். அந்த இடத்தில், "பாரிஸ் கம்யூனில் இறந்தவர்களின் நினைவாக" என்று எழுதப் பட்டுள்ளது. அதனை இன்றைக்கும் யாரும் சென்று பார்வையிடலாம். 
 
பாரிஸ் கம்யூன் புரட்சியாளர்கள் படுகொலை செய்யப் பட்ட மதில் சுவர். 

பாரிஸ் கம்யூன் விட்ட நடைமுறைத் தவறுகளை விமர்சித்து, கார்ல் மார்க்ஸ் "பிரான்சின் உள்நாட்டுப் போர்" என்ற தலைப்பில் ஒரு நூலை எழுதினார். அந்த நூலில் இருந்து பெறப்பட்ட படிப்பினைகளின் அடிப்படையில் தான், லெனின் ரஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சியை வழிநடத்தினார். சீனப் புரட்சிக்கும், பாரிஸ் கம்யூன் ஒரு உந்து சக்தியாக இருந்துள்ளது. மார்க்ஸ், எங்கெல்ஸ், லெனின், மாவோ ஆகியோர் பாரிஸ் கம்யூன் பற்றி எழுதிய கட்டுரைகள், இன்றைக்கும் வாசிக்கக் கிடைக்கின்றன. உலகம் முழுவதும் வாழும் கம்யூனிஸ்டுகள் மட்டுமல்லாது, அனார்க்கிஸ்ட்கள், சோஷலிஸ்டுகளும், பாரிஸ் கம்யூன் புரட்சியை இன்றைக்கும் நினைவுகூர்ந்து வருகின்றனர். பாரிஸ் கம்யூன் பற்றிய ஆய்வுகள் நடக்கின்றன. அது சம்பந்தமான நூல்கள், ஆவணங்கள் மறு வாசிப்புக்குட்படுத்தப் படுகின்றன.

உலகில் எந்த நாட்டில், உழைக்கும் வர்க்க மக்களின் புரட்சி ஏற்பட்டாலும், எதிரெதிர் துருவங்களாக, மொழியால் பிரிந்திருக்கும் பூர்ஷுவா வர்க்கம், ஒன்று சேர்ந்து எதிர்க்கும் என்பதற்கு, பாரிஸ் கம்யூன் ஒரு வரலாற்று சாட்சியம். பாரிஸ் கம்யூனின் படிப்பினைகள், இலங்கை, இந்தியாவில் உள்ள நிலைமைகளுக்கும் பொருந்தும். இலங்கையில் அல்லது ஈழத்தில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இன்று எதிரிகளாக அடித்துக் கொள்ளும், சிங்களத் தேசியவாதிகளும், தமிழ்த் தேசியவாதிகளும், வர்க்க அடிப்படையில் ஒன்று சேர்ந்து விடுவார்கள். அதே போன்று, இந்தியாவில் அல்லது பாகிஸ்தானில் ஒரு கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டால், இந்திய-பாகிஸ்தானிய ஆளும் வர்க்கங்கள், தமது பகைமையை மறந்து ஒன்று சேர்ந்து விடுவார்கள். இது நாங்கள் பாரிஸ் கம்யூனில் இருந்து பெற்றுக் கொள்ள வேண்டிய படிப்பினை ஆகும்.

பிரான்ஸ் பற்றிய முன்னைய பதிவுகள் : 
1 பிரெஞ்சு மாவோயிஸ்ட் படுகொலையும், தொழிலாளர் வர்க்க எழுச்சியும்
2 ஐரோப்பிய கலாச்சாரப் புரட்சி

No comments: