Saturday, January 12, 2013

பாரிஸ் படுகொலைகள்: பலியாடுகளான LTTE , PKK முக்கியஸ்தர்கள்


பாரிஸ் நகரில், அண்மையில் (10.1.2013) இடம்பெற்ற PKK முக்கியஸ்தர் சாகினே கான்சிஸ்  (Sakine Cansız)  கொலை, சில மாதங்களுக்கு முன்பு நடந்த புலிகளின் முக்கியஸ்தர் பரிதியின் கொலையை பெருமளவு ஒத்துள்ளது. பரிதியின் கொலையும், கொலையும், ஒரே பகுதியில், அதாவது பாரிஸ் நகரில் வெளிநாட்டவர் அதிகமாக நடமாடும் இடத்தில் நடந்துள்ளன. இரண்டிலும் கொலையாளிகள் மிகவும் நுணுக்கமாக திட்டமிட்டு கொலை செய்துள்ளனர். பரிதியின் கொலைக்கு இலங்கை அரசு பொறுப்பு என்று, புலிகளின் ஆதரவு ஊடகங்கள் குற்றம் சுமத்தின. அதே போல, சாகினே மற்றும் இரு பெண் ஆர்வலர்களின் கொலைகளை நடத்தியது துருக்கி அரசு என்று, PKK ஆதரவு ஊடகங்கள் குற்றஞ்சாட்டியுள்ளன. பரிதி கொலை நடந்த இடத்தில், ஸ்ரீலங்கா அரசை கண்டிக்கும், புலி ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அதே போன்று, குர்திஷ் அரசியல் ஆர்வலர்கள் கொலை செய்யப்பட்ட இடத்தில், துருக்கி அரசை கண்டிக்கும் PKK ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. "இரண்டாக உடைந்துள்ள, புலம்பெயர்ந்த புலிகளுக்கு இடையிலான மோதல் தான், பரிதி கொலைக்கு காரணம்," என்று இலங்கை ஊடகங்கள் தெரிவித்தன. அதே போன்று, "இரண்டாக உடைந்துள்ள PKK குழுக்களுக்கு இடையிலான மோதலின் விளைவு தான், பாரிஸ் படுகொலைகள்", என்று துருக்கிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இதே நேரம், பிரஞ்சு அரசு கொலையாளிகளுடன் ஒத்துழைப்பதாக புலி ஆதரவாளர்களும், PKK ஆதரவாளர்களும் பிரெஞ்சு அரசையும் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி வருகின்றனர். 

துருக்கியில் குர்திஷ் சிறுபான்மை இனத்திற்கு தனி நாடு கோரிப் போராடும் "குர்திஸ்தான் தொழிலாளர் கட்சி" (PKK) க்கும், தமிழீழம் கோரிப் போராடிய விடுதலைப் புலிகள் இயக்கத்திற்கும் இடையில் அப்படி என்ன பொருத்தமோ தெரியவில்லை. பல விடயங்கள் ஒரே மாதிரி நடக்கின்றன. இரண்டு இயக்கங்களும், எண்பதுகளின் தொடக்கத்தில் வளர்ந்து, பலம் பெற்று விளங்கின. விடுதலைப் புலிகளில் தலைவர் பிரபாகரனின் தலைமை கேள்விக்குட்படுத்த பட முடியாது. அவரின் முடிவுகள் இறுதியானவை. அதே போன்று, PKK யில், தலைவர் ஒச்சலானின் தலைமை கேள்விக்குட்படுத்தப் பட முடியாதது. அவரின் முடிவுகள் இறுதியானவை. இரண்டு தலைவர்களும், இறுதியில் பன்னாட்டு சதிவலையில் சிக்க வைக்கப்பட்டு பிடிபட்டனர். அமெரிக்கா, இந்தியாவின் செய்மதி கண்காணிப்புகளும், இஸ்ரேல், சீனா வழங்கிய கனரக ஆயுதங்களின் தாக்குதலும், பிரபாகரனின் கதையை முள்ளிவாய்க்காலில் முடித்து வைத்தது. ஒச்சலான் பிடிபட்டு, இன்னமும் துருக்கி சிறையில் உயிரோடு அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார் என்பது மட்டுமே வித்தியாசம். 

ஒச்சலான் அகப்பட்ட சம்பவமும், பன்னாட்டு கூட்டு நடவடிக்கையின் விளைவு தான். அமெரிக்கா மற்றும் நேட்டோ நாடுகள் வழங்கிய கனரக ஆயுதங்களின் துணை கொண்டு தாக்கி வந்த துருக்கி இராணுவம், PKK தளங்கள் அமைந்துள்ள சிரியா மீது படையெடுக்கப் போவதாக அறிவித்தது. அதனால், சிரியாவில் இருந்த ஒச்சலான், தனது நாட்டை விட்டு வெளியேற வேண்டுமென சிரிய அரசு அழுத்தம் கொடுத்தது. புலிகளிடம் சிறிய ரக விமானங்கள் இருந்தது போல, PKK  இடம் இருந்தது. அப்படியான விமானம் ஒன்றில், ஒச்சலான் பல ஐரோப்பிய நாடுகளுக்கும் பறந்து சென்று, அரசியல் தஞ்சம் கோரினார். அவர் பெரிதும் நம்பியிருந்த பெலாரஸ், நெதர்லாந்து ஆகிய நாடுகள் விமானம் தரையிறங்கக் கூட அனுமதிக்கவில்லை. இறுதியில் கென்யா செல்வதென்றும், அங்கு ANC பிரதிநிதி ஒருவர் சந்தித்து கூட்டிச் சென்று, தென் ஆப்பிரிக்காவில் தஞ்சம் பெற்றுக் கொடுப்பார் என்றும் தகவல் கிடைத்தது. ஆனால், கென்யா இஸ்ரேலின் மொசாட் ஆதிக்கத்தின் கீழ் உள்ள நாடாகும். மொசாட் உதவியுடன், துருக்கி புலனாய்வுத்துறையை சேர்ந்தவர்கள், கென்யாவில் வைத்து ஒச்சாலானை மடக்கிப் பிடித்து, துருக்கிக்கு கொண்டு சென்றார்கள். அன்றிலிருந்து, ஒச்சலான் இஸ்தான்புல் நகருக்கு அருகாமையில், கடலில் ஒரு தீவில் உள்ள சிறையில் அடைத்து வைக்கப் பட்டிருக்கிறார்.

புலம்பெயர்ந்த நாடுகளில், புலிகளின் அமைப்பாளர்களும், PKK அமைப்பாளர்களும் நெருக்கமான உறவுகளைப் பேணி வருகின்றனர். ஐரோப்பாவில் ஒளிபரப்பாகும் PKK ஆதரவு MED TV (தற்பொழுது ROJ TV) யில், புலிகளுக்கு ஆதரவான செய்திகள் தினந்தோறும் இடம்பெறும்.  புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் சோஷலிச தமிழீழத்திற்காக போராடுவதாக சொன்னாலும், காலப்போக்கில் அது ஒரு வலதுசாரி தேசியாத அமைப்பாகவே தன்னை காட்டிக் கொண்டது. இன்று முழுக்க முழுக்க வலதுசாரி தேசியவாத அமைப்பாக மாறிவிட்ட PKK, ஆரம்பத்தில் குர்திஸ்தான் சோஷலிசப் புரட்சி பற்றி பேசி வந்தது. மார்க்சிய லெனினிசத்தை ஏற்றுக் கொள்வதாக அறிவித்து வந்தது. அதனால் அன்றிருந்த சோவியத் யூனியன், மற்றும் பல சோஷலிச நாடுகளின் உதவியைப் பெற்றுக் கொண்டது. சோவியத் யூனியன் சாம்-7 ஏவுகணைகளை வழங்கி இருந்தது. அவற்றில் சில PKK ஊடாக, புலிகளின் கைகளுக்கு போய்ச் சேர்ந்தன.

சிரியா சோவியத் யூனியனின் உதவி பெறும் நட்பு நாடாக இருந்த படியால், சிரியாவினுள் குர்திஷ் சிறுபான்மையினரின் பிரதேசத்தில்,  PKK இராணுவ பயிற்சி முகாம் அமைப்பதற்கு உதவியது. ஒச்சலானின் தலையகமும் அங்கே அமைந்திருந்தது. ஈழப் போராட்ட தொடக்க காலத்தில், இந்தியாவுக்கும் இலங்கை அரசுக்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக, இந்தியா புலிகளை அணைத்துக் கொண்டதும், பின்னர் கைகழுவி விட்டு இலங்கை அரசுடன் நட்பு பாராட்டியதும் தெரிந்த விடயம். அதே போன்று, துருக்கிக்கும் அயல்நாடான கிரேக்கத்திற்கும் இடையிலான பகை முரண்பாடுகள் காரணமாக,  PKK க்கு கிரேக்க அரசு பெரும் வரவேற்புக் கொடுத்து புகலிடம் அளித்து வந்தது. ஆனால், பிற்காலத்தில் துருக்கி அரசுடன் ஏற்பட்ட நட்புறவு காரணமாக, PKK க்கு வழங்கிய ஆதரவை நிறுத்திக் கொண்டது. 

ஒச்சலான் கைது செய்யப்பட்ட பின்னர், PKK மூன்றாக பிரிந்துள்ளது. புலிகள் இயக்கத்தில் இருந்து கருணா தலைமையில் பிரிந்த குழுவினர், பின்னர் இலங்கை இராணுவத்தின் துணைப்படையாக மாறியது போல, PKK யில் இருந்து பிரிந்த குழு ஒன்று, துருக்கி இராணுவத்தின் துணைப்படையாக இயங்கி வருகின்றது. ஆயுதப் போராட்டத்தை தொடர விரும்பிய, ஒச்சலானுக்கு ஆதரவான PKK குழு, ஈராக் குர்திஸ்தானில், காண்டில் மலைப்பகுதியில் முகாம்களை அமைத்துக் கொண்டது. அங்கிருந்து துருக்கியினுள் வந்து துருக்கி இராணுவத்தை தாக்கி வந்தது. அந்த இடம் ஈராக் அரசின் கட்டுப்பாட்டில் இல்லாதபடியால், எஞ்சியிருக்கும் PKK  போராளிகளை அழிப்பதற்காக,  அடிக்கடி துருக்கி இராணுவம் படையெடுத்து செல்வது வழக்கம். இன்னும் ஒரு PKK இயக்கம், சிரியாவில் இயங்கிக் கொண்டிருக்கிறது. அவர்களும் அங்கிருந்த படி, துருக்கி மீது இராணுவ தாக்குதல்களை தொடுத்து வருகின்றனார். 

தற்பொழுது, துருக்கி அரசுக்கும், PKK க்கும் இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. ஈராக் காண்டில் மலைப்பகுதியில் உள்ள PKK உடன் தான் பேச்சுவார்த்தைகள் நடக்கின்றன. சிரியாவில் உள்ள PKK அதனை எதிர்த்து வருகின்றது. ஏனெனில், தற்பொழுது சிரியாவில் நடக்கும் உள்நாட்டுப்போர் காரணமாக, அந்நாட்டில் குர்திஷ் மக்கள் வாழும் பகுதிகள் சுதந்திரமான தன்னாட்சிப் பிரதேசமாக மாறிவிட்டன. அங்கு தளம் அமைத்துள்ள PKK க்கு, ஒரு சிரிய பிரஜையான குர்தியர் தலைமை தாங்குகின்றார். சிரிய அரசுக்கு எதிரான கிளர்ச்சியாளர்களுக்கு துருக்கி உதவி வருகின்றது. அதற்கு பதிலடியாக, சிரிய அரசு PKK க்கு உதவி வருகின்றது. நாளைக்கு சிரியாவில் ஆசாத் அரசு கவிழ்ந்தாலும், PKK கட்டுப்பாட்டில் உள்ள குர்திஷ் பிராந்தியம், தனக்கு தலையிடியாக இருக்கப் போகின்றது என்று துருக்கி உணர்ந்துள்ளது.

ஈராக்கில் உள்ள PKK யுடனான பேச்சுவார்த்தைக்கு, சிறையிலிருக்கும் தலைவர் ஒச்சலான் மத்தியஸ்தம் வகிக்கின்றார். சிறையில் இருந்த படியே, ஈராக்கில் இருக்கும் PKK தலைவர்களுடன் நேரடியாக பேசுவதற்கு தொலைபேசி வசதி ஏற்படுத்தி தருமாறு ஒச்சலான் கேட்டுள்ளார். முதற்கட்டமாக, துருக்கி சிறைகளில் அடைத்து வைக்கப் பட்டிருக்கும் 8000 PKK சார்பு அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளார். துருக்கி பிரதமர் எர்டோகன், PKK போராளிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க முடியாது என அறிவித்துள்ளார். ஆனால், ஆயுதங்களை ஒப்படைக்கும் பட்சத்தில், போராளிகளும், தலைவர்களும், ஒச்சலானுடன் ஒரு மேற்கு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பி வைக்க சம்மதித்துள்ளார். 

பாரிசில் நடந்த கொலைகள், சமாதான பேச்சுவார்த்தைகளை குழப்ப விரும்பும் சக்திகளால் நடத்தப் பட்டிருக்க வேண்டும். அனேகமாக, சாகினே தான் கொலையாளிகளின் குறியாக இருக்க வேண்டும். மற்ற இருவரும் "தவறான நேரத்தில், தவறான இடத்தில் இருந்தமைக்காக" கொல்லப் பட்டிருக்கலாம். ஏனெனில் சாகினே PKK இயக்கத்தை உருவாக்கிய ஆரம்ப கால தலைவர்களில் ஒருவர் ஆவர். துருக்கியில் கைது செய்யப்பட்டு பத்தாண்டுகள் சிறையில் இருந்தவர். சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின்னர், ஜெர்மனியில் அரசியல் வாழ்வை தொடங்கினார். ஜெர்மனியில் PKK பயங்கரவாத இயக்கமாக தடைசெய்யப்பட்டு, அதன் முக்கியஸ்தர்கள் சிறையில் அடைக்கப் பட்டனர். சாகினேயும் அவர்களில் ஒருவர். பின்னர் அங்கிருந்து வெளியேறி, பிரான்ஸ் நாட்டில் அரசியல் பிரிவின் பொறுப்புகளை ஏற்றுக் கொண்டார். 

புலிகள் இயக்கத்திற்கு, புலம்பெயர்ந்த தமிழர்கள் பெருமளவு பணம் திரட்டி அனுப்பி வந்தமை அனைவரும் அறிந்ததே. அதே போன்று, புலம்பெயர்ந்த குர்திஷ் மக்கள் அனுப்பும் பணம், PKK யின் பிரதானமான நிதி ஆதாரமாகும்.  புலம்பெயர்ந்த புலி ஆதரவு அமைப்புகள், களத்தில் இருந்த புலிகளுக்கு எந்தளவு முக்கியத்துவம் வாய்ந்தவை என்பது தெரிந்த விடயம். அதே போன்று புலம்பெயர்ந்த PKK ஆதரவு அமைப்புகள், களத்தில் இருக்கும் PKK க்கு மிகவும் முக்கியமானவை. ஆகவே, பாரிஸ் கொலைகள் மிகவும் கவனமாக திட்டமிடப்பட்டு நடத்தப் பட்டுள்ளன. துருக்கி அரசில் உள்ள கடும்போக்காளர்கள், குறிப்பாக துருக்கி இனவாதிகள் அந்தக் கொலைகளை செய்திருக்கலாம். சாம்பல் ஓநாய்கள் என்ற அமைப்பு, துருக்கியில் சிறுபான்மையினர் கிடையாது என்று கூறி வருகின்றது. குர்திஷ் இனவழிப்பு போரை ஆதரிப்பதுடன், இராணுவ நடவடிக்கைகள் நிறுத்துவதையும் விரும்பவில்லை. பிரான்சின் வலதுசாரி பத்திரிகையான Le Figaro, சாம்பல் ஓநாய்கள் இந்த கொலைகளை செய்திருக்கலாம் என்று ஊகிக்கின்றது. பாரிசில் குர்திஷ் ஆர்வலர்களை கொலை செய்த சூத்திரதாரிகள் யாராக இருந்தாலும், அவர்கள் சமாதானத்திற்கு மட்டும் எதிரிகள் அல்ல, குர்திஷ் மக்களுக்கும் எதிரிகள் ஆவர். 

********************

குர்திஷ் மக்களின் இனப்பிரச்சினை தொடர்பான முன்னைய பதிவுகள்:
1.குர்திஸ்தான், துருக்கியின் துயரம்
2.குர்து மலையோரம் வீசும் இரத்த வாடை
3.துருக்கியில் தொடரும் "ஈழப் போர்"
4.துருக்கியை உலுக்கிய குர்து மக்கள் போராட்டம்
5.துருக்கி/குர்து மக்களின் ஈழத்தமிழர் ஆதரவு அறிக்கை

No comments: